மே தினம் கொண்டாட உங்களுக்கு அருகதை இருக்கிறதா ?

Posted by அகத்தீ Labels:

 

மே தினம் கொண்டாட உங்களுக்கு அருகதை இருக்கிறதா ?

 

[ மேதினத் தியாகிகளும் மேதினம் கொண்டாடும் இன்றைய உழைப்பாளர்களுக்கும் இடையே ஓர் தோழமை மிக்க உரையாடல் ]

 

மே தினம் கொண்டாட உங்களுக்கு அருகதை இருக்கிறதா ? மென்மையான குரலில் காதைத் திருகினார் மேதினத் தியாகிகள் .

 

நாங்கள் உழைக்கும் வர்க்கம் ; அந்த ஒரு தகுதி போதாதா மே தினம் கொண்டாட ? கொஞ்சம் உரக்கவே பதில் சொன்னோம்.

 

ஓ ! அப்படியா ? மே தினத்தின் பெருமையை ஆற்றலை உணர்ந்தோர் எத்தனைபேர் ? மேதினத்தை இன்னொரு விடும்முறை நாளாய்க் கருதி பொழுதைக் கொல்லுவோர் எத்தனை பேர் ?

 

மே தினத் தியாகிகளே ! உங்கள் கோபம் நியாயந்தான் .. விழிப்புணர்வை  ஊட்டுவதில் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது .செல்வோம் ! ஆயினும் கொண்டாடும் எங்களை கோபவிழியால் பார்க்காதீர் !

 

ஜெர்மனியில் ,பிரான்ஸில் , பிரிட்டனில் இன்னபிற நாடுகளில்  உழைப்பாளிகள் லட்சம் லட்சமாய் வீதியில் திரளுகிறார்களே அவர்களுக்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்க நீங்கள் செய்தது என்ன ?

 

மேதின தியாகிகளே ! உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தோம் ; மவுனமானோம்.

 

உங்கள் வீடுகளில் பணிக்கு வரும் பெண் உழைப்பாளிகளுக்கு எட்டு மணி நேர வேலை உண்டா ? வார விடுமுறை உண்டா ? சட்டச் சலுகைகள் உண்டா ? என்றைக்கேனும் இதை யோசித்ததுண்டா ?

 

சத்தியமாக அதை எல்லாம் ஒரு நிமிடம்கூட யோசித்ததே இல்லை . தப்பு செய்துவிட்டோம் ! மீண்டும் ஒப்புதல் வாக்குமூலம் தந்தோம்.

 

மலக்குழி மரணங்களும், தீண்டாமை இழிவுகளும், சாதி ஆணவப் படு கொலைகளும் உழைக்கும் வர்க்கத்திற்குள்ளாகவே எனில் வெட்கித் தலைகுனிய வேண்டாமா ? இதனை எதிர்க்காமல் மேதினம் கொண்டாட உங்களுக்கு அருகதை இருக்கிறதா ?

 

கேள்வியின் நியாயச் சூட்டில் நெளிகிறோம் விடைதேடி . தலைமுறை தலைமுறையாய் மரத்துப்போன இதயத்தை உசுப்பிவிட இப்படிப்பட்ட கேள்விச் சவுக்குகள் அவசியம்தான். நேர்மையோடு கேள்வியை எதிர்கொள்கிறோம்.

 

பெண்ணடிமை நீங்கி பாலின சமத்துவம் ஓங்க பேசுகிறீர் ! மறுக்க வில்லை . ஆயினும் உங்கள் வீட்டில் - உங்கள் உறவில்- உங்கள் பணி இடத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது தட்டிக் கேட்க உங்கள் குரல் உயர்ந்ததுண்டா ?

 

முயற்சிக்கிறோம் . போக வேண்டியது வெகுதூரம் .பழமைவாதம் எம் மூளையில் பாறாங்கல்லாய் அழுத்திக் கொண்டே இருக்கிறது ! தூக்கி எறியமாட்டாமல் மதம் ,சாதி ,பண்பாடென சமாதானம் சொல்லி ஓய்கிறோம் ! எங்கள் முயற்சி தொடரும் !!

 

முயற்சியைக்  கைவிடாதீர்கள் ! தொடருங்கள் ! உள்ளூரில் முறைசாரத் தொழிலாளிகள் கோடிக்கணக்கில் வேலை நேரமும் இன்றி உரிய சட்ட சலுகைகளும் இன்றி வறுபடுகிறார்களே அவர்களுக்காய் நீங்கள் எத்தனை முறை வீதிக்கு வந்தீர்கள் ?

 

வந்தோம் ,ஆனால் வெறும் சடங்காகத்தான் இருக்கிறதோ ? முறைசாராத் தொழிலாளர் துயரம் நீள்கதை ஆகிறதே ! பேசிக் கொண்டே இருக்கிறோம்.

 

சரி ! அது போகட்டும்! விவசாயிகள் கோபம் கொப்பளிக்க ஓராண்டாய் வீதியில் நின்றார்களே ! அரசு இயந்திரத்தின் கோரப் பற்சக்கரங்களை தடுத்து நிறுத்தும் தடையரண் ஆனீர்களா ?

 

சும்மா சுருண்டு கிடக்கவில்லை .குரல் கொடுத்தோம் ஆயினும் கேளாக் காதினரான அரசின் செவிப்பறை கிழிய உரத்து முழங்கவில்லை .

 

உண்மையை ஒப்புக் கொண்டதே முதல்படி . சரி! வேலையின்மை வாட்டி வதைக்கிறதே அதற்கெதிராய் கிளர்ந்தெழுந்தீர்களா? வேலையில்லா இளைஞர்களை உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக கொம்பு சீவுமே ஆளும் வர்க்கம் ? இதனை உணர்ந்தீர்களா ?

 

உணர்ந்தோம் அரசியல் உணர்வு பெற்ற சிறுபகுதியினர் . தொழிலாளி வர்க்க உணர்வாய் இதனை பதியம் செய்யத் தவறிவிட்டோம் !

 

மெல்ல சரியான தடம் நோக்கி நகர்கிறீர்கள் !கொரானா கொடுந் தொற்று உலகையே புரட்டிப்போட்டதே ! சக உழைப்பாளிகள் சொந்த ஊருக்கு மைல் கணக்கில் பாதம் நோக நடந்தார்களே நீங்கள் செய்தது என்ன ?

 

சில இடங்களில் உணவும் நீரும் அளித்தோம் ; ஆனால் அரசின் கன்னத்தில் நாலு அறைவிட்டு இக்கொடுமையைத் தடுக்கத் தவறிவிட்டோம் !

 

பெரும்பாலோர் ஊதியமும் வருவாயும் இன்றி முடங்கிக் கிடக்கையில் அரசு ஊதியம் பெற்றோர் சக உழைப்பாளிக்கு செய்த கைமாறென்ன ? அண்டை வீட்டு அன்றாடங் காய்ச்சி கல்வி கற்க துணை நின்றீர்களா ?

 

வர்க்க உணர்வு பெற்ற சிலர் தன்னார்வ தொண்டில் இறங்கினர் ; பாடம் சொல்லிக் கொடுத்தனர் .ஆனால் அது மிகமிக சொற்பம். பெரும் பாலோர் தூங்கினர் . பொறுப்பற்று இருந்தனர் .

 

போராடிப் பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாய் ஆளும்வர்க்க கடித்து ருசித்து சாப்பிடுகிறது ;ஜனநாயகம் முடமாக்கப்படுகிறது ; உங்கள் எதிர்வினை அவர்களை நடுங்கச் செய்ய வேண்டாமா ?

 

வெறுமே சடங்குத்தனமாய் சில கண்டனங்களோடு ஓய்ந்துவிடுகிறோம் ; தன் மனைவி தன் பிள்ளை தன் வீடு தன் சுற்றம் என சுருங்கி விடுகிறோம் .சுருண்டு விடுகிறோம் ; அலைபேசியில் அமிழ்ந்து தூங்கிவிடுகிறோம்.

 

தூங்குகிறவன் தொடையில்தானே கயிறு திரிக்க முடியும் .12 மணி நேர வேலை மூக்கை நுழைத்தது அப்படித்தானே ! கொஞ்சம் நிமிர்ந்தபோதே இரண்டடி பின்னால் போனது எனில்  நீங்கள் வர்க்கப்படையாய் திரண்டால் … கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! வர்க்க உணர்வு பெற யார் தடை ? எது தடை ? போதிக்க வேண்டியவர் தவறா ? கற்க மறுத்த நீங்களா ?

 

பதில் தேட வேண்டும் . குற்றம் இரு பக்கமும் இருக்கும் போல்தான் தெரிகிறது …

 

 

சாதி ,மத வெறியில் ஆயுதம் ஏந்துவதும், கொலையுண்டு வீழ்வதும் உங்கள் சகோதர சகோதரிகள்தானே … தடுக்கவும் - சரியான பாதைக்கு வென்றெடுக்கவும் நீங்கள் செய்தது யாது ? பேராபத்தை எதிர்கொள்ள என்ன வியூகம் உள்ளது உங்களிடம் ?

 

சில ஆர்ப்பாட்டங்கள் … கொஞ்சம் துண்டுப் பிரசுரங்கள் … யானைப் பசிக்கு சோளப்பொரியாய் சில … அவ்வளவே …

 

ஆம் . சுயவிமர்சனம் சரியாகத்தான் செய்கிறீர்கள் ! இந்நிலை மாற்ற என்ன செய்தீர்கள் ? கார்ப்பரேட் காவிக் கூட்டணியில் பாசிசம் இரத்தக் காட்டேரியாய் எங்கும் உயிர் குடித்து அலைகிறது … என்ன செய்யப் போகிறீர்கள் ?

 

தேர்தலில் தோற்கடிக்க ஒற்றுமை தேவைப் படுகிறதே ?

 

பார் ! பார்! மீண்டும் மீண்டும் ! தேர்தல் சக்கரத்துக்குள் அரைபடவே யோசிக்கிறீர்கள் ? தேர்தல் ஒரு தற்காலிக தடுப்பு .அவ்வளவுதான் .தொழிலாளி வர்க்க அரசியலை முதலாளித்துவ கூட்டணியில் எதிர்பார்த்து எத்தனை முறை ஏமாறுவீர்கள் ?

 

வேறென்ன வழி ?அதிகாரம் அவர்கள் கையில் அல்லவா ?

 

தப்பு ! தப்பு ! தேர்தலும் கூட்டணியும் பாசிச எதிர்ப்புப் போரில் தவிர்க்க முடியாததே ! சேர்ந்தீர்கள் ! இனியும் சேர வேண்டும் ! பிழை இல்லை அதில் ; வர்க்கப் போராட்ட கனல் அணைய  விடலாமோ ? தேர்தல் மாயை கண்ணை மறைக்காமல் காத்திடல் வேண்டாமோ ?

 

எல்லாமே எம் தவறுதானா ? ஆளும் வர்க்க லாபவெறிக்கும் நாங்கள்தான் பலி ! சாதி மத வெறிக்கும் நாங்கள்தான் பலி ! அதை எதிர்க்கத் தவறியதற்கும் நாங்கள்தான் குற்றவாளியா ? வெடித்து கேட்கிறோம் .

 

வருத்தமாகத்தான் இருக்கிறது .வர்க்கமாகவும் வர்ணமாகவும் பிளவுண்டு மிதியுண்டு கிடக்கிற நீங்கள் விட்டில் பூச்சியல்ல விளக்கில் விழுந்து மடிய ! நீங்கள் கோடிக்கால் பூதம் !விழித்தால் குவலயம் நடுங்கும் ! எழுக ! ஏன் இன்னும் கும்பகர்ண தூக்கம் என்பதுதான் கேள்வி !

மெய்தான்…மெய்தான்.. இந்த விழிப்புணர்வை வரவைக்க இன்னும் வலுவாய் இன்னும் கூர்மையாய் இன்னும் பரவலாய் இன்னும் தெளிவாய் இன்னும் எளிமையாய்  …. சொல்லிக்கொண்டே போகலாம் செய்ய முனைவோம்…

 

தோழர்களே !மே தினம் கொண்டாட உங்களுக்கு அருகதை இருக்கிறதா ? மென்மையான குரலில் மீண்டும் இதயத்தோடு உரையாடினர் மேதினத் தியாகிகள் .

 

தோழா !நாம் உழைக்கும் வர்க்கம் ; அந்த ஒரு தகுதி போதாதா மே தினம் கொண்டாட ? உழைக்கும் வர்க்கம் நாங்கள் தவறு செய்வோம் ! தடுமாறி விழுவோம் ! சதிக்கு ஆளாவோம் ! நம்பி ஏமாறுவோம் ! எத்தனை முறை விழுந்தாலும் எழுவோம் ! இறுதி வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்!

 

மேதினத் தியாகிகள் புன்னகைத்தனர் . அதில் ஆயிரம் பொருள் மிளிர்ந்தது !

 

அவர்கள் தொடங்கிய போராட்டம் இப்போது எம் தோள்களில் ; தொடர்வோம் ! வெல்வோம் !

 

மேதினம் வாழ்க ! உழைக்கும் வர்க்கம் வெல்க !

 

 

சுபொஅ.

30/4/2023.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


சிவ! சிவா! …குட்டிக் கதை

Posted by அகத்தீ Labels:

 

சிவ! சிவா! …குட்டிக் கதை

 

அவரிடம் எதைப் பேசுவது ?

அரசியல் வேண்டாம் என்கிறார்

இலக்கியம் தெரியாது என்கிறார்

சினிமா என்றதும் காதை பொத்துகிறார்

பழைய நினைவுகளைக் கிளறாதே என்கிறார்

 

அவரிடம் எதைப் பேசுவது ?

குடும்பத்தை பற்றி பேசவே மறுக்கிறார்

நட்புகளை நினைவுகூர மறுக்கிறார்

நகைச்சுவையும் பிடிக்கவில்லை

இசைக்கு காது ஒத்துழைக்கவில்லை

 

அவரிடம் எதைப் பேசுவது ?

 சதா சத் விஷயங்களையே பேசு என்கிறார்

சிவ நாமம் ஜெபித்தபடி இருக்கிறார்

தேவராம் திருவாசகம் வாசிக்கச் சொல்கிறார்

காது கேட்காவிட்டாலும் மன நிம்மதி என்கிறார்

 

ஒரு நாள் அதிகாலை  “சிவபதவி” அடைந்தார்

சிவசிவ நாமம் முழங்க தேவாரம் திருவாசகம் ஓதி

பேரன் பேத்தி சூழ வழி அனுப்பி வைத்தனர்- மறுநாள்

அவர் அலைபேசி ,  டிரங்பெட்டியை சோதித்த பேரன்

கத்தினான் “ தாத்தா டிரிபிள் “. சிவ ! சிவா !

 

சுபொஅ.

21/4/2022.

 

[ இது என் நண்பர் ஒருவர் வீட்டின்  சம்பவம் . நேற்று திடீரென போண் செய்தார் . பழைய நினைவுகளை மீட்டெடுத்தேன் .இங்கே பதிவாச்சு…]

 

 


ஆடும் மாடும்…

Posted by அகத்தீ Labels:

 

ஆடும் மாடும்…

 

தலைப்பைப் பார்த்ததும் யாரையோ கிண்டல் செய்ய - அரசியல் பகடி செய்ய நான் எழுதி இருப்பதாக நீங்கள் கருதினால் , அதற்கு நான் பொறுப்பல்ல … அதையும் எழுதத்தான் வேண்டும் , ஆயின் இப்போது எழுதுவது வேறு சங்கதி.

 

தி.முக வின் தலைவர்களில் ஒருவரான தத்துவமேதை  அமரர் டி.கே .சீனிவாசன் எழுதிய அவசியம் படிக்க வேண்டிய நூல் ”ஆடும் மாடும்” . ஆண்களும் பெண்களும் என்பதுதான் அதன் பொருள். நான் இந்நூலைப் பற்றியும் இப்போது எழுதப் போவதில்லை . நூலை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் …..

 

நடை பயிற்சியின் போது நான் அன்றாடம் காணுகிற சில காட்சிகளை இங்கே சொல்லப் போகிறேன்; அவ்வளவுதான். அதற்கு தோன்றிய தலைப்புதான் இது .

 

பெங்களூர் ஊரகப் பகுதிக்கு உட்பட்ட பொம்மசந்த்ரா தொழிற்பேட்டையில்  மாலை ஐந்து மணிக்கு வேலைமுடித்து பெண்களும் ஆண்களும் கம்பெனிகளில் இருந்து சாரை சாரையாகப் புறப்பட்டு ,பெரிய ஊர்வலம் போல வருவார்கள் .ஜிகினி ரோட்டில் இருந்தும் வருவார்கள் .

 

காச்சநாய்க்கன் ஹள்ளி , எரண்டஹள்ளி, ஹிட்டனஹள்ளி ,ஹென்னகரா போன்ற நகரமயமாகிவரும் கிராமப்பகுதிகளை நோக்கி [ 2 அல்லது மூன்று கி.மீ தொலைவுக்குள்] செல்லவே இந்த ஊர்வலம் . பைக் ,சைக்கிள் ,ஷேர் ஆட்டோ ,பஸ் என பயணிப்போர் குறைவே .இவர்களின் குடியிருப்பு பெரும்பகுதிஅங்கு தான்.

 

[ அதை  வீடென்றும் சொல்லலாம், வீடு மாதிரி என்றும் சொல்லலாம் , கூடுமாதிரி என்றும் சொல்லலாம்.வடஇந்தியர் வசிக்கும் பெரும்பாலான வீடுகள் இடிந்த கட்டிடம் /தகரமறைப்பு]

 

ஸ்டேட்பேங்  நெருங்கியதும் பெரும்பாலான ஆண்கள் நின்றுவிடுவார்கள் .அங்கே சாலையோர கடைகளில் பெண்கள் காய்கறி ,கருவாடு ,மீன்  இவற்றோடு பஜ்ஜி போண்டா கடைகளில் அல்லது பேக்கிரிகளில் ஏதாவது தின்பண்டமும் வாங்கிக் கொண்டு வேகவேகமாக ஓடுவார்கள் . வழியில் அனுமார் கோயிலை நோக்கி ஓடிக்கொண்டே ஒரு கும்பிடு . வீட்டுக்கு போகும் அவசரம் துடிப்பு அப்படி . இந்தத் தின்பண்டங்களை அவர்கள் சாப்பிட்டுப் பார்ப்பது அபூர்வம் .எங்காவது ஓர் கடையில் ஒன்றிரண்டு பெண்கள் நின்று சாப்பிட்டால் அவர்கள் பி.ஜீ ஹாஸ்டல்களில் தங்கி இருக்கும் பெண்களாக இருக்கும் .

 

திருமணமான பெண்கள் வேகவேகமாக ஓடுவது குழந்தைகள் இவர்கள் வருகைக்கு காத்திருக்கும் என்பதற்காகத்தான் .அவர்களுக்காகத்தான் இந்த தின்பண்டங்களோடு ஓடுகிறார்கள் . அதன் பின் சமைக்க  வேண்டும் .அது மட்டுமல்ல தண்ணீர் பிடிப்பது,துணி துவைப்பது [ வாஷிங் மெஷின் மிகக்குறைவு .தெருவோரம் சாலையில் கையால் துவைப்பதை இங்கு எங்கும் சர்வசாதாரணமாகக் காணலாம்] என காத்திருக்கும் வேலை பட்டியல் அவர்களை ஓடவைக்கும்.

 

அது அவர்களின் செகண்ட் ஷிப்ட் வேலை .ஆனால் கடமை ,பொறுப்பு ,தாய்மை ,குடும்பப் பெண் என பலவித முத்திரை குத்தலாம்.  வலியும் சுமையும் அவர்களுக்குத்தானே !

 

வேடிக்கை என்னவெனில் இப்படி வரும் பெண்களில் கன்னடம் பேசுவோர் ,இந்தி பேசுவோர் ,தமிழ் பேசுவோர் ,தெலுங்கு பேசுவோர் என பல மொழியினர் இருப்பர் .இந்து .முஸ்லீம் .கிறுத்தவர் எல்லோரும் இருப்பர் .எல்லா சாதியும் இருக்கும் . ஒடுக்கப்பட்ட,பிற்படுத்தப்பட்ட  சாதியினரே அதிகம் இருக்கக்கூடும்.

 

[ இங்கே ஒரு முடிதிருத்தகத்தில் எனக்கு முடிவெட்டியவரை விசாரித்தேன் அவர் உ.பி யிலிருந்து வந்தவர் .பிராமிண் என்றார் . இப்பகுதியில் இவர் உறவினர்கள் பலபேர் ஆண்களும் பெண்களும் கம்பெனி ,கடை ,வீடு என வேலைசெய்கின்றனர்.]

 

ஆண்கள் பாதியிலே நின்றுவிடுவார்களல்லவா ? இவர்களில் பெரும்பாலோர் முன்னால் ஓடிய பெண்களின் கணவர்களாகவோ சகோதரர்களாகவோ, தந்தையராகவோ  இருப்பார்கள். நின்ற ஆண்கள் அவரவர் நணபர் கூட்டத்தோடு பஜ்ஜி கடை ,பேக்கிரி என  நுழைந்து எதையாவது சாப்பிட்டு, டீ குடித்து, தம்மடித்து, அரட்டை அடித்து இரவு ஏழு ,எட்டு மணிவரை பொழுதைக் கொன்றுவிட்டு வீடு திரும்புவார்கள் . தெரு முழுக்க பான்பராக் மென்று துப்பிய எச்சில் வேறு .கணிசமான ஆண்கள் ஒயின் ஷாப்பில் கட்டிங் போட்டுவிட்டு தள்ளாடி தடுமாறி வீடு போய்ச் சேர இரவு  ஒண்பது பத்து ஆகிவிடும் . கட்டிங் போட மொழி ,மத ,சாதி வித்தியாசமெல்லாம் கிடையாது .

 

அதன் பிறகு குடும்பமே சாப்பிட்டு படுத்து காலையில் ஆறு / ஏழு மணிக்கெல்லாம்  புறப்பட்டு விடுவார்கள். வழக்கம் போல் ஆண்களுக்கு கம்பெனியில் ஒரு ஷிப்ட் மட்டும் ;பெண்களுக்கு கம்பெனி ,வீடு என இரண்டு ஷிப்டுகள் .

 

ஆடும் மாடும் அன்றாடம் இப்படித்தான் ; அதுதான் ஆண்கள் பெண்கள் நிலை இப்படித்தான் இங்கு.

 

இவர்களின் பெண்விடுதலை தாகம் எப்படிப் பட்டதாக இருக்கும் ?

இவர்களின் “ அச்சா தீன்” கனவு எப்படிப்பட்டதாக இருக்கும் ?

 

சு.பொ.அ.

20/4/2023.


நீ யோசி !

Posted by அகத்தீ Labels:

 

வெயில் காலத்தில்
அய்யையோ அனல் பறக்கிறது
தாங்க முடியவில்லை
என புலம்புகிறாய் …

மழை காலத்தில்
அப்பப்பா விடாத அடை மழை
கடை கண்ணிக்குகூட போகமுடியலை
என கண்ணீர்விடுகிறாய்…

குளிர்காலத்தில்
ஆத்தாடி குளிர் எலும்பைத் துளைக்குது
போர்த்திட்டு படுக்கலாம் போல இருக்கு
என நடுங்குகிறாய்…

எல்லா காலமும் எப்போதும்
வசந்தமாய் இருக்க முடியுமா ?
பருவச் சுழற்சி நின்றுபோனால்
இந்த பூமி தாங்குமா ?- நீ யோசி !

மாறிக்கொண்டே இருக்கும் பருவத்தோடு
ஓடிக்கொண்டே இருப்பதே வாழ்க்கை
ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் – நீ
வருந்தாத நாளொன்றைச் சொல் ..

சுபொஅ.
17/4/2023.



All reacti

முழுசாக நனைந்த பின்

Posted by அகத்தீ Labels:

 


முழுசாக நனைந்த பின்

முக்காடு எதற்கு ?

அனுபவச் செறிவு மிக்க

கேள்விதான்.

ஆளுநருக்கும்

நீதியரசருக்கும்தான்

புரியவில்லை…

 

தப்பு ! தப்பு !

தூங்குபவனைத்தான்

எழுப்ப முடியும்

நடிப்பவனை அல்ல.

 

விஷக் கொடுக்குகளில்

வண்ணம் பூசியிருந்தாலும்

வாசம் தூவி இருந்தாலும்

தேளின் கொடுக்கு விஷம்தானே !

 

சுபொஅ.16/4/2023.


இசையும் தமிழும் இசைத்தமிழ் தாத்தாவும்

Posted by அகத்தீ Labels:

 


எல்லா புத்தகங்களையும் வாங்கியதும் படித்து விடுவதில்லை . தெரிந்தே சில புத்தகங்கள் மாதக் கணக்காய் காத்திருக்கும். சில கண்ணாமூச்சி காட்டி ஒளிந்து கொள்ளும்.

 

2022 நவம்பர் மாதம் நான் தஞ்சை போயிருந்த போது  களப்பிரன் அந்த சிறிய நூலைக் கொடுத்தார் . அது எப்படியோ  என்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு புத்தகத்துக்குள் நுழைந்து ஒளிந்துகொண்டது .நானும் மறந்தே விட்டேன்.

 

நேற்று வேறொரு புத்தகத்தைத் தேடும் போது கண்ணில் பட்டது . உடனே படித்துவிட்டேன் . இசை பற்றி எதுவும் தெரியாத எனக்கு அதில் பல புதிய செய்திகள் இருந்தன ?

 

1] கர்நாடக இசை என்பது என்ன ?

2] ஹிந்துஸ்தானி இசை என்பது என்ன ?

3] தமிழில் பாடினாலே அது தமிழிசையாகிவிடுமா ?

4] இசைக்குள் மதம் ,சாதி புகுத்தப்பட்டதா ? கர்நாடக  இசை ஒரு சாதிக்கு சொந்தமானதா ?

5] கர்நாடகா இசைக்கும் ஹிந்துஸ்தானி இசைக்கும் வேறுபாடு என்ன ?

6] ஆப்பிரஹாம் பண்டிதர் யார் ?அவர் தமிழ்இசைக்கு பங்களித்தது என்ன?

7]கருணாமிருத சாகரம் எனும் நூலின் சாரம் எது ? சங்கீத ரத்தினாகரம் நூல் என்ன சொல்கிறது ?

8] சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும் சொன்னதென்ன ?

9] இசை மும்மூர்த்திகள் என சொல்லப்படுபவர்கள் யார் ? யார் ? அதில் இருவித பட்டியல் வந்தது எப்படி ?

10] மெய்யான தமிழிசை என்பது யாது ?

 

இப்படி எழும் பல கேள்விகளுக்கு சுருக்கமான பதில்களோடு  களப்பிரன் எழுதிய “ இசையும் தமிழும் இசைத்தமிழ் தாத்தாவும் “ எனும் நூல் வாசித்து விபரங்கள் அறிந்தேன் . நான் பாடல்களை ரசிப்பேன் .ஆயினும் இசையில் ஞானசூன்யம் . எனவே இந்நூலுக்கு விமர்சனம் எழுத என்னால் இயலாது .

 

வாசிப்பீர்!!

 

இசையும் தமிழும் இசைத்தமிழ் தாத்தாவும்

ஆசிரியர் : களப்பிரன் ,வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,

தொடர்புக்கு :044 24332924 /24330024 /8778073949

 

Email : bharathiputhkalayam@gmail.com , www.thamizhbooks.com

 

பக்கங்கள் : 48 , விலை :ரூ.50/

 

 

சுபொஅ.

13/4/2022.

 

 



அந்தக் கடிகாரத்தில்

Posted by அகத்தீ Labels:

 

அந்தக் கடிகாரத்தில்
என்னவோ கோளாறு
ஒரு மணிக்கூர் என்பது
பகலில் 60 நிமிடங்களாகவும்
இரவில் இரட்டிப்பாகவும்
இயங்குகிறது
இதைச் சொன்னால்
உனக்கு வயசாகிவிட்டது
என்கிறார்களே !
சுபொஅ.
13/4/2023.