21 ஆம் நூற்றாண்டுக்கான சோஷலிசம்

Posted by அகத்தீ Labels:


21 ஆம் நூற்றாண்டுக்கான சோஷலிசம்
விவாத மேடை

agathee2007@gmail.com

supo@theekkathir.org

மைக்கேல் எ.லெபோவிச் எழுதிய இப்போதே நிர்மாணிப்போம் 21ஆம் நூற்றாண்டுக்கான சோஷலிசம் என்ற புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. 144 பக்கங்களைக் கொண்ட (விலை ரூ.60/-) இப்புத்தகம் புதிய உரையாடலுக்கும் விவாதத்திற்குமான வாசலைத் திறந்து வைத்துள்ளது. ஆகவே இந்நூலை முன்வைத்து ஆக்கபூர்வமான விவாதத்திற்கு வாசகர்களை அழைக்கிறோம். இந்நூலின் கருத்துக்களை உட்கிரகித்து உங்கள் கருத்துக்களை நூறு வார்த்தைக்கு மிகாமல் எழுதி அனுப்புங்கள். இந்த விவாத மேடை மூலம் அறிவுச் சாளரங்களை திறந்து வைப்போம்.தீமைகள் முதலாளித்துவ அமைப்பின் மரபணுக்களின் ஒரு பகுதி என்பதால் ஒரு புதிய சமுதாய அமைப்பு தேவைப்படுகிறது என்கிற சரியான புரிதலை இந்நூல் முன் வைக்கிறது.
இந்நூல் ஏழு அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி கட்டுரைகள். அவை வெவ்வேறு சந்தர்ப்பத் தில் எழுதப்பட்டவை; ஆயினும் அவை ஒன் றோடொன்று தொடர்புடையவை. இந்நூல் சோஷலிசம் குறித்த ஒரு புதிய பார்வையை விதைக்க முயல்கிறது. அது சரியான திசை வழியா? இல்லையா? இதுதான் இந்த விவா தத்தின் மைய இழை.
சோஷலிசமே எதிர்காலம்; அதை இப் போதே நிர்மாணியுங்கள் என்ற தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் கோஷத்திலி ருந்துதான் இந்நூலின் தலைப்பு பெறப்பட் டாலும்; இந்நூல் பெரிதும் தென் ஆப்பிரிக்க அனுபவத்தைச் சார்ந்து நிற்காமல், லத்தீன்- அமெரிக்க அனுபவங்களையே சார்ந்து நிற்ப தும்; குறிப்பாக வெனிசுலா அனுபவத்தையே கூர்மைப்படுத்துவதும்; அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய முக்கிய செய்தியாகும். விவா தத்திற்கு உதவும் நோக்கில் அத்தியாயவாரியாக சில கருத்துக்களைப் பார்ப்போம்.
மனிதப் பிறவிகளின் நடைமுறை வாழ்க் கையையும், இயற்கையையும் தனது லாபத் திற்காகக் கபளீகரம் செய்கிற பூதம்; ஒரே நாளில் மனிதர்களின் திறமைகளை எல்லாம் அழிக்கின்ற பூதம்; மற்றும் தொழிலாளியின் சொந்த வளர்ச்சித் தேவையை, வளர்ச்சியின் பெயராலேயே தடுக்கும் பூதம். ஆயினும் ஏன் இந்த அபாயம் இன்னும் இருக்கின்றது? என மூலதனத்தின் தேவைகளும் மனிதகுலத் தின் தேவைகளும் என்ற முதல் அத்தியாயத்தில் லெபோவிச் கேள்வி எழுப்புகிறார். ஆம். வளர்ச்சிப்பாதை என்ற கவர்ச்சி முழக்கங் களுடன் நம்நாட்டிலும் செய்யப்படுகிற சீர் திருத்தங்கள், உண்மையில் தொழிலாளி வர்க்க நலனை பாதுகாத்திடுமா? என்கிற கேள்வி நம்முன் எழுகிறது.
முதலாளித்துவத்தை அகற்றுவது எளி தான விஷயம் அல்ல எனவும், மனித முகத் துடன் கூடிய முதலாளித்துவம் என்பது வெறும் பம்மாத்து எனவும் நூலாசிரியர் தத் துவரீதியாக - அறிவியல் பூர்வமாக எடுத்து ரைக்கிறார். மூலதனத்தின் வஞ்சகம் குறித்து விவரிக்கும் இந்நூல், கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிற கம்யூனிச லட்சியத்தை முன்னிலைப்படுத்துகிறது.
சமுதாயத்தின் அடிப்படை நிபந்தனை களை மீறாமல் அதன் ஒவ்வொரு உறுப்பினரும் தன்னுடைய ஆற்றல்களையும் திறன் களையும் வளர்த்துக்கொள்வதற்கு முழு சுதந்திரம் உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே ஒவ்வொரு கம்யூனிஸ்டின் இலட்சியம் என்கிற மார்க்ஸ் மேற்கோள் மெத்தச் சரி. அது சோஷலிச சமுதாயம் குறித்த மார்க்சின் சித்தரிப்பு அல்ல; கம்யூனிஸ்ட் சமுதாயம் குறித்த சித்தரிப்பு. இதனை மனதில் பதியா விடில் இந்நூலை சரியான கோணத்தில் புரிந்து கொள்ள இயலாமல் போய்விடும். `சக்திக்கேற்ற வேலை; வேலைக்கேற்ற கூலி என்பதுதான் சோஷலிசத்தின் அடிப்படை, சக்திக்கேற்ற உழைப்பு; தேவைக் கேற்ற பங்கீடு என்பது கம்யூனிச இலட்சியம். முதல் அத்தியாயம் மூலதனத்தின் இயல்புகளை படம்பிடிக்கும் போதே சோஷலிசம், கம்யூனிசம் இரண் டுக்குமான இந்த வேறு பாட்டை இங்கு விளக்கத்தவறிவிட்டது. இன்னொரு வகையில் இரண்டையும் ஒன்றாக வாசகன் புரிந்துகொள் ளும் குழப்பமும் இந்நூலில் உள்ளது. இதனை நூலாசிரியர் திட்டமிட்டுச் செய்தாரா? அல்லது கட்டுரை யின் வரையறை அத்தகையதா?

கூலியைக் குறைப்பதும் வேலையில்லா பட்டாளத்தைப் பெருக்குவதுமே நவீன தாரா ளமயத்தின் மையமாக மாறுவதை `தத்துவமும் பொருளாதார வளர்ச்சியும் என்ற இரண்டா வது அத்தியாயம் விவரிக்கிறது. இதனால் ஏற் கெனவே பொருளாதார மந்தத்திலிருந்து மீள உருவாக்கப்பட்ட `கென்சியன் மாற்று மற்றும் `போர்டியன் மாற்று ஆகியவை கைவிடப்படுவதை எடுத்துரைக்கிறது. சமூகநலத் திட்டங் களை அதிகம் வலியுறுத்திய `கென்சியன் மாற்றும், அதிகச் சம்பளத்தை பரிந்துரைத்த `போர்டியன் மாற்றும் கூட அதே முதலாளித் துவவாதிகளால் இன்று புறந்தள்ளப்படுவதை நூலாசிரியர் நுட்பமாக வாதிடுகிறார். காட்டு மிராண்டித் தனத்துக்கு இவர்களால் முன் வைக்கப்பட்ட மாற்று மனித முகத்துடன் கூடிய காட்டு மிராண்டித்தனம் என்றானதை அம்பலப்படுத்துகிறது இந்த அத்தியாயம்.
இதன் எதிரொலியாக உண்மையான மாற்று குறித்த தேடலில் உள்நாட்டு பொரு ளாதாரம் சார்ந்த வளர்ச்சி என்ற பார்வை லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிகரித்ததை இந்நூல் சுட்டுகிறது. உள்நாட்டுச் சந்தை சார்ந்த வளர்ச்சி என்பது ஏழைகளுக்குச் சாத கமாக நடந்துகொள்வது என புரிந்து கொள் ளப்பட்டு அந்த திசை வழியில் காலெடுத்து வைத்தால் ஐஎம்எப், உலக வங்கி, நிதிமூல தனம் எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க வல்லரசின் நேரடி தலையீடு என்கிற அபாய நெருப்பு வளையங்களில் சிக்கவைக்கப்படும் யதார்த்த நிலையை இந்நூல் அழுத்திக் கூறுகிறது.

எனவே இதனை முறியடிக்க இதிலிருந்து மீள மூலதனத்திடமிருந்து முறித்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் அதற்கு மனித ஆற்றல்கள் எனும் கருதுகோளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதாரக் கோட் பாட்டை நடைமுறைப்படுத்துவதில் சமூக இயக்கங்களையும் பங்கேற்கச் செய்ய அரசாங் கம் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் லெபோவிச். கோட்பாட்டளவில் மெத்த சரி யென தோன்றினும் வறட்டுச் சூத்திரமாக இதனை கைக்கொள்ள இயலுமா? ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் அக, புற காரணிகள் மற்றும் வர்க்க சக்திகளின் விழிப்புணர்வின் தன்மை இவற்றை கணக்கில் கொள்ள வேண்டாமா? இல்லையெனில் இது வெறும் கற்பனைப் பேச்சாகிவிடுமே?

`ஒரு மாற்றைக் காணத் தவறிவிட்டோம் என்பதுதான் நமது மிகப்பெரும் தோல்வி என்ற பீடிகையுடன் துவங்குகிறது `சிறந்த தோர் உலகம் பற்றிய அறிவு என்கிற மூன்றாவது அத்தியாயம். `சரக்குகளை வழிபடுதல் என்கிற முதலாளித்துவ விதியை வாலஸ் ஷானின் `தி பீவர் நாடக வசனங்களை மேற் கோள்காட்டி விவரிக்கிற இடம் அபாரம். ஒரு காபி விளம்பரத்தைப் பார்த்த கணத்தில் நாம் எப்போதாவது கீழ்க்கண்டவாறு நினைத் திருக்கிறோமா? இனியாவது நினைப்போம்.
நிர்வாணமாக ஒரு பெண் சுவரில் சாய்ந் திருக்கிறார். ஒருவர் அந்தப் பத்திரிகையை வாங்கி அந்தப் பெண்ணின் படத்தை வெறித்துப் பார்க்கிறார். அவர்கள் இருவரின் தலை விதிகளுக்கும் இணைப்பு ஏற்படுகிறது. அந்தப் பெண் ஆடைகளை களைவதற்கும், சுவரின் மீது சாய்ந்து நிற்பதற்கும் அந்த நபர் பணம் கொடுத்திருக்கிறார். அந்தப் புகைப் படத்தில் அந்த வரலாறு அடங்கியிருக்கிறது. அந்தப் பெண் ஆடைகளை கழற்றிய கணம் அவர் எப்படி உணர்ந்தார்? புகைப்படக் கலைஞர் என்ன கூறினார்? என்ற வரலாறு, அந்த பத்திரிகையின் விலை - அந்த மனிதர்கள் அனைவருக்கும் இடையிலான உறவை விவரிக்கிறது. அந்தப் பெண், அந்த மனிதர், அந்த வெளியீட்டாளர் அந்த புகைப்படக் கலைஞர் உத்தரவிட்டவர் களும், அதற்குக் கீழ்ப்படிந்தவர்களும் அதில் அடங்குவர். ஒரு கோப்பை காபியில் காபிக் கொட்டைகளை பயிரிட்ட விவசாயிகளின் வரலாறு அடங்கி இருக்கிறது. எப்படி சிலர் சூரிய வெப்பத்தில் மயங்கி விழுந்தார்கள். சிலர் அடிக்கப்பட்டார்கள், சிலர் கீழே தள்ளப்பட் டார்கள்... (முறுக்கு கம்பி விளம்பரத்திற்கு அரைகுறை ஆடையில் நடிகை வரும்போதும் இப்படி யோசித்துப்பாருங்கள்.) பணம் நமது அறிவின் ஊடகமாக இருக்கும் இந்த உலகில் நமக்கு இல்லாத அறிவைப்பற்றி எண்ணிப் பாருங்கள் என்று கூறுவதோடு, நமது அறிவு என்பதே பொருட்களின் விலை என்றிருக்கும் போது, நம்மிடையே பிரிவினையை எப்படித் தவிர்க்க முடியும்? என செயற்கையாக நம்மீது திணிக்கப்பட்ட கருத்தாக் கத்தை இந்நூல் கேள்விகளால், தர்க்கங்களால் தகர்க்க முயல்கிறது.

`அறிவுச் சொத்துரிமை என்கிற முதலாளித்துவ சிந்தனைக்கு மாற்றாக`தொழிலாளர்களின் தலையிலிருக்கும் தங்கம் எனப்படும் அனுபவ அறிவை இவர் எடுத்துக் காட்டுகிறார். மனித வளர்ச்சிக்கான அறிவுத் திரட்டல் குறித்து பொலிவாரிய வெனிசுலா அரசியல் சட்டம் முன்வைக்கிற விழுமியங் களை மேற்கோள் காட்டுகிறார். முழுமை யான மனித வளர்ச்சியை உறுதி செய்வது `ஒவ்வொருவருக்கும் தன்னுடைய ஆளுமை யை தடையின்றி வளர்த்துக்கொள்ள உரிமை உண்டு இப்படி பலவற்றை மேற் கோள் காட் டிய நூலாசிரியர், ஜனநாயகத் தன்மையு டைய மக்கள் அனைவரும் பங்கேற்கின்ற, முக்கிய பாத்திரம் வகிக்கின்ற சமுதாயம் என வெனிசுலா அரசமைப்பை மாதிரியாகக் காட் டுகிறார். இது அனைவருக்கும் பொருந்துமா? இந்திய அனுபவத்தில் நமது அரசியல் சட்டம் கூட மதச்சார்பற்ற ஜனநாயக சோஷலிச குடியரசு என்றல்லவா பொறித்துக் கொண் டுள்ளது. அதற்கும் நம் அனுபவத்திற்கும் சம்பந்தம் உண்டா? எனினும் `கருத்து யுத்தம் துவங்கப்பட வேண்டும் என்கிற இந்த அத்தி யாயத்தின் மைய அறைகூவல் அடிப்படையானது.

சோஷலிசம் வானத்திலிருந்து விழுவதில்லை

முதலாளித்துவத்தின் இயல்பு குறித்த அறிவைப் பரப்புவதிலிருந்து கருத்துக்களின் யுத்தம் இங்கே துவங்குகிறது. வறுமை ஏழை களின் குற்றமல்ல என்பதையும், ஒதுக்கி வைத்தல் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் குற்றமல்ல என்பதையும், சங்கிலித் தொடர் மனிதச் செயல்பாட்டின் விளைபலனே செல்வம் என்பதையும் நிரூபித்துக்காட்டி அந்த யுத்தம் துவங்குகிறது.
அதே சமயம் இந்த கருத்து யுத்தத்தை உலகமயச் சூழலில் மேற்கொள்ளும்போது ஒவ்வொரு நாட்டிலும் எதிர்கொள்கிற பிரத் யேக பிரச்சனைகளையும், உலகம் முழுமைக் குமான பொதுத்தன்மைகளையும் சரியான விகிதத்தில் இணைப்பது எப்படி? அதனைச் செய்யாமல் பொத்தாம்பொதுவான கருத்துப் பிரச்சாரம் மதப்பிரச்சாரம் போன்ற மயக்கத்தை ஏற்படுத்தலன்றி வேறு உருப்படியான பலன்களைத் தந்திடுமா?

இருபதாம் நூற்றாண்டு அனுபவங்களையும் அதன் இருமாபெரும் தோல்விகளையும் புரிந்துகொள்ள வேண்டிய தேவை சோஷ லிசப் பார்வையை மீட்டெடுக்கும் போக்குடன் நிச்சயம் தொடர்புடையதாகும் என, சோஷலிச தொலை நோக்கை மீட்டெடுத்தல் என் கிற நான்காவது அத்தியாயம் விவரிக்கிறது. சோஷலிசம் என்று அழைத்துக் கொண்ட அதிகார வர்க்க முறையின் மூலம் முயற்சித்த தொழில்மய முயற்சிகள் என முந்தைய சோஷலிச நாடுகளின் வளர்ச்சியை கணித்து அதன் தோல்வியையும்; சோஷலிஸ்டுகள் என்று அழைத்துக் கொண்ட சமூக ஜனநாய கக் கட்சிகளின் தோல்வியையும் இருபெரும் தோல்விகளாக இவர் குறிப்பிடுகிறார். ரஷ்ய அனுபவம் என நேரடியாகக் குறிப்பிடப்படாவிடி னும் அதிகார வர்க்க முறை என்ற விமர்சனம் சோவியத் வீழ்ச்சி குறித்த முழுப்பார்வையா குமா? சோஷலிச தொலைநோக்கு என நாம் ஏற் கெனவே இக்கட்டுரையில் சுட்டிக்காட்டி யுள்ள மார்க்ஸ் கூறிய கம்யூனிச லட்சியத் தையே இந்நூலாசிரியர் முன் வைக்கிறார். தொலைநோக்கிற்கும் உடனடி செயல் பாட்டு திட்டத்திற்கும் இணைப்பு இன்றி இப்படி பிரச்சாரம் செய்யும்பொழுது அது உயிர்ப் போடு இருக்குமா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் கம்யூனிச இலட்சியத்தில் பற்றுறுதியை வெளிப்படுத்தினாலும், சோஷலிச தொலை நோக்கை பிரகடனப்படுத்தினா லும், மக்கள் ஜனநாயகப் புரட்சியை அல்லவா மையப்படுத்துகிறது; அதற்கே பல கட்டங்களைத் தாண்ட வேண்டியுள்ளது. எனவே கம்யூனிச சமுதாய லட்சியத்தை இன்றைக்கே உடனடி லட்சியமாக பிரச்சாரம் செய்வதோ முன்வைப்பதோ சரியான மாற்று ஆகுமா?

சோஷலிசம் வானத்திலிருந்து விழுவதில்லை என்பதே ஐந்தாம் அத்தியாயத் தலைப்பு. சோஷலிசம் வானத்தைப் பொத் துக்கொண்டு கொட்டாது என்றே புரிந்து கொள்வோம். தனியுடைமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா! தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளை அசை போட்டவாறே இந்த அத்தியாயத்தில் புகுவோம்.
அரசு என்பது மூலதனத்தின் ஒருபகுதி. எனவே உலகை மாற்ற அரசைப் பயன்படுத்த முயற்சிப்பது கூட தவறுதான் என்கிற தவறான கருத்தை இந்நூல் மறுக்கிறது. அந்த வகையில் சரி. அரசு ஆதிக்கம் செலுத்திய சமுதாயங்களான சோவியத் யூனியன் மற்றும் அதைப் பின்பற்றிய நாடுகள், ஒரு புதிய உலகை உருவாக்குவோம் என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியது என சோவியத் வீழ்ச்சி குறித்து பொதுவரையறை செய்வது சரியா? சோவியத் நாடு வீழ்ந்ததற்கு பல காரணங்கள் உண்டு. அதிகார மை யம் ஒரு காரணமாக இருந்தது. அது மட்டுமே காரண மல்ல. அடுத்து வெனிசுலா, பொலிவிய புரட்சி அனுபவத்தை நூலாசிரியர் முன் மாதிரியாக வியந்துரைக்கிறார். வெனிசுலாவில் முற்போக்கான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பது உண்மையே. ஆனால் அவை அனைத் தும் மார்க்சிய கம்யூனிச கோட்பாட்டிற்கு அப் படியே ஒத்துப்போகின்றனவா? இல்லையே! சாவேஸ் ஒரு இடதுசாரி முற்போக்காளர். அவர் கம்யூனிஸ்ட் அல்ல. அதனை பிறகு பார்ப்போம்.

முதலாளித்துவத்திலிருந்து தோன்றும் சோஷலிச சமுதாயம், கட்டாயமாகப் பொருளாதார ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் மற்றும் அறிவு ரீதியாகவும் பழைய சமுதாயத் தின் பிறப்பு அடையாள முத்திரைகளுடன் தான் இருக்கும் என்று மார்க்ஸ் கூறியதை நூலா சிரியர் பொருத்தமாக சுட்டிக்காட்டுவ துடன் நிற்காமல், மேலும் `சோஷலிச மனிதனை கட்டியெழுப்ப வேண்டியதன் தேவையை வற்புறுத்துகிறார். அந்தப் பின்னணியில் 21ஆம் நூற்றாண்டுக்கான சோஷலிசம் எது என்று நூலாசிரியர் விவரிக்கிறார்.

அது அரசுவாத சோஷலிசமாக இருக்க முடியாது. மேலே முடிவுகள் எடுக்கப்பட்டு கீழே அமலாக்கப்படுவதாக இருக்கக் கூடாது. சோஷலிசம் என்பது மக்களுக்கு சலுகை கள் வழங்கும் ஒரு கோட்பாடு அல்ல. தங்க ளுக்கு வசதிகள் செய்து தரவேண்டும் என்றும், தங்களது அனைத்துப் பிரச்சனைகளுக் கும் தீர்வளிக்க வேண்டும் என்றும் மக்கள் அரசை எதிர்பார்த்திருக்கும் ஒரு சமுதாயம் மனித ஆற்றல்களின் வளர்ச்சியைப் பேணாது இந்த விளக்கங்களே ஒரு குழப்பமான பார் வையைக் கொண்டுள்ளது. இறுதியாக வெனி சுலா அரசமைப்பு சட்டத்தில் உயர்ந்த லட்சியங்கள் பொறிக்கப்பட்டுள்ளதை சிலாகித்துப் பேசி, அதுவே இருபத்தோராம் நூற்றாண்டு சோஷலிசம் என முன்மொழிந்து, அதை யதார்த்தமாக்க போராட அறை கூவுகிறார் நூலாசிரியர்.
இன்றைய உலகில் லத்தீன் அமெரிக்க அனுபவங்கள், அம்மக்களுக்கு காட்டும் பாதை உலகம் முழுமைக்கும் எல்லா நாடுகளுக்கும் அப்படியே பொருந்தும் என்பது சரியான மார்க்சிய அணுகுமுறை ஆகாது. நடைமுறை யில் சாத்தியமுமல்ல.

`ஏழு கடினமான கேள்விகள் எனும் ஆறாவது அத்தியாயம் வெனிசுலா வெற்றிக்காக யுகோஸ்லாவிய அனுபவங்களில் இருந்து ஏழு கேள்விகள் முன்வைக்கப்படு கின்றன. `தொழிலாளர் மேலாண்மை என்ற வார்த்தை பிரயோகத்தினுள் `நிர்வாகத்தில் தொழிலாளர் பங்களிப்பு குறித்த விவாதம் இந்த அத்தியா யத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் தொழிலாளி வர்க்கம் தன் சொந்த தனிப்பட்ட பொருளாதார ஆதாயங்களுக்கு அப்பால் ஒட்டுமொத்த சமுதாய நலன்கள் குறித்து அக் கறை காட்டாமல் இருந்ததின்- இருப்பதின் அபாயங்கள், சிக்கல்கள் அலசப்பட்டுள்ளன. இங்கும் வெனிசுலா அரசியல் சட்ட முகப்பில் கூறப்பட்டுள்ள லட்சிய வாக்கியங்களையே முத்தாய்ப்பாக சார்ந்து தீர்வு முன்வைக்கப் படுகிறது.
நம்நாட்டில் பொதுத்துறைகளின் சிக்கல் களை இந்தக் கோணத்தில் அலசத் துவங்கி னால், பொதுத்துறைகளை பாதுகாக்க ஒரு லட்சியதாகமுள்ள தொழிலாளர்களாக அவர் களை உருவாக்கத் தவறியது யார் என்ற கேள்வி எழும். மொத்தத்தில் தொழிலாளி வர்க்கத்தின் மூளையில் புதிய சோஷலிச மனித விழுமியத்தை விதைக்காமல், சோஷலிச சமுதாயத்தைக் கட்ட இயலாது என்ப தையே நூலாசிரியர் பின்னிப் பின்னி எழுது கிறார். அதுசரி. ஆனால் அதனை வெறும் போதனை மூலமோ, கருத்துப் பிரச்சாரம் மூலமோ, அரசுச் சட்டங்கள் மூலமோ, உத்தரவுகள் மூலமோ கட்டி எழுப்ப முடியுமா? போராட்டங்களும் பயிற்சியும் முயற்சியும் ஒன்றிணைவதுதான் சாத்தியமாக்கும்.

சோஷலிச சக்திகள் தங்களின் அமைப்பு ரீதியான செயல்பாட்டில் பெருமளவில் மாற்றத்தைச் செய்வதை தற்போதைய சூழல் கோருகிறது. அத்தகைய செயல்பாட்டில் தங்களுக்குள்ளேயே அதிக ஜனநாயக பங்கெடுப்பும், புதுமையான வெகுஜன ஜனநாயக நிறுவனங்களை வளர்த்தெடுப்பதும் உள்ளடங்கியவை. இம்மாதிரியான புதுமையானவற்றிற்கு நமது நாட்டில் குறைவில்லை. பஞ்சாயத்து அமைப்பு முறையானது வெகுஜன பங்கெடுப்பிற்கு சிறந்த உதாரணமாகும். இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நிலவி யது போன்ற சூழல் புத்துயிர் பெற்றுவிடும் என்ற நம்பிக்கையுடன் பழைய நினைப்புடன் துயரப்படுவதைவிட, இம்மாதிரியான ஜனநாயக இயக்கத்தை வளர்த்தெடுக்கும் செயல்பாடே தற்போதையத் தேவையாகும் என `சோஷலிச திட்டத்தில் கடந்த காலமும் எதிர்காலமும் என்ற நூலில் பிரபாத் பட்நாயக் கூறுவதை இங்கு இணைத்துப் பார்க்க வேண்டும். திட்டமிடலில் மக்களின் பங்கேற்பு என்ற கேரள அனுபவமும், மேற்கு வங்க பஞ்சாயத்து அனுபவமும் உட்கொள்ளப்பட்டு புதிய ஜனநாயகத்தை வேரில் பாய்ச்சுகிற முயற்சிதானே இப்போதைய தேவை.

`அடிப்படைத் தேவைகளின் புரட்சி என்ற இந்நூலின் ஏழாவது அத்தியாயம் பொலிவிய சோஷலிசப் பாதைத் தேர்வின் பின்னணியையே விளக்குகிறது. அதனை நம் அனுபவத்தின் ஊடாகவே பரிசீலிக்க வேண்டும் என்பதே இதை இங்கே சுட்டுவ தன் காரணம் .

இந்த இறுதி அத்தியாயம் வெனிசுலாவின் நிலைமையை விவரித்த பின், நாடு அவ்வளவு கெட்டுக் கிடக்கிறது. ஒரு புயலின்றி அது சுத்தமாகாது. வெனிசுலாவிற்கு தேவை புயல். ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் தேவை. ஒரு பொருளாதாரப் புரட்சி. ஒரு அரசியல் புரட்சி. ஒரு கலாச்சாரப் புரட்சி என நெற்றியடியாக போட்டுடைத்துள்ளார்.

இறையாண்மை உள்ள மக்கள் தங்களை ஆள்பவர்களாகவும் ஆளப்படுபவர்களாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும். புரட்சியாளர் களைப் பொறுத்தவரையில் இதில் சமரசத்திற்கு இடமில்லை என்றார் சாவேஸ். புதிய மாற்று என்பது உள்நாட்டு சந்தை சார்ந்தது. அரசு உதவியுடன் கூடிய சுதந்திரச் சந்தை சார்ந்ததாக என்பதோடு மட்டுமின்றி, ஏழைகளிடம் அதிகாரத்தைக் கொடுக்காமல் வறு மையை ஒழிக்க முடியாது என்றார் சாவேஸ். அதே சமயம் உணவு விநியோகத் திற்கு ராணு வத்தைப் பயன்படுத்தியதும், பதினெட்டாயிரம் தொழில்நுட்ப ஊழியர்களை பணிநீக்கம் செய்ததும் புதிய மாற்றுள் சேருமா?
சோஷலிசத்தை ஒரு கோட்பாடாக, ஒரு திட்டமாக, ஒரு மார்க்கமாக அரசையோ இயந் திரங்களையோ அல்லாமல் மனிதர்களை எல்லாவற்றிற்கும் மேலாக முன்வைக்கும் மனிதத்தன்மையுள்ள புதுவகை சோஷலி சத்தை மீட்டெடுக்க வேண்டும் என்கிற சாவேசின் அறைகூவலை உண்மையாக்கு வது ஒரு போராட்டம்தான். அதை உண்மை யாக்குவதற்கான போராட்டம் என்பது பொரு ளாதாரப் புரட்சிக்கு அவசியமான அரசியல் மற்றும் கலாச்சாரப் புரட்சிகளை முன்னெடுத்துச் செல்வதாகும் என்கிறார் இந்நூலாசிரியர்.

இப்படி விவரிக்கும் இந்த அத்தியாயம் தற்போது `மேலிருந்து கட்டப்படும் கட்சி என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறைக்கு மாற்றாக கீழிருந்து அமைக்கப்படும் ஒரு கட்சி தேவை என்கிற கருத்தை இந்நூலில் முத்தாய்ப்பாக முன்மொழிகிறது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினால் ஏற்கத்தக்கது அல்லவே! இது கம்யூனிஸ்ட் கட்சிகளின் பாதையுமல்லவே.
பொலிவிய புரட்சி வெற்றி பெறுவதும் நீடிப்பதும் அவ்வளவு சுலபமல்ல. ஏகாதி பத்தியம் இதனை அழிக்கும். இந்நூலாசிரியர் உணர்ந் துள்ளார். மேலும் பல பொலிவிய புரட்சிகள் தேவை என்கிறார். பொலிவிய அனுபவத்திலி ருந்து படிப்பினைகள் பெறுவது என்பது வேறு. அதனையே காப்பியடிப்பது என்பது வேறு. இந்நூல் பொலிவிய பாதை யையே முன்மொழிகிறது. எனவே விமர்சன நோக் கில் இதனை புரிந்துகொள்ள வேண்டுமே தவிர; அச்சு அசலாக இதனை பின்பற்ற இயலாது. நமது நாட்டு அனுபவங்களின் அடிப்படையில் உருவான சிபிஎம் கட்சித் திட்டமே நமக்கு வழிகாட்டும். இஎம்எஸ் வார்த்தையில் கூறுவதானால் சிபிஎம் கட்சித் திட்டமே சோஷலிசத்திற்கான இந்தியப் பாதையாகும்.

நன்றி: தீக்கதிர் (2010 பிப்ரவரி 4, 5)

2 comments :

  1. சும்மாதான்

    ரொம்ப சரியாச்சொன்னீங்க.
    படத்தை பார்த்தால் நம்ம அகத்தியலிங்கம் தோழர் மாதிரியே இருக்கே....
    தொடர்ந்து எழுதுங்க..............

  1. vimalavidya

    This book and recent book of "Idadusarikalum Puthiya Ukagamum"("Leftists and new world ")by Martha Harnekkar translated by Com.Asokan Muthusamy must be jointly studied by all leftists to understand the present conditions of left movements..Com.Su.Po.Agathiyalingam of Theekkathir editorial board very boldly and honestly written a review regarding the later book.The ten questions raised by the review must be discussed by the left movements as a whole.without talking/discussing about the ten questions no movements can forward the tasks.

Post a Comment