கரை கடந்த சோகங்களும் கேள்விகளுமாய் ஓர் நாவல்.
சு.பொ.அகத்தியலிங்கம்.
‘சுமையா’ , ‘கூழாங்கற்கள்’
என இரு சிறுகதைத் தொகுப்புகள் மூலம் கனவுப்பிரியனாக அறிமுகமாகிய - மணல் பூத்தகாடு எனும் நாவல் மூலம் முஹமது யூசப்பாக
முகங்காட்டிய - தகவல் கொண்டாடியின் அடுத்த நாவல்
‘கடற்காகங்கள்’ வாசித்து முடித்தேன் ; முந்தைய மூன்று படைப்புகளும் ஏற்படுத்தியிருந்த
எதிர்பார்ப்போடு…..
“ இஸ்லாமிய வரலாற்றில்
உமையாக்கள் ஆரம்பித்து வைத்த கரும்புள்ளி [நுக்த் – Nugtah ] நூற்றாண்டுகள் கடந்தும்
சிரியா நிலத்தின் மீதுமட்டுமல்ல உலகம் முழுவதும் வியாபித்துள்ள இஸ்லாமியர் மீதும்
– அவர்களின் மண் மீதும் – விதவிதமான பெயர்களில் – விதவிதமான இயக்கங்களில் விதவிதமான
விதவிதமான தீவிரவாதாக் கொள்கைகளோடு; இரத்தம் தோய்ந்த புள்ளியாக நிரந்தரக் கறையைப் படியவிட்டு
,இன்னமும் உயிர் கொல்லியாய் வாழ்கிறதே என்ற கோபத்தில் அங்கிருந்த சுவற்றை எட்டி மிதித்தான்.”
என இறுதியில் கதாநாயகன் குழந்தை நல மருத்துவர் தாரிக் தாங்க
முடியாமல் கலங்குவதும் ; அரற்றுவதும் ; “இவுங்க எல்லாம் ஏன் முஸ்லீமாகப் பிறந்தாங்க
சத்யா , முஸ்லீமாகப் பெறக்கிறது என்ன அவ்வளவு குத்தமா ..? இல்ல இந்த மண்ணுல பெட்ரோல்
கிடைக்கிறது தப்பா… ? என்று அரற்றியபடி அழுகையுடன் மொபைல் துண்டிக்கப்பட்டது.” சிரியாவில்
மருத்துவமனை மீது நடந்த குண்டு வீச்சில் தாரிக் இறந்தான் .
தமிழக கடற்புரமான இணையம் புத்தன் துறை எனும் ஊரில் தொடங்கி
சிரிய நாட்டின் அலிப்போவில் முடியும் இந்நாவலின் பெரும் பகுதி அமீரகம் [UAE]சார்ந்த
டெல்மா தீவிலேயே நிகழ்கிறது . ஆனால் பல நாட்டுக் குடிமக்களோடும் அவர் சார்ந்த பிரச்சனைகளோடும்
கதை நகர்கிறது .தீவின் வர்ணனை நாமும் ஒரு முறை அங்கு போய்வர ஆர்வத்தைத் தூண்டுகிறது
.
சென்னை பெசண்ட் நகரில் சுனாமிக்கு ஆசை மனைவி பானுவையும் மகள்
ஆஷிபாவையும் கண்ணெதிரே பறிகொடுத்த நீங்கா சோகத்தோடு பயணிக்கிறான் தாரிக் . கடலாடிக்கு
தைரியத்தைக் கற்றுத் தந்த கடலே அவர்கள் மனதில் பயத்தையும் விதைத்துவிட்டது .
“ அவரவர் அவரவரின்
விருப்பத்திற்கு எதுவும் பேசிக்கொள்ளலாம் .ஆனால் கண் எதிரே நிகழ்ந்த் இழப்பை .அழிக்க,புத்தியில்
சேகரிக்கப்பட்ட செய்தி அழிய மனப்பிறழ்வு நிகழ்ந்தால் ஒழிய வேறு வழியில்லை .”
[ இந்த வரிகளை நாவலில் படித்த போது அண்மையில் நான் இழந்த
ஓர் அருமைத் தோழரின் நினைவு ஒரு நாள் முழுவதும்
நூலை படிக்க விடாமல் தடுத்துவிட்டது .]
ஆக தன்னை சதா வாட்டிக்கொண்டிருக்கும் நினைவிலிருந்து விடுபடத்தான்
தாரிக் டெல்மாவை நோக்கி பயணித்தான் ,தன் மருத்துவத் தோழி சத்யா ஆலோசனைப்படி.
அலை ஓய்வதில்லையே அங்கு சந்திக்கும் முவாசின்- டீச்சர் சமீரா
தம்பதியர் ,ராஜா - சுல்தானா , டேனியல் -பொற்கொடி என்கிற எஸ்தர் , ஜெர்ரி ,மர்வான்
,சாவக்காடு ஹமீத் ,டயானா , ஷெர்லின் , கார்லோ ,செல்வராஜ் , டாக்டர் அம்ரு ,மஜீத் ,அப்பாஸ்
மாமா ஒவ்வொருவரும் வாழ்வின் பல சோகங்களையும் குணங்களையும் சுமந்தபடி பயணிக்கின்றனர்
.
பரந்த ஞானமும் கூர்மதியும் கொண்ட டீச்சர் சமீரா குழந்தை இன்மையால்
படும் வேதனையையும் , தாவூத் தொடர்பின் மூலம் ஈடுகட்ட முயல்வதும் நுட்பமான உளவியல் சமனுடன்
சித்தரிக்கப்பட்டிருக்கிறது . வழக்கமான முஹமது யூசுப் நாவலைவிட இந்நாவலில் பாலியல்
சற்று தூக்கலாய் உள்ளது . அப்பிக் கிடக்கும் சோகத்தைக் கடக்க இது தேவைப்பட்டிருக்கலாம்.
“அந்த பெர்ஷியன்
கடலில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று மீன் பிடிக்கலாம் .டேனியும்
அவனது சக ஆட்களும் மார்வானுடன் சேர்ந்து அதிகம்
செல்வது கத்தார் நாட்டின் அருகில்தான்.ஆனால் யாரும் யாரையும் சுடுவதில்லை.இந்தக்
கடலுக்கு ஈரம் இருந்ததால் மீனவர்கள் செத்து ஒதுங்கியதாக ஒரு நாளும் இங்கு பத்திரிகையில்
செய்தி வந்ததில்லை . ”
“ ஒரு வேளை இந்தியாவில்
உயர் பதவிகளில் எல்லா காலங்களிலும் இருக்கும் உயர் குலத்தோர் மீன் கருவாடு தின்பவர்களாக
இருந்திருந்தால் இன்னேரம் கடலாடிகளின் துயர் புரிந்திருப்பார்களோ ?”
மேலே சுட்டிய வரிகள் நெற்றிப் பொட்டில் பளார் பளார் என அறைகிறது
.
வசிய மருந்து வைப்பதோ எடுப்பதோ அறிவியல் பூர்வமில்லை எனத்
தெரிந்தும் சக நண்பர் அன்வர் ராஜாவினை உளச்சிக்கலிருந்து மீடக் அதனை மேற்கொள்ளச் செய்வதும்
; அது பலனின்றிப் போனதாய் முடிப்பதும் ஒரு நடைமுறை சாத்தியமான அணுகுமுறையோ ? ஆயினும்
நாவல் வாசிக்கும் எல்லோரும் அப்படிப் புரிந்து கொள்வார்களா ?
அன்வர் ராஜா- சுல்தான உறவில் இனம்காண இயலா நம்பிக்கையின்மை
;தாரிக் சுனாமியில் பானுவை இழ்ந்தான் அலெய்டா காதலும் அந்தரத்தில் நிற்க கதை முடிந்து
விட்டது ; முவாசின் –சமீரா உறவுக்கு இடையிலும் ஓர் அபசுரம் ; டேனியல் – பொற்கொடி போராட்டத்துக்குப்
பின் வாழ்வைத் துவக்குகிறார் இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் பிரச்சனைகளோடே மல்லுக்கட்டுவது
சமூக யதார்த்தம்தானே !
“ வாழ்வு என்பதே
கேள்வி எனும் கிளையின் மீது நிற்கும் ஒரு காக்கைதானே” என்றும் ; “ விவாதங்களின் மிச்சம்தானே
இருத்தலின் அடையாளம்” என்றும் முன்னுரையில் முஹமது யூசுப் சொல்வது நாவலின் உள்ளுறையாய்
இருக்கிறது .
இயேசு ஐரோப்பியாவிலா
பிறந்தார் ? “வளைகுடா நாட்டில்தான் பெத்லஹேம் இருக்கு ,அப்போ இங்கதாஸ்கிருஸ்துமஸ் ட்ரீ
வளரது,இங்கதான் பனி பொழியுது ,இங்கதான் மாட்டுத் தொழுவத்திலதான் இயேசுநாதர் பிறந்தார்…”
என அங்கு சென்று படம் எடுத்து மொபைலில் பதியும் தாரிக் மதம்பிடிக்காத இறைநம்பிக்கையாளர்
.
மணல் பூத்த காட்டில் தோளப்பா மூலமே வகாபியிஸத்தின் வரலாறும்
தீங்கும் விவாதிக்கப்படும் .இந்நாவலில் சமீரா , சாவக்காடு ஹமீது என சில பாத்திரங்கள்
வழி இஸ்லாம் குறித்த நல்லதும் கெட்டதும் வரலாறும் புனைவும் பேசப்படுகிறது ;ஆயின் சில
இடங்களில் நூலுக்கு வெளியே துருத்திக் கொண்டு தகவல் கொட்டுகிறது .
ஒருவர் பிற மதத்தை விமர்சிக்கும் போது அது மதப் பகையாகும்
; ஆனால் மதத்துக்கு உள்ளிருந்தே விமர்சனக் குரல் எழுவது ஜனநாயகம் ஆகும் . அவ்வகையில்
இந்நாவல் குறிப்பிடத்தக்கது .ஆயின் ,முஸ்லீம் அல்லாத ஒருவர் இதன் உட்கூறுகளை மிகச்
சரியாக உள்வாங்க முடியுமா ? அல்லது அப்படி சொல்லப்பட்டிருக்கிறதா என்பதே கேள்வி . இன்னொன்று
இஸ்லாம் இளைஞர்களிடம் இந்நாவல் சார்ந்த உரையாடல் நிகழ்த்த இப்போது வாய்ப்பு உள்ளதா
? இல்லையேல் நாவலின் நோக்கம் கரை சேராது .
இந்த நாவலில் தகவல்கள் சில இடங்களில் வலிந்து திணிக்கப்பட்ட
உணர்வும் ; பானு /ஜானு என எழுத்துப் பிழை , பாசக்காரன் சாவக்காடு ஹமீது என்பது பாஜககாரன்
[பக்கம் 264 ]என வந்திருப்பது பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் சொன்னேன் .பிழை திருத்துவதிலும்
எடிட்டிங்கிலும் இன்னும் கூடுதல் கவனம் தேவை .
மார்ச் மாதம்தான் மணல்காடு விமர்சனம் எழுதினேன் .ஜனவரியில்
கடற்காகம் மகிழ்ச்சி அளிக்கிறது . கொஞ்சம் அவகாசம் எடுப்பினும் பிழை அல்ல ;இன்னும்
செழுமையான நாவலை முஹமது யூசுப்பிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
கடற்காகம் ,ஆசிரியர் : முஹமது யூசுப் ,
பக்கங்கள் : 328
,விலை : ரூ. 395
வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ்,
214 ,புவனேஸ்வரி நகர் 3 வது முதன்மைச் சாலை ,
வேளச்சேரி,சென்னை- 6 00042.
அலைபேசி : 9042461472 /9841643380
நன்றி : தீக்கதிர் ,புத்தகமேசை
,23/12/19. தீக்கதிரில் சுருக்கப்பட்ட வடிவம் வந்துள்ளது .இங்கு முழுமையாக வெளியிடப்படுகிறது.
0 comments :
Post a Comment