சீர்திருத்த திருமணங்கள் - மேலும் சீர்த்திருத்தப்பட வேண்டும்

Posted by அகத்தீ Labels:
சீர்திருத்த திருமணங்கள் - மேலும்
சீர்த்திருத்தப்பட வேண்டும்

சு.பொ. அகத்தியலிங்கம்


[ திருமணங்கள் குறித்த இக்கட்டுரையுடன் 12-08-2012 ல் வெளியான  “ மொய்:வட்டியில்லாக் கடனா? “  http://akatheee.blogspot.in/2012/08/blog-post_17.html  என்ற கட்டுரையையும் இணைத்துப்படித்து கருத்துச் சொல்லவும்
]

ஒரே ஊரில் இரண்டு திருமணங்கள் நடந்தன. ஒன்று ஒரு சமூக
சீத்திருத்தவாதியின் இல்லத்திருமணம். இன்னொன்று அவரது கார் டிரைவரின்
இல்லத்திருமணம்.

சமூக சீர்திருத்தவாதியின் இல்லத் திருமணம் ஒரு பெரிய திருமணமண்டபத்தில்
நடைபெற்றது. ஊர் முழுக்க கொடிகள், தோரணங்கள், வண்ணவண்ண சுவரொட்டிகள்,
தலைவரை வரவேற்கும் விளம்பரத் தட்டிகள்... மண்டப வாடகையே ஒரு லட்சம்
ரூபாய். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் சுமார் ஐயாயிரம் பேர் இருப்பர்.
பல மணி நேரம் பந்தி நடந்தது. திருமணமா மாநாடா என வியக்கும் வண்ணம் ஒரே
கொண்டாட்டம். வாழ்த்தொலிகள் (தலைவருக்குத்தான் மணமக்களுக்கு அல்ல).
மாநாட்டு விருந்தின் சுவையை பலர் உச்சுக் கொட்டிப் பாராட்டினர். திருமணச்
செலவு அன்று மட்டும் சுமார் 10 லட்சம் ரூபாய் ஆகி இருக்கலாம். மேலும்
இருக்கலாம், யாரறிவார்?

சாதி பார்த்து, பொருத்தம் பார்த்து, எடை போட்டு தங்க நகைகள், ரொக்கம்,
கார் என வரதட்சனை வாங்கி, நாள் பார்த்து, நேரம் பார்த்துக் குறித்து
செய்யப்பட்ட திருமணம் அது. முகூர்த்தப்பட்டு மாத்திரமே ஜம்பதாயிரம்
ரூபாய். நிச்சயதார்த்தப் பட்டு 28,000 ரூபாய் எனப் பேசிக் கொண்டனர். ஒரே
ஒரு அம்சம் ஐயர் இல்லை. மந்திரம் இல்லை. மேடையில் தாலி கட்டவில்லை
(வீட்டுக்கு போனபின் விளக்கின் முன் கட்டிக் கொண்டனர்) -அவ்வளவுதான்.
திருமணம் மேடையிலேயே பதிவு செய்யப்பட்டது. தலைவர்கள் சமூக சீர்திருத்தத்
திருமணம் குறித்து நீட்டி முழக்கினர். பெண் விடுதலையைப் பற்றி தலைவர்கள்
பேசும் போது மூத்த மருமகள் பக்கத்திலிருந்த சிநேகிதி காதில்
கிசுகிசுத்தும் மாமனாரின் ஆணாதிக்கச் சிந்தனையை கிண்டலடித்து சிரித்ததும்
தனிச் செய்தி.

அடுத்து அந்த சீத்திருத்தக் வாதியின் டிரைவர் மகன் திருமணம். மறுநாள்
கோயிலில் நடந்தது. சுமார் இருபத்தைந்து பேர்கள் கலந்துகொண்டனர். பட்டுச்
சேலை சரசரக்கவில்லை. கைத்தறிக் கூரைப் புடவையில் மஞ்சள் கயிறும்
கழுத்தில் மாலையுமாய் மணமகள். வெறும் கைத்தறி வேட்டி சட்டை மாலையோடு
மணமகன் ஹோட்டலில் வாங்கிய டோக்கனை வந்திருந்தவர்கள், கையில் கொடுத்துச்
சாப்பிட அனுப்பினர். எளிய விருந்து இவ்வாறு முடிய மணமக்கள் வீடு திரும்பி
இனிய வாழ்வைத் தொடங்கினர்.

முக்கியமான செய்தி மணமகன் உயர்சாதி. மணமகள் தலித். இருவரின்
பெற்றோர்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். வரதட்சனை எதுவும்
வாங்கவில்லை. கோவிலில் திருமணம் பதிவு செய்யப்பட்டது.

இந்த இரண்டு திருமணங்களும் இரண்டு செய்திகளை நமக்குச் சொல்கின்றன.
இப்போது எது சீர்திருத்தத் திருமணம் என்ற கேள்வி எழுகிறது. இந்த இடத்தில்
சற்று பின்னோக்கிப் போய், சமூக சீர்திருத்த வரலாற்றைப் பார்ப்போம்.

வைதீகத்தின் முரட்டுப் பிடியிலிருந்து திருமணங்களை மீட்டெடுக்க
பெரியாரும் ஜீவாவும் சிங்கார வேலரும் சுயமரியாதை இயக்கத்தவர்களும்
கம்யூனிட்டுகளும் அரும்பாடுபட்டனர். எடுத்த எடுப்பில் எல்லாவற்றையும்
தலைகீழாக மாற்றிவிட முடியாதுதான். மெல்ல மெல்லத்தான் பண்பாட்டுப் பழக்க
வழக்கங்களை மாற்ற முடியும். எனவே தாலிமறுப்புத் திருமணங்களும் சடங்கு
மறுப்பு திருமணங்களும் சுயமரியாதைத் திருமணங்களாக நடத்தப்பட்டன.

சமூகத்தின் பெரும் எதிர்ப்பையும் ஏச்சுகளையும் பேச்சுகளையும்
தாங்கித்தான் அதை செய்ய வேண்டி இருந்தது. கலைஞரின் நெஞ்சுக்கு நீதி
நூலில் ஆரம்பக் காலத்தில் சமூக சீர்திருத்த திருமணங்கள் செய்வதில் இருந்த
இடையூறுகளும் சவால்களும் விரிவாக இடம் பெற்றுள்ளன.
ஆயினும் இந்த திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் இல்லை. சமுதாயம்
அங்கீகரித்தாலும் சட்டம் அங்கீகரிக்காததால் பல சிக்கல்கள் ஏற்பட்டன.

1967ல் திமுக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதலமைச்சர் ஆனார்.
சுயமரியாதைத் திருமணங்கள் சட்ட அங்கீகாரம் பெற்றது. இது அண்ணாவின் சாதனை
மகுடத்தில் பொறிக்கப்பட்ட ஒரு நட்சத்திரம் எனும் பெருமை பெற்றது.
வேறெந்த மாநிலத்திலும் இல்லாத சுயமரியாதைத் திருமணங்கள் அதாவது
இந்துசனாதன மரபுப்படி நடத்தாமல் தலைவர்கள் தலைமை ஏற்று நடக்கும்
திருமணங்கள் சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றது உண்மையில் சாதாரணச்
செய்தியல்ல. சமூக சீர்திருத்த இயக்கத்தில் ஒரு மைல்கல்தான். ஐயமில்லை.

ஆயினும் பெரியார் திருமண விழாக்களில் பேசும்போது இது மகாப்பெரிய
புரட்சிகரத் திருமணம் என்பதை ஏற்கமாட்டார். சுயமரியாதைத் திருமணம்,
சீர்திருத்தத் திருமணம் என்று சொல்வதையெல்லாம் கூட சரியில்ல என்பார்.
1956ஆம் ஆண்டின் மாதிரித் திருமணம் என்று கூறுங்கள். காலம் மாற மாற
திருமணங்கள் இன்னும் எளிமையாய் இன்னும் உனர்வுபூர்வமாய் இன்னும்
பெண்ணுரிமையை உயர்த்திப் பிடிப்பதாய் அமைய வேண்டும், என்பது பெரியாரின்
பெருங்கனவு.

எனினும் சுயமரியாதைத் திருமணத்தின் அங்கீகாரம் வழங்கும் சட்டம் முதற்படி
என்றுகூறி வரவேற்றார். இந்து திருமணச் சட்டத்தில் ஒரு பகுதியாகத்தான் இது
சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய சட்ட வரம்புக்குள்
அதுதான் சாத்தியமானது.

இப்போதும் வெவ்வேறு மதத்தவர்கள் திருணம் செய்துகொள்ள சிறப்புத் திருமணச்
சட்டத்தைத்தான் அணுகமுடியும். அதில் பதிவு செய்து ஒரு மாதம் காத்திருக்க
வேண்டும். இத்தகைய திருமணங்கள் பெரும் நெருக்கடிகளை சந்திக்கும் என்பதும்
எனவே உடனடியாகத் திருமணத்தைப் பதிவு செய்ய வழிவேண்டும் என்பது சமூக
எதார்த்தம். ஆனால் சட்டம் ஒரு மாதம் காத்திருக்கச் சொல்கிறது. அதற்குள்
மதவெறியர்கள் எதையும் செய்துவிடக்கூடும் அல்லவா?

இப்போது கட்டுரையின் ஆரம்பத்தில் விவரித்த இரு திருமண நிகழ்வுகளை
மனத்திரையில் ஓடவிட்டுப் பாருங்கள். சீர்திருத்தத் திருமணங்கள்
நீர்த்துப் போகச் செய்வதோ அல்லது கேலிப்பொருளாக மாறுவதோ எவ்வளவு
கொடுமையானது? ஆகவே, உரத்த சிந்தனை இப்போது தேவை.

இன்றையத் தேவைக்கு சுயமரியாதைத் திருமணச் சட்டம், சிறப்புத் திருமணச்
சட்டம் மட்டும் போதுமா? போதவே போதாது! அனைத்து திருமணங்களையும் பதிவு
செய்ய வேண்டும் என்ற அரசின் முடிவு சரிதான். ஆனால் அதுவும் போதாது.
போதாது. புதிய முற்போக்கான திருமணச் சட்டம் தேவை.

காதல் திருமணம், கலப்புத் திருமணம் செய்து கொண்டால். காலை வெட்டுவேன்,
கையை வெட்டுவேன், கொலை செய்வேன் என சாதி மதவெறியர்கள் கொக்கரிக்கும்
சூழலில், கவுரவக் கொலைகள் நடந்தேறும் சூழலில் சீத்திருத்தத் திருமணங்கள்
பெருக வேண்டும். அதே சமயம் அத்திருமணங்கள் மேலும் மேலும் சீர்
திருத்தப்பட வேண்டும். அன்பும் எளிமையும் கைகோர்க்க வேண்டும். அதற்கான
நிபந்தனைகள் சில உண்டுதான்.

முதல் நிபந்தனை

மணமகனுக்கும் மணமகளுக்கும் ஒருவரையொருவர் பிடித்திருக்கிறதா மனப்பூர்வமாக
சம்மதிக்கிறார்களா என்பதுதான் திருமணத்தில் முதல் நிபந்தனையாக்கப்பட
வேண்டும். சாதி, மதம், கவுரவம், அந்தது எதுவும் குறுக்கே நிற்கக்கூடாது.

இரண்டாவது நிபந்தனை

நகை, ரொக்கம், பொருட்கள், சீதனம் என எந்த ரூபத்திலும் வரதட்சனை வாங்காமல்
இருப்பதே சுயமரியாதை திருமணத்தின் அடுத்த நிபந்தனையாக இருக்க வேண்டும்.
பெண்ணின் சொத்துரிமையை இதோடு இணைத்துக் குழப்புவதோ அல்லது மறுப்பதோ கூடவே
கூடாது. வரதட்சனை எதிர்ப்பு சட்டம் வெறும் காகிதப் புலியாக அல்லாமல்
சமுதாய ஒழுக்காக மாற்றப்பட வேண்டும்.

மூன்றாவது நிபந்தனை

ஆடம்பரமான திருமணங்கள் நடத்துவது சமூக விரோதச் செயல் என்கிற மனோநிலை
சமூகத்தில் ஆழமாக வேர்விட வேண்டும். வழிகாட்டும் தலைவர்கள்
முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். எளிமையான திருமணங்களே கவுரவமானது என்ற
கருத்து வலுப்பட வேண்டும்.

சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் கலப்புத்திருமணமும் காதல் திருமணம்
பெருமைக்குரியதாய் போற்றப்பட வேண்டும். வரவேற்கப்பட வேண்டும். துணை நிற்க
வேண்டும். தோள்கொடுக்க வேண்டும்.

திருமண மண்டபங்கள் நூற்றுக்கு தொண்ணுறு
விழுக்காடு சைவ உணவை மட்டுமே அனுமதிக்கின்றன. சமூகத்தில் அசைவ உணவு
உண்போரே பெரும்பான்மையோராக இருப்பினும் சைவமே திருமணத்துக்கு உயர்ந்தது
என்பது தவறான சிந்தனை அல்லவா? அவரவர் சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப எளிய
விருந்து அது சைவம் அசைவம் என வேறுபாடின்றி வழங்க மண்டபங்கள் அனுமதிப்பது
அன்றோ நியாயமாக இருக்கம்.

எல்லா திருமணமும் பதிவு செய்யப்படுவது மதச் சார்பற்ற திருமணங்கள் - சாதி
மறுப்பு - சடங்கு மறுப்பு திருமணங்கள் - பெண்ணுரிமை போற்றும் திருமணங்கள்
பல்கிப் பெருக உரிய சட்டம் வேண்டும். வெறும் சட்டம் பயன்தராது.
சமூகவுணர்வாக அது மாற்றப்பட வேண்டும்.

மொத்தத்தில் சுயமரியாதைத்
திருமணங்கள் இன்றைய நவீன உலகுக்கு எற்ப மேலும் பலபடி முன்னேற வேண்டும்.
அதற்கொப்ப மனந்திறந்த பகிரங்க விவாதங்களும் விமர்சனங்களும்
பிரச்சாரங்களும் கட்டவிழ்த்துவிடப்பட வேண்டும். குறிப்பாக இடதுசாரிகள்
முன் இந்தப் பணியும் இருக்கிறது.

நன்றி:30-09-2012 தீக்கதிர்-வண்ணக்கதிர்

0 comments :

Post a Comment