குருதி வழியும் ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கு பின்னால் ….. …… …. ….. ….. ????
Posted by Labels: நூல் மதிப்புரை
“ நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும் “ என ஒரு கமெடி தமிழ் சினிமா வந்தது .அதுபோல நல்லா இருந்த நாட்டிலெல்லாம் சிஐஏ புகுந்து நாசமாக்கிய கதையே முதல் அத்தியாயம் .
குருதி வழியும் ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கு பின்னால் ….. …… …. ….. ….. ????
சு.பொ.அகத்தியலிங்கம்.
“அமெரிக்காவில் ஏன் ஆட்சி கவிழ்ப்பு நடக்கவில்லை ? அமெரிக்காவில் அமெரிக்க நாட்டு தூதரகம் இல்லை.” என்கிற புகழ் பெற்ற நகைச்சுவையை இந்நூலில் ஓரிடத்தில் நூலாசிரியர் விஜய் பிரசாத் சொல்லுகிறார் .
அது வெறும் நகைச் சுவை அல்ல அனுபவ உண்மை .நூல் முழுக்க ஒவ்வொரு ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னாலும் உள்ள அமெரிக சதிக்கரம் தோலுரிக்கப்படுகிறது .
“ வாஷிங்டன் தோட்டாக்கள்” - நூலின் தலைப்பு மிகவும் வசீகரமாய் உள்ளிழுக்க , வாசிக்கத் துவங்கிய நான் அசந்துவிட்டேன் . குறுகத் தறித்த குறளைப் போல , நூறு ஆண்டுகளுக்கு மேலாக உலகை வாட்டி வறுத்து வாயில் போட்டு மென்று கொண்டிருக்கும் ஏகாபத்திய சதிவலையை 180 பக்கங்களில் தந்துவிட்டார் விஜய் பிரசாத் .
மூன்று பாகமாக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நூலை மிகச் சரியாக என்னால் அறிமுகம் செய்ய முடியுமா என ஐயுறுகிறேன் .அவ்வளவு அடர்த்தி , அவ்வளவு ஆழம் ,அவ்வளவு துல்லியம் .
“இடதுசாரி திருப்பம் எளிதல்ல” என்ற நூல் மூலம் தமிழ் வாசகர் பரப்பில் ஏற்கெனவே அறிமுகமானவர்தான் விஜய் பிரசாத் .
“ உலக மக்களுக்கு இழைக்கப்பட்ட துயரங்களை விவரிக்கிற புத்தகங்களும் ,ஆவணங்களும் என்னைச் சுற்றிக் கிடக்கின்றன ,என் நூலகத்தின் ஒரு பகுதி முழுவதும் அத்தகைய புத்தகங்களும் அரசு ஆவணங்களும் …” என ’கோப்புகள்’ என்ற பெயரிலான முன்னுரையில் குறிப்பிடுவது நம்மை மிரட்ட அல்ல ; நூல் முழுவதும் அவற்றின் சாறு வடிகட்டி இறக்கப்பட்டு சுண்ட காய்ச்சப்பட்டுள்ளதை வாசகர் ஒவ்வொருவரும் உணர்வர் .
“ ஆசிய ஆப்பிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளில் மக்கள் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் ; தங்களை ஏழ்மைபடுத்தி கொள்வதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் வணிகம் கொழுப்பதை ஏற்க மறுக்கிற மக்கள் கொன்று குவிக்கக்கப்படுகிறார்கள் .இப்படுகொலையில் அமெரிக்காவின் பங்கு பாத்திரம் இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது .” என முன்னுரையில் மிகச் சரியாகச் சுட்டுகிறார் பொலிவியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஈவோ மொரேல்ஸ் ஆய்மா ,
மேலும் மொரேல்ஸ் எச்சரிக்கிறார் ,”உலக மக்களுக்கு எதிராக தன் தோட்டாக்களைப் பயன்படுத்த வாஷிங்டன் பிடிவாதமாக இருப்பதால் மனிதகுல விடுதலை தொலை தூரத்தில் உள்ளது .”
ஆம் . இந்த நூலை வாசித்து முடித்ததும் நம்மிடமும் அதே உணர்வு கொப்பளிக்கும் . ஆயின் ஒரே ஒரு சிரமம் என்னவெனில் ஏற்கெனவே சர்வதேச அரசியலில் ஈடுபாடுள்ள ஒருவர் இந்நூலை எளிதாக வாசித்துப் புரிந்து கொள்வதுபோல் புதிய இளைஞர்கள் புரிந்துகொள்ள இயலாது .ஒவ்வொரு வரியையும் ஊன்றி வாசித்து விவாதித்தே அறிய முடியும் . ஏனெனில், அதில் கூறப்பட்டுள்ள நாட்டின் அண்மை வரலாற்றை கொஞ்சமேனும் அறிந்தால் மட்டுமே தொடர்ந்து உள்வாங்க இயலும் .
தோழர் .தா.பாண்டியன் எழுதிய சிஐஏ குறித்த நூலையும் , அண்மையில் பரபரப்பாக நம்மால் வாசிக்கப்பட்ட ஜான் பெர்க்கின்ஸின் “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” நூலையும் அதுபோன்ற சில நூல்களையும் வாசித்திருந்தால் இந்நூலை முழுமையாக உள்வாங்க இயலும் . இல்லையேல் ஒர் நல்ல ஞானமுள்ள தோழரின் துணையோடு கூட்டாக வாசிப்பது அதிகப் பலன் தரும் .
“போருக்குப்
பிந்தைய நாளில்
போரொன்று இருகுமானால்
போருக்குப் பின்
நாளொன்று இருக்குமானால்
போருக்குப் பின்
எனக்குக் கரங்கள் இருக்குமானால்
போருக்குப் பின்
அன்பு இருக்குமானால்
அன்பு செலுத்த எதுவும் இருக்குமானால் ..”
என்ற கொலம்பியக் கவிஞர் ஜோடாமரியோ அர்பெலேஸ் கவிதையை முதல் பாகத்திற்குள் நுழையும்முன் சொல்லி நூலாசிரியர் நமக்குள் மின்சாரம் பாய்ச்சுகிறார் .
இந்நூலின் முதல் அத்தியாயம் , பனிப்போர் காலகட்டத்தில் அதாவது சோவியத் தகர்வுக்கு முந்தைய காலகட்டத்தில் , காலனிய விடுதலைப் போராட்ட காலத்தில் உலகம் முழுவதையும் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டிக் கொழுக்க அரசியல் அதிகாரத்தை தன் விரலசைவில் வைத்திருக்க அமெரிக்க அரசு பின்னிய சதிகளை விளக்குகிறது .
லத்தின் அமெரிக்க நாடுகளிலோ புதிதாக விடுதலை அடையும் நாடுகளிலோ ஆப்பிரிக்க நாடுகளிலோ கம்யூனிஸ ஆட்சி அல்ல , தேசிய நலனை முன்னிறுத்தும் ஆட்சி வந்தால்கூட அதைக் கண்டு ’சிகப்பு அபாயம்’ என ஏகாதிபத்தியம் மிரண்டதை, அந்த ஆட்சியைத் தூக்கி எறிய ஏகாதிபத்தியம் செய்த சதியை விவரிக்கிறது . அதை எவ்வளவு நுட்பமாக செய்தனர் என்பது ஒவ்வொருவரும் அறிய வேண்டிய மிக முக்கியச் செய்தியாகும் .
இந்நூலில் முதல் பாகத்தில் உள்ள ஓர் செய்தியை என் பாணியில் கீழே தருகிறேன்.
“PSYCHOLOGICAL STRATEGY BOARD”
“உளவியல் உத்தி வாரியம்”
1953 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது .
உருவாக்கியவர் ஹென்றி கேபாட் லாட்ஜ் – இவர் ஐ நா வுக்கான அமெரிக்கத் தூதர் .
இது முழுக்க முழுக்க அமெரிக்க அரசின் முழு ஆதரவோடு இயங்கியது .
நோக்கம் : சோவியத் யூனியனை உலகின் மிகப்பெரும் வில்லனாக விரோதியாக
தீயசக்தியாக கெட்டவனாக சிதரிப்பது.
வழிமுறைகள் : ஊடகங்கள் ,எழுத்தாளர்கள் ,கலாச்சார ஊழியர்கள் , அறிவுஜீவிகள் ,ஆய்வாளர்கள் மூலம் பொய் ,அவதூறு ,தனிமனித உளவியல் தாக்குதல் , என சேறுவாரி இறைப்பது .ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி அது மெய்போல் தோன்றச் செய்வது .குழந்தைகள் காமிக்ஸ் உட்பட இதில் பயன் படுத்தப்பட்டன .பழைய காமிக்ஸ் புத்தகங்களில் வில்லனாக ரஷ்யனும் ஹீரோவாக அமெரிக்க ஜனாதிபதி அல்லது அமெரிக்கர் இருப்பர் .
சமூக உளவியலில் மோசமான பிம்பத்தைக் கட்டமைப்பதே அழித்தொழிப்பதின்
முதல் கட்டம் என்பது அவர்களின் முடிவு .
சரி , சரி…….. இதை எல்லாம் இப்போது ஏன் சொல்லுகிறேன் ?
காரணம் இல்லாமல் இல்லை .
பாஜகவின் பிரச்சார முறை இதுதான் . ஊடகங்கள் நட்டநடுநிலை ,மூளைவீங்கி எல்லோரும் சமூக உளவியலைச் சிதைத்து ஒரு வக்கிர வெறுப்பு அரசியலை உருவாக்குவதே கடனெனச் செய்கிறார்கள் .
மேற்கு வங்கத்தில் நமக்கு எதிராக உருவாக்கப்பட்ட எதிர்ப்பை – அதில் நக்சலைட் - திரிணாமூல் – ஆர் எஸ் எஸ் – காங்கிரஸ் – நட்டநடுநிலைகள் – ஊடகங்கள் எல்லாம் ஓர் அணியாக நின்று இடது அரசைக் கொன்றதை இங்கு சற்று பொருத்திப் பார்க்கலாம் .
கேரளாவில் இஎம்எஸ் தலைமையிலான அரசைக் கவிழ்க்க நடந்த விமோச்சன சமரத்தை எல்லாம் இந்த அத்தியாயம் குறிப்பிடவில்லை ஆனால் நம்மை அசைபோட வைத்துவிடும் .
அய்யோ ,நூலறிமுகத்தைவிட்டு எங்கோ நகர்ந்துவிட்டேனோ ! .சரி மீண்டும் முதல் அத்தியாயத்துக்கு வருகிறேன் .
ஹிரோஷிமா ,நாகாசாகி பேரழிவு ,நிகரகுவா ,கெய்ட்டி , சிலி , கியூபா ,மெக்சிகோ ,வியட்நாம் ,கொரியா ,அல்ஜீரியா ,மலேயா ,இந்தோனேசியா ,காங்கோ ,குவாட்டமாலா எத்தனை எத்தனை படுகொலைகள் ,ஆட்சி கவிழ்ப்புகள் மனிதர்களைக் கொன்று குவித்து இந்த குருதிச் சேற்றில் தன் சுரண்டல் சாம்ராஜ்யத்தை அமெரிக்காவும் ஏகாதிபத்திய நாடுகளும் பன்னாட்டு பாகாசுரக் நிறுவனங்களும் அமைத்த கொடும் வரலாற்றின் சுருக்கமே முதல் பாகம் .
“ நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும் “ என ஒரு கமெடி தமிழ் சினிமா வந்தது .அதுபோல நல்லா இருந்த நாட்டிலெல்லாம் சிஐஏ புகுந்து நாசமாக்கிய கதையே முதல் அத்தியாயம் .
இரண்டாம் பாகம் , மிக நுட்பமானது இதை மிகச் சரியாக உள்வாங்கின் கார்ப்பரேட் கொடுங்கரங்களும் அதன் பின்னால் உள்ள அரசியலும் செயல்படுவதை அறியலாம் .சோவியத் தகர்வுக்கு பிறகு ஈராக் , பொலிவியா , மெக்சிகோ ,வெனிசுலா என எங்கும் பற்றுப் பரவும் படுகொலைகள் ,ஆட்சிக் கவிழ்ப்புகள் பற்றி இப்பாகம் பேசுகிறது .
பொதுக் கருத்தை உருவாக்கு , களத்தில் சரியான ஆட்களைப் பணியமர்த்து , தளபதிகள் தயாராக இருப்பதை உறுதி செய்க ,பொருளாதாரத்தை அலற வை , பிற நாடுகளில் இருந்து தனிமைப் படுத்து , பெருந்திரள் போராட்டங்களை முன்னெடு , செய்துவிட்டு மறுத்துவிடு ,ஞாபக மறதியை உருவாக்கு , தேசபக்தனாக இரு பாதிரியாரைக் கொல்லு , இஸ்லாம் மறுமலச்சியில் கம்யூனிசத்துக்கு பதில் … இவை எல்லாம் ஏகாதிபத்தியம் உருவாக்கிய “ஆட்சி மாற்ற கையேட்டில்” உள்ளவையே !
இப்படி ஒவ்வொரு நாட்டிலும் தான் விரும்பியது நடக்க அமெரிக்க வகுத்த திட்டம் நம்மை உறைய வைக்கிறது . உள்ளூர் அரசியலில் பல தில்லு முல்லு ,திடீர் புரட்சிக்காரர்கள் , நியாயவான்கள் பற்றி எல்லாம் நம்மை யோசிக்க வைத்துவிடும் இந்த அத்தியாயம் .
“ அடுத்த போரை நோக்கிப் பறந்தன காமிராக்கள் எல்லாம்” எனும் கவிதையை சொல்லி இந்த பாகத்தை நிறைவு செய்யும் போதே தொடரும் வலியை பதிவு செய்கிறார் .
மூன்றாவது அத்தியாயத்தை ஒரே வரியில் சொல்வதனால் ,” ராணுவ டாங்கி வேண்டாம் ! வங்கி போதும் !” . ஏகாதிபத்திய உத்தம வேடம் போடும் வில்லன்களிடம் பொருளாதார நெருக்கடி ,சட்டம் ,என் ஜி ஓ எனும் தன்னார்வக் குழுக்கள் என எல்லாம் கொலைக்கான கைகருவிகளே!
“குட்டையைக் குழப்பு மீன் பிடி” என்றொரு பழமொழி உண்டு . ஆனால் அதுவும் ஏகாதிபத்திய யுத்தி ஆனது . அமெரிக்க மையத்தை சுற்றி ஏனைய ஏகாதிபத்திய ஆரங்கள் எப்படி பிணைக்கப்பட்டுள்ளன என்பதை இந்நூல் பேசும் . உலக சட்டாம் பிள்ளையாய் அமெரிக்கா தன்னைத்தானே நியமித்துக் கொண்ட கதை .
லத்தின் அமெரிக்க அனுபவம் முக்கியமானது . அமெரிக்கா கண்ணீர் விட்டாலும் ,கட்டிப் பிடித்தாலும் , எட்டி உதைத்தாலும் , உச்சி மோந்தாலும் உள்நோக்கம் கொண்டதே . மனித உரிமை ,வளர்ச்சி ,சுதந்திரம் , சமத்துவம் ,சுற்றுச்சூழல் ,புவிவெப்பமாதல் ,ஒத்துழைப்பு என எதை அமெரிக்க ஏகாதிபத்தியம் பேசினாலும் அது இரட்டைத் தன்மையானதே . அவர்களுக்கு ஒன்று மற்றவர்களுக்கு ஒன்றே !
1983 ல் கிரேனடா மீது அமெரிக்கா படை எடுத்ததே , “என்னுள் அழியா நினைவாகப் பதிந்துவிட்ட முதல் அரசியல் நடவடிக்கை,” எனும் விஜய் பிரசாத் இந்நூலுக்கான தரவுகள் எப்படிக் கிடைத்தன என்று சொல்லும் போது நமக்கு சிலிர்ப்பு ஏற்படுகிறது .
.
நிறைவாகச் சுட்டுகிறார் ,குவாடெமலா காடுகளுக்குள்ளிருந்து கவிஞர் ஒட்டோ ரெனே காஸ்டில்லோவின் கவிதையை ;
“ மக்களை நம்பினோம்
வாழ்வை நம்பினோம்
வாழ்வும் மக்களும்
ஒரு போதும் எங்களைக் கைவிட்டதில்லை
இவ்வார்த்தைகள் அழகு
காலமெல்லாம் போராடிய போராளிகள்
வாழ்வின் இறுதியில் சொல்லும்
இவ்வார்த்தைகள் அழகு ! “
இளம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இந்நூலை பாடநூலாக்கி கற்றுக்கொடுப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் கடமையாகும் .
நன்றாக மொழியாக்கம் செய்த பேராசிரியர் பொன்னுராஜுக்கு பாராட்டுகள்
வாஷிங்டன் தோட்டாக்கள் ,
ஆசிரியர் : விஜய் பிரசாத் ,
தமிழில் : பேரா.பொன்னுராஜ் ,
வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,
7,இளங்கோ சாலை ,தேனாம்பேட்டை , சென்னை -600 018.
தொலைபேசி :044 – 24332424 ,24332924 ,24356935
பக்கங்கள் : 184 , விலை : ரூ.185 /
நன்றி : புதிய புத்தகம் பேசுது , மே , 2021.
.
0 comments :
Post a Comment