நன்றி கொரானா

Posted by அகத்தீ Labels:

நன்றி!!  கொரானா!!!



கொரானா! நீ  ஒன்றும்
அவ்வளவு கொடியவனல்ல!!


உன்னுள் இரக்கமிருக்கிறது
நீ கொலை நோயல்ல!
நைந்த துணி
உன்னை அணைக்கமுடியாமல்
கிழிந்துபோவது உன் குற்றமா?

திண்மையுற கட்டப்படாத வீடு
உன்னை தாங்க முடியாமல்
தகர்ந்து போவது உன் பிழையா?

நீ
சாதி பார்க்கவில்லை
மதம் பார்க்கவில்லை
மொழிபார்க்கவில்லை
நாடு, இனம், வர்க்கம்
எதுவும் பார்க்கவில்லை


நோயோடு வாழ்பவர்
உன்னால் சாகிறார்
ஆரோக்கியமானவர்
உன்னை விரட்டுகிறார் ..



கொரானா நீ ஒன்றும்
அவ்வளவு கொடியவனல்ல

கொரானா! 
உன் பெயராலும்
மதப் பகைமையை விசிறிய
வீணனை விட நீ கொடியவனல்ல

கொரானா!
நீ எங்கே தன் உடலுக்குள்
புகுந்துவிடுவாயோ என மிரண்டு
தேசமே திணறி நிற்கையில்
அடிமடியில் கைவைத்து
அனைத்தையும் சுருட்டும்
ஆட்சியாளரைவிட
கார்ப்பரேட் கொள்ளையனை விட
நீ  கொடியவனல்ல!


டெல்லி சுல்தானும்
தமிழக ஜமீனும்
தங்களின்
சகல தோல்விகளையும்
சகல அநீதிகளையும்
நியாயப்படுத்த
உன்னைத்தானே
உச்சாடனம் செய்கிறார்கள்
அவர்களைவிட நீ
ஒருபோதும் கொடியவனல்ல!

கொரானா நிச்சயம் நீ
விரைவில் விடைபெற்றுவிடுவாய்
சந்தேகமில்லை!
ஆயின்
சாதி, மத வெறி உச்சம் பெற்ற
கார்பரேட் லாபவெறிக்கு
விளக்கு பிடித்து மேளம் தட்டும்
மோடிஷா அடிமை எடுபுடிகளைவிட
நீ கொடியவனே அல்ல!

உலகத்தை மனிதர்களை
அன்பை வெறுப்பை
புதிய பார்வையின் தேவையை
அறிவியலை அறத்தை
சமத்துவமிக்க மானுடத்தை
தேட வைத்த கொரானாவே
நன்றி! நன்றி!


போய் வா என சொல்வது
மரபெனிலும் நீ
போ!  திரும்பி வரவே வேண்டாம்!
நாங்கள் திருந்த போராடுவோம்
போராடி திருத்துவோம் மானுடத்தை!!!

சுபொஅ.

0 comments :

Post a Comment