நானும் உள்ளொளியும்
Posted by
“நானும்” ”உள்ளொளியும்”…..
தூக்கம் தொலைத்த
இரவுகளில்
”நானும்” ”உள்ளொளியும்”…..
பின்னோக்கி
வெகுதூரம்
பயணித்தோம்….
வழிஎங்கும்
அசைபோட்டோம்
கடந்த பாதையினை
எடை போட்டோம்!
நெஞ்சாரச்
சொல்லுகிறேன்
ஒழுக்கம்
தவறியதாய்
நேர்மை தடுமாறியதாய்
அநீதி இழைத்ததாய்
பேராசையில்
புழுங்கியதாய்
யாரையேனும்
பழிவாங்கியதாய்
நினைவுக்கு
எட்டியவரை இல்லை
ஒரு வேளை
என்னை அறிந்தவர்களுக்கு
தெரியக்கூடும்
நான் அறியாமல்
செய்த
ஏதேனும் அவர்களை
உறுத்தி இருக்கலாம்
அதற்காகவும்
இப்போது வருந்துகிறேன்.
ஆனால் ,
அன்று
இப்படி பேசியிருக்கக்
கூடாது
இப்படி ஒதுக்கி
இருக்கக்கூடாது
இப்படி காயப்படுத்தி
இருக்கக்கூடாது
அதை அப்படிச்
செய்யாமல்
இப்படிச்
செய்திருக்கலாமோ
அதை இன்னும்
நிதானமாக அணுகி இருக்கலாமோ
ஏன் அந்த
அவசரக்குடுக்கைத்தனம் ?
விட்டுக்கொடுப்பதில்
என்ன பிரச்சனை
வீணாக சந்தேகப்பட்டுவிட்டோமோ
!
எல்லாம் காலம்
கடந்த ஞானம்தான்.
என் “அகத்தாய்வு” முடிவற்றது
அது சுய இரங்கலும்
அல்ல
சுயபச்சாதாபமும்
அல்ல
விமர்சனங்களுக்கு
சரியாக செவிகொடுத்தேனோ
இல்லையோ
சுயவிமர்சனம்
உள்ளொளியாய் பரவுகிறது
முதுமை பக்குவப்படுத்திவிட்டதோ
?
ஜெயகாந்தன்
சொல்லுவார்
“வாழ்க்கை என்பது
அந்தந்த நேரத்து
நியாயங்கள் !”
ஆம்
அது சரியும்தான்
; இல்லையும்தான்.
நேற்றைய நியாயங்கள்
இன்றைக்கு
பல்லிளிக்கிறது …
இன்றைய நியாயங்கள்
நாளை பல்லிளிக்குமோ
தனி மனித
”அனுபக் காயங்கள்”
ஒருபோதும்
ஆறாமல் எதையோ
சொல்லிக்
கொண்டே இருக்கும் .
அனுபவம் என்பதும்
மாறிக்கொண்டே
இருப்பதுதானே !
அனுபவம் படிக்கல்லாகும்
எப்போது
?
பார்வை ஆழமாகும்
போது ; விசாலமாகும் போது !
சமூக அறிவியலை
உள்வாங்கும் போது
ஞானத்தின்
மெய்யான ஊற்று அதுதானே !
தூக்கம் தொலைத்த
இரவுகளில்
”நானும்” ”உள்ளொளியும்”…..
பின்னோக்கி
வெகுதூரம்
பயணித்தோம்….
வழிஎங்கும்
அசைபோட்டோம்
கடந்த பாதையினை
எடை போட்டோம் !
சுபொஅ.
28/05/25.
0 comments :
Post a Comment