மன நிம்மதிக்கு ஆன்மீகம் என்பது சரிதானே

Posted by அகத்தீ Labels:





கேள்விகளின் யாகம்

மன நிம்மதிக்கு ஆன்மீகம் என்பது சரிதானே?

சு.பொ. அகத்தியலிங்கம்

·         மனம் ஒரு குரங்கு. மனசை அடக்கு என்று ஆன்மிகவாதிகள்கூறுகிறார்கள். மனமும், சிந்தனையும் ஒன்றா? ‘சிந்தனை செய் மனமேஎன்று திரைப்படப்பாடல் சொல்லுகிறதே! மனதும் அறிவும் வெவ்வேறுதானே! அப்படியாயின் மன நிம்மதிக்கு ஆன்மீகம் என்பது சரிதானே?
  ·         சுரண்டலோ ஒடுக்கமுறையோ அல்லது இதர பொருளாதாரக் காரணங்களற்ற தனிமனித துன்ப துயரங்களுக்கு எவ்வளவு செலவு செய்தும், மருத்துவம் பார்த்தும் கை-கால் செயலற்று இருப்பது, குடும்பச் சிக்கல் போன்றவைகளுக்கு ஆன்மிகத்தின் எளிமையான இதமான சொல்லும் ஒத்தடமும் தேவையாக இருக்கும் போது நீங்கள் பகுத்தறிவு நாத்திகம் என பேசிக்கொண்டிருப்பது வீண்தானே !
  ·         நான்யார்? மரணம் என்பதுஎது? -என்று ஆன்மிகவாதிகள் தேடச் சொல்கிறார்களே?
  ·         எல்லோரும் இளமையில் புரட்சி, நாத்திகம் எனப் பேசலாம் ஆனால் வாழ்வின் பிற்பகுதியில் பிரார்த்தனை, கடவுள் எனச் சரணடைந்து விடுவார்கள்! இப்படி எத்தனை நாத்திகர்களைப் பார்த்திருக்கிறோம்! நெருக்கடியில் இருக்கும்போதோ, மரணம் கதவைத் தட்டும்போதோ மனம் உருக ஆண்டவனை வேண்டாதோர் யார் ?
  ·         பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நேர்த்திக்கடன்களும் வெற்றிக்கு உதவும் என்பதை தமிழகம் கண்கூடாகக் கண்டதே! இன்னும் அவற்றை வெறும் மூடநம்பிக்கை என எள்ளி நகையாடலாமா ?
 


வாழ்க்கை நெடுகிலும் நாம் அறிந்தும் அறியாமலும் ஏதேனும் ஒரு தத்துவம் சார்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதனை பெரும்பாலொர் படித்து அறிந்து ஒழுகவில்லை; வாழ்க்கைப் போக்கில் சமூகத்தின் பொதுப் புத்தியில் உறைந்து போயுள்ள கருத்தோட்டம் நம்மை வழிநடத்தவே செய்யும். ஆகவே அந்தத் தத்துவத்திற்கு எதிரான போராட்டம் என்பது பல சிக்கலான கேள்விகளை நம்முன் வைக்கும். நாம் அவற்றை எதிர்கொண்டே முன்னேற முடியும். இப்போது நம் முன் வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குள் போவோம்,


மனம் ஒரு குரங்கு, மனசை அடக்கு என்று ஆன்மிகவாதிகள் கூறுகிறார்கள். மனமும், சிந்தனையும்ஒன்றா? ‘சிந்தனைசெய்மனமேஎன்று திரைப்படப்பாடல் சொல்கிறதே! மனதும் அறிவும் வெவ்வேறுதானே! அப்படியாயின் மன நிம்மதிக்கு ஆன்மீகம் என்பது சரிதானே?


மனசெல்லாம் மத்தாப்பு, மனநிம்மதி, மனநிறைவு, மனச்சாட்சி -இப்படி ஏராளமான சொற்களை அன்றாடம் புழங்கிக்கொண்டிருக்கிறோம். மனம் ஒரு குரங்கு என்று ஆன்மீகவாதிகள் மட்டுமா சொன்னார்கள்? இல்லை .“ மனச்சாட்சி தூங்கும் போது மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பிவிடுகிறதுஎன்பது கலைஞர் கருணாநிதியின் சினிமா வசனமும் கூட. மார்க்ஸ்சின் எழுத்துகளில் கூட மனச்சாட்சி என்ற சொல்லைக் காண முடியும். மனம் என்ற சொல் ஆன்மீகத்துக்கு பட்டாபோட்ட சொல் அல்ல; ஆனால் எது மனம் என்பதை  விளக்குவதில்தான் ஆன்மீகவாதிகளும் பகுத்தறிவாளர்களும் மாறுபடுகின்றனர் .

மனம் என்பது தனித்து இயங்குவதாக, சுயம்புவாக ஆன்மீகவாதிகள் சித்தரிப்பர். ஆனால் மனம் என்பது மூளை என்ற அங்கத்தின் செயல்பாடென அறிவியலாளர் கூறுவர்.


மகிழ்ச்சி, கோபம், என பல்வேறு உணர்ச்சிகளை மூளையே உணர்கிறது. அப்போது இரத்த ஓட்டமும் இதயத்துடிப்பும் மாறுபடும்; இதயத்தில் கைவைப்போம்; இதனால் மனம் இதயத்தோடு சம்பந்தப்பட்டதாகக் கருதிவிட்டோம். ஆனால் அது மூளையின் செயல்பாடே. மனம் என்பது மூளையின் உண்ர்ச்சிப்  பிரதேச செயல்பாடே. அன்பு , பாசம், இரக்கம் போன்ற நல்லுணர்வுகளும் மூளையின் அறிவுச்சேகரங்களே

மனவியல் அல்லது உளவியல் செயல்பாடுகள் உடலிலிருந்து தனித்திருக்கக்கூடிய  தனிமனிதச் செயல்பாடுகள் எனக் கருத்து முதல்வாதம் சொல்கிறது. ஆனால் மனவியல் செயல்பாடுகள் உயர்ந்த மட்ட வளர்சி அடைந்த பருப்பொருளின் அதாவது மூளையின் செயல்பாடுகள் என்று மார்க்சியம் கூறுகிறது .” என்கிறார்இயக்கவியல் பொருள் முதல்வாதம்எனும் நூலில் மாரிஸ் கான்போர்த்
பா. வீரமணிஎழுதியுள்ளமனமெனஒன்றுஉண்டாஎன்கிற நூல்மனம்குறித்த ஒரு பரந்த விவாதத்திற்குத் தளம் அமைத்துள்ளது. வாசலைத் திறந்துள்ளது .

மேலும் நம் சிந்தனை சூனியத்தில் பிறக்கவில்லை . நாம் காண்கிற , நாம் அனுபவிக்கிற , நாம் ஊடாடுகிற சமூகத்தின் பிரதிபலிப்பே ஆகும் . மனம் , சிந்தனை எல்லாமே மூளையின் செயல்பாடுகள் .மனம் ,சிந்தனை இரண்டும் மூளையின் செயல்பாடாக இருப்பினும் ஒன்றல்ல வெவ்வேறு தளத்தில் ஆனவை . இந்த சமூகத்தின் பிரதிபலிப்பு .இந்தப் பொருள் பல நூறு பக்கங்கள் கொண்ட நூலாகும் அளவுக்கு விரிந்தது .


மூளைச்சாவு அடைந்துவிட்டால் அப்புறம் எதுவும் இல்லை என்கிற அனுபவ உண்மையை மனதில் நிறுத்துவோம் . மனம் பேதலித்தவனை. பைத்தியம் பிடித்தவனாக - மூளை பிசகியவனாகவே கருதி சிகிடசை அளிப்பதையும்; பல்வேறு வேதியல் மருந்துகள் மூலம் சமநிலைக்கு கொண்டுவருவதையும் பார்க்கிறோம் .

மனதை ஒரு முகப்படுத்துவது என்பது ஆன்மீகம் சார்ந்ததல்ல. அது பயிற்சியே. தனக்கு விருப்பமான ஒன்றில் முழுக்கவனத்தையும் செலுத்தும்போது மனம் மகிழ்கிறது . எடுத்துக்காட்டு: சங்கீதத்தில் மூழ்குவது. எனக்கு புத்தகம் படிக்கும்போது எதிரில் என்ன நடந்தாலும் தெரியாது. இப்படி யோசித்துப் பாருங்கள் உங்களுக்கே எல்லாம் விளங்கும்.


சுரண்டலோ ஒடுக்கமுறையோ அல்லது இதர பொருளாதாரக் காரணங்களற்ற தனிமனித துன்ப துயரங்களுக்கு எவ்வளவு செலவு செய்தும், மருத்துவம் பார்த்தும் கை-கால் செயலற்று இருப்பது, குடும்பச் சிக்கல் போன்றவைகளுக்கு ஆன்மிகத்தின் எளிமையான இதமான சொல்லும் ஒத்தடமும் தேவையாக இருக்கும் போது நீங்கள் பகுத்தறிவு நாத்திகம் என பேசிக்கொண்டிருப்பது வீண்தானே!


ஒரு தனி மனிதனின் உடல் உளச் சிக்கல் ஒவ்வொன்றுக்கும் ஆன்மீகத்துக்கும் முடிச்சுப் போடுவதோ ; சமூகக்காரணிகள் என ஒரு பேருரை நிகழத்துவதோ எந்திரத்தனமாக இருக்கும் ? ஒவ்வொன்றையும் தனித்தனியேதான் எடை போட இயலும் .வெறும் சூனியத்துள் எந்தப் பிரச்சனையும் தோன்றுவதில்லை.

ஆமாம் , நேரடியாக சுரண்டல் , சமூகஒடுக்குமுறை சாராத தனிமனித வலிகள் நிறைய உண்டு . அது குடும்பம் சார்ந்தோஉடல் நலம் சார்ந்தோ எழலாம் . கூர்ந்து நோக்கின் அதனுள்ளும் சமூகம் சார்ந்த வேர்கள் ஊண்டு . தொழில் சார்ந்தே பல நோய்கள் நம்மைத்தாக்குவதும் ; சுற்றுச்சூழல் , சத்தான உணவின்மை , சுத்தமான குடிநீரின்மை , காற்று மாசுபடுதல் , மருத்துவத்தில் தனியார் கொள்ளை என்பன உள்ளிட்ட சமூகக்காரணங்களும் ஒவ்வொரு தனிமனித உடல்நலச் சீர்கேட்டில் பங்குவகிக்கிறது .தனிமனித உடல்கூறு சார்ந்தும் மரபு சார்ந்தும் பிரச்சனை எழலாம் . எனினும் வலியில் துடிக்கும் போது  அதைப் பற்றி வகுப்பெடுத்துக் கொண்டிருக்கக் கூடாது .மருத்துவமும் இதமான கவனிப்பும் தேவை .கனிவான பேச்சும் தேவை .

கேட்டார்ப்பிணிக்குந்தகையவாய்க்கேளாரும்
வேட்பமொழிவதாஞ்சொல்.”

-கேட்போரை கவர்ந்து வைக்கும் தன்மையுடைதாகவும் கேட்காதவரும்தேடிவந்து விரும்பிக் கேட்கக்கூடியதாகவும் அமைவதே சிறந்த சொல்வன்மை. இவ்வாறு வள்ளுவன் சொல்வண்மை அதிகாரத்தில் சொல்கிறார்.

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்
இன்சொலினதே அறம்.”

-முகத்தோற்றத்தால் விருப்பத்தோடு இனிமையாகப் பார்த்து, உள்ளத்திலிருந்து வரும் இனிய சொற்களையும் சொல்ல வேண்டும் அதுவே, அறமாகும். இவ்வாறு இனியவை கூறல் அதிகாரத்தில் சொல்கிறார் . வாழ்வியல் நூலான திருக்குறளில் வள்ளுவர் எங்கே எப்படிப் பேசவேண்டும் என நிரம்பவே வழிகாட்டியுள்ளார்.

இதைவிட யார் சொல்ல இயலும் . இப்படி இனிதாகப் பேசப்பழகுதல் மானிடத்தன்மை சார்ந்தது ஆன்மீகம் சார்ந்தது அல்லவே. ஆன்மீகம் எனத் தொடங்கி மருத்துவ அறிவியலுக்கு எதிராக பிரார்த்தனை , நேர்த்திக்கடன் என மூடநம்பிக்கையில் ஆழ்த்துவது சரியாகுமா? யோசிப்பீர்!

குடும்பப் பிரச்சனைகள் தனிமனிதப் பிரச்சனைபோல் தோன்றும் ஆயின் ஆழமாகப் பார்த்தால் குடும்பம் உறவுகள் , வாழ்க்கை பற்றிய புரிதல் கோளாறே சகலத்துக்கும் அடிப்படை காரணமென்பது விளங்கும் .  குடும்பத் தேவைகள்எதிர்பார்ப்புகள்யதார்த்த நிலை இவற்றுக்கு  விதிவிலக்காய் சில குடும்பப் பிரச்சனைகள் எந்த வரம்புக்குள்ளும் அடங்காமல் போவதுமுண்டு அதற்கும் தீர்வு கடவுளைச் சரணடைவதல்ல; மாறக சில கறாரான முடிவுகளே. அது பிரிவில் கூட முடியலாம் . எதற்கும் ஒத்தடம் , வலி நிவாரணம் என்பது தற்காலிகமானது

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.”
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும்படியாகச், செய்யவேண்டும். என்கிறார் வள்ளுவர். ஆன்மீகமயக்கம் தெளிய வள்ளுவரே துணை .மக்களிடம் குறைகள் இருக்குமாயின் எடுத்துச் சொல்வதே பொறுப்பானோர் கடமையாகும் . பலன் தாமதமாகலாம் ஆனாலும் வேறு வழியில்லை.


நான்யார்? மரணம் என்பது எது? என்று ஆன்மிகவாதிகள் தேடச் சொல்கிறார்களே

நான் யார் ? மரணம் என்பது யாது ? இக்கேள்விகள் எல்லொருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் எழும் . தத்துவ உலகில் இக்கேள்விக்கு பெரும் பங்குண்டு .பிறப்பின் ரகசியம் எல்லொருக்கும் தெரியும் .ஆலமரத்தைச் சுற்றி வந்துட்டு அடிவயிற்றைத் தடவிப் பார்த்தால் குழந்தை வாராது . உடலுறவே குழந்தை பிறப்பின் ரகசியம் .
மரணம் என்பது முதலில் மூளைச்சாவு பின்னர் படிப்படியாக உடலுறுப்புகள்  அனைத்தின் இயக்கமும் நின்று போவது .இந்த அறிவியல் உண்மை எல்லொருக்கும் தெரியும் அதனால்தானே உயிர்பிழைக்க வைக்க கடைசிவரை மருத்துவ உதவியோடு மல்லுக்கட்ட முனைகிறார்கள் .இதுவே அறிவியல் பார்வை

யாருக்கு எப்போது எப்படி மரணம் வரும் என்று சொல்ல இயலாது. அது அவரவர் உடல்கூறு, எதிர்பாரா தாகுதல் , விபத்து , என பல காரணிகளை உள்ளடக்கியது . மரணத்துப் பின் என்ன  நிகழ்கிறது? அதுவே பிரதான கேள்வியாகிறது .
மனம் அல்லது ஆன்மா தனித்து இயங்குவதாகச் சொன்னஆன்மீகவாதிகள் ;மறுபிறப்பு , சொர்க்கம் , நரகம் , இறைவனோடு கலத்தல் , என பலவித கற்பிதங்கள் செய்தார்கள். ஆனால் அவை எதுவும் உண்மையில்லை.

கறந்த பால் முலைபுகா கடைந்த வெண்ணை மோர்புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல்புகா
விரிந்த பூவும் உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே
-என்றார் சித்தர் சிவவாக்கியர்

மரணமில்லா பெருவாழ்வும் இல்லை. மரணத்திற்குப் பின் மறுபிறப்பு , சொர்க்கம் , நரகம் ஏதுமில்லை . இப்போது மூளை மரணமடைந்ததும் கண் , இதயம் இன்ன பிற உறுப்புகளை வேறொருவர் அதாவது தேவைப்படுபவர் உடலில் அறுவை சிகிட்சை மூலம் பொருத்தி அவருக்கும் தானம் செய்யப்பட்ட உறுப்புக்கும் மறுவாழ்வு கிட்ட வழியுண்டு. அது அறிவியல் சாதனை. அனைவரும் பின்பற்ற வேண்டிய அருஞ்செயல் கண்தானம், உறுப்புதானம், உடல்தானம்.


என்ன சமாதானம் சொல்லினும் மரணமயம் எல்லொருக்கும் உண்டு.அதுவும் வயதாக வயதாக மரணபயம் அதிகம் .இந்தப் பயத்தைப் பயன்படுத்தி கடவுளைச் சரணடையச் சொல்கிறது ஆன்மீகம் . அதன் மூலம் மரணத்தை தவிர்க்க இயலுமா ? இயலாது. எனினும் ஒரு கற்பனை மயக்கத்தில் ஆழ்த்துவது ஆன்மீக வழிகாட்டல்.


கிருஷ்ண யஜூர் வேதத்தில் தைத்திரிய ஆரண்யம் பகுதியில்  ‘கட உபநிஷத்இடம் பெற்றுள்ளது . அதில் நசிகேதன் தன் தந்தை வாஸசிரவஸ் யாகவிதிகளைச் சரியாக கடைப் பிடிக்காததால் அவருக்கு எடுத்துச்சொல்ல ; தந்தையின் சாபத்துக்கு ஆளாகி எம்லொகம் செல்கிறான். அங்கு எமன் வழங்கிய இரு வரங்களை சாதிரியமாக தன் விடுதலைக்குப் பயன்படுத்திக்கொண்டான். மூன்றாவதாக மரணத்தைப் பற்றி கேட்கிறான் . பதில் சொல்லாமல் யமன் நழுவ - இவன் வற்புறுத்தசொர்க்கத்தில் கூட புண்ணியகாலம் முடிந்ததும் திரும்பிச் செல்ல வேண்டியதுதான் என சொதப்ப எங்கே என மீண்டும் கேட்க நீளும் உரையாடல் . மரணத்தை எதிர்பார்த்து புண்ணிய செயல்களை செய்துகொண்டிருப்பதே இறைவனோடு ஐக்கியமாகும் மார்க்கம் என இறுதியில் உபதேசம் பெறுவான்.

இப்படி தன்னலத்துக்காக சுகத்துக்காக இயங்கச் சொல்வது ஆன்மீகம். மாறாக மரணம் எப்போது வேண்டுமானாலும் வரட்டும் என சட்டை செய்யாமல் லட்சியப்பயணத்தில் முனைப்போடு மூழ்குதல் இன்னொரு வழி .அதுவே லட்சியவாதிகள் வழி. பகுத்தறிவாளர்கள் வழி.


 “மனிதனது மதிக்க முடியாத இனிய உடைமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன்ஒரு தடவைதான் வாழ முடியும். காலம் எல்லாம் குறிக்கோள் இல்லாமல்பாழாக்கிவிட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அளிக்காத வகையில்அவன் சீராக வாழ வேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம்உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழ வேண்டும்.உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனித குலத்தின் விடுதலைப் போராட்டம்என்ற பொன்னான மார்க்கத்துக்காக நான் என் வாழ்வு முழுவதையும் சக்திஅனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்பொழுது கூறும் உரிமை பெறும்வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக் கூடுமாதலால் மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்குபயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” -என வீரம் விளைந்தது எனும் ரஷ்ய நாவலில் நிகோலாய் ஆஷ்ட்டிரோவஸ்கி எழுதிய வரிகள் வழிகாட்டட்டும்.
எல்லோரும் இளமையில் புரட்சி , நாத்திகம் எனப் பேசலாம் ஆனால் வாழ்வின் பின்பகுதியில் பிரார்த்தனை கடவுள் எனச்சரணடைந்து விடுவார்கள் ! இப்படி எத்தனை நாத்திகர்களைப் பார்த்திருக்கிறோம் . நெருக்கடியில் இருக்கும்போதோ மரணம் கதவைத் தட்டும் போதோ மனம் உருக ஆண்டவனை வேண்டாதோர் யார்?


பலவீனமானவர்கள் தடுமாறுவதும் பாதைமாறுவதும் எப்போதும் நடப்பதுதான் . ஆனால் கொள்கத்தெளிவு உள்ளோர் தடுமாறுவதே இல்லை. வருத்தும் உடல் உபாதையோடுதான் பெரியார்  நாத்திகப் பிரச்சாரம் செய்துகொண்டு திரிந்தார். துரத்தும் வறுமை துன்பங்களுக்கு இடையேதான் கார்ல் மார்க்ஸ் தன் தத்துவத்தை கூரேற்றிக்கொண்டிருந்தார்.

பகத்சிங் சி றையிலிருந்த காலத்தில் அதுவும் தூக்குத்தண்டனை உறுதிசெய்யப்பட்டு விட்டபின்பு அவரது சகசிறை தோழன் ஃபணீந்திரநாத் கோஷ் என்பவர் பகத்சிங்கை பலமுறை சந்தித்து விவாதம் செய்தார். ஃபணீந்திரநாத் கடவுள் நம்பிக்கையாளர். அவர் பகத்சிங்கை கடவுள்பக்கம் திருப்புவதற்காக பலமுறை விமர்சனம் செய்தார். அவருடைய கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் சொல்லுகிற விதத்தில் சிறையிலிருக்கிறபோது பகத்சிங் எழுதிய நூலேநான் ஏன் நாத்திகனானேன்?” அந்த நூலில் கடைசியில், “இன்னல்கள் அனைத்தையும் அதிக பட்சத்துணிவுடன் எதிர்கொண்ட நாத்திகவாதிகளைப் பற்றி நான் படித்திருக்கிறேன். எனவே, நானும் எனது கடைசி மூச்சிருக்கும் வரை தூக்கு மேடையிலும் கூட தலை நிமிர்ந்து நிற்பதற்கே முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்என்றான். சொன்னபடியே பகத்சிங் இறுதிவரை நாத்திகராகத் திகழ்ந்தான் என்பது அவனது அறிவார்ந்த ஆளுமையின் உயர்ந்த எடுத்துக்காட்டு.


சுயநலத்துக்காக , அரசியல் சூதாட்டத்துக்காக சிலர் தடுமாறி இருக்கலாம்; கொள்கை தெளிவில்லாமலிருந்தோரும்; தன்னை புதிய கருத்துகளோடு புதுப்பித்துக்கொள்ளாதோரும் தடம் மாறலாம் . மரணம் குறித்து முன்கேள்வியில் சொன்னதை மீண்டும் வாசியுங்கள். வேடிக்கை மனிதரைப் போல வீழ நினைக்காமல்; நிமிர்ந்து நடைபோட உள்ள உறுதியும் அறிவார்ந்த லட்சியத் தெளிவும் பெறுக!


பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நேர்த்திக்கடன்களும் வெற்றிக்கு உதவும் என்பதை தமிழகம் கண்கூடாகக் கண்டுகொண்டதே! இன்னும் அவற்றை வெறும் மூடநம்பிக்கை என எள்ளி நகையாடலாமா?


அர்த்தசாஸ்திரம் என்ன சொல்கிறது? அரசன் சோதிடத்தை நம்பக்கூடாது ஆனால் சோதிடத்தை பெரிதும் சார்ந்திருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் மக்கள் மூடநம்பிக்கையில் மூழ்கி அரசை கேள்வி கேட்காமல் இருப்பார்கள். யாகம் , மந்திரம் , பூஜை இவற்றையும் இப்படித்தான் அணுகும்படி அர்த்தசாஸ்திரம் வழிகாட்டியதுடன்; வெற்றிக்கான வேறு தயாரிப்புகளைத் திரைமறைவில் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்றும்  வழிகாட்டியுள்ளது.

கொள்ளைக்காரர்களை, கொலைகாரர்களை, ரத்தவெறி பிடித்தவர்களை, கொடுங்கோலர்களை கடவுள் ரட்சிப்பார் என்றால், எல்லா கொடுமைகளையும் செய்துவிட்டு வழிபாடு, யாகம் செய்தால் விடுதலை எனில் அந்தக் கடவுளின் யோக்கியதை என்ன என்ற கேள்வியே மிஞ்சுகிறது.

நன்றி : வண்ணக்கதிர்  7 ஜூன் 2015 , தீக்கதிர்
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


0 comments :

Post a Comment