பொய்களோடுதான்...

Posted by அகத்தீ
உண்மைக்கு மூத்தது பொய்
உரசிப் பார்
உண்மை விளங்கும்.

ஆதி மனிதனின்
கண்களால்
உலகத்தைப் பார்
அறியாமை-உன்
இமைகளை மூடும்

சிந்திக்கத் தொடங்கிய
நாட்களில்
தேடத்தொடங்கினாய்
உண்மைகளை
அறிந்த உண்மைகளை விட
அறியாத உண்மைகளே அதிகம்
அன்றைக்கு..

கால ஓட்டத்தில்
கண்டுபிடிப்புகளின் வேகத்தில்
காணாமல்போன பொய்களை
கணக்கெடுத்துப் பார்
பொய்களை உண்மைகளாக
பூஜித்த காலம்
கண்முன் விரியும்

பொய் சொல்லக் கூடாதென
போதித்தவனும்
சந்தேகப்படாதே என்றே
அறிவின் வாசலைச் சாத்தினான்
அது ஏன் என்று
சந்தேகப்பட்டால்
அவன் சொன்னபொய்கள்
அனந்தமாய் விரியும்

ஆட்சியாளர்களின்
புள்ளிவிவரப்பொய்
ஆன்மீகவாதிகளின்
போதனைப் பொய்
சுரண்டும் கூட்டம்
சொல்வதெல்லாம் பொய்
ஏகாதிபத்தியத்தின்
எல்லையற்ற பொய்

நைந்த வாழ்க்கை
நாளும் சொல்லும்
அனுபவ மெய்யோடு
அணுவும் பொருந்தா
பொய்களோடுதான்
நாட்கள் நகர்கிறது.

நேற்றைய பொய்கள்
இன்றையப் பொய்கள்
நாளையப் பொய்கள்
நினைவுத்திரையில்
ஓடவிட்டுப் பார்
ஊடகப் பொய்களின்
முன்னே
அனைத்தும்
தோற்றுப் போகும்.

உண்மையைத் தேடி
கேள்விச் சவுக்கைச் சுழற்று
உளமுற்ற தீயாய்
மார்க்சியம் சுடரும்


சு. பொ. அகத்தியலிங்கம்


3 comments :

  1. திசைசொல்

    அற்புதமான வார்த்தைகள்

  1. Unknown

    அருமை... அருமை...

  1. sankaranarayanan

    அருமைய இருக்கு தோழரே

Post a Comment