பூர்வீகத்தைத்
தேடி ஓர் பயணம் .
என் பூர்வீகம் எது ? உன் பூர்வீகம் எது ?
நீயோ நானோ பூர்வீகம் எனக் கொண்டாடுவதுதான் உண்மையா ?
இக்கேள்வி எம்முள் நீண்டகாலமாய் அலைமோதுகிறது .ஆகவே என் பூர்வீகத்தைத்
தேடி என் நினைவுக்கு எட்டியவரை பயணம் செய்கிறேன் . என் சொந்தக் கதையினூடே எது பூர்வீகம்
என்பதை ஒற்றைச் சூத்திரத்தால் தீர்மானிக்க முடியாது என கண்டுகொண்டேன் . அதைச் சொல்லுகிறேன்.
பொதுவாய் முப்பாட்டனில் இருந்து பூர்வீகத்தை தொடங்கலாம் எனினும்
என் முப்பாட்டன்கள் குறித்த நினைவு எதுவும் எம் ஞாபக அடுக்கில் பதியவே இல்லை
. தாத்தா ,ஆச்சி வரைதான் நினைவலைகள் தொட்டுத்
தொட்டுத் திரும்புகின்றன .
அட்டணம்பட்டி,
சுசீந்திரம் ,
புத்தேரி ,
வீமநகரி [நெடுமங்காடு]
என்கிற நான்கு ஊர்களுக்கும் எனக்கும் ஏதோ ஓர் தொடர்பு இருக்கிறது . அதன் எல்லை எவ்வளவு ? வேர்
எவ்வளவு ? இவற்றை அலசி அசைபோடத் துவங்குகிறேன் .
அட்டணம்பட்டி :
தேனிமாவட்டம் பெரியகுளம் போகிறவழியில் வைகை நதிப் பாசணதில் செழிக்கும்
ஊர் அட்டணம்பட்டி .
என் அப்பா பொன்னப்ப பிள்ளையின் அப்பா நாராயண பிள்ளையின் ஊர்
அட்டணம் பட்டி . என் தந்தை வழி தாத்தா ஊர் . சிறுவயதில் ஓரிரு வேளை அங்கு சென்றிருக்கிறேன்
. என் சின்னாச்சி அதுதான் என் தாத்தாவின் இரண்டாவது மனைவி குஞ்சரத்தம்மாள் தந்த வேர்க்கடலையும்
தின்பண்டங்களும் மட்டுமே நினைவில் இருக்கிறது . அவரை அட்டணம்பட்டி ஆச்சி என்றே அழைத்ததும்
நினைவில் உள்ளது .
என் ஆச்சி காமாட்சி என் தாத்தாவின் நான்காவது மனைவி . திருமணத்தின்
போது என் தாத்தாவுக்கு அறுபது வயதாம் .என் ஆச்சிக்கு பதினாறு வயதாம் . அந்த ஆச்சி வாழ்ந்ததெல்லாம்
குமரி மாவட்டம் புத்தேரியே !
அட்டணம்பட்டியோடு வேறெந்த சின்ன வயது நினைவுகளும் இல்லை .அங்கு
வாழ்ந்ததும் இல்லை . ஓரிரு முறை சென்று வந்தது மட்டுமே !
நான் வாலிபர் சங்கம் ,கட்சி என ஊர் சுற்றக் கிளம்பிய போது அட்டணம்பட்டிக்கு
சில நிகழ்ச்சிகளுக்குச் சென்றுள்ளேன் .
வைரமுத்துவின் “ மூன்றாம் உலக யுத்தம் “ நாவலை வாசித்த போதே
அட்டணம் பட்டியின் தெருக்களில் நடந்தேன் .அதன் கிராமிய வாசத்தை நுகர்ந்தேன்.
என் மகனுக்கும் மகளுக்கும் பக்கத்து முடிதிருத்தகத்தில் மொட்டை
அடித்தோமே தவிர அது ஒரு குடும்ப நிகழ்வாக ஆனதில்லை . ஆயின் மகள் வழி பேரன் மற்றும்
பேத்திக்கு மருமகன் குடும்ப வழி திருப்பதியில் மொட்டை போட்டனர் .
மகன் வழி பேரன் ,பேத்திக்கு எங்கு மொட்டை போடுவது ? குலதெய்வம்
கோவிலில்தான் மொட்டை போடணும் இது என் சம்பந்தி விருப்பம் .ஆகவே குலதெய்வம் தேடி அட்டணம்பட்டி
போனோம் . இப்படி இரண்டு முறை அந்த ஊர் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவிலோடு உறவாடியுள்ளேன்.
என் தாத்தா நாராயண பிள்ளை அந்தக் கோயிலில் பூசாரியாகவோ ,அறங்காவலராகவோ
இருந்துள்ளதாக என் அம்மா சொல்லியிருக்கிறார் .
அதற்கு மேல் எந்த விபரமும் எனக்குத் தெரியாது . தெரிந்து கொள்ள
நான் ஆசைப்பட்டதும் இல்லை . அந்த ஊரோடு வேறெந்தத் தொடர்பும் எனக்கோ என் குடும்பத்தினருக்கோ
இல்லவே இல்லை .
இந்த அட்டணம்பட்டியை நானோ என் பிள்ளைகளும் பேரன் பேத்திகளுமோ
எப்படி தங்கள் பூர்வீகம் எனக் கொண்டாட முடியும் ?
சுசீந்திரம் :
குமரி மாவட்டம் அகஸ்தீஸரம் வட்டத்தில் கன்னியாகுமரிக்கு போகிற
வழியில் பஃறுளி ஆறு எனப்படும் பழையாற்றின் கரையில் அமைந்துள்ள ஊர் சுசீந்திரம்.
என் அம்மா தங்கம்மாவின் ஊர் .நான் பிறந்தது . வளர்ந்தது .பத்தாம்
வகுப்பு வரை படித்தது எல்லாம் அங்குதான் . அம்மாவழி ஆச்சி சிவஞான வடிவு , மாமா , அத்தை
என உறவாடி மகிழ்ந்ததும் அங்குதான் .
நான்கு ரத வீதி ,கோயில் ,குளம் ,ஆறு எல்லாம் எம்முள் இன்னும்
பசுமை பூத்து நிற்கும் ஊர் சுசீந்திரம் . சிவதாணுமாலயப் பெருமாள் எனும் தாணுமாலையன்
கோயில் என்னுள் ஆழப்பதிந்தது . நான் நாத்திகனாக பெரிதும் காரணமானதும் இக்கோயிலே ! இவ்வூரின்
ஆறும் குளமும் என் சிறுவயதோடு பின்னிப் பிணைந்தது அல்லவா ?
நான் ஐந்தாம் வகுப்புவரை படித்த யுபிஎஸ் அரசு பள்ளியும் , பத்தாம்
வகுப்புவரை படித்த எஸ் எம் எஸ் எம் உய்ர்நிலைப் பள்ளியும் என்னை செதுக்கிய பட்டறைகளாகும்.
என் அக்காவுக்கு என் அப்பா தன் தாயார் பெயரும் அட்டணம்பட்டி
அம்மன் நினைவுமாக காமாட்சி என பெயர் சூட்டினாலும் வீட்டில் சரஸ்வதி என்றே அழைத்தனர்
.எனக்கு என் அம்மாவின் அப்பா பெயர் அகஸ்த்திலிங்கம் எனச் சூட்டினர் ஆயினும் என் அப்பா தான் பிறந்த புத்தேரி யோகீஸ்வரன்
கோயில் நினைவாக யோகீஸ்வரன் என்றே அழைத்தனர் . என் அண்ணன் நாராயணன் .தம்பி ஐயப்பன்
. இது போக என் உடன் பிறந்த மேலும் மூன்று பேர் சிசு மரணமாகிவிட்டனர் .
பிறந்தது முதல் பதினைந்து வருடங்கள் என் உணர்வோடு கலந்தது சுசீந்திரமே
!
அன்று குமரிமாவட்டத்தில் நாஞ்சில் நாட்டில் “மக்க வழி” எனும்
தந்தை மைய சமூக அமைப்பும், “மருமக்க வழி” என்கிற தாய் மையச் சமூக அமைப்பும் நிலவின
.இரண்டுக்கும் மோதல் இருந்தன . கவிமணி தேசியவிநாயம் பிள்ளை மருமக்கவழியை எதிர்ப்பதில்
முன்நின்றார் . அவர் எழுதிய “மருமக்கள்வழி
மாண்மியம்” எனும் நூல் இதனைச் சொல்லும் .
எங்கள் குடும்பம் சொத்துவழி மக்கவழி சார்ந்தது என சொல்லிக் கொண்டாலும்
பண்பாட்டு வழி மருமக்கவழியே மேலோங்கி இருந்தது . நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை
எங்க குடும்பம் என் தாய்மாமா வீட்டின் ஓர் பகுதியில்தான் குடியிருந்தது . என் அப்பா
பிறந்த புத்தேரிக்கு தீபாவளி ,பொங்கல் ,பள்ளி விடுமுறைக்கு செல்வதோடு சரி ! என் அப்பா
கடை வைத்திருந்ததும் , திருடு கொடுத்ததும் , நட்டப்பட்டதும் எல்லாம் சுசீந்திரமே .அதாவது
என் அம்மா ஊரில்தான் .
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என் குடும்பம் வாழ்வுதேடி
; கெட்டும் பட்டணம் போ என சென்னைக்கு குடி பெயர்ந்தது . நான் பத்தாம் வகுப்பின் கடைசி
பருவத்தை என் அக்கா காமாட்சி வீட்டில் – அவளை திருமணம் செய்து கொடுத்திருந்த தேரூரில்
இருந்தே கடந்தேன் .
பெரியாரும் திராவிடர் கழகமும் சுசீந்திரத்தில் இருந்தபோதே என்னுள்
புகுந்துவிட்டது .ஆனால் வடிவம் பெறவில்லை.
பதினொராம் வகுப்புக்கு சென்னைக்கு வந்தேன் . குரோம்பேட்டை லட்சுமிபுரத்திலிருந்து
என் சென்னை வாழ்க்கை துவங்கியது . சென்னைக்கு வந்த பிறகு ஊர் பெயரை ‘சு’ என் பெயரின் முன்பு இணைத்து , பெயரில் இருந்த
’ஸ்’ என்கிற வடமொழிக்கும் ,பெயரின் கடைசி வாலாய் இருந்த சாதிக்கும் விடை கொடுத்துவிட்டு
சு.பொ.அகத்தியலிங்கம் என என்னை நானே அறிமுகம் செய்யலானேன்.
நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது முதல்வர் அண்ணா இறக்கிறார்
. அந்த ஆண்டு பள்ளி ஆண்டு மலரில் “ அண்ணா அமரரானது குறித்து ஆற்றாது அரற்றியவை.” எனும்
கட்டுரையே பிரசுரமான என் முதல் எழுத்து . அப்போது
லட்சுமிபுரத்தில் அண்ணா நற்பணி மன்றம் துவக்கினோ. நான் துணைச் செயலாளர் ஆனேன். சு
.பொ.அகத்தியலிங்கம் என எனக்கு பெயர் சூட்டிக் கொண்டதும் அப்போதே !
கவிதை எழுதத் தொடங்கிய போது மேலும் மாறி சு.பொ.அலி என மாறினேன்
. வாலிபர் சங்கத்தில் செயல்படத் துவங்கி முழுநேர கட்சி ஊழியரானபோது மீண்டும் சு.பொ.அகத்தியலிங்கம்
ஆனேன் . அப்போது அலி என்ற பெயரோடு வாலிபர் சங்கச் செயலாளராக இருப்பது சரியாக இருக்காது
கேலிக்கு வழிசெய்யும் என தோழர்கள் வி.பி.சிந்தனும் பி.ஆர் .பரமேஸ்வரனும் சொல்ல நான்
ஏற்றேன் .
சு.பொ.அகத்தியலிங்கம் என்பதில் முதலாவதாக உள்ள “சு” என் வாழ்வின் முற்பகுதியில் என் உணர்வோடும்
உதிரத்தோடும் சுசீந்திரம் கலந்ததின் வெளிப்பாடுதான் .
நாங்கள் சென்னை வந்த பிறகு சுசீந்திரத்தோடு ஆன உறவு முழுவதுமாக
வெட்டப்பட்டுவிட்டது . நல்லது கெட்டது எதற்கும் போனதில்லை .டூரிஸ்ட் போல் மனைவி பிள்ளைகளோடு
நாலய்ந்து முறை போனதைத் தவிர .
ஆயினும் , இந்த சுசீந்திரமே என் பிள்ளைகளுக்கும் ,பேரன் ,பேத்திகளுக்கும்
பூர்வீகம் எனச் சொல்ல முடியுமோ ? இதுவே என் கேள்வி .
புத்தேரி :
தேரூரில் பிறந்த கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை , மணம் முடித்ததும்
வாழ்ந்ததும் புத்தேரி . அந்தப் புத்தேரிதான் என் அப்பா பிறந்த ஊர் .என் ஆச்சி காமாட்சி
அம்மாளின் ஊர் .
இளமையில் கணவனை இழந்து
தன் வாழ்க்கை ,இரண்டு பிள்ளைகள் , கொஞ்சம் நிலம் , ஒரு வீடு இவற்றை உறவினரின்
கொள்ளிக்கண் பார்வையிலிருந்து காக்க அவர் பட்டபாடு பெரும்பாடு . கணவன் மற்றும் உறவினர்
மீதான வெறுப்பு சாதி ,மதம் ,கடவுள் மீதான ஒவ்வாமையாய்ப்
படர்ந்தது .
அவர் வீடு ஊரின் கடைக்கோடியாகவும் அதனை அடுத்து நாவிதர் ,வண்ணார்
,இதரர் வாழும் பகுதியாவும் அமைந்து போனது .அவரும் தம் சாதி சனத்தை விட பிற உழைக்கும்
மக்களையே நம்பினார் . அவரே நிலத்தை உழுது பயிரிட இது எளிதாக்கியது .தக்க காவலும் ஆனது
. உறவினர் மத்தியில் பஜாரி ,வாயாடி என பெயர் .ஆனால் என் பார்வையில் பெண்ணியப் போராளியே
!
அங்கு நான் வசிக்கவில்லை ஆனால் அடிக்கடி போகும் ஊர் . ஆறு வாய்க்கால்
.குளம் ,யோகீஸ்வரன் கோயில் எல்லாம் எனக்கு பிடிக்கும் .
சுசீந்திரம் தாணுமலையன் கோயில் சிற்பம் கொஞ்சும் ; இசை கொஞ்சும்
; ஆனால் போத்தி எனப்படும் பார்ப்பனர்களின் ஆதிக்கமும் கெடுபிடியும் அந்த கோயிலை சுற்றி
சுற்றி வந்த என்னுள் வெறுப்பையும் நாத்திகத் தேடலையும் உசுப்பின . அதற்கு நேர்மாறாக
யோகீஸ்வரன் கோயில் பங்குனிக்கு பங்குனி கொடையின் போது மட்டுமே மண்ணால் பூசி மெழுகி
கோபுரமும் உச்சியில் சாமியும் எழும் .பூசாரியும் ஐயர் அல்ல .கோயிலை தொட்டு தொட்டு ஓடி
ஆடி விளையாட முடியும் .இதனால் அந்த யோகீஸ்வரர் கொஞ்சம் நெஞ்சுக்கு நெருக்கமாய்ப் போனார்
.
வீட்டில் என்னை யோகீஸ்வரன் என்றே அழைப்பர் .சுசீந்திரத்தில்
வாழ்ந்தவரை நண்பர்களிடமும் அப்பெயரும் புழங்கும் . இந்த ஞாபகத்தின் மிச்ச சொச்சமாய்
என் மகன் சங்கரை என் அம்மா [அவன் ஆச்சி] யோகி என்று அழைக்க அதுவும் பழகிப்போனது .இப்போதும்
அவனை யோகி என்றே வீட்டில் அழைக்கிறோம் .
எங்கள் குடும்பத்தில் யோகி இப்படி தொடர்கிறார் . இது புத்தேரி
தந்த உணர்வின் தொடர்ச்சிதானே !
குடும்பம் எனில் சொத்துப் பிரச்சனையும் இருக்கவே செய்யும்தானே
.சொத்து சித்தப்பா கைக்குப் போனது உறவு சற்று
சிதலம் அடைந்தது சென்னைக்கு வந்த பின் தொடர்பற்றுப்
போனது .
இந்த புத்தேரியை எங்கள் பூர்வீகம் எனச் சொல்ல இயலுமோ ?
வீமநகரி [ நெடுமங்காடு]
திருவனந்தபுரம் அருகில் வீமநகரி இருப்பதாய் கேள்வி .இங்குதான்
அகஸ்திலிங்கத்துக்கு கோயிலும் உள்ளதாம் . நான் போனதும் இல்லை .பார்த்ததும் இல்லை.
என் அம்மாவின் அப்பா ஊர் . நான் சென்ற ஞாபகம் இல்லை . என் தாத்தா
மீசைக்காரர் அகஸ்திலிங்கம் பிள்ளை பிழைக்க வந்த ஊர் சுசீந்திரம் .மணமுடித்ததும் இங்குதான்
.ஆனால் ஊரார் அழைக்கும் பெயர் மட்டும் வீமநெரிக்காரர் . வீமநெரிக் குடும்பம்.
இந்த வீமநகரியோடு எந்தத் தொடர்பும் போக்குவரத்தும் எமக்கு இல்லை
; அங்குள்ள ஓர் கோயிலில் உறைந்த சாமியின் பெயரே எனக்கும் தொடர்கிறது என்பது தவிர வேறெந்தத்
தொடர்பும் இல்லை .
ஆக இந்த வீமநகரி எனக்கு பூர்வீகம் எனச் சொல்லக் கூடுமோ ?
இப்போது பெருங்கேள்வி என் பூர்வீகம் எது ?
சென்னை வந்த பிறகு குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் சுமார் இரண்டு
வருடங்களுக்கு மேல் ,அப்புறம் பழவந்தங்கலில் 1981 வரை , திருமணத்திற்குப் பின் பெரம்பூர்
எனக் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் அதாவது வாழ்வின் மையமான காலம் முழுவதும் சென்னைவாசியே
! ஆக ,சென்னை என்னோடு இரண்டறக் கலந்தது அதிகம் .
1998 முதல் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப் பேட்டை அருகே திரூரில்
சுமார் பதினைந்து வருடம் , இப்போது 2013 முதல் பெங்களூரில்
இப்போது யோசிக்கிறேன் என் பூர்வீகம் எது ?
இறந்தவர்க்கு திதி கொடுக்கும் போது தந்தைவழி எழுதலைமுறை ஆண்
மூதாதையர் பெயர்களைக் கேட்க வேண்டுமாம் .அது
அவர்களின் பூர்வீகத்தை உறுதி செய்யவாம் கிட்டதட்ட
யாருக்கும் இப்படி ஏழுதலைமுறை தெரிய வாய்ப்பில்லை .எனவே ஐயர் ஒன்றிரண்டை கேட்டுவிட்டு
அவர் மனம் போல் கதைவிட்டு சமாளிப்பார் . முக்கியமான ஒரு செய்தி தாய்வழி பூர்வீகம் கேட்கப்படாது
.ஏனெனில் பெண்ணுக்கு சுயம் கிடையாது .கணவனின் சார்பு மட்டுமே என்பது மநு அநீதி .
ஆக ,பூர்வீகம் என்பது தந்தை வழி மட்டுமே என்பது எவ்வளவு அநீதியானது
.சமூகநீதிக்கும் பாலின சமத்துவத்துக்கும் எதிரானது என்பது சொல்லாமல் விளங்கும் .
நான் என் பூர்வீகத் தேடலில் விரும்பியோ விரும்பாமலோ இரு பக்கமும்
சென்று வந்து விட்டேன் .
நான் மணமுடித்த கலாவதி திண்டுக்கல்லில் பிறந்தவர் தந்தை திருச்சியைச் சார்ந்தவர் . அவர்களின் பூர்வீகம்
நெருக்க நெருக்கமாக வாழ்ந்தனர் . அங்கு முந்தைய தலைமுறையின் கொள்வினை கொடுப்பினை மிகவும்
உள்ளடக்கியே இருந்தன . எனவே ஓரளவு அவர் பூர்வீகம் மூன்றுதலைமுறை அடையாளம் காட்டக்கூடியதாய்
இருந்தது .ஆயின் சாதிச் சிமிழுக்குள் அடங்கிடும் என்பதே சோகம் .
என் பெயரின் தலை எழுத்து இன்ஷியல் அப்பா பெயரே . ஆனால் என் மகள்
,மகன் இருவருக்கும் “அ.க” என தந்தை ,தாய் என
இருவர் இன்ஷியலும் பிறப்புச் சான்றிதழிலேயே பதிவாகிவிட்டது .
சரி ! பூர்வீகச் சிக்கலுக்கு வருவோம் .
என்னால் இரண்டு தலைமுறைக்கு மேல் தேட முடியவில்லை . முப்பாட்டன்
தெரியவில்லை எழு தலைமுறை இரு வழி கொடி வழி அறிய வில்லை . இதுதான் யதார்த்தம் .
என் மகள் சாதி மறுப்பு காதல் திருமணம் .மருமகன் தாய் மொழியும்
வேறு .மகனும் சாதி மறுப்புத் திருமணம் . ஆக உறவு , தொடர்பு , வேர் எல்லாம் பரந்து விரிந்து
போகிறது .
என் பேரப் பிள்ளைகளுக்கு எது பூர்வீகம் ?
மிகச் சிக்கலான கேள்வி . மதத் தூய்மை ,சாதித் தூய்மை ,இனத் தூய்மை
என்பதெல்லாம் பொருளற்ற சொல்லாடல் .
நாம் வாழும் காலத்தில் பேசும் மொழி சார்ந்து அடையாளப் படுத்தலாம்
.அவ்வளவே . சாதி ,மதம் தேவை இல்லை .
பேசும் மொழியால் தமிழன் ,வாழும் நாட்டால் இப்போது இந்தியன்
.நாளை என்ன ஆகுமோ ? யாரறிவார் ?
உங்களின் அப்பா, அம்மா அவர்களின் அப்பா அம்மா இப்படி முப்பது
தலைமுறை பின்னால் பயணித்தால் உங்கள் உறவினர்கள் எண்ணிக்கை 1, 073,741,824 இவர்களின்
வாழ்வை கூர்ந்து நோக்கினால் ஏதாவது ஒருவகையில் தகாத உறவாகவே இருக்கும் என அதிர்ச்சிக்
குண்டைத் தூக்கிப்போடுகிறார் “அனத்தையும்
குறித்த சுருக்கமான வரலாறு ; மனித அறிவுத்தேடலின் முழுக்கதை “ நூலாசிரியர்
பில் பிரைசன்.
நீங்கள்
ஒரு பூங்காவில் இருக்கும் போது சுற்றி இருப்போரின் வரலாற்றைத் துருவினால் அனை வரும்
உறவினரே. ஆசிரியரின் இக்கூற்றைச் சரியாக உள்வாங்கினால் சாதி மதச் சண்டை ஏன்?
வாழும் போது சாதி ,மத வெறி குடுவையில் வீழாமலும் , இனவெறி பொறியில்
சிக்காமலும் பேசும் மொழியால் தமிழன் வாழும் நாட்டால் இந்தியன் செய்யும் தொழிலால் உழைக்கும் வர்க்கம் என அறிவுபூர்வமாக
உணர்ந்து வாழ்ந்தால் நாம் மனித குலத்துக்கு சேவகம் செய்தவராவோம். பூர்வீகம் குறித்த
தேடல் சாதி ,மதம் ,இனம் என ஏதேனும் வலையில் சிக்கிக் கொள்ளக் கூடாது .அதற்கான வாய்ப்பதிகம்.
ஆக .விழிப்போடிருப்போம்.
என் இரண்டரை வயது பேத்தி “ சுபொ தோழர் … சுபொ தோழர்… தோழர்,,”
என அழைக்கிறாள் .
என் பூர்வீகம் பிடிபட்டுவிட்டது .
சுபொஅகத்தியலிங்கம்.
[ என் பிள்ளைகள் இதனை உணர்ந்து தங்கள் கிளைவழியையும் இணைத்து
எழுதி வைத்தால் நாளைய தலைமுறை சாதி ,மத ,இன வெறியை துறந்து வாழலாம் . அம்புடுத்தான்…..
]
0 comments :
Post a Comment