டீக்கணக்கு ….

Posted by அகத்தீ Labels:

 





டீக்கணக்கு ….
சிறுவனாய் ஓடி ஆடி திரிந்த வேளை
காலையும் மாலையும்
அம்மா தந்த
கருப்பட்டி கடுங்காப்பி
அடிநாக்கில் இன்னும்….
விபரம் தெரிந்த பின்
காப்பி வில்லை , பஞ்சாரை [வெள்ளைச் சர்க்கரை] போட்ட
பால் ஊற்றிய காப்பி
சுவைக்கு பழகிய நாக்கு
தொழிலாளி ஆனபின்
மூன்று நான்கு வேளை
டீ க்கு அடிமையான நாக்கு…
திருமணத்துகு பின்
காலை பெட் காபி
அப்புறம் டீ
அவ்வப்போது
காபியும் கிடைக்கும்
பொதுவாழ்க்கைக்கு வந்தபின்
டீ இன்னொரு உணவானது
நாளைக்கு பத்தோ இருபதோ
கணக்கே இல்லாமல் நீண்டது ..
ஓய்வு பெற்றதும்
ஒட்டிக்கொண்ட சர்க்கரை வியாதி
தினசரி இரண்டு அல்லது மூன்று
சர்க்கரை இல்லா டீ
முதுமையின் அனுபவம்
சர்க்கரை இல்லா லெமன் டீ
புதினா டீ ,ஜீரக டீ , இஞ்சி டீ
ஏதோ ஒன்று
தினசரி இருமுறை …
எப்போதாவது
சர்க்கரை இல்லா டீயோ காபியோ…
அம்மா தந்த
கருப்பட்டி கடுங்காப்பி
அடிநாக்கில் இன்னும்….
சுபொஅ.

எப்போது வரும் ?

Posted by அகத்தீ Labels:

 



சாப்பிடும் போது

தெறித்த கவிதைப் பொறி

கணினியை திறந்ததும்

மறந்து போனது

இப்படித்தான்

கனவில் விரிந்த கற்பனை

எழுத உட்கார்ந்ததும்

ஏனோ நொண்டியடிக்கிறது

பேசுவதை தட்டச்சு செய்யும்

கணினி ’ஆப்’ போல

நினைத்ததும் பதிவாகும்

 ‘பென் டிரைவ் ஆப்’

எப்போது விற்பனைக்கு வரும் ?

 

சுபொஅ.

14/11/24.


காலங்கடந்து நிற்கும் அழியா சித்திரமாய்…

Posted by அகத்தீ Labels:

 





காலங்கடந்து நிற்கும் அழியா சித்திரமாய்…

 

 ”துணி” என்ற முதல்கதை ; ஷேப்பிங் மெஷினின் சூடான பிசிர்கள் காலில் கையில் விழுந்து மூன்றாம் பிறையாய் அரைவட்ட நிலவாய் கருப்பு தழும்புகள் உண்டான அனுபவமும் , பேண்ட் ,சட்டை ஆங்காங்கு பொத்தலான அனுபவமும் நான் தொழிலாளியாய் வேலைபார்த்த நாட்களை என்னுள் படமாய் விரித்தது .கமலாலயனும் என்னைப்போல்   ’டூல் அண்ட் டை மேக்கராய்’ வேலை செய்தவராயிற்றே. சூடுபட்ட அனுபவமே கதையாய் விரிந்துள்ளது .

 

பொதுவாய் கமலாலயன் மென்மையானவர் . அவர் குரல் மட்டுமல்ல எழுத்தும் அப்படித்தான் .ஆனால் பார்வை அழுத்தமானது ; புதிய மானுடத்தைக் கருக்கொண்டது .இந்நூலின் 15 கதைகளுமே அப்படித்தான் .இக்கதைகள் நான் ஏற்கெனவே படித்தவைதான். ஆயினும் இப்போது வாசிக்கும் போதும் நெஞ்சில் ஓர் சிலிர்ப்பை உருவாக்குகிறது .

 

போராட்ட களமும் சிறையும் எப்படி ஒருவனின் மனதில் அப்பிக்கிடந்த பயத்தையும் சுயநலத்தையும் துடைத்தெறிகிறது என்பதை இயல்பாய்ச் சொல்லும்  “ பார்வைகள் மாறும்”கதை .

தாயும் பிள்ளையுமாயினும் வாயும் வயிறும் வேறு வேறு என்பது போல் , கணவனும் மனைவியும் ஆயினும் ரசனையும் சுயமும் வேறு வேறு ஆனால் அதை மிதித்து துவைக்கும் ஆணாதிக்கம் இதை மென்மையாக ஆனால் வலுவாகச் சொல்லும் “ரசனை” .

சொந்த உழைப்பை நம்பி பிழைக்க மல்லுக்கட்டும் மனிதர்களின் வலியை ஒரு சிறு பட்டறையாளன் ஒரு வேன் டிரைவர் மூலம் மனதில் பதியம் போட்டுவிட்ட “ துணைகள்” ,

காக்கை குருவி எங்கள் ஜாதி என பாடுபவரல்ல வாழும் மனிதர்களாய் ,”குருவி குஞ்சுகளும் கலைந்த கூடுகளும்” கதையும் “குருவி” கதையும் இடம் பெற்றுள்ளன .

 

இப்படி ஒவ்வொரு கதையும் வாழ்வின் அன்றாட பாடுகளிலிருந்து முளைத்தவையாய் இருப்பதும் , அதே சமயம் வாழ்வை புதிய கோணத்தில் தரிசிக்க வைப்பதாக அமைந்திருப்பதும்தான் சிறப்பு .

 

44 தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகள் உயிரோடு கொழுத்தப்பட்ட கீழ் வெண்மணியின் துயரமும் கோபமும் கொப்பளிக்கும் சரித்திரத்தை ஒரு பத்திரிகை செய்தியாளர் மூலம் காலங்கடந்து நிற்கும் அழியா சித்திரமாய் படைத்து தந்திருக்கிறார் “தணியாத் தீயின் நாக்குகள்” கதையில் கமலாலயன் . இந்த ஒரு கதை போதும் இந்த நூல் சாகாவரத்தை பெற.

 

இன்னொரு வரலாற்றுக் கதையும் இதே போல் அமைந்து விட்டது . “ மடிகேரியின் கண்ணீர்” . கவுரம்மா என்ற எழுத்தாளரின் கதை .1936 களிலேயே பெண்ணியம் பேசிய ,சுயமாய் உலாவந்த , நீச்சல் ,டென்னீஸ் என ஆற்றலைக் காட்டிய ஓர் இளம் பெண்ணின் மரணத்தில் படிந்த ஆணாதிக்கத்தை read between lines என்பது போல் வரிகளுக்கு இடையே வலுவாய் உணர்த்திய பாங்கு மிகச்சிறப்பு .இக்கதை மிகவும் வலுவானது .

 

நூல் நெடுக பெண்ணியப் பார்வை மிக நுட்பமாய் ஓங்கி ஒலிக்கிறது .கடைசி கதை ,” ஒரு மாலைநேரத்து மயக்கம்” இதன் உயிர் சாட்சி என்றே சொல்லலாம் .ஓர் ஆணும் பெண்ணும் நண்பர்களாகப் பழகும் போது ஏற்படும் சில மனச்சறுக்கல்களை இருவரும் சரியாய் புரிந்து தவறுகளைக் களைந்து நட்பைப் தொடரும் பக்குவமே நட்பின் வேர் . அன்பு என்பது கண்டிக்கவும் அரவணைக்கவும் வழிநடத்தவும் மிகப்பெரும் ஆயுதமாகுமே !

 

 “பறப்பவர்களின் காலம்” ,”பற்றிக்கொள்ள” என்கிற இரண்டு கதைகளும்  அன்றாட நம் பயணத்தில் நாம் கடந்து போகிற காட்சிகள்தாம் .ஆனால் கமலாலயனின் இளகிய மனதில் அவை புதிய கோணத்தில் காட்சியாய் விரிந்துள்ளது .அதுபோல் இதர நான்கு கதைகளும் கூட நம்முள் மென்மையாய் வாழ்வின் பன்முகங்களை பதிய வைக்கிறது .

 

எனக்கு போணஸாக  இந்து தமிழ் தீபாவளி மலரில் வெளிவந்த “ ஒரு துளிக் காற்று” சிறுகதையையும் அனுப்பி இருந்தார் .அக்கதை அமெரிக்காவில் கழுத்தை மிதித்து நசுக்கும் வெள்ளை அதிகார பூட்ஸுக்கு எதிராக கறுப்பர்களின் குரல் ஓங்கி ஒலித்ததில் தொடங்கி , ஆஸ்த்மா நோயாளிகளின் வேதனையை துல்லியமாய் சொல்லி, மூச்சுத்திணறலை நம்மையும் உணரவைத்துவிட்டார் .

 

இந்த சிறுகதைத் தொகுப்பை வாங்கி வாசிப்பீர் ! வாழ்வின் வலிகளூடே புதிய மானுட அறத்தைப் பேண ஒரு பற்றுக்கோடு அகப்படும் !

 

 

இராமயணத்தை ,மகாபாரதத்தை திரும்பத் திரும்ப பல்வேறு கோணங்களில் எழுதிக் குவித்துக் கொண்டே இருக்கிறார்கள் .இந்த பண்பாட்டுத் திணிப்புக்கு எதிராய் நாம் நம் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் திரும்பத் திரும்ப பல்வேறு கோணங்களில் எழுத வேண்டாமா ? வந்தவை சிலவே .அவை போதாது .கமலாலன் சென்ற வருடமே மணிமேகலையை மறுவாசிப்பு செய்து ஓர் நாவல் எழுதத் தொடங்கியதை நான் அறிவேன் . வரும் ஆண்டிலாவது அந்த நாவல் அச்சேறச் செய்வாராக ! இது என் வேண்டுகோள் மட்டுமல்ல ;அன்புக் கட்டளையும்கூட.

 

தணியாத் தீயின் நாக்குகள் , [சிறுகதைத் தொகுப்பு] ஆசிரியர் : கமலாலயன் , வெளியீடு : பரிசல் புத்தக நிலையம் ,தொடர்புக்கு : 9382853646 /8825767500 மின்னஞ்சல் :  parisalbooks2021@gmail.com பக்கங்கள் : 156 , விலை :ரூ.160/

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

13/11/24.


நான்...

Posted by அகத்தீ Labels:

 

எல்லாம் நன்மைக்கே”

எனச் சொல்லி கடந்து போக

பொறுப்பற்றவனல்ல நான்.

 

“ எல்லாம் கெட்டுவிட்டது”

எனப் புலம்பி அழ

பஞ்சாங்கக் கிழவனல்ல நான்.

 

 “மானிட மென்பது புல்லோ? – அன்றி

மரக்கட்டை யைக்குறித் திடவந்த சொல்லோ?”

பாரதிதாசன் சொற்களில் வாழ்கிறேன் நான்.

 

 

சுபொஅ.

10/11/24.


என் நினைவில் இல்லை

Posted by அகத்தீ Labels:

 



வீட்டில் இருக்கும்
ஒவ்வொரு பாத்திரத்துக்கு பின்னாலும்
ஒரு வரலாற்றுக் குறிப்பை
சொல்லிக்கொண்டே இருக்கிறாள் மனைவி !
அதில் பல உறவுகளையும் பல நிகழ்வுகளையும்
அசைபோட்டுக்கொண்டே இருக்கிறாள்.

நீங்கள் வாங்கிக் கொடுத்த
முதல் பட்டுப்புடவை இது ….
43 வருடங்கள் ஓடியதே தெரியவில்லை
வரலாற்றுக் குறிப்பைக் கேட்டு
கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தால்
நீங்கள் வாங்கிக் கொடுத்த
ஒரே பட்டுப் புடவை இதுதான்..”
என்கிற அடிக்குறிப்போடு
எனக்கொரு குட்டும் வைத்துவிட்டாள்.

நானொரு மக்கு
இதுபோல் எதுவும்
என் நினைவில் இல்லை
வரலாற்றில்
நான் புலி என்று
நினைத்துக் கொண்டிருந்தேன்..
எல்லாம் வெளியில்தான்....

சுபொஅ.
02/11/24.


கற்றது விரல் மண் அளவிலும் .....

Posted by அகத்தீ Labels:

 

தூக்கம் தொலைந்த ஓர் இரவில்

நான் கற்றது

நான் கற்றுக்கொள்ளாது

பட்டியல் போட முயன்றேன்

பொழுது விடிந்தும் முடியவில்லை

கற்றது விரல் மண் அளவிலும் தேறவில்லை

என் செய்வேன் ?

நான் தழும்பும் அரைகுடமோ?

கல்லாதது விரிந்துகொண்டே போகிறது!

மறுபிறவியில் நம்பிக்கையில்லை

எத்தனை பிறவி எடுத்தாலும்

முழுதாய் கற்று முடிக்க முடியாதே !

மரணம் வரை படித்துக் கொண்டே இருப்பேன்.

 

சுபொஅ.

31/10/24.

 

 


சாப்பிடும் அரிசியில்

Posted by அகத்தீ Labels:

 


இன்றெமது அப்பத்தை

எனக்குத் தந்த

ஆண்டவரே !

 

அவன் சாப்பிடும் அரிசியில்

அவன் பெயரை எழுதிய

ஆண்டவரே !

 

இவன் சாப்பிடும் தயிர் சாதத்தில்

இவன் பெயரை எழுதிய

ஆண்டவரே !

 

அவன் சாப்பிடுகிற பீஸாவில்

அவன் பெயரை எழுதிய

ஆண்டவரே !

 

இவன் சாப்பிடுகிற பீப் பிரியாணியில்

இவன் பெயரை எழுதிய

ஆண்டவரே !

 

நீர் கொடுத்த சாப்பாட்டில் பேதம் பார்த்து

ஒவ்வொருவரும் அடித்துக் கொல்வது ஏன்

ஆண்டவரே !

 

ஒவ்வோர் கவளம் சாப்பாடும்

உம் கருணை அல்லவா

 ஆண்டவரே !

 

ஒரு சிலருக்கு மட்டும்

ஆசீர்வதிக்கப்பட்ட சாப்பாடு தரும்

ஆண்டவரே !

 

எறும்புக்கும் யானைக்கும்

அன்றாடம் படியளக்கும்

ஆண்டவரே !

 

கோடிக்கணக்கான மக்களை

கொலைப்பட்டியில் தள்ளுவது நியாயமா ?

ஆண்டவரே !

 

இந்த பாவப்பட்டவரெல்லாம்

சாத்தானின் பிள்ளைகளா

ஆண்டவரே !

 

ஒருவர் கண்ணில் வெண்ணை

ஊரார் கண்களில் சுண்ணாம்பு

நியாயமா ஆண்டவரே !

 

[ இது சாப்பாட்டின் போது செய்ய விரும்பிய பிரார்த்தனை ]

 

சுபொஅ.

27/10/24.