#துரும்பையேனும் கிள்ளிப்போடு

Posted by அகத்தீ Labels:

#துரும்பையேனும் கிள்ளிப்போடு

காலையிலிருந்து
கணினியை வெறித்து பார்த்தபடி
உட்கார்ந்திருக்கிறேன்.
எதையும்
எழுதத் தோன்றவில்லை .

எதிரே இருக்கும்
புத்தக அலமாரியில்
அடுக்கி வைக்கப்பட்டும்
கலைந்தும் கிடக்கும் புத்தகங்கள்
என்னை கேலி செய்கிறதா ?

பரணில்
தூசிபடிந்து கிடக்கும் புத்தகங்கள்
என் மீது காறித் துப்புகிறதா ?

காந்தி கொலை தொடங்கி
இன்றுவரை
தலைநகர் டெல்லியில்
கோட்சேக்களின் வெறியாட்டம்
ஓய்ந்தபாடில்லை.


சிம்மாசனம் தந்த மமதை
குரங்கு கை பூமாலையாய்
மனிதமும் அரசியல் சட்டமும் …

பலியானவர்களின் எண்ணிக்கையை
இயந்திரமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறது
விலைபோன ஊடகங்கள்.


உயிரை ,உடமையை இழந்த
எம் சோதரர் துயரமும் அச்சமும்
எம் ஈரல்குலையை நடுங்கச் செய்கிறது .

முகநூலில் ஒரு பதிவு
கோவத்தில் ஒரு கவிதை
வேறு என்ன செய்துவிட முடியும்
என்னால் ?

ஆற்றாமை சுட்டெரிக்கிறது
பெருங்குரலெடுத்து
அழத் தோன்றுகிறது ..

மவுனமாய் இருப்பதைவிட
முனகுவது மேலல்லவா ?
முனகுவதைவிட சற்று
உரக்கப் பேசுதல் மேலல்லவா ?

சும்மா இருப்பதைவிட
எதையாவது செய்
முனகு
அழு
பிதற்று
கூச்சலிடு
பேசு
எழுது
போராடு !!!

ஒல்லும் வகையெல்லாம்
பாசிசத்துக்கு எதிராய்
துரும்பையேனும் கிள்ளிப் போடு !!

சிறு துளி பெருவெள்ளமாகும்
சிறு பொறி காட்டுத் தீயாகும் !!!

சு.பொ.அகத்தியலிங்கம்.0 comments :

Post a Comment