என் மகள்
பானு நவீன் கனடாவில் இருந்து அவ்வப்போது கவிதைகள் எழுதி அனுப்புவாள் . அகம் சார்ந்து
புறம் சார்ந்து சமூக கோபம் சார்ந்து பல கவிதைகள் தெறித்து விழும் . அவற்றை புத்தகமாக்க
வேண்டும் என்பது அவளது ஆர்வம் . அண்மையில்
ஒரு கவிதை அனுப்பி இருந்தாள் . இங்கு பகிர்கிறேன் .
சுபொஅ.
2/11/25.
அர்ப்பணிப்பின் அளவீடு
நேசத்தை சோதிப்பது போல்
அர்ப்பணிப்பைக்கூட அளவீடு கொண்டு அளக்கிறார்கள் ....
100 க்கும்
99 க்கும் இடையே குறைந்த இடைவெளி
என்று எண்ணியிருக்கையில்
10-ஐயும் 100-ஐயும் ஒரே சமகூட்டில் நிறுத்துகிறார்கள்..
கிள்ளியெடுக்கையில்
கணக்குச் சொல்ல முடியும்
அள்ளுவது
என்றான பின் எதைக் கொண்டு
அதை நிறுத்துவது
(அளவிடுவது)?
தூறுவதோ
பொழிவதோ
மேகத்தின்
முடிவு
விழும் அத்தனையும்
மீண்டும் வந்து சேராது
என்று மேகத்திற்கு
எப்போதோ தெரியும் ...
எறும்பும்
ஆமையும்
ஒன்றென கருதும் உங்களிடம்
வேகம் குறித்து
விவாதிப்பது வீண் .
பெயரிடப்பட்ட
அத்தனை தெய்வங்களுக்கு
பின்னும்
பெயர் தெரியா
சிற்பியும்,
உளியும் உண்டு ....
எல்லா அர்ப்பணிப்பின்
எதிர் வினையில்
ஏமாற்றமும்,
இகழ்ச்சியும் உண்டு
என்பது அறிவோம்
..
அறியாமல்
போனது
இதை பற்றிய
விளக்கங்களும், விவாதங்களும்
நிகழ்த்துவது
நம் நேசத்திரிக்குரியவர்கள் என்பது ....
பானு நவீன்
.
