மென்மையாக எதைப்
பேசுகிறது ஆன்மீகம் ?
சு.பொ.அகத்தியலிங்கம்
·
மதவெறி கூடாது என்பது மெத்தச்சரி , மதநல்லிணக்கத்தை வலியுறுத்தாமல் ;
மதச்சார்பின்மை என மதத்துக்கு விரோதமாக பேசுதல் தகுமோ ?
·
ஆன்மீகத்துக்கும் மதத்துக்கும் வேறுபாடு உண்டல்லவா ? ஆன்மிகம் மனிதனை
மேம்படுத்தத் தேவை அல்லவா ? ஆன்மீகம் மனதை பகுவப்படுத்த உதுவும் அல்லவா ? அதனை
ஏற்பதில் என்ன தயக்கம் ?
·
கடவுளுக்குப் பயந்து தானே மனிதன் பெரிதும் தப்புச் செய்யாமல் இருக்கிறான் ;
ஒழுக்கமாக வாழுகிறான் . கடவுள் இல்லை என்று கூறி இந்த தடையரண்களைத் தகர்ப்பதுதான்
பகுத்தறிவா ? முற்போக்கா ? இறையச்சம் என்பதுதானே மனிதனை ஒழுங்குபடுத்தும்
நல்வழிப்படுத்தும் பேராயுதம் ; அதனை முனை மழுங்கச் செய்வதால் என்ன பயன் ?
பகுத்தறிவாளரே பதில் சொல்லுங்கள் !
·
தன்னகங்காரமும் தலைக்கனமும் ஒருவருக்கு உருவாகாமல் இருக்க கடவுள்
நம்பிக்கையும் மதபோதனையும் மிகமிகத் தேவை அல்லவா ? இதையுமா மறுப்பீர்கள் !
·
துன்பம் துரத்தும் போது கடவுளின் மீது பாரத்தை போட்டு வாழ்வோடு
மல்லுக்கட்டுவதன்றோ எளிதானது ? நல்லநேரம் பிறக்கும் , கடவுள் கண்ணைத் திறப்பார்
என நாட்களை நகர்த்துவது ஒரு வித தன்னம்பிக்கை உபாயம் அல்லவா ? இந்த
அச்சாணியின் மீதுதானே கோடிக்கணக்கான ஏழைகள் , பலவீனர்கள் வாழ்க்கை உருண்டோடிக்
கொண்டிருக்கிறது . இந்த அச்சை முறிக்கலாமா ? அவர்களின் சுமைதாங்கியை ஷாக் அப்சர்வர்
என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற அழுத்தம் தாங்கியை அவர்களுக்கு மறுதலிப்பது
நியாயமா ?
முந்தைய கேள்வி பதில்களால் ஊக்கம் பெற்றோர் ஒரு புறமும் ,எரிச்சலடைந்தோர்
மறுபுறமும் என எல்லா முனைகளிலிருந்தும் கேள்விக்கணைகள் பாய்கின்றன ; கேள்விகள்
எம்மை மிரட்டவில்லை மேலும் பரந்த தேடுதலுக்கு உந்தித்தள்ளுகிறது . இங்கே ஐந்து
கேள்விகளுக்கு பதில் சொல்லுவோம் . தொடர்ந்து கேள்விகளோடும் பதில்களோடும் உண்மையை
அறிய தொடர்ந்து முயல்வோம்.
மதவெறி கூடாது என்பது மெத்தச்சரி ,
மதநல்லிணக்கத்தை வலியுறுத்தாமல் ; மதச்சார்பின்மை என மதத்துக்கு விரோதமாக பேசுதல்
தகுமோ ?
மதவெறி சரியென மதவெறியர் கூட வாதிடமுடியாது ; ஆனால் மதவெறியை வேறு
வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பர் . இதுவே எங்கும் அனுபவம் .மத நம்பிக்கை
என்பது முன்பே சொன்னது போல் தனி உரிமை .மதம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல
அது ஒரு உலகப் பார்வையை ; வாழ்க்கைக் கண்ணோட்டத்தை வழங்குகிறது ; அந்தப்
பார்வையில் உள்ள பழுது வெளிப்படும் ; எதிர் வினையை உருவாக்கும் என்பது
யதார்த்தமல்லவா ?என் மதம் உயர்வானது ஒருவர் எண்ணத்துவங்குகிற மோது ; நான்
உயர்ந்தவன் என்கிற மதர்ப்பு வருகிறது ; அது அத்தோடு நிற்குமா ? நின்றால்
பரவாயில்லை . ஆனால் பிற மதங்களை விட என் மதம் உயர்ந்தது என ஒப்பிடத் தொடங்கும்
போதே பகைமை கருக்கொள்ளத் துவங்கி விடுகிறது . எல்லா மதமும் சமம் என எண்ணுகிற சூழல்
அப்போது மெய்யாலுமே எழுமா ? சந்தேகமே ! ஆயினும் பகைமை குரோதமாக பற்றி எரியாமல் இருக்க
மதங்களிடையே நல்லிணக்கம் என்கிற சமரச வியூகம் தேவைப்படுகிறது .இதனை யாரும் மறுக்க
முடியாது ; ஒதுக்கவும் இயலாது . ஆனால் அந்த நல்லிணக்கம் தொடர வேண்டுமானால் -
வலுப்பெற வேண்டுமானால் மதம் உன் தனி நம்பிக்கை என்பதோடு நிறுத்தி வைக்க வேண்டும்
;அதனோடு வேறெதையும் இணைக்கக்க்கூடாது ; நிச்சயமாக அரசியலில் இருந்து மதத்தை
ஒதுக்கி வைக்க வேண்டும் ; அதிலும் அதிகாரமும் மதமும் சேர்ந்தால் மிக மிக ஆபத்து .
கல்வியில் மதத்தைக் கலக்கக்கூடாது . நீதி வழங்குவதில் மதம்சார்ந்த பார்வை கூடாது
.நிர்வாகம் மத அடிப்படையில் இருக்கக்கூடாது ; இவை அனைத்தையும் குறிக்கும் ஒற்றைச்
சொல்லே மதச்சார்பின்மை .அரசு , அரசியல் ,நிர்வாகம் ,கல்வி , நீதி இவை அனைத்திலும்
மதம் கலக்கக்கூடாது என்பதே இதன் பொருள் . இது மத நிராகரிப்போ மத எதிர்ப்போ அல்ல
மதத்தை தனிநபர் என்கிற வட்டத்துக்குள் அடைத்து வைக்கச் சொல்கிற ஏற்பாடே .
ஆன்மீகத்துக்கும் மதத்துக்கும் வேறுபாடு
உண்டல்லவா ? ஆன்மிகம் மனிதனை மேம்படுத்தத் தேவை அல்லவா ? ஆன்மீகம் மனதை
பகுவப்படுத்த உதுவும் அல்லவா ? அதனை ஏற்பதில் என்ன தயக்கம் ?
ஆன்மிகம் என்பது மென்மையானது என்றும் அன்புமயமானது என்றும்
கருதுவதும் பேசுவதும் சர்வசாதாரணமாக உள்ளது .ஆனால் சற்று உற்று நோக்கின் இது
தோற்றப் பிழை எனப் புரியும் . மதம் போல் இது உரக்கப் பேசாது என்பது உண்மையே .
ஆனால் மென்மையாக எதைப் பேசுகிறது என்பதே கேள்வி . மதம் வேறு ஆன்மீகம் வேறு
அல்ல ; மதத்தின் இன்னொரு முகமே ஆன்மீகம் . தன்னைப் பற்றியே கவலைப் படுவதே
ஆன்மீகத்தின் மிகப்பெரிய பலவீனம் . தனி மனிதன் இறைவனோடு ஒன்றுவது குறித்தே
ஆன்மீகம் கவலைப்படும் ; வழிகாட்டும் . தனி மனிதன் சமூக அக்கறையோடு ;சமூக
அவலங்களை - சமூக ஏற்றதாழ்வுகளை போக்க சிறுதுரும்பைக்கூட அசைக்காமல் எல்லாம் ஈசனின்
திருவிளையாடலென செயலற்றிருப்பதற்கு வழிகாட்டுவதன்றோ ஆன்மீகம் . ஆன்மீகம் பொதுவாக
மனித குல நன்மை , அன்பு என்றெல்லாம் சொல்லுவது சரியே ; இப்போது தேவையும் கூட
; இதனை ஒரு எல்லைவரை மதவெறிக்கு எதிராக பயன்படுத்தவும் இயலும் . எனினும் சமூக ஏற்ற
தாழவை போக்கவோ – சமூக மாற்றத்துக்கு உந்தித்தள்ளவோ செய்யாமல் ; இன்றைக்கு இருப்பதை
அப்படியே சகித்துக்கொள்ள ஆன்மீகம் போதிப்பதால் யாருக்கு லாபம் ? கொள்ளையடிக்கும்
சுரண்டும் கூட்டத்துக்குத்தானே லாபம் ! அநீதிக்கு எதிராய் மனிதர்கள் திரளாமல்
அடங்கிப்போகச் சொல்லுவதே ஆன்மீகத்தின் உயிர்ச்சரடு .மனதைப் பக்குவப்படுத்துவது
மேம்படுத்துவது எனச் சொல்வதெல்லாம் ;பகட்டு வார்த்தைகளே . கேள்வி முறையற்று
பணியவும் ; அநீதிக்கு தலைவணங்கிப் போகவுமே இது பக்குபவப்படுத்துகிறது .தனிமனிதனை
சமூகத்தின் ஒரு அங்கமாகப் பார்க்காமல் தனித்தனி தீர்வாகப்பார்ப்பதுவே ஆன்மீகத்தின்
உட்பொருள் . இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருவரும் தனித்தனியே தன்னை ஆன்மீகச்
சிமிழுக்குள் அடைத்துக் கொள்வதையே சுரண்டும் வர்க்கம் விரும்புகிறது . எனவே
ஆன்மீகம் என்பது மதத்தின் இன்னொரு முகமாய் ; சுரண்டும் வர்க்கக் கேடயமாகவேத் திகழ்கிறது
.
கடவுளுக்குப் பயந்து தானே மனிதன் பெரிதும்
தப்புச் செய்யாமல் இருக்கிறான் ; ஒழுக்கமாக வாழுகிறான் . கடவுள் இல்லை என்று கூறி
இந்தத் தடையரண்களைத் தகர்ப்பதுதான் பகுத்தறிவா ? முற்போக்கா ? இறையச்சம்
என்பதுதானே மனிதனை ஒழுங்குபடுத்தும் நல்வழிப்படுத்தும் பேராயுதம் ; அதனை முனை
மழுங்கச் செய்வதால் என்ன பயன் ? பகுத்தறிவாளரே பதில் சொல்லுங்கள் !
பொதுபுத்தியில் வலுவாக வேரூன்றியுள்ள கருத்து . கடவுள் பக்தி என்று
பொதுவாகச் சொன்னாலும் ; கடவுள் தண்டித்து விடுவார் என்கிற அச்சத்தை ஊட்டியே மனிதனை
அடக்கி வைக்கமுடியும் என ஆளும் வர்க்க சித்தாந்தமே மெருகூட்டி இவ்வாறு
சொல்லப்படுகிறது .ஆனால் அடிப்படைக் கேள்வி என்னவெனில் ஆயிரக்கணக்கான
ஆண்டுகள் மனிதகுலம் கடவுள் கடவுள் பக்தியோடும் கடவுள் பயத்தோடும் தான்
உள்ளது ஆயினும் குற்றங்கள் ஏன் குறையவில்லை ? கடவுளின் பேராலேயே அதிகமாய் குற்றங்கள்
நடக்கின்றனவே ! வன்முறைகள் கடவுளின் பெயரால் நடக்கின்றனவே ! இப்படிச் சொன்னால்
உடனே “ அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கேட்கும்” என விளக்கம்
சொல்கிறார்கள் . ஆனால் காலங்காலமாக மக்களை வஞ்சிக்கிற செல்வந்தர்கள் ,
நிலப்பிரபுக்கள் தண்டிக்கப்படவே இல்லையே ! ஏழை மேலும் ஏழையாக ,செல்வந்தர்கள்
பரம்பரையாக சுகபோகத்தில் மூழ்கித் திளைக்க கடவுள் சுட்டுவிரலைக்கூட அசைத்து இதனை
மாற்றா முயன்றதாகத் தெரியவில்லையே ! “ கடவுள் நல்லவங்களைச் சோதிப்பான்
கைவிடமாட்டான் ; கெட்டவங்களை ஆடவிடுவான் கைவிட்டுருவான் ” இப்படி நம்ம திரைப்படங்களில்
வசனம் வரும் ? லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்தபோது எந்தக் கடவுள்
காப்பாறினான் ? அவங்களெல்லாம் கெட்டவங்களா ? ஈராக்கில் குழந்தைகள் உட்பட
பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்த ஒபாமாவும் இங்கே படுகொலையை அரசு உதவியோடு
நடத்திய மோடியும் வெற்றி பெறுவதற்கு கடவுள் எப்படி துணை போனார் ? அவர்கள்
எந்தவகையில் நல்லவர்கள் ? இறையச்சம் என பயங்காட்டி எந்த ஒழுக்கத்தையும்
நீண்ட நாள் காப்பாற்ற முடியாது . மோட்சம் , நரகம் ,எண்ணைக்கொப்பரை என எவ்வளவு
மிரட்டியும் பொய் சொல்லாமல் இருக்கிறாரா ? பயமூட்டி எதையும் சாதிக்க முடியாது .
இதுவே உளவியல் .
தன்னகங்காரமும் தலைக்கனமும் ஒருவருக்கு
உருவாகாமல் இருக்க கடவுள் நம்பிக்கையும் மதபோதனையும் மிகமிகத் தேவை அல்லவா ?
இதையுமா மறுப்பீர்கள் !
தனிமனித குணத்துக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை .
ஒவ்வொருவர் வாழ்விலும் சந்தித்த பலரிடம் தன்னகங்காரம் தலைக்கணம் ஆகியன இருப்பதை
அறிவீர்கள் ; அவர்களுகெல்லாம் கடவுள் நம்பிக்கை இருந்ததை மறுக்க முடியுமா ?
உங்கள் வாழ்வில் அசைபோடுங்கள் நிறைய உதாரணங்கள் அகப்படும் . உங்கள்
அதிகாரிகள் அல்லது உங்களை ஆதிக்கம் செய்யும் எல்லோரும் கிட்டதட்ட கடவுள் நம்பிக்கை
உடையோர்தானே !சர்வாதிகாரிகளெல்லாம் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கையுடையோரே !
தன்னகங்காரமும் தலைக்கணமும் எதிர்த்துக் கேட்போர் இல்லாத போது ஓங்கும் ; வலுவான
எதிர்ப்பில் இடுப்பொடிந்து வீழும் .பணம் , பதவி , ஆதிக்கம் இவையே தன்னகங்காரத்தின்
ஊற்று . குறைகுடம் கூத்தாடும் என்பதுபோல் அரைகுறையாய் இருப்பவர்களே
தன்னகங்காரத்துடன் நடந்து கொள்வர் .ஆழ்ந்த கல்வியிம் , அறிவுத் தேடலும்
,அர்ப்பணிப்பும் , இலட்சிய வேட்கையும் , சமூக நலன் சார்ந்த பார்வையுமே தனிமனித
குணத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் ; வேறு எதாலும் அல்ல .
துன்பம் துரத்தும் போது கடவுளின் மீது பாரத்தை
போட்டு வாழ்வோடு மல்லுக்கட்டுவதன்றோ எளிதானது ? நல்லநேரம் பிறக்கும் , கடவுள்
கண்ணைத் திறப்பார் என நாட்களை நகர்த்துவது ஒரு வித தன்னம்பிக்கை
உபாயம் அல்லவா ? இந்த அச்சாணியின் மீதுதானே கோடிக்கணக்கான ஏழைகள் , பலவீனர்கள்
வாழ்க்கை உருண்டோடிக் கொண்டிருக்கிறது . இந்த அச்சை முறிக்கலாமா ? அவர்களின்
சுமைதாங்கியை ஷாக் அப்சர்வர் என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற அழுத்தம்
தாங்கியை அவர்களுக்கு மறுதலிப்பது நியாயமா ?
இந்த வாதம் அதிமுக்கியமானது . ஏனெனில் சமூக உளவியல் சார்ந்தது . இங்கேதான்
வறட்டு நாத்திகரிடமிருந்து மார்க்சிஸ்டுகள் மாறு படுகின்றனர் . மார்கஸ் மதத்தை
அபினி என்றுமட்டுமா சொன்னார் ? இல்லை . “ .. மதம் என்பது அடக்கப்பட்ட
மக்களின் ஏக்கப் பெருமூச்சாகும் ; இதயமற்ற உலகின் இதயமாகும். மதம் மக்களை மயக்கும்
அபினியாகும்”என்றார் . அறியாமையில் மூழ்கி மதத்தை சரணடைந்து கிடப்பதே அவனது
துன்பங்களுக்குக் காரணம் என வறட்டு நாத்திகர்கள் சொல்வதை ; மக்கள் முட்டாளக
இருப்பதால்தான் வறுமையும் துயரமும் என்று கூறுவதை மார்க்ஸ் ஏற்கவில்லை . மாறாக
வறுமையும் துயரமும் நிராதரவான மக்களை கடவுள் பக்கம் துரத்துகிறது . கடவுள்
கண்திறப்பார் என்ற நம்பிக்கை தவறென்பதை அவர்கள் உணராதவரை மெய்யான விடுதலை
அவர்களுக்கு இல்லவே இல்லை . ஆனால் அதை முரட்டுத்தனமாகத் திணிக்க முடியாது ஏனெனில்
இதயமற்றவர்களின் இதயமாக மதம் காட்சி அளிக்கிறது .. ஆக , துன்பக்கடலில் மூழ்கும்
மனிதனுக்கு துரும்புகூட தெப்பமாகத் தெரிவதுபோல மதமும் கடவுளும் அது சார்ந்த
நம்பிக்கைக்களும் பற்றுக்கோடாகத் தெரிவது இயல்பே . “வரத்தப்பட்டு
பாரம் சுமப்பவர்களே ! என்னிடத்தில் வாருங்கள் இளைப்பாறுதல் தருவேன் .” என்பது
கேட்க இனிமையாக இருக்கும் ; நொந்த இதயத்திற்கு ஒத்தடமும் கொடுக்கும் ஆயினும்
புரையோடிய புண்ணுக்கு அது நிரந்தரத் தீர்வல்ல . ஒத்தடமாவது கிடைக்கிறதே ! சற்று
இளைப்பாறுதல் கிடைக்கிறதே என மயங்குதல் மானிடர் இயல்பு. ஆகவேதான் நாத்திகர்களைப்ப்
போல முரட்டுத்தனமான கடவுள் மறுப்பை மார்க்சிஸ்ட்டுகள் கைக்கொள்ளமாட்டார்கள் .
சமூக உளவியல் கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு ஆதாரவாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்
கட்டமைக்கப்பட்டிருக்கிறது . மனிதர்களின் பொது புத்தியில் ஆழமாக உறைந்து
போயிருக்கிறது . அதனை ஒற்றைவரியில் ஒற்றை முயற்ச்சியில் துடைத்தெறிய இயலாது .
ஆனால் சொர்க்கம் வானத்தில் அல்ல பூமியில்தான் ; நரகம் எங்கோ இல்லை இன்று நீ
அனுபவிக்கிற வாழ்க்கைதான் . அதனை மாற்றி இந்த பூமியிலேயே சொர்க்கத்தைச்
சிருஷ்டிக்க முடியும் .இதனை புரிய வைக்கவேண்டும் . “ பரலோகத்தைப் பற்றிய விமர்சனம்
பூவுலகைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது . மதத்தைப் பற்றிய விமர்சனம் உரிமைகளைப்
பற்றிய விமர்சனமாக மாறுகிறது . இறையியலைப் பற்றிய விமர்சனம் அரசியலைப் பற்றிய
விமர்சனமாக மாறுகிறது .” என்றார் காரல் மார்க்ஸ் . அவ்வாறு செய்யப்பட்டு மனித
மனங்கள் வென்றெடுக்கப்படும் வரை மதம் அதற்குரிய முறையில் தனிமனிதனின் நம்பிக்கை
கனவாக கடவுள் அனுக்கிரகத்தை முன்னிறுத்தவே செய்யும் . இந்த சமூக உளவியல் சுரண்டலை
எதிர்த்துப் போரிட்டு சமூகமாற்றம் காண மனிதர்கள் திரள்வதை முடிந்தவரை
தள்ளிப்போடும் ஆனால் தடுத்துவிட முடியாது .வெல்வது எப்படி பிறிதொரு
சந்தர்ப்பத்தில் பார்ப்போம் .
நன்றி : தீக்கதிர் வண்ணக்கதி 20
ஜனவரி 2015 [ 18 ஆம் தேதியிட்ட இதழ்]
0 comments :
Post a Comment