வாழ்வின் வலியை பொதிந்த கவிதைகள்

Posted by அகத்தீ Labels:

 




வாழ்வின் வலியை பொதிந்த கவிதைகள்

நாமறிந்த திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமியின் ஆறாவது கவிதைத் தொகுப்பு “ நினைவில் மிளிரும் ஜிமிக்கிக் கம்மல்” .

”கைவிட்ட
பலூன் மேலே போவதைத் தவிர
வழியில்லை.
அது பலூனுக்குத்
தெரியாது
கையில் இருக்கும் வரை.”

“ ஒவ்வொரு முறையும்
மரணம் வரை
உப்பி நிற்கிறது.”

இப்படி பலூன் இவரது கவிதையில் வாழ்வியல் பேசுகிறது .

“ ஒவ்வொரு ரயிலிலும்
யாரோ ஒருவரின் பசி வருகிறது.”

“அணில் ஏறிய மரமென
தடமின்றி மறைந்தும்
கழுவிக் கவிழ்த்திய பாத்திரங்கள்
காலத்தில் ஏராளம்.”

இப்படி வாழ்வின் வலியை பொதிந்து கவிதை தருகிறார்.

”இவ்வுலகில் பசியோடு
ஒரு பிள்ளை இருப்பதைச் சொல்ல பள்ளிக்கூட
மதிய உணவுத் தட்டொன்று
மிதந்து நகரின் மையத்தில் போகிறது .”

நகரத்து வெள்ளத்தை விவரிக்கும் கவிதையை இப்படித்தான் முடிக்கிறார்.

“ சைக்கிளில் பயணித்து
டீசல் விலையேற்றப்
போராட்டத்தில்
கலந்துகொண்ட
ஒரு மனிதன்
என்னைத் தோழர் என்று அழைத்தார்.”

தனக்காக அல்ல பிறருக்காக வாழ்பவன்தானே தோழர் .

“மேலே வரும் தகுதியுடைய
உனது கோப்புகளை
சத்தமின்றி கீழே எடுத்து வைக்கும்
மர்மக் கைகள் நிறைந்த உலகில்
நேர்மையாக இரு !”

இப்படி யதார்த்தத்தை பகடி செய்கிறார் .

நூல் நெடுக பல நெற்றியடி வரிகளோடு கவிதைகள் தந்த தோழர் சீனு ராமசாமிக்கு வாழ்த்துகள் .

நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல் . ஆசிரியர் : சீனு ராமசாமி
வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949
E mail : bharathiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com
பக்கங்கள் : 160 , விலை : ரூ.160 /

சுபொஅ.

03/09/24

அவசரமாய்....

Posted by அகத்தீ Labels:

 



அவசரமாக எழுந்து

அவசரமாக குளித்து

அவசரமாக காலை உணவருந்தி

அவசரமாக ஓடி

அவசரமாக பஸ் ஏறி

அவசரமாக அலுவலகம் போய்

அவசர அவசரமாக வேலை செய்து

அவசரமாக வீடு திரும்பி

அவசரமாக இரவு சாப்பாட்டை முடித்து

அவசரமாய் புணர்ந்து

அவசரமாய் உறங்கி…

மீண்டும் அவசரமாய் …

 

இப்போது

அவசரமாய் விடைபெறத் துடிக்கிறான்/ள்

முதுமையின் அவசரம் அறியாமல்

நோய்மை  சாவகாசமாய் வதைக்கிறது…

 

[ இது யாருடைய தனிப்பட்ட அனுபவமும் அல்ல ; பொது அனுபவம்.]

 

சுபொஅ.

02/09/24.

 


வாழை

Posted by அகத்தீ Labels:

 



மலையாளத்தில் சங்கம்புழா எழுதிய “ வாழக்குலா” காவியம் பெரிதும் வியந்து பாராட்டப்படும் . அறிஞர் அண்ணா எழுதிய “ செவ்வாழை” பெரும் வீச்சில் சென்ற்டைந்த ஓர் சிறுகதை . சோ. தர்மன் தானும் “ வாழையடி” என சிறுகதை எழுதி இருப்பதால் களத்தில் வந்து குதித்திருக்கிறார் .நம் பார்வையில் படாத இன்னும் பல இலக்கிய பதிவுகள் இருக்கக்கூடும் . வாழை விவசாயத்தை சுற்றி இன்னும் நிறைய நிறைய பல கோணங்களில் பேசும் இலக்கியப் படைப்புகள் வரவேண்டும். ஆரோக்கியமான போட்டி நல்லதே !

திரை உலகில் ” வாழை” முத்திரை பதித்துவிட்டது . மாரி செல்வராஜுவின் சொந்த அனுபவமும் ஓர் உண்மைச் செய்தியும் பின்னிப் பிணைந்த ஓர் திரைக்காவியம் வாழை. வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் வலி , கனவு ,ஆசை ,திறமை எல்லாம் நுட்பமாக அனுபவ முத்திரையோடு பதிவாகி இருக்கிறது .

படத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சின்னம் காட்டப்படுகிறது . அதை பச்சை குத்திய பெண் எல்லாம் வந்துள்ளதால் கம்யூனிஸ்டுகள் தூக்கி வைத்துக் கொண்டாடுவதாய் சிலர் விமர்சனம் செய்கிறார்கள் . எனக்கு அந்த மயக்கம் எல்லாம் இல்லை . பட்டுக்கோட்டையின் பாடலொன்றில் செங்கொடி வந்தபோது மாற்றி எழுதச் சொன்ன , ஏவிஎம் தான் செங்கொடியாய் காட்டிய சிவப்பு மல்லி எடுத்தது ; ஏன் ? லாபம் வருமெனில் எதையும் விற்பார்கள் முதலாளிகள் . ஆக வாழையை நான் வரவேற்க சிவப்பைக் காட்டுவது காரணமல்ல.

சிவனணைந்தானும் அவன் நண்பன் இருவரும் படத்தில் உயிர் சரடாய் உள்ளனர் . இருவரையும் சூப்பர் மேனாகக் காட்டாமல் சிறுவர்களின் குறும்பும் , சுட்டித்தனமும் , சண்டையும் நட்புமாய் உலவவிட்டிருப்பதும் பாராட்டுக்குரியது . இருவரும் படத்தில் தங்கள் நடிப்பாற்றலை பிரகாசிக்கச் செய்துள்ளனர் .

அழுகாச்சி காவியமாகிவிட்டது என்பது சிலரின் விமர்சனம் . துன்பவியல் படைப்புகளுக்கு உயிர்துடிப்பு அதிகம் ; ஆயினும் வலிந்து ‘சுபம் மங்களம்’ என முடிக்கும் திரையுலக சூத்திரச் சிமிழை மீறி நிற்பது திரைப்படத்தில் பலவீனமல்ல ;பலம்.

நானும் என் இணையரும் வாழை பார்த்தோம் . இருவருக்கும் பிடித்துவிட்டது .என் இணையர் எப்போது நெட்டில் வரும் மீண்டும் பார்க்கணும் என்கிறார்.

இன்று நகர் புறங்களில் வாழும் குழந்தைகள் அமேசனில் , இன்ஸ்டாமார்ட்டில் ஆர்டர் போட்டா எல்லாம் வந்துரும் என்று நினைக்கிறார்கள் . புழுங்கலரிசி தனிச் செடி என்பார்கள் . ஆனால் நாம் உண்ணும் ஒவ்வொன்றின் பின்னாலும் எவ்வளவு உழைப்பு எவ்வளவு வலி எவ்வளவு வியர்வை எவ்வளவு கண்ணீர் எவ்வளவு கொடுமை எவ்வளவு சுரண்டல் இருக்கிறது என்பதை அறிய மாட்டார்கள் . அவர்களுக்கு பாடம் சொல்ல வேண்டி இருக்கிறது .இன்னும் பல வாழைகள் தழைக்க வேண்டும் .உழைப்பின் வலி சொல்லப்பட வேண்டும் .

வாழைப் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் ! சிறுவர் தொழிலாளியாக நடித்த பொன்வேல் ,ராகுல் இருவரையும் தனித்து பாராட்டுகிறேன். இருவரும் படிப்பிலும் முத்திரை பத்தித்து முன்னேற வாழ்த்துகள் !

சுபொஅ.

பழைய பெருங்காய டப்பா

Posted by அகத்தீ Labels:

 



 அவன் கிடக்கான்

பழைய பெருங்காய டப்பா

ஏன் அப்படிச் சொன்னார்கள் ?

ஒட்டிக் கொண்டிருந்த வாசமும்

காலவெளியில் கரைந்து போனதாலா ?

தாத்தா யானை மேல் வந்த கதையை

சொல்லியே சும்மா இருப்பதாலா ?

எப்படியோ விட்டுத் தொலை !

ஊத்தைச் சடலத்தை உப்பிருந்த பாண்டத்தை

தூக்கி எறியும்  வரை  சொல்லியே மனதை

சோர்ந்துவிடாமல் வைத்திருந்தால் சரிதான் !

 

[ ஒரு முதியவரின் பிலாக்கணத்தை கேட்ட பொழுதில் …]

 

சுபொஅ.

28/8/24.

 

 

 


அறிவியலின் சமூகவியல் பார்வையில் விடைதேடி…

Posted by அகத்தீ Labels:





அறிவியலின் சமூகவியல் பார்வையில் விடைதேடி…

AI தொழில் நுட்ப வருகையால் வேலைவாய்ப்பு பாதிக்குமா ? சமூகத்தில் எம்மாதிரி விளைவுகள் உருவாக்கும் ? மனித வாழ்விலும் உளவியலிலும் பண்பாட்டிலும் எம்மாதிரியான தாக்கங்கள் ஏற்படும் ? இப்படி எழும் கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறோம் . இச்சூழலில் இந்நூல் மிகுந்த கவனிப்புக்கு உரியது .

சோவியத் பதிப்பகமான ‘மீர்’ பதிப்பகத்தால் 1979 ல் வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்பு நூலே “நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள்” . [ வெளியிடப்பட்ட ஆண்டை மனதிற் கொள்ளுங்கள் ] பாரதி புத்தகாலயம் மறுவெளியீடு செய்திருக்கிறது .இந்நூல் பல்வேறு ஆழமான சிந்தனைகளை “அறிவியலின் சமூகவியல்” சார்ந்து விதைக்கிறது .

இறுதியில் விஞ்ஞானம் மனித குலத்திற்கு ஆசிர்வாதமாக அமையுமா ? சாபத்தீட்டாக அமையுமா ? இக்கேள்வி இன்று முன்பைவிட வலுவாக ஓர் புறம் எழுப்பப்படுகிறது ; மறுபுறம் அறிவியல் கண்டுபிடிப்புகளின் வேகம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது .

இக்கேள்விக்கான விடையை சோவியத் அனுபவத்தோடும் , ஜப்பானிய , அமெரிக்க அனுபவத்தோடும் ,அறிவியல் வரலாற்றோடும் பிசைந்து மார்க்சிய வெளிச்சத்தில் விளக்கம் தருகிறது இந்நூல் .

இந்த முக்கியமான நூலை ஒருவர் வாசித்து உள்வாங்க இதன் மொழியாக்கம் முழுத்தடையாக இருக்கிறது . சில இடங்கள் மட்டுமே பட்டென புரியும்படி இருக்கிறது . நான் முழுதாக வாசித்துவிட்டேன் ; முழுதாக உள்வாங்கினேன் எனச் சொல்ல முடியாது .அன்றைய மாஸ்கோ மொழிபெயர்ப்பை இன்றைக்கு சீர் செய்யாமல் வெளியிட்டிருப்பது விரும்பிய பயன் தராது .

இப்படிப்பட்ட குறைபாடுகள் இருப்பினும் இந்நூல் காத்திரமானது என்பதில் ஐயமில்லை . 12 அத்தியாயங்களில் அறிவியல் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் மனித குலம் எழுப்பிய கேள்விகள் ; அதற்கான விடை தேடல் என விரிந்திருக்கிறது . அறிவியலால் மனித குலம் பெற்றுள்ள மகத்தான முன்னேற்றத்தை மிகச்சரியாக இனம் காட்டுகிறது .

“மனிதனது வாழ்க்கையைப் போன்றே மனித குலத்தின் வாழ்க்கையும் தியாகங்கள் இன்றி எண்ணிப் பார்க்க முடியாது .ஆனால் தியாகங்களின் முரண்பாடு என்னவெனில் ,அவற்றைவிடச் சிறந்த ஒன்றிற்காக அவை செய்யப்படுகிறன.லாபம் நஷ்டத்தை ஈடு செய்து விடுகிறது .” இப்படி சமாதானம் அடைய முடியுமா ?

செயற்கை மூளை ,இயந்திர மனிதன் வருகை எல்லோருக்கும் எல்லாவற்றையும் பெற்றுத்தரும் எனும் ஒரு சார்பு சமூகவியலாளர் பகற்கனவு கனவு காணும் போதே ,”தானியங்கி உற்பத்தி முறையானது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதோடு ; பிரச்சனைகளை தோற்றுவிக்கவும் செய்யும்” அல்லவா ?

‘அறிவு மரம்’ எத்தகையது ? எத்தனைக் கிளைகளைக் கொண்டது ? அது மேலும் மேலும் கிளைத்துக் கொண்டே போவதின் தேவை என்ன ? அறிவு என்பது சந்தைச் சரக்கா ? வெறும் தகவல் சேகர குவிப்பா ? சமூக பொறுப்பா ? இப்படி பல்வேறு கேள்விகளுக்கான விடை தேடலுக்கு இந்நூல் ஆதாரமாகும்.

வரலாற்று பொருள் முதல்வாத கண்ணோட்டத்தோடு சமூக மாற்றங்களும் அறிவியல் வளர்ச்சி பின்னிப் பிணைந்திருப்பதை இந்நூலில் மிகச் சரியாக பகுப்பாய்வாக சொல்லப்பட்டிருக்கிறது . உற்பத்திகருவிகளாகட்டும் , அறிவியல் தொழில் நுட்பம் ஆகட்டும் யார் கையில் ? லாபப்பிசாசுகள் கையிலா ? சமூகநலன் சார்ந்தோர் கையிலா ? இதுவே அடிப்படைக் கேள்வி . சமூகமாற்றத்தையும் அறிவியல் முன்னேற்றத்தையும் நம்பிக்கையுடன் பார்க்க இந்நூல் வழிகாட்டுகிறது .

இந்த நூலில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ள ,நன்கு நமக்கு புரியும் ஒரு செய்தியை மட்டும் சுட்ட விளைகிறேன்.

“ விஞ்ஞான ,தொழில்நுணுக்க புரட்சி ,பெருவெள்ளம் போன்ற போன்ற தகவல் ஞானப் பெருக்கால் புதிய பிரச்சனைகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது .பள்ளிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் போதிக்கப்படும் அறிவு சுமார் பத்து ஆண்டுகளில் காலங்கடந்துவிடுகிறது [ ஒரு காலத்தில் அது மானிட ஆயுட் காலம் வரை போதுமானதாக இருந்தது ] என்று விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.காலத்திற்கு பின்தங்கிவிடாமலிருப்பதற்காக ஒவ்வொரு நிபுணரும் விற்பன்னரும் இன்று இடைவிடாது படிப்பதோடு தனது பாடத்தை திரும்பவும் கற்றாக வேண்டி இருக்கிறது ; நாளைக்கு இது எவ்வாறு இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா ?”

மேலே உள்ள பத்தியை நிறைவு செய்யும் போது , “வாழு !படி!” என இரண்டே சொல்லில் தேவையை சொல்லிவிடுகிறது

1979 ல் இந்நூல் வெளிவந்தது . சுமார் 45 ஆண்டுகள் கடந்துவிட்டன . சோவியத் யூனியன் தகர்ந்து விட்டது .இப்போது AI அச்சுறுத்துகிறது . இச்சூழலில் இந்நூலை அப்படியே மொழி பெயர்க்காமல் இதனை அடியொற்றி புதுப்பிக்கப்பட்ட நூலொன்று யாத்துத் தருவோர் தமிழ் சமூகத்துக்கு தொண்டு செய்தவர் ஆவார்.

நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள் , ஆசிரியர் : லி.வி.பாப்ரோவ் ,
வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949,
E mail : bharathiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com
பக்கங்கள் : 280 , விலை : ரூ.300 /

சு.பொ.அகத்தியலிங்கம்.

மூளை வளர எதைச் சாப்பிடலாம்… ????

Posted by அகத்தீ Labels:

 


மூளை வளர எதைச் சாப்பிடலாம்… ????


நேற்று எங்க வீட்டில் மஞ்சள் பூசனிக்காய் என இன்றைக்கு சொல்லப்படும் கல்யாண பூசனிக்காய் கூட்டு .

அதை ருசிச்சு சாப்பிடும் போது ஏதேதோ நினைவுத் திரையில் ஓடியது .

பெங்களூர் வந்த போது எலக்ட்ரானிக் சிட்டி நீலாத்திரி நகரில் என்னோடு தினசரி நடை பயிற்சிக்கு வந்த நண்பர்கள் நினைவுக்கு வந்தனர் .

குசேலர் ,கான் பாய் , பரமேஸ்வரன் மூவரும் விடை பெற்றுவிட்டனர் .நான் பொம்மசந்திராவுக்கு குடிபெயர்ந்துவிட்டேன். பல்வந்த ராவ் உடல் நலிவுற்றுவிட்டார் . சுப்பிரமணியம் ,பானர்ஜி இருவரும் என்னைப் போல் இடம் மாறிவிட்டனர் .நான் இங்கும் துரைசாமி அங்கு அடுக்கக மொட்டைமாடியிலும் நடை பயிற்சி செய்கிறோம் .அலைபேசியில் பேசிக்கொள்கிறோம் .எப்போதாவது சந்திக்கிறோம்..

ஒரு முறை நடை பயிற்சி முடித்து வரும் போது ,மஞ்சள் பூசனிக்காய் வாங்கிக் கொண்டு திரும்பிய மறைந்த அன்பர் பரமேஸ்வரன் சொன்னார் ,

“ பாலக்காட்டு ஐயர்களுக்கு மூளை ஜாஸ்தி .ஏன்னு சொன்னா அவங்க நிறைய மஞ்சப் பூசனிக்காய் சாப்பிடுவாங்க…”

அப்போது அவரோடு நானும் துரைசாமியும் பல்வந்தராவும் வாதிட்டது நினைவுக்கு வந்தது . ஏனைய நண்பர்கள் உடன் சேர்ந்தனர்.

“ எங்க ஊர்ல வெண்டைக்காய் அதிகம் சாப்பிட்டால் மூளைக்கு நல்லதுன்னு சொல்வாங்க ….”

”மயிலாப்பூர் போனால் புடலங்காய் வாங்காத பார்ப்பனரையே பார்க்க முடியாது …. அங்கே புடலங்காய் மூளைக்கு நல்லதுன்னு சொல்வாங்க… ”

“ஞாபக சக்திக்கு வல்லாரை லேகியம் … அஸ்வகந்தா லேகிய எல்லாம் கேள்விப்படிருக்கோம்…”

“எது மூளை பலத்தை கூட்டும் ? மஞ்சள் பூசனியா ? வெண்டைக்காயா ? புடலங்காயா ? வல்லாரையா ? எது?”

“அட ! குண்டூசியில் இருந்து வானொலி , தொலைகாட்சி , ராக்கெட் , கம்யூட்டர் எல்லாமே கண்டு பிடிச்சது மாட்டுக்கறி சாப்பிடுகிறவங்கதான் … ”

“அப்போ மாட்டுக்கறிதான் மூளைக்கு பலமா ?”
“ஒவ்வொருவரும் அவரவர் துறையில் விபரமானவர்களே …”

அந்த விவாதம் அப்படி நீண்டதும் பரமேஸ்வரன் சொன்னார் , “ ஆளுக்கொண்ணு சொல்லலாம் .ஆனால் எல்லாருக்கும் மூளை இருக்கு சார் ! அதை பயன்படுத்துறதிலதான் வித்தியாசம் இருக்கு !”

ஆக ,அவர் உண்மையை மிகவும் நெருங்கிவிட்டார்.

ஆம் .மூளை எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவுதான் . தொடர் பயிற்சிதான் உங்களை கூர்மையாக்கும் . தொட்டனைத்து ஊறும் மணற்கேனியே மூளை.

“சரி ! கிட்னி , உடல் உறுப்பு மாற்று சிகிட்சை போல் மூளை மாற்று சிகிச்சை வருமானால் ….. நம்ம மூளைக்கு அதிகபட்ச விலை கிடைக்கும்” என்றார் பல்வந்த ராவ் .

“ஏன்?” என நாங்கள் கேட்க .

” பயன்படுத்தாமல் ப்ரெஸ்ஸா இருப்பது நம்ம மூளைதானே!” என்றார் .

“ஹா ஹா” என எல்லோரும் சிரித்து விடை பெற்றோம்.

மஞ்சள் பூசனிக்காய் கிளறிய ஞாபங்கள் இவை.

23/8/24.

இன்று சென்னை நாளாம் ...

Posted by அகத்தீ Labels:

 


இன்று சென்னை நாளாம் ...
எனக்கும் சென்னைக்குமான உறவை அசைபோடுகிறேன்.
என் அப்பா ,அம்மா ,அண்ணன் ,பிழைப்பு தேடி குமரிமாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து 1967 கடைசியில் சென்னை வந்துவிட்டனர் .தம்பியை சின்னப் பிள்ளை என்பதால் கூடவே அழைத்து வந்துவிட்டனர் . வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் வலியை சுமந்தபடி ...
நான் மட்டும் அக்கா வீட்டில் இருந்தபடி பத்தாம் வகுப்புபைத் தொடர்ந்தேன் .
1968 கோடை விடுமுறையில் என் அத்தானின் நண்பர் ஐயப்பன் என்பவரோடு சென்னைக்கு பயணப்பட்டேன் .
அப்போது குமரிக்கு ரயில் கிடையாது . பஸ் கூட நேரடியாகக் கிடையாது .ஆகவே நாகர்கோவில் டூ திருச்சி அதன் பின் திருச்சி டூ சென்னை என பஸ் பயணம் தான் .நான் வந்த பஸ் தாழையூத்து ரயில் கிராசிங்கில் நின்றபோது ஒரு ரயில் கடந்து போனது . முதன் முதலாய் ரயிலை நேரில் பார்த்தது அப்போதுதான்.
ஐயப்பன் என்பவர் மாமபலத்தில் அவர் தங்கி இருந்த அறைக்கு அழைத்துப் போய் குளிக்க வைத்து , நாலு பிரட் சாப்பிட வைத்தார் . எனக்கு காய்ச்சல் இல்லையே ஏன் பிரட் சாப்பிடச் சொல்கிறார் என நான் எண்ணிய காலம் அது .
பின் பஸ்ஸில் என்னை அழைத்துக் கொண்டு வந்து கிண்டி கிளாஸ் பேக்டிரியில் பணியாற்றிக் கொண்டிருந்த என் அப்பாவிடம் ஒப்படைத்தார் .
அப்பா அழைத்துக் கொண்டு போய் ஒரு கடையில் டீயும் பட்டர் பிஸ்கடும் வாங்கிக் கொடுத்தார் .பின் பேக்டிரி வாசலில் வாச்மேன் அருகே உட்கார வைத்துவிட்டார் . மதியம் அவர் கொண்டு வந்த புளிசாதத்தை எனக்குக் கொடுத்தார் .அப்போதுதான் அறிமுகமான மாடர்ன் பிரட்டை வாங்கி வந்து அவர் சாப்பிட்டார் .எனக்கும் பாதி கொடுத்தார் . மேனஜரிடம் பெர்மிசன் வாங்கி எனக்கு பேக்டிரியை சுற்றிக் காண்பித்தார் .எனக்கு பெருமையாய் இருந்தது .
ஆக ,முதன் முதல் ரயிலைப் பார்த்தேன் .பேக்டிரி பார்த்தேன் .மகிழ்ச்சி . மாலை வீடு திரும்புகையில் மின்சார ரயிலில் கிண்டி முதல் குரோம் பேட்டை வரை அப்பா அழைத்துப் போனார் .என் முதல் ரயில் பயணம். மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும் .
குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் ஒரு குடிசைவீட்டில் வாழ்ந்ததே முதல் சென்னை அனுபவம் . குரோம்பேட்டை நேரு போர்ட் ஹைஸ்கூலில் 11 வது வகுப்பு படித்தேன் .கல்வி அதிகாரி அய்யன்பெருமாள் பிள்ளை எங்கள் ஊர்க்காரர். அவர்தான் அப்பள்ளியில் நான் சேர உதவினார் .
நான் முதன் முதல் பயணித்த மின்சார ரயில் மீட்டர் கேஜ் . அதனை ப்ராடுகேஜ் அகலரயில் ஆக்க வேண்டும் என கோரிக்கை முழக்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வாலிபர் சங்கமும் ,மாதர் சங்கமும் இணைந்து ஒவ்வொரு ரயில் நிலையமாக ஆர்ப்பாட்டம் நடத்தியதும் ;கையெழுத்து இயக்கம் நடத்தியதும் ; எங்கள் கோரிக்கை வென்றதும் பின்னர் என் அனுபவம் ஆனது .
எனக்கு சுசீந்திரத்திலேயே பெரியார் மீது ஈர்ப்பு ஏற்பட்டாலும் , சென்னையில் 11 வது படிக்கும் போதே திமுக அரசியல் என்னை இழுத்தது . குரோம்பேட்டை ராதா நகரில் இருந்த அண்ணா நற்பணி மன்றம் என் மாலைநேர பொழுதுபோக்கானது .எல்லா பத்திரிகைகளையும் அங்குதான் படிப்பேன். அண்ணா இறந்த போது பள்ளி ஆண்டுவிழா மலரில் அண்ணா குறித்து நான் எழுதிய கட்டுரையே அச்சில் பார்த்த என் முதல் எழுத்து .
பின்னர் மெல்ல மெல்ல இடதுசாரி அரசியல் என்னை ஆட்கொண்டது .கம்யூனிஸ்ட் ஆனேன்.பழவந்தங்கலும் சைதாப்பேட்டையும் என் ஆரம்ப்கால அரசியல் களங்கள் .
நான் அன்று பார்த்த சென்னை இன்றில்லை . சென்னை எவ்வளவோ மாறிவிட்டது .
என்னை பெரிதும் செதுக்கியது சென்னையே !
சுபொஅ.
22/8/24