ஆகஸ்ட் 15
இன்று துக்கநாளல்ல
ஆனாலும் சந்தோஷம் முன் போல் இல்லை…..
தியாகம் அளப்பரியது
அடிமை விலங்கொடித்தது
அரசியல் சுதந்திரம்
ஆர்ப்பரித்தது
இது ஆரம்பம்தான்
சமூக சமத்துவமும்
பொருளாதார சமத்துவமும்
அடுத்தடுத்து விளையுமென
கனவுகள் இறக்கைகட்டின…
இன்று துக்கநாளல்ல
ஆனாலும் சந்தோஷம் முன் போல் இல்லை…..
வார்த்தைத் தோரணங்களில்
வாழ்க்கை மலராது!
வேதக் கனவுகளில்
விமோச்சனம் கிடைக்காது!
மதமும் சாதியும் மனிதனைக்
கொல்ல
மாட்டின் புனித பஜனை கீதம்!
தேசத்தை விற்பவர்கள்
தேசபக்தியை
உபதேசிக்கின்றனர்!
இன்று துக்கநாளல்ல
ஆனாலும் சந்தோஷம் முன் போல் இல்லை…..
நீதி ,நிர்வாகம்,காவல்
,ஆட்சி,அதிகாரம்
எதுவும் உழைப்பவனுக்காவும்
இல்லை
ஒடுக்கப்பட்டவனுக்காகவும்
இல்லை
வலுத்தவனும் வர்ணத்தின்
உச்சியிலிருப்பவனும்
வகுத்ததே வாய்க்காலாகிறது !
அதிகாரம் வாலாட்டுகிறது !
ஊடகமும் கலைகளும் அதையே
ஊதிமுழங்குகிறது
புழுவாய் நெழிந்தால் தீராது
! முக்கி முனகினால் முடியாது !
எழு ! சீறு ! பறை முழங்கு !
எக்காளம் ஊது ! கொதிநிலை எய்துக !
இன்று துக்கநாளல்ல
ஆனாலும் சந்தோஷம் முன் போல் இல்லை
ஒன்றை மட்டும் உறுதியாய்ச் சொல்லலாம்
எல்லாவற்றுக்கும் நிச்சயம் எதிர்வினை உண்டு !
ஜெய் பீம் ! லால் சலாம் !
இன்குலாப் ஜிந்தாபாத்!
0 comments :
Post a Comment