ஆயின்….
மனம் அமைதியைத்தான் விரும்புகிறது -ஆயின் ,
எது அமைதி என்பதில்தான் குழப்பம்.
என் சகோதரனுக்கு
அநீதி இழைக்கப்படும் போது - அதை
நீதியின் வெற்றி எனக் கொண்டாடுவது அமைதியா ?
சகமனிதனை மதம் ,சாதியின் பெயரால் அவமதிப்பதும்
இழிவுசெய்வதும் அமைதி
பூங்காவின் லட்சணமா ?
மனம் அமைதியைத்தான் விரும்புகிறது -ஆயின் ,
எது அமைதி என்பதில்தான் குழப்பம்.
நல்லிணக்கத்தை குலைக்க
யாரும் விரும்பவில்லை – ஆயின்
வலுத்தவனுக்கு வாலைக் குழைப்பதா நல்லிணக்கம் ?
நீதிக்கு தலைவணங்கவே யாவருக்கும் விருப்பம் – ஆயின்
நெஞ்சார பொய்சொல்வோரிடம் மண்டியிடுவதா நீதி ?
மனம் அமைதியைத்தான் விரும்புகிறது -ஆயின் ,
எது அமைதி என்பதில்தான் குழப்பம்.
சட்டத்தின் ஆட்சிக்கு உட்படச் சம்மதம்தான் – ஆயின்
கொழுத்தவனைக் காப்பதற்கா சட்டமும் ஆட்சியும் ?
தியாகம் செய்வதற்கு தயக்கம் இல்லை – ஆயின்
குபேரன் கொழுக்க ஏழை கோவணத்தை இழப்பதா தியாகம் ?
மனம் அமைதியைத்தான் விரும்புகிறது -ஆயின் ,
எது அமைதி என்பதில்தான் குழப்பம்.
மனச்சாட்சியைக் கொன்று புதைப்பின்
மயாண நிசப்தமே எங்கும் சூழும் !
மனட்சாட்சி விழித்து எழுமின் !
மனமும் கண்களும் சினந்து சிவக்கும் !!!!
- சு.பொ.அகத்தியலிங்கம் .
12/11/2019.
0 comments :
Post a Comment