குடும்பத்தில் வேண்டாமா கூட்டாட்சி?

Posted by அகத்தீ Labels:





குடும்பத்தில் வேண்டாமா கூட்டாட்சி?

சு.பொ. அகத்தியலிங்கம்

[திருமணம் குறித்து ஆறுகட்டுரைகளுக்குத் திட்டமிட்டு எழுதிவருகிறேன்.இது ஐந்தாவது கட்டுரை.12-08-2012 , 30-09-2012 , 14-10--2012, மற்றும் 4-11-2012தேதிகளில் முந்தைய கட்டுரைகளின் பதிவைக் காண்க.]

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் குடும்ப ஜனநாயகம் பற்றி முதல்முறையாக ஒரு இலக்கிய ஏட்டில் எழுதினேன். அப்போது ஒரு தோழர்  சொன்னார், " இப்பவே எல்லார் வீட்டிலும் குடும்ப ஜனநாயகம் இருக்கே!" உடன் இடைமறித்து, "  எப்படி?" என நான் விளக்கம் கேட்டேன்.  "பெரும்பான்மையினர் முடிவுக்கு சிறுபான்மையோர்கட்டுப்படுவதுதானே ஜனாயகம்?  புகுந்த வீட்டில் கணவர், மாமனார்,மாமியார்,நாத்தனார் என பெரும்பான் மையோர் எடுக்கும் முடிவுக்குவீட்டிற்கு வந்த மருமகள் கட்டுப்படுகிறாள்." அவர் இதை வேடிக்கையாகச்சொன்னார். ஆயினும் இது எழுதப்படாத விதியாக நடைமுறையில் இருந்துகொண்டுதான்இருக்கிறது! ஜனநாயகம் என்பது பெரும்பான்மை - சிறுபான்மை என வெறும்எண்ணிக்கை சார்ந்தது மட்டுமல்ல.  மற்றவர்கள் உணர்வுக்குமதிப்பளிப்பதுமாகும். இந்தப் புரிதல் இன்றி இங்கு இது பற்றி பேசுதல்இயலாது.

ஆம், புகுந்த வீடு என்பது பெண்ணுக்கு முற்றிலும் புதிய சூழல்,
அந்தக் குடும்பம் மொத்தமாய் ஒரு விஷயத்தைச் சொல்லும் போது அது தவறு எனதன் மனசாட்சிக்குத் தெரிந்தாலோ - அல்லது தனக்கு அதில் விருப்பம் இல்லைஎன்றாலோ - பெண்ணால் தன்னந்தனியாய் அதனை சொல்ல முடியுமா? சொன்னால் ஏற்கும்மனோநிலை உள்ளதா?

என்றைக்கு ஒரு பெண் தன் உணர்வுகளை அச்சமின்றி தனது புகுந்த வீட்டில்
வெளிப்படுத்த முடிகிறதோ  - மற்றவர்கள் அதை ஏற்கலாம் , எதிர்க்கலாம்,
எனினும் அவர்கள் அவள் அபிப்பிராயத்துக்கு செவிகொடுக்கிறார்களோ - அப்போதுஅந்தக் குடும்பத்தில் ஜனநாயகச் சூழல் இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில்பதிவு செய்யலாம்.

ஒரு பெண் கருவாடு இல்லாமல் ஒருநாள்கூட சாப்பிடமாட்டாள். அப்படி
பழகிவிட்டாள். வீட்டில் பெரும்பாலும் நைட்டியோடும், வெளியே போகும்போது ஜீன்ஸ்-சர்ட் எனச் சுதந்திரமாகத் திரிந்தவள் அவள். ஆனால் புகுந்த வீட்டில் அதற்குத் தடை. அவள் அந்த புதியச் சூழலில் எவ்வளவு மனம்
நொந்திருப்பாள். யோசித்துப் பாருங்கள்.

ஒரு பெண்ணின் உணவுப் பழக்கம், உடை விருப்பம், நம்பிக்கைகள், கலாச்சார
ஆர்வ ஈடுபாடுகள், என அனைத்திலும் கணவன் வீட்டாருக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவேண்டுமா? இன்றைக்கு அப்படித்தான் எதிர்பார்க்கப் படுகிறது. அதாவது பெண்ணின் சுயம் அழிந்து ஆணில் கரைவது குடும்பப் பாங்கான பெண் என்ற புனிதக்கோட்பாடு ஒன்று இங்கு எல்லோரையும் ஆட்டுவிக்கிறது. இதனைஉடைத்தெறியாமல் குடும்பஜனநாயகம் துளிர்க்காது.

இதைப் பற்றிப்பேசிக்கொண்டிருக்கையில் நண்பர் ஒருவர் கேட்டார்,  "அப்படியானால் எண்ணையும்தண்ணீரும் போல் ஒட்டாமல் தனித்தனியாக இருப்பதுதான் வாழ்க்கையா? அதுதான்குடும்ப ஜனநாயகமா?"

  இல்லை. இல்லை. இப்படித் தப்புத் தப்பாகப் புரிந்து கொள்ளக்கூடாது. கணவனோமனைவியோ யாரும் யார் மீதும் எதையும் திணிக்கக் கூடாது. மாறாக தொடர்உரையாடல் மூலமும் (எல்லையற்ற விதண்டாவாதம் அல்ல) அனுபவம் மூலமும்;காலகதியில் புரிந்து கொள்ளவும் விட்டுக்கொடுக்கவும் இருவரும் இயல்பாகதயாராக வேண்டும். அப்போதும் இருவரின் தனித்துவமும் சுயமும் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

மணம்முடிந்த பின்  மனைவி கணவனின் வீட்டிற்குச் சென்றுவிடுவது
இயல்பானதாகவும் இருக்க, அதற்கு மாறாக கணவன் மனைவியின் வீட்டில் தங்கிவிட்டால் ; வீட்டோடு மருமகன் என்றிருப்பது இழிவானதாக சமூக பொதுபுத்தியில்உறைந்து போயிருக்கிறது. இது இங்கு சமத்துவமும் ஜனாயகமும் இல்லை என்பதன்கூறுதானே !

மணமக்கள் தனிக் குடித்தனம் தொடங்குவதா? கூட்டுக் குடித்தனமா?
இதை மணமக்களே முடிவு செய்திடவேண்டும். கூட்டுக் குடித்தனம் எனிலும் அதுஅவன் வீட்டோடா அல்லது அவள் வீட்டோடா என்பதை அவரவர் தேவைக்கும்சூழ்நிலைக்கும் ஏற்ப முடிவு செய்கிற உரிமையும் வாய்ப்பும் இயல்பானஏற்பும் சமுதாயத்தில் நிலவ வேண்டும். இப்போது அந்த நிலைமை இல்லையே!

பிறந்த வீடு சரி, புகுந்த வீடு என்பது சரியா? வலுக்கட்டாயமாக அவள்புகுந்தாளா இல்லையே விரும்பி இணைக்கப் பட்டவளல்லவா?அந்த வீட்டில் இனி அவளும் ஒரு அங்கமல்லவா? இது வெறும் வார்த்தைப் பிரச்சனையல்ல, வாழ்க்கைப்புரிதல் சார்ந்தது. ஆகவே பொருத்தமான வார்த்தையைக் காணவேண்டும்.. அதைபிறகு தேடுவோம்.

பிரச்சனை இல்லா வாழ்க்கை யாருக்கு வாய்த்திருக்கிறது?
மகாத்மா வீட்டிலும் உண்டு. எல்லோர் வீட்டிலும் உண்டு. காந்தி
வாழ்க்கையில் கஸ்தூரி பாயின் பங்கும் பிரச்சனைகளும் பற்றிக் காண்கிற
புத்தகம் ஒன்று இப்போது வெளிவந்துள்ளது. காந்தியின் ஆசிரமத்தில்
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் சமைத்த உணவை கஸ்தூரி பாய்
சாப்பிட மறுத்து தனியாக சமையல் செய்தபோது ஆசிரமத்துக்கு வெளியே போ எனகஸ்தூரி பாயை காந்தி வெளி யேற்றினார். அது சரியா?

தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் கட்சி நிகழ்ச்சி ஒன்றுக்குப் போகையில்
மனைவி ஆர்யா அந்தர்ஜனம் அழைத்துக் கொண்டு சென்றிருந்தார். ஆர்யா அந்தர்ஜனம் அங்குள்ளகோயிலுக்குச் செல்ல விரும்பினார். அவரை கோயிலுக்கு அனுப்பிவிட்டு இவர்கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது சரியா?

காந்தி விவகாரத்தைப் பொறுத்தவரை அது வெறும் குடும்பம் சம்பந்தப்பட்டபிரச்சனை அல்ல. அவரின் ஆசிரமம் ஒரு நிறுவனம். ஒர் உயரிய பண்பாட்டை அந்தநிறுவனம் அமலாக்கும் போது எந்த உறுப்பினருக்கும் விதிவிலக்கு கொடுக்கமுடியாது. அதே சமயம் ஆசிரமத்துக்கு வெளியே கஸ்தூரி பாய் தனிக்குடித்தனம்செய்ய அனுமதித்திருக்கவேண்டும். மனைவியை பயிற்றுவித்து வென்றெடுக்கமுயன்றிருக்க வேண்டும். ஒருவேளை அதில் காந்தி தோற்றுப்போயிருந்தாலும்அதுவும் ஒரு பாடமாயிருக்கும்.


இ.எம்.எஸ். தமது மனைவியின் நம்பிக்கைச் சுதந்திரத்தை அங்கீகரித்தது
சரியே. மனைவியின் சுயம் பாதுகாக்கப்பட்டது. பெண்ணுரிமையில் அது
மிகமுக்கியமன்றோ! இதுபோல் இப்போது நம்வாழ்வில் பல நடக்கிறது . கணவனின்அல்லது மனைவியின் பொதுவாழ்வில் கொண்ட லட்சியத்திற்கு தம்செயல் சற்று ஊறு ஏற்படுத்துகிறது என்பதை மனைவியோ கணவனோ யோசிக்கத் தொடங்கினால் இதற்குத்தீர்வு உண்டு. ஆனால் அது இயல்பாக நிகழவேண்டும். திணிப்பாகஇருக்கக்கூடாது. சீர்திருத்தக் கருத்துகளை வீட்டில் நடைமுறைக்குக்கொண்டுவருவது மன உளைச்சல் தரும் பெரும் போராட்டம். வேறு குறுக்கு வழிஇருப்பதாகத் தெரியவில்லை.


நாகரீகமாக உடை அணிந்தவர்கள் சிந்தனையும் நாகரீகமாகவே இருக்கும் என்றுகருத முடியவில்லை. பல பெண்கள் தங்களின் வெளித்தோற்றத்துக்குச்
சம்பந்தமில்லாமல் பயந்து நடுங்கி அடங்கி ஒடுங்கி வாழ்வதை நடைமுறையில்காண்கிறோம். அதே சமயம் தழையத்தழைய கட்டிய புடவை, தலைமுடியை படிய வாரிப்பின்னிய சடை, காலணா சைஸ் குங்குமப் பொட்டு, தொங்கதொங்கத் தாலி என வலம்வரும் பெண்கள் சிலர் வீட்டுக்குள் போராளிஅவதாரம் எடுப்பதையும் அனுபவம்காட்டுகிறது. இதே அளவுகோல்கள் ஆண்களுக்கும் பொருந்தும்.வெளித்தோற்றத்தைக் கொண்டு எந்த முடிவுக்கும் வரமுடியாது. குடும்பத்தில்ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால் - நல்லிணக்கம் நிலவ வேண்டுமானால் அவரவர்
மனதை விசாலப்படுத்திடப் பழக வேண்டும்.


அந்தப் பெண் அழகாக இருக்கிறாள் என்று ஒரு பெண்ணைச் சுட்டி கணவனும்
அந்தப் பையன் வெரி ஸ்மார்ட் என் ஒரு பையனைச் சுட்டி மனைவியும் சொல்ல முடியுமானால் அந்த தம்பதியினரின் புரிதல் நெருக்கம் சிறப்பாக இருக்கிறது என்று பொருள். சந்தேக நெருப்பின் பொறி விழுந்தாலே குடும்ப அமைதி கருகத் தொடங்கிவிடும். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நம்பிக்கையை ஆழமாக வேரூன்றுவதும், அதற்கொப்ப பரஸ்வரம் நடந்து கொள்வதும் மிகமிக அவசியம்.கணவனும் மனைவியும் மனம் திறந்து பேசுகிற பழக்கம் உறுதிப்பட்டால்நம்பிக்கை வலுப்படும்.

வதந்திகளை நம்பாமல் இருப்பதும்,புறம்சொல்கிறவர்களுக்கு காதுகொடுக்காமல் இருப்பதும் மிக அவசியம்.
தாம்பத்தியத்தில் திருப்தி இல்லற வாழ்க்கையின் ஆதாரம். அதை சிறப்பாகப்
பேணுவது மிகமிக அவசியம். இங்கேதான் பிரைவசி என்று ஆங்கிலத்தில்
சொல்லப்படுகிற அந்தரங்கம் - தனிமை உரிமைச் சூழல் - இருவருக்கும் கட்டாயம் தேவை. தனியான படுக்கை அறையே இல்லாத நம் சமூகச் சூழலில் குடும்ப ஜனநாயத்தைப் பற்றி அதிகம் பேசுவதே கூட சற்று அதீதமாகிவிடுகிறதே!

ஒருமுறைஓய்வு பெற்ற நீதிபதியும் இராமாயண ஆர்வலருமான இஸ்மாயில் ஒருபிரசங்கத்தின்போது, என் குடும்பத்தில் எனக்கும் என் மனைவிக்கும் சண்டையேவருவதில்லை என்றுகூறி நிறுத்தினார். அது எப்படி என மேடையில் இருந்த ஒருஇலக்கியவாதி கேட்டார். அதற்கு நீதிபதி இஸ்மாயில் சொன்னார்: எனக்கும் என்மனைவிக்கும் சரியான வேலைப்பிரிவினை உண்டு. அதனை ஒழுங்காகப்பின்பற்றுவதுதான் நல்லிணக்கத்தின் ரகசியம். அந்த வேலைப் பிரிவினையின்படிஇலங்கைத்தமிழர் பிரச்சனை, பாலஸ்தீனப்பிரச்சனை போன்றவற்றை நான் கவனித்துக்கொள்வேன், வீடு வாங்குவது, பிள்ளைகளை எங்கே படிக்கவைப்பது என மற்ற எல்லா
இலாக்காக்களையும் என் மனைவி கவனித்துக் கொள்வாள்! -அவர் இதை ஜோக்காகச்சொல்லிவிட்டு பின்னர் பரஸ்பர புரிதல் குறித்து தெளிவாகப் பேசினார்.


எனது நண்பர் ஒருவரும் அவர் மனைவியும் வங்கியில் பணியாற்றுகிறவர்கள்.தினசரி வரவு செலவை எழுதிவைப்பார்கள்.வாரம் ஒரு முறை நேர் செய்வார்கள்.மாதக்கடைசியில் தொகுத்து எழுதுவார்கள். பத்து காசு குறைந்தாலும்மெனக்கெட்டு மறுபடியும் கணக்கைச் சரிபார்ப்பார்கள். இப்போது கேட்டாலும்கடந்த 31 ஆண்டுகளுக்கு உரிய வரவு செலவுக் கணக்குகளைக் காட்டமுடியும்அவர்களால். கணக்கு எழுதத் தொடங்கிய போது ஏன் இந்தச் செலவு  இதைதவிர்த்திருக்கலாம் என்பதுபோன்ற எந்த கேள்வியும் பரஸ்பரம் மூன்றாண்டுகளுக்குக் கேட்டதில்லை. அதைப்பற்றி பின்னர் பரிசீலித்துக் கொள்ளலாம் என முடிவு எடுத்தார்களாம். அதன்படி செயல்பட்டதால் கிடைத்த அனுபவம் அவர்களுக்கு பலவற்றைக் கற்றுக் கொடுத்தது. அவர்கள் குடும்ப பட்ஜெட் இன்றும் மிக வலுவாக உள்ளது.

இதை அப்படியே எல்லோரும் காப்பியடிப்பது மிகச்சிரமமே. ஆயினும் வரவு செலவு இருவருக்கும் இடையில் ஒளிவுமறைவற்றதாக இருப்பது அவசியமல்லவா? குடும்ப பட்ஜெட்டை இருவரும்சேர்ந்து திட்டமிட்டு உருவாக்கினால்  அது பற்றாக்குறை பட்ஜெட்டாகஇருப்பினும் உரசலைத் தவிர்க்கலாம். மீள வழிதேடலாம். ஒரு மூளை மட்டும்எடுக்கும் முடிவைவிட இரண்டு மூளைகள் சேர்ந்து எடுக்கும் முடிவு நிச்சயம்மேலானதாகவே அமையும். பிள்ளைகள் ஒரளவு வளர்ந்த பின் அவர்களுக்கும் குடும்பநிதி நிலமை தெரிந்திருக்க வேண்டும். உபதேசத்திற்கு இது மிக எளிது.அமலாக்கபெரும் முயற்சி தேவைப்படும்.

குடும்ப நிர்வாகம், முடிவெடுத்தல், பண வரவு- செலவு என அனைத்திலும்
இருவரும் ஒளிவு மறைவின்றி கலந்து பேசி செயல்பட்டால் அந்த இல்லத்தில்
அமைதி தழைக்கும். வீட்டு வேலைகளை, குழந்தை பராமரிப்பை இருவரும் பங்கிட்டுஒருவருக்கொருவர் தோள்கொடுத்து இயங்கினால் அந்தக் குடும்பத்தை மாதிரிக்குடும்பம் எனலாம்.ஆண்களுக்கான சமையல் குறிப்புகள் என்ற புத்தகம் எழுதியதோடு நிற்பவரல்லதோழர் ச. தமிழ்ச் செல்வன். வீட்டில் அவரே நன்கு சமைக்கவும் செய்வார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாட்டில் ஆண்கள்வீட்டில் சமைப்பது குறித்து தீர்மானமும் நிறைவேற்றி, அதை அமலாக்கிட சிலமுயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. சரிபாதி என மனை வியையும் கணவனையும்
சொல்வது வெறும் சொற்றொடராகி விடக்கூடாது. இன்பம், துன்பம், சுமை, வேலை எனஅனைத்திலும் சமபங்காளி ஆவது அவசியமல்லவா?

வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்கப்படுவதுண்டு. உங்கள் வீடு சிதம்பரமா?
மதுரையா? அதாவது ஐயா ஆட்சியா? அம்மா ஆட்சியா ? இக்கேள்வியே ஆணாதிக்கம்சார்ந்ததுதான். எங்கள் வீட்டில் கூட்டாட்சிதான் என்று கூறும் நிலைஇப்போது எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது? அதை நோக்கி நகர வேண்டாமா?

ஊடல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்கூடி முயங்கப் பெறின், -என்றார் வள்ளுவரும். ஊடல் இல்லா வாழ்க்கைஇனிக்காது. ஊடல் மோதலாகாமல் இருக்க காயப்படுத்தும் சொற்களை இரு சாராரும்பயன்படுத்தாதிருக்க வேண்டும். ஆனால் அது சுலபமல்ல ஒவ்வொருவருக்கும்ஒவ்வொரு விதமான பின்னணியும் பயிற்சிச் சூழலும் இருக்கும். வார்த்தைகளைவிட
வாழ்க்கை முக்கியம் என்கிற புரிதல் இருபக்கமும் இருப்பின் சிக்கல் இல்லை.
நெருப்பில் நெய்யூற்ற உறவுகள் தயாராய் இருக்கிறார்களே என்ன செய்வது?
குடும்ப அமைதி என்பது கணவன் மனைவி சார்ந்தது எனினும் அதில் இதர குடும்பஉறுப்பினர்கள் பங்கும் முக்கியமல்லவா? அது குறித்துப் பேசாமல் குடும்ப ஜனநாயகம் முழுமையாகாது அல்லவா? அது குறித்தும் பேசுவோம்.

நூற்றுக்கு தொண்ணுறு ஆண்களிடம் ஆணாதிக்கச் சிந்தனையும் வறட்டுக்கவுரவமும்இருக்கிறது. அதன் அளவு ஆளுக்கு ஆள் மாறுபடலாம். அதே போல் நூற்றுக்குதொண்ணுறு பெண்கள் சடங்கு சம்பிரதாயம் இவற்றைக் கெட்டியாக பற்றிநிற்கின்றனர். இதிலும் ஆளுக்கு ஆள் அளவு மாறுபடலாம். அவ்வளவே. இதன்காரணமாக ஏற்படுகிற உரசல்களை எதிர் கொள்வது பற்றியும் பேசியாக வேண்டும்.குடும்ப ஜனநாயகத்தை சிதைப்பதில் இதற்கும் ஒரு பங்கு இருக்கிறதே...

நகை சேமிப்பா? சுமையா? எது தேவை? எது ஆடம்பரம்? தானுண்டு தன்குடும்பம் உண்டு என எந்த வம்பு தும்புக்கும் போகாது வாழ்வது நல்லதா ? ஊர், சமூகம்என பொதுவாழ்வில் ஈடுபடல் அவசியமா? இது போன்ற கேள்விகளுக்கும் விடைதேடாமல் குடும்ப ஜனநாயகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.கடலின் கொந்தளிப்பு படகிலும் எதிரொலிக்கும். சமூகத்தின் கொந்தளிப்புகளும் அலைவீச்சுகளும் தனிமனித வாழ்விலும் குடும்பத்திலும் தாக்கத்தைஏற்படுத்தத்தானே செய்யும். அது குறித்தும் பேசுவோம்.

மானுட யாத்திரை : ஓர் நம்பிக்கைப் பிரகடனம்.

Posted by அகத்தீ Labels:








மானுட யாத்திரை :  


ஓர் நம்பிக்கைப் பிரகடனம்.

சு.பொ.அகத்தியலிங்கம்.

முற்றிலும் புதிய முயற்சி. முற்றிலும் எளிய பயணம். மானுடத்தின் மீது அசைக்க முடியா நம்பிக்கை. அறிவியலை பற்றி நிற்கும் நேர்மை. கவிஞர் குலோத்துங்கனின் காவிய ஆக்கத்தின் ஊடும் பாவுமாய் இருப்பது இதுதான். “மானுட யாத்திரைஎன்ற தலைப்பே பொருளைத் தாங்கி நிற்கிறது

முதல் பாகம், சமுதாயம் அரசியல் குறித்து 28 அத்தியாயங்கள் 369 பாடல்கள். இரண்டாம் பாகம், அறிவியல் குறித்து 37 அத்தியாயங்கள் 609 பாடல்கள். மூன்றாம் பாகம், ஆன்மீகம், சமயம் குறித்து 35 அத்தியாயங்கள் 1145 பாடல்கள். மொத்தம் மூன்று பாகங்கள் 478 + 128 பக்கங்கள்,  100 அத்தியாயங்கள் 2123 பாடல்கள் 8492 வரிகள். முன்னுரை , அணிந்துரை, என்னுரை என 7 அறிமுக விளக்கங்கள்

செய்யுள்ளா?  கவிதையா? நெடுங்கவிதையா?  எப்படிக் குறிப்பிடுவது என்கிற ஐயம் எனக்குள் எழுந்தது. காப்பியம் என்றும், பாடல்கள் என்றும் ஆசிரியரே குறிப்பிட்டபின் அதனையே சொல்வதுதான் நியாயம். இக்காவியத்தை வரவேற்க பலநியாயங்கள் உண்டு. எனினும் இங்கு மூன்று கோணங்களில் இதனை பார்த்தல் நன்று

முதலாவதாக, காதலை, இயற்கையை ,கடவுளைப் பாடக் காவியங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அறிவியலை, அதன் வரலாற்றை எத்தனை பாடல்களில் பாடி உள்ளோம்? எனவே அறிவியலைப் பாடுவதால் இந்நூலை வரவேற்போம்.  

இரண்டாவதாக, எந்த தனிமனிதரையும் கதாநாயகனையும் கதாநாயகியையும் முன்னிலைப் படுத்தாமல் சமுதாயம், அரசியல், அறிவியல், ஆன்மீகம், சமயம் என மானுடம் இதுகாறும் நடத்திய பயணத்தை கருப்பொருளாய்க் கொண்டு காவியம் பாடத் துணிந்தமைக்கு கட்டாயம் பாராட்டியாக வேண்டும். யாமறிந்தவரை தமிழில் இது முதல் முயற்சி என்றே கருதுகிறேன்

மூன்றாவதாக, எந்தச் சூழலிலும் மானுடத்தின் மீதும்,  அதன் எதிர் காலத்தின் மீதும், அறிவியலின் மீதும், நம்பிக்கையை இழக்காமல் மேலும் மேலும் வலுப்படுத்துவதாகவே இந்த ஆக்கம் உள்ளதால் வரவேற்றாக வேண்டும்.
முதல் பாகத்தில், “கலப்பையை அன்றோர் மேதை / கண்டனன்: மானிடத் திற் [கு ] / அளப்பரும் சேவை செய்தான் / அவன் கொடைப் பெருமை பாடக் / காவியம் தேவை : மற்றோர் கம்பனே தேவை : மண்ணில்என்று ஆசிரியர் பாடும் போது ; நாம் பாட மறந்த பொருள்கள் விரிகிறது. “ போதுமென் றெண்ணும் நெஞ்சம் / பொன்செயக் கூடும் : ஆனால் / போதுமென் றெண்ணும் நெஞ்சம் / புதியன செய்வ தில்லை.”என்கிறார். 
 
சமுதாயம் முன்னேற கடந்த படிகளை, அரசியல் முறைகளை, சந்தித்த வலிகளைப் பருந்துப் பார்வையாகக்கூட அல்ல பாய்ச்சல் பார்வையாகச் சொல்லிச் செல்கிறார். கருவிகளின் வளர்ச்சியோடு சந்தைகளின் நெருக்கடியையும் போர்களையும் சொல்லிச் செல்கிறார். தனக்கு எந்த அரசியல் முத்திரையும் வந்துவிடக்கூடாதென  மிகுந்த எச்சரிக்கையோடு பாடல்களை யாத்துள்ளார். சொற்களைத் தெரிவு செய்து கோர்த்துள்ளார்.

 சமத்துவம் மனித நேயத் / தத்துவம் பேசு கின்ற / அமைப்பினர் சிலபேர் மட்டும் / அமைதியின் பக்கம் நின்றார் ”. இதனை பதிவு செய்கிற குலோத்துங்கனுக்கு சோவியத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் தெரியாமல் இருக்காது. ஆயினும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுள்ளது தற்செயலானதா ? . ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றை 1476 வரிகளில் சுமார் ஆறாயிரம் வார்த்தைகளில் சொல்வது இயலாத ஒன்று. ஆகவேதான் பாய்ச்சல் பார்வை என குறிப்பிட்டேன். அரசியல் என்பதால் விமர்சனப் போருக்கு அதிகம் வாய்ப்புள்ள பகுதி இது.

இரண்டாம் பாகத்தில், “ தேவர்கள் கண்ட தில்லாத் / தெய்வங்கள் படைத்த தில்லா / மாவரும் திறமை ஒன்று / மானுடர்க் குண்டாம் : அஃது / கருவிகள் படைக்கும் ஆற்றல்என பழுதற உரைதுள்ளார். இந்நூலே அதன் விரிவு எனலாம்.  கதிரவன் கடவுள் அல்லன் / ககனமும் கோயில் அன்று / மதிநலம் வளருங் காலை / மர்மங்கள் மறையும் : நீங்கும்எனக் கூறுகிற ஆசிரியர் ஏராளமான அறிவியல் தகவல்களை,  அதன் வளர்ச்சி, வரலாற்றுச் செய்திகளைக் கதம்பமாகக் கோர்த்துள்ளார்

அறிவியல் துறைகள் ஒன்றில் / அனைத்துமே ஒருவர் கண்ட / சரிதைஒன் றிலை:அ டுக்குத் /தளமெனும் கட்ட டத்தைப் / படிப்படி யாகக் கட்டும் / பாங்குபோல் முந்தை ஆய்வை / அடிப்படை யாகக் கொள்வார் / அதனினும் மேலே செல்லும்” எனபதை நன்கு விளங்க வைத்துள்ளார்.இது போற்றத்தக்க முயற்சி

நாம் இன்று அனுபவிக்கும் வாழ்க்கையின் சகல கூறுகளுக்கும் அடித்தளமான அந்த அறிவியல் முன்னேற்றங்களுக்காக இரத்தம் சிந்தியோர், உயிரிழந்தோர், இவர்களை எத்தனை பேர் எண்ணிப்பார்க்கிறோம். அறிவியல் முன்னேற்றத்தை எத்தனை பேர் பாடி இருக்கிறோம்? ஆகவேதான் இந்த பாகம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. இதன் பொருட்டு இதனைக் காவியம் எனச் சொல்வதில் எனக்கு பெருமகிழ்ச்சியே. “ சிறுத்த மனது அல்லால் பிரிக்கும் சுவர் வேறில்லை” என மானிடரைச் சரியாக இனங்கண்டு ; தோல்விகளும் வீழ்ச்சிகளும் உண்டெனிலும் “ வையம் மேற்செலும் : மேலும் செல்லும்” என உறுதியாகப் பிரகடனம் செய்கிறார்.

மூன்றாம் பாகத்தில், “...:மனித சாதிக் [கு ] / அச்சம்போல் பகைஒன் றில்லை./பயங்கரம் சூழ்ந்த நெஞ்சில் / பகுத்தறி[வு] ஆள்வ தில்லை.” எனவும், “பாரதம் திரள வேண்டும்: / பகுத்தறி வாளர் சேனைப் / போர்அனல் பரவ வேண்டும்: / பூகம்பப் புரட்சி வேண்டும்” எனவும் கூறுகிற வரிகளில் இந்த பாகத்தை அவர் யாத்த நோக்கம் புலப்படுகிறது. இந்து சமயத்தின் பல்வேறு கூறுகள், சமணம், பெளத்தம், கிறுத்துவம், இஸ்லாம், யூதம் என பல்வேறு மதங்களின் சாரத்தை சுருக்கமாக – ஒரு அறிமுகமாகப் பாடியுள்ளார். அதே சமயம் தத்தவ விமர்சனம், தத்துவப்போர் இவற்றுக்குள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருந்துள்ளார். கட்டாயம் சில கருத்துகளைக் கூறியாக வேண்டும் என்கிற சந்தர்ப்பத்தில் கூட அதனை எதிர்த்து வந்துள்ள கருத்து என்கிற விதத்தில் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் சமயக் கருத்துகளுக்கு ஒரு ஈர்ப்பை உருவாக்கி அந்தப் பக்கம் மக்களைத் தள்ளிவிடக்கூடாது என்பதிலும் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டிருக்கிறார்.

பகவத் கீதை குறித்த அத்தியாயத்தில் ஆசிரியர் கூறுகிறார், “வருணங்கள் நான்கும் மண்ணில் / வகுத்தவன் இறைவன்: அஃது / கருமத்தால் அமைத்தான் அல்லன் / கருவினில் அமைத்தான் என்பன் / மண்மிசை பெண்கள் மற்றும் வணிகர் சூத் திரர்கள், பாவப் /பெண்கருப் பையில் வந்த பிறப் [பு] எனத் தாழ்த்தும் என்பர்” என்கிற வரிகளில் அழுத்தமான விமர்சனத்தை தன் கருத்தாக அல்ல இன்னொருவர் கருத்தாகவே பதிவு செய்கிறார்.இந்த எட்டுவரிகளைத் தொடர்ந்து, “பார்த்திபன் ஆன்மா: கண்ணன் / பரமாத்மா: தீய வென்னத் / தூர்த்திடத் தகு குணங்கள் / துரியோத னாதி என்பர் ” என  காந்தியப் பார்வையைச் சொல்லி சமன் செய்கிறார் ஆசிரியர்.இந்த நாலுவரிகளை சற்று முன்நகர்த்தி வர்ண்ஸ்ரம விமர்சன வரிகளை இறுதியாக்கி இருந்தால் கூர்மையாக இருந்திருக்கும். ஆனால் சார்பு வெளிப்பட்டுவிடும். எனவே நுட்பமாகவே காந்தியப் பார்வையை இறுதியாகத் தந்து நடுநிலை காட்ட முயன்றிருக்கிறார்.ஆயினும் நூலின் கடைசிப் பகுதியில் மனிதனை முதன்மைப்படுத்துவதும், பக்த்தறிவுப் பார்வையை வலியுறுத்துவதும் நிறைவைத் தருகிறது.

மார்க்சிய தத்துவம் அனைத்துக்கும் பதில் சொல்லும் வல்லமை மிக்கது. ஆனால் இப்பகுதியில் அது இடம் பெறாததும், அரசியல் பகுதியில் வரலாற்றுத் தகவலாக சுட்டிக்காட்டியுள்ளதும் ஆசிரியர் மிகக் கவனமாகவே செய்துள்ளார் என்று யோசிக்க வைக்கிறது.தத்துவம் என்கிற விரிகடலை சுருக்கித் தொகுக்கையில் விடுபடலும் தாவிச் செல்லலும் தவிர்க்க இயலாது. அதே சமயம் இது தத்துவ விமர்சன நூல் அல்ல - மானுட யாத்திரையில் தத்துவத்தின் பயணத்தை கோடிட்டுக் காட்டல் அவ்வளவே. 

“வையம் எனும் அமைப்பிற்கு முகவரியும் [ஐடிண்டிடி] அவன்தான்: வையத்தின் வரலாற்றிற்கு ஆசிரியனும் அவன்தான். அவனுடைய யாத்திரையாக வரலாறு தொடங்குகிறது. அவனுடைய யாத்திரையாக வரலாறு தொடர்கிறது.அந்தப் பயணத்தின் சிறு பகுதிதான் நமது காவியம்” என்று என்னுரையில் வாக்குமூலமாக வா.செ.குழந்தைசாமி கூறுகிறார்.மேநாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமியின் புனைப்பெயரே குலோத்துங்கன் என்பதறிக.

கடைசியாக, “ மனிதரை மிஞ்சி நிற்கும் / வாழ்வில்லை: மண்ணும் விண்ணும் / புனிதம்என் றெண்ணத் தக்க / பொருள் எனில் மனிதம் ஒன்றே/ இறவனின் இருப்புக் கூற / எவருளர்: மனிதன் இன்றேல் / குறையுள தாகும் அண்டம்; குடிமகன் அவனே யன்றோ/………../வய்யம் ஓர் இன்பவீடு / வாழ்வொரு வரம் என் கின்ற / மெய்மையே எமது வேதம் / விண்ணகம் இங்கு காண்போம்.” என்ற வரிகளோடு நூலின் இறுதிப் பிரகடனம் கம்பீரமாய் அறைகூவுகிறது.வா.செ.குழந்தைசாமி உயர்ந்து நிற்கிறார்.

யாரும் துணியாத பாதையில் காவியம் யாத்த ஆசிரியருக்கு பாராட்டுகள்.கவிதை புத்தகங்களின் விற்பனையே பெரும் கேள்விக்குறியாகி உள்ள நேரத்தில்; யாப்பிலக்கணங்களுக்குட்பட செய்யுள்களில் அடர்த்தியான செய்தி, தகவல், கருத்துகளின் தொகுப்பாய் இந்நூலை எழுதுவதற்கு பெரும் துணிச்சல் வேண்டும்.சற்று யாப்பு இலக்கணத்திற்கு விடை கொடுத்துவிட்டு கொஞ்சம் சுதந்திரமாய் எழுதியிருந்தால் இன்னும் கூர்மையாகவும், சுவையாகவும் வந்திருக்குமே. உரையிடையிட்ட செய்யுளும் நம் மரபுதானே.நூலை எல்லோரும் வாசிக்க வேண்டும் என்கிற என் ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே இதனைச் சொல்கிறேன்.

“குலோத்துங்கனின் மானுட யாத்திரை தமிழ் இலக்கியத்திற்கு ஒரு தலைசிறந்த புது வரவு: இலக்கிய வகையில் ஒரு புதிய பரிமாணம்.”என்று முன்னுரையில் ப.ஸ்ரீ.ராகவன் கூறியிருப்பது கவனதில் கொள்ளத்தக்கது.

மானுட யாத்திரை,

பாகம் 1 : சமுதாயம்,அரசியல்,
பக:112, விலை: ரூ.60.

பாகம் 2 :அறிவியல்,
பக:136 +48 , விலை: ரூ.85.

பாகம் : ஆன்மீகம்,சமயம்,
பக:230 + 80 , விலை: ரூ.160.

ஆசிரியர் : குலோத்துங்கன்,

வெளியீடு: பாரதி பதிப்பகம்,
126/108,உஸ்மான் சாலை,
தி.நகர், சென்னை-600017.