நூல் அறிமுகம்: *தட்டப்பாறை*

Posted by அகத்தீ Labels:

 


நூல் அறிமுகம்:  *தட்டப்பாறை* – சு.பொ.அகத்தியலிங்கம்

Spread the love



தட்டப்பாறை

டாக்குஃபிக்சன் [ DOCUFICTION ]

ஆசிரியர் : முஹமது யூசுஃப் ,

வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ் ,

214 ,புவனேஷ்வரி நகர் மூன்றாவது முதன்மைச் சாலை ,

வேளச்சேரி ,சென்னை – 600 042.

90424 61472 , 98416 43380

பக்கங்கள் : 534 ,

விலை : 600 /

“எல்லோரும் வாசிக்கும் புத்தகங்களை மட்டுமே நீங்களும் வாசித்தால் எல்லோரும் சிந்திப்பது போல் மட்டுமே உங்களாலும் சிந்திக்க முடியும்.” என ஹாருகி முரகாமி சொன்னதை முன்னுரையில் முஹமது யூசுஃப் சுட்டி – நம் தலையில் ஓங்கிக் குட்டி,  இது புது வழித்தடத்தில் பயணிக்கும் டாக்குஃபிக்சன் எனச் சொல்லிவிட்டார். அப்புறம் விமர்சனமும் வழக்கம் போல் எழுதினால் எப்படி ?

இது நாவலா ? ஆம். ஏனெனில் ஓர் அழுத்தமான கதை இருக்கிறது. தொலைத்துவிட்ட தொப்புள்கொடி உறவு தேடி அலையும் இலங்கைத் தமிழரின் வலியும் கண்ணீரும் மிகுந்த கதை இருக்கிறது. இது தகவல் பெட்டகமா ? ஆம். மனித குலத்தின் தொப்புள்கொடி தேடி உலகெங்கும் பயணித்து அள்ளிக்கொட்டிய தகவல்கள் அப்பிக்கிடக்கின்றன. ஆகவேதான் இது டாக்குஃபிக்சன்.

“ தட்டப் பாறையில் விஞ்சி நிற்பது கதையா? தகவலா? ” என பட்டிமன்றம் நடத்தலாம் . இரண்டு தரப்பும் பேச நிறையச் செய்திகள் உண்டு .

தேவசகாயம், டேனியல், அபு, இருளன், கடக்கரை என்கிற கதாபாத்திரங்களூடே தொடங்கும் கதை தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறையில் துவங்கினாலும் இந்தியா முழுவதும் பயணிக்கிறது. இலங்கையில் முடிகிறது. தகவல்களினூடே உலகெங்கும் வியாபிக்கிறது.

ஜெபா, மேரியம்மா, பென்ஸி, என கண்ணீரின் உருவகமான பெண் கதாபாத்திரங்களும்; செல்வி, செளம்யா, ஜோதி என கேள்விக்குறியாய் நிற்கும் கதாபாத்திரங்களும் நெஞ்சைப் பிசைகிறார்கள் .

புலம்பெயர்தலின் வலியை இலங்கை தமிழ் அகதியான ஜெயசீலன் எனும் தேகசகாயத்தின் வலியோடுதூத்துக்குடியில் சொல்லத்துவங்கி, இலங்கை மண்ணில் டேனியல், மேரியம்மா என்கிற இசக்கி, தேவசகாயம் இவர்களின் தீர்வை எட்டா வலி நிவாரணியோடு முடிகிறது கதை. கண்ணீரின் வெப்பமும் கதை நெடுக – ஊறுகாயாய் கொஞ்சம் அபு, செளம்யா காதல்.

May be an image of 1 person and text that says 'ஆதாரம். இயலாத தட்டப்பாறை முஹம்மது யூசுகப் வாழ்வின் மீதான தீவிரத்தேடல் உள்ள ஒருவனுக்கு இதில் அனைத்தும் அவனுடைய நிலத்தின் ஆட்களுக்கு அவை கடக்க தகவல்கள். மோளை பள்ளை, ஆட்டின் புல்லையும் டையனையும் அலைந்ததில் ஆட்டாம்புழுக்கை வாசம். தட்டப்பாறை ன்பது துவல்ல வாசித்ததும் நீங்கள் தேடப்போகும் உங்களி் விசாலமான எண்ணங்கள் தான் -யூசுகப் முஹம்மது யூசுகப் தட்டப்பாற லறை ? தாலு 650/- www.be4books.com'

ஜாரெட் டைமண்ட் எழுதிய ‘துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு’ எனும் நூல், பில் பிரைசன் எழுதிய ‘ அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு’ எனும் நூல், ஆக இரண்டு நுல்களையாவது குறைந்தபட்சம் வாசித்து உள்வாங்கிவிட்டு இந்நூலில் புகுந்தால் நிறைய கேள்வி கேட்க, விவாதிக்க இயலும். ஏனெனில் உலக வரைபடமாயினும், வரலாறு ஆயினும் ஆசியாவையோ, அரபு நாடுகளையோ மையமிட்டு இல்லையே ஏன் என்கிற வலுவான கேள்வியை அவை முன்வைக்கின்றன. மேலும் பள்ளியில் புவியியல் பாடத்தில் குறைவான மதிப்பெண் வாங்கியவரா நீங்கள், அப்படியாயின் இந்திய வரைபடத்தையும், உலக வரைபடத்தையும் ஒரு பென்சிலையும் கையில் வைத்துக் கொண்டு வாசிக்கவும் பயணப்பாதையை, தகவல் பாதையை கோடிட்டி அறிந்தால் புவியியல் மனதில் பாறையில் செதுக்கிய சித்திரமாகிவிடும்.

இவரின் முந்தைய மணல் பூத்த காடு மற்றும் கடற்காகம் ஆகிய இரண்டு நாவலும் இஸ்லாமியரின் வாழ்க்கை, தத்துவம், முரண்பாடுகள் பற்றிப் பேசின; இந்நூல் கிறுத்துவத்தை மையம் கொண்டுள்ளது, ஆதிப் பழங்குடியைத் தேடி, மதங்களூடே, சாதியூடே பயணிக்கிறது.

இந்நூலில் மார்க்சிஸ்டாக [மாவோயிஸ்டாக இருப்பானோ] அறிமுகமாகும் ராணுவத்தில் பணியாற்றிய இருளன் மூலம் கிறுத்துவ தொண்டு நிறுவனங்களின் நோக்கம் தோலுரிக்கப் படுகிறது. இந்த மண்ணை அடிமைப் படுத்திய வெள்ளைக்காரன் அவன் தேவைக்குத்தான் இந்நாட்டின் வேர்களைத் தேடி வகைப்படுத்தி இருப்பான். நாம் மறுக்கவில்லை. அதைத்தானே ஆர் எஸ் எஸ் காரனும் சொல்லி எல்லாவற்றையும் மறுதலித்து வேதப் பழமைக்கு நம்மை தள்ளிப் புதைக்க முயற்சிக்கிறான்.

இந்நூலில் பல இடங்களில் பேசப்படும் தகவல்களைச் சரியாக உள்வாங்கப்பட்டாவிடின் குழப்பம் ஏற்படவே வாய்ப்புண்டு. கிறுத்துவ பாதிரிமார்களும் ஆய்வாளர்களும் தேடி அலைந்து சேகரித்துத் தொகுத்த நூல்களின் உள்ளுறையில் பிழைகள் இருக்கலாம், நோக்கமும் இருக்கலாம், ஆயினும் அதனுள் உறுத்துகிற உண்மைத் தகவல்களை என்ன செய்வீர்கள்? அவற்றினூடே பயணித்து ஆய்ந்து மேலும் சரியான தகவல்களைக் கண்டறிந்து நம் வரலாற்று பண்பாட்டு வேரை அடையாளம் காட்ட வேண்டுமே தவிர உதறவோ ஒதுக்கவோ முடியாது.

பொன்னீலனின் மறுபக்கம் நாவலில் தன் தொப்புள் கொடியைத் தேடும் ஓர் ஆர் எஸ் எஸ் ஆய்வாளன் மூலமே கதை நகரும் தகவல்கள் கொட்டப்படும் ; ஆனால் அவை அனைத்தும் ஓர் எல்லை வகுத்து – மண்டைக் காட்டு மதக்கலவரத்தை மையம் கொண்டு செய்யப்படுவதால் கதைப் போக்கில் மதவெறி அம்பலப்படும் .

சாதி, மத, இன, மொழி அடையாளங்களைத் தாண்டி மனித குலம் ஒன்றெனச் சொல்ல விழைகிறார் முஹமது யூசுஃப்; அதற்காக தேடித் தேடி சேகரித்த நிறைய விவரங்களை வாரி இறைத்திருகிறார்.

மகிழ்ச்சி.

பாராட்டுக்கள்.

ஆயின் இலக்கை எய்த முடிந்ததா ? என்னைப் பொறுத்தவரை இலக்கை நெருங்க முயற்சித்திருக்கிறார் இன்னும் கொஞ்சம் செதுக்கி இருந்தால் பளிச்செனத் துலங்கி இருக்குமோ ?



படைப்பாளர் மொழிபெயர்ப்பாளர் சுப்பாராவ் ஒவ்வொரு புத்தாண்டின் தொடக்கத்திலும் தான் படித்த நூல்களின் நெடும் பட்டியலை வெளியிட்டு நம்மை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குவார். முஹமது யுசுஃப் ஒவ்வொரு கதையிலும் நூலிலும் தான் படித்த நூல்களை புகுத்திவிடுவார். இந்நூலில் சுப்பாராவின் நெடும் பட்டியல் போல் அது நீள்கிறது. இதையெல்லாம் நாம் படிக்காமல் இந்நூலைப் பற்றி எப்படிப் பேசுவது என்கிற மலைப்பு ஏற்படுகிறது. இந்நூல் பற்றிய அலசல் கதை சார்ந்ததாக மட்டுமாக அமையவே முடியாது. கருத்து சார்ந்ததாகவும் நிச்சயம் இருந்தாக வேண்டும். இல்லையேல் நியாயம் வழங்கியதாக இருக்காது .

இந்நூலில் ஓரிடத்தில் போகிறபோக்கில் ஒரு தகவலைச் சொல்லி  “குரங்கிலிருந்து பிறந்தான் மனிதன் எனும் டார்வின் கொள்கை அன்றோடு நீர்த்துப் போனது” என்கிறார். அது உண்மை இல்லையே ! டார்வின் தான் சேகரித்தவைகளின் அடிப்படையில் செய்த யூகத்தில் உள்ள குறைபாடுகள் பிந்தைய ஆராய்ச்சிகளால் சீர் செய்யப்பட்டு படிமலர்ச்சிக் [பரிணாமக்] கொள்கை வலுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளதே உண்மை. இதுபோல் இன்னும் பல நூலில் விவாதத்திற்குரியன.

இந்நூல் நெடுக எத்தனை மேற்கோள் நூல்கள், இணைய விவரங்கள், எத்தனை இனக் குழுக்கள், எத்தனை ஆதி குடிகளின் பெயர்கள், எத்தனை ஆடுகளின் வகைகள் என ஒவ்வொன்றையும் எண்ணிச் சொல்ல ஓர் போட்டி வைக்கலாம். அதில் நிச்சயம் வெற்றி பெறுவது கடினமே! வாசிப்புக்கு இடையூறாக இருப்பினும் டாக்குஃபிக்சன் என்பதால் அடுக்கப்பட்டுள்ள ஆங்கிலப் பெயர் பட்டியல் எத்தனை அதற்கும் ஒரு போட்டி வைக்கலாம்.

சிலர் சொல்லுவது போல் ”இந்த ஆளு பாரேன் எவ்வளவு விசயம் சொல்றாரு!” என வாசகனை பிரமிக்க வைக்கும் வகையில் வசீகர நடையில் எழுதி இருக்கிறார். வாழ்த்துகள்.

நூறு பக்கங்களுக்குள் கதை அடங்கிவிடும்; ஆனால் கதை நடந்த உலகை, பிரச்சனைகளை, தேடலை அதில் அடக்க முடியாதே ஆகவே 534 பக்கங்கள். ஆனாலும் இன்னும் பெரும்பகுதி வெளியேதான் கிடக்கிறது.

அடுத்தடுத்த நாவலில் கவனித்துக் கொள்வார். அவற்றையும் வாசிக்கக் காத்திருப்போம்….

 


0 comments :

Post a Comment