எது ஆன்மீகம் ?[1]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [1}

 

 “மதம் வேண்டாம் சார் ! ஆனால் Spiritual outlook தேவை.” என்றார் நண்பர்.  

 

உறவினர் பலரிடம் உரையாடும் போதும் இதுபோன்ற வாதம் எழுந்தது உண்டு .

 

ஆன்மீகம் [Spiritual] என்ற சொல் ஒவ்வொருவராலும் அவரவர் புரிதலுக்கு ஏற்ப ஒரு தற்காப்பு முகமூடியாய் பயன்படுத்தப்படுகிறது . எது ஆன்மீகம் என்று விவாதிக்க புகுன்றால் பலர் பலவிதமாய் வியாக்கியானம் செய்கிறார்கள் .

 

ஆத்திகம் ,ஆன்மீகம் ,நாத்திகம் ,பகுத்தறிவு  இப்படி எல்லா சொற்களும் பொருளுடைத்தனவே என்பதில் ஐயமே இல்லை . ஆயின் இச்சொற்களை யார் எங்கு எதற்கு எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியம்.

 

ஆத்திகம் ,ஆன்மீகம் என்பது வெளிப்பார்வைக்கு ஒற்றைச் சொல்லாகத் தோன்றினும் இதற்குள் ஆயிரம் வகைப்பாடுகள் உண்டு .

 

அதுபோல் நாத்திகம் ,பகுத்தறிவு என்பதைச் சார்ந்தும் நிறைய வகைப்பாடுகள் உண்டு .

 

ஒவ்வொன்றையும் தெளிதல் மிக முக்கியம் . பொதுவாய் சொல்லப்படும் வரையறையை முதலில் பார்ப்போம் .அவை சரியா பிழையா என பின் தொடர்வோம்.

 

ஆன்மீகம் என்பது மதம் சார்ந்ததல்ல என கருதும் நண்பரின் வாதத்தை முதலில் பார்த்தோம் . அது மெய்யா ?

 

ஆன்மீகம் என்பதை வாழ்வின் மெய்ப்பொருளைத் தேடும் உள்நோக்கிய பயணம் என வியாக்கியானம் செய்து கொள்வார்கள் .

ஆன்மீக உணர்வை தேடலை ஒவ்வொருவரும் தனித்தனியேதான் தேட முடியும் . பெற முடியும்.

ஆன்மீகத் தேடலுக்கு குறிப்பிட்ட விதிகளோ கட்டுப்பாடுகளோ யாரும் வரையறை செய்ய வில்லை .ஒவ்வொருவரின் ஆன்மீகத் தேடலும் தனித்துவம் ஆனது .

 

ஆயின், மதம் அத்தகையதா ? இல்லை.

மதம் ஒரு குழுவாக ஒரு பிரிவாக இயங்கக்கூடியது .அதன் உறுப்பினராகத்தான் நீ இருக்க முடியும் .

மதம் சில குறிப்பான சடங்கு சம்பிரதாயங்கள் விதிமுறைகள் கட்டுப்பாடுகளுக்கு உள்ளடங்கியவை.

மதம் எனப்படுவது நம்பிக்கை .புனித நூல் ,கடவுள் , வழிபாடு , சடங்காச்சாரங்களின் தொகுப்பு .

 

இவைகளை வரையறையாகக் கொண்டால் ஆன்மீகம் தனிப்பட்ட விவகாரம் ,மதம் ஓர் குழு சார்ந்தது என்கிற முடிவுக்கு வரலாமா ?

 

அப்படி ஆயின் ஆன்மீகம் பேசுவோர் யாரையும் வெறுக்க இயலாது .யாரையும் குரோதக் கண் கொண்டு நோக்கலாகாது . எல்லோரையும் அன்பால் அரவணைக்க வேண்டும் . வெறுப்பின் நிழல்கூட விழக்கூடாது . இப்படிச் சொல்வதா ?

அல்லது ஆன்மீகம் என்பது தன்னைச் சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் கவலைப்படாது தன் சுய திருப்தியில் சுருண்டுபோவதா ? தான் ,தன் மனம் ,தன் பேரின்பம் என்கிற சுயநல சிமிழில் அடங்கி ஒடுங்கி கிடப்பதா ?

 

ஆன்மீகம் என்போர் மதம் சார்ந்து உரையாடத் தொடங்கின் அவர் மதவாதியா ஆன்மீகவாதியா ?

நம்மைச் சுற்றிலும் ஆன்மீகம் பேசுவோர் , தன்னைச் சுற்றி ஒளிவட்டம் போட்டுக்கொண்ட ஆன்மீக குருக்கள் எனும் ஆன்மீக வியாபாரிகள் நிறைந்துள்ளனரே ! எல்லா ஊடகங்களிலும் ஆன்மிக இணைப்பு /பக்கங்கள் உண்டு . இவை எல்லாம் மதம் சாராதவையா ? மூடநம்பிக்கை ,வெற்று சடங்காச்சாரங்கள் , போலிப் புனைவுகள் , ஜனநாயகமற்ற ஆதிக்க கருத்தோட்டங்கள் , மாறுதல்களை செரிக்க முடியா ஒவ்வாமை ,பிற மதம் பிற பிரிவினர் மீது வெறுப்பு ,தன் மத வெற்றுப் பெருமிதம்  இவைதானே மண்டிக் கிடக்கின்றன .

 

அப்படியானால் அவை ஆன்மீகம் என்ற சொல்லுக்குள் அடங்குமா அடங்காதா ? அடங்குமாயின் ஆன்மீகம் மதத்தின் மீது பூசப்பட்ட கவர்ச்சி முலாம் எனலாமா ? அடங்காதாயின் ஆன்மீகப் போர்வையில் தொடரும் இந்த அழிச்சாட்டியங்களை எவ்வகையில் சேர்ப்பது ?

 

குழப்பம் தவிர்ப்பது ஆன்மீகவாதிகள் கடமை . ஆனால் குழப்புவதை மட்டுமே செய்கின்றனரோ ?

 

இதுபோல் நாத்திகத்திலும் உண்டு .

 

தொடர்வோம்….

எது ஆன்மீகம் ?{2]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [2]

 

ஆன்மீகம் பற்றிய விவாதம் நாத்திகத்தை தொடாமல் செல்ல இயலாது . நாத்திகம் குறித்து சில செய்திகள் தெரிவோம்.

 

 பொதுவாய் நாத்திகர் என்று சொன்னாலும் அதிலும் நாத்திகர் ,பகுத்தறிவாளர் ,சுயமரியாதைக்காரர் ,கம்யூனிஸ்ட் ,மதச்சார்பற்றோர் ,மதமறுப்பாளர் ,கடவுள் மறுப்பாளர் , ஐயுறுவோர் ,கடவுள் கவலையற்றோர் ,சுதந்திர சிந்தனையாளர் ,அறிவியல் பார்வையாளர் ,பொருள் முதல்வாதி ,லோகாயவாதி ,சித்தர் மரபு ,ஆதிபவுத்தம் ,சார்வாகம் இப்படி பல வகைப்பாட்டில் நாத்திகம் அல்லது பகுத்தறிவு தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உலகெங்கும் இயங்குகிறது

 

Irreligion, which may include deismagnosticismignosticismanti-religionatheismskepticismietsismspiritual but not religiousfreethoughtanti-theismapatheismnon-beliefpandeismsecular humanism, non-religious theismpantheismpanentheism, and New Age, varies in the countries around the world. இப்படி விக்கிபீடியா பெரிய பட்டியலையே சுட்டுகிறது .இவற்றை அப்படியே தமிழாக்கம் செய்யவில்லை .தமிழில் நாமறிந்த சிலவற்றை ஆரம்பத்தில் சுட்டினேன்.

 

எல்லோரும் ஒருப்போல் பேசுவதில்லை . ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்த பார்வை உண்டு .ஆயினும் இப்பிரிவினர் எல்லோரும் மனிதனை அனைத்துக்கும் மேலாக மதிக்கின்றனர் .அறிவைப் பயன்படுத்தக் கோருகின்றனர் . உலக மாந்தரை சாதி ,மத ,இன ,பிரதேச இன்ன பிற அடிப்படையில் பிளவுபடுத்துவதை நிராகரிக்கின்றனர் . கண்மூடிப் பழக்கங்களை கேள்விக்கு உட்படுத்துகின்றனர் . ஆயினும்  “சமூக மாற்றம் ”  [ social change ]எனும் கேள்வியில் நாத்திகர் எல்லோரும் ஒரே நிலையில் இல்லை. பொதுவாக  “சமூக சீர்திருத்தமே” [social reform] பெரும்பாலோர் நிலை .ஆயினும் ,உங்களுக்குத் தெரியுமா இந்த நாத்திகர்கள் யாரும் பிற மதவழிப்பாட்டு தலங்களை இடித்ததில்லை .

 

மொத்தத்தில் மனிதத்தை உயர்த்திப் பிடிப்பவர்களே நாத்திகர்கள் . இதில் தவறினால் அவர்களை நாத்திகர்கள் எனச் சொல்லல் தீதே !

 

பெரியார் பேசிய நாத்திகமும் அறிவியல் அறிஞர் ஸ்டீவன் ஹாக்கிங் பேசிய நாத்திகமும் ஒரே குரலில் இல்லை . பெரியார் சாதி என்னும் இழிவை வெறுத்தார் .சாதியை நியாயப்படுத்தும் மதத்தை எதிர்த்தார் .மதத்தை காக்கும் கடவுளை நிராகரித்தார் . ஆக மனிதனின் சமத்துவ நோக்கில் கடவுளை நிராகரித்த மனிதநேயர் அவர் . அவர் பாணி சீழ்க் கட்டியை நீக்க அறுவை சிகிட்சை செய்யும் பாணி . வலுவாக  கடவுள் மறுப்பு ,நாத்திகம் ,பகுத்தறிவு பேசி மக்கள் தலைவராய் நின்றதுதான் இவரது தனித்துவம் .சாக்ரட்டீஸ் இங்கர்சால் போன்றோரின் பகுத்தறிவுவாதம் இன்னொரு தளம் .

 

 “இயங்கியல் பொருள் முதல்வாத” சித்தாந்த அடிப்படையில் கடவுளையும் மதத்தையும் அணுகியவர்கள் கம்யூனிஸ்டுகள் . எல்லாவகையிலும் மனிதர்களுக்கிடையே சமத்துவம் தழைக்க வேண்டும் என்பது அவர்கள் நிலை . சமூக மாற்றமே இவர்களின் இறுதி இலக்கு.

 

ஸ்டீவன் ஹாக்கிம் ஓர் இயற்பியல் அறிஞர் . இளமையிலேயே இறந்து போவார் என்கிற மருத்துவக் கணிப்பை ; மீறி உடல் முழுவதும் சதை செயலற்று முடங்கிய போதும் சிந்திப்பதை நிறுத்தாமல் இயற்பியல் உலகில் சாதனை செய்தவர் . அவர் அறிவியல் ரீதியாக கடவுளை மறுத்தார் .அவர் பேசிய நாத்திகம் அறிவியல் தளத்தில் சவாலாக நிற்கிறது .

 

“விசுவாசி,” “ஐயுறாதே என்பது மதங்களின் பாதையாகவும் “கேள்வி கேள்,” “சந்தேகி என்பது அறிவியல் பாதையாகவும், பார்வையாகவும் உள்ளது.

 

மதங்களைப் பற்றிய விமர்சனம்தானே எல்லா தத்துவ விமர்சனங்களுக்கும் அடித்தளம். ஆனால் மதங்களை அறிவியல்பூர்வமாகக் கூட விமர்சிக்க முடியாத ஒரு பாசிச சமூகச் சூழல் இன்று நிலவு கிறதே ஏன்?

 

ரிச்சர்ட் டாக்ஃ கின்ஸ் என்கிற மேலைதேச மரபணு விஞ்ஞானியும் பகுத்தறிவாளரும் தன் பத்து வயது மகளுக்கு எழுதிய புகழ்பெற்ற கடிதத்தில் கூறுவார்: “துப்பறியும் நிபுணர்கள் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி உண்மைகளை கண்டறிவதுபோல் எல்லாவற்றையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்

 

கடவுள், புனிதநூல், பழம்பெருமை எல்லாம் இத்தகு விமர்சனத்துக்கு உட்பட்டதே என்பதே பகுத்தறிவாளர் வாதம். இது ஒரு பாதை.

 

இப்படி புனித நூல்களை ஆராயக்கூடாது என்பது மத நம்பிக்கையாளர் வாதம்

 

. “திருடனைக் கண்டுபிடிப்பதற்காக வீட்டில் சோதனை செய்ய நுழையும் போலீஸ்காரர் மனோபாவத்துடன் கீதையையோ பிற மதத்தவர் கௌரவிக்கும் மார்க்க தரிசன நூல்களையாவது படிப்பதில் பயனில்லை. படிப்பது கூடாது என்றார் ராஜாஜி. 

 

இன்று அதற்கும் ஒருபடி மேலே போய் அவை  கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்று வாதிடப்படுகிறது.  அறிவியல் கண்டுபிடிப்புகளை கருத்துக்களைக் கொண்டு மதவாத கருத்துக்களை நியாயப்படுத்தும் ஆபத்தான போக்கும் தலைதூக்கியுள்ளது.

 

அறிவியலைப் பற்றி நின்று உண்மையைச் சொல்ல நாம் தயங்கக்கூடாது. அறிவியல் என்பது இத்தகைய சோதனைகளைக் கடந்து வெற்றி பெறவே என்பதறிக !

 

சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் பழுத்த பகுதறிவாளர் ,பொதுவுடைமை சித்தாந்தி .அவர் பகுத்தறிவு என்றால் என்ன என்ற கேள்விக்கு சொன்ன பதில் முக்கியமானது .

 

பகுத்தறிவின் தன்மை என்ன? எல்லா விஷயத்திலும் பகுத்தறிவை உபயோகித்தல்; எங்கே கொடுங்கோன்மை தாண்டவமாடுகிறதோ அங்கே பகுத்தறிவு எதிர்த்துப் போராடும்எங்கே சுதந்திரத்திற்கு அபாயம் நேரிடுகிறதோ அங்கே பகுத்தறிவு இத்யாதி அபாயத்தைத் தடுக்கச் செல்லும். எங்கே பசியும் பிணியும் வறுமையும் அறியாமையும் வருத்து கின்றனவோ அங்கே பகுத்தறிவு பசித்தோருக்கும் வருந்துவோருக்கும் உதவிபுரிந்து நிற்கும்இதைத்தான் உண்மையான பகுத்தறிவின் அடையா ளம். மற்றவைகளெல்லாம் போலிப்பகுத்தறிவேஎன்றார்

 

 

ஆன்மீகமும் அன்பைத்தானே போதிக்கிறது என்கிறார்கள் .அதனையும் அலசுவோம்….

 

 

தொடர்வோம்…

 

சுபொஅ.

22/10/24.

 

 

எது ஆன்மீகம் ?[3]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [3]

 

 “பாவப்பட்ட மதங்களை எதிர்க்கும் நீங்கள் பவர்புல்லான மதங்களை எதிர்ப்பதில்லை ஏன் ?”

 

நான் இத்தொடரை எழுதத் துவங்கியதும் ; எதிர்ப்பும் பிறந்து விட்டது .அப்படியாயின் நான் செல்லும் பாதை சரிதான் .

 

முதலில் நான் குறிப்பிட்டிருப்பது என் முதல் கட்டுரைக்கு ஒரு நண்பர் போட்ட மறுமொழி . நான் எந்த மதத்தையும் குறிப்பிடாத போதே இப்படி தானாக வந்து குதிக்கிறார் .அவர் நோக்கம் ரகசியமல்ல .பிற மத வெறுப்பும் குரோதமுமே !

 

ஒரு கேள்வி . உலகில் எத்தனை மதங்கள் இருக்கின்றன ? சரியாக கணக்கிட முடியாமல் ஆய்வாளார்களே திணறிக்கொண்டிருக்கின்றனர் . தோழர் அ.குமரசேன் அண்மைக் கட்டுரை ஒன்றில் உலகில் சுமார் நாலாயிரத்துக்கும் அதிகமான மதங்கள் இருப்பதாய் தோராயமாகத்தான் சொல்லி இருக்கிறார் . அதுபோல மேட்ரிக்ஸ்என்ற திரைப்படத்தை தொடர்ந்து     ‘மேட்ரிக்ஸியம் (Matrixism)’ என்ற மதமே 2004 ல் உருவாக்கப்பட்ட வேடிக்கையை சொல்லியிருக்கிறார் .

 

நான் ஒரு கட்டுரையில் படித்தேன் சிலுவையை தலைகீழாக வைத்து சாத்தானை வழிபடும் ஒரு மதப் பிரிவும் உண்டாம் .ஜப்பானில் அடிக்கடி கூட்டாக தற்கொலை செய்துகொள்ளும் ஒரு மதப்பிரிவு உண்டு .

 

ஆபிரஹாமிய மதங்கள் எனச் சொல்லப்படும் கிறுத்துவம் ,இஸ்லாம்,யூதம் , சீன மதங்களான கன்பியூஸிசன் ,டாவோயிசம் ,சீனா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஓங்கி நிற்கும் புத்தம் , ஆப்பிரிக்க நாடோடி மதங்கள் , பழங்குடி மதங்கள் ,கீழை தேசத்து மதங்கள் , ஆதி வழிபாடுகள் , ஒரு மதத்திலேயே தோன்றிய வெவ்வேறு பிரிவுகள் இப்படி வகைவகையாய் மதங்களைப் பெற்றுப் போட்டுள்ளது மனிதகுலம் .

 

கிறுத்துவ ,இஸ்லாம் ,புத்தம் உட்பட உள்ள மதங்களில் பல்வேறு தனித்த பிரிவுகள் உண்டு .அவை ஒன்றையொன்று கடுமையாக எதிர்த்து நிற்பதும் கண்கூடு . ,ஓரிறைக் கோட்பாட்டை நோக்கி நகர்ந்த மதங்கள் , கணக்கற்ற கடவுள்களை சுமக்கும் மதங்கள் , கணக்கற்ற வழிபாட்டு முறைகள் பட்டியல் போடப் போட நீளும்

 

நம் நாட்டில் இந்து மதம் என்கிற பெயரில் ஒரு கதம்பம்  பிரிட்டீஸ்காரன் வகைப்படுத்தியதே . அப்போது அவர்கள் தேவைக்கு மக்கள் தொகை கணகெடுப்பு நடந்த போது , யாரெல்லாம் கிறுத்துவர் இல்லையோ , யாரெல்லாம் இஸ்லாமியர் இல்லையோ அவரெல்லாம் இந்து என்று ஒரு லேபிள் ஒட்டி பிரித்தான் .                                                          

 

 

ஆயின் , இந்திய துணைக் கண்டத்தில் பிராமணியம் அல்லது சனாதன தர்மம் , சைவம் (சிவன்), வைணவம் (திருமால்),  கௌமாரம் (முருகன்),  காணபத்தியம் (விநாயகர்), சௌரம் (சூரியன்),  சாக்தம் (சக்தி) நாட்டார் வழிபாடுகள் ,வைகுண்டரின் ஐயா வழி ,வள்ளலாரின் சமரச சன்மார்க்கம் , நாராயண குருவின் வழிவந்தோர் , கர்நாடகாவில் வலுவாக உள்ள லிங்காயத் உள்ளிட்ட பிரிவுகள் , மெய்வழிச் சாலை , மேற்கு வங்கத்தில் ஆனந்த மார்க்கிகள் . ஹரேகிருஷணா இயக்கத்தினர் எல்லாவற்றையும் இந்து என்கிற ஒற்றைச் சொல்லில் அடக்க முடியமா ?

 

சைவம் என்று சொன்னால் அது தமிழ்நாட்டில் புழங்கும் சைவசித்தாந்தம் ,  குஜராத் வட இந்தியாவில் புழங்கும் பாசுபத சைவம் மற்றும் அகோரிகள் ,வீரசைவம் ,லிங்காயத் , காஷ்மீர் சைவம் இப்படி பல பிரிவினர் . வைணவத்திலும் தென்கலை ,வடகலை மட்டுமல்ல வட இந்திய வைணவத்துக்கும் தென் இந்திய வைணவத்துக்கும் வேறுபாடு உண்டே .

 

இதில் வேடிக்கை என்ன வெனில் இதில் ஒரு பிரிவினர் தங்கள் கடவுளையும் வழிபாட்டு முறையையும் தவிர மற்றவற்றை மதிக்க மாட்டார்கள் . இறைவன் ஒருவன் அன்பானாவன் கருணை மிக்கவன் அருளாளன் எல்லாம் தெரிந்தவன் எங்கும் நிறைந்தவன் என்று சொன்னாலும் நடைமுறையில் ஒருவருக்கொருவர் முறுக்கிக் கொண்டுதான் நிற்பர் .இது எங்க பழக்கம் என்பதில் பெருமிதம் கொள்வர் .

 

எல்லா மதங்களும் கடவுள் நம்பிக்கையை ஆதாரப்பட்டே சொர்க்கம் ,நரகம் ,கர்மபலன் இப்படி பல  அறிவுக்குப் பொருந்தா கருத்தோட்டங்களையும்  சடங்காச்சாரங்களையும் பற்றி நிற்கும் .

 

இவ்வளவு மதங்கள் ஏன் ? இவ்வளவு மோதல்கள் ஏன் ?

 

சிந்தனைச் சிற்பி தோழர் ம. சிங்காரவேலர் மதம் ,கடவுள் ,மூடநம்பிக்கை , அறிவியல் பார்வையோடு இணைத்து எவ்வளவோ எழுதியுள்ளார் . நாம் வாசித்தோமோ ? உள்வாங்கினோமா ?

 

அவர் ஓர் கட்டுரையில் கேட்கின்றார் , “கடவுளை தயாபரன் ,ஆபத்பாந்தவன் ,அன்பன் எந்த மாத்திரத்தில் இந்தக் கொடுமைகளை மறக்க  முடியுமா ? 60,000 சமணர்களைக் கழுவில் ஏற்றினது கடவுள் பெயராலன்றோ ? கோடானகோடி பிசாசு பிடித்தவர்கள் என்று பெண்மக்களை அடித்துக் கொன்றது கடவுள் பெயரால் அன்றோ ? கிறுத்துவரும் முகமதியரும் கோடிக்கோடியாக 500 வருஷ காலம் சிலுவைப்போர் [ crusades] என்ற கொடும்போரில் மாண்டது சாமி பெயரால் அன்றோ? சாமி என்ற பெயரால் எத்தனை கட்டடங்கள் கோயில்கள் இடிந்தன ? எத்தனை நாடுகள் நாசமாயின ? சாமிக்காக இன்றைக்கும் நமது நாட்டில் எத்தனை தலைகள் உருளுகின்றன?”

 

“ இரண்டு உலகப் போர்களில் , இழந்ததைவிட மத மோதல்களில் அதிகம் இழந்துவிட்டோம் ” என்பார் ரிச்சர்ட் டாக்ஃ கின்ஸ் .

 

ஆன்மீக அலசலுக்கு கடவுள் கணக்கும் தெரிய வேண்டும்தானே.

 

தொடர்வோம்…

 

சுபொஅ.

23/10/24.

 

எது ஆன்மீகம் ?[4]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [4]

 

மதங்களின் எண்ணிக்கையை கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்தோம் நேற்று . மதம் சார்ந்த தத்துவங்கள் மதத்தை மறுத்த தத்துவங்கள் குறித்து ஓர் பயணம் போனால் அது மிகப்பெரிய உலகமாய் நீளும் .ஆனமீகம் பற்றிய உரையாடல் அதன் துணையின்றி நகராது . அதனை பின்னர் பார்ப்போம்.

 

ஆனால் இவை எல்லாவற்றையும் கூட எண்ணி கணக்குச் சொல்லிவிட முடியும் . கடவுள் கணக்கை ஒரு போதும் சொல்லிவிடவே முடியாது .நம் நாட்டை எடுத்துக் கொண்டால் பெருந்தெய்வங்கள் , சிறு தெய்வங்கள் , முப்பத்தி முக்கோடி தேவர்கள் ,புருடர்கள் ,கிங்கரர்கள் ,கிராமப்புற தெய்வங்கள் இப்படி கணக்கின்றி நீளும் .அன்றாடம் புதிது புதிதாய் உருவாக்கப்படுவதும் உண்டு .

 

சென்னை மத்திய கைலாஷில் போனால் பாதி விநாயகர் உருவமும் பாதி அனுமார் உருவமும் கொண்ட ஒரு கடவுள் சிலை இருக்கும் .அது  “ஆதிஅந்தப் பெருமாளாம்”. அதாவது ஆதிக் கடவுள் விநாயகராம்  கடைசி [அந்தம்]கடவுள் அனுமாராம் .இரண்டும் கலந்தவர் ஆதிஅந்தப் பெருமாளாம். இது எப்படி இருக்கு ?

 

இப்படி அன்றாடம் பல்கிப் பெருகும் கடவுள் கணக்குக்கு முடிவே இல்லை .இந்தியாவில் மட்டுமல்ல கிரேக்கத்தில் , ஆப்பிரிக்காவில் ,அரபியேவில் ,ஆஸ்திரேலியாவில் , ஐரோப்பாவில் ,ஆசியாவில் .லத்தின் அமெரிக்க நாடுகளில் உலகெங்கும் பழங்குடி சமூக வாழ்வு தொடங்கி இன்றுவரை எண்ணற்ற கடவுள் அவதாரங்கள் சொல்லி முடியாது . நபிகள்கூட மெக்காவில் நுழையும் முன் எண்ணற்ற கடவுள் உருவங்களை உடைத் தெறிந்ததாக படிக்கிறோம் .

 

மக்கள் தொகையைகூட கணக்கிட்டு விடலாம் ;இந்த கடவுள் கணக்கு முடியவே முடியாது .கணக்கெடுக்கும் தருணத்திலேயே புதிதாக செய்துவிடுவார்கள் .

 

 ஆக ,மனிதனைக் கடவுள் சிருஷ்டிக்க வில்லை .மனிதன்தான் கடவுளைப் படைத்தான் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும் ?

 

இந்த நேரத்தில் நான் அண்மையில் எழுதி ஒரு மலரில் வெளிவந்த கட்டுரை இங்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் ; “கடவுள் கணக்கும் கவலையும் ….” என்ற கட்டுரையைப் பகிர்கிறேன்.

 

கடவுள்கள்கூட எல்லோரும் சமம் அல்ல .கார்ப்பரேட் கடவுள்கள் , வசதியான கடவுள்கள் ,கஞ்சிக்கு வழியில்லாத கடவுள் , புலால் சாப்பிடாத கடவுள் ,புலால் சாப்பிடும் கடவுள் ,தீண்டக்கூடிய கடவுள் ,தீண்டாமை அனுஷ்டிக்கும் கடவுள் ,சீசனுக்கு சீசன் வந்து போகும் கடவுள்சாதிக்கொரு கடவுள் ,கலவரம் செய்யும் கடவுள்சேரிக்கு வர மறுக்கும் கடவுள் இப்படி விதவிதமாய் உண்டு .

 

 ஆனால் எந்தக் கடவுளும் ஏழையை இரட்சித்ததாய் இதுவரை சாட்சிகள் இல்லை .கடவுள்கள் எப்போதும் லஞ்சம் அதுதான் காணிக்கை கொடுக்கும் பணக்கார பக்தர்களுக்கும் , வேஷம் கட்டி மோசடி செய்கின்ற  சாமியார்களுக்குமே எப்போதும்  துணையாக இருக்கின்றன .

 

 இந்தியா முழுவதும் ஆறு லட்சத்து 49 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன . இவற்றில் கிராம தேவதைகள் ,நாட்டார் கோயில்கள் , தெருவோர திடீர் கோயில்கள் அடங்காது .

 

 தமிழ் நாட்டில்தான் அதிகம் கோயில்கள் இருப்பதாக கூறப்படுகிறது . அதாவது சுமார் 79 ஆயிரம் கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ளதாக புள்ளிவிவரம் காணப்படுகின்றது . இதில் 38,675 கோயில்கள் மட்டுமே அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் வருகின்றன .

 

 கோவில்கள் இவ்வளவு இருந்தாலும் எல்லா கோயிலும் ஒன்றல்ல . தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால்  அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ரூபாய் 2 லட்சத்துக்கு மேல் பத்து லட்சம் வரை வருமானம் வரும் கோயில்கள்  492  தான் . பத்து லட்சத்துக்கு மேல் வருமானம் வரும் கோயில்கள் 536 மட்டுமே !

 

 ஆக 2.66 விழுக்காடு கோயில்கள் அதாவது 1,028 கோயில்கள் மட்டுமே  வசதி படைத்த சாமிகளைக் கொண்டது . மீதி 97 விழுக்காடு சாமிகள் அதாவது 37,647 கோயில்களில் சாமியின் அன்றாட சோற்றுக்கும் துணிக்கும் விளக்குக்கும் பெரிய கோயில்கள் கொடையாளர்கள் தயவில் அண்டிப் பிழைப்பவைதான் .

 

 சிதம்பரம் போல் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வராத கோயில்கள் , சங்கர மடம் ,மேல்மருவத்தூர் ,கோவை ஜக்கி , கல்கி , வேலூர் பொற்கோயில் போன்ற பலவும்  கள்ளப் பணமும் கறுப்புப் பணமும் புரளும் பெரும் நிறுவனங்கள் எந்தக் கட்டுபாடும் அற்ற தனியார் கொள்ளைக் கூடங்கள் .

 

 வந்துபோன அத்திவரதர் கணக்கையே ஊன்றி கவனித்தால் ஆட்டையப் போட்டதே அதிகம் என்பதை அறியலாம்.

 

திருப்பதிதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கார்ப்பரேட் கடவுள் .  வட்டிக்கடைக்கு ஊருக்கு ஊர் கிளை திறப்பதுபோல் திருப்பதி மாநில மாநிலமாய் கிளை திறக்கிறது .அங்கு எல்லா கணக்குமே நாமம்தான் என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள் .

 

 அயோத்தி ராமர் கோயிலை திருப்பதி போல் இன்னொரு மாபெரும் கார்ப்பரேட் கோயிலாக்க சங்கிக்கூட்டம் திட்டமிட்டு வருகின்றது .பெரும் ஊழல் இப்போதே அதை சுற்றி அரங்கேறிவிட்டது .

 

 திருவனந்தபுரம் பத்மனாமசாமிகள் கோயிலுக்குள் சுரங்க அறைகளில் பாதுக்காக்கப்படும் தங்கம் ,வெள்ளி ,வைரம் ,வைடூரியம் எல்லாம் நாட்டுக்கும் மக்களுக்கும் கிஞ்ஞ்சிற்றும் பயனற்று “ பூதம் காத்த புதையலாய்” வீணாக அடைந்து கிடக்கிறது .

 

 இவை இந்து மதக் கணக்கு மட்டுமே . மசூதி ,தர்க்கா ,சர்ச் ,வழிபாட்டிடம் , குருத்துவாரா,புத்த விஹார் ,சமண கோயில் இத்யாதி இத்யாதி கணக்குகள் தனி . ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என்பதே உண்மை .

 

 புதிதுபுதிதாய் தினம் தினம் முளைக்கும் கோயில்கள் ,சர்ச்சுகள் ,மசூதிகள் ,தர்க்காக்கள் ஏராளம் . ஏராளம்.

 

 கோயில் இல்லா ஊரில் குடியிருக்காதே என்று சொன்னார்களாம் முன்பு ; இப்போது கோயிலோ மசூதியோ ,தர்க்காவோ ,தேவலாயமே , பிள்ளையாரோ ,மேரியோ ஏதோ ஒன்று இல்லா தெருவோ ,சந்து ,பொந்தோ இந்தியாவில் இல்லவே இல்லை .இதுபோக வீடு , அலுவலகம் ,அடுக்ககம் , பிய்ந்த குடிசை ,ஓடும் வாகனங்கள் எங்கும் ஏதோ ஒரு கடவுள் ஒட்டிக்கொண்டே இருப்பார் . ஆனால் விமோச்சனம்தான் கண்காணாத் தொலைவில்.

 

 ஏற்கெனவே உள்ள சடங்குகள் ,சம்பிரதாயங்கள் ,மூடநம்பிக்கைகள் போதாது என புதிது புதிதாக தினம் ஏதோ ஒன்றை கதை கட்டி பரப்பியவண்ணம் உள்ளனர் .அதுவும் யூ டியூப்புகளும் இணைய சங்கிகளும் 24X7 மணி நேரம் மூளையைக் கசக்கி பொய்யையும் புனை சுருட்டையும் விற்றுக்கொண்டே இருக்கின்றார்கள் .போலி அறிவியலையும் புனைசுருட்டையும் கலந்து வியாபாரம் கனஜோராய் நடக்கிறது .

 

 இவற்றைச் சுற்றி பெரும் பொருளாதார வட்டம் இயங்குகிறது .இந்த மதநிறுவனங்கள் சார்ந்து ஒரு கொள்ளைக்கூட்டமே பவனி வருகிறது . பல லட்சம் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் இவற்றை சுற்றியே பின்னப்பட்டு உள்ளது .

 

இவற்றைச் சுற்றி அரசியல் இயங்குகிறது .அதிகார மையம் இயங்குகிறது .மூடநம்பிக்கைகளும் அறியாமைகளும் இவற்றைச் சுற்றி கட்டமைக்கப்படுகின்றன . பண்பாடும் தத்துவமும் வாழ்நெறியும் கூட இவற்றை சுற்றியே கட்டமைக்கப் படுவதால் அறிவுக்கும் சமத்துவத்துக்கும் விலங்கிடப்படுகிறது .

 

 அதேசமயம் பள்ளி ,கல்லூரி ,மருத்துவமனை என மக்கள் நலம் சார்ந்த பணிகளுக்கு இவற்றிலிருந்து செலவிடும் தொகை குறுகிய சதவீதமே.

 

 மூளையில் பிணைக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கை விலங்கை உடைப்பது அவ்வளவு எளிதானதல்ல . ஆயின் சமூக சமத்துவத்துக்கான தொடர் போராட்டத்தில்  இவற்றை அம்பலப்படுத்தாமல் கடந்து செல்லவே முடியாது .

 

 செம்பில் களிம்பு சேராமல் சாம்பலால் துலக்கிக் கொண்டே இருப்பது போல் மனித மூளையில் கசடுகள் சேராமல் அறிவியல் துணையோடு கேள்விகள் எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்வேறு வழி இல்லை.

 

செய்வோம் .

 

தொடர்வோம்…

 

சுபொஅ.

24/10/24.