சொற்களில் இனிமை ; கருத்தினில் வலிமை காலத்தை மீறி நிற்கும் கவிமணி பாடல்கள் .
Posted by Labels: இலக்கியம்
சொற்களில் இனிமை ; கருத்தினில் வலிமை
காலத்தை மீறி நிற்கும் கவிமணி பாடல்கள் .
“கள்ளுடனே ஆடுகோழி
கலந்துண்ணும் காளிதேவி
உள்ளிருக்கும் கோயிலிலே
உரிமை எமக் கிலையோ ? ஐயா !
“கள்ளுடனே ஆடுகோழி
கலந்துண்ணும் காளிதேவி
பள்ளர் எமைக் கண்டவுடன்
பயந்தோடிப் போவாளோ !”
இந்த வரிகளை மட்டும் இப்போது நானோ நீங்களோ எழுதியிருந்தால் மதவெறி
பாசிச ஆர் எஸ் எஸ் கூட்டமும் சாதி வெறிக்கூட்டமும் தாம்தூம் என குதித்திருக்கும் .
வழக்கு மேல் வழக்கு போட்டிருக்கும் .
இப்போது என்ன செய்வார் ? இது மாபெரும் கவிஞர் கவிமணி தேசிய விநாயகம்
பிள்ளை எழுதியது ஆயிற்றே !
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை காந்தியவாதி . காந்தியைப் பின்பற்றி
தீண்டாமைக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்த மானுடன் . தீண்டாமைக்கு எதிராக காந்திய
வழியில் ; போரிட்டவர் அவரின் மூன்று பாடல்கள் காணக்கிடைக்கின்றது .ஒவ்வொரு வரியும்
நெருப்புக் கங்குகள் .
ஆண்டிப் பண்டாரம் மெட்டில் கவிமணி எழுதிய “தீண்டாதார் விண்ணப்பம்”
38 பத்திகளுடன் 150 வரிப் பாடல் [முதல் பத்தி 2 வரி பல்லவி ஆகும்] . அடுத்து , 34 வரிகளைக் கொண்ட “ அரிசனங்களுக்காக
வேண்டுதல்” இடம் பெறுகிறது , தீண்டாமையைப் பேயாக வர்ணிக்கும் “தீண்டாமைப் பேய்” 66
வரிப் பாடல் . அனைத்தையும் இங்கு பதிவிட கட்டுரை மிகப் பெரிதாகும் , வாசிப்பும் சுருங்கும்
என்பதால் சில தெறிப்பான வரிகளை மட்டுமே பார்வைக்கு கீழே தருகிறேன்.
“ காப்பாற்றி எமையாளும்
கடவுளரும் மக்களுள்ளே
பார்ப்பார்கள் பறையரென்றே
பகுப்பேதும் வைத்ததுண்டோ ?
கோவிலிலே தீட்டேறிக்
குடிபுகுமோ ? குளிப்பவரின்
பாவமெல்லாம் கங்கையிலே
படிந்திடுமோ ஐயா
பூவாரம் அணிந்த பிரான்
பொன்னடிக்கீழ் நின்றுஎளியேம்
தேவாரம் பாடில் அவர்
செவிக்கு இன்பம் ஆகாதோ ?
[ சிதம்பரம் தீட்தர்களுக்கு மண்டையிலும் உள்ளத்திலும் ஏறவில்லையே
இன்னும் ]
சாவியிட்டு பூட்டுமிட்டுச்
சந்நிதியில் காவலிட்டுத்
தேவிருக்கும் கோயிலை நீர்
சிறைச்சாலை ஆக்கலாமோ ?
எல்லார்க்கும் வரமளிக்கும்
எம்பெருமான் ஆலயங்கள்
வல்லார்க்குச் சொந்தம் என
வழக்காடல் முறையோ ? ஐயா ?”
மேற்கண்ட வரிகள் “ தீண்டாதார் விண்ணப்பம்” பாடலில் இடம்பெற்றவை
.
“ இந்தப் பிறப்பு வேண்டாம்
– இது ஒழிய
எந்தப் பிறப்பும் வரட்டும்.”
இவ்வரிகளை “ அரிசனங்களுக்காக வருந்துதல்” எனும் பாடலில் முதலில்
பல்லவியாய் வைக்கிறார் . இது மிகவும் ஆழமான பொருள்பொதிந்த வரியாகும் . மநு அதர்மத்தை
பின் பற்றாவிடில் அடுத்த பிறவியில் நாயாய் ,பன்றியாய்ப் பிறப்பாய் என சபிப்போரைப் பார்த்து
, அப்படி எந்தப் பிறப்பும் வரட்டும் ஆனால் இந்தப் பிறப்பு வேண்டாம் என்பது எவ்வளவு
வலிமிகுந்த வரிகள் . இப்பாடலில் மேலும் சொல்கிறார் ;
“ வழியில் விழுபவரைத்
தழுவி யெடாது படு
குழியில் உருட்டி விடும்
பழியை நிதமும் தேடும் . [ இந்தப்]
உண்ணீர் விரும்பி வீட்டை
நண்ணி ஒருவன் நின்று
கண்ணீர் விடினும் செம்பில்
தண்ணீர் அளித்திடாத
[ இந்தப்]
முங்கிக் குளிக்க குளம்
தங்கி இருக்க இடம்
எங்கும் இலாது எளியர்
பங்கப் படும் புவியில்
[இந்தப்]
“தீண்டாமைப் பேய்” பற்றி
கவிமணி சித்தரிப்பு இன்றைக்கும் பொருத்தமாய் இருக்கிறதே . சில வரிகளைப் பார்ப்போம்
.
“பண்டுபண் டேயுள்ள பேயாம்
– இந்தப்
பாரத நாட்டைப்பாடி ஆக்கிய பேயாம்
சண்டைகள் மூட்டிடும் பேயாம் – அது
சாத்திரி யார்பூசை கொண்டிடும் பேயாம்
பட்டப் பகல்வரும் பேயாம் – ஒரு
பக்கமே பார்க்கப் பழகிய பேயாம்
முட்டிக் குளித்திடும் பேயாம் – அது
முன்னேற்றம் கண்டு முட்டவரும் பேயாம்
[ முடமருகும் /முட்டவரும் என பதிப்புகளில் மாறிமாறி காணப்படுகிறது]
கோவில் வாசற்படியில் – தினம்
கும்மாளி கொட்டி குதித்தாடும் பேயாம்
வாவிக் கரையிலும் நிற்கும் – அங்கு
வந்த மனிதரைத் துரத்தும் .
வேதக் கடலைக் கலக்கும் – அதில்
வேண்டும் விதிவலை வீசிப் பிடிக்கும்
சாதிப் பிளவை உண்டாக்கும் – எங்கும்
‘சண்டாளர் ! சண்டாளர்’ என்றே முழக்கும் .
தாகித்து வந்தவருக்குச் – செம்பில்
தண்ணீர் அளித்திட சம்மதிக்காது
தேடி வருவோரை அன்பாய் – வீட்டுத்
திண்ணையில் உடகார வைக்க வொட்டாது .
கண்ணுதல் ஆலயம் சென்றால் – அங்கே
கையிற் பிரசாதம் போட வொட்டாது;
எண்ணி வரையளந் திட்டே – அதற்கு
அப்புறம் இப்புறம் நில்லென்[று] அதட்டும்
முன்னம் பெரியோர் இதனை – வெட்டி
மூடிப் புதைத்தும் , உயிர்வலிகொண்டு
பின்னும் முளைத்ததே ஐயா ! – இதை
நாட்டைவிட்[டு] ஓடித் துரத்துவோம் ஐயா !”
மெய்தானே ! காந்தியின் பாதையில் தீண்டாமையை எதிர்க்க கவிமணி
முன்வந்தாலும் , தமிழ் மண்ணுக்கே உரிய வைதீக எதிர்ப்பும் இயல்பாகப் பிணைந்து விடுகிறதே
. அதுதானே எம் தமிழ் மண்.
புதிய இளைஞர்கள் கவிமணியை அதிகம் அறிய மாட்டார்கள் எனவேதான்
நீண்ட மேற்கோள்கள் தவிர்க்க முடியாததாகிறது.
பெண் விடுதலையில் மிகவும் நாட்ட முள்ளவர் கவிமணி . அவர் எழுதிய
“ பெண்ணின் உரிமைகள்” என்கிற பாடலின் ஆரம்ப வரிகளை கிட்டத்தட்ட பலமேடைகளில் கேட்டிருப்போம்
.
“ மங்கையராய்ப் பிறப்பதற்கே
– நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும் அம்மா !
பங்கயக் கைநலம் பார்த்தலவோ – இந்தப்
பாரில் அறங்கள் வளரும் அம்மா !”
அடுத்து வருகிற 52 வரிகளை நிச்சயம் கணிசமானோர் வாசித்திருக்கவே
மாட்டோம் . பெண்ணைக் கொண்டாடிய வரிகள்தாம் அவை . அன்றையப் பார்வை எல்லைக்கு உட்பட்டுத்தானே
பொதுவாய் எந்தக் கவிஞரும் சிந்திப்பார். கவிமணியும் அப்படித்தான். .ஆயினும் கற்புச்சங்கிலியோ
, மூடத்தனங்களையோ , போலிப் பெருமையோ அதில் இல்லை . மாதிரிக்கு ஒரு சில பத்திகள் பார்ப்போம்.
“ அல்லும் பகலும் உழைப்பவர்
ஆர் ? உள்ளத்து
அன்பு ததும்பி எழுவது ஆர் ?
கல்லும் கனிய கசிந்துருகி – தெய்வக்
கற்பனை வேண்டித் தொழுபவர் ஆர் ?”
[ தெய்வக் கற்பனை என்பதை அடிக்கோடிடுவீர்]
“ ஊக்கம் உடைந்து அழும் ஏழைகளைக் – காணில்
உள்ளம் உருகித் துடிப்பவர் ஆர் ?
காக்கவே நோயாளி அண்டையிலே – இரு
கண்ணிமை கொட்டா[து] இருப்பவர் ஆர் ?
இந்திய கண்ணீர் துடைப்பவர் ஆர் ? – பயம்
சிந்தனை அகன்றிடச் செய்பவர் ஆர் ?
முந்து கவலை பறந்திடவே – ஒரு
முத்தம் அளிக்க வருபவர் ஆர் ?
அன்பினுக் காக வாழ்பவர் ஆர் ? – அன்பில்
ஆவியும் போக்கத் துணிபவர் ஆர் ?
இன்ப உரைகள் தருபவர் ஆர் ? – வீட்டை
இன்னகை யால்ஒளி செய்பவர் ஆர் ?
மங்கைய ராகப் பிறந்ததனால் – மனம்
வாடித் தளர்ந்து வருந்துவதேன் ?
தங்கு புவியில் வளர்ந்திடும் – கற்பகத்
தாருவாய் நிற்பது நீயல்லவோ ?”
இந்தக் கவிதையை அன்றைய நாஞ்சில் மண்ணில் நிலவிய சூழலோடு பொருத்திப்
பார்ப்பின் வலிமை விளங்கும்.
தாய் வழி சமூகமே ஆதியில் நிலவியது . சொத்துடைமை வந்த பின்தான்
தந்தை வழி சமுதாயமும் லிங்க வழிபாடும் வந்தது என்பது சமூக ஞானம் . அந்த தாய்வழி சமூகத்தின்
மிச்ச சொச்சம் கேரளாவில் நிலவியது . தாய் வழி சமூகத்தின் நல்ல கூறுகளைத் தொலைத்துவிட்டு
தீமையை மட்டுமே கொண்டிருந்தன இந்த மிச்ச சொச்சம் .
திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்ப்பட்ட அன்றைய நாஞ்சில் நாட்டிலும்
அதனைக் காணலாம் . மக்க வழி ,மருமக்க வழி என்ற சொற்றொடர்கள் புழக்கத்தில் இருந்தன .
மருமக்க வழியில் சொத்து என்பது சகோதரியின் வாரிசுகளுக்கு உரியது என்பதால் ஆண்கள் பொறுப்பற்றும்
,கட்டிய மனைவியை பிள்ளைகளைக் கவனியாமலும் பாலியல் வேட்கையாளராகவும் திரிந்தனர் .
இந்நிலையில் “மருமக்கள்வழி
மான்மியம்” என்கிற நூலை எழுதி அதற்கு எதிராய் இளைஞர்கள் போராட வழி செய்தவர் கவிமணி
. போராட்டத்தின் முன்நின்று வென்றவர் .
நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய அங்கதக் கவிதைநூலாகும். இது நாஞ்சில்நாட்டில் நிலவி வந்த 'மருமக்கள் வழி' சொத்துரிமை முறையின் தீங்குகளை அந்த முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சொல்வதுபோல பாடப்பட்டிருக்கின்றது.
நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ஒரு சமுதாய அங்கதப்
பாட்டாகும். நகைச்சுவையும் கிண்டலும் நிறைந்த அப்பாட்டுக்கு நிகரானதொரு ‘அங்கதப்பாட்டு’
இதுகாறும் தமிழில் தோன்றவில்லை.” என்பார் தமிழண்ணல் .
கவிமணியின் மழலைப் பாடல்களையும் கதைப்பாடல்களையும்
பேசப்புகின் கட்டுரை நீளும். சொல்லாமலும் முடியாது .
பெண்கள் சைக்கிள் ஓட்ட பயிற்சி கொடுத்தது
அண்மையில். எண்பதுகளில் அறிவொளி இயக்கம்தான் முன் கை எடுத்தது .
அரசு இலவச சைக்கிள் கொடுத்தது அதன்பின்னரே
. ஆயின் அந்தக் காலத்திலேயே சைக்கிளை குறித்த மழலைப் பாட்டை தங்கைகளை நோக்கிப் பாடியவர்
கவிமணி.
“ தங்கையே பார் ! தங்கையே பார் !
சைக்கிள் வண்டி இதுவே பார் !”
எனத் தொடங்கி..
“ ஒன்றன் பின் ஒன்றாக
உருளும் பைதாக்களைப் பார் !
அக்காளும் தங்கையும் போல்
அவை போகும் அழகைப் பார் !’
என முடியும் .பெண்களை நோக்கி சைக்கிளைத்
தள்ளிய கவிமணியின் பார்வை நேர்த்தியானது .
கூண்டுக்கிளி எனும் பாடல் சிறுவனும்
கிளியும் உரையாடுவதுபோல் ஆமைந்திருக்கும் . “கூட்டில் வாழும் வாழ்வினிலே குறைகள் ஏதும்
உண்டோ சொல் ?” என சிறுவன் கேட்பான் .கிளி பதில் சொல்லும்;
“ சிறையில் வாழும் வாழ்வுக்குச்
சிறகும் படைத்து விடுவானோ ?
இறைவன் அறியா பாலகனோ?
எண்ணி வினைகள் செய்யானோ ?
பாலும் எனக்குத் தேவை இல்லை
பழமும் எனக்குத் தேவை இல்லை
சோலை எங்கும் கூவி நிதம்
சுற்றித் தெரிதல் போதுமப்பா ?”
இதுபோல் சுட்டிக்காட்ட அநேக பாடல்கள்
உண்டு .
கவிமணியின்
மழலைப் பாடல்களையும் , கதைப் பாடல்களையும் நல்ல வண்ண ஓவியங்கள் ,படங்களுடனும் நூலாக
அச்சிடல் இப்போது காலத்தின் தேவையாகும் . பாரதி புத்தகாலயமும் , த மு எ க ச வும் இதில்
கவனம் செலுத்துவார்களாக !
“ பந்தம் எரியுதோடி ! கண்களைப்
பார்க்க நடுங்குதடி!
குத்தும்வாள் ஈட்டியெல்லாம் – கூடவே
கொண்டு திரியுதடி “
எனத் தொடங்கும் “புலிக்கூடு” பாடல் வில்லியம் ப்ளேக் எனும் ஆங்கிலக்
கவிஞரின் பாடலைத் தளுவி கவிமணி பாடியது ஆகும் . இதுபோல் நிறைய செய்துள்ளார் .
உமர்கயாம் கவிதைகளை முதலில் மொழிபெயர்த்தவர்
இவரே . அந்த மொழிபெயர்ப்பில் குறை காண்போர் உண்டு .ஆயினும் எட்டுத் திக்குக் சென்று
கலைச் செல்வம் யாவையும் தமிழில் கொண்டு சேர்க்கும் கவிமணியின் பேரவாவும் முயற்சியும்
நமக்கெல்லாம் முன்னோடி .
மத நம்பிக்கை கொண்டவர் ஆன்மீக ஈடுபாடும்
உண்டு , ஆயின் மதவெறி , வெறுப்பு அரசியல் ,மூடத்தனம் அண்டா நெருப்பு அவர் .சித்தர்
மரபு சார்ந்த பார்வை கொண்டவர் எனவும் சொல்லலாம் . “ கோவில் வழிபாடு” எனும் தலைப்பில்
அவர் பாடிய பாடலை இங்கு முழுதாகப் பகிர்கிறேன் .அவர் உள்ளம் நாடும் உண்மை ஒளி அதில்
பளிச்சிடும் .
“ கோவில் முழுதுங் கண்டேன் – உயர்
கோபுரம் ஏறிக்கண்டேன்.
தேவாதி தேவனையான் – தோழி
நான் தேடியும் கண்டிலேனே.
தெப்பக்குளம் கண்டேன் – சுற்றித்
தேரோடும் வீதி கண்டேன்
எய்ப்பில்வைப் பாம் அவனை – தோழி
ஏழையான் கண்டிலேனே !”
சிற்பச் சிலை கண்டேன் – நல்ல
சித்திர வேலை கண்டேன்.
அற்புத மூர்த்தியினைத் – தோழி
அங்கெங்கும் கண்டிலேனே.
பொன்னும் மணியும் கண்டேன் – வாசம்
பொங்கும் பூமாலை கண்டேன்.
என்னப்பன் எம்பிரானைத் – தோழி
இன்னும்யான் கண்டிலேனே .
தூபமிடுதல் கண்டேன் – தீபம்
சுற்றி எடுத்தல் கண்டேன்.
ஆபத்தில் காப்பவனைத் – தோழி
அங்கேயான் கண்டிலேனே.
தில்லைப் பதியும் கண்டேன் – அங்குச்
சிற்றம்பலமும் கண்டேன்.
கல்லைக் கனிசெய்வோனைத் – தோழி
கண்களாற் கண்டிலேனே.
கண்ணுக்கு இனிய கண்டு – மனதைக்
காட்டில் அலையவிட்டு
பண்ணிடும் பூசையாலே – தோழி
பயன் ஒன்றில்லை ,அடி !
உள்ளத்தில் உள்ளான் அடி – கோயில்
உணர வேண்டுமடி !
உள்ளத்தில் காண்பாய் எனில் – கோயில்
உள்ளேயும் காண்பாய் அடி !”
மேலும் சில கவிதைகளின் தலைப்பை எடுத்துக்காட்டாய்ச் சொன்னாலே
கவிமணி உள்ளம் தெரியும் ; செல்வமும் வறுமையும் , ஏழைச் சிறுமியர் மனப்புழுக்கம் யுத்தக்
கொடுமை ,தொழிலாளியின் முறையீடு ,வேலையில்லாத் திண்டாட்டம் ,சர்வாதிகாரி ,உடல் நலம்
பேணல் . இவை அவர் தேர்ந்த பாதையைச் சொல்லும்.
கவிமணி பற்றி பேசப்பேச விரியும் . இடம் கருதியும் வாசகர் மனோநிலை
கருதியும் ஒரே ஒரு செய்தியுடன் நிறைவு செய்கிறேன்.
[ கவிதை குறித்து கவிமணியின் தெளிந்த பார்வையை நேற்றே பதிவிட்டுவிட்டதால்
இங்கு சேர்க்கவில்லை .இது தனிக்கட்டுரை ஆகும் போது இதனை இணைக்கலாம்.]
நாஞ்சில் நாட்டை தாய்த் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்திற்கு
தோள் கொடுத்தவர் கவிமணி . 1950 ஜனவரியில் நடைபெற்ற குமரி எல்லை மாநாட்டில் ப தேவி பிரார்த்தனையோடு
உரையைத் தொடங்கியவர் கவிமணி. அந்த பிரார்த்தனையிலும் தமிழ்நாட்டோடு இணைய வரங்கேட்டவர்
. அம்மாநாட்டில் கவிமணி ஆற்றிய உரை அவரின் உரைகள் நூல் தொகுப்பில் உள்ளது .அப்பாடல்
கீழே !
“ தென் எல்லை ,காத்து
ஆளும் தேவி ! குமரீ ! நின்
பொன்னடியைக் கும்பிட்டுப் போற்றுகின்றேன் – மன்னுபுகழ்
செந்தமிழ் நாடு ஒன்றாகித் தேவர் நா[டு] ஒத்து உலகில்
சந்ததம் வாழ்வரம் தா !”
கவிமணியைக் குறித்து நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை நெக்குருகிச்
சொன்னவற்றை முழுதும் சொல்லப்போவதில்லை ,மாதிரிக்கு நாலுவரிகள் மட்டும் காணீர் !
“தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை
தினமும் கேட்பது எம் செவிப்பெருமை
ஆசிய ஜோதியெனும் புத்தர் போதம்
அழகுதமிழில் சொன்னான் அது போதும்.”
புத்தர் பெருமை பேசும் ஆசிய ஜோதி
,உமர்கயாம் ,மலரும் மாலையும் ,காந்தளூர் ஆராய்ச்சி , தேசிய கீதங்கள் , காதல் பிறந்த
கதை ,மருமக்கள் மான்மியம் ,குழந்தைப்பாடல்கள்
உட்பட பல நூல்கள் யாத்தவர் . கம்பராமாயணப் திவாகரம் ,நவநீதப் பாட்டியல் முதலிய
ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்தவர்.சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்பேரகராதி உருவாக்கத்தில்
மதிப்பியல் உதியாளராய் பணியாற்றியவர் .
1876 ல் பிறந்து 1954 ல் மறைந்த கவிமணி
தன் 78 ஆண்டு கால வாழ்வில் ஆழமான சுவடுகளைப் பதித்துச் சென்றுள்ளார் . கவிமணி காந்தியக்
கவிஞர் ,தேசியக் கவிஞர் ,மழலைக் கவிஞர் , சமுதாயக் கவிஞர் என பன்முகம் கொண்டவர் .
அவர் தான் வாழ்ந்த காலத்தில் முற்போக்கின்
பக்கமே நின்றார் . அவர் முற்போக்கு ஜனநாயக் கவியே . அவரை மதவெறி சக்திகள் கடத்திக்
கொண்டு போகாதிருக்க விழிப்போடு இருப்போம் . அவரைக் கொண்டாடுவதும் நம் கடந்தானே .
[ அவர் பிறந்த நாஞ்சில் மண்ணில் “தனித்துவம் நமது
உரிமை .பன்மைத்துவம் நமது வலிமை.” என்ற முழக்கத்துடன் தமுஎகச மாநில மாநாடு 2022 ஆகஸ்ட் 13 -15 தேதிகளில் நடைபெறும் வேளையில் அவரை
நான் நினைவு கூர்வது நம் காலத்தின் தேவையன்றோ ! ]
சு.பொ.அகத்தியலிங்கம்.
29/7/2022.
0 comments :
Post a Comment