” காக்கைச்சிற்கினிலே” ஜூலை மாத இதழில் ஏ.ஜி
.நூரானி எழுதிய ஆர் .விஜயசங்கர் மொழிபெயர்த்த “ ஆர் எஸ் எஸ் : இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்”
என்ற நூல் குறித்து நான் எழுதி இருக்கிறேன் . பக்க அளவு கருதி ஒன்றிரண்டு பத்திகளை
எடிட் செய்திருக்கிறார்கள் . பொருள் உள்ளடக்க மாறுதல் இல்லை .அதன் வேர்ட் பேட் காப்பி
எனக்கு கிடைக்காததால் என்னிடம் இருந்த எடிட் செய்யாத அறிமுகத்தை பதிவிடுகிறேன். பொறுத்தருள்க
!
இந்தியா தன் ஆன்மாவைக் காக்கும்
போராட்டத்தில் ஓர் நூல் .
சு.பொ.அகத்தியலிங்கம்.
“ ஆர் எஸ் எஸ் மத நல்லிணக்கத்திற்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை என
இப்புத்தகம் காட்டுகிறது .அது விடுக்கும் சவால் இன்னும் பரந்துபட்டது . அது ஜனநாயக
முறைக்கு அச்சுறுத்தல் ; அதைவிட மோசமாக இந்த தேசம் கட்டியமைக்க நினைத்த
இந்தியாவிற்கே அது ஓர் அபாயம் . இந்தியாவின் விழுமியங்களுக்கு அச்சுறுத்தல் .கடந்த
சில ஆண்டுகளாக இந்தியா தன் ஆன்மாவைக் காக்கும் போராட்டத்தில் இருக்கிறது .” என ஏ.ஜி.நூரானி முகவுரையில்
சொல்லியிருப்பது மிகை அல்ல.இந்நூலினை ஆழ்ந்து வாசிக்கும் யாரும்
அம்முடிவிற்குத்தான் வருவார்கள் .
நீண்ட நேரம் அமைதியாக இருந்த நேரு ,பின்னர் மெதுவாக
ஒவ்வொரு சொல்லையும் உச்சரித்து தீர்க்கமாகச் சொன்னது இதுதான் ,”
குறித்துக் கொள்ளுங்கள் இந்தியாவின் அபாயம் கம்யூனிசமல்ல .வலதுசாரி இந்து மதவாதம்
தான்.”
இப்படி நேருவை மேற்கோள் காட்டும் நூரானி இந்நூல் முழுவதும் அந்த
அபாயம் இந்தியா முழுவதும் எப்படி கவ்வியது என்பதை தக்க ஆதாரங்களுடன்
நிறுவியிருக்கிறார்.
அறிமுகம் என்கிற பகுதி பின்னால் வரும் பின்னால் வரும் 25 அத்தியாயங்களின்
சாரத்தை தொட்டுச் செல்கிறது .
“ சாதாரணமாக ,இந்துத்துவம் என்பது ஒரு வாழ்க்கைமுறை அல்லது மனநிலை
என்றுதான் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதால் அதனை மத அடிப்படை வாதமென்று
புரிந்து கொள்வதோ ,ஒப்பிடுவதோ கூடாது” என்று நீதிபதி வர்மா கொடுத்த தீர்ப்பு
எவ்வளவு அநீதியானது ,பிழையானது என்பதையும் ; “ நாம் சார்ந்து நிற்க
முடியாத அளவுக்கு நலிந்த நாணலாக நீதித்துறை இருக்கிறது.” என்பதையும் ;ஆர்
எஸ் எஸ் எப்படி இந்துத்துவாவை முன்வைக்கிறது அவ்வப்போது வெவ்வேறு வார்த்தைகளில்
மாற்றி மாற்றி ஆர் எஸ் எஸ் பேசினாலும் ; சிறுபான்மையோரை இரண்டாந்தர
குடிமக்களாக்குவதே நோக்கம் என்பதையும் கோடிட்டு காட்டுகிறார் . நூலுள் இது
விரிகிறது .மதக்கலவரங்கள் திடீர் நிகழ்வல்ல திட்டமிட்ட நிகழ்வுகளே என சொல்லும்
நூராணி நிறுவனமயமாக்கப்பட்ட மதக் கலவரங்களை அறிமுகத்தில் தொட்டு ,உள்ளே நூலில்
துல்லியமாக நிறுவுகிறார் .
“ மோடியின் திட்டம் அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது .நிறுவனங்களில்
இந்துத்துவவாதிகளை நிரப்புவது.யோகிகளை முதலைமைச்சர் ஆக்குவது ,கேபினட் முறையை
முடக்குவது .ஆட்சிப் பணியை தன் ஆளுகைக்குள் கொண்டு வருவது .நீதித்துறையை தன்
செல்வாக்கிற்குள் கொண்டுவருவது.” என அறிமுகத்தில் சுட்டுகிற
நூலாசிரியர் ; நூல்நெடுக அதன் வேரையும் பரிணாமத்தையும் ஆதாரங்களுடன்
தோலுரிக்கிறார் .அனுபவமும் அதையே காட்டுகிறது .
இந்நூலின் 25 அத்தியாயங்களையும் பின் இணைப்புகளையும் தனித்தனியே விளக்க
வேண்டும் ; உரக்க பேச வேண்டும் . நூலறிமுகத்தில் பக்க அளவு கருதி பருந்துப்
பார்வையாகவே சொல்ல முயற்சிக்கிறேன்.
“ ஆர் எஸ் எஸ் ஏன் உருவாக்கப்பட்டது ?” என்ற தேடலே முதல்
அத்தியாயம் .இந்து மகாசபை 1915ல் உருவாக்கப்பட்டது . 1925 செப்டம்பர் விஜயதசமி
கொண்டாடும் நாளில் ஆர் எஸ் எஸ் ஐ உருவாக்குவதற்காகக் கூடிய ஐந்து பேரும் [. இது 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதாசமி அன்று நிறுவியவர்கள் ஐவரும் [ கே. பி. ஹெட்கேவர், பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே, கணேஷ் தாமோதர் சாவர்க்கர், மற்றும் இலட்சுமன் வாமன் பரஞ்பே ] இந்துமகா
சபையின் உறுப்பினர்களே . இந்துமகா சபையின் மாளவியா ,லாலாலஜபதிராய் போன்றோர்
இந்துக்களின் ஆட்சி என பேசியதை ; இந்து ராஷ்டிரமாக ஆர் எஸ் எஸ் மாற்றியது .வினாயக்
தாமோதர் சாவர்க்கர் ,நாதுராம் கோட்சே , கேஷவ் பலிராம் ஹெட்கேவார் , பி.எஸ் .மூஞ்சே
உட்பட பலர் இரண்டிலும் இருந்தனர் .சாவர்க்கர் எழுதிய ‘இந்துத்துவா’ எனும்
கட்டுரையே இருவருக்கும் வழிகாட்டின .
அப்போதே நிலைமை என்ன ஆனது ? டிசம்பர் 2 ,1926 அன்று மோதிலால் நேரு தன்
மகனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார் ;
” மத ரீதியான வெறுப்பும் ,வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதும் சகஜமாக
நடக்கிறது .நான் முழுவதும் வெறுத்துப் போய்விட்டேன் . பொது வாழ்க்கையிலிருந்து
ஓய்வு பெறலாம் என்று நினைக்கிறேன். அதற்குப் பின் என் நேரத்தை எப்படிச் செலவிடுவது
என்பதுதான் எனக்குக் கவலை . நான் கவுகாத்தி மாநாட்டிற்காகக் காத்திருக்கிறேன்.
அதுவரை பேசப்போவதில்லை .மாளவியா – லாலா கும்பல் பிர்லா உதவியுடன் காங்கிரசைக்
கைப்பற்ற நினைக்கிறார்கள் .” இதனைச் சுட்டிய நூரானி ,” தாரளமாக பண உதவி செய்தவர்
பிர்லாவாக மட்டும் இருக்க முடியாது .ஆர் எஸ் எஸ் ஸின் பங்குமில்லாமலிருக்க
முடியாது.” என்கிறார் .
தயானந்த சரஸ்வதி , பங்கிம் சந்திர சட்டர்ஜி , விவேகானந்தர்
,அரவிந்த கோஷ் ,ஆரிய சமாஜம் , இந்து சங்காத்தன் இயக்கம் ,தாய்மதம் திரும்பல் என
மீண்டும் இந்துவாக்கும் இந்திய ஷுக்தி சபா , என பலதைச் சுட்டுகிறது “ ஆர்
எஸ் எஸ் சின் 19 ஆம் நூற்றாண்டு வேர்கள்” எனும் இரண்டாவது அத்தியாயம் ,
” நமக்கென்று ஒரு நாகரீகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இந்துக்கள் ஒரு
தேசிய இனம்தான்.” என லாலாலஜபதிராய் 1926 லேயே நாசத்தின் விதையை நட்டுவிட்டார்
என்பதையும் பேசுகிறது இந்த அத்தியாயம் .
“ இந்திய தேசியத்தின் மீதானா உறுதிப்பாடு “ என்கிற
மூன்றாவது அத்தியாயத்தில் 1885 டிச்ம்பர் 25 அன்று காங்கிரஸின் முதல் மாநாடு
மும்பையில் நடந்த போது டபிள்யூ.சி.பானர்ஜி முன்வைத்த நோக்கங்களில் , “ இன ,மத
,பிரதேச பாரபட்சங்களை ஒழிப்பது .தேசிய ஒற்றுமை உணர்வுகளை வளர்த்து
உறுதிப்படுத்துவது.” என தெளிவாக்குகிறார் . 1948 அன்று அனந்தசயனம் ஐயங்கார் “
இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற அரசாக மாற்றுவதற்கு உறுதி பூண்டிருக்கிறோம்.”
என்கிறார் . இதற்கிடையில் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில்
மசூதிமுன் இந்துக்கள் ஊர்வலம் போக ,வாத்தியம் இசைக்க உரிமை உண்டு , ஆனால்
மசூதி உள்ளே இருப்போருக்கு எரிச்சலை ஊட்டவோ வன்முறையாக தொல்லை கொடுக்கவோ உரிமை
கிடையாது என்றது .மேலும் முஸ்லீம்கள் மாட்டுக்கறி சாப்பிட உணவு உரிமை உண்டென்றது
ஆனால் கோயில் முன்போ பொது இடத்திலோ செய்யாமல் தவிர்க்க வலியுறுத்தியது . விடுதலைப்
போரில் மதவாதம் விளையாடத்துவங்கிய பின்னணியில் இத்தீர்மானம் முக்கியத்துவம்
பெறுகிறது .
“ பிரிட்டிஷ் அரசுடன் கூட்டு செயல்பாடு “ என்கிற
அத்தியாயம் ஆர் எஸ் எஸ் விடுதலைக்குப் போராடவில்லை என்பது மட்டுமல்ல பிரிட்டிஷ்
அரசுடன் கூடிக்குலவியதையும் சொல்லுகிறது . “ குறிப்பாக 1942 ல் நடந்த கலவரங்களில்
ஒதுங்கி நின்றது . அதே சமயம் அவார்கள் இந்து ராஷ்டிர தயாரிப்பில் தொண்டர்களுக்கு
ராணுவ பயிற்சியை ஒத்த பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தது .அன்றைய பிரிட்டிஷ் அரசு
ரகசிய ஆவணம் சொல்கிறது , “ அவர்கள் மேலும் தயாராகும் வரையிலும் ,அவர்கள்
தலையீட்டுக்கு உகந்த சூழல் நாட்டில் உருவாகும் வரையிலும் பொறுத்திருப்பதுதான்
அவர்கள் தந்திரம் .”
“ ஐரோப்பிய பாசிஸ்ட்டுகளின் ஆதரவைத் தேடிய ஆர் எஸ் எஸ்.” என்கிற
ஐந்தாவது அத்தியாயம் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதென்ன ? “ ஆர் எஸ் எஸ்
உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தவிதம் நடைமுறையில் இத்தாலியில் [முசோலினியின்]
பலில்லா என்றழைக்கப்பட்ட இளைஞர் அமைப்பின் உறுப்பினர் சேர்ப்பு போன்றதுதான் .
இந்துக்களை ராணுவ ரீதியாக மீளுருவாக்கம் செய்வதற்கான நிறுவனம் என்றது . அது
“ ‘ எதிரி சமூகத்தினைச்’ சேர்ந்த இந்திய குடிமக்களையே படுகொலை செய்தது . இந்திய
தேசியத்தையும் இந்து தேசியத்தையும் வேறுபடுத்திக் காட்டியது .”
“மகாசபையைக் கைப்பற்றினார் சாவர்க்கர் ” இந்த ஆறாவது
அத்தியாயம் முழுவதும் சவார்க்கர் எப்படி பிரிட்டிசாரிடம் மன்னிப்பு கோரினார் என
உள்ளது . சாவர்க்கர் எப்படி பிரிட்டிஷாரின் விசுவாசமிக்க ஊதியம் பெறும் ஊழியரானார்
என்பதும் முக்கியம்.தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் அது மேலும்
வலுப்படுத்தப்பட்டுள்ளது .சாவர்க்கரும் ஆர் எஸ் எஸ் சும் நெருங்கியதை நுட்பமாகப்
பேசுகிறார் . “ அரசியலில் தோல்வியுற்றவராகத்தான் சாவர்க்கர் இறந்தார் “ ஆனால்
சாவர்க்கரின் இந்துத்துவா கருத்தே பின்னால் கோல்வால்கரால் விரிவாக
முன்னெடுக்கப்பட்டது . இதனை ,” ஆர் எஸ் எஸ்க்கு ஓர் பைபிள்
கிடைத்தது” என்கிற ஏழாவது அத்தியாயம் பேசுகிறது.
இந்தியா ,இந்து ,இந்துராஷ்டிரம் ,இந்து கலாச்சாரம் ,தேசம் ,தேசியம் ,இந்து
தேசியம் ,இந்திய தேசியம் ,இந்திய கலாச்சாரம், ஒரு தாய் மக்கள் ,ஏகதா ,ஏக்த மாதா
,தேச ஒற்றுமை ,ஒருமைப்பட்ட மனிதநேயம் இப்படி வேறுவேறு சொற்களில் சாவர்க்கர்
முதல் இன்றைய மோகன் பகத்வரை பேசினாலும் அதன் உள்ளடக்கம் ஒன்றுதான்.கோல்வார்க்கர்
வார்த்தைகளில் சொன்னால் ,
“அன்னிய சக்திகளுக்கு [ முஸ்லீம்கள் ,கிறுத்துவர் பார்சிகள்
போன்றவர்களுக்கு ] இரண்டே வழிகள் உள்ளன .அவர்கள் தேசிய இனத்தில் ஐக்கியமாகி அதன்
கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் ; அல்லது தேசிய இனம் அனுமதிக்கும் வரை அவர்கள்
அந்த இனத்தின் கருணையில் வாழ்ந்து அது விரும்பும் போது வெளியேற வேண்டும்.”
எல்லோருக்கும் புரிகிற மாதிரி சொல்வதாயின் ஆடு ,கோழி பலி கேட்கும் நம் கிராம தெய்வக் கோவில்களில் பிள்ளையாரையோ சிவனையோ முருகனையோ பெருமாளையோ பிரதிஷ்டை செய்துவிட்டு நம்ம கிராம தெய்வங்கள் ஆடுகோழி பலியை நிறுத்திவிட்டு பொங்கல் சுண்டலுக்கு மாற வேண்டும்என்பது போல. சில இடங்களில் இப்படி திணிக்கவும் செய்கிறார்கள் .பிரச்சனை தீர அல்லாவோ , இயேசுவோ பெருந்தெய்வ கோவில்களில் ஒரு சன்னதியாகி சமஸ்கிருத மந்திரம் ஏற்க வேண்டும் . பாஜக சொல்லும் இந்துத்துவா இதுதான். [ இது நூரானி
சொன்னதல்ல என் விளக்கம்]
“நாடு சுதந்திரம் பெற்ற நேரத்தில் ஆர் எஸ் எஸ் “ ,” ஆர் எஸ் எஸ்
ஸும் காந்தி படுகொலையும்” “ ஆர் எஸ் எஸ் மீதான தடை” 8.9.10
அத்தியாயங்களின் தலைபே உள்ளடக்கத்தை சொல்லிவிடும் . காந்தி கொலையில் ஆர் எஸ் எஸ்
பங்கு என்ன ? சவார்க்கர் பங்கு என்ன ?சாவர்க்கரும் ஆர் எஸ் எஸ்சும் என்னவெல்லாம்
பேசினார்கள் , எப்படி எல்லாம் நாடகமாடினார்கள் , “ காந்தி மக்களின்
கோபத்தை தனக்கு எதிராக திருப்பிக் கொண்டார் .” என ஆர்கனைசர் தலையங்கமே
பின்னர் தீட்டியது .காங்கிரசுக்குள் இருந்த கோவிந்த வல்லபாய் பந்த் ,மொரார்ஜி
தேசாய் போன்றோர்கள் ,இவர்களுடன் இணக்கமாக இருந்தனர் .பட்டேல் வலதுசாரியாக
இவர்களுடன் உறவாடினாலும் மதவாதம் ,சிறுபான்மை மீதான வன்மம் இவற்றில் மாறுபட்டு
நின்றனர் என்பன உள்ளிட்ட விரிவான செய்திகள் இடம் பெற்றுள்ளன .
ஜனசங்கம் உருவான சூழல் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி பாத்திரம் இவற்றை 11.12.13
அத்தியாயங்கள் விரிவாகப் பேசுகிறது .” ஆர் எஸ் எஸ் ஸிற்கு முறைதவறிப்
பிறந்த குழந்தைதான் ஜனசங்கம்” என நேரு கூறியதை இவ்வத்தியாயங்கள்
மெய்யெனச் சொல்கிறது . தீன் தயாள் உபாத்யா கொலையை வைத்து ஜனசங்கம் நடத்திய நாடகம்
எவ்வளவு பொய் என்பதும் , சந்தேகத்தின் நிழல் அவர்களை நோக்கியே திரும்புவதையும்
இந்நூல் பேசுகிறது .
வருமான வரித்துறையிடம் தொண்டு நிறுவனம் என்றும் , அறநிலைய
ஆணையரிடம் அதற்கு நேர் எதிராகவும் வாக்குமூலம் கொடுக்கும் ஆர் எஸ் எஸ்
தொண்டு நிறுவனமா ? கலாச்சார அமைப்பா ? அரசியல் அமைப்பா ? இராணுவ அமைப்பா ? ஒவ்வொரு
நேரத்தில் ஒவ்வொரு வேடம் .ஒவ்வொரு பதில் .ஒவ்வொரு முயற்சி . ஒவ்வொரு பேச்சு .
ஆதாரங்கள் கடிதங்களாக ஆவணங்களாக நூல் நெடுக பரந்து கிடக்கின்றன .ஆயின் முழுக்க
முழுக்க ஆர் எஸ் எஸ் ஓர் பாசிச அமைப்பு . இந்நூலில் மீண்டும் மீண்டும் இது
பேசப்படுகிறது .
காஷ்மீர் பிரச்சனையை பிரஜா பரிஷ்த் என்கிற ஆர் எஸ் எஸ் சார்பு இயக்கம்
எப்படி சிக்கலாக்கியது ? “ இந்த இயக்கம் என் கணக்குகளை எல்லாம் குலைத்து ,காஷ்மீர்
மீதான நம் நிலைபாட்டை பலவீனப்படுத்திவிட்டது” என நேரு வருந்தினார் .
ஒவ்வொரு அத்தியாயமாகப் பேசினால் பக்கங்கள் நீள்வதை தவிர்க்கவும் இனியுள்ளவை
அண்மைச் செய்திகள் என்பதாலும் பாய்ந்து செல்கிறேன்.
அவசரகாலத்தில் ஜெயபிரகாஷ் நாராயணன் இயக்கத்தில் ஆர் எஸ் எஸ்
பங்கேற்றதும் ,சிறைசென்றபின் மன்னிப்பு கடிதம் கொடுத்து காங்கிரசுக்கு ஆதரவு
தெரிவித்ததும் ,அவசரகாலம் நீங்கியதும் தன்னை அவசரகால எதிர்ப்பு மாவீரனாக காட்ட
முயன்றதும் ,ஜனதா கட்சி உருவாக்கத்தில் பங்கு கொண்டததும் , ஆர் எஸ் எஸ் தலையீடு
ஜனதாவை சீர்குலைத்ததும் ,முதல்நாள் மொரார்ஜியோடு ஒப்பந்தம் மறுநாள் பாரதிய ஜனதா
கட்சி உருவாக்கியதும் ,ஜெயபிரகாஷ் நாராயணன் மனம் நொடிந்தது என அண்மைக்கால
வரலாற்று நிகழ்வுகளைத் மிகத் துல்லியமாகச் சான்றுகளோடு இந்நூல் பேசுகிறது .
ஆர் எஸ் எஸ் தன்னை எப்படி வளர்த்துக் கொண்டது , ஜனசங்கம் ,பாஜக இவற்றின்
தொப்புள் கொடி உறவு எத்தகையது ? ‘ ஒருமைப்பட்ட மனித நேயம்’ ,’காந்திய சோஷலிசம்’
என்றெல்லாம் எச்சூழலில் பாஜக பேசியது ? எப்படி கைவிட்டது ? ஏபிவிபி எனும் மாணவர்
அமைப்பு , விஷவ ஹிந்த் பரிஷத் ,பஜ்ரங்தள் ,பழங்குடி அமைப்பு ,தொண்டு நிறுவனங்கள்
என வலைப்பின்னல் போல் ஆர் எஸ் எஸ் அமைப்புகளை கட்டி வளர்த்தது ஏன் ? ,அவை
எல்லாம் ஆர் எஸ் எஸ் சின் கட்டளையை ஏற்று செயல்படுவனவாக இருப்பது எப்படி ?
ராமர் கோயில் விவகாரம் ,குஜராத் கலவரம் , மத கலவரங்கள் என ஒவ்வொன்றையும் நுட்பமாக
நூரானி பேசி இருக்கிறார் .
மதகலவரங்கள் எப்படி பொய் செய்திகளால் கட்டமைக்கபடுகின்றது என விலாவாரியா
சொல்கிறது ஓரிடத்தில் ; ஆர் எஸ் எஸ் கலவரம் செய்வதில் நிபுணர்கள் ,
வெறுப்புரைகளும் பேச்சுகளும் கலவர நெருப்பை பற்றவைக்கின்றன .ரயில் விபத்தைக்கூட பாகிஸ்தான்
சதி இவர்களால் பேசமுடிகிறது . “ நிறுவன மயமாக்கப்பட்ட கலவர அமைப்பு” குறித்து
இந்நூல் துல்லியமாக பேசுகிறது .
“கலவரம் நடக்க ஏதுவான சூழலிருக்கு மாநகரங்களிலும் சிறுநகரங்களிலும்
இத்தகைய முறைசாரா வலைப்பின்னல் போன்ற அமைப்புகள் இருப்பதாக நம்புகிறேன் . நிறுவன
மயமாக்கப்பட்ட கலவர அமைப்புகளின் மைய ஆதாரமான மற்றொன்றும் இந்த இடங்களில்
இருக்கின்றன .மத ,இன , இனக்குழுக்களை எப்போதும் பதற்றத்திலும் கலவரங்களுக்கு
தயாரான நிலையிலும் வைத்திருக்கும் வலைப்பின்னல்கள்தான் அவை . அதனால்தான் இரு
சமூகங்களுக்கிடையே இருக்கும் மனத்தாங்கல் , விரக்திகள் ,பாகுபாடுகாட்டும்
அணுகுமுறை நிலவும் சூழலில் ஒரு சிறுபொறிகூட கலவரத்தை ஏற்படுத்திவிடும் என்கிற
கோட்பாட்டை வைத்திருப்பவர்களிடமிருந்து நான் வேறுபடுகிறேன். மாறக தூண்டிவிட்டால்
எப்போதும் பற்றிக் கொள்ளும் வகையில் வைத்திருக்கவும் ,சில நேரங்களில் அது புகைந்து
கொண்டு மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்வதற்குவென்றே தீயணைப்பு வண்டி போன்ற
நபர்கள் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை .ஒரு பதற்றமான தருணத்தை பெரும் கலவரமாக
மாற்றும் திறன் கொண்டவர்கள் அவர்கள்.”
இதற்கும் மேல் இதற்கு விளக்கம் தேவையா ?
வாஜ்பாய் எப்படி கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் நடித்தார் .அத்வானி
தெரிந்தே ராமர் கோயில் பிரச்சனையை கிளப்பி நெருப்போடு விளையாடினார் , ராமர் ரத
யாத்திரை அர் எஸ் எஸ் ஸால் அரசியல் நோக்கோடு திட்டமிடப்பட்டது எப்படி ?
பின் ஆர் எஸ் எஸ் அத்வானியை ஏன் கழற்றிவிட்டது ? மோடியும் மோகன் பகத்தும்
ஒரே நேரத்தில் வளர்ந்த கதை மோடியை ஆர் எஸ் எஸ் முன்னிறுத்திய கதை ,மோடியை முன்
வைத்து ஆர் எஸ் எஸ் தன் காய்களை நகர்த்தி இந்து ராஷ்டிரா நோக்கி வேகமாக நகர்வது
என இந்நூல் நிறைய உண்மைகளை படம் பிடிக்கிறது .
பிஜேபியின் முன்னாள் அமைப்புச் செயலாளர் சஞ்சய் ஜோஜி குறித்து ஒரு வீடியோ
வெளியானது .அது திட்டமிட்ட சதி என ஆர் எஸ் எஸ் ஏடு ஆர்கனைசர் தலையங்கம் எழுதியது .
ஸ்டிங் நடவடிக்கை தனிநபர் சுதந்திரத்தை மீறுவதாக கூச்சலிட்டது .மறுபக்கம் நேரு
,காந்தி ,இந்திரா குறித்த அவதூறுகளை போட்டோஷாப் மூலமே கட்டி அமைத்தது ஆர் எஸ் எஸ்
.தமிழ்நாட்டில் அண்ணாமலை இந்த ஸ்டிங் நடவடிக்கைகளில் விளையாடுவதை நாம் அறிவோம் .
பொய் ,போட்டோஷாப் ,போலி சான்றுகள் ,போலி அறியல் எல்லாம் சங்பரிவாரின் வழக்கமான
பாணி என்பதும் இந்நூலில் பரவலாகச் சொல்லப்படுகிறது.
போலி அறிவியல் ,போலி வரலாறு ,வீண் பெருமை இவை எல்லாம் சாவர்க்கர் முதல்
மோடிவரை தொடர்கதை . இந்நூலில் பின்னிணைப்பான ஆவணங்களும் உறுத்தும் உண்மைகளின்
சாட்சியே !
அறிவியலற்ற ,சமத்துவம் அற்ற ,மனிதநேயமற்ற , நல்லிணக்கமற்ற
,ஜனநாயகமற்ற ,சமூகநீதி அற்ற ,சட்டத்தின் ஆட்சி அற்ற , சனாதன வர்ணாஸ்ரம சமூகமாக
கட்டி அமைப்பதையே ஆர் எஸ் எஸ் மேற்கொண்டுள்ளது . மோடி ஆட்சி அதன் கருவியே !இதுவே
இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தல். இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் இந்தத்
தெளிவினைப் பெறுவர் .
இந்நூல் முழுக்க முழுக்க ஆதாரங்களின் மேல் கட்டப்பட்டதே . இந்நூலை
ஆற்றொழுக்கு தமிழில் தந்த என் இனிய தோழர் ஆர் .விஜய்சங்கர் மொழி
பெயர்ப்பாளர் உரையில் சொல்கிறார் .” ஒரு முறை இவரைத் [ நூரானியை] தேடி வந்த
மத்திய உளவுத்துறை ஒரு கட்டுரையைக் காட்டி இதில் வந்திருக்கும் செய்தி தேசிய
ரகசியமாக பாதுகாக்கப்படுவது ,எப்படி உங்களுக்கு கிடைத்தது எனக் கேட்டனர் . இது பல
பத்தாண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிகையில் வந்த செய்திதான் என ஒரு
பத்திரிகைச் செய்தித்துண்டைக் காட்டி அசரவைத்தார் .” ஆம். நூல் நெடுக அந்த நேர்மை
பளிச்சிடுகிறது .
ஏ ஜி நூரானி சுட்டிய ஆங்கில எழுத்தாளர் பேக்கனின் மேற்கோளோடு இந்நூல்
அறிமுகத்தை நிறைவு செய்கிறேன்.
“ எதையும் மறுதலிப்பதற்காகவும் .நிரூபிக்கவும் படிக்காதீர்கள் ;
எதையும் நம்பி , ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ஒன்றாகக் கருதியும் படிக்காதீர்கள் ;
பேசுவதற்காகவும் உரையாற்றுவதற்காகவும் படிக்காதீர்கள் .எதையும் சீர்தூக்கிப்
பார்த்து சிந்திப்பதற்காகப் படியுங்கள் .”
ஆர் எஸ் எஸ் : இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்,
ஆசிரியர் : ஏ.ஜி.நூரானி, தமிழில் : ஆர்
.விஜயசங்கர்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு :044 – 24332924
/24332424 /24330024 / 8778073949,Email : bharathiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com பக்கங்கள் :
824 , விலை : ரூ.800/
0 comments :
Post a Comment