ஒளவையார் விருது குறித்த விவாதம்

Posted by அகத்தீ Labels: "ஒள
வையார் பெயரில் விருது வழங்குவது சரியா?" என்ற தலைப்பில் மார்ச் 11 ஆம் தேதி இலக்கியச் சோலையில் எழுதிய கட்டுரை ஒரு ஆக்கபூர்வமான விவாதத்தை துண்டி உள்ளது.அதற்காக எமது பெரு மகிழ்ச்சியை முதலில் பதிவு செய்கிறோம்.மிகப் பெரும்பாலோர் ஒளவையார் பெயரில் பெண்கள் விருது வழங்கப்படுவது பொருத்தமில்லை என்ற எமது கருத்தோடு உடன்படுகின்றனர்.ஒரு சிலர் மாற்றுக் கருத்துகளை பதிவுசெய்துள்ளனர்.அவற்றை இங்கு பரிசீலிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

 "கால வர்த்தமானம் என்று ஒன்று உள்ளது. அவரவர் காலத்திற்கேற்ற தர்மம் நியாயம் உண்டு. கடந்த கால நிகழ்வுகளுக்கு இன்றைய நீதி வழங்க முற்படுவது போற்றத்தக்கதல்ல. குணம்நாடி குற்றமும் நாடி மிகை நாடி மிகக் கொளல் வேண்டும். இளைய தலைமுறைக்கு தவறான சிந்தனையை போதிக்காதீர்கள் ஔவையின் புகழ் அவரின் கவிதைதிறன்.ஒரு வேளை உங்களுக்கு யாப்பிலக்கணம் பற்றி சரியாகத்தெரியாது என நினைக்கிறேன். எழுத்தாளர் சுஜாதா தன் வாழ்நாளில் ஒரு வெண்பா எழுத வேண்டும் என்று நினைத்தாராம். எழுதினரா என்பது கேள்விக்குறி?"இவ்வாறு சந்துரு என்பவர் சுட்டிக்காட்டுகிறார்

இவரைப்போல சு.பட்டாபிராமன் எழுதிய கடிதத்தில் கல்வியைப் பற்றி ஒளவை பாடியது உட்பட பல நல்ல கூறுகளை சுட்டிக்காட்டிவிட்டு தையல் எனும் சொல் பதின்  பருவத்து தடுமாறும் இளமைப் பருவத்தையே குறிக்கும் எனவும்;மைவிழியார் என்பது வேசியைக் குறிக்கும் சொல் எனவும் விளக்கம் கூறி ஒளவையின் பார்வையில் குற்றம் காணக்கூடாது என்கிறார்.

 “மக்களுக்கு இப்போது தேவைப்படுவது உண்மை மட்டுமேவா இல்லை,பற்றிக் கொள்ள ஒரு நல்ல நம்பிக்கை’என்று சிவகுமாரும்;”தன் கணவனுக்காக மதுரையை எரித்த கண்ணகியைவிட ஒளவை எவ்வளவோ மேல்”என்றுசென்னை வண்ணனும்;”குறுந்தொகையில் ஒரு பாடலில் ஒளவை பெண் தன் பாலியல் உணர்வை வெளிப்படுத்தி முன்னுதாரணம் படைத்துள்ளதை மறக்கலாமா?”என்று பட்டம்மாளும் தங்கள் விமர்சனங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

 "பொதுவாக நீதி போதனைகளே ஒளவையார்கள் பாடல்களின் உள்ளடக்கம். ஆளும் வர்க்க சிந்தனைகளே அந்தந்த காலகட்டத்தின் நீதிபோதனைகள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.அவற்றுள் சில, காலம் கடந்தும் நிற்கும்.எடுத்துக்காட்டு:ஊக்கமது கைவிடேல்,நன்றி மறவேல்,பருவத்தே பயிர்செய்,தந்தைதாய்ப் பேண்,சூது விரும்பேல்...இப்படி பல.மேலும் ஆட்சியாளர்களை இடித்துரைத்தல்,வாழ்க்கை அனுபவப்பாடங்களைச் சுட்டுதல் என இன்றும் ஏற்கத்தக்க பல அறிவுரைகளைக் கூர்மையாகப் பாடியுள்ளார்.அதே சமயம் புலவரும் காலத்தின் படைப்பே. காலத்தை மீறி அவர் வெகுதூரம் சென்றுவிட முடியாது.ஆணாதிக்க சமூகத்தில் பிறந்த ஒளவையின் பாடல்களில் பெண்களைப் பற்றி உயர்வாக எதிர்பார்க்க முடியுமா?" எனஎமது கட்டுரையில் எழுதிவிட்டுத்தான் வாதம் செய்தேன்.ஒளவையின் பெயரால் தமிழறிஞர் விருது வழங்குவதே பொருத்தம். மகளிர் விருது வழங்க வேறு பொருத்தமானவர்கள் உண்டு என்பதே என் வாதம்.ஒளவையின் பெருமையை  குலைக்கவில்லை.குறைத்தும் மதிப்பிடவில்லை.விருது பொருத்தப்பாடு மட்டுமே கேள்விகுள்ளாக்கப்பட்டது.
மேலும் கல்வியைப் பற்றி ஒளவை பாடினார்.அதில் பெண்கல்வி அடக்கமா?இல்லையே.நாலடியாரில் ஒரு பாடலிலும்,ஏலாதியில் ஒரு பாடலிலும் மட்டுமே பெண்கல்வி பற்றிய செய்தி உண்டு.உலகப் பொதுமறை திருக்குறள் கூட இவ்விஷயத்தில் மவுனமே.இது அவர்கள் வாழ்ந்த காலத்தின் குற்றமே.

 “தையலை உயர்வு செய்”என பாரதி பாடியபிறகும் “தையல் சொல் கேளேல்”என்று ஒளவை சொன்னது நியாயம் என்று வாதிடல் சரியா?பாரதியும் தமிழறிந்தவர் தானே.மை விழியார் என்பது வேசியைக் குறிக்கும் சொல் எனினும் அதுகுறித்த பார்வையும் பழுதுடையதே.ஆணாதிக்க கருத்தே.பாலியல் தொழிலாளி என்று பேசுகிற இந்தகாலச் சூழலுக்கும் பொருந்தாததே.

கண்ணகியோ,சீதையோ,ஒளவையோ இன்றைய பெண்களுக்கு ரோல்மாடல்-முன்னோடி ஆகமாட்டார்கள்.இவர்கள் மீது எமக்கு மரியாதை உண்டு.ஆனால் அது கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் மூடநம்பிக்கை அல்ல.கண்ணகியைப் போன்ற வாழ்வு தன் மகளுக்கோ,தங்கைக்கோ வாய்க்க யார்கொல் விரும்புவர்?சமீபத்தில் பொதிகை தொலைகாட்சியில் கவிஞர். வாலி பேசியபோது சிலப்பதிகாரத்தை இன்றைக்கு எழுதநேர்ந்தால், “காவலனைக் கேட்கும் முன் கோவலன் சட்டையைப் பிடித்து கண்ணகி கேட்பதாகத்தான் எழுதியிருப்பேன்.”என்றார்.வைரமுத்துவும் தன் ஆரம்ப கவிதைத் தொகுப்பில் “கருப்புநிலா” என்ற கவிதையில் இதுபோல் கேள்வி எழுப்பியிருப்பார்.அதே சமயம் அரசனை எதிர்த்து நின்ற கண்ணகியின் அறச் சீற்றம் நல்லது.கண்ணகிபெயரால் மனித உரிமைப் போராளி விருது வழங்கலாம்.பெண்ணுரிமை விருது வழங்கினால் ஏற்கமுடியாது.சீதை நெருப்பில் இறங்கியதை எம் பெண்களுக்கு முன்மாதிரி ஆக்கமுடியாது,அவர் பெயரால் ஆன்மிக விருது வழங்கட்டும்.அவ்வளவுதான்.ஒளவையாரின் கல்வியை-புலமையை-திறமையை பாராட்டுவோம்.அவர் பெயரால் இலக்கிய விருது வழங்கலாம்.அட்டியில்லை.சர்வதேச பெண்கள் தின விருது என்பது பொருந்தவில்லை என்பதே எமது வாதம்.

மூத்த இலக்கிய விமர்சகர் தி.க.சி.எழுதிய கடிதத்தில் கூறுகிறார், “சு.பொ.அகத்தியலிங்கம் கட்டுரை சுவையான அறிவுபூர்வமான சர்ச்சையைத் தொடங்கிவைக்கிறது.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி,மணலூர் மணியம்மா,மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்,தில்லையாடி வள்ளியம்மை என சான்றோர்கள் பெயரில் விருதுவழங்கலாமே என்று சு.பொ. கூறுவது ஏற்கத்தக்கது.தில்லையாடி வள்ளியம்மை பெயரில் தமிழக அரசு இவ்விருதை வழங்கினால்,மிகப் பொருத்தமாகவும்,சிறப்பாகவும் இருக்கும்”

தி.க.சி யின் பொருள் பொதிந்த கடிதத்தோடு இவ்விவாதத்தை நிறைவு செய்கிறோம்.

சு.பொ.அகத்தியலிங்கம்.

0 comments :

Post a Comment