தேவை போதைக்கு எதிரான சமூல விழிப்புணர்வு

Posted by அகத்தீ Labels:


ஜூன் 26 : சர்வதேச போதை எதிர்ப்பு தினம் :


தேவை போதைக்கு எதிரான சமூக விழிப்பு


நானும் குடிச்சிருக்கேன்
குடிப்பாரைப் பார்த்திருக்கேன்
நல்லபுத்தி வருவதில்லே குடியிலேஒரு
நாய் கூட மதிப்பதில்லே தெருவிலே

என அனுபவச் சூட்டோடு கண்ணதாசன் பாடிய பாடல் நினைவிலாடுகிறது.

போதை என்றதும் தமிழ்நாட்டவருக்குடாஸ்மாக்நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாதது. ஆனால் போதை எதிர்ப்பு என்பது இன்னும் விரிவானது இன்னும் ஆழமானது.

·         உலகெங்கும் ஆண்டுதோறும் சுமார் 20 கோடிப்பேர் போதைக்கு அடிமையாகிறார்கள்.

·         ஆண்டுதோறும் 2-1/2 லட்சத்துக்கும் அதிகமானோர் போதைப் பழக்கத்தால் உயிரிழக்கின்றனர்.

·         அதாவது ஒவ்வொரு நாளும் சுமார் 700 பேர் போதைக்குப் பலியாகின்றனர்.

·         சராசரி 30 பேரை தினசரி போதை காவு கொள்கிறது.

·         இதுபோக வாழ்க்கையைத் தொலைப்பவர்கள்- குடும்பத்தவருக்கு பெரும் பாரமாய் துயரமாய் மாறுகிறவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.

இன்றைய நிலையில் போதை ஒரு மாநிலத்துக் கோ - ஒரு நாட்டுக்கோ - ஒரு இனத்துக்கோ மட்டுமே உள்ள பிரச்சனை அல்ல. இது உலக மக்கள் முன்னால் உள்ள சவாலாகும்.

ஜூன் 26- உலக போதை எதிர்ப்பு தினம். சீனத்தில் நடைபெற்ற அபினி யுத்தத்தின் நினைவாக இந்த தேதி தேர்வு செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை 1987ம் ஆண்டு முதல் இதனைக் கடைப்பிடித்து வருகிறது. பெரும்பாலான நாடுகள் இதனை அமல்படுத்தி வருகின்றன.

ஏனெனில் சட்டவிரோதமாக கடத்தப்படும் போதைப்பொருட்களின் மதிப்பு மட்டும் சுமார் 36 லட்சம் கோடி டாலர்கள் என ஐநா அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஹெராயின் என்ற போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் மட்டுமே உலகில் இரண்டு கோடி பேர் இருப்பதாக உலக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.

பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் உலக மக்கள் தொகையில் கால்வாசி பேர் புகையிலை சார்ந்த பழக்கத்தை உடையவர்களாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (றாடி) தெரிவிக்கிறது.

ஹெராயின், கஞ்சா போன்ற போதைப்பொருளுக்கு அடிமையாகி இறப்பவர்களை விட இருபத்து ஐந்து சதவீதத்துக்கு அதிகமானோர் புகைப் பழக்கத்தினால் இறப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவில் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு நபர் போதைப் பழக்கத்தினால் இறந்து கொண்டிருக்கிறார் என்பது அமெரிக்க அரசுக்கே தலைவலியாய் இருக்கிறது .

போதை மருந்துக் கடத்தலைக் கட்டுப்படுத்துவதாகக் கூறித்தான் 1989 ஆம் ஆண்டு இறுதியில் பனாமா என்கிற குட்டி நாட்டில் அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டு அந்நாட்டு அதிபரையே கைது செய்தது.

அதே சமயம் உலகெங்கும் நடக்கும் சட்டவிரோத ஆயுத வியாபாரத்துக்கும் போதைக் கடத்தலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

இப்போது ஆப்கானிஸ்தானே போதைக் கடத்தலின் மையம் எனக் கூறினாலும் உண்மை என்னவெனில் பயங்கரவாதிகளுக்கும் போதை பொருட்கள் கடத்தலுக்கும் உள்ள உறவு ரகசியமானதல்ல.

பெரும்பாலும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சியும் உதவியும் அளித்து கொம்பு சீவிவிடுவது அமெரிக்காவே. எனவே போதைப் பொருட்களின் கள்ளச் சந்தைக்கும் ஆயுதக் கடத்தலுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள உறவு கெட்டியானது.

ஆக, போதைக்கு எதிரான இயக்கம் தவிர்க்க முடியாதபடி பயங்கரவாதத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிரானதாகவே அமையும்.

போதை தனிநபர் வாழ்வையும் சமூகத்தையும் ஒருங்கே சூறையாடுவதாகும் .

அறியாமை , விரக்தி,உளவியல் குறைபாடு, பொழுது போக்கு, தற்காலிக உற்சாகம் போன்ற வழக்கமான காரணங்களுடன் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் இளைய ஆற்றலை - மூளைவளத்தை முடக்கிப்போடும் அரசியல் சதியும் அடங்கும். மேலும் இளைய தலைமுறை சுரண்டல் அமைப்புக்கு எதிராக திரண்டுவிடாமல் தடுக்க டிரக்- செக்ஸ் -வயலன்ஸ் அதாவது போதை -காமவெறி -வன்முறை ஆகியவை ஊடகங்கள் மூலம் விதைக்கப்படுகின்றன.

ஆக, போதைக்கு எதிரான போர் வெறும் மனிதாபிமான போராட்டமல்ல; ஆழமான அரசியல் போரட்டமும் ஆகும்.

வெறும் ஒழுக்கம் சார்ந்த பிரச்சனையாக மட்டுமே பார்ப்பதும் அறவீழ்ச்சியாகச் சித்தரிப்பதும் பிரச்சனையின் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிடுவதில் போய்முடியும்.

போதையின் வரலாற்று வேர்கள் ஏறத்தாழ மனித குலத்தின் தொடக்க காலத்துக்கே இட்டுச் செல்லும்.

ஆக, இது குறித்த ஆழமான - நடைமுறை சாத்தியமான மனம் திறந்த உரையாடல் அவசியம். சமூகத்தின் பொதுப் புத்தியில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இது ஒரு நாளில் சாத்தியமல்ல. தொடர் முயற்சி தேவை. விழிப்புணர்வு பரப்புரை தேவை.

போதைக்கு அடிமையாவதும் ஒரு வித நோயே என்கிற அறிவியல் புரிதல் தேவை. போதைக்கு அடிமையானோரை விசேடமாக கவனிக்க வேண்டும். தொடர்ச்சியான சிகிச்சை. உற்றார் நண்பர்களின் ஆக்கப்பூர்வ அணுகுமுறை - சமூகம் காட்டும் அன்பு - ஆகியவை மூலமே போதை அடிமைகளை வென்றெடுக்க இயலும்.

இந்த போதை எதிர்ப்பு நாளில் நம் விழிப்புணர்வு இயக்கத்தை வலுவாக முன்னெடுப்போம்.


- சு.பொ.அகத்தியலிங்கம்
நன்றி : தீக்கதிர் 26  ஜூன் 20150 comments :

Post a Comment