விதை தூவியவரை மறக்கலாமா?

Posted by அகத்தீ Labels:
காமராஜர் முதலமைச்சராக இருந்த போது கொண்டுவந்த மதிய உணவுத்திட்டத்தை மெருகேற்றி சத்துணவு திட்டமாக எம்ஜிஆர் செயல்படுத்தினார் என தேமுதிக சட்டமன்ற உறுப்பி னர் பேச ; பொறுக்காத அதிமுக அமைச்சர்கள், உறுப்பினர்கள் கூப்பாடு போட்டு அது முழுக்க முழுக்க எம்ஜிஆர்ருக்கு சொந்தமானது என உரிமைக் கொண்டாடினார்கள். காங்கிர காரர்கள் காமராஜர்தான் முதல்படி என்றனர்.

இப்படி தமிழக சட்டமன்றத்தில் அடிக்கடி சத்துணவின் மூலகர்த் தா யார் என்பது குறித்த விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஆட்சியிலும் இவ்விவாதம் தொடர்கிறது. ஆனால், யாருமே உண்மையான மூலகர்த்தாவை நினைப்பதும் இல்லை, சொல்வதும் இல்லை. இதுதான் தமிழ் சமூகத்திற்கு நேர்ந்த பெரும் சோதனை.

வறுமை என்பது என்ன வென்பது நமக்கு தெரியும். உணவும், உடையும் இல்லாமல் எழுதும் பலகைகளுக்கும், புத்தகங்களுக்கும் எவ்வளவு பணம் செலவழித்தாலும் அது வீண். பல குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவும் கிடைப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். இவைகளெல்லாம் இருந்த போதிலும், இதை அளிப்பதற்கு ஏற்பாடு செய்தால் சட்டத்தின்படியும், நகரான்மைக் கழகம், பொதுசுகாதாரத்திற்காக செய்ய வேண்டிய கடமைப்பணி கள் என்று உள்ள சட்டத்தின்படி ஏழை குழந்தைகளுக்கு உணவு அளித்து, உடையும் அளிக்க நமக்கு (நகரான்மைக்கழகத்திற்கு) அதிகாரம் உண்டு.

இதைப்படிக்கின்ற போது இதை யார் பேசியிருப்பார் என்று யோசித்து பாருங்கள். எம்ஜிஆர்-ரும் இதுபோன்று பேசியிருக்கிறார். காமராஜரும் இதுபோன்று பேசியிருக்கிறார். ஆனால், இந்த உரை அவர்களுக்கு முன்னால் சிந்தனை சிற்பி சிங்காரவேலு பேசியதாகும்.

1925ம் ஆண்டு டிசம்பர் 12ம் நாள் சென்னை நகரமன்றத்தில் மீண்டும் சத்துணவுத்திட்டத்தை அமலாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அவர் பேசியதாகும். 1921ம் ஆண்டு சிங்காரவேலர் முயற்சியில் சத்துணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், பிரிட்டிஷ் அரசின் சட்ட விதிகளை காட்டி அதை அமல்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, மீண்டும் 1925ம் ஆண்டு இந்த தீர்மானத்தை சிங்காரவேலர் கொண்டு வந்து நிறைவேற்றியதோடு, பூங்கா சந்தை கண்காட்சிகள் நடத்தி அதில் கிடைக்கும் உபரி லாபத்தைக் கொண்டு ஏழை குழந்தைகளுக்கு சத்துணவு வழங்க அவர் ஏற்பாடும் செய்தார். மிக குறைந்த எண்ணிக்கை குழந்தைகளுக்குதான் ஆரம்பத்தில் இச்சத்துணவு வழங்கப்பட்டது எனினும் இதுவே சத்துணவின் முதல் முயற்சி எனலாம். தமிழகத் தின் முதல் கம்யூனிட் என்ற பெருமை படைத்த சிங்காரவேலரின் சாதனை மகுடத்தில் சத்துணவும் சேரும்.

வெறுமே சத்துணவு என்பதை சாம்பார் சாதம், புளிசாதம் எனக் கருதாமல் பால் வழங்க வேண்டும், வாரம் இரண்டு முட்டை வழங்க வேண்டும் என்றெல்லாம் விவரமாக பேசியவர் சிங்காரவேலரே.

அதுமட்டுமல்ல ஆரம்ப பள்ளிக் கூடங்களில் வகுப்பறைகளில் பிரம்பே இருக்கக் கூடாது என்று நகரமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து இன்றையை கல்வியாளர்களின் குரலை அன்றே எதிரொலித்தவரும் அவரே.

பள்ளி பாட புத்தகங்களில் மதபோதனை இருக்கக்கூடாது என தீர்மானம் கொண்டுவந்த வரும் அவர்தான். அவர் நகர் மன்ற உறுப்பினராக இருந்தபோது, செய்த சாதனைகளை முழுவதும் பேசினால் நீளும். கல்விக்காக செய்தவைகளை மட்டுமே இங்கு குறிப்பிட்டு வருகிறோம்.

சிங்காரவேலர் கல்வி பற்றிய நிலைக்குழுத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட போது நகராட்சியினால் நடத்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 78ல் இருந்து 94ஆக உயர்த்தினார். மழலையர் பள்ளிக் கூடத்தை நகராட்சியே நடத்த வழி செய்தார். பள்ளிக்கூடங்களில் காந்தியின் படத்தை நகரமன்ற செலவிலேயே மாட்ட வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். இப்படி வரலாறு படைத்தவர்தான் சிங்காரவேலர்.

அவர் ஏழை குழந்தைகளுக்கு சத்துணவு வழங்க முயற்சித்தார். அதற்காக விதை தூவினார். அதனை காமராஜர் ஒரு செடியை போல் மதிய உணவு திட்டமாக மாற்றி பெருமை சேர்ந்தார். எம்ஜிஆர் அதனை ஒரு ஆலமரமாக வளர்த்தெடுத்தார். எந்த ஆலமரமும் ஒரு விதையில் இருந்துதானே துவங்க முடியும். அந்த விதையை தூவியது சிங்காரவேலர் அன்றோ!

எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்பு சென்னை ராஜாஜி மண்டபத்தில் கல்வி மாநாடு நடந்தது. அந்த மாநாட்டையொட்டி ஒரு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த புகைப்படக் கண்காட் சியில் மதிய உணவு திட்டம் குறித்து விவரங்கள் எழுதிவைக்கப்பட்டிருந்தது. அதை பார்வையிட வந்த எம்ஜிஆரிடம் அங்கே அதை விளக்கிக் கொண்டிருந்த ஆசி ரியை மதிய உணவு திட்டம் செயல்படும் விதம் குறித்து எடுத்துச் சொன்னார். எல்லா ஏழை குழந்தைகளுக்கும் இந்த உணவு கிடைக்கிறதா என அந்த ஆசிரியையிடம் எம்ஜிஆர் கேட்டார். அந்த ஆசிரியை பெரும்பாலான குழந்தைகள் மதிய உணவு இன்றி இருப்பதை வேதனையோடு எடுத் துரைத்தார். அதை கேட்டுவிட்டு மேடைக்கு சென்றார் எம்ஜிஆர்.

அன்று விழாவில் பேசுகின்ற போது தான் வருகின்ற போது ஒரு ஆசிரியை மதிய உணவு திட்டம் குறித்து விளக்கியதை குறிப்பிட்டு ; பெரும்பாலான குழந்தைகள் மதியம் உணவின்றி இருப்பதை அந்த ஆசிரியர் கூறியதை  கேட்டு தான் வருந்துவதாகவும், எனவே, எல்லா ஏழை குழந்தைகளுக்கும் சத்துணவு வழங்கதான் முடிவு செய்வதாகவும் அறிவித்தார். அந்த மாபெரும் அறிவிப்பு. தான் இன்று உலகே வியந்து போற்றும் சத்துணவு திட்டமாகும்.

ஆக, ஒரு பெரிய திட்டத்தை தமிழக மக்கள் அனுபவிக்க விதை தூவிய சிங்காரவேலர், செடியாக வளர்த்தெடுத்த காமராஜர், ஆல மரமாக வளர்த்த எம்ஜிஆர் என மூவருக்கும் பெரும் பங்குண்டு. இதில், யாரையும் குறைத்து மதிப்பிடுவது வரலாற்றையும், தன்னலமற்ற தலைவர்களையும் கொச்சைப்படுத்துவதாகும்.

சத்துணவில் முட்டை போட்டு சிங்காரவேலரின் கனவை மேலும் நனவாக்கினார் கருணாநிதி.

அது மட்டுமல்ல ஆரம்ப கல் விக்கு 50, 60களிலேயே பட்ஜெட்டில் 25 விழுக்காடுக்கு மேல் நிதி ஒதுக்கி சாதனைப் படைத்தவர்கள் தமிழக முதல்வர் காமராஜரும், கேரள முதல்வரான இ.எம்.எ. நம்பூதிரிபாட் அவர்களும்தான்.

சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஒரு வேளை இந்த வரலாறை சரியாக அறியாமல் இருந்திருக்கலாம். இனியேனும் தவறான தகவல்களை சட்டமன்றத்தில் பேசி நேரத்தை வீணாக்கிட வேண்டாம். அத்துடன் வரலாற்றை தப்பும் தவறுமாக சட்டமன்ற நடவடிக்கை குறிப்பேட்டில் பதிய வைத்து வருங்கால தலைமுறையை குழப்பிடவும் வேண்டாம்.

0 comments :

Post a Comment