“புத்தகங்களைப் பரிசளியுங்கள்”-இது சரியான முழக்கமா?

Posted by அகத்தீ Labels:


நான் புத்தகங்களோடுதான் வாழ்கிறேன்.புத்தகங்களைப் புரட்டாமல் புத்தகங்களைப் பற்றிப் பேசாமல் ஒரு நாள்கூட நகர்வதில்லை.புத்தகங்கள் என் உடலில் இன்னொரு உறுப்பாகிப்போனது.இப்படி ஒவ்வொருவரும் சொல்லும் நாள் விரைக!எனது புத்தகதினச் செய்தி இதுவே

புத்தகங்களைப் பரிசளியுங்கள் என்பதை நான் தொடர்ந்து சொல்லிவருகிறேன்.எழுதி வருகிறேன்.செயல்படுத்தியும் வருகிறேன்.இது உன்னதப் பண்பாட்டுக் குறியீடு என்று இன்றும் நம்புகிறேன்.ஆனாலும் அனுபவக்கல்லில் உரசும்போது உண்மை சற்று இடறுகிறது என்பதைச் சொல்லுவதில் எனக்குத் தயக்கமில்லை.

வழக்கம் போல் நேற்றும் பணிக்கு மின்சாரரயிலில் பயணித்தபோது ரயில் சிநேகிதர்கள் அரட்டையினூடே புத்தகதினம் குறித்து நான் பேச விவாதம் சூடானது.அடுத்த மாதம் ஒய்வுபெறப்போகிற நண்பர் சொன்னார், “என் பணி ஓய்வு நிகழ்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்,ஆனால் எந்த பரிசும் தரக்கூடாது.”என்றார். அண்ணனுக்கு என்னாச்சு என்று மற்றவர்கள் கிண்டலடிக்க அவர் சொன்ன விளக்கம் என்னை உலுக்கிவிட்டது.

நானும் என் தோழர்களும் எந்த விழாவாயினும் புத்தகங்களை பரிசு கொடுப்பதைச் சுட்டிக்காட்டி    அதனால் என்ன பயன் என்றார்.நானும் என் தோழர்களும் பரிசாகக் கொடுத்த எந்தப் புத்தகத்தையும் தான் புரட்டிக்கூடப் பார்த்ததில்லை என்றும் அவற்றை பழையபேப்பருக்குப் போட்டதைத் தவிர வேறெதுவும் நடக்கவில்லை என்றவர்.மீண்டும் அப்படி நடக்க வேண்டாம் என்பதற்காகவே பரிசே தரவேண்டாம் என்று கூறியதாகத் தெரிவித்தார்.கூடவே சகநண்பர்களைப் பார்த்து நீங்களெல்லாம் மொய்யோடுதான் வரவேண்டும்,இல்லையென்றால் வரவேண்டாம்..தோழருக்கு மட்டும்தான் விதிவிலகு என்றார்.பயண அரட்டை தொடர்ந்தது.

என் நினைவில் அவர் கூறிய சொற்கள் புகுந்துகொண்டு வெகுநேரம் பாடாய்ப்படுத்தியது. “பாத்திரம் அறிந்து பிச்சையிடு”என்று அவ்வை கூறியது இதுக்குத்தானோ என்கிற எண்ணம் மேலோங்கியது.அவர் கந்தசஷ்டி கவசமும், சக்தி கவசமும் மட்டுமே படிக்கிறவர்.செய்தித்தாளில் வார ஏடுகளில் கூட சோதிடம்,ஆன்மீகம் பகுதிகளை மட்டுமே வாசிக்கிறவர்-அவருக்கு முற்போக்கு புத்தகங்களைப் பரிசளித்தது எம் தவறுதானே?

புத்தகங்களை பரிசளிப்பது என்பதை எந்திரத்தனமாக அமல்படுத்தும் காட்சிகள் நினைவுக்கு வந்தன.நம்மிடம் உள்ள புத்தகங்களை மீண்டும் யாராவது பரிசளித்தால் நமக்கு ஏற்படும் சலிப்பை எண்ணாமல் இருக்க முடியவில்லை.பொதுவாக நம் வீடுகளில் ஒன்றுக்கு நான்காய் கிடக்கும் திருக்குறளும், பகவத்கீதையும் எப்படியோ பரிசாக வந்தவைகளாகத்தான் இருக்கும். ஆனாலும் அவசரத்துக்கு திருக்குறள் புத்தகம் கைக்கு அகப்படாமல் ஒருவருக்கொருவர் கோபித்துக்கொண்ட சம்பவங்களும் உண்டு.

சமீபத்தில் ஒரு மத்தியதர தொழிற்சங்க நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள்.நிகழ்ச்சிக்கு சில நாட்கள் முன்பு அதன் நிர்வாகிகள் என்னை அழைத்து உங்களுக்கு ஐநூறு ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களைப் பரிசளிக்க யோசித்துள்ளோம்.உங்களுக்கு என்ன புத்தகம் வேண்டும் என்று சொல்லுங்கள் என்றார்.புத்தகங்கள் எனில் எனக்குக் கசக்குமா?நான் கேட்டுக்கொண்ட புத்தகங்கள் எனக்குக் கிடைத்தது.விலை சற்று அதிகம் ஆயினும் தோழர்கள் பங்கிட்டுக் கொண்டார்கள்.எனக்கு மகிழ்ச்சி.

என் பேரன் [வயது நான்குதான்] “ தாத்தா ஸ்டோரி புக்ஸ் வாங்கித்தாங்க” என்று கேட்கிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது.வாங்கிக் கொடுத்தால் அவன் குஷியாவது நெஞ்சுக்கு இதமாக இருக்கிறது.ஆயினும் நாமாகத் தேர்வு செய்து வாங்கித் தருபவைகளைவிட அவனாக தேர்வு செய்து வாங்கிய ஸ்பைடர் மேனும்,பென் டென்னும் தான் அவன் கையிலும் பையிலும் நெஞ்சிலும் ஒட்டிக்கொள்கிறது என்பது உண்மையல்லவா?

புத்தகங்களைப் பரிசளிப்பது எளிமையானது அல்ல. யாருக்குக் கொடுக்கிறோம்- எதற்குக் கொடுக்கிறோம்-எப்போது கொடுக்கிறோம்-எங்கு கொடுக்கிறோம்-அவரின் விருப்பம் என்ன-அவருக்கு இந்நூல் பயன்படுமா-அவர் இந்நூலை முன்பே வாங்கியிருப்பாரா-இப்படி பல கோணங்களில் யோசித்துச் செய்தால் மட்டுமே ஓரளவு நோக்கம் நிறைவேறும்.கூப்பன்கள்,அதற்கான பிரத்யோக காசோலைகள் வழங்கி விரும்பிய புத்தகங்களை வாங்கச் செய்யலாம் எனிலும் அதற்கான வாய்ப்பும் சூழலும் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்.

அப்படியானால் புத்தகங்களைப் பரிசளிக்கும் பழக்கத்தை கைவிட்டுவிடலாமா?கூடாது.பெரிய அளவு பயன்பாட்டுக்கு உதவாது எனிலும் சால்வை அணியும் வழக்கம் நம்மோடு ஒட்டிக்கொண்டுள்ளது.அதனை கைத்தறி துண்டாக அணிவிக்கும் போது பயன் உண்டல்லவா?அது போல இடம் சூழலுக்கு ஏற்ப புத்தகப் பரிசளிப்பை பக்குவமாகச் செய்யப் பழக வேண்டும்.ஆம்.பாத்திரம் அறிந்து பிச்சையிடல் போல செய்யவேண்டும்.இந்தப் பயிற்சியை தொடர் அனுபவத்தின் மூலமே பெறமுடியும்.அதுவும் நபருக்கு நபர் இடத்துக்கு இடம் மாறக்கூடியது.எளிய சூத்திரமல்ல.

புத்தக வாசிப்பை ஊக்குவிக்க பல வழிகள் உள்ளன.அவை எளிமையானவை.பெரும் பணச்செலவு பிடிக்காதவை.யாரையும் சிரமப்படுத்தாதவை.அவற்றில் சிலவற்றை மட்டும் தங்களுக்கு ரகசியமாகச் சொல்கிறேன்..புத்தகப் பரிசளிப்புக்கு மாற்றாக அல்ல துணையாக.

முதல் வழி, நீங்கள் எங்கே பேசினாலும்,அரட்டை அடித்தாலும் நீங்கள் சமீபத்தில் படித்த புத்தகம் எதாவது ஒன்றிலிருந்து அந்தச் சூழலுக்குப் பொருத்தமான ஏதாவது ஒரு செய்தியைச் சொல்லுங்கள்.அந்தச் செய்தி எந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பதையும் கூறுங்கள்.போகிற போக்கில் பிரச்சாரவாடையின்றி நீங்கள் சொல்கிற செய்தி நிச்சயம் பத்தில் ஒருவரையாவது அப்புத்தகம் பற்றி அறியத் தூண்டும்.அதில் சிலர் அப்புத்தகத்தை தேடி வாசிக்கக்கூடும்.சிலர் எங்காவது அப்புத்தகத்தைப் பார்க்க நேர்ந்தால் புரட்டக்கூடும்.அது வெற்றிதானே.

இரண்டாவது வழி,அன்றைய காலகட்டத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிற விஷயம் குறித்த புத்தகங்களை எங்கே சென்றாலும் உங்கள் கைகளில் வைத்திருங்கள்.குறிப்பாக பயணத்தின்போதும்- திருமணம் போன்ற சுற்றமும் நட்பும் சந்திக்கும் நிகழ்வுகளின்போதும் வெளிப்படையாகத் தெரியுமாறு கையில் வைத்திருங்கள்.நிச்சயம் ஒன்றிரண்டு பேராவது உங்கள் கைகளிலிருந்து அந்த புத்தகத்தை வாங்கிப் புரட்டுவார்கள் அது அவர்களைத் தொற்றிக்கொள்ளுமே.

மூன்றாவது வழி,மட்டமான வார ஏட்டினையோ,மலிவான சிலநாவல்களையோ,நாலாந்தரமான புத்தகங்களையோ படிக்கிற யாரையும் கேலி செய்யாதீர்கள்.படிக்காமல் இருப்பவர்களைவிட இவர்கள் மேலானவர்கள்.நான் ஆரம்பகாலத்தில் படித்த புத்தகங்கள் இப்படிப்பட்டவைதான்.வாசிப்புப் பழக்கம் தொற்றிக்கொண்டால் மனது நிச்சயம் புதியன தேடும்.நானும் அப்படித்தான் புதியன நோக்கிப் பயணித்தேன்.உங்களுக்கும் இதே அனுபவம் இருக்கும்.அவரின் சுவை அறிந்து அடுத்த கட்டம் நோக்கி மெல்ல மெல்ல கைப்பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும்.அதற்கேற்ப புத்த்கங்களை அறிமுகம் செய்வது ஒரு அரிய கலை.அதற்கு உங்களுக்குப் பரந்த வாசிப்பு அனுபவம் வேண்டும்.என் நூலக ஐயா என்னை படிப்படியாக மேலே கொண்டுவந்தார்.மூளையோடு பேசுவதற்கு முன்னால் இதயத்தோடு பேசவேண்டும்.அவர் என்னிடம் அப்படித்தான் பேசினார்.குறைந்தபட்ச சமூகாக்கறை உள்ளவர்களாவது இந்தப் பண்பை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

நான்காவது வழி,மனம் திறந்து பாராட்டப் பழகவேண்டும்.நீங்கள் படித்த புத்தகத்தை உரக்கப் பாராட்டுங்கள். சிலநேரம் கடுமையாகத் தாக்குவதன் மூலமும் ஒரு புத்தகத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தமுடியும்.ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றி பேசினால் மட்டுமே தம்மை பெரும் அறிவாளியாக நினைப்பார்கள் என்கிற தாழ்வு மனப்பாண்மையை ஆழக்குழி தோண்டிப் புதைத்துவிட்டு தமிழ் புத்தகங்கள் பற்றிப் பேசுங்கள்.புத்தகங்களைப் பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசுவதைத் தவிர வேறுவழியில்லை.அதே சமயம் சலிப்பூட்டிவிடாமல்-திகட்டச் செய்துவிடாமல்- ஊறுகாயை நாக்கில்தடவி-இனிப்பை நாக்கில் தடவி- உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதுபோல் பேசிப்பழக வேண்டும்.

ஐந்தாவது வழி மேடையிலோ,அல்லது வேறு ஏதேனும் கூட்டங்களிலோ சந்திப்புகளிலோ பேசுகிறவர்கள் தங்கள் பேச்சில் புத்தகங்களை, ஏடுகளை மேற்கோள் காட்டவேண்டும். ஹிந்து,ப்பிரண்டு லைன் போன்ற ஆங்கில ஏடுகளில் வந்த கட்டுரைகளை மேற்கோள்காட்ட பொதுவாக யாரும் தயங்குவதில்லை.அது அறிவின் அடையாளமாகப் பெருமையாகக் கருதுகிறார்கள்.ஆனால் தீக்கதிரிலோ அது போன்ற இன்னொரு ஏட்டிலோ வந்தவைகளை-தமிழ்ப் புத்தகங்களில் படித்தவற்றை அவ்வாறு சுட்டிக் காட்டுவதில்லை.அது ஒருவித தாழ்வு மனப்பாண்மையாகும்.நம் சொந்த எழுத்துகளைத் தூக்கிச் சுமக்க மறுப்பதாகும்.நாம் அப்படி மேற்கோள் காட்டும்போது அந்த ஏட்டுக்கு-அந்த புத்தகத்துக்கு பெரிய அறிமுகம் கிடைக்கும்.பலரை படிக்கத்தூண்டும்.தலைவரே அதை சுட்டிக்காட்டுகிறார் எனில் அதற்கு ஈர்ப்பு அதிகம்.பாரதிதாசன் பாடல்களை திராவிட இயக்க மேடைகளில் எடுத்தாண்டது பெரிதும் அவர்களைப் படிக்கத்தூண்டியது.கந்தர்வனை,நவகவியை,தமிழ்ச் செல்வனை,மேலாண்மையை,டி.செல்வராஜை,ஜீவியை, இன்னும் உள்ள முற்போக்கு எழுத்தாளர்களின் கதைகளை, கவிதைகளை தலைவர்களோ நாமோ எத்தனை மேடைகளில் கையாண்டிருப்போம்?எண்ணிப் பார்த்தால் பெருமூச்சே வரும்.அப்படி மேற்கோள் காட்டுவதன் மூலம் அவர்களின் புத்தகங்களைத் தேடிப்படிக்க மறைமுகமாகத்தூண்டுதல் ஏற்படும்.எழுத்தாளர்களை மேலும் மேலும் அதுபோல் எழுதத்தூண்டும்.

இப்படி எத்தனையோ எளியவழிகளில் வாசிப்புக்கலாச்சாரத்துக்கு உரம் சேர்ப்போம்.புத்தகதினத்தில் அதற்கான முயற்சியைத் தொடங்கலாமே.ஒரு சீன முதுமொழியோடு இப்போது இந்த உரையாடலை முடித்துக் கொள்வோம்.மீண்டும் சந்திப்போம்

 “ஒரு வாரம் முழுவதும் புதிதாக எந்தப் புத்தகத்தையும் படிக்காதவன் வார்த்தைகளில் நறுமணம் கமழ்வதில்லை.”.
சு.பொ.அகத்தியலிங்கம்


                                                                   
 

2 comments :

  1. gowtham

    arumai

  1. vimalavidya

    "DONATE BOOKS " IS A BEST THING..BEST SLOGAN...WE SHALL FOLLOW IT..
    The ARTICLE IS TOO LENGTH...

Post a Comment