அண்மையில்
ஸ்ரீரசாவும் அருணனும் உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலை குறித்து பொதுவான கருத்தொன்றை
முகநூலில் பதிவிட்டிருந்தனர் . அதே போன்ற ஓர் கருத்தை தி.க வைச் சார்ந்த பெல் ஆறுமுகமும்
பதிவிட்டிருந்தார். அதையொட்டி பலரும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர் . பொதுவாழ்வில்
ஈடுபடும் பலரும் சந்திக்கும் பிரச்சனை இது .
ஆரம்பச் சூழலில்
தீவிரமாக செயலாற்றும் போது இயக்க வளர்ச்சியின் நிர்ப்பந்தத்தால் எதிர்பாராமலே அங்கீகாரம்
கிடைத்துவிடும் . மேலே செல்லச் செல்ல தலைமையின்
விருப்பு வெறுப்பு ஈகோ எல்லாமும் சேரும் , மேலும் பல்வேறு அக ,புறக் காரணிகளும் வினைப்படும்
, விளைவு ஒரு கட்டத்தில் தேங்க நேரிடும் .அப்போது சோர்வு தட்டும் .பலர் தடுமாறும் இடமும்
தடம்மாறும் இடமும் அதுதான் .ஆனால் அந்த தடுமாற்றமும் தடமாற்றமும் அதுவரை போற்றி பின்பற்றிய
சித்தாந்தத்தை விட்டு விலகச் செய்துவிடும் .இச்சூழலில் சித்தாந்த உறுதியோடு தன்னைக்
கட்டுப்படுத்திக் கொண்டு தம்மால் இயன்ற பணியைத் தொடர்வோரே லட்சியவாதி ஆவார் . ஒரு பேட்டியில்
ஃபிடல் காஸ்ட்டிரோ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஈகோ பெரும் சவாலாக உள்ளது என்று வருந்துவார்
. கட்சிகளில் மட்டுமல்ல நிறுவனங்கள் , தலைமை இடங்கள் எங்கும் ஈகோ பெரும் தலைவலியாகவே
இருக்கிறது . இது மனித உறவுகளின் பிரச்சனை .
இதனைப் பற்றி
பேசிக்கொண்டிருந்த போது ஆன்மீகம்தான் இதற்கு ஒரு மருந்து என்றார் ஓர் அன்பர் . மதபீடங்களிலும்
வெடித்து குமுறும் ஈகோ குறித்து சுட்டியபோது மவுனமானர் .மேலும் சொன்னார் ஆச்சார அனுஷ்டானங்களில்
மூழ்கியோரும் யோகா தியானம் என அலைவோர்களும் உட்சபட்ச ஈகோ வெளிப்படுத்துவதை ஒப்புக்
கொண்டார்.
விமர்சனம்
சுயவிமர்சனம்தான் சிறந்த மாமருந்து .மார்க்சியம் வழிகாட்டியது .ஆயின் பிறரை விமர்சனம்
செய்யும் போது விரியும் இதயம் சுயவிமர்சனம்
என்கிற போது ஒட்டிச் சுருங்கிவிடுகிறது .அந்த மருந்து வீரியமற்றுப் போகிறது . அறிவுத்
திருக்கோயில் வேதாத்திரி மகிரிஷி அகத்தாய்வு என்கிற ஒன்றை தம் சீடர்களுக்கு அறிமுகம்
செய்தார் . ஆனால் அங்கும் ஓர் சடங்காகாகவே மாறிப்போனது . கிறுத்துவ மதத்தில் பாவமன்னிப்பு
கேட்பது கிட்டத்தட்ட வெறும் கேலிக்கூத்தானதுபோல்தான்.
ஆக .ஈகோவுக்கு
எதிரான போராட்டத்தில் விமர்சனத்துக்கு செவி கொடுப்பதும் சுயவிமர்சனமாய் வாய்திறப்பதுக்கும்
மாற்று வேறு இல்லையே !
செவிகைப்பச்
சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த்
தங்கும் உலகு. (குறள்
.389)
கேட்கக்கூசும்
விமர்சனங்களையும் பொறுமையோடு செவிமடுத்து தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ளும் பண்புதான்
பொதுவாழ்வில் மிகத்தேவை .ஆயின் அதுவே இங்கு பெரும் பற்றாக்குறை .என் செய்ய ?
[ இவை ஒரு
சகதோழரோடு அலைபேசியில் உரையாட நேர்ந்த போது பரிமாறிக்கொண்ட கருத்துகள் . தனிப்பட்ட
முறையில் யாரையும் சுட்டுவன அல்ல ]
சுபொஅ.
02/07/25.
0 comments :
Post a Comment