தங்கக் களஞ்சியத்தைக் கொள்ளையடிக்க சதி

Posted by அகத்தீ Labels:


தங்கக் களஞ்சியத்தைக் கொள்ளையடிக்க சதி

-    சு.பொ. அகத்தியலிங்கம்


ஜூலை 18 ஆம் தேதி மாலையோடு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்படோமாஸ் கபீர் ஓய்வுபெற்றார் , 9 ஆம் தேதி  மாலை ஒரு வழக்கு குறித்து தன் சேம்பரில் வைத்தே தீர்ப்பு வாசித்தார் . அந்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் நடப்பதாக இருந்தது . அவசர அவசரமாகத் தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன ? 13 ஆண்டுகளாக வீதியில் நிறுத்தப்பட்டுள்ள கோலார் தங்க வயல் தொழிலாளர் குடும்பங்களில் இந்த அவசரத் தீர்ப்பு ஒளியேற்றுமா ? இந்தத் தீர்ப்பைக் கொண்டாடுவது யார் ? ஏன் ?

இந்தக் கேள்விகளை அலசும் முன் பழைய தகவலொன்றை அசைபோடுவோம் .  நீதிபதி கே .பாலகிருஷ்ணன் ஓய்வு பெறும் முன் அவசர அவசரமாக அளித்த தீர்ப்பு கர்நாட சுரங்கக் கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்தது . ஓய்வு பெற்ற பின் அதீத சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிக்கினார் . சமீபத்தில் தமிழக மாஜிஸ்ட்ரேட் ஒருவர்  பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்ரைக் காதலித்துக் குடும்பம் நடத்தி ஏமாற்றியதற்காக கைது செய்யப்பட்டார் . ஹரியான நீதிபதி ஒருவர் மனைவியை கொன்று கொலையை மறைத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார் . நீதிபதிகள் சிலர் சந்தேகத்துக்கு அப்பாற் பட்டவர்களாக  இல்லை ; தீர்ப்புகளும் சிலவும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக அமைவதில்லை .

தங்கவிலை ஏறிக்கொண்டே போகிறது . தங்கச் சுரங்கத்தை தனியாருக்குத் தரக்கூடாது . அரசே ஏற்று நடத்த வேண்டும் . எனக் காரண காரியங்களோடு கர்நாடக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தும் ; உலகளாவிய ஒப்பந்த புள்ளி [ குளோபல் டெண்டர் ] கோரி தனியாரிடம் உண்மையான  தங்க முட்டையிடும் வாத்தை தாரைவார்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது ஏன் ? எப்படி ?
 
உண்மை நிலவரம் அறிந்தவர்கள் தீர்ப்பின் மர்ம முடிச்சை அறியாமல் தவிக்கிறார்கள் ; ஆனால் வாழ்க்கை கிழிக்கப்பட்ட கோலார் தங்க வயலின் மூத்த தொழிலாளர்கள் , ஈட்டி எட்டின வரைதான் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும் என்ற பழமொழியைச் சர்வ சாதாரணமாகச் சொல்லிச் சிரிக்கிறார்கள் . அவர்களின் அனுபவத் தழும்பு அப்படிச் சொல்லவைக்கிறதோ ! சரி ! சரி! கோலாருக்கு வருவோம் .

கோலாரில் தங்கம் எடுக்கும் கலை மிகப்பழமையான தொழில் . நாகரிக மனிதன் தங்கம் என்கிற மஞ்சள் பிசாசை அதன் மதிப்பை அறிந்த காலந்தொட்டு தங்கத்தொழிலில் ஈடுபட்டுவரும் கேந்திரங்களில் கோலாரும் ஒன்று என்பர் வரலாற்று அறிஞர்கள் . பிரிட்டீஸார் வருகைக்கு முன்பே திப்பு சுல்தானும் ஹைதர் அலியும் அந்தச் சுரங்கங்களில் தங்கம் எடுத்து வந்ததாகத் தெரிகிறது . அதற்கு முன் விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களும் இதில் ஈடுபட்டதாகத் தகவல் உண்டு . ஆயினும் 1880 ல் ஜாண் டெய்லர் அண்ட் கம்பெனி இத்தொழிலில் இப்பகுதியில் ஈடுபடத் தொடங்கிய பின்னரே முறையான சுரங்க ஏற்பாடுகள் செயல்பாட்டுக்கு வந்தது எனில் அது மிகைன்று .

குடியாத்தம் , திருப்பூர் , வேலூர்  வட்டாரத்திலிருந்து கொத்தடிமைகளாகக் கொண்டு வரப்பட்டவர்களும் - சாதிய அடக்குமுறை தாங்கமுடியாமல் தப்பி வயிற்றுப்பாட்டிற்காக இங்கே வந்து குடியேறியவர்களுமே மிக அதிகம் . பெரும்பான்மையோர் தலித்துகள் . 

   தீண்டாமை தமிழ் நாட்டில் இவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்த போது இங்கே கிறுத்துவ தேவாலங்களின் வாசல் இவர்களுக்காகத் திறக்கப்பட்டதும் , தங்களுக்கென சொந்த சாமியையும் சொந்தக் கோயிலையும் உருவாக்கிக் கொள்ள முடிந்ததும் தலித்துகள் இங்கேவர ஊக்கம் தந்தது - என்கிறார் கர்நாடக மாநில சிஐடியு தலைவரும் சுரங்கத் தொழிற்சங்கத் தலவருமான வி.ஜெ.கே.நாயர்.

சுயமரியாதை உணர்வும் , தேசவிடுதலை ஆர்வமும் தமிழகத்தில் ஓங்கியதன் எதிரொலி இங்கும் வலுவாய் எழுந்தது . 1930 ல் சுமார் 16000 ம் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர் . அவர்களுக்கு ஒரு அடையாள எண் தரப்பட்டு , செம்புத் தகட்டில் அடையாளம் பொறித்து இரும்பு வளையத்தில் கையில் காப்பு போல் பூட்டப்பட்டிருக்கும் ; இவர்கள்  தப்ப முயன்றால் சித்தரவதையை , கடும் தண்டனையை அனுபவிக்க நேரிடும் . கொத்தடிமை கைவளையத்தை அகற்றக்கோரியும் , கடும் குளிரிலிருந்து தப்ப ஒரு இடம் கோரியும்  போராட்டம் வெடித்து 24 நாட்கள்  நடந்தது ; கே .ஆர் .சண்முகம் செட்டியார் என்ற தேசபக்தர் களத்தலைவரானார் .பிலிப் செயலாளரானார் . போராட்டம் தீவிரமானது .  துப்பாக்கிச் சூடு நடந்தது . 44 பேர் காயமடைந்தனர் . பெரும் போராட்டத்துக்குப் பின் கைவளையம் அகற்றப்பட்டது .

தொழிலாளர்களிடையே மெல்ல தொழிற்சங்க விழிப்புணர்வு ஏற்பட்டது. தமிழகத் தலைவர்கள் ப.ஜீவானந்தம் , சாரி , சர்க்கரைச் செட்டியார் உள்ளிட்ட தலைவர்கள் பெரும்பங்காற்றினர் . வேறு சில தொழிற்சங்கங்கள் இருப்பினும் செங்கொடி இயக்கம் தொழிலாளர் தோழனாய் படைத்தளபதியாய் ஆனது . தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்தன .செங்கொடிப் புதல்வர்கள் கே.எஸ். வாசனும் , வி.எம். கோவிந்தனும் வீரியமிக்க தலைவர்களாய் வலம் வந்தனர் . 1946 ஜனவரி 7 ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை 77 நாட்கள் தீரமிக்கப் போராட்டம் நடை பெற்றது . விளைவு குறைந்த பட்சக் கூலி 12 [ 75 பைசா ] அணாவிலிருந்து  ஒரு ரூபாய் ஒரு அணா அதாவது 106 பைசாவாக் கூலி உயர்ந்த்து.வேறு சில சலுகைகளும் கிடைத்தன .
 
மைசூர் சமஸ்தானத்துக்கு பொறுப்பாட்சி கோரும் போராட்டத்தில் தொழிலாளர்கள் குன்றா உறுதியுடனும் , தளரா ஊக்கமுடனும் பங்கேற்றனர் . வெகுண்டது பிரிட்டீஸ் அரசு . தொழிற்சங்கத்தை உடைத்தெறிய சதிவலை பின்னியது . திடீரென 1946 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் நாள் வெடித்த போராட்டத்தைத் தொடர்ந்து நவம்பர் 4 ஆம் நாள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ; காளியப்பன் , ராமசாமி , ராமையா , சுப்பிரமணி உட்பட ஆறுபேர் கொல்லப்பட்டனர் . கோவிந்தனும் வாசனும் கைது செய்யப்பட்டனர் . தொழிற் சங்கங்களிடையே மோதல்கள் உசுப்பிவிடப்பட்டது.இந்து முஸ்லீம் மதக்கலவரமாக மாற்றவும் முயற்சிகள் பிரிட்டீஸாரால் மேற்கொள்ளப்பட்டன.

பத்திரிகையாளர் சாய்நாத் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல் ; பல மதம் , சாதி , மொழி , இனம் இருப்பினும் பகமையற்ற சமநிலை சமூகமாக கோலார் விளங்கியதே அதன் பாரம்பரியம் . போராட்டங்கள் தொடர்ந்தன . 

வெள்ளைக்காரன் நாட்டைவிட்டுப் போனாலும் சுரங்கத்தை விட்டு போகவில்லை . 1966 ல் மைசூர் அரசாங்கம் சுரங்கத்தை ஏற்றெடுத்த பின்னரே இந்தியச் சுரங்கமானது . 1972 ல் மத்திய அரசு தேசவுடைமை ஆக்கியது . போராட்டங்களின் பயனாய் குடியிருப்பு,இலவசக் கல்வி,ஆரோக்கியம், குடிநீர் , சமூக நலத் திட்டங்கள் கிடைத்தன . 

1956 முதல் ஒரு முறை வாசனும் , ஒரு முறை  என். சி .நரசிம்மனும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சட்டமன்ற உறுப்பினரானாயினர் . அடுத்து இராஜகோபால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் .தேன் .சு .மணி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். குடிஅரசுக்கட்சி , அ இ அ தி மு க , காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஏனைய சந்தர்ப்பங்களில் வெற்றிபெற்றனர் . தொழிற் சங்கத்திலும் கட்சி சார்பு சங்கங்கள் வலுப்பெற்றன .

சுரங்கத்தின் ஒவ்வொரு நூறு அடியும் ஒரு லெவல் எனப்படும் .ஒவ்வொரு லெவலாக்க் கீழே போகப்போக தொழிலாளை துயரம் அதிகரித்த்து . சிலிகாஸ் எனும் தொழில்சார் நோய் கடுமையாகத் தாக்கியது . நுரையீரலை விஷ தூசித் தாக்குவதால் மூச்சுத்திணறல் , இரத்த வாந்தி , சளி , காய்ச்சல் இதனால் மரணமும் ஏற்பட்ட்து . மண்சரிவாலும் சாவுகள் நேர்ந்தன.

             சிலிகாஸ் நோயிலும் விபத்துகளாலும் இச்சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் இதுவரை 8000 எட்டாயிரம் பேர் உயிர்பலியாகி உள்ளனர் . இதுவரை 800 எட்டு நூறு டன் தங்கம் எடுக்கப்பட்டுள்ளது . அதற்காக கொடுத்த இந்த உயிர்களின் பெருமதிப்பை எப்படிக் கணக்கிடுவது ? எந்தக் கணக்கில் சேர்பது ?

லெவல் 174 ஆனபோது  ,தொழிலாளர்கள் உயிரைப் பணையம் வைத்து கீழே போகத் தயங்கினர் . நிர்வாகத்தின் ஆட்குறைப்பாலும் , ஊழியர் வெளியேற்றத்தாலும் படிப்படியாக ஊழியர் எண்ணிக்கை 8000 ஆக்க் குறைந்தது . வேலை நியமனத் தடையும் அமலுக்கு வந்தது . இதனால் அத்தியாவசியப் பணிக்கு ஆளெடுக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. சுரங்கத்தை முடக்கிய போது 3500 பேரே பணியாற்றினர் . 2001 ஆம் ஆண்டு பா. . ஆட்சியில் சுரங்கம் முடக்கப்பட்டது . பணி நின்றது . தொழிலாளர்கள் எந்தப் பணப் பயனுமின்றி வீதியில் தூக்கி எறியப்பட்டனர் . அத்துக்கூலிகளாய் பஞ்சம் பிழைக்க அன்றாடம் பெங்களூருக்குப் பயணப்படலானார்கள் . சுரங்கம் மூடப்படக் காரணம் நட்டம் எனக்கூறப்பட்ட்து உண்மையா ?

தங்கச் சுரங்கத்தில் நட்டம் ஏன் என்பதை அறிய 1992-93 ல் எஸ்.எப்.ஆர். சாரி கமிஷன் அமைக்கப்பட்ட்து . தங்கம் விலையேறும் போது நட்டம் ஏன் ? இக்கேள்வி சாரியைக் குடைந்தது . மற்ற பொருட்கள் உற்பத்தியெனில் சந்தைப்படுத்தல்  சிரமம் அதிகம் . இங்கு உற்பத்திப் பொருளே தங்கம் , வாங்குவது அரசு . பின் நட்டம் ஏன் ? தங்கம் உள்ளூர் சந்தையில் நாளும் விலை ஏறும் சூழலில் தங்க்க் கட்டுப்பாடு அமலில் இருந்த அன்றையச் சூழலில்   லண்டன் சந்தை நிலவரப்படி தங்கவிலையைக் குறைவாக அரசு நிர்ணயித்தது . இதனால் 1972 முதல் 1985 வரை 13 ஆண்டுகளில் மட்டிலும் இந்த விலை பாரபட்சத்தால் ரூ.8400 கோடியை அரசு மறைமுகமாகச் சுருட்டிக் கொண்டது . அரசாங்கம் ஒரு பைசாகூட சுரங்கத்தில் மூலதனம் போடவில்லை என்பதையும் சேர்த்துப்பார்க்க வேண்டும் . சுரங்கம் இழந்தது. மைசூர் சுரங்கம் , நந்தி துர்க்கா சுரங்கம் , சாம்பியன் சுரங்கம் இம்மூன்றிலும் சேர்த்தே இந்நிலைதான் . சாரி கமிஷனைத் தொடர்ந்து நடராஜன் கமிஷன் அமைக்கப்பட்டது . அதுவும் நட்டத்தின் பின்னால் உள்ள அரசின் மறைமுகச் சுரட்டலைச் சுட்டத் தவறவில்லை .

இதற்கிடையில் தங்க உற்பத்தி சுருங்கியது . மேல் லெவல்களில் ஒரு டன் தாதுமண்ணில் 20 கிராம் வரை கிடைத்த காலம் மலை ஏறிட பசிப்படியாக 7 கிராம் , 5 கிராம் என்றானது . இதுவரை மோசமில்லை . ஆனால் 174 லெவலில் அது வெறும் 0.7 கிராமாகக் குறைந்தது . இப்போது உற்பத்திச் செலவு மிக அதிகமானது . விருப்ப ஓய்வூதிய செலவு சுமையும் , அதற்கு அரசு கொடுத்த கடனுக்கு 17 சத வட்டிச் சுமையும் சுரங்கத்தை மூச்சுத் திணற வைத்தது.சுரங்கத்தை முடக்கி தொழிலாளரை கசக்கித் தூக்கி எறிந்தது.

டெத் ஆப் மைன்ஸ் [ சுரங்கத்தின் மரணம்] என இதன் கதையை ஃபிரண்டு லைனில் எழுதும் போது பார்வதி மேன்ன் தலைப்புக் கொடுத்திருப்பார் . ஆனால் சுரங்கம் சாகடிக்கப் படாமல் கோமா நிலையில் இவ்வளவு காலம் வைத்திருந்ததும் இப்போது தோலோடு சுளையோடு விழுங்க பன்னாட்டு திமிங்கிலங்களை அழைப்பதும் ஏன் ? சுரங்கத்தை மீட்க நடந்த முயற்சிகளும் விழுங்க நடந்த சதிகளும் கொஞ்சமோ! அதையும் பார்ப்போம்.

1992 ஆண்டே பி. . எப். ஆர் எனப்படும் தொழில் மற்றும் நிதி மறுசீரமைப்பு வாரியத்தின் முன் சுரங்க நிலை ஆய்வுக்கு வந்தது . எட்டு முறை கூடி விவாதித்து விட்டு 2000 ஆம் ஆண்டு சுரங்கப் பணியை மூட்டைகட்டி வைக்க உத்தரவிட்ட்து . . . . எப். ஆர் எனப்படும் தொழில் மற்றும் மறுசீரமைப்பு ஆணையமும் அதே ஆண்டு இறுதியில் அதே முடிவுக்கு வந்த்து , ஒரு டன் தாதுவில் கிடைக்கும் தங்கத்தின் அளவு ஒரு கிராமுக்கும் கீழே கீழே போவதால் உற்பத்தியை அதிகரிக்க அதிகரிக்க நட்டமே ஏற்படும் எனக் கூறியது ; அதே சமயம் தொழிலாளர்களில் ஒரு பிரிவினரும் சூப்பர்வைசர்களும் அடங்கிய பிரிவு கூட்டுறவு நுறையில் சுரங்கத்தை நடத்த கேட்ட அனுமதியை ஆணையமும் நிபந்தனைகளுடன் ஏற்றது . முதலில் கூட்டுறவு எனதற்குப் பதிலாக பங்கு நிறுவனமாக மாற்றப்படவேண்டும் . உலகளாவிய டெண்டர் [ குளோபல் டெண்டர்] அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படவேண்டும் என்பன உட்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இக்குழுவே மத்திய அமைச்சர் கே . ஹெச் . முனியப்பாவின் கைப்பாவை அமைப்பு என்பது ஊரறிந்த கைப்புண் . இவர்களுக்குப் பின் ஆஸ்திரேலிய நிறுவனம் இருப்பது வெள்ளிடை மலை. இவர்கள் எழுப்பிய கோரிக்கை எதுவும் புதிதல்ல , சி ..டி .யு விடமிருந்து ஹை ஜாக் செய்த்துதான் , ஆனால் அதனை அமலாக்க விட்டுக்கொடுத்தல் என்கிற சாக்கில் நீர்த்துப்போகச் செய்வதும் ; ஆஸ்திரேலிய நிறுவனத்துக்குச் சாதகமாக பூசிமெழுகுவதும் தான் அவர்களின் சிறப்புப் பங்களிப்பு , என்கிறார்கள் மூத்த தொழிலாளிகள் . அவர்கள் அனுபவ வார்த்தைகள் பொய்யல்ல .

ஆஸ்திரேலிய கம்பெனி லாபம் தராத ஒரு நிறுவனத்தைக் கைப்பற்ற நாயாய் பேயாய் அலையுமா ? நரித்தனங்களில் இறங்குமா ? ஆம் , நரியின் கண் கோழியின் மீதுதான் . கோலார் தங்க வயலில் இறங்கி நடக்கும் யாரும் மலை மலையாய் குவிந்திருக்கும் கறுப்பு நிற மணல் குன்றுகளைக் காணலாம் . இதனை சயனைடு குன்று [ சயனைடு குப்பை என்பதே பொருத்தமாக இருக்கும் ] என்று அழைப்பர் . டெய்லிங் டம்ப்பு என்றும் கூறுவர் . ஆனால் தங்கப் புதையல் இதில் இருப்பதைக் கண்டு கொண்டது அந்த ஆஸ்திரேலிய நிறுவனம் . அங்கேதான் கொள்ளைக்காரன் மூளை மிகச் சரியாக திட்டமிடத்துவங்கியது .

நம் ஊரில் பழைய பிலிம்சுருளை சேகரித்து வெள்ளி எடுப்போர் உண்டு . பழம் பட்டுப் புடவையிலிருந்து சரிகை எடுப்போர் உண்டு . அது போலத்தான் இதுவும் ஆனால் பெரும் கொள்ளை . எப்படித் தெரியுமா ?

38 மில்லியன் டன் சைனைடு குப்பைகள் உள்ளன . ஒரு டன் சைனைடு குப்பையிலிருந்து 0.7 கிராம் தங்கம் எடுக்கலாம் . இதற்கு சுரங்கம் தோண்டத் தேவை இல்லை . அரித்து அல்லது சலித்தெடுத்தால் போதும் . லாபம் கொட்டும் . ஒரு சின்னக் கணக்கு 38 மில்லியன் என்றால் 3.8 கோடி டன் ஆகும் . ஒரு டன்னில் 0.7 கிராம் தங்கம் கிடைக்கும். ஒரு கிலோ என்பது 125 பவுனாகும் . அப்படியானால் ஒரு டன்னில் 1,25.000 பவுன் அதாவது ஒன்றே கால் லடசம் பவுன் தங்கம் எடுக்கலாம் . அதாவது 3.8 x 1000 x 1000 x 0.7 x 1,25 ,000 = 3,32,50,00,00,000 பவுன் எனினும் ; சேதாரக் கணக்கெல்லாம் போட்டபின்னும் 25.9 டன் தங்கம் கிடைக்கும் எனக் குறைந்த பட்சக் கணக்கை அதிகார வர்க்கமே ஒப்புக்கொள்கிறது . மிகக்குறைவாகக் கணக்கிட்டாலும் 7,770 கோடிரூபாய் கிடைக்கும் என்பதும் எல்லோரும் ஒப்புக் கொண்ட கணக்கு இது போக 12 ஆயிரத்திற்கும் அதிக ஏக்கர் நிலமும், இதர கட்டிடங்களும் , வசதிகளும் கிடைக்கும் ; சுரங்கத்தை நவீனப்படுத்தினால் மேலும் லாபகரமாகத் தங்கம் எடுக்க முடியும் . உண்மையில் பொன்முட்டையிடும் வாத்து இது . இதைக் கைப்பற்றவே ஆஸ்திரேலிய நிறுவனம் பெரும் முயற்சி எடுக்கிறது .

இந்தக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் . அரசே சுரங்கத்தை ஏற்று நட்த்த வேண்டும் . பாதிக்கப்பட்ட தொழிலாளார்களுக்கு இரட்டை ஓய்வூதியப் பலனும் , வாரிசுதாரருக்கு வேலையும் வழங்க வேண்டும் . இக்கோரிக்கைகளுக்காக வீதியிலும் , நீதிமன்றத்திலும் , அரசியல் களத்திலும் முயற்சி எடுத்தது . பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டதை மணிக்கணக்கில் விவரிக்கிறார் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஜி .அர்ச்சுனன் .

கர்நாடக உயர்நீதி மன்றம் சுரங்கத்தை அரசே ஏற்று நடத்த பரிந்துரை செய்தது . தங்கம் ஊசிப் போகாது . விலை ஏறிக்கொண்டே இருக்கும் . தனியாரிடம் கொடுப்பது என்பதும் அமைச்சரவை முடிவல்ல என்பதையெல்லாம் ஆதாரதோடு சுட்டிகாட்டியது . இது தொழிலாளி வர்க்கத்திற்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும் . இதனைக் கழுகுக் கணகள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா ? கைப்பொம்மை குழு மூலம் பொம்மலாட்டம் துவங்கியது . மேல் முறையீடு செய்தது . இந்த வழக்கில் நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிபிட்டபடி உச்சநீதிமன்றம் அவசர அவசரமாக தீர்ப்பு வழங்கியுள்ளது . உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி மூலம் தனியாருக்கு வழங்க ஆணையிட்டுள்ளது .

இதனை பெரும் சாதனையாகக் கொண்டாடுகிறார் முனியப்பா . ஆனால் தேசத்தின் பொற்களஞ்சியத்தை ஆஸ்திரேலிய நிறுவனம் வேட்டையாட வழிவகை செய்யப்பட்டுள்ளதாக சங்கத் தலைவரும் சிஐடியுவின் மூத்த தலைவருமான வி.ஜெ.கே நாயர் சுட்டிக்காட்டுவதுடன் ; அரசே ஏற்று நட்த்துவதுதான் சரியான ஒரே தீர்வு என்கிறார் .மேலும் பெரும்பாலான தொழிலாளிகள் முதுமை அடைந்து விட்டதால் கிடைத்தது போதும் எனக் கருதுவார்கள் என முனியப்பா கணக்குப்போட்டு பிரச்சாரம் செய்கிறார் என்பதயும் விஜெகே சுட்டுகிறார். இரட்டை பணப்பயன் சிஐடியு ஆதிமுதல் கோரிவருவதே .  சுரங்கப் பணி நிறுத்தப்பட்டதே தவிர நிறுவனம் முறையாக மூடப்படவில்லை - இதனை உயர் நீதி மன்றமும் சுட்டிக்காட்டி உள்ளது . எனவே அறிவிக்கப்பட்ட பணப்பயனுடன் 2001 ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான ஊதியமும் வழங்கப்பட வேண்டும் . அது தவிர வாரிசு ஒருவருக்கு வேலையும் வழங்கவேண்டும் . தேசத்தின் பொற்களஞ்சியத்தைக் காக்க மார்க்சிஸ்ட் கட்சியும் சிஐடியுவும் இறுதிவரை உறுதியாகப் போராடும் என்கிறார் வி.ஜெ.கே.

தங்க இறக்குமதியை குறைக்க நீட்டிமுழக்கும் சிதம்பரம் பல ஆயிரம் கோடி பெறுமான தங்கக் களஞ்சியத்தை காவுகொடுப்பதைத் தடுக்க வேண்டாமா ? அந்நிய செலாவணி இருப்புக் குறைந்து பண மதிப்பு வீழும் சூழலில் நமது தங்கச் சுரங்கத்தை பாதுகாப்பது அரசின் கடமையன்றோ! தங்கம் துருப்பிடிக்காதுதங்க மதிப்பு குறைந்து போகாதுஅதனை
இழக்கலாமோ ! வெள்ளையன் அன்று கொள்ளையடித்துப் போன கோகினூர் வைரத்தை மீட்போம் என அடிக்கடி வீர வசனம் பேசும் அரசும் ஆட்சியாளர்களும் கோலார் தங்கச் சுரங்கத்தை ஆஸ்திரேலியனோ வேறு எந்த அந்நியனோ கொள்ளை அடிக்க அனுமதிக்கலாமோ ? கேளாக் காதினராய் இருக்கும் ஐ. மு . கூ அரசின் செவிப்பறை கிழிய பாட்டாளி வர்க்கம் குரல் எழுப்பாமல் தங்கக் கழஞ்சியத்தைத் தாரை வார்ப்பதை தடுக்கவே முடியாது .1 comments :

  1. karan

    good

Post a Comment