ஓர் இலக்கிய நூலை முன்வைத்து…..

Posted by அகத்தீ Labels:

 



ஓர் இலக்கிய நூலை முன்வைத்து…..

 

கடந்த கால இலக்கியங்களை இலக்கியப் போக்குகளை விமர்சன முறைகளை மீண்டும் மீண்டும் மறு ஆய்வு செய்வதில் பிழையில்லை .தேவையும் கூட . ஆயின் எதற்காகச் செய்யப்படுகிறது எப்படிச் செய்யப்படுகிறது என்பது மிகவும் முக்கியம் . நான் அண்மையில் படித்த இரண்டு இலக்கிய நூல்கள் என்னுள் கோபத்தையும் கேள்விகளையும் உசுப்பிவிட்டன.

 

ஜனவரி 18 ஆம் தேதி நான் எழுதிய முகநூல் பதிவை மீண்டும் அசை போட்டேன்.

 

 “அவர் தட்டையாக எழுதுகிறார்

இவர் நெட்டையாக எழுதுகிறார்

 

இவர் மட்டையாக எழுதுகிறார்

அவர் மொக்கையாக எழுதுகிறார்.

 

அவர் எழுதுவது எல்லோருக்கும் புரிகிறது ;அதெல்லாம் எழுத்தா?

 

இவர் உரக்கப் பேசுகிறார்.அது பிழை

இவர் பேசுவது புரியவே இல்லை;சபாஷ்!

 

வெடிப்புற பேசலாமா ? உள்ளுக்குள் முணுமுணுக்கணுமா ?

 

இவர் தத்துவ நீரோட்டம் இல்லாமல் எழுதுகிறார் ;அவர் மேலிருந்து கீழ் பார்க்கிறார் :இவர் கீழிருந்து மேல் பார்க்கிறார்.

 

இவர் அரசியலாக எழுதுகிறார்அவர் அரசியலற்று உளறுகிறார்.

 

இவர் வக்கிரமாக எழுதுகிறார்.அவர் வறட்சியாக எழுதுகிறார்.

 

இவர் இவரெல்லாம்தான் எழுத்தாளர்இல்லை இல்லை என் லிஸ்ட்தான் ஆகச்சிறந்தது.

 

கரிசல்காட்டு எழுத்து மட்டுமே எழுத்து .இல்லை இல்லை தஞ்சைதான்.

 

சென்னைக்கார்களுக்கும் மற்றவர்களுக்கும் எழுதவே தெரியாதுஇல்லை இல்லை அவங்க மட்டும்தான் சரியாக எழுதுறாங்க..

 

உச்சமாக "நான் மட்டுமே சரியான எழுத்தாளன்.".இல்லை.இல்லை."நீயெல்லாம் ஒரு எழுத்தாளனா ?"

 

விருப்பு வெறுப்பு மலிந்து கோஷ்டி கோஷ்டியாய்  அபஸ்வரம் ஒலிக்கும் எழுத்தாளர்களே !

 

அட போங்கப்பு ! நீங்களும் உங்க சண்டையும்...

 

எழுதுவது யார் என்பது பிரச்சனையே அல்லஎதை எழுதுகிறாய் ?யாருக்கு எழுதுகிறாய் ? 

 

எங்கள் வலியை ரணத்தை வாழ்க்கையை சந்தோஷத்தை சங்கடத்தை முட்டலை மோதலை பிரச்சனைகளை எழுதுங்கள் .அது எங்களை எழுந்து நிற்க வைக்க வேண்டும் .முடக்கி மூலையில் படுக்க வைத்திடக் கூடாதுஅம்புடுத்தான்.

 

கிளம்பு கிளம்பு காற்று வரட்டும் !”

 

 

 

இது எந்த ஒரு நூல் சார்ந்த விமர்சனமும் அல்ல ; குறிபிட்ட யார் மீதான விமர்சனமும் அல்ல ; முழுக்க முழுக்க என் மனோபாவம் . ஆயின் என் இந்த மனோபாவத்தை அண்மையில் நான் படித்த நூல்கள் மீண்டும் உறுதி செய்தன.

 

 

 “ மனித உளவியலை சாதியையும் முதலையும் கொண்டு தீர்மானிப்பதற்கும் இனத்தையும் ,மதத்தையும் கொண்டு தீர்மானிப்பதற்கும்மிடையில் அப்படி என்ன வேறுபாடு இருக்கிறது என்ற நியாயமான குழப்பம் வாசகனுக்கு ஏற்படத்தான் செய்கிறது .” இப்படி டொமினிக் ஜீவா எழுத்து குறித்த தன் கட்டுரையில் ஜிஃப்ரி ஹாசன் கூறியிருப்பது சரியானதுதானா ?

 

 

மேலோட்டமாகப் பார்த்தால் நடுநிலையோடு சொல்லப்பட்டதாகத் தோன்றும். உள் நுழைந்து பார்ப்பீர் ! சாதிய ஒடுக்குமுறை , முதலாளித்துவச் சுரண்டல் ஒடுக்குமுறை இவற்றுக்கு எதிரான எழுத்தும்; மத,இன அடிப்படையிலான எழுத்தும் ஒன்றா ? சாமர்த்தியமான நடுநிலை எப்போதும் இறுதியில் வலதுசாரி அரசியலாக திரிந்துவிடும் அபாயம் உண்டே !

 

 

 “எனது விமர்சனப் பார்வை என்பது ஒரு படைப்பாளியின் கோட்பாட்டு தளத்தில் அங்கீகாரம் ,மறுப்பு எனும் இரட்டை எதிர்நிலையிலிருந்து உருவாவதில்லை . படைப்பாளி மீதான ஏற்றுக்கொள்ளலோ நிராகரிப்போ அவரது பிரதிகள் மீதான ஆழமான வாசிப்பிலிருந்து தொடங்கப்பட வேண்டும் .” என முன்னுரையில் சொல்லுகிறார் ஜிஃப்ரி ஹாசன்.

 

ஆனால் ,கைலாசபதி , சிவதம்பி , நுஃமான் , மு.பொ, சிவசேகரம்  உள்ளிட்ட பலரின் முற்போக்கு பார்வையை மிகவும் குறுகிய வறட்டு சூத்திரமாகவே ஜிஃப்ரி ஹாசன் பார்க்கிறார் என்பது நூலை கூர்ந்து வாசிக்கிற யாரும் உணர முடியும் . இவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரென்றோ அவர்கள் அவதானிப்பில் பிழையே இல்லை என்றோ கூறவில்லை . முன்னைவிட இன்றைக்கு பார்வைப் பரப்பு விரிவடைந்திருக்கிறது கூர்மை அடைந்திருக்கிறது . அதனையும் சேர்த்துப் பார்க்கவும் யாரும் தடையாக இல்லை .ஆயின் அந்த முற்போக்கு மரபை நேர்கோட்டுப் பார்வை ,தட்டைப் பார்வை என நூலாசிரியர் நூல்நெடுக மெல்ல நிராகரிப்பதை என்னால் ஏற்கமுடியவில்லை .

 

 

டொமினிக் ஜீவா ,ரஞ்ச குமார் ,நந்தினி சேவியர் , சட்டநாதன் , உமாவரதராஜன் , சேரன் , நீர்வை பொன்னையன் ,ஷோபா சக்தி , நோயல் நடேசன் ,சயந்தன் ,சாத்திரி , தஜ்ஜல் , தில்லை ,ஓட்டமாடி அறாபத் என அதிநான்கு எழுத்தாளர்களின் படைப்புகளை முன்வைத்து ஜிஃப்ரி ஹாசன் எழுதிய “ எழுத்தின் தடம் ஈழப்படைப்பு வெளி” நூல் பேசுகிறது .இதில் டொமினிக் ஜீவா ,சாத்திரி ,ஷோபா சக்தி போன்ற சிலரின் எழுத்துகளே நான் வாசித்தவை .ஆகவே நூலாசிரியரின் இலக்கியப் பார்வையை என்னால் முழுசாக அலச முடியாது .

 

 

ஆயினும் இந்நூல் பேசும் சுத்த இலக்கியம் எனக்கு உடன்பாடன்று . நான் சார்பானவனே . ஆகவேதான் மேலாண்மை ,சின்னப்பபாரதி ,சமுத்திரம் ,டி .செல்வராஜ் , காஸ்யபன்,பொன்னீலன்  உள்ளிட்ட இடதுசாரி முன்னத்தி ஏர்களை நிராகரிக்கும் போக்கு உடன்பாடில்லை என அப்படி எழுதுவோரிடம் என் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.

 

 

இந்நூலை கூர்ந்து வாசிப்பீர் ! விமர்சிப்பீர் ! இதுவே என் வேண்டுகோள்.

 

 

எழுத்தின் தடம் : ஈழப் படைப்புவெளி ,

ஜிஃப்ரி ஹாசன் ,

தாயதி வெளியீடு ,

கிடைக்கும் இடம் : பாரதி புத்தகாலயம் ,

044 24332924 .

 

பக்கங்கள் : 160 ,விலை : ரூ.160/

 

சுபொஅ.

6/3/2023.

 

“இப்படியா ஒரு பெண் இருப்பாள் ?” “ ஏன் அப்படி இருகக்கூடாதா என்ன..?”

Posted by அகத்தீ Labels:


 

 “இப்படியா ஒரு பெண் இருப்பாள் ?”

 “ ஏன் அப்படி இருகக்கூடாதா என்ன..?”

 

நேற்று [ மார்ச் 8 ] உலக பெண்கள் தினத்தில் மாதவராஜின் “க்ளிக்” நாவல் படித்தேன். வாசிக்கத் தூண்டும் நடை ,எடுப்பு ,தொடுப்பு ,முடிவு  மொத்தத்தில் விறுவிறு இப்படி என் பொது வாசக மனோநிலையிலும் சொல்லலாம்.

 

காதல் ,செக்ஸ் ,திருமணம் ,பாசம் ,நட்பு போன்றவைகளின் பார்வையில் மாற்றம் தேவை என்பதை சொல்லும் படைப்பு என இன்னொரு நிலையில் சொல்லலாம்.

 

இன்றைய ஆண் /பெண் இளைய தலைமுறையின் உளவியல் போக்குகளை படம் பிடிப்பதாக வேறொரு வகையில் பார்க்கலாம் .

 

கரிசல் இலக்கிய வட்டத்தினர் நிறைய சொல்லிவிட்டனர் ஆகவே சாதாரண வாசகன் நான் புதிதாக என்ன சொல்ல முடியும் ?

 

பூங்குழலி ,ஸ்ரீஜா ,சோஃபியா ,பவித்ரா ,ஆஷா ,மெர்சி ,சித்ரா ,பத்மாவதி , சந்திரா,கல்யாணி ,அமுதா ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அலையடிக்கும் உணர்வுகள் வெவ்வேறானவை ஆனால் எங்கும் பெண்ணின் குரல் நிராகரிக்கப்படுவதும் அதை எதிர்த்த போராட்டமும் அவரவர் புரிதல் மட்டத்தில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது .எது சரி ? எது தவறு? எதைக் கொண்டு தீர்மானிப்பது ?

 

“மனித இனத்தின் சரிபாதி ,சகமனுஷியான பெண் எப்படி இருக்க வேண்டும் ? எல்லா பெண்களும் ஒரே போல் இருக்க முடியுமா ? இருக்க வேண்டுமா ?பெண்ணின் படிப்பு ,உடை ,வேலை , நண்பர்கள் ,திருமணம் ,பேசும் வார்த்தைகள் வரை எல்லோராலும் கேள்விக்குள்ளாக்கப் படுவது ஏன் ?.... பெண்கள் புரியாத புதிரா ? புரிந்து கொள்வதில் ஆண்களுக்கு உணர்வுத் திறன் குறைபாடா ?திருமணம் எதற்காக குடும்பத்தால் நடத்தி வைக்கப்படுகிறது ? திருமணம் அவசியம் தானா ? தன் விருப்பத் திருமணமோ ,குடும்ப விருப்பத் திருமணமோ இணையும் ஆண் பெண இருவருக்குள்ளும் அன்பு , நட்பு , புரிதல் , மதித்தல் , சகிப்புத்தன்மை உருவாக்குகிறதா ? உருவாக்காத திருமணமோ உறவோ எதற்காக ? பல கேள்விகளோடு உள்ள இன்றைய இளைஞர்கள் ,இளம்பெண்கள் மனோநிலையை வாசிப்போர் மத்தியிலும் எழச் செய்வதே இந்நாவலின் சிறப்பு !” என்கிற சூலக்கரை சுமதியின் விமர்சனத்தோடு நான் உடன் படுகிறேன் .

 

சிஸ்டம் ,மானிட்டர் ,புராஜக்ட் , கோடிங் ,டீம் மீட்டிங் ,மெயில் ,கன்சுயூமர் என தலையை பியத்துக் கொள்ள வைக்கும் ஐ.டி பீல்ட் [கணினித்துறை] தரும் கவர்ச்சி ,மயக்கம் ,யதார்த்தம் ,உளவியல் சிக்கல் இவற்றோடும் இந்நாவல் பின்னப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பென்பேன்.

 

சுதந்திரமாக வாழத்துடிக்கும் பூங்குழலி ,அம்மாகோந்தாக ஒட்டிக் கிடக்கும் நரேன் இவர்களைச் சுற்றித்தான் நாவல் . நிச்சயதார்த்தம் ஆனதாலேயே கல்யாணம் செய்துதான் ஆக வேண்டுமா ? நாலுபேர் நாலுநாள் அப்படியும் இப்படியும் பேசத்தான் செய்வார்கள் , ஆனால் வாழவேண்டியவர் அவர்களல்லவா ? வெட்டிக் கவுரவத்துக்கு நெருப்புக் குழியில் விழுவதைவிட ஊரார் வாயில் விழுதல் மேலானதல்லவா !

 

 

நரேன் ,ரவிச்சந்திரன் ,பூசைப்பழம் ,முருகேசன் ,மூர்த்தி ,சபாபதி ,கலைச் செல்வன் ,விக்னேஷ் ,அசோக் ,பிரகாஷ் ,மகேஷ்,இஸ்மாயில் ,அலையரசன் ,மூர்த்தி ,லியோ என ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு உலகத்தில் உலவிக்கொண்டிருக்கிறார்கள் .யாரும் கெட்டவர்களில்லை .சூழ்நிலையின் கைதிகள்தாம் . ஆண் மைய பண்பாட்டு போதையின் அடிமைகள்தாம். பருவதாகம் , பேராசை ,யதார்த்தம்,பாலின புரிதல் இவைகளை சரியாக உள்வாங்கி  உணர்ந்து தன்னைச் செதுக்குவதில் இடறுகிறார்கள் .விசாலப்பார்வையை தொலைத்து விடுகிறார்கள் .

 

அதீத பாசமும் ஆர்வக் கோளாறும்கூட அனைத்தையும் நாசம் செய்துவிடும் என்பதன் உருவகமாய்  நரேனின் தாய் சந்திரா பாத்திரம் .இது போல் பலரை நான் பார்த்திருக்கிறேன் . இந்த சமூகம் கட்டியமைத்த ஆண்மைய ஆதிக்கத்தின்  இன்னொரு வடிவமே இவர்களும்.

 

அதீத நுகர்வுப் பெரும் பசியின் எதிர் விளைவைச் சொல்லும் சோஃபியா – விக்னேஷ்   மற்றும் ஆஷாவின் கணவர் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை . இதுவும் நாம் சந்திக்கிற காட்சிகள்தாம்.

 

செக்ஸ் ,ஒழுக்கம் தொடர்பாக நம் பொது புத்தியில் உறைதிருப்பதை கேள்விக்குள்ளாக்க வேண்டிய கட்டாயத்தினை இந்நாவல் வலுவாய்ச் சொல்கிறது .

 

 “ நாவல் ஒரு சார்பாக எழுதப்படவில்லை .நாவலின் கதாபாத்திரங்கள் மூலமாக எதிரெதிர் நிலைகளைப் பற்றி கேள்விகளும் வருகிறது.” என ராஜேஷ் விமர்சனமும் ஒரு வகையில் சரிதான் .ஆயின் தெளிவான பாலின புரிதலை நோக்கியே நாவலை மாதவராஜ் நகர்த்துகிறார் என்பதே என் அவதானிப்பு .

 

கற்பதற்கும் விவாதிப்பதற்குமான  பல செய்திகளைப் பொதிந்த இந்நாவலை என நான் லெப்ட் க்ளிக் செய்கிறேன் . ரைட் க்ளிக் செய்வோரும் இருக்கக்கூடும் ஆயினும் படித்து முடித்தபின் என் முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

 

க்ளிக் [நாவல்] , ஆசிரியர் : மாதவராஜ் , வெளியீடு : பாரதிபுத்தகாலயம் , தொடர்புக்கு044 24332924 /24332424/24330024 

bharathiputhakalayam@gmail .com , www .thamizhbooks.com

பக்கங்கள் : 248 , விலை : ரூ.250/

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

9/3/2023.

குடும்பம் எனும் அமைப்பு தின்று தீர்த்த எம் பெண்களுக்காக ….

Posted by அகத்தீ Labels:

 


குடும்பம் எனும் அமைப்பு தின்று தீர்த்த     எம் பெண்களுக்காக ….

 

“சும்மா இருக்கும் பெண்களென்று யாருமில்லை என்பதால் எல்லா பெண்களுமே உழைக்கும் பெண்களே” ! அனைத்து பெண்களுக்கும் மார்ச் 8 உலக பெண்கள் நாளில் ”உரிமைப் போர் தொடர்க!” என தோழமையுடன் வாழ்த்துகிறேன் .

 

இந்நாளில் எல்லா பாலினத்தவருக்கும் , அருள்மொழியின் “ டைரி” எனும் சிறுகதைத் தொகுப்பை அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அந்த  “டைரி” இதற்குப் பொருத்தமானதே !

 

 “ இது அவரது முதல் தொகுப்பு என்பதற்கான அடையாளம் ஒரு கதையில்கூட இல்லை” என்று ச.தமிழ்ச் செல்வன் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்.

 

 “ குடும்பம் எனும் அமைப்பு தின்று தீர்த்த எம் பெண்களுக்காக “ எனஇக்கதைகளை சமர்ப்பணம் செய்யும் அருள்மொழியின் முன்னுரையை முதலில் படித்துவிடுங்கள் .

 

“…. பெருமையை ஒதுக்கி வைத்துவிட்டு நமது குடும்பங்களில் என்ன நடக்கிறது என்பதை குறைந்தபட்ச நேர்மையுடன் அணுகுவோமானால் நாம் சற்றே பண்படக்கூடும் .” என முன்னுரையில் சொல்லிச் செல்லும் அருள்மொழி தன் சிறுகதைத் தொகுப்பில் பெரும்பாலான கதைகளை அதற்கே அர்ப்பணித்திருப்பது பாரட்டத் தக்கது .

 

பெண்ணியம் பெண்ணுரிமை என்றெல்லாம் பொதுவாக நாம் பேசிச் செல்லலாம் ; ஆயின் உயர் மேட்டுக்குடியின் பெண்ணியமும் அடித்தட்டு உழைக்கும் வர்க்க பெண்ணியமும் ஒன்றல்ல . வர்க்க வர்ண படிநிலைக்கு ஏற்ப இதிலும் ஏற்ற தாழ்வு உண்டு .ஆனாலும் எல்லா பெண்களும் குடும்ப அமைப்பில் மல்லுக்கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள் .இங்கு ஆண் மைய சாதி மைய சமூக ஒடுக்குமுறை படிநிலைக்கு ஏற்ப வேடம் தரித்து நிற்கிறது .

 

இங்கே 14 கதைகள் .அனைத்தும் கொங்கு மண்டலத்தில் நிகழ்கிறது . எல்லா கதைகளும் கொங்கு மண்டலத்தில் ஆணாதிக்கம் ,சாதியம் இவை எப்படி புன்னகைத்துக் கொண்டே பேயாட்டம் போடுகிறது என்பதை நன்கு பகடி செய்கிறது .

 

 “ அதிகாரம்”என்ற முதல் கதை பெண் பஞ்சாயத்து தலைவி ” ஆதிக்க சக்திகளிடம்” மல்லுக்கட்டும் அவலம் சித்தரிக்கப்பட்டுள்ளது . “ ஏம்மா இத்தன பொம்பிளைக இருக்கீங்க ஒரு காப்பி டீ போட்டுக் கொடுக்க முடியாதா ?” ,என நாட்டாமை மாணிக்க வாசகம் சொல்வதும் ; “ ஆமாங்ணா .. அடுத்த தடவ நம்ம கவுன்சலர் எல்லமாவ அரலிட்டர் பாலும் அவியவூட்டு எருமயக் கறந்து கொண்டாறச் சொல்லிறலாம் . கவுன்சிலருக்கு கவுன்சிலரும் ஆச்சு காப்பிக்கும் காப்பியியும் ஆச்சு”என்றார் [பஞ்சாயத்து பிரசிடெண்ட்] தெய்வநாயகி . அனைவரும் சிரித்தார்கள். தெய்வநாயகியும் எல்லம்மாவும் சிரிக்கவில்லை.

 

 “..பலவந்தம் பண்ணுறவன் கொழுத்த சாதிக்காரனா இருந்தா செத்தவ அக்கா தங்கசின்னாலும் அமிக்கீட்டு இருப்பீங்க .. எளச்ச சாதிக்காரன் மறுவாதியா தாலிகட்டி குடுத்தனம் பண்ணுனாக் கூட இவனுக மானக்கூதியில மயிறு எந்திரிச்சுக்கும்…” என  “காட்ட வித்துக் கள்ளக் குடிச்சவன்” கதையில் விழும் நெற்றியடி,” அங்காளி பங்காளி” கதையில் வேறொரு வகையில் வெளிப்பட்டிருக்கும்  

 

ஒரு டாக்டராயினும் தன் விருப்பம் போல் செயல்பட முடியாத குடும்ப நிர்ப்பந்தம்  தற்கொலையில் முடிந்த பெண்ணின் கதையைச் சொல்லும் “ கோழைத்தனமும்” கதையாயினும் சரி ; தன் கர்ப்பத்துக்கு காரணம் குடும்பத்துக்கு உள்ளேயே இருப்பதை சொல்லாமலே கருக்கலைப்பில் செத்துப்போன “ மல்லி” கதையாகட்டும் குடும்பம் செய்த கொலைகள் தானே !

 

சுப்பாராவ் எழுதிய “ தாத்தாவின் டைரி” எப்படி ஆணாதிக்க கண்காணிப்பாக இருந்ததைச் கன்னத்தில் அடித்துச் சொல்லும் ; அதன் பிறகு இத்தொகுப்பிலுள்ள  “டைரி” எனும் தலைப்புக் கதை எப்படி குடும்பமும் வயதுக்கு வந்த பெண்ணை சந்தேகத்துடன் கண்காணிப்பதை படீரென அறைந்து சொல்கிறது . “ டைரி எழுதறது நல்ல பழக்கம்டா .. நீயும் எழுது” என்றார் அப்பா ./ “ என்ன எழுதறது ?” செல்வி கேள்வி. / “  தினமும் நடக்குறத எழுது ,பள்ளிக்கூடத்தில நடந்தது, என்ன பாத்தே ,எங்க போனே ,அப்படி என்ன வேணும்னாலும் எழுது” அப்பா சொன்னார் . கதையின் இறுதியில் “ அம்மா விசுக்கென்று திரும்பினாள்./அவள் கையில் டைரி இருந்தது .” …..செல்வி அன்றிலிருந்து டைரி எழுதவில்லை. ”நம்பிக்கை” கதையும் இதே செய்தி வேறு சூழலில் வேறுமாதிரி . “ தன் மேல் நம்பிக்கையுமில்லை.ஒன்றுமில்லை .எப்போதும் சந்தேகத்துடன் வேவு பார்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள் …” / “ நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பதுபோல் நடித்தால் போதுமானது .என்ன அந்த நாடகத்தை எல்லோரும் பார்க்கும்படி பெரிதாக நடத்த வேண்டும்…” இந்த வரிகள் சமூகத்தில் பெண் மீது குடும்பமும் ,குடும்பத்தின் மீது பெண்ணும் கொண்டுள்ள அவநம்பிக்கையின் வெளிப்பாடுகள். அதுதான் இன்றைய சமூக யதார்த்தம் .  ஆம். மேலைநாடுகள் போல நம் சமூக திறந்த சமூகம் [open society ]அல்ல இருண்மை [hypocrite society] சமூகம் .எப்போது இதிலிருந்து வெளியேறப் போகிறோம் ?

 

 “ தியாகம் “ என்ற கதை இந்தியன் கிரேட் கிச்சன் படம் போல் அடுக்களைக்குள் அடைப்பட்ட வாழ்வின் வலியை பெருமிதமாகக் கொண்டாடும் தேசத்தில் அதன் மீதான மெல்லிய எதிர்வினை .

 

 “ பஞ்சாயத்து டி வி” “ பந்தம்” இரண்டு கதைகளும் சாதியம் எப்படி இண்டு இடுக்கெல்லாம் சிலுப்பிக்கிட்டு நிற்கிறது என்பதை போட்டுடுறைக்கிறது . எம்ஜிஆர் இறுதி ஊர்வலத்தை டிவியில் பார்க்க பந்தலுக்கடியில் உட்கார வைக்கப்பட்டவர்களுக்கு காப்பி போல ஒன்றை சட்டியைக் கழுவி கொதிக்கவைத்து ... சிரட்டைகளை எடுத்துவர செய்த போது …  பண்பாட்டின் மீது சாதியம் எச்சில் உமிழ்ந்தது “ பஞ்சாயத்து டிவி” .

அன்பை நேசத்தை புரிந்து கொள்ள முடியாத , “ அதென்ன பொழுதண்ணிக்கும் நாசுவமூட்டுக்கு போற ..” என்ற சுடு சொல் , பள்ளியிலும் சாதிக்கொரு அணுகுமுறை ,பந்தம் பிடிக்க மட்டும் வரணும் இந்த அசிங்கம் பிடித்த பண்பாட்டை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் மனச்சாட்சி அற்ற சமூகம் இது .உடைத்துக் காட்டும் “ பந்தம் “ .

 

 “தண்ணீர் பைப்” கதையும் சாதியத்தைத்தான் பேசியது .சாதி தெரியாத போது கிடைத்த மரியாதை  “ இது செம்பாம் மையன்” என்ற ஒற்றை வார்த்தையில் நொறுங்கிப் போனதையும் ; “அடுத்த நாளில் இருந்து டீக்கடைக்காரரும் வேறு டம்ளரில் டீ கொடுக்க ஆரம்பித்திருந்தார்.” என முடிகிற வரிகள் பெரும் உறுதலான சாதியத்தை காட்டி நின்றது.

 

 “உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு ” என்கிற பழமொழி எப்படி பெண்ணின் வயிற்றிலடிப்பதை பெருமையாகச் சொல்லுகிற பழமொழியானதைப் போல் ; வாழ்வின் யதார்த்தத்தில் பெண்ணிற்கு உணவைக் குறைத்து சாப்பிடப் பழக்கும் கொடுமையை பேசுகிறது  “பிள்ளைக்கறி” கதை. “அவளுக்கு வேறு போக்கிடம் இல்லை ; அவள் அம்மாவைப் போல.” என்ற கடைசி வரி ஹைகூ போல கதைக்கே புதுப் பார்வையைக் கொடுத்துவிட்டது.தூக்கத்திற்கும் விளையாட்டுக்கும் தினம் தினம் பெண்பிள்ளைகள் கெஞ்சும் அவலத்தை விவரிக்கிறது .

 

 “ ஏன் சார் ! பசங்க ஆஸ்ட்ல்ல தினமும் தான் குடிக்கிறாங்க … எத்தனை பேரை வீட்டுலேயிருந்து கூட்டிட்டு வரச் சொல்லியிருக்கோம் ?” என விஜி மேடம் தன்மையாகக் கேட்டதும் ; இந்த என்கொயரியே பெண்கள் ஆஸ்ட்ல் என்பதால்தான் நடந்திருக்கிறது என்றும் அவருக்கு விளங்கியது . ” பெண்கள் விடுதி” ஒரு அதிரடிக் கதை .ஆம்.  நல்லதோ கெட்டதோ அதை பாலின பாரபட்சமின்றி சமூகம் அணுக வேண்டுமல்லவா ?

 

எப்போதும் ஏழைகளுக்கு கொடுப்பதை இலவசம் என நக்கலும் நையாண்டியும் செய்யும் மேட்டுக்குடித்தனத்தவருக்கு குத்தூசியாய்  சத்துணவில் முட்டையையும்  டிவியையும் காட்சிப் படுத்தப்படும் “ பாவாடை” “பஞ்சாயத்து டிவி” கதைகள் சமூகநீதியின் தேவையைச் சொல்லும் .

 

“ பேச வேண்டிய கதைகளைப் பேசவேண்டியவர்கள் பேசும்போது அது பெரிதும் நம்பகத் தன்மை கொண்டதாக பெருமதி பெறுகிறது.அந்த வகையில் இந்தத் தொகுப்பில் அத்தனை கதைகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.” என்கிற சல்மாவின் கருத்தோடு உடன்படுகிறேன்.

 

 “ ஆனாதிக்க மனோபாவமும் சாதியப் பெருமையும் எப்படி கரங்கோர்த்துச் செயல்படுகின்றன என்பதை துளியும் பிரச்சார வாடை இல்லாமல் வெகு இயல்பாக கலை அமைதியோடு பேசுகின்றன .” என்கிறார் தமிழ்ச்செல்வன் .

 

பகடி ,கேலிச்சிரிப்பு ,கோபவீச்சு இவற்றோடு உரக்கப் பேசுவதே இக்கதைகளின் தனிச் சிறப்பு என்கிறேன் நான் . துர்நாற்றத்தை மணக்க மணக்க எப்படி எழுத முடியும் ? புழுக்கத்தை அமைதியாக எப்படி கடக்க முடியும் ? வெடிப்புற பேசத்தான் வேண்டும்.

 

சாதியமும் ஆணாதிக்கமும் புதிய புதிய வேடம் தரித்து , புதிய புதிய சொல்லாடல்களுடன் தொடர்கிறது . மெல்லிய மயிலிறகால் வருடி ஓட்ட முடியா பெரும் தீங்கு அது !

 

அருள்மொழி ! இன்னும் கூர்மையாய், இன்னும் ஆழமாய், இன்னும் வீச்சாய் இன்னும் இன்னும் சிறுகதைகளைத் தாருங்கள் !

 

எல்லோரும் வாசிப்பீர் !

 

டைரி ,[சிறிகதைகள்] ஆசிரியர் : அருள்மொழி ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,

தொடர்புக்கு : 044 / 24332924/24332424/24330024/

bharathiputhakalayam@gmail.com , www.thamizhbooks.com

பக்கங்கள் :208  , விலை : ரூ.200/

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

8/3/2023.

 


என்னோட காமாட்சி ஆச்சி !!!

Posted by அகத்தீ Labels:

 


 

[ 2018 மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தில் எழுதியது ;               மீள் பதிவாய் பதிவிடல் சரிதானே…]

 

என்னோட காமாட்சி ஆச்சி !!!

 

 

இன்று [ மார்ச் 8 ] சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் ; யாரெனும் ஒரு பெண்ணியப் போராளியை எழுதலாம்தான் . ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் பெண்ணியப் போராளிகள் இருப்பார்கள் . நாம் அவருக்கு வாயாடி ,பஜாரி ,அடங்காப்பிடாரி என பல பட்டங்கள் கொடுத்து திரைபோட்டிருப்போம் .

 

 

என் ஆச்சி . அதாவது அப்பாவின் அம்மா காமாட்சி அம்மாள் எனும் பெண்ணியப் போராளியை ; அதாவது மேலே சுட்டிய பட்டங்கள் வாங்கிய ஒரு பெண்ணை அறிமுகம் செய்யப் போகிறேன் .

 

என் காமாட்சி ஆட்சி சுமார் ஆறடி உயரம் இருப்பார் .திடகாத்திரமான உடம்பு . சிகப்பு நிறம் .பேரழகி . ஒரு வேளை அன்று அழகிப் போட்டி நடந்திருந்தால் ஐஸ்வர்யா என் பாட்டியிடம் தோற்றிருப்பார்.

 

என் ஆச்சிக்கு திருமணம் ஆகும் போது வயது பதினாறு . தாத்தாவுக்கு வயது அறுபது . தேவாங்கு உடம்பு .நாலரை அடி உயரம் . என் தாத்தாவுக்கு அது நான்காவது கல்யாணம் . அதன் பிறகு இரண்டு ஆசை நாயகி வேறு .அதை பிறகு பார்ப்போம் .

 

கோவில் தர்மகர்த்தா என்பதால் கோவிலுக்கு சொத்து இருக்கும் இடமெல்லாம் இப்படி மனைவியோ / ஆசை நாயகியோ அவருக்கு . பெண்களின் விருப்பத்தை யார் கேட்டனர் ; எல்லாம் பணம் முடிவு செய்தது .

 

என் ஆச்சிக்கு இரண்டு மகன்கள் பிறந்தபின் அவர் வேறு ஆசைநாயகி பக்கம் போய்விட்டார் . அவர் எங்கு இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது.

 

ஆச்சிக்கு கிடைத்த கொஞ்சம் வயலும் ஒரு வீடும் அவரது அழகும் அவருக்கு பகையாளியை அதிகப்படுத்தின .அதிலும் உறவினர்கள் கழுகாய் வட்டமிட்டனர் .

 

என் ஆச்சி ஜாக்கெட் அணிந்து பார்த்ததில்லை . வெள்ளைப் புடவைத் தூக்கிச் சொருகியபடியே இருப்பார் . பாம்படம் அணிந்த காது . கழுத்தில் எப்போதும் ஒற்றைச் சங்கிலி அணிந்திருப்பார் .திருநீறு பூசிப் பார்த்ததே இல்லை .

 

தூங்கும் போதும் ; வயலுக்கு ஆற்றுக்கு போகும் போதும் வீச்சரிவாள் கூடவே இருக்கும் ; யாராவது வாயைத் திறந்தால் அவ்வளவுதான் காதுகூசும் வசவுகளால் துளைத்து எடுத்துவிடுவார் . என் ஆச்சி வாயைத் திறந்தால் எல்லோரும் காதை மூடிக்கொண்டு ஓட்டம் பிடிப்பர் .

 

என் ஆச்சி கோவிலுக்கு போகமாட்டார் ,சாமி கும்பிடமாட்டார் . சடங்கு ,சம்பிரதாயம் எதையும் மதிக்கமாட்டார் .அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது .பகுத்தறிவு ,நாத்திகம் எல்லாம் அறியமாட்டார் .தன் கணவரின் மீதான கோபம் . “ கொட்டை , பட்டை போடுற எல்லா பயலும் அயோக்கியன் ,” என்ற அனுபவத் தீர்மானம் .அடிக்கடி அதை சொல்லவும் செய்வார் ,

 

தனது சாதியோடு நெருங்கமாட்டார் .இயல்பாக வீடும் கடைக்கோடியில் இருந்தது .நாவிதர் ,வண்ணார் ,தாழ்த்தப்பட்டோர் வீடுகள் அடுத்தடுத்து ; அவர்களோடு மிக நெருக்கம் .அவர்கள் வீட்டில் சாப்பிடுவது ;தன் வீட்டில் அவர்களுக்கு சாப்பாடு போடுவது என இயல்பான சமூகசீர்திருத்தம் செய்தவர் . அது அவருக்கு பெரும் பாதுகாப்பு வளையமும் ஆனது .

 

 

அவர் ஆற்றுக்கு போகும் போது ஒரு இடுப்பில் நானோ என் அண்ணனோ இருக்க இருக்க இன்னொரு இடுப்பில் அவர்கள் [பிற சாதியினர்] வீட்டு பிள்ளைகளை இடுக்கிக் கொள்வார் .இதன் காரணமாக சாதி சொல்லி என் அம்மாவுக்கும் அவருக்கும் சண்டைகூட வரும் .அப்போதும் ஆச்சி மிரட்டிவிடுவார் .

 

 

அவ பொம்பளையா ? போக்கிரி பஜாரி !” என ஊரும் உறவும் வசை பாடும் .[என் அம்மா உட்பட]

 

ஆனால் அவரின் துணிச்சலும் கம்பீரமும் போர்க்குணமுமே அவரையும் அவரின் கண்ணியமான வாழ்வையும் அவர் சொத்தையும் காக்க உதவின . பிள்ளைகளை வளர்க்க உதவின . வயலைக்கூட குத்தகைக்கு விடாமல் அவரே பயிர் செய்தார் .உழைப்பாளிகள் இவரின் உற்ற துணையாய் இருந்தனர் ; சொந்த சாதியினரோ வன்மம் காட்டினர் .

 

நான் கட்சிக்கு வந்த பின்னரே என் அம்மா சாதியைப் பார்க்காமல் எல்லோரும் பழக ;இரண்டறக் கலக்க பழகினார் .

 

என் ஆச்சியைப் பற்றி எதிர்மறை பிம்பத்தையே என் அம்மாவும் அம்மாவழி ஆச்சியும் ஏற்படுத்தியிருந்தனர் . குமரி மாவட்டத்தில் அம்மாவழி வீட்டில்தான் குடியிருக்கும் வழக்கம் இருந்ததால் அப்பா வழி ஆச்சி மீது ஆசை இருப்பினும் ,லீவு நாட்களில் போனாலும் அம்மா வழி ஆச்சி சொன்னதே படிந்தது .

 

கொஞ்சம் வளர்ந்த பிறகு பழைய செய்திகளை விவரமாக அறிந்த பின்னர் காமாட்சி ஆட்சி பெண்ணியப் போராளியாய் என் மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்துவிட்டார் . என் அம்மாவும் பின்னாளில் இதனை உணர்ந்து உறுதி செய்தார் . என் அம்மாவிடம் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன . மாதர் சங்க நிகழ்வுகளில் பங்கேற்கும் அளவுக்கு முன்னேறினார் . ஆனால் என் ஆச்சி நிச்சயம் ஒரு இயல்பான பெண்ணியப் போராளியே !

 

ஒவ்வொரு வீட்டிலும் இப்படி வசை மொழி வாங்குவோரை , பேய் பிடித்தோரை ,சாமி வருவோரை அலசிப் பாருங்கள் ஒரு பெண்ணியப் போராளியின் கண்ணீர்க் கதை அதற்குள்ளிருக்கும் .

 

பெண்ணியம் மேற்கிலிருந்து வந்ததோ அந்நியக் கருத்தோ அல்ல ; ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சாம்பல் பூத்த நெருப்பாய் கனந்து கொண்டிருப்பதாகும் .

 

உற்று அறிவீர் ! உரக்கப் பேசுவீர் ! இதுவே என் பெண்கள் தினச் செய்தி !

 

[ எவ்வளவு முற்போக்கு ,புரட்சி பேசினும் ஆணாதிக்க உணர்வின் மிச்ச சொச்சம் பேச்சிலும் நடைமுறையிலும் இருக்கத்தான் செய்யும் ; நானும் விதிவிலக்கல்ல . நீங்களும் விதிவிலக்கல்ல .ஆயினும் பாலின சமத்துவத்துக்கான போராட்டம் உள்ளுக்குள்ளும் வெளியும் சமரசமின்றி தொடர்வதன்றி வேறுவழி ?}

 

- சு.பொ.அகத்தியலிங்கம் .

6/3/2023.

 

[ போட்டோ பிடித்தால் ஆயுசு குறைந்துவிடும் என்கிற மூடநம்பிக்கையால் என் ஆட்சியின் புகைப்படம் ஒன்றுகூட இல்லை .]