யாராண்டபோதும் ‘அவங்க’ காட்டில மழைதான்

Posted by அகத்தீ Labels:







யாராண்டபோதும்அவங்ககாட்டில மழைதான்



வேதக் கல்வி என்பது என்ன ? வேதக் கல்வி தமிழர் மரபா அல்லது வெளியிலிருந்து வரவா ? வேதக் கல்வி இங்கு யார் யாரால் ஊக்குவிக்கப்பட்டது ? ஏன் ?வேதக் கல்வியால் தமிழகம் நன்மை பெற்றதா ? தீமை பெற்றதா ? வேதக்கல்வி அனைத்துப் பகுதி மக்களுக்கான கல்வியாக இல்லாமல் போனதேன் ?வேதக்கல்வி குறித்த வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம் என்ன ? இப்படி எழும் எண்ணற்ற ஐயங்களுக்கு வரலாற்று ஆதாரங்களுடன் விடை தேடதமிழகத்தில் வேதக்கல்வி வரலாறுநூல் துணையாகும்.

வேதக் கல்வி மரபு என்பது வைதீக நூல்களின் கருத்துப்படி நிகழ்த்தப்படுவதாகும் . மேலும் வைதீகக் கருத்துகளை மனப்பாடம் செய்து ;அதனை நடைமுறைப் படுத்துவது ; அதனை வாழ்க்கை நெறியாக மாற்றிப் பரப்புவது என்ற முறைகளுக்கான ஆசான்களை உற்பத்தி செய்கின்ற பணியாக வேதக் கல்வி முறை இருந்தது .” என்கிறார் நூலா சிரியர் முனைவர் சி. இளங்கோ. “ தமிழில் தொன்மையான இலக்கண நூலாகக் கருதப்படும் தொல்காப்பியத்தில் வடமொழி மரபினர் குறித்த பதிவுகள் பல விரவிக்கிடக்கின்றன.” எனக் கூறும் நூலாசிரியர் அதற்கான சான்றுகளையும் காட்டுகிறார் . “ உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் / பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே..” எனத் தொடங்கும் புறநானூற்று பாடல் உட்பட கல்வியைப் போற்றிய தமிழ்மரபை சுட்டிக்காட்டும் ஆசிரியர் ;அந்தக் கல்வி மரபும் வேதக் கல்வி மரபும் ஒன்றல்ல என்பதை இந்நூலில் சொல்லுகிறார் ; அதே சமயம் காலங்காலமாய் அரசரின் ஆதரவில் வேதக்கல்வி தன்னை நிலைநிறுத்திக் கொண்டதற்கு சான்றுகளை அள்ளிக்கொட்டியிருக்கிறார்.சங்க காலத்தில் சமஸ்கிருதத்தின் தாக்கம் குறைவாக இருப்பினும் வேதங்கள் , யாகங்கள் பற்றிய குறிப்புகள் இருப்பதை அக்கால இலக்கிய மற்றும் கல்வெட்டுச் சான்றுகளோடு கோடிட்டுக்காட்டுகிறார் .

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிஎன்ற பாண்டிய மன்னன் நிறைய யாகங்கள் செய்து அப்பெயர் பெற்றதை குறிப்பிட்டு அன்றைய மன்னர்கள் ஆதரவை நிறுவுகிறார் .களப்பிரர் காலத்தில் உருவான நீதிநூல்களில் வேதம் சார்ந்த கருத்துகள் குறைவாகவே காணப்படுவதை நன்கு அவதானித்துள்ளார் . களப்பிரர் காலத்துக்கு முன்பு அரச ஆதரவுடன் இருந்த வேதம் களப்பிரர்களால் ஒதுக்கப்பட்டது. பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட பிரம்மதேய நிலங்கள் திரும்பப்பெறப்பட்டன .களப்பிரர் காலத்தில் சமணம் ஓங்கு நிலையில் இருந்ததையும் புத்தம் பலவீனமடைந்ததையும் சுட்டுகிறார் .சமணப்பள்ளிகளும் புத்த மடங்களும் கல்வியை வெகுஜனங்களுக்கு அளித்ததும்; வேதம் பிராமணர்களுக்கானதாகவே இருந்ததும் இந்நூலில் நிறுவப்படுகிறது .

பல்லவர் காலத்திலிருந்துதான் வேத பாடசாலைகள் தொடர்ச்சியாகச் செயல்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன.மேலும் இவர்கள் காலத்திலிருந்துதான் பிராமணர்களுக்கு அளிக்கப்படும் பிரம்மதேயங்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததை அறியமுடிகிறதுஎன்பதை மிகச்சரியாக எடுத்துக்காட்டுகிறார் .இவர்கள் ஆட்சியில் பிராமணர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதும் ; தமிழகத்துக்கு வெளியே இருந்து பிராமணர்கள் இறக்குமதி செய்யப்பட்டதும் உரிய முறையில் பதிவு செய்துள்ளார்.
மேலும் இவர்கள் ஆட்சியில் வடமொழியே அரச மொழியாக ஆதிக்கம் செய்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது , வேதபாடசாலைகளான கடிகைகள் உருவாக்கப்பட்டதையும் அவை முழுக்க முழுக்க அரச ஆதரவுடன் பிராமணர் கல்வி பெறும் இடமாக இருந்ததையும் ; அக்கல்வி வழி யாகங்கள் , சடங்குகள் மூலம் கோ யிலை மையம் கொண்டு சமூகத்தை கட்டமைக்க முயன்றதை விவரித்துள்ளார் .சைவ வைணவ மரபு எப்படி செயல்பட்டது அது வடமொழிக்குப் பதில் தமிழை எப்படி பயன்படுத்திக்கொண்டது என்பதையும் நுட்பமாக எழுதியுள்ளார் .

சோழர் ஆட்சிக் காலத்தில்கோயில் - நிலம் - உற்பத்தி - வரிஎன்ற வாழ்க்கை முறை கட்டமைக்கப்பட்டதும் ; இடங்கை சாதியர் , வலங்கை சாதியர் என சாதியம் கெட்டிப்படுத்தப்பட்டதும் வேதக்கல்விக்கு சோழர் முழு ஆதரவு நல்கியதையும் அதே சமயம் கோயில்களில் தமிழில் பதிகம் பாடியதையும் அரச மானியம் வழங்கப்பட்டதையும் நூலாசிரியர் துலக்கமாகவே தந்துள்ளார் .

மநுதர்மத்தை முன்னிறுத்தி வருணாசிரமத்தைக் கட்டிக்காப்பதுதான் இடைக்கால மன்னர்களின் தலையாயப் பணியாக இருந்தது . இடைக்காலத்திற்குரிய தமிழகத்தில் சோழர் , பாண்டியர் , போசளர், விசயநகரத்தார் ஆகியோர் இதைக் காத்து நின்றனர் . அவர்களுடைய மெய்க்கீர்த்திகளும் இதற்கு சான்று சொல்கின்றனஎன்பதனை அடுத்து எடுத்துக்காட்டுகிறார்.
தஞ்சை மராட்டிய மன்னர்கள் , சேதுபதி மன்னர்கள் எனத் தொடர்ந்து வந்த எல்லோரும் வைதீகப் பற்றாளர்களாகவே இருந்துவந்தனர்.திண்ணைப்பள்ளிக்கூடங்கள் தமிழர் கல்வி மரபின் சாட்சியாக எழுந்தபோதும் அதிலும் சமய ஆதிக்கம் மிகுந்திருந்தது .பிரிட்டீசார் ஆட்சியில் கல்விமுறையில் மாற்றம் ஏற்பட்டதும் , புதிய ஆய்வுகள் தமிழர் மரபை தூக்கிப் பிடிக்க துணை நின்றதும் இந்நூலில் சுட்டப்பட்டுள்ளது . தொல்காப்பியர் காலந்தொட்டு சமீபத்திய இந்துத்துவ முயற்சிகள் ஈறாக வரலாறு நெடுகிலும் வேதக்கல்வியின் இடத்தை ; அரசு ஆதரவுடன் பிராமணியம் தமிழர் பண்பாட்டில் ஆதிக்கம் செய்ய முயன்றதை இந்நூல் பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் இதுவரை ஆண்ட மன்னராயினும் நவீன ஜனநாயக அரசாயினும் மேல்சாதி ஆதிக்கத்தையும் வைதீகத்தையும் ஒரு சேர ஆதரித்து வந்ததன் வர்க்க வர்ண ரகசியத்தை விளங்கிக் கொள்ள இந்நூல் உதவும் .

 “வேதங்களைப் பரப்புவதற்காகவே தமிழகத்தை ஆண்ட அரசர்கள் எவ்வாறெல்லாம் உதவி செய்தார்கள் என்பதற்கான சான்றுகளை அள்ளித் தருவதேதமிழகத்தில் வேதக் கல்வி வரலாறுஎன்ற நூலின் சிறப்பம்சமாகும் என முன்னுரையில் பெ.நா.சிவம் சுட்டிக்காட்டியிருப்பது மிகை அல்ல .
வெறுமே இலக்கிய ஆதாரங்களோடு நின்றுவிடாமல் , தொல்லியியல் சான்றுகள் .செப்பேடுகள் , கல்வெட்டுகள் , பானையோடுகள் எனக் கிடைக்கும் அனைத்துவகை ஆதாரத்தையும் திரட்டி எழுதியுள்ளது பாராட்டுக்குரியது .

இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலம் , மானியம் என எல்லாவற்றையும் இலவசமாகப் பெற்றுக்கொண்டு ; உழைக்கும் மக்களை இழிவுபடுத்திக் கொண்டு வர்ணாஸ்ரமத்தை மநு அதர்மத்தை அரச உதவியோடும், சடங்கு சம்பிரதாயம் என உளவியல் ரீதியாகவும் நிலை நிறுத்திக் கொண்டு பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தியதை இந்நூல் நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்கிறது . இவ்வளவையும் தங்களுக்கென ஒதுக்கவைத்து -மானியம், இலவசமெனஇரண்டாயிரம் ஆண்டுகள் அனுபவித்த இவர்கள்தாம்;ஒரு ஐம்பது ஆண்டுகளாக கொஞ்சம் சமூகநீதி அமலாவதைப் பொறுக்க இயலாமல் ,

ஏழைகளுக்கு சில இலவசம் என்பதையும் சகிக்காமல் விரோதம் பொங்க சபிக்கிறார்கள். கூக்குரலிடுகிறார்கள் . கொக்கரிக்கிறார்கள். மதவெறிக்கு , இந்துத்துவாவுக்கு எதிரான போராட்டம் ஒருகட்டத்தில் பிராமணியத்துக்கு எதிரான போராட்டமாகவும் வடிவெடுக்கும் . அதற்கு இந்நூல் பெரிதும் உதவும் .

தமிழகத்தில் வேதக் கல்வி
ஆசிரியர் : சி.இளங்கோ ,
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம் ,
97/55 , என்.எஸ்.கிருஷ்ணன் சாலை ,
கோடம்பாக்கம் , சென்னை – 600 024.
பக் : 264 . விலை : ரூ . 160



 - சு.பொ.அகத்தியலிங்கம்
நன்றி தீக்கதிர் - புத்தக மேசை  7 ஜூன் 2015



0 comments :

Post a Comment