உரைச் சித்திரம் : 16.
வளமை ஓர்புறம் வறுமை ஓர்புறம் : தொடர்கதை
பசியை ஓர் நோயாகச் சொன்னது தமிழ் மரபாகும் .பசிப்பிணி அகற்ற
கனவு கண்ட இலக்கியங்கள் தமிழில் ஏராளம் .இதன் பொருள் தமிழ்ச் சமூகம் பசிப்பிணியை பெரும்
சவாலாகவே பார்த்து வந்திருக்கிறது ; அதனை வேரறுக்க தொடர் கனவு கண்டு வந்துள்ளது என்பதே
ஆகும் . சங்க காலம் பொற்காலம் என்போர் ,அதன் இன்னொரு பக்கத்தை சொல்லுவதில்லை .இன்று
அப்பக்கம் சிறிது செல்வோமா ?
பசிப்பிணி குறித்த ஓரிரு காட்சிகள் பார்ப்போம் ;
தன்மானம் மிக்க ஒருவர் அதனை காத்து நிற்க முனைவரா , அல்லது
தன்மானத்தை உதறிவிட்டு கூனிக்குறுகி பிறரிடம் ஈயென்று இரந்து நிற்பாரா ? நாலடியார்
இது குறித்து பேசியுள்ளது .
பசி நோயால் உடல் வாடி வதங்கி எலும்புக் கூடாகி அழியும் நிலை நேர்ந்தாலும், தகுதியில்லாதார் பின்னே சென்று தமது வறுமையை எடுத்துக் உதவி கேட்பாரோ தன்மானம் மிக்கவர்கள் . மாட்டார்கள்
.நிச்சயம் மாட்டார்கள் . அதே வேளையில் தான் தன் வறுமையை எடுத்துச்
சொல்லாமலே பார்த்தவுடன்
குறிப்பால் அறிந்துகொள்ளும் பேரறிவு உடையாரிடம் பேரன்பு உடையவரிடம் தமது துன்பத்தினைக் கூறாமலிருப்பாரோ? கூறுவார்கள். ஆக ,தன் வறுமையை எடுத்துச் சொல்லி உதவி கேட்கும்
போதும் பண்பில்லாதவரிடம் கேட்கக்கூடாது .
புறநானூற்றில் இன்னொரு காட்சி . சற்று வேடிக்கையானதும்கூட
.புலவர் கழைதின் யானையார் பாடி பரிசில் பெற கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில்
ஓரியிடம் போகிறார் . அந்த நேரம் வல்வில் ஓரி என்ன மனோ நிலையில் இருந்தாரோ ! இல்லை
என கைவிரித்து விட்டார் . விடுவாரா புலவர் “ நீர் வள்ளல்தான் .குறைத்துப்
பேசமாட்டேன் .ஆயின் நான் வந்த நேரமும் சகுனமும் சரியில்லை” என தன்னை நொந்து
கவிபாடுகிறார் . அதை முழுதாகப் பார்ப்போம்.
ஈ என அதாவது தாவென கை நீட்டி யாரோ ஒருவரிடம் பிச்சை கேட்பது யாராயினும் மிகவும் இழிவு தருவதாகும். வேதனை தருவதாகும்
.அப்படியும் மானமிழந்து ஒருவர் கேட்ட பிறகும் ஈயேன்
கொடுக்கமாட்டேன் என கொடுக்காமல் இருப்பது அதைவிட கேவலமானதும் இழிந்ததும் ஆகும்.
இதையே இன்னொரு வகையிலும் சொல்லலாம் .இதோ வாங்கிக் கொள் என ஒருவர் கொடுப்பது உயர்வானது ஆகும்;
அப்படிக் கொடுத்தாலும் அதை ஏற்க மாட்டேன் என மறுப்பது அதைவிட உயர்வானது ஆகும்.
உப்புக் கரிக்கும் கடலில் அளவில்லாமல் நீர் நிறைந்து இருந்தாலும் அதனை நாடி தாகம் தணிக்க ஒருவரும் செல்வது இல்லை. [ இப்போது கடல் நீரை குடி நீராக்குகிறோம் அது வேறு
தளம் ]
பசுமாடும் , கால்நடைகளும் ஏனைய விலங்குகளும் சென்று தண்ணீர் குடித்து கலக்கி சேறாக்கிவிட்ட சிறு நீர்த் தேக்கம் என்றாலும் குடிநீருக்காக அதனை நோக்கிப் பலரும் செல்வார்கள்;
குடிநீர் என்பதால் அதற்கு வழிகள் பல தானாக அமைந்தும் விடுகின்றன.
வள்ளியோரை நாடி உள்ளி அதாவது வல்வில் ஓரியை நாடி அவர் பரிசில் தருவார் என்று கருதிச் செல்கின்றனர்.
அவரை நாடிப் போகும்
பாதையோ பலரும் போய் போய் தேய்ந்து பழகிய பாதை பாதை. தப்பித் தவறி அங்கு எதிர்பார்த்த பரிசில் கிடைக்கவில்லை என்றாலும் அங்கு போவோர் அப்பரிசில் தரும் மேன் மக்களைக் குறைவு பட இழித்துப் பேசமாட்டார்கள்.
பரிசில் கிடைக்காவிடினும் வழங்குபவரைக் குறை கூறுவது இல்லையாம். தம் சகுனம் சரி இல்லை என்று தம்மைத் தாமே தேற்றிக் கொள்வராம். தாம் சென்ற நேரம் சரி அல்ல என்றுதான் பேசுவார்களாம்.
யாரென பேதம் பார்க்காமல் பொழியும் மழை போல் , ஆம் மாரி போல வாரி வழங்கும் இயல்பு உன்பால் உள்ளது; அதனால் எப்பொழுதும் உன்னை வெறுப்பது என்பது இல்லை.
இப்படி பெரிய ஐஸ் கட்டியைத் தூக்கி தலையில் வைத்தபின் கொடுக்காமல்
இருந்திருப்பார்பாரோ ?
இன்னொரு காட்சி ,
குடுமி வைத்திருக்கும் தமது மகன் பசியால் துடிக்கும் காட்சியை
புலவர் பெரும்சித்திரனார் பார்க்கின்றார் . உண்ண உணவில்லாது பசியோடு தாயிருக்கிறாள் . அந்த தாயின் முலைக் காம்பை சப்பிச் சப்பி பால் இன்றி ஏமாறுகிறது குழந்தை . பால் இல்லாததால் கூழாவது கஞ்சியாவது கிடைக்குமா என பாத்திரத்தைத் திறந்து திறந்து பார்த்து, உணவு ஏதுமில்லாமல் பாத்திரம் காலியாக
இருப்பதைக் கண்டு குழந்தை மேலும் வீறிட்டு அழகிறது .அதனைக் கண்டு தந்தையான பெருஞ்சித்திரனார் கலங்குகிறார் .
இப்படி 160 வது புறநானூற்றுப் பாடலில் காட்சி விரிகிறது .இதன்
தொடர்ச்சி இன்னும் வலுவாய் 164 வது பாடலில் வெளிப்படுகிறது .
வள்ளல் குமணன் காட்டில் இருக்கிறார் .ஆனாலும் விரட்டிச் சென்று
புலவர் பெருஞ்சித்திரனார் தான்படும் கொடுந் துயரத்தைச் சொல்லி உதவி கேட்டு
நிற்கிறார் . கொடுக்காவிடில் இவ்விடத்தை விட்டு நகர மாட்டேன் என அடம் பிடிக்கிறார்
.
அடுப்பு எதற்கு ? சோறு சமைப்பதற்குத்தானே ,
ஆனால் ,தன் வீட்டு அடுப்பில் பலநாள் சோறே சமைக்காததால் காளான் பூத்துக் கிடக்கிறது.
அதனால் தம்
பிள்ளைகளுக்கு பசியாற்ற முடியவில்லையே என வருந்தி என் மனைவியின் ஈர இமை கொண்ட கண்கள் விடாது கண்ணீர் மழை பொழிந்துகொண்டிருக்கின்றன.
அதுமட்டுமா ? பலநாள்
சாப்பிடாததால் அவள் முலையில் பால் சுரக்கவில்லை . ஆயினும் அதையெல்லாம் அறியாத குழந்தை மூலைக் காம்பை சப்பி சப்பி பால் வராமல் பசி
பொறுக்காமல் தேம்பித் தேம்பி அழுகிறது . குழந்தை முகத்தைப் பார்த்து தாயின் கண்களிலும் கண்ணீர்மழை
கொட்டுகிறது.
அவள் துன்பத்தைப் காணச் சகிக்காமல் நான் உன்னை நோக்கி வந்துள்ளேன்.
என் கொல்வறுமை நிலை அறிந்து தேவையானதை நீ நல்கும்வரை உன்னை விட்டு நான் போகமாட்டேன்.
நீயோ வறிய யாழிசைக் கலைஞர்கள்
வறுமையைப் போக்கும் உயர்ந்த குடியில் பிறந்தவன் ஆயிற்றே.
இப்படி குமணனிடம்
யாசித்து நின்றார்.
இப்படி நிறைய
காட்சிகளைச் சுட்ட இயலும் .இப்போது இன்னொரு காட்சியோடு முடிப்போம் .
மன்னனைப்
புகழ்ந்து யாசகம் கேட்கும் பாணர்களுக்கு கொடுக்க ஏதுமின்றி மன்னனே இருக்கிறான் .ஆயினும்
அவன் நெஞ்சில் ஈரம் இருக்கிறது .கவுரவம் பார்க்காமல் இன்னொரு வள்ளலைப் புகழ்ந்து சோறு கிடைக்கும் இடம் நோக்கி கை நீட்டுகிறான் .இது
மிகவும் வித்தியாசமான காட்சி .
அந்த
மன்னன் சோழன் குளமுற்றத் துஞ்சிய கிள்ளி வளவன் .அவன் காட்டிய வள்ளல் சிறுகுடி கிழான்
பண்ணன் .இதனைப் பாடியதும் அந்த மன்னனே .
நான் வாழும் நாளெல்லாம்
சேர்த்து அந்த பாணன் வாழ்க !
நிறைய பழங்கள் பழுத்திருக்கும் மரத்தில் தமக்கேற்ற உணவு இருப்பதால் ; அம்மரம் நாடிச் சென்று
மகிழ்ச்சியால் பறவைகள் ஆரவார ஒலி எழுப்பும் .
அதுபோல அங்கே ஒலி கேட்கிறதே அது என்ன ஒலி ?
சிறுகுடி கிழான் பண்ணன்
வீட்டில் பாணர்கள் கூட்டம் கூட்டமாய் கள்
குடித்து , வயிறு முட்ட உணவு உண்டு , மகிழ்ந்து எழுப்பும் பேரொலி அது.
அவன் இல்லத்தில் அந்தப் பேரொலி எப்போதும்
கேட்டுக்கொண்டே இருக்கிறது.
அப்போது மழை
இல்லாவிடினும் சீக்கிரம் மழை பெய்யும் என இருண்ட வானம் பார்த்து அறிந்த எறும்புகள் , தன் முட்டைகளை எடுத்துக்கொண்டு
வலிமையான மேட்டுநிலம் நோக்கி வரிசை
வரிசையாகச் செல்கின்றன.
அதுபோலவே சிறுவர்
சிறுமியர் தம் குடும்பத்தார்க்குத் தந்த சோற்று மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு வரிசையாச் செல்கின்றனர்.
பண்ணன் சாதாரண ஆளல்ல ; பசிப்பிணியைப் போக்கும் மருத்துவன்.
அவனை நான் பார்த்தாக வேண்டும்.எனக்கு சொல்லுங்கள் அவன் இல்லம் அருகில்
உள்ளதா ? தொலைவில் உள்ளதா ?
ஆக
, சேரர்
காலம் பொற்காலம் ,சோழர் காலம் பொற்காலம் ,பாண்டியர் காலம் பொற்காலம் , குப்தர் காலம்
பொற்காலம் , மொகலாயர் காலம் பொற்காலம் , அவர் காலம் பொற்காலம் ,இவர் காலம் பொற்காலம்
என்பதெல்லாம் காதில் பூமாலை சுற்றுகிற வேலை .உண்மையல்ல .
எல்லா காலத்திலும் வளமை ஒரு பக்கம் ; வறுமை ஒரு பக்கம் என இரண்டு
கூறுகள் தொடர்கதையே ! ஒன்றை மட்டும் பார்த்துவிட்டு மொத்தமும் இப்படித்தான் என்பது
அறியாமை . இரண்டையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதுதான் நேர்மையான அணுகுமுறை
.
வளமை ஓர்புறம் வறுமை ஓர் புறம் தொடர்கதை ஆவதுவோ ?
பசிப்பிணி இல்லா பொற்காலம் நோக்கி பயணிக்க வழி காண்போம் .
என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று |
நாலடியார் 292.
ஈ என இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே
ஆவும் மாவும் சென்று உணக் கலங்கிச்
சேற்றொடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர் பல ஆகும்
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர்ப் பழியலர் அதனால்
புலவேன் வாழிய ஓரி விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே
புறநானூறு பா. 204
“குடுமி புதல்வன் பல்மான் பால்இல் வறுமுலை
சுவைத்தனன் பெறாஅன்,
கூழும் சோறும் கடைஇ ஊழின் உள்இல்
வறுங்கலம் திரிந்து, அழக் கண்டு”
புறநானூறு பா. 160
“ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்
ஆம்பி பூப்ப, தேம்பு பசி உழவா
பாஅல் இன்மையின் தேலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறு அழுஉம் தன்மகத்து முகம் நோக்கி
நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண் என்
மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ
நிற் படர்ந்திசினே நல் போர்க் குமண!”
புறநானூறு பா. 164
.
“யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய
பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர் பழுமரம் புள் இமிழ்ந்தன்ன
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வன்புலம் சேரும்
சிறு துண் எறும்பின் சில்ஒழுக்கு ஏய்ப்ப,
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்
மற்றும் மற்றும் வினவுதும்; தெற்றென
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே”
புறநானூறு பா. 173
வளமை ஓர்புறம் வறுமை ஓர் புறம் தொடர்கதை ஆவதுவோ ?
பசிப்பிணி இல்லா பொற்காலம் நோக்கி பயணிக்க வழி காண்போம் .
சுபொஅ.
26/7/2022.
0 comments :
Post a Comment