ஒரே வழி………..

Posted by அகத்தீ Labels:





ஒரே வழி………..



வெறுமையே எங்கும் அப்பிக் கிடக்கிறது
நொடி தோறும்  அடர் இருட்டு கூடிக்கொண்டே போகிறது
எல்லா குரலும் மெல்ல மெல்லத் தேய்ந்து கனத்த மவுனம் சூழ்கிறது
பேரழிவின் முன்னறிவிப்பா ?

எட்டுதிக்கும் குவிந்து கிடக்கும் பொய்களின் கீழே
உண்மை மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது
மூச்சுவிடவும் அவகாசமற்று மூடநம்பிக்கை
நீர்பாய்ச்சி உரம்போட்டு வளர்க்கப்படுகிறது
அறிவியலையும் அதன் தூதுவனாக்கிட
அசுர வேகத்தில் புனைவுகள் பெற்றுப் போடப்படுகின்றன

படித்தவனின் பொய்யும் சூதும் அனைத்தையும்
இடித்துத் தள்ள கரசேவை செய்கிறது
அடித்தட்டு மனிதரின் எளிய நியாயமும்
ஆழக் குழி தோண்டி புதைக்கப்படுகின்றது

எங்கும் அபயக்குரல் ! உதவுவோர் யாருமில்லை!
கொலையே வேதமாகிப்போன காலமானது
ஆற்றவோ அரவணைக்கவோ யாருமில்லை
திக்கற்றவரை தெய்வமும் கைவிட்டது
கடவுளின் சந்நிதானமும் கடையடைப்பு செய்துவிட்டது
திரும்பிய பக்கமெல்லாம் துரோகத்தின் கொடுங்கரம்

அழுதும் பயனில்லை .தொழுதும் பயனில்லை
ஊழிப் பேரழிவிலிருந்து தப்பிக்க வழிதெரியாமல்
எல்லாம் வல்ல இறைவனே கலங்கி நிற்கிறான்
அற்ப மானுடப் பதரே ! ஆண்டவன் கைவிட்டுவிட்டான்
உதனாபிஷ்டிம் படகு வரவே வராது
நோவா கப்பல் ஒரு போதும் வராது
மானுட ஆற்றலும் அறிவும் மட்டுமே
மானுடம் மீளும் ஒரே வழி !
வேறென்ன சொல்ல இப்போது ?

குறிப்பு : சுமேரிய நாகரிக அழிவை ஒட்டி எழுந்த கில்காமேஷ் எனும் உலகின் முதல் இதிகாசத்தில் சொல்லப்படும் மீட்புப் படகே உதனாபிஷ்டிம் . பைபிளில் கூறப்படும் மீட்புக் கப்பலே நோவா.

சுபொஅ.




0 comments :

Post a Comment