யுகாந்திர வலியும் செங்கொடி எழுச்சியும்

Posted by அகத்தீ Labels:


ஏசுநாதரும் அம்மளை மாதிரி பறை சாதிக் காரனாத்தான் இருப்பாரோ இல்லையான அந்த மனிசனையும் சாட்டை வாரால் அடிச்சு சிலுவையச் சொமக்க வச்சிருக்க மாட்டாங்களே
- இப்படி மனசுக்குள் சொல்லிக் கொண்டான் சிறுவன் ஒசேப்பு.
அந்த பிஞ்சு மனதில் பட்டுத் தெறித்த இந்த வரிகள் ஒரு சமூகத்தின் யுகாந்திர வலியை சுமந்து நிற்கின் றன. தோலை உரித்து மிளகாய்ப் பொடி தூவியதுபோல் சமூக யதார்த் தத்தைக் கீறிக் காட்டுகின்றன.
டி. செல்வராஜ் எழுதிய தோல் நாவல் முழுவதுமே இயல்பான வார்த் தைகளால் மிக நுட்பமான சமூக உண் மைகளை படம் பிடித்துச் சொல்கிறது.
தோல் தொழிற்சாலை கழிவு நீரால் விளை நிலங்களும், குடிநீரும் எப்படி மாசுபட்டு கிடக்கிறது என்பதை இன்று கண்கூடாகப் பார்க்கிறோம்.
அந்த தோல் ஷாப்புகளில் உட லும் உள்ளமும் ரணமாக உழைத்த; நாற்றத்திலும் வெக்கையிலும் பொசுங்கிய அந்த மனித ஜீவன்களை என்றைக்காவது நாம் நினைத்துப் பார்த்த துண்டா?
இந்த நாவல் நம் கையைப் பிடித்து அந்த தோல் ஷாப்புக்கு அழைத்துச் செல்கிறது; அந்தச் சுண்ணாம்புக் குழி யில் நம் காலை நனைக்க வைக்கிறது; அந்த நாற்றத்தை நம்மை நுகர வைக் கிறது; அங்கிருந்து அந்த தொழி லாளிகள் வாழும் சேரிக்கு நம்மை கூட்டிச் செல்கிறது; அழுகி நாறும் தீண் டாமைக் கொடுமையை, சுரண்டல் வெறியை பார்த்து நம்மை பதைக்க வைக்கிறது. இது நாவல் அல்ல வரலாற்று உண்மைகள்.
நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் திண்டுக்கல்லில் ஒடுக்கப்பட்ட மக்கள் வீறுகொண்டெழுந்த வரலாற்று செய்திகளை குவிமையமாக்கி; தமிழ கம் முழுவதும் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களையும் உட்கிரகித்து ரத்தமும் சதையும் உள்ள கதாபாத் திரங்களாக, செங்கொடி புத்திரர்க ளாக நம்மிடையே உலவவிட்டுள்ளார் டி. செல்வராஜ்.
117 பாத்திரங்கள் பெயர் குறிப் பிடப்பட்டுள்ளது. இந்த நாவலின் கதாநாயகன் யார்? பார்ட்டக போல் வீறு கொண்டெழுந்த ஒசேப்பா? இவர்களோடு தோள் இணைந்து நின்ற தோழர் ஏ. பாலசுப்பிரமணியன் சாயல் கொண்ட சங்கரனா? தீர்ப்பு சொல்வது சிரமம். ஏனெனில் இந்நாவலின் மையக்கரு சமூக எழுச்சி என்பதால் இதில் பங்கு பெறும் ஒவ்வொருவருமே கதாநாயகர்கள் கதாநாயகிகளே!
ஏண்டா சாண்டாக் குடிக்கி பொட்டச்சிண்டா அம்புட்டு எளக் காரமோ? பறச்சி சக்கிலிச்சிண்டா அம்புட்டு எளக்காரமோ, நீங்க கையப் புடிச்சா படுத்துக் கணுமோ பல பட்டறப் பய... என மாடத்தி சீறும்போது நாமே எழுந்து போய் அவன் கன்னத்தில் இரண்டு அறைவிடலாம் எனத் தோன்று கிறது.
அடி ஆத்தே இந்த அக் குருவத்தை கேக்க நாதியில்லையா? நேத்து ருசுவாயி வந்திருக்க பச்சை மண்ணெ, அம்மணமா ஆக்கிப் பருந்தாட்டமா தூக்கிட்டுப் போரானே முடிவான்...
அஸின் ராவுத்தர் தோல் ஷாப்பில் கேட்ட இந்த அலறல் வழக்கம் போல் அன்றாட நிகழ்வாகிவிடவில்லை. அப்பாவி ஒசேப் திமிறி எழுந்தான். முதலாளியின் மைத்துனன் முதாபா மீரான் மீது பாய்ந்து தூக்கி வீசினான். அந்த சிறுபொறி காட்டுத் தீயானது. மாபெரும் எழுச்சியின் விதையானது. அதுதான் இந்நாவல்.
ஒசேப்பை கட்டி வைத்து உதைப் பதைக் கண்டு இயல்பான மனிதநேயத் தோடும் கோபத்தோடும் பாய்ந்த இரு தயசாமி கிறுத்துவத்துக்கு புதுமுகம் தருகிறார். பாதிரியாராக ஆசைப் பட்டவர் பாவப்பட்ட மக்களின் போரா ளியாக மாறுகிறார்.
நந்தவனப் பட்டியில் சுடுகாட்டுப் பாதை மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வந்த சங்கரன் தடையை உடைத்தது ஒடுக்கப் பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியது. மறுபக்கம் அக்ரஹாரம் கொதித்தது.
என்ன குத்தம் செய்தானின்ணா கேக்கிறேன் கணேசய்யர், இதைவிட என்ன அபச்சாரம் ஓய் செய்ய வேணும்? ஒரு ஃபராமணன், அதிலே யும் ஆச்சாரமான குடும்பத்திலே ஜெனிச்சவன் சண்டாள ஜனங்கவாசம் செய்யும் சேரிக்குப் போய்... அதுக ளோட ஒண்ணா மண்ணா கலந்திருக் கான். அதோட சகிக்க முடியாத அநி யாயம் என்னண்ணா ஒரு பறைச் சாதி பெண்ணோட பொணத்தை ஒரு சட்டைகார மிலேச்சப் பயலோடு சேர்ந்து தோளிலே தூக்கியிருக்கான் இதைவிட அபச்சாரம் என்ன வேணும்? என நாராயணய்யர் கொட்டினார்.
அக்ரஹாரத்தை எதிர்த்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்காக சங்கரன் பயணப்பட்ட கதை இந்நூலில் ரத்தமும் சதையு மாய் பதிவாகி உள்ளது. கம்யூனிட் கட்சியை பார்ப்பணர் கட்சி என பகடி பேசும் அரைவேக்காட்டு அறிவு ஜீவி கள் நெற்றிப் பொட்டில் அறைகிறது இந்நூல். பூணூலை அறுத்தெறிந்து அம்மக்களுடன் சங்கரன் கலந்ததைக் கூட திடீர், நிகழ்வாக அல்ல இயல் பான போக்கில் சன்னஞ் சன்னஞ் சமாக ஏற்பட்ட மாற்றமாகவே டி.செல் வராஜ் பதிவு செய்திருப்பது எழுத்து நேர்மையைக் காட்டுகிறது.
பாதிரியார் அங்கியைதூக்கி எறிந்து விட்டு தங்கசாமி தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களுக்காக போராட வந்த கதை.
காங்கிர சோஷலிட்டாக கம்யூனிடாக அடக்கமாய் செயல் பட்ட அமைப்பாளர் போராளி மதன கோபால் சாயலில் வேலாயுதம் அவரு டைய நெஞ்சுறுதி அவர் சந்தித்த அடக்குமுறைகள் அடடா... கம்யூ னிட்டுகள் தொழிற்சங்கத்தை கட்டி வளர்க்க சொரிந்த ரத்தமும் கண் ணீரும் இவ்வளவு உயிர்த்துடிப்புடன் இதுபோல் இன்னொரு நாவலில் சொல்லப்பட்டிருக்குமோ என்பது ஐயமே!
அருக்காணி என்ற பெண் பாத்திரம் எழுச்சியுற்ற உழைக்கும் பெண்களின் இலக்கணம் அல்லவா? பொட்டச் சிக்கு கோபம் வந்தா பூமி தாங்காதுடா தொங்கா என வில்லன் முதபா மீரனை தூக்கி வீசி அவன் மீது குழவிக்கல்லைப் போட்டு கொலை செய்யும் சிட்டம்மா; அந்தப் பழி சங்கத்துக்காரன் மேல் விழுந்தபோது நேர்மையோடு உண்மையைச் சொன்ன சத்திய ஆவேசம்; இந்நாவல் முழுவதும் வரும் அருக்காணி, தாயம் மாள், மாடத்தி சிட்டம்மாள் ஒவ்வொரு பெண்ணும் உழைக்கும் மக்களின் பெண்ணியம் இது என கோடு கிழித்துக் காட்டுகின்றது.
அக்னீமேரியும் அமலோற்ப மும் இதர பெண்களும் தியாகத்தின் சாட்சிகள். தியாகம் என்பது வெறும் வார்த்தையல்ல. ஒரு லட்சியம் மனித மனங்களைக் கவ்வுமானால் அது எவ்வளவு பெரிய போராட்ட சக்தியாக மாறும் என்பதை கூறவும் வேண் டுமோ?
சந்தனத்தேவன் அடியாளாய் வந்தவன் விழிப்புற்றபோது அவனுள் நிகழும் இமாலயமாற்றங்கள், சீயான் தேவர், முத்துப்பேச்சி, விருமாயி எல்லோருமே சமூகம் சிருஷ்டித்த பாத்திரங்கள். அவர்கள் தங்களை உணரும்போது ஏற்படும் தலைகீழ் மாற்றங்கள்! அதுதானே நிலைத்த பலன் தரும்!
திண்டுக்கல் தொழிற்சங்க வர லாறு மட்டுமல்ல இந்த நாவல்; ஏறத் தாழ 40 ஆண்டுகள் தமிழக, இந்திய அரசியல் நிகழ்வுப் போக்கும் எந்தவித பிரசங்கமும் செய்யாமல் காட்சிகளாக பாத்திரங்கள் மூலமே பதிய வைத்த தன் மூலம் டி. செல்வராஜ் வெற்றி பெற்றுவிட்டார்.
காங்கிர கட்சியில் அப்பழுக் கற்ற தியாகிகள் இருந்தனர். ஆனால் நாடு விடுதலை அடையும்போது முதலாளிகள், கள்ளச்சந்தைக்காரர் கள், திருடர்கள் கதர்சட்டை போட்டு தலைவரானார்கள் தியாகம் ஓரம் கட்டப்பட்டது. காங்கிர சுரண்டும் வர்க்கக் கூடாரமானது. இதை மிக நுட்பமாக இரண்டே அத்தியா யங்களில் செல்வராஜ் தீட்டிக்காட்டி விட்டார்.
கம்யூனிட் கட்சி தடை செய் யப்பட்ட காலத்திலேயேயும் அது மக் கள் நல்வாழ்வுக்கானப் போரில் எப்படி இரண்டறக் கலந்து நின்றது என்பதை இந்நாவல் விவரிக்கிறது.
காவல்துறையும் அதிகார வர்க்க மும் சுரண்டும் வர்க்கத்திற்கும் சாதிய அடக்குமுறைக்கும் துணை நிற்பதை உரிய முறையில் இந்நாவல் பதிவு செய்கிற வேளையில் அதே காவல் துறையிலும் அதிகார வர்க்கத்திலும் ஜனநாயக எண்ணங்கொண்டோரும் இருப்பதை நளினமாகப் பதிவு செய் துள்ளது. துண்டு பாய் என்கிற சவுக் கத்தலி, செல்ல மரைக்காயர் என்கிற சிறு வியாபாரி போன்ற பல பாத் திரங்கள் மூலம் எந்த மதமாக இருந் தாலும் அதற்குள்ளும் வர்க்க வேற் றுமை இருப்பதையும்; நேர்மையும் தியாகமும் போர்குணமும் மிக்க சாதாரண மக்கள் பெரும்பாலோராக இருப்பதையும் அழகாக நாவ லாசிரியர் பதிவு செய்துள்ளார்.
ஆயினும் நீதிதுறையில் வர்க்கப் பாசம் ஏன் நூலாசிரியரால் சரியாகத் தோலுரிக்கப்படவில்லை.
ஒசேப் - தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்; எந்த தெருவில் நுழையக் கூடாது என்று தடுக்கப்பட்டாரோ; தீண்டாமையின் கோரத்துக்கு இலக் கானாரோ அதே ஊரில் நகர்மன்றத் தலைவராகிறார்.
இத்துடன் நாவலை முடிக்க வில்லை. பெற்ற வெற்றி தற்காலிக மானது; போராட்டம் முடியவில்லை தொடர்கிறது என்பதன் குறியீடாக சங்கரன் மறுபடியும் கைதாவதுடன் நாவல் நிறைகிறது. ஆனால் நாவல் நம்முள் கிளர்த்தும் உரத்த சிந்தனை கள் ஓராயிரம். ஆம். வர்க்க பகைமை, வர்ணப் பகைமையை வெல்லும் யுத்தியை இந்நாவல் சித்தரிக்கிறது.
இது தலித் நாவலா? ஆம் தலித் மக்களை விழிப்படையச் செய்யும் நாவல். இது வர்க்கப் போராட்ட நாவலா? ஆம். வர்க்கப் போராட்டம் எப்படி அன்றாடம் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை பறைசாற்றும் நாவல். இது வரலாற்று நாவலா? ஆம். கம்யூனிட் இயக்க தியாக வரலாற்றை உயிர்துடிப்போடு உணர வைக்கும் நாவல்? இது துப்பறியும் நாவலா? ஆம். மீரான்பாய் மரணத்தை துப்பறியும் கதை நிகர்த்த சபென்ஸூடன் நகர்த்தும் நாவல். அதற்கும் மேல் இது. மதபீடங்கள் அது கிறுத்துவம் ஆனாலும் இலாம் ஆனாலும் இந்து மதமானாலும் எப்படி சுரண்டும் வர்க்கத்துக்குச் சேவை செய்யும் அமைப்புகளாகவே இருக்கும் என்பதை எடுத்துச் சொல்வதால் இது மறு மலர்ச்சி நாவலுமாகும்.
கம்யூனிட் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு பல வெளிவந்துள் ளன. ஆயினும் அவை இன்னும் வெகுமக்களைச் சென்றடைய வில்லை. கட்சிக்குள்ளும் முழுமை யாகச் சென்றடையவில்லை. கம்யூ னிட்டுகளின் மீதும் கம்யூனிட் தலைவர்கள் மீதும் எதிரி வர்க்கம் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறது. இச்சூழலில் கம்யூ னிட்களின் தியாகத்தை போற்ற இந்நாவல் தெருத் தெருவாக எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.
கம்யூனிட்டுகளுக்கு சாதி இல்லை. மதம் இல்லை. மூடநம்பிக் கைகள் இல்லை. சுயநலம் இல்லை. மக்களுக்காக எல்லாவித தியாகங் களுக்கும் தயாரானவர்களே கம்யூனிட் டுகள். அவர்கள் காட்டுகிற பாதைதான் இந்த நாட்டை உய்விக்கும் என்பதை உரக்கச் சொல்ல வேண்டிய நேரம். எனவே ஒவ்வொரு கட்சி கிளையும் ராமாயணம் மகாபாரதக் கதை சொல்லுவது போல் இந்த நாவலை தெருத் தெருவாகச் சொல்ல வேண்டும்.
தேநீர் நாவல் மூலம் இதுவரை தேநீர் செல்வராஜ் என அறியப்பட்ட இந்நாவலாசிரியர் இந்நாவல் மூலம் தோல் செல்வராஜ் என இனி அறியப் படுவார்.
தோல், டி. செல்வராஜ், நியூ செஞ்சுரி புக் ஹவு (பி) லிட், 41பி, சிட்கோ இண்டடிரியல் எடேட், அம்பத்தூர், சென்னை - 600 098. பக். 712, விலை 375/-

1 comments :

  1. siraj

    தோழர், நாவலை நானும் வாசித்தேன் ஆனால் நீங்கள் புளகாங்கிதம் அடைவதைப்போல நாவல் இல்லை என்பது எனது வாசிப்பனுபவம்.
    கரடுதட்டிப்போன,பிற்போக்கான உவமைகள்,
    கிறிஸ்துவத்தையும்,மார்க்ஸியதையும் எந்த மனத்தடையுமின்றி சமப்படுதுவது... என விரியும் இந்நாவல். அலுப்பூட்டும் மொழி நடையை தோல் தொழிளாலர் வரலாற்றின் மீது சுமத்தி இருக்கிறார். இதுவே இந்நூலுக்கு மிகப்பெரிய பலவீனம்.
    இந்நாவலை தோல் தொழிலாளர் வரலாற்று நாவல் என்று சொல்வதைவிட சங்கரன் வரலாறு என்று சொல்வது கூட ஒரு வகையில் பொறுத்தமாக இறுக்கும். சண்டாளன் என்பதை நாவலின் கதாபாத்திரங்கள் விளம்புவதை புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் நாவலாசிரியர் அந்த வார்த்தையை பயன்படுத்துவது அவர் சமகால அரசியல் சமூக விவதங்கள் எதையும் கவனிப்பது இல்லை என்றே தெரிகிறது. (சண்டாளன் என்ற பதம் குறித்து தலித் முரசு இதழிலும் வேறு பல தளத்திலும் விவதம் நடை பெற்ற விபரம் நீங்கள் அறிவீர்கள் தானே தோழ்ர்.)

Post a Comment