பர்மியப் போராளிகள்: உலுக்கும் கேள்விகள்

Posted by அகத்தீஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பொழுது வட கிழக்கு மாநிலங்களில் ஆயுதம் கடத்துவோருடன் அவருக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. சில மாதங்கள் இச்செய்தி பரபரப் பாக பேசப்பட்டது. அப்புறம் வழக்கம் போல் இதனை இந்திய சமூகம் மறந்துவிட்டது.உண்மையில் அவர்கள் ஆயுதக்கடத்தல் காரர்கள் இல்லை. பர்மாவின் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடும் போரா ளிகள். அவர்களை நம்ப வைத்து வஞ்சித்த வர் இந்தியாவின் உயர் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கிரேவால் என்பதை எத்தனை பேர் அறிவர்?கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; பத்திரிகைகளில் வந்த செய்திகளும் பொய்; தீர விசாரித்து அறிவதே மெய். ஆம். இந்த விவகாரம் நமக்கு உணர்த்துவது இதைத்தான். இன்னும் இந்தியச் சிறைகளில் வாடும் அந்த 36 பர் மியப் போராளிகள் கதையைத் துருவிப் பார்த்தால், திகி லூட்டும் திருப்பங்கள் நிறைந்த துப்பறியும் புனை கதை களை விஞ்சும் மர்ம முடிச்சுகள் நிரம்பக்கிடக்கின்றன.வஞ்சகம் என்பதின் முழுப் பொருளாய் அந்த ராணுவ அதிகாரி இருந்தார் என்பது மட்டுமல்ல; இந்திய ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டே பர்மிய ராணுவ ஆட்சிக்கு உளவு பார்த்தார், சேவகம் செய்தார் என்பதை படிக்கிறபோது அதிர்ச்சியும் பல ஆழமான கேள்விகளும் நம்முள் எழும்.

நந்திதா ஹச்சர் எழுதிய வஞ்சக உளவாளிகள் என்ற நூல் பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய ராணுவம் என்கிற துணைத் தலைப்போடு நம்மிடம் நூலின் உள்ளடக்கத்தை பகிரங்கப்படுத்திவிடுகிறது. ஆயினும் ஒவ்வொரு பக்கமும் மர்மக் கதைபோல் நம்மை இழுத்துச் செல்கிறது.

இந்நூல் அந்த 36 பர்மியப் போராளிகள் விடு தலைக்கான போராட்டங்களை விவரிக்கிற முயற்சிதான். அதுதான் இந்நூலின் அடிப்படை நீரோட்டம். ஆயினும் பர்மாவின் வரலாறும் அங்கு ஜனநாயகத்துக்காக தொடரும் கிளர்ச்சிகளும் இந்நூல் நெடுக விரவிக் கிடக்கிறது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்ட தடுமாற்றமும், மாற்றமும் பர்மாவின் ஜன நாயகப் போராட்டங்களை சிக்கலாக்கிவிட்டதையும் அத் தோடு பிணைந்த பல்வேறு அரசியல் சிக்கல்கள் முடிச்சு களையும் இந்நூல் பேசுகிறது.ஆக பர்மா போராளிகள் சிறைப்பட்ட கதை - பர்மா ஜன நாயகப் போராட்டக் கதை - இந்திய வெளியுறவுக் கொள்கைக் குழப்பக்கதை என மூன்றும் கலந்ததே இந்நூல் எனில் மிகை அல்ல.அண்டை நாட்டில் சர்வாதிகாரம் கோலோச்சுகிற போது நம் நாட்டில் ஜனநாயகம் இருக்க முடியுமா?

“ஜன நாயகத்தை மீட்க பர்மிய மக்கள் நடத்தி வரும் போராட் டத்துக்கு ஆதரவு அளிப்பது நம் தார்மீகக் கடமை” என்று தனிப்பட்ட முறையில் நம்புகிறேன் என்று கேப்டன் லட்சுமி முன்னுரையில் கூறியிருப்பது பொருள்மிக்கது. இவர் இடதுசாரி கட்சிகள் சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவர். ஆனால் வெற்றி பெற்ற அப்துல் கலாம், பர்மா இராணுவ ஆட்சி யோடு கைகுலுக்கினார் என்பதும் சம்பந்தம் இல்லாத செய்தி கள் அல்லவே.

பர்மாவில் ஏன் இன்னும் ராணுவ ஆட்சி நீடிக்கிறது? பர்மாவில் தொடரும் அரசியல் கிளர்ச்சிகள் மிருகத் தனமாக நசுக்கப்படும்போதும் உலக நாடுகள் மவுனம் காப்பது ஏன்? ஆங் சான் சூகி இன்னும் வீட்டுச் சிறையில் இருப்பது ஏன்? விருதுகள் வழங்கி அவரைக் கவுரவித்த இந்திய அரசு தற் போது ராணுவ சர்வாதிகாரியுடன் கூடிக் குலவுவது ஏன்? வங்க தேச விடு தலைக்கு ஆதரவுக்கரம் நீட்டிய இந்திய அரசு பர்மாவில் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படி ராணுவ ஆட்சியை ஆதரிக்கிறது? சீனா அங்கு சர்வாதிகார ஆட்சிக்கு துணை போவது ஏன்? அப்பப்பா புற்றீசல்போல் புறப் படும் கேள்விகள் பலவற்றுக்கு இந் நூல் விடை தேட முயன்று இருக்கிறது. அது இந்நூலின் மையப் பொருளல்ல, எனினும் இணைத்து பேசியிருப்பது தவிர்க்க இயலாத தேவையின் கட்டாயமே!

பர்மாவின் பெயர் மியான்மர் எனவும், ரங்கூன் நகர் யாங்கோன் எனவும் மாற்றப்பட்டது கூட ஒரு உள்நோக்கம் கொண்டது. பர்மா எனும் தேசம் உருவாக காத்தூலே என்ற தேசம் பலியிடப்பட்டதி லிருந்தே சோகம் தொடங்குகிறது. பர்மாவின் வரலாறு பல்வேறு இனக்குழுக்களின் சுயஅடையாளத்தை அழித்து உருவானதா? அல்லது ஐக் கியத்தில் உருவானதா? இதைப் புரிந்துகொள்ள இந்நூல் உதவும்.

“ரங்கூனிலோ, தில்லியிலோ, வாஷிங்டனிலோ உட் கார்ந்து கொண்டு வரலாற்றைப் படிப்பது வேறு; கோஹிமா, ஹர்லேம் அல்லது மனேர்ப்ளா போன்ற ஊர்களில் இருந்துகொண்டு வரலாற்றைப் புரிந்து கொள்வது வேறு. நான் கரோனியர்களுக்காகவும், ஆரக்கானியர்களுக் காகவும் வாதாடுகிறேன். ஆகவே அவர்கள் எவ்வாறு அனுபவித்தார்களோ அவ்வாறே அரசியலையும் வர லாற்றையும் நான் புரிந்து கொண்டாக வேண்டும்” என நூலாசிரியர் உறுதியாகக் கூறுகிறார். இவர் விடுதலைக் காக குரல் கொடுக்கும் இந்த 36 பேரும் ஆரக்கானியர்களும் கரேனியர்களும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

பர்மாவுக்கும் நமது வடகிழக்கு மாநிலங்களுக்கும் உள்ள தொடர்பு எல்லை வழி பூகோளத் தொடர்பு மட்டுமா? அல்லது அதற்கும் மேலா?நூலாசிரியர் தன் அனுபவத்தை கீழ்க்கண்டவாறு ஓரிடத்தில் பதிவு செய்கிறார்:“வடகிழக்கு மாநிலங்க ளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றவர்களோடு ஒரே விடுதியில் இருந்தாலும் வெவ்வேறு உலகங்களில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதை நான் பார்த்தேன்.”

இது மிகவும் நுட்பமான பதிவு. இந்தியாவின் மாநிலங்களாக தொடர்ந்தாலும் வடகிழக்கு மாநில மக்களா யினும் காஷ்மீர் மக்களாயினும் நம்மோடு வாழாமல் அவர்களுக்கான ஓர் உலகில் வாழ்வது ஏன்? யாரோ தூண்டிவிடுவதால் மட்டும்தானா? அப்படி நாம் நம் பினால் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்றே பொருள். தேசிய இனப்பிரச்சனைகள் பர்மா வாயினும், இந்தியாவாயினும் புதிய வடிவம் கொள்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.எண்ணை வளமும் வர்த்தக நலனும் ஒரு நாட்டின் வெளிநாட்டுக்கொள்கையில் ஆதிக்கம் செலுத்தும் போது மக்களின் சுயவிருப்பங்கள் காலில் போட்டு மிதிக்கப்படுவதுதானே நிகழும். இதன் கோரப்பலியே 36 பர்மாக் கைதிகள் சிறைபட்டதும்; அவர்களின் தலை வர்கள் இந்திய தீவொன்றில் சுட்டுக் கொல்லப்பட்டதும்; ஒரு ராணுவ அதிகாரியால் மோசமாக வஞ்சிக்கப்பட்ட தும்; அந்த அதிகாரி தப்பிச் சென்று தண்டனையின்றி சுகபோகத்தில் திளைப்பதும். இந்நூலில் நன்கு பதிவாகியுள்ளது.

ஜனநாயகத்துக்காக பர்மாவில் நடக்கும்போரில் துறவிகள் பங்கேற்றது ஆச்சரியமான விஷயம். ஆனால் நிலைமை அவ்வளவு முற்றிபோயுள்ளது. அங்கே ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆயுதங்கள் மட்டுமல்ல. ஜட்டிகளும் ஆயுதமானது வேடிக்கையானது. மக்களின் உணர்வை வெளிப்படுத் தும் அளவுகோலாகும்.பெண்களின் உள்ளாடைகளை வைத்திருக்கும் ஆண்கள் தங்கள் வலிமையை இழந்துவிடுவார்கள் என் பது பர்மாவின் பழமையான மூடநம்பிக்கை. ராணுவ சர்வாதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனைப் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் தங்கள் உள்ளாடைகளை ராணுவ சர்வாதிகாரிகளுக்கு தபாலில் அனுப்பும் அமைதிக்கான ஜட்டிகள் இயக்கம் நூலில் இடம் பெற்றுள்ள கொசுறுச் செய்தி. எனினும் கொதி நிலையை காட்டும் செய்தி.

பர்மாவின் நண்பனாக காட்சி அளித்த `அங்கிள் என அழைக்கப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஏன் திடீ ரென மாறினார்? தேசபக்தி மிக்கவர் எனக் கருதப்படு கிற விஷ்ணுபகத் தளபதி பொறுப்பிலிருந்து ஏன் நீக்கப் பட்டார்? நேர்மையான தளபதி என பெயரெடுத்த விஷ்ணு பகத் மோசமான ஊழல் ராணுவ அதிகாரி பற்றிய விவகாரத்தில் வாய் மூடி இருந்தது ஏன்? அடே யப்பா..... தோண்டத் தோண்ட கேள்விகள். மனித உரிமை பற்றிய பேச்சு கானல் நீர் தானோ?

வெறும் துரோகம், வஞ்சகம், ஏமாற்று, அவமானம், இவைகளின் வரலாறாக மட்டுமல்ல; தோள்கொடுக்க முன்வரும் இடதுசாரிகள், துணை நிற்கும் மனித நேயர்கள் பற்றிய செய்திகளும் நாமறிய வேண்டிய முக்கிய அம்சங்களே. "தாவர உணவுக்காரரான அந்த ஹரியானா விவசாயிக்கு தன் வீட்டில் குடியிருக்கும் மாட்டுக்கறி உண்ணும் ஆப்கானியரோடு எந்தச் சிக்கலும் இல்லை. அந்த இலாமியர் பர்மாவிலிருந்து வந்த பன்றிக்கறி சாப்பிடுபவரை அன்புடன் வரவேற்கிறார் (உணவளிக் கிறார்). அதை கவனித்த நான் சமூகப் பணியாளர்க ளிடம் 'இதையெல்லாம் அரசாங்கத்துக்குச் சொல்லி விட வேண்டாம். அவர்களுக்குத் தெரியவந்தால் அந்த விவசாயியின் வீட்டுக்குள்ளேயே ஒரு மதக்கலவரத் தைத் தூண்ட ஏற்பாடு செய்துவிடுவார்கள்...' என்றேன்!" இவ் வாறு நூலாசிரியர். ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சின்ன சம்பவம் பல பெரிய செய்திகளை கூறவில்லையா?

இந்த நூலைப் படிக்கிறபோது பல ஐயங்கள் எழும். இந்திய ராணுவக் கொள்கையும், வெளிநாட்டுக் கொள் கையும் ஆபத்தான திசையில் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. இது நமது இயல்புக்கு முரணா னது. புதிய உலகச் சூழலில் தாராளமயத்தின் விளைவு இது.பர்மா - இந்திய மக்கள் உறவு தொப்புள்கொடி உறவு போன்றது. ஆனால் இந்தியா துரோகம் செய்கிறது. அப்படியெனில் இங்கே தெற்கே இலங்கைத் தமிழர் நம் தொப்புள்கொடி உறவுக்கு இந்திய அரசும் இந்திய ராணுவமும் நியாயம் வழங்கி இருக்கும் என்று நம்ப முடியுமா? என்னுள் நெடுநாள் ஆழமாக பதிந்த சந்தேகம் இந்நூல் மூலம் மேலும் வலுப்பட்டது.ஜான்பெர்கின் எழுதிய ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ என்ற நூலைப் போல இந்த நூலும் நடப்பு அரசியலை புரிந்து கொள்ள விழிகளைத் திறக்கும் சாவியாகும் என்பதில் ஐயமில்லை.

இது மொழிபெயர்ப்பு நூல் என்பதை அட்டையில் தமிழில் அ. குமரேசன் என்று போட்டுள்ளதால் மட்டு மே அறிய முடியும். நூலைப்படிக்கிற யாரும் மொழி பெயர்ப்பென்று கூற முடியாது. அப்படியொரு நீரோட்ட நடை. அ. குமரேசனுக்கு பாராட்டுகள்!

வஞ்சக உளவாளி

(பர்மா போராளிகளை ஏமாற்றியஇந்திய ராணுவம்)

நந்திதா ஹச்சர்.

தமிழில்: அ. குமரேசன்,

கிழக்குப் பதிப்பகம்33/15 எல்டாம் சாலை,ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018.

பக். 228, விலை ரூ. 170/-

(நன்றி: ‘தீக்கதிர்’ 14.11.2010 இதழ் ‘புத்தக மேசை’ பக்கம்

1 comments :

 1. na.ve.arul

  அன்புள்ள தோழருக்கு,

  வணக்கம்.
  வஞ்சக உளவாளியைப்பற்றிய உங்கள் விமர்சனம் மிக அருமை.
  இப்படியான புத்தகங்கள் பூட்டிவைக்கப்பட்ட பல மனங்களைத் திறக்க உதவும்.

  இந்த உலகமய நுற்றாண்டின் மிக மோசமான நுணுக்கமான அறிவைத் திசைமாற்றும்
  போர்த்தந்திரங்களை முறியடிக்க போர்க்குணத்தை வளர்தெடுக்க வேண்டியது அவசியத்தேவையாகும்.

  இப்படியான புத்தகங்களை மொழிபெயர்க்கும் அ.குமரேசன் அவர்களுக்கும், அதை வெளிஉலகறிய விமர்சனம் வழங்கும் உங்களுக்கும் இந்த மானுட உலகம் கடமைப்பட்டிருக்கிறது.

  நட்புடன்
  நா வே அருள்

Post a Comment