உரத்துபேச வேண்டிய தமிழர் தத்துவங்கள்

Posted by அகத்தீ Labels:





உரத்து பேசவேண்டிய தமிழர் தத்துவங்கள்

சு.பொ.அகத்தியலிங்கம் .

ப்போது அரசியலில் இந்துத்துவம் தன் பிராமணிய மேலாண்மையுடன் கூடிய ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்க முயலுகிறது . அதற்கு அவர்களுக்கு சவாலாக இருப்பது இடதுசாரி சித்தாந்தமும் சமூகசீர்திருத்தக் கருத்துகளுமே . திமுக ,அதிமுக வின் அரசியல் மற்றும் இதர தனிநபர் பலவீனங்களை முன்வைத்து ஒட்டுமொத்த திராவிட மற்றும் பகுத்தறிவு கருத்துகளை கொச்சைப்படுத்தி தங்கள் மதவாதத்தை நியாயப்படுத்திட முயல்கின்றனர் . கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மீதான வெறுப்பில் , பகுத்தறிவையே எள்ளி நகை யாடுவதை சிலர் ரசிக்கவும் செய்கின்றனர் ;இதன் ஆபத்தை உணராமலே . உண்மையில் தமிழரின் தத்துவ மரபை கூர்ந்து கவனித்தால் வலுவான வைதீக எதிர்ப்பையும் , ஆழமான பொருள் முதல்வாத அடிப்படையையும் காணலாம் .அதன் வேரில்தான் சுயமரியாதை இயக்கம் கிளைவிட முடிந்தது .
இப்போது அந்த வேர்களை மிகத் துல்லியமாக அடை யாளம் காண்பதும் ; அதற்கு உரமூட்டுவதும் ஆகப்பெரிய முற்போக்குக் கடமையாகும் . அதற்கு உதவும் விதத்தில் அண்மையில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள நூல்தான் தேவ பேரின்பன் எழுதியுள்ளதமிழர் வளர்த்த தத்துவங்கள்” “ எங்கள் தத்துவமே ஆதியில் பிறந்தது ; நாங்களே மூத்த குடிஎன்பன போன்ற வறட்டுப் பெருமை பேசாமல் உலகம் முழுவதுமான தத்துவங்களின் பொதுபோக்கோடும் ; இந்திய தத்துவங்களின் போக்கோடும் இணைத்து தமிழர் தத்துவ வளர்ச்சியை நூலாசிரியர் அலசியுள்ளது குறிப்பிடத்தக்கது. 20 அத்தியாயங்களில் முதல் இரண்டு அத்தியாயங்களும் நூலின் பார்வை எத்தகையது என்பதைக் கோடிட்டுக்காட்டுகிறது .
தொன்மங்கள் , கொடுமணல் அகழ் ஆய்வு இவற்றின் மூலம் தமிழர் தத்துவத்தின் தொடக்கம் கிறித்துவுக்கு முன் 500 ஆண்டுகள் அதாவது 2500 ஆண்டுகள் என மூன்றாவது அத்தியாயம் தெளிவாக்குகிறது. இந்த வருடக்கணக்கில் மாறுபடுவோர் உண்டு எனினும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே வேர்கொண்ட தத்துவம் இது என்பதில் ஐயமே இல்லை . “தமிழர் தத்துவம்என்ற நாலாவது அத்தியாயத்தில்நிலம் , நீர், தீ ,வளி ,விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்என்கிற தொல்காப்பிய வரிகளைச் சுட்டி எப்படி அறிவுப்பூர்வமாகவே தமிழர் உலகைப் பார்த்தனர் என நூலாசிரியர் வாதிடுவதோடு ; தொல்காப்பியம் சுட்டும் தெய்வங்கள் இனக்குழு சார்ந்த தெய்வங்களே எனவும் அவை உபநிடதங்கள் காட்டும் வேதமரபிலானவை அல்ல என்றும் வாதிடுகிறார் . “ தொல்காப்பியம் வைதீகத்தின் வளர்ச்சியடைந்த வடிவமான பிராமணியம் தமிழகத்திற்கு வருகை தருவதற்கு முன் எழுந்த நூலாகும்.
பிராமணர்என்ற சொல் தமிழில் முதன் முதலாகஇறையனார் அகப்பொருள்என்ற நூலிலேயே காணப்படுகிறது. அது கி.பி. எட்டாம் நூற்றாண்டு நூலாகும்என்கிறார் ஐந்தாவது அத்தியாயத்தில் ஆசிரியர். நால் வர்ணமும் தொல்காப்பியத்தில் இடம்பெற்ற பகுப்புகளும் ஒன்றல்ல என வாதிடுகிறார் . சில தொல்காப்பிய சூத்திரங்கள் பிற்சேர்க்கை என்கிறார் . விவாதத்துக்குரிய களம் இது . “சங்ககால தத்துவங்கள்என்கிற ஆறாவது அத்தியாயத்தில். “சங்கப் பாடல்களில் பெரிதும் காணப்படும் தத்துவங்களாக உலகாயதம் , ஆசிவகம் , சமணம், பௌத்தம் முதலியவற்றைக் குறிப்பிடலாம் . வேத வைதீகம் சங்ககாலப்பகுதியில் தத்துவநிலையில் அறியப்படவில்லை; சடங்கு நிலையிலேயே அறியப்பட்டதுஎன எடுத்துக் காட்டுகிறார் . “வள்ளுவரின் தத்துவப் பார்வைஎவ்வளவு உயர்ந்தது என்பதை ஏழாவது அத்தியாயத்திலும் மணிமேகலை, நீலகேசி கூறும் தத்துவங்களை அடுத்த இரு அத்தியாயங்களிலும் விளக்குகிறார் . இன்று உள் வாங்கவேண்டிய செய்திகள் இவற்றில் நிரம்ப உள்ளன . “நீலகேசியின் பொருள்வாதம் முரணற்றதல்ல.” என்கிற நூலா சிரியர் அன்றையச் சூழலில் அது போர்க்குணம் மிக்கதாக இருந்தது என்கிறார். நீலகேசி தமிழின் முதற் தத்துவ நூலாக திகழ்கிறது என்று அருணன்தமிழரின் தத்துவ மரபுஎனும் நூலில் எடுத்துக்காட்டுவதை இங்கு எண்ணிப்பார்ப்பது சாலப் பொருத்தம் .
சித்தர் பாடல்கள், திருமந்திரம், இவற்றை முன் வைத்து 11 வது அத்தியாயம் முதல் 15 அத்தியாயம் வரை தத்துவப் போக்கை அலசுகிறார் . பொருள்முதல் வாதப் பார்வையே மேலோங்கி நின்றதை எடுத்துக்காட்டுகிறார் அடுத்த மூன்று அத்தியாயங்களில் பொருள்முதல்வாதமும் கருத்துமுதல் வாதமும் தமிழர் மரபோடு வளர்ந்ததை விவரிக்கிறார் . அறநெறி தத்துவங்களின் சார்பையும் போக்கையும் அடுத்த அத்தியாயத்தில் விவரித்து விட்டு ; வைதீகம் மேலோங்கிய காலத்தையும் போக்கையும் அடுத்து எடுத்தோதுகிறார் . 18 ஆம் நூற்றாண்டு வரை உள்ள தத்துவப்போக்கே இதில் பேசப்பட்டுள்ளது . பொதுவாக பொருள்முதல் வாதக்கூறே நம் தத்துவ மரபாக இருப்பினும் ; அரச ஆதரவோடு வைதீக பிராமணியம் ஆதிக்கம் பெற்றுவிட்டதை இந்நூலும் உணர்த்துகிறது . ஆயினும் அடங்கிப் போகாமல் வைதீக எதிர்ப்பு நெருப்பையும் பகுத்தறிவுக் கனலையும் தொடர்ந்து கொண்டு செல்லும் பாரம்பரியமே தமிழர் தத்துவமரபின் சாரம் .அதனை இந்நூலும் உணர்த்தி நிற்கிறது . “ தத்துவத்தை கருத்துமுதல்வாதம்.
(அதாவது ஆத்திகம் ) பொருள் முதல்வாதம் (அதாவது நாத்திகம்)என்று பிரித்து வைத்துக் கொள்வதைவிட , வர்ணாஸ்ரம ஆதரவு தத்துவம் , வர்ணாஸ்ரம எதிர்ப்புத் தத்துவம் என்று பிரித்துவைத்துக் கொள்வது இன்றைய சமுதாயத்தை முன்னெடுத்துச் செல்ல அறிவுலகில் பெரிதும் உதவும் . இதைத் திறம்பட உபயோகித்தால் அது பொருள் முதல் வாதத்தைப் பலப்படுத்தும். தத்துவ உலகை இயங்கியல் ரீதியில் அணுகுவதாகவும் அமைந்து போகும்என்கிறார் அருணன் . “ பிராமண வேத எதிர்ப்பை ஒரு கூறாகக் கொண்டுதமிழர் வளர்த்த தத்துவங்களைத் தேவபேரின்பனும் நமக்கு அடையாளம் காட்டுகிறார் .அருணன் எழுதியதமிழரின் தத்துவ மரபு” (இரண்டு பாகங்கள், மொத்தம் 468 பக்கம்) நூலை இந்நூலுடன் இணைத்துப் படிப்பது அவசியம். அருணன் நவீன காலம் வரை வந்திருக்கிறார்.
அருணனும், தேவபேரின்பனும் பெரிதும் உடன்பட்டே போகிறார்கள் . மாறுபடுகிற இடங்களும் உண்டெனினும்; பிராமணிய இந்துத்துவத்தை எதிர்த்த போரில் இரண்டு நூல்களும் நம் கை ஆயுதமே. மார்க்சிய தத்துவ வகுப்பெனில் அது ஐரோப்பிய தத்துவங்கள் சார்ந்து சொல்லும் போக்கு மாறிவருகிறது; இந்திய தத்துவங்களை சுட்டியும் பேசும் போக்கு ஓங்கி வருகிறது. அத்தோடு தமிழர் தத்துவ மரபையும் உரக்கச் சொல்லிக் கொடுக்க வேண்டியது இன்றைய காலத்தின் தேவை அதற்கு இந்நூல்கள் பெரிதும் உதவும் .

தமிழர் வளர்த்த தத்துவங்கள் .    ஆசிரியர் :தேவ . பேரின்பன் ,  வெளியீடு : பாரதிபுத்தகாலயம் , 7. இளங்கோ த்ரு , தேனாம் பேட்டை , சென்னை – 600 018 .  பக் :216 , விலை : 140 .


நன்றி : தீக்கதிர் புத்தகமேசை , 28 -12-2014 .

0 comments :

Post a Comment