கோழிக்கோடு சொன்ன சேதி: 1

Posted by அகத்தீ Labels:


கோழிக்கோடு சொன்ன சேதி: 1
தியாக வரலாற்றை முன்னெடுத்துச் செல்க!
மண்ணில் காலூன்றி வீரியமாய் எழுக!


வரலாற்று ஞானமும் பண்பாட்டுப் புரிதலும் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்டு நம்மை வியப்பின் விளிம்புக்கே இட்டுச் சென்றன. கோழிக்கோட்டில் ஏப்ரல் 4 முதல் 9 வரை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராயத்தில் (காங்கிரஸில்) பங்கேற்ற ஒவ்வொருவரின் அனுபவமும் இதுவே. 3ஆம் தேதி நள்ளிரவில் கோழிக்கோடு ரயில் நிலையத்தை அடைந்த தமிழக மற்றும் இதர மாநில பேராளர்கள் (டெலிகேட்டுகள்), பார்வையாளர்களை கேரளத்து பாரம்பரியத்தைப் பறைசாற்றும் செண்டை மேளம் முழங்க வரவேற்றபோது ஏற்பட்ட நெகிழ்வை என்னென்று சொல்வது? அதிலும் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமமாய் கூடி - சிகப்புச் சீருடையோடு செண்டை முழங்கிய காட்சி பழமையும் புதுமையும் கைகோர்த்து நம்மை வரவேற்ற மாட்சியாகும்.


முதல் நாள் துவக்க நிகழ்ச்சியாகட்டும், நிறைவு நாள் பேரணியாகட்டும், தினசரி காலை, மதியம், இரவு என வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பேராளர்களுக்கு நிகழ்த்திக் காட்டிய கலை நிகழ்வுகளாகட்டும், கண்காட்சியாகட்டும், மாநாட்டுப் பிரச்சார கலை நிகழ்வுகளாகட்டும் அனைத்திலும் மீண்டும் மீண்டும் உரக்க சொன்ன செய்தி ஒன்றுதான். தியாக வரலாற்றை - தத்துவ உறுதியை கேரளத்து மண்ணின் மணம் கமழ பண்பாட்டோடு குழைத்து வழங்கியதுதான் அச்செய்தி.


தியாக வரலாற்றை வெறும் கம்யூனிஸ்ட் இயக்க தியாகமாகச் சுருக்கி விடவில்லை. வாஸ்கோடகாமா கோழிக்கோட்டில் கால் பதித்தபோது எதிர்த்து சமரிட்டு குருதி வெள்ளத்தில் வீழ்ந்த குஞ்ஞாலி மரைக்காயர் தொடங்கி உழைப்பாளி மக்களின் உன்னத உரிமைப் போராட்டம் வரை - அகில இந்திய முக்கிய நிகழ்வுகளோடு கேரளத்து முத்திரையையும் கலந்து - காந்திக்கும் உரிய இடத்தைக் கொடுத்து - சமூக சீர்திருத்த போராட்டத்தை தகுந்த அளவில் முன்னிறுத்தி வரலாற்றை ஒரு சமூகப் படிப்பினையாய் பாடல்களில், கலை நிகழ்வுகளில், கண்காட்சிகளில் தந்துள்ள பாங்கு வியப்பளிக்கிறது. பார்க்கும் போதும், கேட்கும்போதும் உணர்ச்சி கொப்பளிக்கிறது. குருதி சூடேறுகிறது. இசையும் பாடலும் மண்ணின் அடித்தளத்து மக்களின் ஆவேசக் குரலை நகலெடுத்துக் கொடுத்ததுபோல் அமைந்ததுதான் சிறப்பு. இது ஒரு நிகழ்வைப் பற்றியக் கணிப்பல்ல. ஒவ்வொரு நிகழ்விலும் இதே எதிரொலிதான்.


மாநாட்டில் தத்துவத்துக்கும் வரலாற்றுக்கும் கொடுத்த மிகுந்த முக்கியத்துவம் நம்மை சிந்திக்க வைக்கிறது. எந்த இடத்திலும் நிகழ்காலத் தலைவர்களின் ஒரு புகைப்படத்தைக்கூட, பிரகாஷ் காரத் , அச்சுதானந்தன், பினராய் விஜயன் உட்பட எந்தத்  தலைவரின் படத்தையும் காண இயலாது. இது கோழிக்கோட்டில் மட்டும் அல்ல. ஒட்டு மொத்தக் கேரளா முழுவதும் விளம்பரம், பிரச்சாரம் எதிலும் இதே நிலைதான். மார்க்சியத்தின் மூலவர்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் மற்றும் சே குவாரா போன்றவர்களின் படங்களும் சிலைகளும் நீக்கமற நிறைந்திருந்தன. இஎம்எஸ், ஏகேஜி போன்றவர்களுடைய படங்களும் பொன்மொழிகளும் - தியாகிகளின் படங்களும் வரலாறும் பார்ப்பவர்களோடு உரையாடிக்கொண்டே இருந்தன. வெளியிலே இருந்த இதே உணர்வு மாநாட்டு அரங்குக்குள்ளும் எதிரொலிக்காமலா இருக்கும்? மாநாட்டில் வழக்கமாக நிறைவேற்றப்படும் அரசியல் தீர்மானம், அரசியல் ஸ்தாபனத் தீர்மானம் இவற்றோடு தத்துவார்த்தத் தீர்மானத்தை முன்மொழிந்து விவாதித்து நிறைவேற்றியது இம்மாநாட்டின் கூடுதல் மகுடமாகும்.


இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட எண்ணற்றத் தீர்மானங்களில் இரண்டு நூற்றாண்டுகள் குறித்த தீர்மானம் அடிக்கோடிட்டுக் காட்டத்தக்கன. ஒன்று, கத்தார் கட்சியின் நூற்றாண்டு விழா குறித்தது. 1913 ஏப்ரல் 1ஆம் தேதி சான் பிரான்ஸிஸ்கோவில் உருவாக்கப்பட்ட கத்தார் கட்சி இந்திய விடுதலைப் போரில் அக்னிக்குஞ்சை பொரித்தது சாதாரண நிகழ்வல்ல. காமகட்டமாரு கப்பலில் புறப்பட்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு படையாய் கிளம்பிய இவர்களின் உயிர்த்தியாகம் அளப்பரியது. 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 35க்கும் மேற்பட்டவர்கள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரும்பாலோர் சீக்கியர்கள், பஞ்சாபியர்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ? இந்த கத்தார் கட்சியை சார்ந்த பலர் பின்னர் கம்யூனிஸ்ட்டுகளாக மாறினார்கள் என்பது வரலாறு. இதன் நூற்றாண்டைக் கொண்டாடுவது அக்னிக்குஞ்சினை இளைஞர்களின் நெஞ்சக்கூட்டில் அடைகாக்கச் செய்வதாகும்.


இரண்டு, தோழர் பி. சுந்தரய்யா பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டம் குறித்த தீர்மானமாகும். மே 1, 2012 இந்த நூற்றாண்டு விழா துவங்குகிறது. 1930ஆம் ஆண்டு அமீர் ஹைதர்கானால் தாமும் கம்யூனிஸ்ட்டாக மாறி - தென்னகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை விதைக்கவும் அரும்பாடுபட்டார். தோழர் சுந்தரய்யா தெலுங்கானா ஆயுதப்புரட்சியின் தள நாயகன். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி. ஆந்திராவில் கம்யூனிஸ்ட் இயக்கம் வலுப்பெற வியர்வையைச் சிந்தியவர். விவசாயிகளை அணி திரட்டுவதில் முன்னின்றவர். மாணவர்களை கம்யூனிஸ்ட்டுகளாக வார்த்தெடுப்பதில் பெரும்பங்காற்றியவர். அவருடைய பிறந்த நூற்றாண்டு கொண்டாட்டமென்பது வெறும் சடங்கல்ல. தத்துவ வரலாற்று உணர்வை புதிய தலைமுறைக்கு பதியம் போடும் பெரும்பணி. மார்க்சிய இயக்கத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல அடித்தளம் அமைக்கும் ஆக்கபூர்வமான செயல். அதற்கு இந்த மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.


இந்த நூற்றாண்டுகளை கொண்டாடுகிறபோது மாறிய சூழலில் - இந்த 21ஆம் நூற்றாண்டில் சோஷலிசம் சந்திக்கும் சவால்களை; அதனை எதிர்கொண்டு வெற்றிபெற பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய வியூகத்திற்கு அடித்தளமாகும் தத்துவார்த்தத் தீர்மானத்தை இம்மாநாடு ஒரு மாபெரும் போராயுதமாய் வடித்தெடுத்துத் தந்துள்ளது. 1968 பர்துவான் தீர்மானம், 1990 சென்னைத் தீர்மானம் இவைகளின் தொடர்ச்சியாய் இத்தீர்மானத்தை புரிந்துகொள்ள வேண்டுமென தோழர் சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டது கவனத்திற்கொள்ளத்தக்கது.


அத்துடன், இடது சாரிப் பாதையில் தேசத்தை முன்னெடுத்துச் செல்ல செயல் தளத்தை விரிவுபடுத்த இம்மாநாடு விடுத்துள்ள அறைகூவலும் மிக முக்கியமானது.


இந்த லட்சியப் பயணத்தை ஊக்கத்தோடு தொடர இந்த இரு நூற்றாண்டு கொண்டாட்டங்களும் நிச்சயம் உரமாகும். அத்துடன் தமிழகத்தைப் பொறுத்தவரை ஜூன் 29 முதல் துவங்கும் தீக்கதிர் பொன்விழா ஆண்டும் பெரும் வாய்ப்பாகிறது. மற்றவர்களுக்கு இரு பெரும் விழா. நமக்கோ முப்பெரும் விழா. இந்த சமூகத்தை வறுமைப் படுகுழியிலும், அறியாமை இருட்டிலும், ஏற்றத்தாழ்வெனும் பெரும் சதியிலும், சமூக ஒடுக்குமுறையெனும் கொடூரத்திலும் ஆழ்த்தியிருக்கும் சுரண்டல் தத்துவத்தையும் வரலாற்றையும் முறியடித்து பாட்டாளி வர்க்கம் முன்னேற இவ்விழாக்கள் துவக்கமாகட்டும். கேரள மாநாடு தந்த உணர்வோடு மண்ணில் வேரூன்றி,  நமது பண்பாட்டு சாரத்தை உள்வாங்கி, நமது வரலாற்றுத் தடங்களை - தியாகத் தடங்களை அடையாளம் கண்டு உரக்கப் பாடுவோம். உரக்கப் பேசுவோம். நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள், சாதி மத பேதமற்றோர்கள் என எங்கும் நமது பூபாள ராகம் ஓங்கி ஒலிக்கட்டும்.          

0 comments :

Post a Comment