எங்கெங்கும் போதை ராஜ்யம் ….

Posted by அகத்தீ Labels:

 


எங்கெங்கும் போதை ராஜ்யம் ….




நேற்று ஜூன் 26 ‘உலக போதை ஒழிப்பு தினம்’ உலகெங்கும் கடைப் பிடிக்கப்பட்டது .
1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய [தீர்மானம் எண் 42/112 / 7th டிசம்பர் 1987 ] தீர்மானத்தின் படி ” உலக போதை எதிர்ப்பு தினம் “ உலகெங்கும் கடைப் பிடிக்கப்படுகிறது .
பல்வேறு நாடுகள் கடும் சட்டங்கள் ,கடும் தண்டனைகள் , சர்வதேச உடன்படிக்கைகள் அனைத்தையும் மீறி போதை பொருட்கள் நடமாட்டம் உலகெங்கும் பருத்து வீங்கிக்கொண்டே போகிறது .
அமெரிக்க உளவுத் துறை முதல் இந்திய உளவுத்துறை வரை பேச்சும் செயலும் வெவ்வேறாகவே இருக்கிறது .
போதை மருந்து குறித்த புள்ளிவிவரங்கள் சில
உலக அளவில் ஆண்டு தோறும் 4,00.00,00,00,000 டாலர் அதாவது நாற்பதாயிரம் கோடி டாலர் [ இதனை இன்றைய ரூபாய் மதிப்பில் ரூ.83.68 ஆல் பெருக்கிக் கொள்க ] இந்த போதைச் சந்தையில் புழங்குகிறது .
உலக அளவில் 80 விழுக்காடு போதைப் பொருட்கள் சட்டவிரோத கடத்தல் மூலமே நடக்கிறது.
கொக்கைன் ,ஹிராயின் ,கஞ்சா ,அபின் , போதை தரும் பான்பராக் ,போதை தரும் ஒருவகை பீடா ,போதை கலந்த ஐஸ்கிரீம் என பல உண்டு .
இவை மட்டுமல்ல எல் எஸ் டி ,ATS [ amphetamine and others செயற்கை இரசாயணம் மூலம் அதி போதை ஊட்டும் பொருட்கள் இதற்கு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர் இருக்கும்.] போன்றவையே உலகில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது .
உலகெங்கிலும் இருக்கும் 15- 64 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு ஆறுபேரிலும் ஒருத்தர் இந்த சட்டவிரோத போதைக்கு அடிமையாகி உள்ளனர் .
உலகெங்கும் 2017 ல் போதையால் செத்தோர் கணக்கு மட்டும் சுமார் இரண்டு லட்சம் [193,000 ] இன்று இது மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது .
உலகெங்கும் 2021 கணக்குப் படி கிட்டத்தட்ட 29,60,00,000 அதாவது 29 கோடிப்பேர் போதைக்கு அடிமையாகி உள்ளனர் . 2023-24 ல் இந்த எண்ணிக்கை மேலும் கவலையளிக்கும் வகையில் அதிகரித்திருக்கிறது .
உலகின் போதை தங்கப் பிறை என்று அழைக்கப்படுகிற ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் ,ஈரான் போன்ற நாடுகளுக்கும் ; போதை தங்க நாற்கரம் என அழைக்கப்படும் மியான்மர் ,தாய்லந்து ,லாவோஸ் ,வியட்நாம் நாடுகளுக்கும் இடையே இந்தியா நசுக்குண்டு கிடக்கிறது .
இப்படி சில நாடுகளை மட்டும் வகைப்படுத்துவதில் அமெரிக்க உளவுத்துறையின் கைவரிசையும் உண்டு , தாலிபான் போன்ற மதவாத பயங்கரவாத அமைப்புகளும் உண்டு . இதுபோல் ஆப்பிரிக்க நாடுகள் ,தென் அமெரிக்க நாடுகள் மீதும் அமெரிக்க உளவுத்துறை வசை பாடுவதும் உண்டு . போதையைக் காரணம் காட்டி அருகிலுள்ள தீவுகளை ஏகாதிபத்தியம் ஆட்டையப் போட்டதும் உண்டு . இந்த அரசியல் தனி.
உலக போதை மண்டலங்களுக்கு இடையே நசுக்குண்டு கிடக்கும் இந்தியாவின் நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது . ஆங்காங்கு கொஞ்சம் கஞ்சா பயிரிட்டாலும் இந்தியா போதை மருந்துகளின் உற்பத்தி மையம் அல்ல ; கைமாற்றும் கடத்தல் வழிப்பாதையே . கைமாற்றும் போது ஒழுகுகிற போதையின் பயன்பாடே இந்தியாவில் கவலையளிக்கும் விதத்தில் பெருத்துக்கொண்டே போகிறது .
இந்தியாவில் போதைப் பொருட்களின் நுழைவு வாயில் குஜராத் துறைமுகமும் மும்பை விமான நிலையமுமே . உத்திரபிரதேசம் , மகாராஷ்டிரா , பஞ்சாப் மூன்றும்தான் இந்தியாவில் போதைப் பொருட்கள் அதிகம் உலாவும் இடமென ஒன்றிய மாநிலங்களவையிலேயே அமைச்சர் தெரிவித்தார்.
இதில் வேடிக்கையான ஒரு செய்தி , உலகெங்கும் இந்த போதை மருந்துகள் தயாரிப்பு ,கடத்தல் ,விற்பனை இவற்றுக்கு உலகு தழுவிய மிகப்பெரிய வலைப்பின்னல் அமைப்பு இருக்கிறது . இதில் பெரும் கோடீஸ்வரர்களும் தாலிபான் போன்ற பயங்கரவாதிகளும் தொடர்பு கொண்டுள்ளனர் .அதே போதில் இதன் மூலம் சாதாரண அடித்தட்டு ஏழைகள் ஏதோ ஒரு வகையில் வேலையும் கூலியும் பெறுகின்றனர் .இப்படி வாழ்வாதாரத்துக்கு போதையை நம்பி இருப்போர் பல கோடியாகும்.
பாட்டி சொன்ன மந்திரவாதி கதையின் மர்ம முடிச்சைவிட நூறுமடங்கு பெரிய மர்ம முடிச்சைக் கொண்டது இந்த சட்டவிரோத போதைச் சந்தை .
இதற்கு மதம் இல்லை .நாடு இல்லை .மொழி இல்லை .எங்கும் பரவியிருக்கும் விஷச் செடி . ஆங்கும் எங்கும் நீக்கமற நிரம்பி இருக்கும் விஷச் செடி இது .
இதன் ஆழமும் அகலமும் தெரியாமல் இங்கே குண்டு சட்டிக்குள் உள்ளூர் அரசியலோடு போதையைக் கலந்து குறுக்கு சால் ஓட்ட முயல்கிறார்களே தவிர ; போதைக்கு எதிரான விழிப்புணர்வும் அரசியல் உறுதியும் கிட்டத்தட்ட இந்தியாவில் எங்கும் இல்லை. இதுதான் சோகம் . [இடதுசாரிகள் மட்டும் விதிவிலக்கு ]
[ இது குறித்து ஒரு ஏட்டுக்கு கட்டுரை எழுத முனைந்த போது உருவான முதற் கட்ட தகவலறிக்கை எப் ஐ ஆர் [ FIR ]இது.]
சுபொஅ.
27/6/24.



0 comments :

Post a Comment