’பஞ்சமா’ கோபால் ஸ்வாமி ஐயர்.

Posted by அகத்தீ Labels:

 



’பஞ்சமா’ கோபால் ஸ்வாமி ஐயர். 

 

இன்றைக்கு படிப்புக்கும் வாழ்க்கைக்கும் சம்மந்தமில்லை ; படிக்காமலே பெரும் செல்வந்தராகலாம் , பெரும் தொழிலதிபராகலாம் என பாண்டேக்களும் சங்கிகளும் EWS அரியவகை ஏழைகளும் உபதேசிக்கின்றனர் . அமைச்சர் பதவி கிடைத்ததும் பார்ப்பனர்களுக்கு உதவியாக ஒடோடி வருவேன் எனப் பேசும் சங்கி முருகன்களைப் பார்க்கிறோம் .ஆனால் அன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் படிப்பை உயர்த்திப் பிடித்த ஒரு ஐயரின் வாழ்க்கையும் வாக்குமூலமும் அறிவீரோ!

 

“ ‘ஈனர் குலத்திற்கு உழைத்தது அந்தணர் குலத்துக்கு அவமானம்’ என ஜாதியிலிருந்து ஒதுக்கப்பட்டார் .தன் சொந்த வீட்டிலேயே தீண்டப் படாதவனாகத் தூர இருக்கச் செய்து குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.தனியறையில் பிரித்து வைக்கப்பட்டார்.பஞ்சமர்களோடு ஒன்றிவிட்ட இவர் ‘ பஞ்சமா கோபால் ஸ்வாமி’  என்ற கேலிப் பெயரில் அறியப்பட்டார் .”

 

கோபால ஸ்வாமி ஐயர் குடும்பம் மிகவும் கெட்டியான வைதீக பார்ப்பனக் குடும்பம் .குடும்பத்தில்  நீதிபதிகள் ,உயரதிகாரிகள் அதிகம் . கோபால் ஸ்வாமி ஐயரும் நன்கு படித்தவர் . மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையாரின் நன்மதிப்பைப் பெற்று அவரின் பிரநிதிகள் சபையில் அங்கம் வகித்தவர் .

 

கோலார் தங்க வயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பெற தன் செல்வாக்கையும் தன் தன் பங்கான குடும்ப செல்வத்தை வாரி இறைத்தார்.காலம் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் பொதுத் தொண்டில் கழித்தார் .பெங்களூரில் பயிலும் தங்க வயல் [ KGF ] தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பிற விடுதிகளில் சாதிய ஆதிக்கம் காரணமாக இடம் மறுக்கப்பட்டபோது , கோபால் ஸ்வாமி ஐயர் மைசூர் ராஜாவிடம் வாதாடி ராஜா பெயரில் நரசிம்ம ஹாஸ்டல் துவங்கி தங்க வயல் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பயன் பெறச் செய்தார் . தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்கல்வி பெற ஆக்கமும் ஊக்கமும் அளித்து வழிகாட்டினார்.பல நிறுவனங்கள் ,கல்லூரிகள் எங்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களை அழைத்துச் சென்றும் , பல சான்றோர்களோடு உரையாட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தும் கல்வி பெறும் ஆர்வத்தை கொழுந்துவிட்டெரியச் செய்தார்.

 

ஆபத்தான சுரங்கத் தொழிலில் ஈடுப்பட்டிருக்கும் உழைப்பாளர் வீட்டுப் பிள்ளைகள் படிப்பால் முன்னேற வீடுவீடாகச் சென்று ஊக்கம் அளித்தார்.ஆங்கிலத்தில் திணறும் மாணவர்களுக்கு உடன் இருந்து பயிற்சி அளித்தார் .பட்டப் படிப்பு படித்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மேற்படிப்பை தொடர முடியாமல் போனாலும் உயர் பதவிகள் கிடைக்க தன் செல்வாக்கைப் பயன்படுத்தி உறுதுணையாய் இருந்தார் .நாத்திகரான தொழிற்சங்கத் தலைவர் முத்துகுமார் இவரை  “கற்றுக் கரையேற உதவிய கண்கண்ட தெய்வம்” என்கிறார் .

 

1941 ஆம் ஆண்டு சாகும் தருவாயில் தன்னைச் சுற்றி இருக்கும் மாணவர்களிடம் கடைசியாகச் சொன்னது என்னவெனில் ,

 

“ தாழ்த்தப்பட்டவர்கள் மனிதர்களாக வாழவேண்டுமானால் கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்தி கல்வியில் முன்னேற வேண்டும் .உங்கள் இன மக்களைக் கைவிட்டு விடாமல் எல்லோரும் கல்விபெற தொண்டு செய்யுங்கள்!”

 

இன்றைக்கு மேலே வந்துவிட்ட ஒடுக்கப்பட்டோர் பலர் தான் வந்த வழியை மறந்து தன்னை மநுதர்ம பார்ப்பனர் போல் கருதி மேல்நிலையாக்கிக் கொள்கிறார்களே என் செய்ய ?

 

[ கோபால் ஸ்வாமி குறித்த தகவல் ஆதாராம் :கோலார் தங்க வயல் வரலாறு , K.S.சீதாராமன்,M.A. ]

 

சுபொஅ.

14/6/24.

 


0 comments :

Post a Comment