பெண்களைப் பழித்த ஒளவையின் பெயரால் விருது வழங்கலாமா?

Posted by அகத்தீ Labels:


மிழ் மூதாட்டி ஒளவையின் பெயரால் பெண்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நல்லது. பெண்களைப் பெருமைப் படுத்த எத்தனை விருதுகள் கொடுப்பினும் வரவேற்போம். ஏற்கெனவே நடப்பிலிருந்த மணிமேகலை விருது என்னவாகும்? கல்பனா சாவ்லா விருது தொடருமா? விருதுகளின் அரசியலை இறுதியில் பார்க்கலாம்.ஒளவை யார்?அவரின் பெருமைகள் என்ன? முதலில் அதனை அறிவோம்.

பொதுவாக ஆத்திசூடி எழுதியவர் ஒளவை என்பதை அறிவோம். ஒளவையாக வேடமிட்டு கே.பி.சுந்தராம்பாள் நடித்த திரைப்பட காட்சிகளும்  கணீர்குரலில் அவர் பாடிய பாடல்களும் நம் நினைவில் நிழலாடும்.அறிவுக் களஞ்சியமாக அவர்குறித்து பள்ளிப்பாடப் புத்தகத்தில் நாம் படித்த செய்திகள் மனத்திரையில் ஓடும்.தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் கல்வி, கேள்வியில் ஓங்கி இருந்ததின் சாட்சியாக ஒளவையை தமிழறிஞர்கள் போற்றிப் புகழுவார்கள். அது சரி ஆண்பால் புலவர்கள் அளவுக்கு பெண்பால் புலவர்கள் அன்று இருந்தார்களா என்ற கேள்வியை எழுப்பினால், என்ன பதில் வரும்?ஒளவை என்பது ஒரு புலவரை மட்டும் குறிக்கும் சொல் அல்ல பெண்பால் புலவர்கள் எல்லோரையுமே ஒளவை என்றே குறிப்பிடும் மரபு உண்டு என்பர்.மொத்தம் பதினெட்டு ஒளவையார்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

பொதுவாக நீதி போதனைகளே ஒளவையார்கள் பாடல்களின் உள்ளடக்கம். ஆளும் வர்க்க சிந்தனைகளே அந்தந்த காலகட்டத்தின் நீதிபோதனைகள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.அவற்றுள் சில, காலம் கடந்தும் நிற்கும்.எடுத்துக்காட்டு:ஊக்கமது கைவிடேல்,நன்றி மறவேல்,பருவத்தே பயிர்செய்,தந்தைதாய்ப் பேண்,சூது விரும்பேல்...இப்படி பல.மேலும் ஆட்சியாளர்களை இடித்துரைத்தல்,வாழ்க்கை அனுபவப்பாடங்களைச் சுட்டுதல் என இன்றும் ஏற்கத்தக்க பல அறிவுரைகளைக் கூர்மையாகப் பாடியுள்ளார்.அதே சமயம் புலவரும் காலத்தின் படைப்பே. காலத்தை மீறி அவர் வெகுதூரம் சென்றுவிட முடியாது.ஆணாதிக்க சமூகத்தில் பிறந்த ஒளவையின் பாடல்களில் பெண்களைப் பற்றி உயர்வாக எதிர்பார்க்க முடியுமா?

 “தையல் சொல் கேளேல்” "மை விழியார் மனை அகல்". என்பது ஒளவையின் ஆத்திசூடி. பெண்கள் சொல் கேட்கக்கூடாது,கண்ணில் மை தீட்டிய பெண்களை நம்பாதே என்பது எவ்வளவு பிற்போக்குத்தனமானது என்பதை சொல்லவும் வேண்டுமோ?ஆகவேதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் புதுமைக்கவி பாரதி இதற்கு மாற்றாய் தனது காலத்தின் குரலாய் “தையலை உயர்வுசெய்”என்றான்.ஒளவையின் பெயரால் பெண்கள் விருது அறிவிக்கப்பட்டிருப்பதால் அவரின் பெண்கள் பற்றிய  மேலும் சில பதிவுகளைப் பார்ப்போம்.

    "நிட்டூர மாக நிதிதேடும் மன்னவனும்
    இட்டதனை மெச்சா இரப்போனும் – முட்டவே
    கூசிநிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய
    வேசியும் கெட்டு விடும்." என்கிறார் ஒளவை.கொடுமையாக-நிட்டூரமாக வரியை விலையை உயர்த்திய மன்னன்[மன்னியும் அடக்கம் தானே], கிடைத்த இலவசத்தை-இட்டதனை வியந்து பாராட்டாத பிச்சைக்காரன்[இப்போது குடிமக்கள் நிலையோ],இவர்களை கூச்ச சுவாபமுள்ள வேசியோடு ஒப்பிட்டு கெட்டுவிடும் என்கிறார். சரி போகட்டும். கூச்ச சுவாபம் இல்லாத குடும்பத்துப் பெண்ணை இதனுடன் இணைத்துப் பேசுதல் தகுமோ?நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும்,நிலத்தில் யார்க்கும் அஞ்சா இயல்பும். ஞானச்செருக்கும் புதுமைப் பெண்ணின் இலக்கணம் என்று பாரதி சொன்னது என்கே?ஒளவையின் பார்வை எங்கே?

இன்னொரு பாடலில் "பேசும் மனையாளின் பேய்நன்று" என்கிறார்.உச்சமாக ஒரு பாடலில் கூறுகிறார்,

   "இருந்து முகம்திருத்தி ஈரொடுபேன் வாங்கி
    விருந்து வந்ததென்று விளம்ப – வருந்திமிக
    ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
    சாடினாள் ஓடினான் தான்"

 "பர்த்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
    எக்காலும் கூடி வாழலாம் – சற்றேனும்
    ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்
    கூறாமல் சந்நியாசம் கொள்."

விருந்து வந்ததென்று கணவன் சொன்னதும் ஏன் மனைவிக்கு கோபம் வரவேண்டும்?வீட்டில் அரிசி உண்டா? மளிகைச் சாமான்கள் உள்ளதா? எதையும் அறியாமல் விருந்தை கணவன் அழைத்துவந்தால் அவள் என் செய்வாள்?மனைவி சற்று ஏறுமாறாக இருப்பினும் கணவன் கூறாமல் சந்நியாசம் கொள்வது சரியாக இருக்குமோ? இந்த இடத்தில் ஜோதிர்லதா கிரிஜா பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு வார ஏட்டில் “கூறாமல் சந்நியாசம் கொள்”என்ற தலைப்பில் எழுதிய சிறுகதை நினைவிற்கு வருகிறது.

இரண்டு குடித்தனங்கள் அருகருகே வாழ்ந்தனர்.முதல் வீட்டில் மனைவி சற்று கொடுமைக்காரி,இரண்டாவது வீட்டில் கணவன் மகாமுரடன் கொடுமைக்காரன்.முதல் வீட்டில் ஒரு நாள் சண்டையின் போது கணவன் கோபித்துக்கொண்டு காவிகட்டி புறப்பட்டுவிட்டான்.சில நாட்களுக்குப் பின் இரண்டாவது வீட்டில் சண்டை அடிதாங்க முடியாமல் மனைவி சொன்னாள் “பதிவிரதைக்கு ஏற்ற பர்த்தா உண்டானால் எக்காலமும் கூடி வாழலாம்.இங்கே ஏறுமாறாக இருப்பதால் கூறாமல் சந்நியாசம் கொள்கிறேன்..”அவள் வீட்டைவிடு வெளியேறுவதோடு கதை முடியும்.

மேலே விவரித்தவை ஒளவையின் பெண்கள் பற்றிய பார்வை பழுதானது.அவர் வாழ்ந்தகாலத்து நிலப்பிரபுத்துவ சிந்தனை சார்ந்தது.எனவே அவர் பெயரால் பெண்கள் விருது பொருத்தம்தானா?டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி,மணச்சநல்லூர் மணியம்மா,மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்,தில்லையாடி வள்ளியம்மை போன்றோர்கள் பெயரில் வழங்கலாமே,பெண்விடுதலையை உரக்கப் பாடிய பாரதி,போரடிய பெரியார்,சிங்காரவேலர் இவர்கள் பெயரில் வழங்கினாலும் தகுமே.ஏன் கணவன் வாக்களிக்கும் கட்சிக்குத்தான் மனைவியும் வாக்களிக்க வேண்டும் என்ற மரபு பழக்கத்தை உடைத்த எம்.ஜி.ஆர் பெயரில்கூட வழங்கலாம்..ஒளவை பெயரில் வழங்குவது பொருத்தமற்றதே,

அது போகட்டும் இவ்விருது யாருக்கு வழங்கப்படும்? அரசியல் விளையாடுமே.எல்லாவிருதுகளுக்கும் இதுதானே கதி.நக்கீரன் கோபால் கையில் சிகப்புக் கயிறும் நெற்றியில் குங்குமப் பொட்டுமாக பெரியார் விருதை வாங்கிய போதும்,மேல்வருவத்தூர் சாமியார் போகும்பாதையை துடைப்பத்தால் பெருக்கி பக்திபரவசமாக நின்ற விசாலாட்சி நெடுஞ்செழியன் அதேபோல் பெரியார்விருது வாங்கியபோதும் மனது வலிக்கத்தான் செய்தது.விருதுகள் அரசியலாக்கப்பட்டு விட்டதால் விருதாவாகிவிட்டன அதேகதி ஒளவைக்கும் வரலாமா?

சு.பொ.அகத்தியலிங்கம்.
 





5 comments :

  1. Balaji Kopula

    உங்களுக்கு வேலையே இல்லையா ?

  1. Chandru

    கால வர்த்தமானம் என்று ஒன்று உள்ளது. அவரவர் காலத்திற்கேற்ற தர்மம் நியாயம் உண்டு. கடந்த கால நிகழ்வுகளுக்கு இன்றைய நீதி வழங்க முற்படுவது போற்றத்தக்கதல்ல. குணம்நாடி குற்றமும் நாடி மிகை நாடி மிகக் கொளல் வேண்டும். இளைய தலைமுறைக்கு தவறான சிந்தனையை போதிக்காதீர்கள் ஔவையின் புகழ் அவரின் கவிதைதிறன்.ஒரு வேளை உங்களுக்கு யாப்பிலக்கணம் பற்றி சரியாகத்தெரியாது என நினைக்கிறேன். எழுத்தாளர் சுஜாதா தன் வாழ்நாளில் ஒரு வெண்பா எழுத வேண்டும் என்று நினைத்தாராம். எழுதினரா என்பது கேள்விக்குறி? ஆக்வே பெண்பாய் இருந்து கவிதை பாடினாரே அதுதான் பெருமை. தப்பாகச் சொல்லி புகழை (உங்கள்)கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

  1. அகத்தீ

    ஐயா
    //
    பொதுவாக நீதி போதனைகளே ஒளவையார்கள் பாடல்களின் உள்ளடக்கம். ஆளும் வர்க்க சிந்தனைகளே அந்தந்த காலகட்டத்தின் நீதிபோதனைகள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.அவற்றுள் சில, காலம் கடந்தும் நிற்கும்.எடுத்துக்காட்டு:ஊக்கமது கைவிடேல்,நன்றி மறவேல்,பருவத்தே பயிர்செய்,தந்தைதாய்ப் பேண்,சூது விரும்பேல்...இப்படி பல.மேலும் ஆட்சியாளர்களை இடித்துரைத்தல்,வாழ்க்கை அனுபவப்பாடங்களைச் சுட்டுதல் என இன்றும் ஏற்கத்தக்க பல அறிவுரைகளைக் கூர்மையாகப் பாடியுள்ளார்.அதே சமயம் புலவரும் காலத்தின் படைப்பே. காலத்தை மீறி அவர் வெகுதூரம் சென்றுவிட முடியாது.ஆணாதிக்க சமூகத்தில் பிறந்த ஒளவையின் பாடல்களில் பெண்களைப் பற்றி உயர்வாக எதிர்பார்க்க முடியுமா?// என எழுதிவிட்டுத்தான் வாதம் செய்தேன்.ஒளவையின் பெயரால் தமிழறிஞர் விருது வழங்குவதே பொருத்தம். மகளிர் விருது வழங்க வேறு பொருத்தமானவர்கள் உண்டு என்பதே என் வாதம்.ஒளவையின் பெருமையை நான் குலைக்கவில்லை.குறைத்தும் மதிப்பிடவில்லை.விருது பொருத்தப்பாடு மட்டுமே கேள்வி.நான் சாதாரணமானவன்.எனக்கென்று புகழோ பெருமையோ எதுவும் இல்லை ஐயா.நான் ஒரு கருத்துப் போராளி அவ்வளவே.
    சுபொ

  1. reviewer

    ஔவையார் மிக்க இறை பக்தி நிறைந்த மகா ஞானி. சிறு வயதிலேயே பெண்களுக்குறிய எல்லா ஆசைகளையும் துறந்து கடைசியில் இறைவனுடனே ஒன்றிய கடவுள் அவதாரம். அவர் வாக்குகள் அனைத்தும் தெய்வ வாக்கு ஆகும். அவரை பெண்மைக்கு எதிரானவர் என கருதுவது அறியாமையாகும்




  1. நா.முத்துநிலவன், புதுக்கோட்டை

    ஔவையாரைத் தேடியதில் அகத்தீ அகப்பட்டார்! உடல்நலம் பேணி, தொடர்ந்து எழுதுங்கள் தோழர்! (எனது வலைப்பக்கப் பதிவுகளையும் பார்க்க வேண்டுகிறேன். https://valarumkavithai.blogspot.com/ - நா.முத்துநிலவன்.

Post a Comment