மாட்டுக்கறி : புனித வேடதாரிகளின் புளுகுகளும் உள்நோக்கமும்

Posted by அகத்தீ Labels:

     






மாட்டுக்கறி ;புனித வேடதாரிகளின் 
புளுகுகளும் உள்நோக்கமும்



சு.பொ.அகத்தியலிங்கம் .

இந்த பூமிப்பந்த்தில் காண்கிற அனைத்து  தாவரங்களையும் நீங்கள் உணவாகக் கொள்ள முடியுமா ? முடியாது . அனைத்து ஜீவராசிகளையும் வெட்டிச் சமைத்து உண்ண முடியுமா ? முடியாது . இவை இவற்றைச் சாப்பிடலாம் இவை இவற்றைச் சாப்பிடக்கூடாதென மனிதகுலம் ஒற்றை நாளில் கண்டறிய வில்லை ? யாரும் வானில் தோன்றி உபதேசிக்க வில்லை . பல்லாயிரம் ஆண்டுகள்  இதையும் அதையும் உண்டு செத்து அனுபவ அறிவில் அந்தந்த பகுதி மக்கள் கண்டடைந்த உணவு பழக்கமே நம்மிடம் உள்ளது . விலங்குப் புரதம் மனித வளர்ச்சியில் முக்கிய பங்களித்துள்ளது . இதில் மாட்டின் பங்கு பெரியது . ஆதியில் புலால் உண்போர் மரக்கறி உண்போர் எனக் கறாரான பிரிவினை எதுவும் மனிதர்களிடையே கிடையாது .ஆக ஒவ்வொரு உணவுக்கும்  அதற்கான தேவை உண்டு .ஒரு நெடிய வரலாறுஉண்டு . ஓரளவு அறிய ,ஜாரெட் டைமண்ட் எழுதிய துப்பாக்கிகள் , கிருமிகள் , எஃகு [பாரதி புத்தகாலய வெளியீடு ] படிக்கவும்  .

இப்போதும் யார்யாருக்கு எதுஎது தேவையோ அதை அதை உண்ண வேண்டும் . காசநோய்க்காரர் மருந்துகளுடன் முட்டையும் மாட்டுக்கறியும் சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் அவருக்கு குணம் கிடைக்கும் . அவருக்கு மீன் மற்றும் நீரில் வாழ்வன விலக்கப்பட்டது . இதனால் யாருமே மீன் சாப்பிடக்கூடாது என வாதிடுவது எவ்வளவு முட்டாள் தனம் யோசித்துப் பாருங்கள் . மீன் மனிதருக்கு மிகுந்த சக்தி அளிக்கும் உணவு . மச்சாவதாரம் என்பது இந்து நம்பிக்கை எனவே மீன் சாப்பிடக்கூடாதென்றால் எப்படி இருக்கும் ? மாட்டுக்கறி திடீரென மக்கள் சாப்பிடத் தொடங்கியதல்ல . வேதகாலத்திலேயே பசுமாமிசம் சாப்பிட்டுள்ளனர் .மகாபாரதத்திலேயே இதற்கு சான்றுகள் உண்டு .  ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய  “ வால்கா  முதல் கங்கைவரை” நூலில் 12 வது அத்தியாயத்தைப் படித்துப் பாருங்கள் :

 “ பிராமண சங்கிருதியின் புத்திரனான சத்திரிய அரசன் ரந்திதேவனுடைய விருந்தினர் சாலை ரொம்பப் புகழ் பெற்றது .அந்த சத்திய யுகத்தின் புகழ் பெற்ற பதினாறு அரசர்களில் ரந்திதேவனும் ஒருவன் .அவனுடைய விருந்து மாளிகையில் நாள்தோறும் இரண்டாயிரம் பசுக்கள் கொல்லப்பட்டன .அவற்றின் ஈரத்தோல்கள் சமயல் கட்டிற்கு பக்கத்திலேயே குவிக்கப்பட்டிருக்கும் .அவற்றிலிருந்து கசியும் நீர் ஒரு நதியாக பெருகி ஓடிற்று . தோலிலிருந்து ஓடுவதால் அதற்குச் சர்மண்வதி [ சர்ம – தோல் , வைதி – வெளிப்பட்டு ஓடுதல் ] என்று பெயர்  ஏற்பட்டது .”

 “ என்ன , இவை உண்மையிலேயே நமது நூல்களிலேயே எழுதப்பட்டிருக்கிறதா ,குழந்தாய்?”

“ ஆம் , தாத்தா ! மகாபாரதத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது”

[இந்த இடத்தில்  மகாபாரதம் வனபர்வம் 208:8-10 மற்றும் சாந்தி பர்வதம் 29-23 ஆகியவற்றிலிருந்து12 வரிகள் சமஸ்கிருத ஸ்லோகம்
ஆதாரமாகத் தரப்பட்டுள்ளது ].

ராகுல சாங்கிருத்தியாயன் தொடர்கிறார் ;

 “ மகாபாரதித்தலா ? ஐந்தாவது வேதமான மகாபாரதத்திலா , பசு மாமிசம் சாப்பிடுவதைப் பற்றி எழுதியிருக்கிறாதா ?”

“ரந்திதேவனுடைய மாளிகையில் விருந்தினர்களுக்காக இந்த பசு மாமிசங்களை சமைப்பதற்கு இரண்டாயிரம் சமையற்காரர்கள் இருந்தார்கள் .ஆயினும் பிராமாண விருந்தினர்களின் கூட்டம் அளவுக்கு மீறி இருந்த காரணத்தால் , மாமிசம் குறையாக இருக்கிறபடியால் தயவு செய்து சூப்பை அதிகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விருந்தினர்களைச் சமையல்காரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டது .”

“ பிராமணர்கள் பசு மாமிசம் சாப்பிட்டார்களா ? என்ன சொல்லுகிறாய் குழந்தாய் ?”

 “ ஐந்தாவது வேதமான மகாபாரதம் பொய் சொல்லுமா தாத்தா ?”

[இப்படி வெறுமே சொல்லாமல் ,துரோண பருவம் 67: 1-2 மற்றும் 17-18 &சாந்தி பருவம் 27-28 ஸ்லோகங்களை எடுத்துக்காட்டியுள்ளார் .]

சரியாக இருப்பினும் பலர் இதன் மேல் தொடர்ந்து ஐயம் எழுப்பிய வண்ணம் உள்ளனர் . அவர்களுக்கு திவிஜேந்திர நாராயண ஜா தக்க பதில் அளித்துள்ளார் .இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் வரலாற்றை ஆராய்ந்து வரும் வரலாற்றறிஞரான இவர் மிகப்பெரிய ஆய்வு செய்துள்ளார் . இந்திய இலக்கியங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் அடிப்படையில்புனிதப் பசுவின் புராணம்” (‘The myth of the holy cow’) என்னும் தம்முடைய நூலில் இந்திய உணவு முறைகளில் மாட்டிறைச்சி இருப்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார்.வாய்ப்புள்ளோர் தேடிப் படிக்கவும் .

பிரண்ட்லைன் 2012 பிப்ப்ரவரி இதழில்  திவிஜேந்திர நாராயண ஜாவின் நெடிய நேர்காணல் வெளியாகி உள்ளது . இப்பிரச்சனையை மேலும் தெளிவாகப் புரிந்திட ஏதுவாக அந்த நேர்காணலில் இருந்து சிலபகுதிகள் இங்கு பெட்டிச் செய்தியாய் தரப்பட்டுள்ளது .
==========================================================================================
பெட்டி BOX

இந்தியத் துணைக்கண்டத்தில் மாட்டிறைச்சி தின்பதை இசுலாமியர்கள் தாம் அறிமுகப்படுத்தினார்கள் என்னும் பரவலான நம்பிக்கையைப்புனிதப் பசுவின் புராணம்என்னும் உங்களுடைய புத்தகம் மறுக்கிறது. அம்மறுப்பிற்கு என்னென்ன தரவுகளைச் சான்றுகளாக வைத்திருக்கிறீர்கள்?

இசுலாமியர்கள் மாட்டிறைச்சியைத் தின்பவர்கள்; எனவே அவர்கள் தாம் பசுக்களைக் கொன்று அவற்றின் இறைச்சியைத் தின்பதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள்என்று இங்குள்ள இந்துத்துவா அமைப்புகள் தொடர்ச்சியாக மக்களை மூளைச்சலவை செய்திருக்கின்றன. இக்கருத்தியலை இந்திய மதங்கள் சார்ந்த நூல்களில் இருந்து சரியான தரவுகளைக் காட்டுவதன் மூலம் மிக எளிதாக உடைத்து விடலாம். அந்நூல்கள் எல்லாம் இந்தியாவில் பழங்காலம் தொட்டே மாட்டிறைச்சி தின்னப்படுவதைக் கூறுகின்றன. இசுலாம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இங்கு மாட்டிறைச்சி தின்னும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதை பிராமணிய, புத்த, சமண நூல்களில் இருந்து சான்றுகள் காட்டி நான் நிறுவியிருக்கிறேன்.
பழங்காலத்திலேயே இந்தியாவில் மாட்டிறைச்சி தின்றார்கள் என்பதற்கும் பசுக்களைப் பலியிட்டார்கள் என்பதற்கும் சில எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியுமா?
விலங்குகளைப் பலியிடுதல் என்பது வேத காலத்தில் சாதாரணமான ஒன்றாக இருந்திருக்கிறது. பொதுப் பலியிடுதலுக்கு முன் செய்யப்படும் முன்னேற்பாட்டுச் சடங்காகியஅக்கினித் தேயம்என்னும் சடங்கில் பசுதான் கொல்லப்பட்டது.
பலியிடுதலில் முதன்மையான ஒன்றாகியஅசுவமேத யாகத்தில் அறுநூறு விலங்குகளும் பறவைகளும் கொல்லப்படும்; அப்படிக் கொல்லப்பட்ட பின் பலியிடுதலின் நிறைவைக் குறிப்பிடும் வகையில் இருபத்தோரு பசுக்கள் கொல்லப்படும்.
இராஜசூய யாகம்’, ‘வாஜபேய யாகம்ஆகிய பலியிடுதல் நிகழ்வுகளைப் போல முதன்மையான ஒன்றாகக் கருதப்படும்கொசவ யாகத்தில் பசு பலியிடப்பட்டது. பசு மட்டுமன்று! கன்றுகள் போன்று எல்லா விலங்குகளும் பல யாகங்களில் பலியிடப்பட்டிருக்கின்றன.
வேதக் கருத்துகளிலும் தருமசாத்திரங்களிலும் நுகர்வுக்காகப் பசுக்கள் கொல்லப்பட்டதும் மாட்டிறைச்சி தின்னப்பட்டதும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. ‘பசு விருப்பமான உணவுஎன வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யக்ஞ வல்கீய முனிவர், பசு இறைச்சியைத் தின்பதை வலியுறுத்துவது வேதங்களில் உள்ளது. விருந்தினர்களை வரவேற்கும் போது பசுக்களைக் கொன்று உணவாகப் படைப்பது பெருமைக்குரிய ஒன்று என வேதங்களும் அவற்றிற்குப் பிந்தைய கருத்துகளும் சொல்கின்றன. இறுதிச் சடங்குகளின் போது பிராமணர்கள் பசுக்களைக் கொன்று தின்றதற்கான பல்வேறு எழுத்துச் சான்றுகள் இருக்கின்றன. நான் சொல்வதெல்லாம் கிடைத்திருக்கும் சான்றுகளுள் சொற்பந் தான்! இவற்றைப் போல ஏராளமான எழுத்துச் சான்றுகளைக் காட்ட முடியும்.
பழங்காலச் சான்றுகளை நிறைய காட்டுகிறீர்கள். பசுவை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது பற்றி இடைக்கால இந்திய இலக்கியங்களிலோ மூலங்களிலோ என்னென்ன இருக்கின்றன?

இடைக்கால மூலங்களிலும் ஏராளமான தரவுகள் இருக்கின்றன. ஆசாரம் மிகுந்த பிராமணர்கள் பசியைப் போக்குவதற்காக காளை இறைச்சியையும் நாய் இறைச்சியையும் தின்றதை மனுஸ்மிருதி கூறுகிறது. படித்த பார்ப்பனரைப் பெரிய காளையைப் படைத்தோ ஆட்டைப் படையலாக்கியோ வரவேற்க வேண்டும் என்று யக்ஞவல்கீய ஸ்மிருதி (கி.மு. 100-300) சொல்கிறது. மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் முக்கால்வாசிப் பேர் அசைவ உணவு தின்பவர்கள் தாம்! இரந்திதேவ அரசரின் அடுக்களையில் மட்டும் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் பசுக்கள் அடித்துக் கொல்லப்பட்டு உணவாக்கப்பட்டன. மற்ற தானியங்களுடன் இந்த இறைச்சியும் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
கொழுத்த கன்றை அடித்து உணவாக்கி இராமனும்க்குப் பரத்வாஜ முனிவர் படையலாக்கினார் என்று சொல்லப்படுகிறது. மதம் சார்ந்த எழுத்துகள் மட்டுமல்ல! மதச்சார்பற்ற இலக்கியங்களிலும் இப்படிச் சான்றுகள் காட்ட முடியும். இந்திய மருத்துவ முறைகளில் மாட்டிறைச்சி மருந்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. மாட்டிறைச்சியைத் தின்பது பற்றிக் காளிதாசர், பவபுத்தி, இராஜசேகரர், சிறீஹர்சர் ஆகியோருடைய எழுத்துகளில் இருக்கும் குறிப்புகள் நிறைய சொல்கின்றன.
பசுக்கள் புனிதமானவை என்னும் தொன்மக்கதை எப்படி இங்குள்ள இந்துகளின் மனங்களில் புகுத்தப்பட்டது? கொல்லப்பட்டு தின்னப்பட்டு வந்த பசுக்கள் எப்படிப் புனிதமானவை என்று ஆக்கப்பட்டன? ‘இந்துத்துவாவின் புனிதக் குறியீடாகப் பசு மாறியது எவ்வாறு?

வேதகாலப் பசுக்கள் புனிதமானவை என்று அறிஞர்கள் சிலர் சொல்லி வந்திருக்கிறார்கள். ‘அக்ஞாஎன்னும் சொல்லுக்குக்கொல்லத்தகாதவைஎன்னும் பொருளை அதர்வண வேதம் கூறுகிறது. வேத காலப் பசு புனிதமானது என்பது எப்போது என்றால் அப்பசு பார்ப்பனருக்குப் பலிக்குரிய தொகையாகக் (‘தட்சணையாகக்) கொடுக்கப்படும் போது மட்டும் தான்! புத்தமும் சமணமும் விலங்கு வதையை எதிர்க்கின்றன. அவை கூடப் பசுவைப்புனிதமான விலங்குஎனச் சொல்லவில்லை.
பசு புனிதமானது என்னும் கருத்தியல் பின்னர் வளர்த்தெடுக்கப்பட்ட ஒன்றுதான்! இந்தியச் சமூகம் நிலப்பிரபுத்துவ முறைக்கு மெல்ல மாறி வரும் சூழலில் ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தான், சட்டத்தை உருவாக்கியவர்கள் மாட்டிறைச்சி தின்பதை வரவேற்காமல் நிறுத்தத் தொடங்கினார்கள். கலியுகக் காலமாக இதிகாசங்களிலும் தொன்மங்களிலும் கூறப்படும் இக்காலத்தை ஒட்டித்தான் சமூக நடைமுறைகளும் சடங்குகளும் ஏராளமான மாற்றங்களைக் கண்டன. முன் நடந்துகொண்டிருந்த நடைமுறைகள் பலவற்றைகலிவர்ஞாஎன்று கொண்டு வரப்பட்ட நடைமுறை மாற்றியது. அப்படித்தான் பசுவைக் கொல்வதும் தவறெனப் பார்ப்பனஎழுத்துகள் பதியத் தொடங்கின.
பசுக்களைக் கொல்வதும் அவற்றின் இறைச்சியைத் தின்பதும் தீண்டப்படாத சாதிகளிடம் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனால் தரும சாத்திர எழுத்துகள் இப்படித் தின்பதைச் சிறிய குற்றமாகக் கூடக் கூறவில்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் துறவி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி தின்றார். மாட்டிறைச்சி தின்ன மாட்டோம் என்று கூறும் ஆசாரம் மிகுந்த இந்துக்கள் மருத்துவத்திற்காக மாட்டிறைச்சித் தேநீர் குடிப்பதைக் காந்தியடிகள் பலமுறை கேலி செய்திருக்கிறார்.
இன்றும் கேரளத்தில் எழுபத்திரண்டு சாதிகள் (இவற்றுள் எல்லாச் சாதிகளும் தீண்டப்படாத சாதிகள் அல்ல) ஆட்டிறைச்சியின் விலை அதிகம் என்பதால் மாட்டிறைச்சியைத் தான் தின்கிறார்கள். அச்சாதிகளை எல்லாம் இந்துத்துவா சக்திகள் கடிந்து கொள்ளவில்லை.
வன்மையில்லா முறையை உபநிடதக் கொள்கைகள் வலியுறுத்தியமை, புத்தம், சமணம் ஆகியவற்றின் எழுச்சி, வைணவத்தின் மையக்கருத்து ஆகியன தாம் விலங்குகளைக் கொல்லாமையை உறுதிப்படுத்தின. வேளாண்மைச் சமூகத்தில் பசுக்களின் பொருளியல் மதிப்பு அந்நிலையை முதன்மைப்படுத்தின. பசுக்களைத் தானமாகப் பெற்ற பார்ப்பனர்கள் அதனால் தான் அவற்றைக் கொல்லவில்லை.
பசுவதை என்பது இந்தியாவில் எப்போது அரசியல் கருவி ஆனது? இதற்குப் பின்னால் ஏதாவது வரலாற்றுப் பின்னணி இருக்கிறதா? பசுக்களின் மேல்உருவாக்கப்பட்ட புனிதத்தன்மையை அரசியல் கருவியாகப் பயன்படுத்தியதற்குச் சான்றுகள் தர முடியுமா?

பல்வேறு காலங்களில் ஆண்ட வெவ்வேறு ஆட்சியாளர்களால் தாம் பசு அரசியல் கருவியாக்கப்பட்டது. சமணர்களையும் பார்ப்பனர்களையும் மதிக்கும் பொருட்டு பசுக்களைக் கொல்வதற்கு முகலாயப் பேரரசர்களான பாபர், அக்பர், ஜஹாங்கீர், ஒளரங்கசீபு ஆகியோர் தடை விதித்தனர்.  ‘நாம் இந்துக்கள்; இம்மண்ணின் மைந்தர்களாகிய நாம் பசுக்களைக் கொல்வதோ அதன் வழி பார்ப்பனர்களை ஒடுக்குவதோ கூடாதுஎன்று பசுக்களையும் பார்ப்பனர்களையும் காப்பாற்ற வந்த அவதாரமாகக் கருதப்படும் மாமன்னர் சிவாஜி பறைசாற்றியிருக்கிறார்.
சிக் குகாஅல்லதுநாம்தாரிஎன்னும் பெயரில் 1870களில் பஞ்சாப்பில் தொடங்கப்பட்டஇந்து பசுப் பாதுகாப்புப் படைதான் முதலில் பசுக்களை அரசியல் கருவியாக்கியது; அவர்களுடைய இக்கருத்தியல் பின்னர் தயானந்த சரஸ்வதி அவர்களால் 1882ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டமுதல் கோ ரக்கினி சபையால் வலுப்படுத்தப்பட்டது. இவ்வமைப்புத் தான் குறிப்பிட்ட பிரிவு மக்களின் சின்னமாகப் பசுவை அடையாளப்படுத்தியது. அதன் பின் மாட்டுக்கறி தின்னும் இசுலாமியர்களைக் கேள்விக்குள்ளாக்கி 1880களிலும் 1890களிலும் கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.
இவ்வாறு பசுவதை என்பது கடினமானதாக ஆக்கப்பட்டாலும் 1888ஆம் ஆண்டில் வடமேற்கு மாகாண உயர் நீதிமன்றம், ‘பசு புனிதமான பொருள் அன்றுஎன்று கொடுத்த தீர்ப்பு அவர்களுடைய வேகத்தை மட்டுப்படுத்தியது. ஆனால் அதன்பின் இந்துஇசுலாமியர் கலவரங்கள் பலவற்றில் பசுவதை என்பது மையப்பொருளானது. 1893ஆம் ஆண்டு ஆசம்கர் மாவட்டத்தில் கலவரம் நடந்தது. அக்கலவரத்தால் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.  1912-13இல் அயோத்தியாவில் கலவரம் மூண்டது. 1917இல் ஷாகாபாத்தில் பெரிய கலவரம் மூண்டது.
விடுதலை இந்தியா துன்பியல் நிகழ்வுகள் பலவற்றைக் கண்டது. பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று 1966ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள மதவாத அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியைப் பாராளுமன்றம் முன்பு நடத்தின. அப்போது மூண்ட கலவரத்தில் எட்டுப் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். காந்தியடிகளின் ஆன்மீக வாரிசாகக் கருதப்படும் ஆச்சாரிய வினோபா பாவே பசுவதையைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 1979ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். இப்படியாகப் பசு அரசியல் கருவியானது. பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று சொன்ன ஆதிக்க சாதி அமைப்புகள் எவையும்பசுவைக் கொல்லக்கூடாது என்று வேதங்களிலோ பார்ப்பனஎழுத்துகளிலோ எந்தக் குறிப்பும் இல்லைஎன்பதையும்காலாகாலமாகப் பசு தின்னப்பட்டு வந்திருக்கிறதுஎன்பதையோ காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.
மாட்டிறைச்சி தின்பது வட இந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியாவில் அதிகமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

தென்னிந்தியாவின் சில இடங்களில் மாட்டிறைச்சி தின்பது என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. மலை வாழ் மக்கள், தலித்துகள், இசுலாமியர்கள் ஆகியோர் மாட்டிறைச்சி தின்கிறார்கள். வட கிழக்குப் பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் மாட்டிறைச்சி தின்கிறார்கள். ஆனால் இவை எல்லாம் எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. எடுத்துக்காட்டாகத் தெற்குப் பீகாரில் உள்ள மலைவாழ் மக்கள் மாட்டிறைச்சி தின்பதில்லை.

================================================================================= 

கட்டுரைத் தொடர்ச்சி...

ஆக மாட்டுக்கறி உண்ணும் பழக்கம் இந்தமண்ணுக்கு அந்நியப்பட்டதல்ல . சுமார் 40 விழுக்காட்டு மக்கள் உண்ணும் இப்பழக்கத்தை மறுதலிப்பது மனித உரிமை மீறலாகும் . ஏதோ இஸ்லாமியருக்கு எதிரான தாக்குதல் என்று மட்டும் பார்க்கக் கூடாது ; மாறாக மாட்டுக்கறி உண்கிற இந்துக்களையும் அவமதிக்கிற செயலாகும் . இந்துத்துவா என்பது சிறுபான்மையோருக்கு எதிரானது மட்டுமல்ல பிராமணிய மேலாண்மையை நிறுவ தலித்துகள் , பிற்படுத்தப்பட்ட மக்களின் உணவு மற்றும் இடஒதுக்கீட்டை சமூகநீதியை ஏற்க மறுப்பவர்களின் வெறிக்கூட்டமுமாகும் . இவர்களை இந்துத்துவவாதிகள் சொல்வதைவிட பிராமணியவாதிகள் என்பதே சாலப்பொருத்தம் !

நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி பீகாரில் மாட்டுக்கறி ஏற்றுமதிக்கு மானியமா என கொந்தளித்தார் ஆனால் குஜராத்திலும் மகாராஷ்டிராவிலும்தான் மாட்டுக்கறி வியாபாரம் அதிகம் நடக்கிறது என்கிற விவரம் வெளிப்பட்ட உடன் வாயை இறுக்க மூடிக்கொண்டார் . இப்போதும் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சாதாரண மக்கள் மாட்டுக்கறி சாப்பிட்டால் பெரும் தண்டனை எனக் கொக்கரிக்கும் பாஜக அரசுகள்  ; பெரு முதலாளிகளின் மாட்டுக்கறி ஏற்றுமதித் தொழிற்சாலைக்கு தடை விதிக்க வில்லை என்பது மட்டுமல்ல உதவியும் செய்கிறது . இந்த சட்டம் கூட தெரு ஓரங்களில் கறிக்கடை நடத்துபவர் பிழைப்பில் மண்ணைப் போட்டுவிட்டு ; பெருமுதலாளிகளுக்கு இதனால் குறைந்த விலையில் மாடுகள் கிடைக்க வழி செய்துள்ளது .

இந்தியா தோல் ஏற்றுமதியில் கணிசமாக அந்நிய செலாவணி ஈட்டுகிறது அதனை வேண்டாமென்று பாஜக அரசு சொல்லுமா ? தோல் பொருட்களை பர்சை பெல்ட்டை அணியாமல் பாஜகவினர் இருப்பார்களா ? மாட்டுக்கறி சாப்பிடுகிறவர் வியர்வையில் தானே அரிசியும் கோதுமையும் விளைக்கிறது அவற்றை உண்ணாமல் இருப்பார்களா ? மாட்டு தொழுவத்தை இனி பிராமணர்களே கழுவிக்கொள்ளத் தயாயரா ? மாட்டுக்கறி சாப்பிடுகிறவன் கண்டுபிடித்த  ரயில் , கணினி , அலைபேசி , கார் , அறுவை சிகிட்சை எதுவுமே எங்களுக்குத் தேவை இல்லை என பாஜக அறிவிக்கத் தயாரா ? வெளிநாடுகளில் பணிபுரியும் பிராமண இளைஞர்கள்  ஏன் தகவல் தொழில் நுட்பப் பூங்காக்களில் பணியாற்றும் பிராமண இளைஞர்கள் மாட்டுக்கறி சாப்பிடவில்லை என யார் உறுதி கூற இயலும் ?

சீனப் பிரதமர் இங்கு வந்தபோது மோடி புலாலை மறுத்து தாவர உணவையே விருந்தளித்தார் என பக்கம் பக்கமாக எழுதிக் குவித்த ஊடகங்கள் அமெரிக்க ஒபாமா வந்த போது என்ன விருந்தளிக்கப்பட்டது என்று ஏன் பகீரங்கமாகச் சொல்லவில்லை . அந்த விருந்த்தில் மாட்டுக்கறி இல்லை என்று கூற இயலுமா ? பன்னாட்டு முதலாளிகள் அதன் அதிகாரிகள் நிபுணர்கள் இங்கு வரும் போது தயிர் சாதமா வழங்கப்படுகிறது ?


இங்கே தமிழர் உணவில் பெரும்பகுதி புலாலே இருந்ததை சங்க இலகியங்கள் காட்டும் .இங்கே மாட்டுப்பொங்கலன்று மாட்டைப் போற்றுவதுண்டு ஆயினும் பார்ப்பணரிம் கோ பூஜை இங்கு பாரம்பரியமல்ல . அதனை பார்ப்பணச்சடங்காகவே பார்க்கும் தமிழக கிராமங்கள் .மாட்டுக்கு முன்னால் பொங்கலன்று படையல் போட்டுக் கொண்டாடுவது தமிழர் மரபு . மாட்டு குண்டியை வணங்கும் பூஜை என கோ பூஜையை கிராமத்தவர் கேலி செய்வதுண்டு .

மாட்டுக்கறியை பாஜக வெறிக்கூட்டம் தடைசெய்வதின் பின்னால் அப்பட்டமான பிராமணிய மேலாதிக்கமும் தலித் மற்றும் சிறுபான்மையோர் எதிர்ப்பும் கைகோர்த்து வஞ்சக வேடமிட்டு வருவதை ஒவ்வொருவரும் உணரவேண்டிய தருணம் இது .


எல்லோரும் மாட்டுக்கறி சாப்பிட்டாக வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது – கூடாது . யார் வாயிலும் மாட்டுக்கறியைத் திணிக்கவும் வேண்டாம் யாரும் சாப்பிடக்கூடாதென தட்டிப்பறிக்கவும் வேண்டாம் . மாட்டுக்கறி சாப்பிடுவது தவறல்ல . கேவலமானதும் அல்ல . மாட்டுக்கறியை மறுப்பதில் எந்தப் புனிதமும் இல்லை . எந்த உணவு உடலுக்கும் பணிச்சூழலுக்கும் வாழ்க்கைச் சூழலுக்கும் உகந்ததோ – தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு  ஒவ்வாமை இல்லாததோ  – மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தனியொருவர் விலக்கச்சொல்லாத எதுவோ - அதை உண்ணலாம் . அதுவே சரி ! அவரவர் உணவு அவரவர் உரிமை .அதை மதிக்கத் தவறினால் மக்கள் மீறுவார்கள் .மீறவேண்டும் . பிராமணிய வஞ்சகத்தை இனங்கண்டு வீழ்த்த வேண்டும்.







2 comments :

  1. parthiban samar

    அருமையாகச் சொன்னீர் தோழர்.. ஆனாலும் ,, இந்துத்துவா கூட்டத்தின் கொட்டம் நின்றபாடில்லையே.. பெரும்பாலான மக்கள் அடுத்த நாள் வயிற்றுப் பாட்டை எண்ணி , ''நமக்கேன் வம்பு,'' என்றே வாழ்வதால் ,, இந்த கேடுகெட்டவர்கள் தாம் சொல்வதெல்லாம் உண்மை என்று நினைத்துவிட்டனர் போலும்...!!

  1. Anonymous

    அருமையான அர்த்தம் பொதிந்த கட்டுரை நன்றிகள் தோழர்

Post a Comment