அன்பின் அரிச்சுவடியும் அறியாத ஜடங்கள் !

Posted by அகத்தீ Labels:

 




விவாதம் உரையாடல் அபிப்பிராயம்

எந்த சொல்லும் பொருந்தவில்லை

அவர்களின் வெறுப்பு உமிழும் வாய்களுக்கு!

 

குடிகாரன் குடிவெறியில் எப்போதேனும்

உண்மையை உளறிவிடக் கூடும் !

மதவெறியர் மறந்தும் மனிதம் பேசுவதில்லை !

 

மதவெறி சாதிவெறி இனவெறி எங்கும்

மானுடத்தின் முதல் வைரி !

அன்பின் அரிச்சுவடியும் அறியாத ஜடங்கள் !

 

இவர்களோடு வாழ்வது கொடிதினும் கொடிது

இருப்பினும் வேறு என்ன வழி ? – தயங்காமல்

அவர் முகமூடியைக் கிழித் தெறி !

 

சுபொஅ.

03/08/24.


இது என் வாழ்க்கைப் பாடம் .

Posted by அகத்தீ Labels:

 




பெங்களூரில் வாழ்கிற பிற மாநிலத்தவர் கன்னட மொழியில் உரையாட கற்றுக்கொள்ள வேண்டும் “ என்கிறார் மாநில முதல்வர் சீத்தாராமய்யா .

 

பெங்களூரில் வாழும் மலையாளிகள் கன்னடம் கற்றுக்கொள்ள வசதியாக மாலைநேர வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்றொரு செய்தி .

 

இரண்டையும் சரியான கருத்தாகவே நான் கருதுகிறேன் .பிற மாநிலத்தவரை வெளியேறச் சொல்லவில்லை , உரையாட எங்கள் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் பயிற்சி தருகிறோம் என்கிறார்கள் . இது சரியான நடைமுறையே .

 

தமிழ்நாட்டிலும் அரசு இதனை அடியொற்றி முன்கை எடுக்கலாமே !

 

தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சங்கங்கள் புலம் பெயர்ந்த தொழிலளார்களுக்கு தமிழ் இலவசமாகக் கற்றுக்கொடுக்க மாலைநேர காலைநேர வகுப்புகள் நடத்தலாமே ! சிஐடியு முன்கை எடுக்கலாமே !

 

நீங்கள் வட இந்தியாவில் வேலை செய்ய நேரலாம் ஆகவே இந்தி கற்றுகொள்ளுங்கள் எனச் சொல்வதிலாவது கொஞ்சம் லாஜிக் இருப்பதுபோல் தோற்றம் காட்டும் .அதே நேரம்  தேவை வரும் போது அவரவர் எந்த மொழி வேண்டுமாயினும் கற்றுக்கொள்வர் என்பதே வரலாறு .இப்போதே இந்தி படி என்பதில் நியாயமில்லை . சங்கிகளுக்கு இது புரியவில்லை.

 

ஆனால் இங்கு தமிழ்நாட்டில் பிழைக்க வந்துள்ள மக்களிடம் உரையாட தமிழ்நாட்டவர் இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்பது எவ்விதத்திலும் நியாயமல்ல .நாம் அங்கு போனாலும் அவர்கள் இங்கு வந்தாலும் நாம்தான் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அநீதி .அதைத்தான் சங்கிகள் நியாயப்படுத்தி ஊளையிடுகிறார்கள் !அவர்களை தமிழ் கற்றுக்கொள்ளச் சொல்ல மாட்டார்கள் .

 

 

நான் பெங்களூர் போய் பத்து வருடங்கள் கடந்துவிட்டன . இன்னும் ஒற்றை கன்னட வார்த்தை கற்றுக்கொள்ளவில்லை .எனக்கான சூழல் அப்படி .மொழி கற்றுக்கொள்வதில் நாட்டமும் அக்கறையும் எனக்கு மிகமிகக் குறைவு . என்னைப் பார்த்த உடன் எல்லோரும் எப்படியாவது தமிழில் பேச முயன்று விடுகிறார்கள் . நான் வாழ்வதும் கிட்டத்தட்ட ஓசூர் பார்டர் என்பதாலும் எனக்கு பெங்களூர் நகருக்கு போவதைவிட ஓசூர் போவதே எளிது என்பதாலும் இங்கு வாழ்வோர்களுக்கு தமிழ் தெரிகிறது என்பதாலும் நான் கன்னடம் கற்றுக்கொள்ளவில்லை .

 

மொழி துவேஷம் எனக்கு இல்லை. இந்தி மொழித் திணிப்புக்கே நான் எதிரி . என் இணையர் தமிழில் முதுகலை பயின்றவர் . தமிழ் மீடியத்துடன் தெலுங்கு மீடியமும் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்ததால் தெலுங்கும் கொஞ்சம் அறிவாளர் .  கன்னடம் கற்க அவருக்கும் இங்கு என்னைப்போல் வாய்ப்பு அமையவில்லை .ஆயினும் என்னைவிட மேல். நான் நாஞ்சில் நாட்டுக்காரன் என்பதால் மலையாளமும் கொஞ்சம் புரியும். நான் அடிக்கடி டெல்லி போயிருக்கிறேன் .பிற மாநிலங்களுக்கும் போயிருக்கிறேன் .இந்தி தெரிந்து கொள்ளவே இல்லை . முயற்சியும் என் பக்கம் இல்லவே இல்லை .இதுவும் பிழைதான். ஆங்கிலத்தில் பேசினால் ஓரளவு புரியும் . வாசித்தும் புரிந்து கொள்வேன் .பேச்சும் எழுத்தும் சுத்தமாக வரவே வராது .என் சக்தி என் முயற்சி அம்புடுத்தான்.

 

என் மகள் தமிழ் காதலி .கவிதை மீது நாட்டம் அதிகம் . கணவன் வழி சென்னைத் தெலுங்கும் அத்துப்படி . பெங்களூரில் டீச்சராக வேலை செய்து கன்னடமும் தேர்ந்து விட்டாள் .ஆங்கிலமும் நன்கு பேசுவாள் .மொழி கற்றுக்கொள்வதில் பேரார்வம் காட்டுவாள் .

 

என் மருமகள் தமிழ் ,மலையாளம் ,ஆங்கிலம் கொஞ்சம் தெலுங்கு ,இந்தி இப்போது கொஞ்சம் ஸ்பானிஷ் எல்லாம் அறிவாள். மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் உண்டு .

 

என் மகனும் மருமகனும் தேவையின் கட்டாயத்தில் கன்னடம் கொஞ்சம் அறிவர் . இப்போது வெளிநாடு போய்விட்டதால் அதற்கும் வாய்ப்பு குறைவு . பேரன் பேத்திகளிலும் இரண்டு பேர் மொழி கற்பதில் ஆர்வம் காட்டுவார்கள் . இரண்டு பேருக்கு ஆர்வம் குறைவு .

 

எம் தீக்கதிர் அலுவலகத்தில் இந்தி படித்த இரண்டு பேர் உண்டு .ஆனால் இந்தியில் எது சந்தேகம் கேட்டாலும் தெரியாது . காரணம் அன்றாட பழக்கம் இல்லை .இப்போது என் வீட்டருகே சமஸ்கிருதம் பயின்ற ஒருவர் உண்டு . சமஸ்கிருத சுலோகத்துக்கு அர்த்தம் கேட்டால் தெரியாது .

 

மொழியை ஒரு பாடமாக கற்பது என்பதும் வாழ்க்கைப் பயன்பாட்டில் கற்பது என்பதும் வேறு வேறு . எம்மொழியும் பேசப்பேசவே பழகும் .கேட்க கேட்கவே புரியும் .அதற்கு வாய்ப்பு இல்லாத போது வெறும் மொழிப்படிப்பு கைகொடுக்காது .

 

கர்நாடகாவில் ,மேற்குவங்கத்தில் ,கேரளாவில் மும்மொழித் திட்டம் உண்டு .இந்தி பாடம் உண்டு .ஆயின் பெங்களூர் ,கொல்கத்தா போன்ற பெருநகரங்களுக்கு வெளியே பெரும்பாலோருக்கு இந்தியில் உரையாடத் தெரியாது .ஏனெனில் தேவையும் இல்லை ;வாய்ப்பும் இல்லை .

 

எந்த மொழியையும் தேவை வரும் போது கற்பது அவசியம் .தயக்கம் கூடாது .எந்த மொழியையும் யார் மீதும் யாரும் திணிக்கவும் கூடாது .அவரவர் தாய் மொழி அவரவருக்கு இனிமை .

 

இது என் வாழ்க்கைப் பாடம் . உங்களுக்கும் இப்படி அனுபவம் இருக்குமே !

 

சுபொஅ.

01/08/24.


இதுவும் கடந்து போகும்...

Posted by அகத்தீ Labels:

 



உன் நினைவில்

யார் யார் வாழ்கிறார்கள் ?

உன் பெயரன் நினைவில்

யார் யார் வாழ்வார்கள் ?

 

உன் ஏழாவது தலைமுறை

உன்னை நினைவு வைத்திருக்குமா ?

உன் ஊரார் நினைவில்

உனக்கு இடம் உண்டா ?

 

பிறந்தவர் எல்லோரையும்

நினைவில் வைத்திருக்க முடியுமா ?

வரலாறு என்னை நினைவு வைத்திருக்க

வேண்டிய அவசியமில்லை என்றார்கள்

இன்னும் நம் நெஞ்சில் வாழ்ந்துகொண்டிருக்கிற

பிடல் காஸ்ட்ரோ  ,இஎம்எஸ் ,ஜோதிபாசு …

 

இந்த பிரபஞ்சத்தில்

பூமியே மிகச் சிறிய கடுகு …

இந்த பூமியில் நீயார் ?

உன் இடம் யாது ?

கொஞ்சம் யோசித்தால்

பெருமூச்சே மிஞ்சும் ..

 

எந்த நொடியிலும் யார் வாழ்வும்

முடிந்து போகலாம்

வாழ்கிற காலம் வரை

அன்பு செய் ! அன்பு செய் !

மானுட இனத்தை அன்பு செய் !

இயற்கையை நேசி !

இதயமும் மூளையும் திருப்தி கொள்ள

வாழ முனைந்து நில் !

 

உன் நினைவில்

யார் யார் வாழ்கிறார்கள் ?

உன் பெயரன் நினைவில்

யார் யார் வாழ்வார்கள் ?

 

சுபொஅ.

30/7/24.

 

 

 

 


இன்றைய முதியவரின் சிக்கல் :

Posted by அகத்தீ Labels:

 



இன்றைய முதியவரின் சிக்கல் :

 

நேற்றின் முதியவர் யாரேனும் உறவினர் /நண்பர் வீட்டுக்கு செல்ல நேரிட்டாலோ அல்லது அவர்கள் தம் வீட்டுக்கு வந்தாலோ அவர்களிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தன …

 

செளக்கியமா ? சுகர் பிரஸர் இல்லையே !

ஊரில் மழை எல்லாம் எப்படி ? விவசாயம் எப்படி இருக்கு ?

கோவில் கொடை முடிஞ்சிடிச்சா ?

பணி ஓய்வுக்கு பிறகு பொழுது எப்படிப் போகுது ?

பென்சன் ஒழுங்கா வருதா ?

பொண்ணுக்கு /பையனுக்கு கல்யாணம் ஆயிடிச்சா ?

பேரன் பேத்திகள் எத்தனை ?

பையன் என்ன படிக்கிறான் / எங்கு வேலை செய்யுறான் ?

உங்க மச்சான் வீட்டில / தங்கை வீட்ல / தம்பி வீட்ல எல்லோரும் சவுக்கியமா ?

நம்ம பாட்சா / பார்த்திபன் எப்படி இருக்கான் ?

 

இப்படி கேள்விகள் வந்து கொண்டே இருக்கும் .

 

அத்துடன்….

 

நல்லா உடம்ப பார்த்துக்கோ / நல்லா படி /சீக்கிரம் குழந்தை பெற்றுக்க / வேலை தேடிக்கோ / சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ இப்படி ஒவ்வொருவரிடமும் சொல்ல நிறைய உபதேசங்களும் கைவசம் இருந்தன.

 

இன்றைய முதியவருக்கோ …

 

இப்போது காலம் மாறிவிட்டது … சந்திப்புகள் அருகிவிட்டன . எப்போதாவது சந்தித்தால்கூட நலம் என்பதுக்கு மேல் விசாரிக்க எதுவும் இல்லை . சந்தித்ததில் மகிழ்ச்சி எனச் சொல்வதைத் தவிர வேறு வார்த்தைகளில்லை .  டிவி மெகா தொடரில் /அலைபேசி அழைப்பில் மூழ்கிவிடவே நேரம் போதவில்லை …

 

அதுமட்டுமல்ல ஒருவர் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா வேண்டாமா / பிள்ளை பெற்றுக் கொள்ளலாமா கூடாதா  / படிக்கணுமா வேண்டாமா / வேலை கிடைத்ததா இல்லையா  / என்ன மாத்திரை சாப்பிடுகிறார் / என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்….

 

இப்படி எதை எதையோ துருவி துருவி கேட்க நீ யார் ? அவரவர் விருப்பம் / அவரவர் தேர்வு . அதை நீ ஏன் நோண்ட வேண்டும் ? அதனால் உனக்கு என்ன பயன் ? அவர்கள் சொந்த விவகாரத்தை நோண்டி நுங்கெடுக்க உமக்கென்ன அதிகாரம் ? இப்படி ஆயிரம் கேள்விகள் எழுகின்றன .

 

குசலம் விசாரிக்கவும் உரையாடவும் பழைய செக்கு மாட்டு தடத்தை விடவும் முடியாமல் , புதியன எவையென தெளிவும் கிடைக்காமல்  இன்றைய முதியோர் படும் துயர் அதிகம் .

 

இன்ப துன்பங்களில் ஒருவருக்கு ஒருவர் பங்கேற்பது என்பது வெறும் சடங்காக மாறிக்கொண்டிருக்கிறதோ ?

 

வந்தோம் பார்த்தோம் போனோம் என்பதுதான் சந்திப்பு என்றாகிப் போகிறதோ ?

 

அலைபேசியில் மணிக்கணக்காய் உரையாடிக் கொண்டே இருக்கிறார்களே ! அப்படி என்னதான் பேசுவார்கள் ?

 

உரையாடல்களிலும் உறவாடல்களிலும் புதிய தடம் உருவாகிக் கொண்டு இருக்கிறதோ ? முதியோர் அதில் அன்னியப்பட்டு நிற்கிறார்களோ ?

 

[ அண்மையில் முதியோர் சிலரோடு உரையாடிய போது அவர்கள் வெளிப்படுத்திய கவலைகள் என் வழி பதிவாகி இருக்கிறது .அவ்வளவுதான்..]

 

 

சுபொஅ.

25/07/2024


சிக்கலின் முடிச்சை அறியாமல் தீர்வை நெருங்க முடியாது….

Posted by அகத்தீ Labels:

 



 


 

சிக்கலின் முடிச்சை அறியாமல் தீர்வை நெருங்க முடியாது….

 

காலநிலைமாற்றம் ,புவிவெப்பமயமாதல் குறித்த  சூற்றுச்சூழல் அக்கறையோடு அறிவியல் பார்வையோடு எழுதப்பட்ட 28 கட்டுரைகளின் தொகுப்பே “சமகால சுற்றுச்சூழல் சவால்கள்” எனும் இந்நூல். இத்துறையில் ஆரம்பப்பள்ளி மாணவனான நான், வாசித்து அறிந்த சிலவற்றை இங்கு பகிர விரும்புகிறேன்.

 

கதாநாயகன் /வில்லன் , தேவர்கள்/அசுரர்கள் ,பாவம் /புண்ணியம் , தீட்டு/புனிதம்  என எதிரெதிர் நிலைகளை கட்டமைத்து பேசுவதும் எழுதுவதும் புரிந்து கொள்வதும் சுலபம் . ஆயின் சுற்றுச்சூழல் சார்ந்து அப்படி பேசிவிடவும் முடியாது . எழுதிவிடவும் கூடாது .

 

சுற்றுச் சூழல் சவால்கள் மிகவும் சிக்கலானது. இதனைப் புரிந்து கொள்ள தட்டையான பார்வை ஒருபோதும் உதவாது .இந்நூலில் உள்ள 28 கட்டுரைகளையும் வாசிக்கும் போது நூறு கோணங்கள் புலப்படுகின்றன . ஒரு பக்கம் எவ்வளவு கடுமையான சூழலில் சிக்கி இருக்கிறோம் , இனி மனித குலம் அவ்வளவுதான் எனத் தோன்றுகிறது . மறு பக்கம் கடுமையான முடிச்சுதான் ஆயின் அவிழ்க்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.

 

ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்வை நோக்கி நகர்த்தும் மனிதகுலம் ; ஒவ்வொரு தீர்விலும் புதிய பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது . ஆயினும் அங்கே முடங்கி விட முடியாது முயன்று முன்னேறி புதிய தீர்வை நோக்கி நகர வேண்டி இருக்கிறது . மீண்டும் புதிய பிரச்சனைகள் … இப்படித்தான் வளர்ச்சியும் இருக்கும் அறிவியலும் இருக்கும் …

 

 

ஓசோன் படலத்தில் ஓட்டை என்கிற பிரச்சனை ஓங்கி இருந்த 2000 ஆம் ஆண்டு நான் ஒரு பத்திரிகையாளர் குழுவில் சீனா சென்றிருந்தேன் அங்கு உரையாடும் போது சீனர்கள் சொன்னார்கள் “ ஓசோன் படலம் ஓட்டைவிழுவது உண்மைதான் ;ஆயினும் மீள முடியும் . இயற்கை தீர்வையும் தன்னுள் கொண்டுள்ளது.நாம் கொஞ்சம் திருந்தினால் போதும் “ நாங்கள் நம்பவில்லை . சீனா அதீதமாகப் பேசுகிறது என்றே கருதினோம். இந்த தொகுப்பில் த.வி.வெங்கடேஸ்வரன் கட்டுரையை வாசிக்கும் போது தெளிவு கிடைத்தது .

 

புவி வெப்பமயமாவதில் இருந்து மீள மரம் நடும் விழாக்கள் ,சூரிய ஆற்றல் மின்சார பரப்புரை என பொதுவாய் நாம் பேசும் எளிய தீர்வுகள் மட்டுமே முழுமையானதுமல்ல சிக்கலில்லாததுமல்ல என்பது இந்நூலை வாசிக்கும் போது தெளிவாகிறது .

 

“இஸ்திரி செய்யாத கசங்கிய ஆடையை அணிவது குற்றம் அல்ல ;தவறும் அல்ல. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் காலநிலை மாற்றத்தை தடுப்பதில் நாமும் பங்கு வகிப்போம் எனக் கூறுவது ஏமாற்றுவேலை” என த.வி.வெங்கடேஸ்வரன் கூறியிருப்பது மிகை அல்ல .உண்மை .

 

மீண்டும் பழமைக்குச் செல்வோம் , கோவணம் உடுப்போம் போன்ற வாதங்கள் சிக்கலின் இறுக்கத்தை முடிச்சை அறியாமல் மேம்போக்காகப் பேசுகிறவையே . அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் உண்டான பிரச்சனைகளுக்கு தீர்வை , கற்பனையாகவோ பழமையான முறையிலோ கட்டமைத்துவிட முடியாது , மாறாக அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தில் சுற்றுச்சூழல் பார்வையை இணைத்தே தீர்வு காண முடியும் என்பதை இந்நூலில் உள்ள பல கட்டுரைகள் நிறுவுகின்றன .

 

பெருகும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு ,உடை ,வாழ்விடம் ,கல்வி ,வேலைவாய்ப்பு ,குடிநீர் போன்றவற்றை அளிக்கத் திட்டமிடும் போது நாம் இயற்கையை பகைத்துக் கொண்டு இதனை செய்துவிட முடியாது .

 

“ அறிவியல் விரோத சூழல் அடிப்படைவாதிகளையும்,ஆளும் வர்க்கங்களின் வளர்ச்சி மற்றும் சூழல் தொடர்பான மக்கள் விரோதக் கொள்கைகளையும் அம்பலப்படுத்த இத்தகைய விவாதம் உதவும்.” என வெங்கடேஷ் ஆத்ரேயா கூறியிருப்பது இந்நூல் முழுமைக்கும் பொருந்தும்.

 

இன்னும் சொல்லப் போனால் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி செயற்கை நுண்ணறிவு போன்றவை சூற்றுச்சூழல் மாசுகேட்டை துல்லியமாய் அறியவும் அளக்கவும் விடை காணவும் எப்படி உதவுகின்றன என்பதையும் ஓர் கட்டுரை சொல்லுகிறது .

 

பொதுவாய் மரபணு தொழில் நுட்பம் ஆபத்தானது என்பது பொதுபுத்தியில் உறைந்துள்ளது .ஆயின் அதே மரபணு மாற்ற தொழில் நுட்பம் அதீத வெப்பத்தை தாக்குப் பிடிக்கும் தாவரங்களை உருவாக்கவும் பயன்படுத்த முடியும் என்கிறது ஒரு கட்டுரை .

 

“ வருங்காலத்தை நேர்மறை எண்ணங் கொண்டு நவீன தொழில் நுட்ப உதவி கொண்டு எதிர்கொள்வோம்.புவி சூட்டைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.” என டி.திருநாவுக்கரசு சொல்வது நம்பிக்கை அளிக்கிறது .

 

சிள் வண்டுகள் ,பறவைகள்  இவற்றுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் புவி வெப்பமாதலுக்கும் உள்ள தொடர்புகள் நாம் அறிய வேண்டிய செய்தி .சாலை நடுவிலுள்ள டிவைடர்களில் புதர் வளர்க்க சொல்லும் போது . பொதுவாய் என்ன தோன்றும் , புளு பூச்சி அதிகரிக்கும் என்றே தோன்றும் . ஆயின் அவை செய்யும் நன்மைகள்  அறிவோமா ? காடு வளர்ப்போம் எனச் சொல்லும் போதே அயல் படர் உயிரினங்களின் ஆபத்தை உணர்ந்தோமா ? சுற்றுச் சூழலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறவர் யார் ஆனல் அதன் சுமை யார் மீது சுமத்தப் படுகிறது என்பதை கவனிக்காமல் நகர்ந்துவிட முடியுமா ? வளர்ந்த நாடுகளும் பெருமுதலாளிகளும்தான் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் முதன்மைக் குற்றவாளி என்பதை கணமும் மறக்கலாமா ? “பழங்குடிகள் – வனம் – சுற்றுச்சூழல்” குறித்து இத்தொகுப்பில் ஒரு கட்டுரை சேர்த்திருக்கலாமே ? ஏன் தவறவிட்டுவிட்டார்கள் ?

 

கடல் சார் சவால்கள் ,நெகிழி சவால்கள் ,வேளாண் சவால்கள் ,நிலத்தடி நீர் சவால்கள் ,நகர்மய சவால்கள் ,போக்குவரத்து சவால்கள் ,ஒளி மாசு  என பல்வகையில் சூற்றுச்சூழல் நெருக்கடிகளை இந்நூல் பேசுகிறது . “ நீலம் இல்லாவிட்டால் பச்சை இல்லை” என்கிறார் அறிவியலாளர் சில்வியா எர்ல் . கடலைப் பாதுகாக்காமல் புவியின் சூழலை மேம்படுத்த முடியுமா ? நெகிழிகள் மூலம் அதுவும் மக்கா நெகிழிகள் மூலம் சூழ்ந்துள்ள பேரபாயம் இன்னும் இந்திய சமூகத்தின் பொது புத்தியில் உறைக்கவே இல்லையே எப்படி சரி செய்வது ?

 

பொதுவாய் சூற்றுச்சூழல் தூய்மைவாதிகள் மார்க்சியத்தை எதிராக நிறுத்துவார்கள் .ஆனால் மார்க்சியம்தான் சுற்றுச்சூழல் குறித்த மெய்யான அக்கறை கொண்டிருக்கிறது . ஒருதலைப் பார்வையை கொள்ளாமல் ஒருங்கிணைந்த பார்வையைத் தருகிறது .அதனை உள்வாங்க இந்நூல் உதவுகிறது .

 

இந்நூலின் கடைசி கட்டுரையில் ஆயிஷா நடராஜன் சுற்றுச்சூழல் குறித்த முக்கியமான ஒன்பது ஆங்கில நூல்களை அறிமுகம் செய்திருக்கிறார் .வாய்ப்புள்ளோர் அவற்றை தேடி வாசிக்கலாம்.

 

இந்நூலை வாசிக்கும் போது பல்வேறு புதிய சொற்களை நாம் அறிந்தாக வேண்டி இருக்கிறது .அவற்றை எல்லாம் நினைவில் வைத்திருப்பது சுலபமல்ல . ஒரு முறைக்கு இரு முறை வாசிப்பதும் , அந்தக் கலைச் சொற்களை அடிக்கோடிட்டு வைத்து தேவைப்படும் போது திருப்பிப் பார்ப்பதும் அவசியமாகிறது .

 

இவையனைத்தும் சுற்றுசூழல் நெருக்கடியின் பல்வேறு முகங்களை முனைகளை சிக்கல்களை நமக்கு புரிய வைக்க மூயற்சிக்கின்றன . பிரச்சனைகளும் எளிதல்ல .தீர்வுகளும் எளிதல்ல .பிரச்சனைகள் ஒரே நாளில் வெடித்ததல்ல காலவெளியில் நாம் அறிந்தும் அறியாமலும் செய்தவற்றின் எதிர்வினைகளாகும் .தீர்வு ஒரே நாளில் ஒரே கஷாயத்தில் கிடைத்துவிடாது . நெடிய போராட்டம் .அறிவியல் பார்வையுடன்தான் போராடியாக வேண்டும் .அதற்கு இந்நூல் வழி ஒரு திறப்பு உருவாகட்டும் !

 

பெருகும் மக்கள் தொகைக்கு வாழ்வளித்துக் கொண்டே புவியைக் காப்பாற்றி அடுத்த தலைமுறையிடம் கையளிக்க நாம் நேற்கொள்ள வேண்டிய போராட்டத்தில் இந்நூல் ஒர் தொடக்க ஆயுதமாகட்டும் !

 

சமகால சுற்றுச்சூழல் சவால்கள் , [bookday.in சுற்றுச்சூழல் மலர் ]

தொகுப்பாசிரியர்கள் : எஸ் .விஜயன் , த.வி.வெங்கடேஸ்வரன் , ஆயிஷா நடராஜன் ,செ.கா ,ஸ்ரீகுமார் ,டயானா

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949,

E mail :    bharathiputhakalayam@gmail.com  /  www.thamizhbooks.com

பக்கங்கள் : 272 , விலை : ரூ.400 /

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்

25/07/2024.

 


மணலை வடமா திரிச்சேன்

Posted by அகத்தீ Labels:

 



[ முதல் நாலுவரி நேற்று எழுதி பதிந்தது . இன்று மேலும் எட்டு வரிகளோடு பதிகிறேன் .கண்டிப்பா இதுல பட்ஜெட் அரசியல் ஏதும் இல்ல சாமி !]

 

மணலை வடமா திரிச்சேன்

தேரு நகரலை சாமி - கடல்

நுரையில அல்வா கிண்டினேன்

வயிறு நிறையல சாமி !

 

காற்றுல கணக்கை எழுதினேன்

ஓடி அடையல சாமி! –சும்மா

கனவுல கல்யாணம் பண்ணினேன்

குழந்தை பொறக்கல சாமி !

 

மந்திரத்தில மரத்தை நட்டேன்

தோப்பு விளையல சாமி – ஆள

சமுத்திரத்தில நடக்க வச்சேன்

மூழ்கிப் போச்சே சாமி !

 

சுபொஅ.

24/07/2024.

 

 

 

 

 

 


நினைவுச் சங்கிலி ஆங்காங்கே

Posted by அகத்தீ Labels:

 





நினைவுச் சங்கிலி

ஆங்காங்கே

அறுந்துகிடக்கிறது .

 

மனத்திரையில்

முன்னும் பின்னுமாய்

காட்சிகள் நகர்கின்றன

 

திடீரென யாரேனும்

பழைய குளத்தில்

கல்லெறிந்து விடுகின்றனர்

 

அதுவும் மரணங்கள்

நினைவுக் குட்டையைக்

கலக்கிவிடுகின்றன

 

அப்போது மேலெழுந்த

நினைவுகளைக் கேட்க

காதுகள் தயாராய் இருக்கின்றன

 

பதுங்கி இருந்த நினைவுகள்

பேசி முடித்தப்பின்னரே 

வரிசையாய் முண்டியடிக்கின்றன

 

இணையம் போல் கையிருப்பு

அனைத்தையும் கொட்டிவிடுவதில்லையே

நம் இதயம் .நம் மூளை.

 

சுபொஅ.

19/07/24.