மரணத்தின் செய்தி

Posted by அகத்தீ Labels:


மரணத்தின் செய்தி


மரணத்தின் வாசம் என்ன ?
ஒரு வேளை கொரானா வாசமாக இருக்குமோ ?

மதவெறி நாற்றமாக இருக்குமோ ?
சாதிவெறியின் நெடியாக இருக்குமோ ?

வறுமையின் வெப்பமாக இருக்குமோ ?
கடனின் இறுக்கமாக இருக்குமோ ?

தோல்வியின் அழுத்தமாய் இருக்குமோ ?
பழிவாங்கலின் முகமாய் இருக்குமோ?

எதுவாயினும் அம்மரணம் கொடியதே !
ஒரு போதும் யாருக்கும் அம்மரணம் வேண்டாம்.

மரணமில்லா வாழ்வு யாருக்கும் கிடையாது
எப்போதும் எங்கும் கிடையாது.

மரணம் இயற்கையானது .தேவையானது .
வாழ வேண்டியவருக்கு வரக்கூடாதது மரணம் .

பிஞ்சும் பூவும் காயும் உதிர்க்கும் மரணம்
இரக்கமற்ற பேரரக்கனே !

கனிந்த பழத்தைக் காக்க வைப்பது
மரணத்தினும் கொடிது !

எந்த மரணமாயினும்
இறகு உதிர்வது போல் எளிதாகட்டும் !
மலை பெயர்வதுபோல் வேண்டாம் !

கொரானா பற்றிய செய்திகளை வாசிக்க வாசிக்க
மரணத்தை யோசிக்க வைத்தது .

வாழு வாழவிடு என்பதறியா
பைத்தியக்கார சமூகம்
கொலைவெறி பிடித்தலைகிறது !

அன்பால் எங்கும் அணைந்து கொள்ளாமல்
வெறுப்பை விசிறி ! வெறுப்பை விசிறி !
வெறுப்பில் வெந்து கருகுதல் தகுமோ மானுடமே !

மானுடம் பயனுற வாழப்பழகு
இல்லையேல்
மரணமே உனக்கும் சமூகத்துக்கும் நன்று !

சுபொஅ.

0 comments :

Post a Comment