சிந்துவெளி : ஆழமான திராவிடச் சிவப்பு

Posted by அகத்தீ Labels:

 










// தமிழ் பண்பாட்டு ஆர்வலர்களே ! நண்பர்களே !

இந்தப் பதிவு மிக நீளமானது .சுமார் 2500 சொற்கள் அடங்கியது .  ஆழமான கருத்து சார்ந்த  கனமான ஓர்  நூல் குறித்த பதிவு  . பொறுமையாய் வாசிக்க அன்போடு வேண்டுகிறேன்.//

 






சிந்துவெளி : ஆழமான திராவிடச் சிவப்பு

 

ந்நூலை வாசித்து முடித்ததும் பிரமிப்பும் மனநிறைவும் ஒருசேரப் பொங்கியது ; இன்னும் பல முறை வாசிப்பதன் மூலமே இதன் உள்ளுறையை முழுமையாய் என்னால் உள்வாங்க இயலும் என எண்ணுகிறேன் . நூல் அறிமுகம் செய்யவோ நூல் மதிப்புரை எழுதவோ என்னால் இயலாது , ஏனெனில் இத்துறையில் நான் ஆரம்பப்பள்ளி மாணவன்கூட இல்லை . ஆயினும் இந்நூல் என்னுள் விதைத்த சில செய்திகளையும் கருத்துகளையும் பதிவு செய்தால் , யாரையேனும் வாசிக்கத் தூண்டும் அல்லவா ?

 

நூலை வாசிக்கும் போது என்னுள் சுமார் 25 வருடங்களுக்கு முந்தைய நினைவுகள் சுழன்றன . சென்னை  சாஸ்திரி பவனில்  ஓர் நாள் மாலை எழுத்தாளர் சு.சமுத்திரம் அறையில் நான் ,சு.சமுத்திரம் ,சிகரம் ச.செந்தில்நாதன் ,தயானந்தன் பிரான்சிஸ் , வல்லிக்கண்ணன் ஆகியோர் கூடியிருக்க ,இந்நூலின் ஆசிரியர் ஆர் .பாலகிருஷ்ணன்  ஒரிசா மற்று வடகிழக்கு பழங்குடி இடப் பெயர்களுக்கும் சிந்துவெளி பண்பாட்டுக்கும் திராவிடத்துக்குமான தொடர்பு குறித்து எங்களுக்கு விளக்கம் தந்தார் .வியந்து போனோம் . தீக்கதிருக்கு ஒரு சிறு செய்தியாக அதை அனுப்பினேன் . அன்றிலிருந்து இது தொடர்பான செய்திகள் பலவற்றை அவ்வப்போது துண்டு துக்காணியாக கேள்விப்பட்டு அசை போட்டுக்கொண்டே இருக்கிறேன் .அண்மையில் கீழடி போய் வந்தது மேலும் ஆர்வத்தை கிளர்த்தியது . இப்போது இந்நூலை வாசித்தேன் .

 

 “ இதுவரை முன்னெடுக்கப்பட்ட சிந்துவெளி ஆய்வுகளில் இந்நூல் முக்கியமானது . இது முன்வைக்கும் ஆதாரங்கள் ஏற்கெனவே நிலவிய கேள்விகளுக்கு விடைகளையும் ,புதிய ஆய்வுக்கான கேள்விகளையும் நம்முன் வைக்கிறது .சிந்துவெளிக்கு மட்டுமல்லாது தமிழ் இலக்கியத்திற்கு உள்ளும் பல ஆய்வுத் தடங்களைச் சுட்டிக் காட்டுகிறது இந்நூல் . ஆய்வாளர்களுக்கு மட்டுமல்லாது வரலாற்று ஆர்வலர்களும் பொதுமக்களும் பயன் பெறும் வகையில் அமைந்துள்ளது .” என முன்னுரையில் த.உதயச்சந்திரன் இ.ஆ.ப கூறியிருப்பது மிகை அல்ல.

 

அதுவும் , நாள்தோறும் பிரச்சனைகளுக்கு இடையே பணிசெய்ய வேண்டிய இந்திய ஆட்சிப் பணி ஊடே 35 ஆண்டுகள் திரட்டியும் ,வடிகட்டியும் ,ஆய்ந்தும் ,சேகரித்த தகவல்களைத் தொகுத்து நன்கு ஆய்வு செய்து  ‘’ ஒரு பண்பாட்டின் பயணம் : சிந்து முதல் வைகை வரை”  எனும் இந்நூலைப் படைத்திருக்கிறார் ஆர் .பாலகிருஷ்ணன் .இந்நூல் 35 ஆண்டுகால கடும் உழைப்பின் விளைச்சல் எனில் மிகை அல்ல .அதற்காக அவரைப்  பாராட்டுகிறேன்.

 

“ சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிடர் தொடர்பு பற்றி புதிய சான்றுகளை முன்வைப்பதுதான் இந்த நூலின் நோக்கம் . இந்த நூலில் பயன்படுத்தப் பட்டுள்ள திராவிடர் ,ஆரியர் சொல்லாடல்கள் இனங்களைப் பற்றியது அல்ல .இரண்டு வெவ்வேறு மொழிக் குடும்பங்களைப் பற்றியவை.” என ஆங்கிலப் பதிப்பின் ’என்னுரை’யில் நூலாசிரியர் ஆர் .பாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது நூல் நெடுக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.

 

திராவிட மொழிக் குடும்பம் என்கிற போது தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் மட்டும் அல்ல ;தோடா ,துளு ,இருளா ,குறும்பா ,குடகு ,கோட்டா,படகா ,கொண்டா ,மண்டா, குவி ,பெங்கோ ,குய் ,கோண்டி ,நாய்க்கி ,நாய்க்கிரி,கொலாமி,கதாடா,ஒல்லாரி,பார்ஜி,பிராகுயி ,மால்டோ,குருக்  எனப் பெரும்பட்டியலே இடம்பெறும் . எவ்வளவு பேர் பேசுகிறார்கள் ? வரிவடிவம் உண்டா இல்லையா என்பதை எல்லாம் தாண்டி பழங்குடிகளோடும் தொல் மரபுகளோடும் தொடர்வது முக்கியம்.

 

“ இந்தியாவின் வரலாற்றுக்கு முற்பட்ட காலங்கள் குறித்த கற்பிதங்களையும் ,புரிதல்களையும் மரபணுவியல் ,தொல்லியல் ,சமூகவியல் ,தொல் இலக்கிய ஆவணப் பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளின் துணையோடு மீள்மதிப்பீடு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.” அதற்கு இந்நூலும் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.

 

“ சிந்துவெளி நகர்மயப் பண்பாட்டின் நேரடி மீள் நினவு என்று சொல்லத்தக்க எந்த தெளிவான சான்றுகளும் வேத இலக்கியங்களில் ,வடமொழி தொல் இலக்கியங்களில் இல்லை .”

 

 “ தென்னிந்திய நிலப்பரப்புகள் மற்றும் தென்னிந்திய வாழ்வியல் பற்றிய தெளிவான புரிதல் எதையும் வடமொழி தொல் இலக்கியங்கள் முன்வைக்கவில்லை.”

 

“ பரந்து விரிந்த பால்வீதியில் அகன்று பரந்த எல்லையற்ற பிரபஞ்சத்தில்  சின்னச் சில்லாய் சிதறிச் சுற்றும் ஒரு சுண்டைக்காய் பூகோளத்தில் ஒரு குறிப்பிட்ட நில எல்லைக்குள்தான் பல்லாயிரம் ஆண்டுகளாக அவரவர் இனமொழி பண்பாட்டு அடையாளங்கள் முளைத்துச் செழித்ததாக நம்புகிறோம் .ஆனால் கள நிலவரம் வேறானது .” இதனை இந்நூல் நிறுவ முயல்கிறது .

 

 “ மனிதன் என்பவன் மரம் அல்ல ; அவனுக்கு வேர்கள் இல்லை ; மாறாக கால்கள் இருக்கின்றன .அவன் நடந்து கொண்டே இருக்கின்றான்.” இந்த சொற்களின் மீதான அசையாத நம்பிக்கையை இந்நூல் விதைத்துக் கொண்டே இருக்கிறது . புலம் பெயர்ந்துகொண்டே இருக்கிறது மனித குலம்.

 

 “ வட இந்திய மூதாதையர் எனப்படும் மரபணுப் பிரிவினர் அடிப்படையில் ஸ்டெப் மூதாதையர்கள் மற்றும் இந்தோ ஐரோப்பிய பண்பாட்டோடு தொடர்புடையவர்கள் “

 

தென்னிந்திய மூதாதையர் வட இந்திய மூதாதையர் இருவருக்கும் இடையிலா இடைவெளியை சுட்டுகிறது இந்நூல் .மேலும் , “சிந்துவெளி என்ற பெருநிலப்ரப்பு உள்ளடக்கிய அதன் விளிம்பு எல்லைப் பகுதியில் வாழ்ந்த மக்கள் மரபணு எந்த வகையைச் சார்ந்தது ?” என்ற கேள்வியை எழுப்பி அதன் தொடர்ச்சியை மதுரை உசிலம்பட்டி அருகே கண்டறியப்பட்ட ‘விருமாண்டி மரபணு’ வரை நீட்சி செய்து வாதிடுகிறது .

 

“ சிந்துவெளிப் பண்பாடு கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்பு இந்திய துணைக் கண்டத்தைப் பொறுத்தவரையில் பண்பாடு ,நாகரீகம் போன்ற சொற்களோடு தொடர்புடைய எந்த விஷயத்தையும் வேத காலத்தோடும் ,அதன் அறிவுப் புலத்தோடும் இணைத்துப் பேசுவதே வழக்கமாக இருந்தது .ஹராப்பாவிலும் ,மொகஞ்சோதாரோவிலும் வெளிப்பட்ட பண்பாட்டுச் சிதைவுகள் அத்தகைய கருத்தாக்கங்களைக் கேள்விக்குறியாக்கும் வல்லமையோடு திடீரென்று வெளிப்பட்டன .சிந்து வெளிப் பண்பாட்டின் கண்டுபிடிப்பு பண்டைய இந்திய நகரத்தின் தோற்றுவாயை அதுவரை வேதகாலம் என்று அறியப்பட்ட காலகட்டத்தைவிட [ பொ.யு .மு 1500 ஆண்டுகள்] பின்நோக்கி எடுத்துச் சென்றது.” என்கிறார் நூலாசிரியர் .

 

சிந்துவெளிப் பண்பாட்டின் பல கண்டுபிடிப்புகளை விவரித்துவிட்டு இந்த பண்பாடு நலிவடைந்தது எப்படி என்பதுதான்  புதிர் முடிச்சுகளிலேயே முக்கியமானது என்கிறார் . பண்பாடு முற்றிலும் அழிந்ததா , நலிவடைந்ததா  என்கிற கேள்வியோடும் நூல் நகர்கிறது . அப்பகுதி மக்கள் பெருமளவு புலம் பெயர்ந்தனர் என்கிற கருதுகோளும் முன்வைக்கப்படுகிறது .வலுவாக வாதிடப்படுகிறது . இந்நூலின் முக்கிய இழையும் இதுவே !

 

இதற்கிடையில் சிந்து சமவெளி பண்பாட்டை சரஸ்வதி நதியோடு இணைத்துப் பேசத் தொடங்கினர் .ஆனால் அதற்கான ஆதாரம் எதுவுமில்லை . ஆயினும் இன்றைய ஆட்சியாளர்கள் சரஸ்வதி நதியைத் தேடி கண்டுபிடிக்க நிதியும் ஒதுக்கி , சரஸ்வதி நதி பண்பாடு சமஸ்கிருத பண்பாடு என புராணக் கதை பேசிக்கொண்டிருக்கின்றனர்.

 

அதேவேளையில் ,“சிந்துவெளி பற்றி ஆய்வு செய்த அறிஞர்கள் பலரும் சிந்துவெளி மக்கள் பேசிய மொழி திராவிட மொழியாக இருந்திருக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன எனக் கருத்து தெரிவித்துள்ளனர் “ அதனால் , ” …..இரண்டாவது புதிர், திராவிட மொழிகள் என்று சொல்லப் படுகிற மொழிக்குடும்ப மக்கள் எங்கே தோன்றினார்கள் எவ்வாறு பரவினார்கள் ?” என்பதாகிறது .

 

 ‘லெமூரியாக் கண்டம்’ என்கிற குமரிக் கண்டம் கடலில் மூழ்கியதாக நம்பப் பட்டு வந்த கோட்பாடு அறிவியல் வெளியில் காணாமல் போய்விட்டது . ஆரியர்கள் இங்கு வந்த போது ஏற்கெனவே ஓர் வளமான பண்பாடு நிலவியது , அதன் வழித் தோன்றல்கள் தென் இந்தியாவில் வாழ்வதாக பல அறிஞர்கள் முன் மொழிந்துள்ளனர் .

 

ஐராவதம் மகாதேவன் திராவிட மொழிக்கும் சிந்துசமவெளி பொறிப்பு களுக்கும் தொடர்பு இருப்பதை முன்னுணர்ந்தவர் . அப்பொறிப்புகளில்  இந்தோ ஆரிய மொழி தொடர்புக்கான குதிரையோ ஆரம் உள்ள சக்கரமோ இல்லை ஆனால் திராவிட மொழி தொடர்புக்கான ஆரமில்லா சக்கரமும் திமில் காளையும் உள்ளது என்கிறார் . ஊர்ப்பெயர் ,குடிப்பெயர் ,இடப்பெயர் ,தனிப்பெயர் வழி சிந்துவெளிக்கும் திராவிடத்துக்கும் உள்ள தொடர்பை அறிய முடியும் என்கிறார் இந்நூல் ஆசிரியர் .

 

 “ எங்கள் ஊர்ப் பெயரை மாற்றிவிட்டால் ,எங்களைப் பார்க்க வரும் மூதாதையர் ஆவி குழப்பமாகிவிடும்.” என ஒரிசா பழங்குடி மக்கள் நம்பிக்கையாம் . புலம் பெயர்கிறவர்கள் ஊர்ப் பெயரையும் தங்கள் குலசாமியையும் சுமந்து செல்வதாக நூலாசிரியர் சொல்கிறார் . சிந்துவெளி மக்கள் அவ்வாறு சுமந்து சென்ற பெயர்களை தென்னிந்தியாவில் பதியம் செய்துள்ளதாகவும் ஏராளமான சான்றுகளோடு நூல் முழுக்க நிறுவுகிறார்.

 

சங்க இலக்கியத்தின் மீள்நினைவுகளை சிந்துவெளி பண்பாட்டோடு பொருத்திப் பார்க்க பல்வேறு முனைகளில் நூலாசிரியர் முயன்றுள்ளார் .

 

திராவிடர் /ஆரியர் என்பதை இன்றைய அரசியல் சூழலில் பார்ப்பனர் /பார்ப்பனர் அல்லாதார் என்கிற ஒரு சிறிய வட்டத்துக்குள் சிந்திக்கப் பழகியவர்களுக்கு நூலாசிரியரின் பார்வை வித்தியாசமாகத் தோன்றலாம்.

 

தமிழ் சங்க இலக்கியத்தின் நிலப்பரப்பும் தென்குமரி திருவேங்கடத்துக்குள் அடங்குவதல்ல என்கிறார் நூலாசிரியர் ; போகிற போக்கில் சொல்லவில்லை தக்க சான்றுகளோடு வாதிடுகிறார் .

 

காற்று ,திசை ,எல்லை ,தாவரம் ,விலங்குகள் என சங்க இலக்கியத்தில் புழங்கும் ஒவ்வொன்றும் மீள்நினைவுகளாய் சிந்துவெளிவரை நீள்வதை ஆசிரியர் விவரிப்பது நுட்பமானது .முக்கியமானது .

 

காற்று வீசும் திசை ,வேகம் இவற்றைக் கொண்டு தீர்மானிக்கப்படும் ’காற்று ரோஜா’ வரைபடம் காட்டும் செய்தி முக்கியமானது .சென்னை நகரின் காற்று ரோஜா சங்க இலக்கியத்தோடு ஒத்துப் போகவில்லை . ஆனால் அகமதாபாத் காற்று ரோஜா சங்க இலக்கிய வர்ணனையோடு ஒத்துப் போகின்றது . சங்க இலக்கிய நிலப்பரப்பை சிந்துவெளி வரை விரித்தால்தாம் வாடைக்காற்று ,கோடைக்காற்று பற்றிய நம் வர்ணனை ஒத்துப் போகின்றது .

 

குஜராத்துக்கே உரிய சிங்கமும் , பாலைக்கே உரிய எலும்பு தின்னும் ஒட்டகமும் , புல் மேயும் கவரியும்   சங்க இலக்கியத்தில் இடம் பெற்றது எப்படி ? பேரிடர்கள் ,புலப்பெயர்வுகள் பற்றிய மீள்நினைவுகள் எங்கிருந்து வந்தது ?

 

என விரிவாக தக்க சங்க இலக்கியப் பாடல்கள் மேற்கோள்களுடன் இந்நூல் பேசுகிறது . மேற்கோள்கள் காட்டின் மிகவும் விரியும் என்பதால் சுருக்கி சாறாகச் சொன்னேன் .வாசித்து அறிக !

 

“திராவிடக் கருதுகோளுக்குச் சான்றளிக்கும் சிந்துவெளி இடப் பெயர்கள் : கொற்கை – வஞ்சி – தொண்டி வளாகம்” என்பது நூலாசிரியரின் நீண்ட ஆய்வின் கடின உழைப்பின் சேகரம் .

 

இன்றைய பாகிஸ்தானிலும் ,ஆப்கானிஸ்தானிலும்  ,குஜராத்திலும் ,மகாராஷ்டிராவிலும் ,வடகிழக்கில் பழங்குடி கிராமங்களிலும் தொல்தமிழ் இடப்பெயர் இன்னும் புழக்கத்தில் இருப்பதை ஆசிரியர் பட்டியலிட்டு சுட்டும் போது நம்மை அறியாமலே நம்மிடம் பெருமிதம் தொற்றிக் கொள்கிறது .

 

 “…… சங்க இலக்கிய பெயர்களோடு ஒத்துப்போகும் இடங்கள் இன்றும் நிலைத் திருப்பதைச் சிந்துவெளிப் பண்பாட்டின் எச்சமாக இருக்கக்கூடும் என்ற கருத்தில் அடிப்படை சிக்கல் எதுவும் இருக்க முடியாது . இந்தப் பெயர்களை சமஸ்கிருத இலக்கியம் அறிந்திருக்கவில்லை என்பதே இப்பெயர்கள் சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிடக் கருதுகோளுக்கு வலுவான சான்று . இத்தகைய மீட்டுருவாக்கத்தில் பழந்தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது என்ற கருத்தையும் அடிக்கோடிட வேண்டும் .அண்மைக்கால அகழாய்வுகளும் இதைத்தான் சொல்லுகின்றன.” என்கிற நூலாசிரியரின் துணிபு மிகச்சரியே !

 

இங்கு அந்த பெயர் பட்டியலைத் தவிர்க்கிறேன் .காரணம் அது மிகப் பெரிது . ஒவ்வொன்றையும் அதன் பின்னணியோடு பேசினால் மட்டுமே இலக்கை எட்ட முடியும் . அதற்கு இந்நூலை முழுதாய் வாசிப்பதே  ஒரே வழி.

 

இடப்பெயர்கள் மட்டுமல்ல தனிப்பெயர்கள் , மன்னர் பெயர்கள் எல்லாம் நாம் இன்று கருதும் புவியியல் பரப்புக்கு உட்பட்டது மட்டுமா ? நன்னனும் ,வேள்பாரியும் ஆட்சிபுரிந்த இடம் எது ? பொள்ளாச்சி அருகே மாசானி அம்மன் கோயிலின் கதை முதல் கொண்கன் [ கொங்கன் ] வரை சொல்லி நம்மை எங்கெங்கோ இழுத்துச் செல்கிறார் .நம் வேள் பாரி இன்னும் பாகிஸ்தானிலும் ஆப்கனிலும் இருப்பதை சுட்டுகிறார் . read between lines என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் ; அதுபோல சங்க இலக்கியத்தை மிக நுட்பமாக வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை வாசித்து இடம் ,பெயர் ,தாவரம் ,திசை , விலங்குகள் என ஒப்பிட்டு ஒப்பிட்டு திராவிட பண்பாட்டின் வேர்களைத் தேடித்தேடி சிந்துவெளிவரை பயணிக்கும் நூலாசிரியர் முயற்சியை எப்படிப் பாராட்டினும் தகும்.

 

பழநியை எடுத்துக் கொண்டுபோய் சிந்துவெளி அருகே வைக்க முடியுமா ? இந்நூல் முயற்சிக்கிறது .பழநியின் தொல் தொடர்பை சிந்துவெளிவரை நீட்டுவது இட்டுக்கட்டல் அல்ல ; தர்க்க முடிவாக இந்நூலில் வெளிப்படுகிறது . மலையும் மலைசார்ந்த வாழ்வும் ஆதித் தமிழரின் வாழ்வியலோடு உள்ள நெருக்கத்தை கச்சிதமாக முன்வைக்கிறது .

 

 “ சங்க இலக்கியம் மீள்நினைவாகக் குறிப்பிடும் மலைத் தலைவர்கள் பலரும் சங்க காலம் என்று நாம் கருதும் காலகட்டத்தைச் சார்ந்தவர்களாக இல்லாமல் அதற்கும் முந்தைய ஆழமான தொன்மங்களை ,காலகட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது .அந்தத் தொன்மங்கள் சிந்துவெளிப் பகுதிகளை ஒட்டியுள்ள உயர் மலைகளையும் உயர் குன்றுகளையும் சார்ந்ததாக இருக்கக்கூடும். அதன் தொடர்ச்சி தக்காண பீடபூமியிலும் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் , இந்திய துணைக்கண்டத்தின் தென்கோடிப் பகுதிகளிலும் தொடர்கதையாய் தொடர்ந்திருக்கக்கூடும் . அதனால்தான் வேள்பாரியின் வாழ்க்கையை தற்போது தமிழ்நாட்டிலுள்ள மலைகளுக்குள்ளும் மாவட்டங்களுக்குள்ளும் அவ்வளவு துல்லியமாகப் பொருத்திவிட முடியாது . வேள்பாரி ஆண்ட குன்று எது என்பதைவிட முக்கியமானது அவர் தமிழ் மக்களின் கூட்டுச் சிந்தனையில் தொடர்ந்து குடியிருக்கிறார் என்பதுதான்.”

 

வேள்பாரியை மட்டுமல்ல ,நன்னனை ,பேகனை எல்லாம்கூட நகர்த்தி சிந்துவெளிக்கு கொண்டுபோகும் பார்வைக் கோணம் புதிது மட்டுமல்ல ஆழ்ந்த நோக்குடையதுமாகும்.

 

கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என திசைச் சொற்களைப் பயன்படுத்துவது என்பதுகூட வாழும் இடம் புவியியல் சார்ந்தது .கிழக்கு மேற்கு கீழ் மேல் என்ற சொற்கள் சார்ந்து இந்நூல் விவாதிக்கும் பொருண்மை நம் பண்பாட்டின் திசையை சிந்துவெளி நோக்கி திருப்புகிறது . இந்தோ ஆரிய மொழிகளில் கிழக்கு [ முன் ] ,மேற்கு [பின்] எனவும் திராவிட மொழிக் குடும்பத்தில் மேற்கு [மேல் ,மேன்மை] ,கிழக்கு [கீழ், கீழ்மை] எனவும் இடம்பெறுகிறது . சிந்துவெளிப் பண்பாட்டில் திராவிடம் போலவே மேல் ,கீழ் என பயன்படுத்தப் பட்டிருக்கிறது .

 

கோட்டை ,செங்கல் ,பானை ,தாழி முதலியவை பண்பாட்டில் மிக மிகமுக்கிய பங்காற்றுவதை இந்நூல் விரிவாகப் பேசியுள்ளது . அதிலும் செங்கல்லும் ,பானைத் தடமும் திராவிடத்தை சிந்துவெளியோடு இணைக்கிறது  “.கலம்செய் கோவே!” என குயவரை  உயர்ந்த  இடத்தில் வைத்துப் போற்றப்பட்டதை சங்க இலக்கிய வழி சொல்வதும் ; சமஸ்கிருதம் குயவரின் சமூக நிலையை கீழிறக்கியதையும் இந்நூல் சரியாகச் சொல்லுகிறது.

 

“ பானை செய்யும் பண்பாடுகளின் ஊடாக இந்திய நாகரீகத்தின் கடந்த காலத்தை மீட்டுருவாக்கம் செய்யும் எந்த முயற்சியும் தென்னிந்திய ,கிழக்கிந்திய பானை மரபுகளைக் கணக்கில் கொள்ளாது முழுமை பெறாது …” என அழுத்தமாக அடிக்கோடிடுகிறது இந்நூல் .

 

செம்பு ,இரும்பு ,பொன் ,வெள்ளி போன்ற உலகங்களின் பயன்பாடு பற்றி ஆதிச்ச நல்லூர் ,கீழடி இதர ஆய்வுத் தடங்கள் வழி சிந்துவெளிக்கு செல்வதும் சுவையானது .

 

“ கருப்பு-சிவப்புப் பாண்டம் ஒருவகையில் நாடு தழுவியப் பாண்டம் என்றால் சங்க இலக்கியம் நாடு தழுவிய செவ்வியல் இலக்கியம் . சிந்து வெளிக்கும் வைகைக் கரைக்கும் பாலம் போடும் இந்த ‘பானைத்தடம்’ களிமண்ணால் ஆனது . சுட்ட செங்கற்களால் நிரம்பியது .செம்பால் அணி செய்யப்பட்டது . ஒரு வகையில் தமிழன் தொன்மைக்கு சான்றாக நிற்கும் செந்நிறமான செம்மையான சாலை அது . அதன் நிறம் ஆழமான திராவிடச் சிவப்பு .” என்கிறார். மறுக்க முடியுமா ?

 

 “திராவிட குஜராத் : வேளிரின் நெடுவாயில்” ,” திராவிட மகாராஷ்டிரா : நன்னனின் பொன்நிலம்” என இரண்டு இயல் தலைப்புகள் மட்டுமல்ல சொல்லும் செய்தியும்  பார்வையும் தமிழ்கூறும் அறிவுலகுக்கு புதிதும் பொருள் பொதிந்ததும் ஆகும் . வந்தேறிகள் என வறட்டு தமிழ்தேசியம் பேசும்  அணுகுமுறைக்கு சம்மட்டி அடியும் கூட .எல்லோருமே புலம் பெயர்ந்த வந்தேறிகள் தாம்.

 

மகராஷ்டிராவில் புழங்கும் சத்தசஈ கவிதைகளுக்கும் நம் அகநானூற்றுக்கும் உள்ள ஒற்றுமை சிலிர்க்க வைக்கிறது .சத்தசஈ பனுவலை மகராஷ்டிர அக எழுநூறு என்கிறார் நூலாசிரியர் .  “மகாராஷ்டிராவில் உள்ள தைமாபாத் என்கிற ஆய்விடம்தான் ஹரப்பா பண்பாட்டில் தென் விளிம்பா , புறப்புள்ளியா ” என்பதை எதிர்கால அகழாய்வுகள்தான் சொல்ல வேண்டும் என்கிறார் நூலாசிரியர் .

 

அதே போல் கொங்கு மற்றும் நகரத்தார் மரபுகளில் சிந்துவெளி பண்பாட்டின் எச்சத்தை தொடர்ச்சியை தொட்டுக் காட்டும் முயற்சியும் புதிய தடமாகும் . கொங்கு சமூகத்தின் சில இடப் பெயர்களும் மகராஷ்டிராவில் உள்ள இடப் பெயர்களுடன் அச்சு அசலாக பொருந்துவது முக்கிய புள்ளி .புலப்பெயர்வு வாழ்வியலும் கூடுதல் சான்று .

 

“ நகரத்தார் புலப்பெயர்வு கதைகளை நாம் கூர்ந்து கவனித்தால் ஒன்று புலப்படும். அது அவர்கள் பெருநகரங்களில் வாழ்ந்து அதன் பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் அந்த நகரங்களைவிட்டு வெளியேறி மீள் நினைவாக கோட்டை போன்ற வீடுகளைக் கட்டி இருக்கலாம்.” என்பதைச் சுட்டி சிந்துவெளியிலிருந்து புலம்பெயர்ந்து வந்த திராவிடப் பண்பாட்டோடு தொடர்பு படுத்துகிறார் .

 

சிந்து முதல் வைகை வரை ‘சிலம்பு’ ஓங்கி ஒலிக்கிறது . தாய் தெய்வ வழிபாடு திராவிட பெருவெளி எங்கும் நம்மை வணங்க வைக்கிறது . கண்ணகி வழிபாட்டை தாய்தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியாக பார்ப்பதும் மட்டுமல்ல ; தமிழ்நாடு ,கேரளா ,ஆந்திரா,கர்நாடகாவுக்கு வெளியே நீள்வதும் ; குஜராத்தில் ‘கண்கை’ எனும் தாய் தெய்வ வழிபாடு நிலவுவதும், மகாராஷ்டிராவில் சில பிரிவினர் கண்கை வழிபாடு செய்வதும் ; வடகிழக்கில்  தாய் தெய்வ வழிபாடு நிலவுவதும் நூலில் சுட்டப்படுகிறது .

 

கண்ணகியோடும் சிலப்பதிகாரத்திலும் உள்ள பல பெயர்கள் சிந்துவெளியிலும் அதற்கு அப்பாலும் காணப்படுகின்றன . இவற்றை எல்லாம்  இணைத்து பார்க்கும் போது திராவிட வானம் கவிந்துள்ள பரப்பு புலப்படுகிறது .

 

“வன்னியின் வேர்கள் : வாழ்வின் மரம்.” வன்னி மரம் தமிழர் வாழ்வோடு எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதைப் பார்க்கிறோம் .மொகஞ்சோதாராவில் கிடைத்த ஒரு முத்திரையில் வன்னி மரத்தின் கிளையில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள் .

 

மக்கள் புனிதமாகக் கருதும் மரத்தின் பெயர் இடப்பெயராவதும் உண்டு . அந்த வகையிலும் வன்னியின் நிழல் சிந்துவெளி வரையிலும் அதற்கு அப்பாலும் பரவியுள்ளது தற்செயலானது அல்ல .

 

மரத்தை தெய்வமாகக் கருதி அதனை வெட்ட விடாமல் சுற்றி நின்று பெண்கள் காப்பதும் , தாய்தெய்வ கதைகளோடு மரம் பிணைந் திருப்பதும் கண்கூடு . வன்னி மரம் நம் திராவிடப் பண்பாட்டின் பசுமையை சிந்துவெளியில் படரச் செய்திருக்கிறது .

 

ஆடுகளம் : விளையாட்டின் வாழ்வியலாகும் . சங்க இலக்கியம் விளையாட்டின் மீது தன் கூர்த்த பார்வையை செலுத்தி இருக்கிறது . பழந்தமிழ்நாட்டில் விளையாடிய விளையாட்டுகள் , குறிப்பாக ஆணுக்கான விளையாட்டுகள் ,பெண்ணுக்கான விளையாட்டுகள் , எல்லா பாலினருக்குமான விளையாட்டுகள் என சங்க இலக்கியம் வகுத்துக் காட்டி இருக்கின்றன . இவற்றின் சான்றுகள் பல சிந்துவெளியிலும் காணக்கிடைக்கின்றன .

 

சேவல் சண்டை ,பகடை , ஏறுதழுவுதல்  இவற்றின் தொல் எச்சங்கள் சிந்துவெளி முதல் கீழடி வரை தொடர்கின்றன . குதிரையோ , ஆரக்கால் சக்கரமோ சிந்துவெளியில் இல்லை . சிந்துவெளியில் புலி முக்கியம் .ஆனால் ரிக் வேதத்தில் புலி பற்றிய குறிப்பே இல்லை . திமில் காளையும் , ஜல்லிக் கட்டு எனும் ஏறு தழுவதலும் சிந்துவெளியில் உண்டு .அலங்காநல்லூரிலும் உண்டு . திராவிட பண்பாட்டின் முக்கிய கூறல்லவா இது .

 

 “ வேதகால மக்கள் பிபிதகா என்றழைக்கப்படும் தான்தோன்றிக் கொட்டைகளைப் பயன்படுத்தி பகடை ஆடினார்கள் .இது சிந்துவெளிப் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது .” ஆனால் நாற்கோண அறுகோண பகடைகளைப் பயன்படுத்தி சிந்துவெளி மக்கள் பகடை ஆடினர் . கீழடியிலும் அத்தகு பகடைகள் கிடைத்துள்ளன .

 

அதுபோல் பொம்மை  விளையாட்டிலும்  ,நீர் விளையாட்டிலும் வடக்குக்கும் திராவிடத்துக்கும் வேறுபாடு உண்டு ;சங்க இலக்கியப் பதிவும் சிந்துவெளி பண்பாடும் கைகுலுக்கும் இடம் நிறைய உண்டு .

 

 “ அறிவியல் சார்ந்து இயங்கும் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இந்திய வரலாற்றை கங்கை சமவெளியில்  தொடங்குவது நெடுங்கால வாடிக்கை ஆகிவிட்டது . உண்மையில் அவர்கள் ஆய்வை கிருஷ்ணா , காவிரி ,வைகை போன்ற நதிக்கரைகளில்தான் தொடங்க வேண்டும்.” என்றார் சுந்தரம் பிள்ளை .ஆதிச்ச நல்லூரும் கீழடியும் கொண்டுள்ள தொப்புள் கொடி உறவை அறிந்தால் இக்கருத்து வலுப்படும்.இந்நூலும் அந்த முயற்சியின் இன்னொரு முகமே !

 

 “பொழுதுபோக்கு ,விளையாட்டு ,நெடுந்தூர வணிகம் மற்றும் மக்களின் கைவினைத் திறன்களுக்கு கீழடி சான்றளிக்கிறது .அக்கால கட்டத்தின் சமய நம்பிக்கைகள் குறித்து இப்போது முடிவாக எதுவும் கூறமுடியாது என்பதும் உண்மையே .கீழடி ஆய்வு சங்க இலக்கியத்திற்கு ஓர் உரைகல் போல் தோன்றுகிறது .கீழடியில் இதுவரைக் கிடைத்திருக்கும் அகழாய்வுப் பொருட்களை நம்முன் பரப்பி வைத்துச் சங்க இலக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ,சங்க இலக்கியம் என்பது இன்னும் முழுமையாக வாசிக்கப்படாத கீழடி என்று புலப்படும் . கீழடி என்பது இன்னும் முழுமையாகத் தோண்டப்படாத சங்க இலக்கியம் என்ற உணர்வு நமக்குள் தோன்றுவதை தவிர்க்க முடியாது .”

 

சிந்து வெளி – ஆதிச்ச நல்லூர் - கீழடி – சங்க இலக்கியம் என பயணித்து தொல்தமிழர்களின் அரசியல் பண்பாட்டு எல்லைகளை வேங்கட மலைக்கு வடக்கிலும் மேற்கிலும் வெகுதூரம் எடுத்துச் செல்லும் அரும்பணிக்கு இந்நூல் ஆற்றுப்படையாய் இருக்கிறது .

 

வேத இலக்கியம்  அதன் சான்றுகள் எதனோடும் சிந்துவெளிப் பண்பாடு  ஒத்துப் போகவில்லை .ஆனால் ஆதிச்சநல்லூர் –கீழடி –சங்க இலக்கியம் இவற்றோடு ஒத்துப் போகிறது . சிந்துவெளிப் பண்பாட்டின் மொழி எதுவென இன்னும் உறுதி செய்யப் படவில்லை ஆயினும் , திராவிட மொழிக் குடும்பத்தையே நெருங்கி வருகிறது .மரபணு எச்சங்களும் சிந்துவெளிக்கும் தென்னிந்தியாவுக்குமே முடிச்சுப் போடுகிறது .

 

 ‘வேற்றுமையில் ஒற்றுமை’ [UNITY IN DIVERSITY] பேசும் இந்தியப் பண்பாடும் சரி , சிந்துவெளிப் பண்பாடும் சரி நகர்மய பன்மயப் பண்பாடென சொல்லும் ஆசிரியர் , அதனை  ‘உருக்கு பானை’ [ MELTING POT]போல்  காய்ச்சி உருக்கி ஒன்றாகக் கலந்த பண்பாடாக பார்க்காமல் ;  ‘சாலட் கிண்ணம்’ [ SALAD BOWL] போல் தேர்ந்தெடுத்த [ நுழைவு தேர்வுக்கு உட்பட்ட ] பழங்களை அடுக்கி வைக்கும் பண்பாடாகவோ பார்க்காமல் ; எல்லா அடுக்குகளுக்கும் ஒரே நேரத்தில் மழை பெய்து எல்லா உயிரினங்களையும் வாழவைக்கும்  ‘மழைக்காடு’ [ RAINFOREST] எனச் சொல்வதே பொருத்தம் என்கிறார் .

 

 “திருத்திக் கொண்டே இருப்பதுதான் வரலாற்று ஆய்வின் உயிரோட்டம்” .அதற்கொப்ப இந்நூல் முயற்சி செய்துள்ளது . சிந்துவெளி பண்பாடு குறித்த பல பழைய முன்மொழிவுகளை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது ; பல புதிய முன்மொழிவுகளை விவாத களத்திற்கு முன்நகர்த்தி இருக்கிறது . வெறும் எழுத்துப் பதிவாக இல்லாமல் தேவையான படங்கள்,வரை படங்கள் என வலுவாக இந்நூல் திகழ்கிறது .

 

“ இந்தியாவின் பன்முகத்தன்மையை பேசுவது மட்டுமே போதுமானதல்ல . பழங்குடிகள் ,நகர்மயப் பண்பாடுகள் ,ஆவணப்பதிவுகள் ,தொல்பொருள் தடயங்கள் ,மொழியின் தாக்கம் ஆகியவை இந்த பன்மயப் பண்பாட்டில் ஆற்றிய பங்களிப்பைத் திறந்த மனதோடு மதிப்பிட வேண்டும் . அப்போதுதான் இந்த மழைக்காட்டு பன்மியத்தின் வேர்கள் எவை ,விழுதுகள் எவை என்கிற தெளிவு கிடைக்கும் .ஹரப்பாவுக்கு முன்பும் பின்பும் ஒரு கதை இருந்தது .கீழடிக்கு முன்பும் பின்பும் ஒரு கதை இருக்கிறது .இந்தப் பயணம் ஒரு புள்ளியில் தொடங்கி இன்னொரு புள்ளியில் முடியும் பயணம் அல்ல.யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என விசாலப் பார்வையால் மக்களை அரவணைக்கும் நூலாசிரியர் ஆர் .பாலகிருஷ்ணனை ஆரத் தழுவுகிறேன்.

 

“சிந்துவெளி மக்களின் எழுத்துகளை வாசித்தறியா முடியாச் சூழலில் ,அம்மக்கள் பேசிய மொழி எது ,அம்மக்கள் என்ன ஆனார்கள் ,எங்கே போனார்கள் ,சிந்துவெளி மக்களின் வாழ்வியல் அனுபவத்தின் மீள் நினைவுகளை இந்திய துணைக்கண்டத்தில் எந்த மொழியில் பண்டைய இலக்கியத்தில் கண்டறிய முடியும் ஆகிய வினாக்களுடன் , திராவிட மொழிக் குடும்பத்தின் தோற்றம் பற்றிய கருதுகோள்கள் ,தொல்தமிழ் தொன்மங்கள் பற்றிய மீள் நினைவுகள் ஆகியவற்றிற்கும் சிந்துவெளி பண்பாட்டிற்கும் தொடர்பு இருக்கிறதா என்கிற வினாவையும் , ஒரு கோட்டில் நிறுத்தி ஆய்வுக்கு உட்படுத்தும் இந்நூலில் மைய நோக்கத்தை வலுப் படுத்தும்  தேடல்கள் மேலும் தொடரும். தொடர வேண்டு.” என என்னுரையில் ஆர் .பாலகிருஷ்ணன் கூறியிருப்பதை வழிமொழிகிறேன்.

 

ஆம் , நூலாசிரியர் சொல்வதுபோல “ சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும்,”புலனாகத் தொடங்குகிறது.

 

குறிப்பு :

1] இது முழுமையான நூலறிமுகம் அல்ல .நான் அசைபோட்டவை அவ்வளவே .இதில் காணும் குறைகளுக்கு என் புரிதல் எல்லையே காரணமாகும் . மூலநூலை வாசித்து விவாதம் செய்க .

2] இப்பெரிய ஆய்வுக் களஞ்சியம் சாதாரண வாசகனையும் சென்றடைய உதவும் வகையில்  , கேள்வி –பதில் வடிவில் அறுபது எழுபது பக்க அளவில் ஒரு நூலாக்கித் தருவோன் இத்துறையில் தொண்டு செய்தோன் ஆவான் .

 

ஒரு பண்பாட்டின் பயணம் : சிந்து முதல் வைகை வரை ,

ஆசிரியர் : ஆர்.பாலகிருஷ்ணன் ,

வெளியீடு : ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிலையம் ,

மூன்றாவது குறுக்கு சாலை ,CPT வளாகம் , தரமணி ,சென்னை : 600 113 .

www.rmrl.in  / rmarl@rmarl.in  விற்பனை : பாரதி புத்தகாலயம் ,

பக்கங்கள் 646 + , விலை : ரூ.3350 /

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

14/11/2023.

 

 

 

 


0 comments :

Post a Comment