”அறம்”
, ”ஒழுக்கம்” ,” பழக்கம்”, வழக்கம்”:
எதுவெனக்
கேட்பின்…
சு.பொ.அகத்தியலிங்கம்.
அறம்
, ஒழுக்கம் ,பழக்கம் ,வழக்கம் போன்ற சொற்கள் நம்
வாழ்க்கை நெடுக ஏதோ ஒரு வகையில் நம்மில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவை குறித்து
கேள்வி கேட்பவரை சமூகம் எதிர்மறையாகவேப் பார்க்கிறது.
ஒவ்வொரு சொல்லும் பொருள் உடைத்தனவே ; அதன் பொருள் யாது என்பது குறித்த பதவுரை ,பொழிப்புரை ,விளக்கம் , வியாக்கியானம் என
உரையாசிரியர்கள் ஆளுக்கொரு பக்கம் இழுத்துச் செல்வார்கள் .காலம் ,இடம் சார்ந்து சொல்லின் பொருளும் மாறுபடும். ’மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்றே
வள்ளுவரும் சொல்லிச் சென்றிருக்கிறார் . ஆயினும் மெய்ப்பொருள் யாது என்பதுதான் மிகப்பெரிய கேள்வி .
அதே
நேரம் இவை காலந்தோறும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது என்ற உண்மையை சமூக பொதுபுத்தி வசதியாக மறந்துவிடுகிறது. இவற்றில் எது சரி, எது பிழை ,எது தேவை, எது சுமை, எது தடை , எது வழி என்றெல்லாம்
பகுத்துப் பார்க்க நாம்
முனைவதில்லை. அப்படி முயற்சி செய்வது தப்பு என்று கூட நம்மில் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். எனினும் இவைகளைக் கேள்விக்குள்ளாக்கி எதிர்த்துத்தான்
சமூக சீர்திருத்த முயற்சிகள்
வினையாற்றியுள்ளன. சமூகத்தை மாற்ற விழைகிற யாரும் இவை குறித்து அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வது தவிர்க்க முடியாதது, தவிர்க்கக் கூடாது.
‘ அறனெனப்
பட்டதே இல்வாழ்க்கை’ என்று
சொன்ன வள்ளுவர் ’அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று’ என முடித்துவிடுகிறார் . இங்கு
சொல்லப்படும் அறம் எது ? பிறன் பழிக்கா வாழ்க்கை எங்ஙனம் ? கேள்வி எழுகிறது . ‘ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை’ என
அமைந்தால் அதுவே வாழ்வின் ‘பண்பும் பயனும்’ என்கிறார் .அது சரி ? எது அறம் ? ‘ மனத்துக்கண் மாசிலன் ஆதல் ‘ , உள்ளத்தில் களங்கம் இல்லாதவனாக இருத்தல் ; அவ்வளவுதான் அறம் . அந்த அறத்தை ’ஒல்லும் வகையெல்லாம் ’ முடிந்த வழியில் எல்லாம் செய்க என்கிறார் . இப்படி வளைத்து வளைத்து வள்ளுவர் சொல்லும் அறம் எது ? மொத்தமாகக் குறள் வழி நடப்பது எனக் கொள்ளலாமா ? அப்படியாயின் எல்லா குறளும் இன்றைக்கும் அப்படியே பொருந்துமா ? உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறளுக்கும் மாறுபட்ட கோணங்களில் விளக்கம் தந்தது கொண்டே இருக்கின்றனரே ! அறத்துப் பாலில் அமைந்துள்ள
380 குறள்களில் சொல்லப்பட்ட அனைத்தையும் அறம் என இன்றைக்கு அப்படியே
வரித்துக் கொள்ள இயலுமா ? புலால்
மறுத்தலை பொது விதியாக்க முடியுமா ? ’ஆகு ஊழ்’
[ அதிர்ஷ்டம்] , ’போகு ஊழ்’
[துரதிர்ஷ்டம் ] இரண்டையும் இன்றைக்கு அப்படியே கொள்ளவோ தள்ளவோ முடியுமா ? ‘ஊழில் பெருவலி யாவுள’ என ஊழ்வலியைக் காட்டி
மிரட்டியவனும் , ‘முயற்சி
திருவினையாக்கும் ‘ ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’ என்றெல்லாம்
நம்பிக்கை ஊட்டியவனும் வள்ளுவனே ! இதில் எதை அறமெனக் கொள்வது ?சுருக்கிச் சொல்வதாயின் வள்ளுவன் சொன்ன அறமும் இன்று பேசப்படும் அறமும் ஒன்றா ? எது
எது இன்றைக்கு மாறிய சூழலுக்கு
அப்படியே பொருந்தும் , எது எது பொருந்தாது என மீளாய்தல் பிழையாகுமோ
? பேசுவோம்.
’ஒழுக்கம்
’,’ஒழுக்கம்’ என
ஓயாது உபதேசிக்கப்படுகிறதே அந்த ஒழுக்கம் யாது? “ ஒழுக்கம் விழுப்பம் [ மேன்மை] தருவதால்”
அந்த “ ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் [ போற்றப்படும்]” சரி ! எது ஒழுக்கம் ? “ உலகத்தோடு
ஒட்ட ஒழுகல் “ அப்படியானால் ஊரே சாதி வெறியோடு தீப்பந்தம் ஏந்தும் போது நீயும் ஏந்த வேண்டுமா ? அப்படி ஒட்ட ஒழுகாவிடில் ,’பல கற்றும் கல்லார்
அறிவிலாதார் ” என
உன்னை முட்டாளாக்கிவிடலாமோ ? அப்படிப் பொருள் கொள்ள முடியாது . அதன் முன் குறளில் , ’தீய வழுக்கியும் வாயால் சொலல்’ என்கிறார் ; அதாவது தீயசொற்களை தன்
வாயால் தவறியும் சொல்லக்கூட
மாட்டார்களாம் ’ ஒழுக்க
முடையவர்கள்’ .அப்படிப்
பேசுவதைக்கூட தவிர்க்கும் ஒருவரிடம்
அப்படித் தீங்கு செய்யச் சொல்லுவாரா வள்ளுவர் ? கேள்வி கேள் ,அறிவியலாய் இயங்கு என்பதல்லவா உலகோடு ஒட்ட ஒழுகல் ; அறிவியல் கைக்கொளல் யாவரும் பழக வேண்டிய ஒன்றல்லவா ? எதை வள்ளுவர் சொன்னார் ? குழப்பமாக இருக்கிறதே ! வள்ளுவர்
காலத்து ஒழுக்கமும் இன்றைய ஒழுக்கமும் ஒன்றா ? ஒட்டு மொத்தத்தின் சாரமாகத்தானே வள்ளுவத்தையும் உள்வாங்க முடியும் ? வள்ளுவத்திலும் இன்றைக்குப் பொருந்தாக் கருத்துகள் அங்கொன்று இங்கொன்றாய் சில இருக்கத்தான் செய்கிறது . அது வள்ளுவன் குற்றமன்று ; காலத்தின் வளர்ச்சி ; தேவை . ஆகவே ’மிகை
நாடி மிக்க கொள்ளும்’
போது வள்ளுவம் வாழ்நெறி ஆகிறது .
ஆக
, வள்ளுவத்தை விசாரிப்பதல்ல இங்கு எம் நோக்கம் ; தமிழர் வாழ்க்கையை விசாரிக்கப் புகின் வள்ளுவத்தை தவிர்த்து பேச இயலுமா ? இயலாது .அந்த வள்ளுவம் குறித்தே அறிவியல் ஒளியில் மறு ஆய்வு செய்யத் தயங்காத பகுத்தறிவு சமூகம் ’சனாதனம்’ குறித்து
மவுனம் காக்க முடியுமா ?’சனாதனம்
’ மாறாதது என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் ? மனிதத்தை மறுதலிக்கிற ; வர்ண அமைப்பையும் சாதிப் படிக்கட்டுகளையும் அப்படியே பாதுகாக்கும் ; பாலின சமத்துவத்தில் நேர் எதிரான அணுகுமுறை கொண்ட, சனாதனத்தை இன்றைய ஒழுக்கமாய் ஏற்க முடியுமோ? கொஞ்சமேனும் யோசிக்கும் திறனுடை யாரேனும் ஏற்பரோ ?
’கண்ணுக்கு
கண் பல்லுக்கு பல்’ என்பது பழைய ஏற்பாடு; ’ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்பது புதிய ஏற்பாடு. ’விசுவாசிக்கிறவன் சொர்க்கத்திற்குச் செல்வான்’
என்கிறது பைபிள். ‘சந்தேகிக்கிறவன்
அழிவான்’ என்கிறது
இந்து சாத்திரங்கள். ஆனால் ’எல்லாவற்றையும் சந்தேகி’க்கச் சொன்னார் மாமேதை தோழர் மார்க்ஸ். எல்லாவற்றையும் கேள்வி கேட்கச் சொல்கிறது நவீன
அறிவியல். ‘கேள்வி
கேட்பவன் அந்த நிமிடம் மட்டுமே முட்டாளாக இருக்கிறான்; ஆனால் , கேள்விகேட்காதவன் வாழ்நாள் முழுவதும் முட்டாளாக இருக்கிறான்’ என்பது
சீனப்பழமொழி. ‘துஷ்டனைக்
கண்டால் தூரவிலகிப்போ ’என்பது பழமொழி. ‘பாதகம்
செய்வாரைக் கண்டால் மோதி மிதி’ என்பது பாரதி மொழி. ‘ஙப்போல்
வளை’
என்பது ஔவையாரின் ஆத்திச்சூடி’. ‘குன்றென நிமிர்ந்து நில்’ என்பது பாரதியின் ஆத்திச்சூடி.
‘தையல்
சொல் கேளேல்’ என்றார் ஔவை. ஆனால் பாலின சமத்துவத்திற்கு எதிரான இச்சொல்லை இன்று ஏற்க முடியுமா? ’முறுக்கி வளர்க்காத மீசையும் முறித்து வளர்க்காத முருங்கையும் அடித்து வளர்க்காத பிள்ளையும் உருப்பட மாட்டா’ என்பது சொலவடை. ஆனால் பிள்ளைகளை அடித்து இம்சை செய்வதை நவீன சிந்தனை ஏற்குமா?
மனித உரிமை ஆகுமா ? ஆக, நம் சிந்தனையில் செயலில் வாழ்க்கையில் பல மாறுதல்கள் வந்து
கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து மாறும். ஆயினும் அறம் , ஒழுக்கம் ,பழக்கம்
,வழக்கம் என பொத்தாம் பொதுவாகப்
பேசுவதும் எழுதுவதும்
தவறான கருத்தோட்டங்களை தொடர்ந்து நியாப்படுத்துவதும் சரியாமோ !
’புலால்
மறுப்பு’ எனத்
திருக்குறளில் ஒரு அத்தியாயமே உண்டு. புலால்
பழக்கம் நல்லதா
கெட்டதா? இது மதம் சார்ந்தும் சாதி சார்ந்தும் ஒரு விதமான கெட்டித்தட்டிப்போன கருத்தோட்டமாக உள்ளது. சைவம், அசைவம் என உணவு பழக்கத்தை
சமயம் சார்ந்து இருகூறாக வைத்துள்ளனர். அது எப்படி சரியாக இருக்க முடியும் ? ஆதி மனிதன் பச்சைக் கறியைத்தான் சாப்பிட்டான். நெருப்பில் சுட்டுச்சாப்பிடுவதற்கு பல ஆயிரம் வருடங்கள்
காத்திருந்தான். பச்சைக் காய்கறிகளைத் தான் சாப்பிட்டான். வேக வைத்து சாப்பிட அறிந்ததே வெகுகாலத்திற்குப் பின்னர்தான். மசாலாவின் சுவையை அறிந்தது
சில ஆயிரம் ஆண்டுகள் முன் தான். இதை இதைச் சாப்பிடலாம் இதை இதை சாப்பிடக் கூடாது என அந்தந்தப் புவிச்
சூழலில் முடிவு செய்ய ; எவ்வளவு காலம் பலதை சோதித்து சோதித்து தன்
சக மானுட உயிர்கள் பலவற்றை இழந்து இழந்து முடிவுக்கு வந்திருப்பான். புலாலுக்கு மட்டுமல்ல , தாவர உணவுக்கும் அது பொருந்தும் . தாவர உணவு போல் புலால்
சாப்பிடுவதும் அதாவது மாமிசம் சாப்பிடுவதும் மனிதனின் இயல்பே. ’புலால்
மறுப்பு’தான்
அதற்கு மாறானது. சைவம் அசைவம் என்ற சொல்லாடலே தவறு. அச்சொல்லே
சமயம் சார்ந்த சொல்லே தவிர வேறல்ல .’புலால் உண்போர்’
,’ புலால் மறுப்போர்’
என்றோ – ’புலால் பழக்கம்’
, ’மரக்கறி உணவு பழக்கம்’ என்றோதான் சொல்ல வேண்டும். புலால்
வேண்டுமா வேண்டாமா என்பதை சமயமோ சாதியோ எதோ
பண்பாட்டு போலிஸ் கெடுபிடியோ முடிவு செய்யக்கூடாது ; அவரவர்
சுயவிருப்பமும் உடல் நலனும் சார்ந்து அவரவருக்கு எது தேவை என்பதை அவரவர் வாழ்வியல் சார்ந்து முடிவு
செய்வது தான் அறிவியல் பூர்வமான பழக்கமாகும். இதற்கு மாறான எல்லாம் சமூக அராஜகமே. ஏற்க இயலாததே .
பழக்கம்
என்பதை எடுத்து கொள்வோம். எங்கள் ஊர்ப்பழக்கம், அல்லது எங்கள் சாதிப்பழக்கம் என்கிற பெயரால் பிறப்பின்
போதும் அல்லது மரணத்தின்
போதும் வாழ்க்கை
நெடுகிலும் பல சடங்குகள் தீர்மானிக்கப்படுகின்றன.
அவை அறிவியல் பூர்வமாக இன்றைக்குப்
பொருந்துமா என்று நாம் யோசித்துப் பார்ப்பதில்லை. உதாரணமாக பெண் பூப்படைவதை ஒட்டி செய்யப்படுகிற சடங்குகளும் அதைத் தொடர்ந்து
அந்தப் பெண்ணுக்குச் சொல்லப்படுகிற அறிவுரைகளும் பெண் அடிமைத்தனத்தின்
வெளிப்பாடுகளாகவே இன்றும் உள்ளன. ஆனாலும் அதை எந்த கேள்வியும் கேட்காமல் கடன்
வாங்கியாவது செய்கிற பழக்கம் தொடரத்தான் செய்கிறது.
பழக்கம்,
வழக்கம் இந்த இரண்டு சொல்லிற்கும் தெளிவான வரையறை செய்வது இயலாத காரியம். நடைமுறையில் இரண்டும் குழம்பியே இருக்கிறது. அக்கா மகளை திருமணம் செய்து கொள்வது எங்கள் குலவழக்கம்தான் என்று பல இடங்களில் நியாயப்படுத்தப்படுகிறது. மிக
நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்து கொள்வது பல உடல் சிக்கல்களை
உருவாக்கும். பிறக்கிற குழந்தை ஏதோ
ஒரு வகையில் ஊனமுற்றவர்களாக பிறக்க வாய்ப்பு அதிகம் என்கிறது மருத்துவ அறிவியல். ஆயினும் அத்தை மகள், அக்காள் மகள் இவர்களைத் திருமணம் செய்வது இன்னும் தொடரத்தான்
செய்கிறது.
அதே
சமயம் சில பிரிவினரிடையே சகோதர உறவில் திருமணம் செய்கிற பழக்கமும் உண்டு. இதில் எது சரி, எது தப்பு என்று மிகப் பெரிய விவாதம் சமூகத்தில் நடைபெறுகிறது. சகோதர முறையில் திருமணம் செய்வதை மிகவும் ஒழுக்ககேடாகக் கருதுகிற
விமர்சிக்கிற ஒரு கூட்டம் இருக்கிறது. உண்மையில்
அத்தை மகள் அல்லது சித்தி மகள் என்பதில் மிகப்பெரிய வேறுபாடு எல்லாம் அறிவியல் ரீதியாக இல்லை. அப்பா
,அம்மா இருவரின் சகோதரியோ சகோதரரோ ஒரே குடும்பத்தின் அங்கம்தானே ! இரண்டும் குடும்ப
மரத்தின் இருவேறு கிளைகளன்றி வேறென்ன?இரண்டு வழித் திருமணங்களும் அறிவியல் பூர்வமாக ஏற்கத்தக்கது அல்ல. தவிர்க்க வேண்டும் .
ஆக
பழக்கம், வழக்கம் என்ற பெயரால் உறவுமுறைக்குள் கெட்டியாக நின்று கொண்டு இப்படி திருமணம் செய்து கொள்வது மிகப்
பெரிய சமூக சவாலாக வருங்காலத்தில் உருவெடுக்கும்.குறிப்பாக அகமண உறவுமுறை இந்திய சமூகத்தில் வலுவாக இன்னும் நீடிப்பதும்; அதிலும் நெருங்கிய உறவுமுறைக்குள் திருமணங்கள் நடைபெறுவதும் வருங்காலத்தில் உடல்ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் அதிகரித்து விடும் என மரபியல் அறிஞர்கள்
எச்சரிக்கின்றனர். சாதியம் எனும் பெருநோய் கெட்டிப்பட அகமண முறை வேராகிறது . பழக்கம், வழக்கம், சம்பிரதாயம், சாஸ்திரம், சாதிப்பெருமை, மதப் பெருமிதம் என்கிற பெயரால் இந்த தவறான பழக்க வழக்கம் இன்னும் தொடரலாமோ ?
காதல்
நம் பண்பாட்டின் கூறு என்று பெருமை பேசிக் கொண்டே காதலர்களுக்கு கொள்ளிவைப்பது ஏன்? சாதி, மத, வெறியன்றி வேறு என்ன? காதல் திருமணம் என்பது
ஒழுக்ககேடு அல்ல. உயரிய பண்பாடு என்று உரக்கச் சொல்ல வேண்டாமா?
இதுபோல்
நாம் வாழ்க்கை நெடுக கருவறை தொடங்கி கல்லறை வரை எண்ணற்ற சடங்குகளும்
பழக்கங்களும், வழக்கங்களும் நம்கை பீடித்துள்ளன. அவை குறித்து ஓர் அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு நம் சமூகம் தயாராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஒழுக்கம்
குறித்து பேசாத மதங்களோ, நீதிநெறி இலக்கியங்களோ, சமூக சிந்தனையாளர்களோ இருக்கவே முடியாது. அதே சமயம் எது ஒழுக்கம் , எது ஒழுக்கமின்மை என்பது குறித்த பார்வையில் சமூகத்தில் குழப்பமும், பிற்போக்குத்தனமும், ஆதிக்க வெறியும், சாதியும், பெண்ணடிமைத்தனமும் கோலோச்சவே செய்கின்றன. பொய்சொல்லக்கூடாது, திருடக்கூடாது, குடிக்கக்கூடாது,
கொலைசெய்யக்கூடாது, ஏமாற்றக்கூடாது, வஞ்சகம் செய்யக்கூடாது, புறம்பேசக்கூடாது , பிறன் மனை விழையக்கூடாது , விபச்சாரம் கூடாது இது போன்ற பொதுவான கட்டளைகளை காலம் காலமாக கேட்டு வருகிறோம். இனியும் அவை தொடரும். இவற்றைப் பொதுவாக சொல்லுகிற போது நியாயமாக தோன்றுகிறது. ஆனால் கொஞ்சம் ஒவ்வொன்றாய்
அலசத்துவங்கினால் அது பெரும் விவாதப்பொருளாகிவிடுகிறது.
பொய்
சொல்லக்கூடாது என்பது சரியே. ஆனால் மத நூல்கள் சொல்வது
எல்லாம் பொய்தானே. சொர்க்கம், நரகம் என்பது பொய்தானே. கடவுள் என்பது பொய்தானே. பாவம் புண்ணியம் என்பது வெறும் கற்பிதம் தானே. பொய் சொல்லக்கூடாது என்று சொல்லி விட்டு மதநம்பிக்கையை கைவிடக்கூடாது என்று சொல்வது முரண்பாடானது அல்லவா?
திருடக்கூடாது
மிகச்சரி. நாகரிக சமூகத்தில் திருட்டு என்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. ஆனால் சொத்துடமையின் வேர்கள் எங்கே என்று அலசினால் அது பிறர்
சொத்தை – பிறர் உழைப்பை – பிறர் சேமிப்பைத் திருடியது என்கிற பேருண்மை பளிச்சிடும். இது சுரண்டலின் கூறாக உள்ளது. அப்படியானால் இந்த திருட்டை சொத்துடைமை எனக் கொண்டாடுவது சரியா ?எதிர்ப்பது சரியா ? பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே என இழப்பதற்கு
எதுவும் இல்லாத உழைப்பாளகளைப் பார்த்து ஒழுக்க உபதேசம் செய்பவர்கள்; சுரண்டலின் அடிப்படையே அடுத்தவருக்கு உரியதை அபகரிப்பது என்பதை உணர்வார்களா? அப்படியானால் இந்த சுரண்டலை எதிர்க்க வேண்டாமா?
கணவனுக்கு
அடங்கியவளாகவே மனைவி இருக்க வேண்டும் அதுவே பெண்ணுக்குரிய ஒழுக்கம் என்று இன்றும் நடைமுறையில் சமூக பொது புத்தியில் வலுவான கருத்து உள்ளது. ஆனால் இது பெண்ணடிமைத்தனத்தின் குரல் அல்லவா? ஒழுக்கம் என்பது மனைவிக்கு கணவன் அடங்குவதோ அல்லது கணவனுக்கு மனைவி அடங்குவதோ அல்ல இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு; குறை நிறைகளை அங்கீகரித்து – அவரவர் தனித்துவத்தை ஏற்று - விட்டுக் கொடுத்தும் இணைந்தும் வாழ்வதே
ஆகும். ஆனால் எந்த ஒழுக்க உபதேசிகளும் இதனை வலியுறுத்துவதில்லையே ஏன்?
தீண்டாமை
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லையே ஆனால் இந்தியாவில் மட்டும் இந்த பழக்கம் ஏன்? அது மட்டுமல்ல சாதிய ரீதியாக ஒழுக்கக் கோட்பாடுகள் திணிக்கப்படுவது ஏன். உதாரணமாக பிராமணர்கள் பூணுல் அணிகிறார்கள். அவர்கள் இருபிறப்பாளர்கள் என்று வியாக்கியானம் செய்யப்படுகிறது. ஆனால்
பிராமணப் பெண்கள் ஏன் பூணுல் அணிவதில்லை? மற்ற சாதிகளுக்குப் பூணுல் அணியும் உரிமை ஏன் இல்லை? திருமணத்தின் போது மணமகனுக்குப் பூணுல் அணிவித்து திருமணம் செய்யப்படுகிறது. இதன் பொருள் என்ன? சூத்திரர்களுக்குத் திருமணம் செய்ய மநு உரிமை வழங்கவில்லை , எனவே பூணுல் அணிவித்து அந்த கொஞ்ச நேரம் மட்டும் அவனை பிராமணன் ஆக்கித் திருமணம் செய்வதும் , முடிந்ததும் பழையபடி சூத்திரனாக்குவதும் தொடர்கிறது. ஆனால் கேள்வி எழுப்பாமலே இந்தப் பழக்க வழக்கத்திற்கு பணிந்து போகிறார்கள். ஆனால் இதை மீறி பதிவுத்
திருமணமோ, சுயமரியாதைத் திருமணமோ செய்பவரை ஒழுக்கம் குறைந்தவராகவோ அல்லது வித்தியாசமான பிறவியாகவோ பார்க்கிற போக்கே சமூகத்தில் இன்னும் தொடர்கிறது. இனியும் மநுவின் ஒழுக்க அநீதிகள் தொடரலாமா?
பொதுவாக
பழக்க வழக்கம் என்பது பண்பாட்டின் ஒரு கூறாகவும்; ஒழுக்கம் , அறம் என்பவை பண்பாட்டின் கருத்து நீரோட்டமாகவும் கருதப்படுகிறது. ஆனால் சமூகம்
அடிமைச் சமூகமாக இருக்கிற போது அடிமை எஜமானன் என்கிற சமூக பிரிவினையை நியாயப்படுத்தவே பழக்கம், வழக்கம், ஒழுக்கம் , அறம் அனைத்தும் பின்னப்பட்டன.
அந்த
சமூகம் நிலப்பிரபுத்துவ சமூகமாக மாறியபோது அதற்கொப்ப நிலப்பிரபு, பண்னையடிமை என்கிற சுரண்டலை நியாயப்படுத்த இவை வலுப்படுத்தப்பட்டன. அதற்கொப்ப தர்ம நியாயங்கள் வரையறுக்கப்பட்டன .மற்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவ சிந்தனை உற்பத்தி கருவி சார்ந்த உழைப்புப் பிரிவினை உருவானது - செயல்பட்டது. ஆனால் இந்தியாவில் அது சாதி என்கிற கொடூரமான பிரிவினையாய்
சமூகத்தை மேல்கிழாய் - படிநிலையாய் குதறிப்போட்டு விட்டது. அது இன்னும் தொடர்கிறது. முதலாளித்துவ
சமூகம் பிற நாடுகளில் பழக்கம், வழக்கம், ஒழுக்கம்
இவற்றில் காலத்திற்கு ஒப்ப பல மாறுதல்களை கொண்டு
வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் இந்திய சமூகத்தில் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தோடு கைகுலுக்கிக் கொண்டு பழைய ஏற்பாடுகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தொங்குவது தொடர்கிறது.
ஆகவே இந்திய சமூகத்தில் - தமிழ்ச்சமூகத்தில் நாம் இன்று பின்பற்றுகிற - உபதேசம் செய்கிற பழக்கம்,
வழக்கம், ஒழுக்கம் ,அறம் பெரும்பாலும்
நிலப்பிரபுத்துவ காலக்கட்டத்தைச் சார்ந்தவையே. அவை சாதியத்தை தூக்கிப்பிடிப்பவையே. பாலின சமத்துவத்துக்கு எதிரானவையே !நீதிநூல்கள் ஒழுக்க உபதேசங்கள் இவை அனைத்தும் இந்த அடித்தளத்தில் இயங்குபவையே. எனவே கண்மூடித்தனமாக இவற்றை
பின்பற்றுவது ஆபத்தானது. இவற்றையே அறமென அப்படியே மாற்றமின்றிக் கொண்டாடுவதும் ஏற்புடையது அல்ல.
இதன்
பொருள் பொய்சொல் என்பது அல்ல. திருடு என்பது அல்ல. பிறன்மனை விழை என்பது
அல்ல. மாறாக சமத்துவம், சகோதரத்துவம், தோழமை மிகுந்த; குடும்ப ஜனநாயகம் சார்ந்த புதிய பார்வை தேவை என்பது தான். எந்த ஒரு பழக்கம், வழக்கம், ஒழுக்கம் , அறம் எதுவாக ஆனாலும் அது சாதிய ஆதிக்கத்தை எதிர்க்கிறதா அல்லது மறைமுகமாகவோ, நேரடியாகவோ கெட்டிப்படுத்துகிறதா? என்ற அளவுகோலால் மதிப்பீடு செய்ய வேண்டும். அதேபோல பாலின சமத்துவத்திற்கு உகந்ததா எதிரானதா என்கிற தராசில் எடைபோட வேண்டும். மனித உரிமைகள் காக்கப்படுகிறதா மீறப்படுகிறதா என கணித்து பின்பற்ற
வேண்டும் .சாதி ஆதிக்கத்தை உடைக்க - பாலின அடிமைத்தனத்தை நொறுக்க நம்மிடம்
உள்ள பல பழக்க வழக்கங்களை
ஒழுக்க நியதிகளைத் தலைகீழாக மாற்றியாக
வேண்டும். இதை செய்கிற போது உன் மீது கலகக்காரன் அடங்காதவன் வில்லங்கமான பேர்வழி என சனாதன பேர்வழிகளும்
பழமை விரும்பிகளும் வசைமாரி பொழியலாம். அதனை
எதிர் கொண்டு தான் இந்த சமூகத்தை மாற்றத்துக்குப் போரிட முடியும்.
” அடி
! உடை ! நிர்மாணி”
என்றார் மார்க்ஸிம் கார்க்கி . தமிழ்ச் சமூகம் முதல் இரண்டில் காட்டிய அக்கறை போதுமான அளவு ‘நிர்மாணி’
என்பதில் காட்டவில்லை. அதன் காரணம் நிலபிரபுத்தவத்தோடு இருந்த பாசப்பிணைப்புதான் . சனாதனத்தை எதிர்க்க வெடித்துப் பேசும் பலர் , மூவேந்தர் ஆட்சியின் பொற்கால கனவு மயக்கத்தில் மூழ்கிவிடுகின்றனர் .இப்போக்கு மாறியாக வேண்டும். சனாதனமும் பழமைப் பித்தும் நம்மைவிட்டுத் தொலைய வேண்டும் .”அரசியல் நடத்துவதற்கு மட்டுமல்ல குடும்பம் நடத்தவும் அறிவியல் தேவை” என தன் வாழ்நாளெல்லாம்
பேசி ,எழுதி பாடுபட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரை மீண்டும் மீண்டும் தூக்கிப் பிடிப்பது மாற்றத்தின் தொடக்கமாகட்டும் . “ அறிவை
விரிவு செய் ! அகண்டமாக்கு ! விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை” என்ற புரட்சிக் கவி பாரதிதாசன் கட்டளை நம் வாழ் நெறியாகட்டும் !






0 comments :
Post a Comment