Alzheimer
ஞாபக மறதி
நானும் இன்னொரு மூத்த குடிமகனும் தினசரி நடை பயிற்சி செல்வோம்
. தினசரி அந்தக் கோயிலைக் கடக்கும் போது இன்னொரு மூத்த குடிமகன் கோலூன்றி நகர்ந்து
வருவார் .
அவரைப் பார்த்ததும் , புன்னகைப்போம் .அவரும் புன்னகைப்பார்
.
நாங்கள் , “ குட் ஈவினிங்.”
அவர் , “ குட் ஈவினிங் . நீங்க எங்க குடியிருக்கீங்க ?
“ கார்டன் ரெஜிடென்சி”
“ உங்க வயது என்ன ?”
” 73 …. 76 “ [ அவரவர் வயதைச் சொல்லுவோம் ]
“ எனக்கு வயது 68 “ எனபார் . தினசரி இதை மாற்றிக்கொண்டே
இருப்பார் முதல் நாள் சொன்னது ஞாபகம் இருக்காது . ஒவ்வொரு நாளும் இதே கேள்வி . அவர்
வயது மாறிக்கொண்டே இருக்கும் . ஞாபக மறதிதான் காரணம் . கடந்த ஓராண்டுக்கு மேலாக இப்படித்தான்
அவரை தினசரி கடக்கிறோம் .
எங்களுக்கு இப்போது ஞாபக மறதி இல்லை என்பது மகிழ்ச்சி
. ஆயின் முதியோர்களில் நூற்றுக்கு இருபது பேர் Alzheimer எனும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்படுகின்றனர்
. இதனால் தொலைந்து போவதோ , வீட்டார் அல்லது சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாவதோ , ஒதுக்கப்படுவதோ
, தன்னையே மறந்து போவதோ நடக்கிறது.
அண்மையில் பேராசிரியர்
தோழர் முத்து மோகன் இப்படி தொலைந்து மீண்டது செய்தியானது .மூத்த தோழர்கள் பலர் கடைசி காலத்தில் இதன் பாதிப்போடு வாழ்ந்ததை
அனுபவத்தில் பார்த்தோம் .சர்க்கரை போன்ற கோளாறுகளை கட்டுக்குள் வைக்கத் தவறுகிறவர்கள்
இதில் சீக்கிரம் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து அதிகம் .
ஆக , முதியோர்களுக்கு ஞாபக மறதி நோய் இப்போது அதிகரித்து வருகிறது. ஆரம்ப அறிகுறி தென்பட்டதுமே
சிகிட்சை எடுப்பது மிக முக்கியம் .
தொடர்ந்து நூல்களை வாசிப்பதும் வாசித்து அறிந்ததை அடுத்தவர்களுக்குச்
சொல்வதும் ஞாபக சக்தியை அதிகரிக்க நல்ல பயிற்சியாகும் என்பதை ஞாபகத்தில் நிறுத்துங்கள்
. தொடருங்கள் ! பெரியார் ,காந்தி ,தோழர் இஎம்எஸ் ,கலைஞர் கருணாநிதி , போன்ற ஆளுமைகள்
கடைசிவரை கூர்மையான நினைவாற்றலோடு இருந்ததில்
தொடர் வாசிப்பும் தொடர் உரையாடலும் மிக முக்கியமானது .
ஒரு கவிஞரிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னார் , “ நீங்கள்
படித்த கவிதைகளை அடுத்தவருக்குச் சொல்லிப் பழகுங்கள். உங்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும்
. “
“ அவர் சொல்வது சரியா பிழையா என உளவியல் வல்லுநர்கள் சொல்லட்டும்.
பாரதி ,பாரதிதாசன் ,தமிழ் ஒளி போன்றோர் கவிதைகளை நினைவுகூர்வது எளிது அதன் சந்த லயம்
அதற்கு உதவும் ; இன்றைய கவிஞர்கள் கவிதை அப்படியா ? நமக்கு எதுக்கு வம்பு ? கவிஞர்
சொன்னா ரசிக்கணும் கேள்வி கேட்கக்கூடாது .சரிதானே !”
நான் எழுதிய “ முதுமை வரமா சாபமா “ நூலின் கடைசியின் என்
கவிதைகள் சில தொகுத்திருப்பேன் .அதில் ஒன்று
“உணவு பரிமாறுகிறார் எதிரே வைக்கப்பட்ட
காய்கறியின் பெயர் மறந்துவிட்டது
தலையைச் சொறிகிறேன் .
நடை பயிற்சியில் வணக்கம் சொல்கிறார்
தினசரி பார்ப்பவர் பெயர் மறந்துவிட்டது
ஞாபகத்துக்குக் கொண்டுவர அல்லாடுகிறேன்
தினசரி பதிவு போடுகையில்
அநேகமாய் தேதியைத் தப்பாகக் குறிக்கிறேன்
யாராவது சுட்டியபின் திருத்துகிறேன்
மின் விளக்கை அணைக்க மின் விசிறியை நிறுத்த
தண்ணீர் குழாயை மூட மறந்து போகிறேன்
யாராவது சுட்டும் போது இளிக்கிறேன் ;
என்றோ படித்தது எல்லாம் நினைவில் இருக்கிறது
சின்னச் சின்ன மறதிகள் பாடாய்ப்படுத்துகிறது!
எதற்கு இதனை எழுத வந்தேன் ?
மறந்து விட்டது .ஞாபகம் வந்ததும் சொல்கிறேன்.”
இந்தக் கவிதையை பதிவிட்ட போது பல நண்பர்கள் தம்மைச் சொல்வதாகச்
சொன்னார்கள் .
இது போல் எழுத நிறைய உண்டு .நினைவுக்கு வரவேண்டுமே ! ஆனால்
முதுமையின் சோகம் என்ன தெரியுமா ?
“ நினைவில் இருக்க வேண்டியவைகள் மறந்து போவதும் ; மறந்து
தொலைக்க வேண்டியவைகள் நினைவில் வந்து வந்து பாடாய்ப் படுத்துவதும்தான் .”
நான் என்ன சொல்ல வந்தேன் ?
ஞாபகம் வந்தபின் சொல்லுகிறேன்.
சுபொஅ.
18/12/25.

0 comments :
Post a Comment