“பழகு தமிழ்” செய்வோம் இலக்கணத்தை புதிதாக்குவோம்.

Posted by அகத்தீ Labels:

 






 “பழகு தமிழ்” செய்வோம்

  இலக்கணத்தை புதிதாக்குவோம்.

 

 “ என்னடா ! தமிழுக்கு வந்த சோதனை?” என நீங்கள் கேட்கக்கூடும் . அண்மையில் வெளிவந்த இரண்டு சமூக வலைதளப் பதிவுகளை படித்தபின் என்னுள் எழுந்த எண்ணங்களை இங்கு பதிவதில் பிழையில்லைதானே ! ஒன்று கவிஞர் வைரமுத்து எழுதியது .இன்னொன்று கவிஞர் மகுடேஸ்வரன் எழுதியது . முதலில் அவற்றைப் பார்ப்போம்.

 

வைரமுத்து[ @Vairamuthu·Jul 28] எழுதியிருப்பது ;

 “சமூக ஊடகங்களில்

நல்ல நகைச்சுவைகளைப்

பார்க்கிறேன்

 

தப்பும் தவறுமாய்த்

தமிழ் எழுதுகிறவர்கள்

சரியான எழுத்தைத்

தவறென்கிறார்கள்

 

ண்ணகரம் ‘றன்னகரம்

பொது ‘ளகரம் வகர ‘லகரம்

எங்கே ஆளப்பட வேண்டும்

என்று அறியாதவர்கள்

தேவையில்லாத

திருத்தம் சொல்கிறார்கள்

 

வினைத்தொகையில்

வல்லெழுத்து மிகாது என்று

அறியாதவர்கள்

ஊறுக்காய் என்று எழுதித்

தமிழைப் புளிக்கவைக்கிறார்கள்

 

நினைவுகூறுதல் என்றே

எழுதிப் பழக்கப்பட்டவர்கள்

நினைவுகூர்தல் என்ற

சரியான சொல்லாட்சியைத்

தவறென்று சொல்லித்

தமிழின் கற்பைச்

சந்தேகப்படுகிறார்கள்

 

எலும்புவில் தேய்மானம்

என்று எழுதுவது தவறென்று

அறிந்தவர்கள் கூடக்

கொழும்புவில் குண்டுவெடிப்பு

என்று எழுதுகிறார்கள்

 

வருமொழி வடமொழியாகவோ

மெல்லொலியாகவோ இருப்பின்

வல்லெழுத்து மிகத்தேவையில்லை

என்ற பொதுவிதி அறியாதவர்கள்

எனது தண்ணீர் தேசம் நாவலில்

த் எங்கே என்று குத்துகிறார்கள்

 

திருநிறைசெல்வியே சரி

என்று தெரியாதவர்கள்

திருநிறைச்செல்வி என்று எழுதிப்

பிழையே சரியென்கிறார்கள்

 

இவர்களோடு மல்லுக்கட்டுவதை

நான் அழகான சண்டை என்றே

கருதுகிறேன்

 

எமக்குத்

தமிழ் சொல்லித்தரும் பணியில்

ஈடுபடுகிறவர்களைப் பார்த்து

நான் கோபம் கொள்வதில்லை;

கும்பிட்டுச் சிரிக்கிறேன்

 

நல்ல தமிழ் அறியாவிடில்

கேட்டுக் கற்றுத்

தெரிந்து தெளியுங்கள்

 

சரியானதைப்

பழிப்பதன் மூலம்

தப்புக்குத்

தங்க முலாம் பூசாதீர்கள்

 

தமிழ் வளர்ச்சித்துறை,

செம்மொழித் தமிழாய்வு

மத்திய நிறுவனம்,

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

தமிழ் வளர்ச்சிக் கழகம்,

உலகத் தமிழ்ச் சங்கம்

முதலிய அமைப்புகள்

தமிழர்களின் அன்றாடத்

தமிழோடு இயங்க வேண்டும் .”

 

கவிஞர் மகுடேஸ்வரன் Magudeswaran Govindarajan 29 july ] முகநூலில் எழுதுகிறார் ;

 

 “தமிழில் பிழையாக எழுதுகின்றோரைப் பற்றி வைரமுத்து தம் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அந்தப் பதிவிலேயே அன்னார் சில பிழைகளைச் செய்திருக்கிறார் என்பது அவர்க்குத் தெரியப்படுத்தப்படவேண்டும். இன்னும் சொல்லப் போனால் வைரமுத்து எழுதும் உரையிலும் கவிதையிலும் பிழைகள் பல உண்டு. அவை தமிழாய்ந்த பெருமக்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும்.

அ). ‘ஊறுகாய் என்பதனை ஊறுக்காய் என்றெழுதுகிறார்கள் என்கிறார். வினைத்தொகையில் வல்லெழுத்து தோன்றல் இல்லை என்பதனை அனைவரும் அறிவர். ஆனால், வினைத்தொகையில் பிழைபட எழுதுமிடங்கள் அவர்க்குத் தெரியவில்லை. ஊறுகாயை யாரும் ஊறுக்காய் என்று எழுதுவதில்லை. இவ்வெடுத்துக்காட்டே தவறு. புனைபெயர் என்பதனைப் புனைப்பெயர் என்று எழுதுகிறார்கள். புனைபெயர் என்பதுதான் வினைத்தொகை. புனைப்பெயர் என்று பிழையாக எழுதப்படுகிறது.

ஆ). நினைவுகூறுதல், நினைவுகூர்தல் ஆகிய இரண்டும் சரியே. இவ்விரண்டு தொடர்களில் ஒன்றினை ’ஊறுக்காய் தவறு என்றது போலக் கருத இயலாது. இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு மட்டுமே உண்டு. நினைவினைக் கூறுதல் என்ற பொருளில் வருவது நினைவு கூறுதல். அவன் தன்னுடைய நினைவினைக் கூறுகிறான். அது நினைவு கூறுதல். நினைவிலிருந்து ஆழ்ந்து மீட்டுச் சொல்லுதல் நினைவுகூர்தல். அவன் நினைவுகூர்கிறான்.

இ). ‘கொழும்புவில் என்று எழுதக்கூடாதுதான். கொழும்பில் என்றே எழுதவேண்டும். ஆமாம், சரிதான். ஆனால், இவ்வகைப் பிழையை ’முத்து என்னும் தம் பெயர்க்கும் பொருத்திப் பார்த்தே ஆண்டுள்ளாரா என்று அவர் உறுதிப்படுத்தலாம். வைரமுத்து என்கின்ற தம் பெயரோடு வேற்றுமை உருபுகளைச் சேர்க்கும்போது வைரமுத்தை, வைரமுத்தால், வைரமுத்துக்கு, வைரமுத்தின், வைரமுத்தினது, வைரமுத்துக்கண் என்று எழுதி வந்தாரா ? அவ்வாறே எழுதியிருப்பின் சரி. ஆனால், வைரமுத்துவை, வைரமுத்துவுக்கு என்று அவரும் எழுதியிருந்தாலும் பிழை.

ஈ). தண்ணீர் தேசம் என்ற தொடரில் த் தோன்றினால்தான் தமிழ்மொழித் தொடர். நீர், தேசம் ஆகிய இருசொற்களும் வடமொழியிலும் உள்ளன. நீர் தேசம் என்று வல்லொற்று மிகாமல் பயன்படுத்தினால் அங்கே வடமொழித் தொடரைத்தான் ஆள்வதாகப் பொருள். நீர்த்தேயம்/நீர்த்தேசம் என்று ஆண்டால்தான் தமிழ்த்தொடரை ஆள்வதாகப் பொருள். தண்ணீர்த் தேசம் என்று வல்லொற்று மிகுந்து வருவதே சரி. ‘தண்ணீர் தேசம் என்று ஆண்டமையால் அது வடமொழித் தொடரோடு இணக்கமுற்றுவிட்டது. இரண்டும் வடமொழிச் சொற்களேயாயினும் இயன்றவரைக்கும் தமிழ்மொழிப் பண்புகளைப் புகுத்தி எழுதுவதுதான் கொள்கையாக இருக்கவேண்டும்.

உ). எமக்குத் தமிழ் சொல்லித்தரும் பணியில் ஈடுபடுகிறவர்களைப் பார்த்து நான் கோபம் கொள்வதில்லை; கும்பிட்டுச் சிரிக்கிறேன் - என்கிறார். எமக்கு என்று தன்மைப் பன்மையில் இத்தொடர் தொடங்குவதால் ‘யாம் கோபம் கொள்வதில்லை, கும்பிட்டுச் சிரிக்கிறோம் என்று எழுதவேண்டும். இல்லையேல் தொடக்கமே ‘எனக்கு என்றிருக்கவேண்டும்.

ஒப்பீட்டளவில் வைரமுத்தின் எழுத்துகளில் பிழைகள் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அவர் எழுதுவதிலும் உறுதியாகப் பிழைகள் உள்ளன. எழுபது, எண்பதுகளின் பிழையாட்சிகள் பல இன்னும் அவரிடம் உதிராமல் ஒட்டியிருக்கின்றன. அவற்றைக் களையவேண்டும். தம் உரையிலும் கவிதையிலும் எண்ணற்ற வடசொற்களைக் கூச்சமில்லாமல் தொடர்ந்து பயன்படுத்தக் கூடியவர். அவற்றைத் தவிர்க்க முயன்றதில்லை. வடசொற்கள் தவிர்த்து எழுதுக என்றால் இவர்கள் தவித்துப்போய்விடுவார்கள். கடைசியாகக் கூறியதற்கு வைரமுத்து மட்டுமே இலக்காக முடியாது, அக்குறைபாடு இன்றெழுதுகின்ற தொண்ணூற்றொன்பது விழுக்காட்டினர்க்கும் பொருந்தும்.

வைரமுத்து முகநூலைக் கையாண்டு பழகிவிட்டார். அதற்காக வாழ்த்துவோம் !

- கவிஞர் மகுடேசுவரன்.”

 

இதில் எது சரி எது தவறு என நான் எழுதவரவில்லை . மாறாக இரண்டையும் முன்வைத்து என் எண்ணங்களையும் வேண்டுகோளையும் முன்வைக்கவே இதனை எழுதுகிறேன்.

 

கலைஞர் தொல்காப்பியத்துக்கு உரை எழுதியபோது , வைகோ எதிரணியில் இருந்தார் .சங்கொலியில் ஓர் தமிழறிஞரைக் கொண்டு அந்த உரை பிழை மலிந்தது என தொடர் கட்டுரை எழுதினார் . நான் இரண்டையும் வாசித்தேன் .புலமைக் காய்ச்சல் அது . திருவிளையாடலில் பேசிய வசனம்தான் நினைவுக்கு வந்தது .’புலவர்களுக்குள் போட்டி இருக்கலாம் ; பொறாமை இருக்கக்கூடாது.”

 

  “தமிழில் பிழையில்லாமல் எழுதுவது எப்படி ?” பல நூல்கள் வந்துள்ளன . சமூக வலைதளங்களில் பலர் எழுதுகின்றனர் .காணொளியில் பாடம் சொல்லுகின்றனர் . ஒன்றுக்கொன்று மாறுபாடாக உள்ளது .

 

 கவிஞர் வைரமுத்து ஓர் கவிதையாகவே இதுகுறித்து விவரித்துள்ளதையும் மேலே பார்த்தோம் . வைரமுத்து சொல்வதில் பல பிழையென மகுடேஸ்வரன் பதில் எழுதுவதையும் பார்த்தோம் .

 

தமிழறிஞர்கள் இடையே புரிதல் வேறுபாடும் ; குழப்பமும் தொடரவே செய்கின்றன .  நமக்கு எது சரி எது தவறு என்று முடிவு சொல்ல முடிவதில்லை . நானும் தமிழாய்ந்த அறிஞனில்லை . வெறும் தமிழ் ஆர்வலன் மட்டுமே . எனக்கும் குழப்பம் உண்டு .

 

அண்மையில் ஓர் பதிப்பகப் பொறுப்பாளரைச் சந்தித்தேன் . “ பாரதியார் கவிதைகள் உரையுடன் கிடைக்குமா ? பாரதிதாசன் கவிதைகள் உரையுடன் கிடைக்குமா ? இப்படி சில மாணவர்கள் கேட்கிறார்கள் ….” என்று சொல்லி வருத்தப்பட்டார் .

 

அகநானூறு புறநானூறை இன்று உரையின்றி புரிந்து கொள்ள எத்தனை பேரால் இயலும் ? சிலப்பதிகாரம் ,மணிமேகலைக்குள் உரையின்றி உள்நுழைந்து புரிதல் எல்லோருக்கும் சாத்தியமா ?

 

சங்க இலக்கியத் தமிழ் அப்படியே தொடரவில்லை ; ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே வந்துள்ளன .  காப்பியத் தமிழ் , பக்தி இலக்கியத் தமிழ் , திரு வி க காலத் தமிழ் ,பாரதி காலத் தமிழ் மறுமலர்ச்சி காலத் தமிழ் , திராவிடத் தமிழ் ,தேசியத் தமிழ் , பொதுவுடைமைத் தமிழ் , தினத்தந்தி தமிழ் , பத்திரிகைத் தமிழ் ,காட்சி ஊடகத் தமிழ் , கணினி யுகத் தமிழ் என மாறிக்கொண்டேதான் இருக்கின்றன .

 

தினத்தந்தி வாசித்து தமிழைக் கற்றுக்கொண்ட வெளிமாநிலத்தவர் என்ற ஒரு காலகட்டமே இருந்தது . சொற்களின் பொருட்களும் மாறி இருக்கின்றன . புதிய சொற்களும் வந்து சேர்ந்துள்ளன . காலம் அதன் தேவைக்கு அனைத்தையும் வளைக்கும் ; ஆயினும் அடித்தளம் வலுவாயுள்ள மொழிகள் ’கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளி’ பிழைக்கும் . தமிழ் காலத்தை மீறி நிற்கும் தழைக்கும் மொழிதான் . ஆனால் என்ன பிரச்சனை ?

 

ஒரு பக்கம் நம்மிடம் வினைச் சொற்கள் குவிந்து கிடக்க ; ‘ குக் பண்ணிஎடிட் பண்ணி ,மியூசிக் பண்ணிவாக் பண்ணிஇப்படி எத்தனையோ பண்ணி அன்றாடம் செம்மொழி தமிழைபண்ணித் தமிழ்ஆக்கிக் கொண்டிருக்கும் அவலம் .தமிழ் திரைப்படத் தலைப்புகள் மட்டுமல்ல ; பாடல்களே தமிழாய் இல்லை . ஆங்கிலம் ஓங்கி நிற்கின்றன.

 

மறுபுறம் பெயர் சொற்களை - நவீன அறிவியல் தேவையின் பொருட்டு எழும் சொற்களை புழங்க முடியாதபடி வலுக்கட்டாயமாக தமிழாக்கி வெறுப்பை விதைத்துக் கொண்டிருக்கிறோம் . ‘கடுப்புத் தமிழ்’ ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.

 

பிறமொழிச் சொற்கள் கலந்தாலே புனிதம் கெட்டுவிடும் கற்பு போய்விடும் என்கிற பயமோ பதட்டமோ தேவையில்லை . எல்லா மொழிகளிலும் கலப்பு உண்டு . அது பலம்தான். பலவீனம் இல்லை .ஆனால் தம்மிடம் இல்லாத சொற்களைக் கடன் வாங்குவார்களே தவிர புழக்கத்தில் இருக்கும் நல்ல சொற்களைத் தூக்கி எறிந்துவிட்டு தாவிச் செல்ல மாட்டார்கள் . நாம் என்ன செய்கிறோம் ? உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

 

ஒலைச்சுவடிகள் காலத்தில் புள்ளி வைக்காத எழுத்துகளே . எழுத்து வடிவங்கள் மாறிமாறித்தான் இன்றைய நிலையை எட்டியுள்ளன . இனியும் மாறும் .சில சொற்களின் பொருள் உட்பட மாறியுள்ளன . நிறுத்தல் குறிகளே பின் வந்தவைதான் . மொழி மாற்றங்களுக்கு உட்பட்டதுதான் . அச்சு இயந்திரம் மொழியை அதன் இயல்புக்கு ஏற்ப மாற்றவில்லையா ? கணினி மொழியை தன் போக்கில் மாற்ற வில்லையா ?

 .

 

நவீன கணினி யுகத்துக்கு பொருத்தமான காலத்தின் சவாலுக்கு ஈடுகொடுக்கக்கூடிய இலக்கண விதிகளை நீக்கு போக்குடன் உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது . இதனை பலமுறை வலியுறுத்தி பதிவிட்டுள்ளேன். வைரமுத்து மகுடேஸ்வரன் விவாதம் மீண்டும் அதை வழிமொழியச் சொல்கிறது . இலக்கண விதிகளில் ஓர் நெகிழ்வுத் தன்மை இன்றையக்கு அவசியம் என்கிறேன்.

 

1] ஒருமை ,பண்மை வாக்கிய அமைப்பில் பிரச்சனை

2] உயர்திணை ,அஃகறிணை குழப்பம்

3] ல,ள,ழ,ண,ன,ந  போன்ற எழுத்துகளை பயன் படுத்துவதில் தடுமாற்றம்

4] ஒற்றுமிகும் இடம் ,ஒற்றுமிகா இடங்கள் பற்றி மாறி மாறி குழப்பம்

இப்படி எல்லோருக்கும் எழும் குழப்பம் முதல் நிறைய இலக்கண புரிதல் குறைபாடுகள் எங்கும் உண்டு .

 

எந்த சொல்லை எங்கு பயன்படுத்த வேண்டும் என்கிற புரிதல் குழப்பம் வலுவாக உள்ளதே  . ‘ அவர்கள் பாபர் மசூதியை இடிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்’ என்று எழுதுவதற்கும் ,‘ பாபர் மசூதியை இடிப்பதில் பிடிவாதமாக இருந்தார்கள் ‘ என்று எழுதுவதற்கும் பொருள் வேறுபாடு உண்டே !  இங்கு சொற்கள்கூட வர்க்க சார்பு ,வர்ண சார்பு ,சாதி சார்பு எல்லாம் கொண்டதாக இருக்கிறதே. ஆக ,  சொற்களைத் தேர்வு செய்வதில் ஓர் ஜனநாயக அணுகுமுறைத் தேவைப்படுகிறது . சமூகநீதி ,பாலின சமத்துவம் , ஜனநாயகப் பார்வை சார்ந்து பல பழைய சொற்கள் வழக்கொழிந்து போக வேண்டியுள்ளதே !

 

ஆக , மொழி இன்றைய நவீன தேவைக்கும் வாழ்க்கைக்கும் ஈடுகொடுக்கத் தக்க மாற்றங்களை செய்து கொண்டே இருக்கும் . செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மொழி உயிர்துடிபோடு இருக்கும் . அதற்குத் தேவை காலத்திற்கு ஒப்ப புதிய இலக்கண விதிகள் வேண்டும் . பழமைக் கெடுபிடிகள் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு இலக்கணத்தை புதிதாக்கி ‘பழகு தமிழை’ வலுப்படுத்த வேண்டும். அதற்கான இலக்கண விதிகள் நெய்யப்பட வேண்டும்.

 

இதனை ஒரு தனிநபர் செய்ய முடியாது . தமிழ் ஞானமும் நடைமுறைத் தேவையும் உணர்ந்த ஓர் வல்லுநர் குழுவை அரசே அமைத்து ; அவர்கள் முன்மொழிகிற புதிய இலக்கண விதிகளை பொது விவாதமாக்கி ; இறுதி செய்து அடுத்து ஓர் நூற்றாண்டுக்கு இவையே என முன் மொழியலாம் . அடுத்தடுத்து வரும் நூற்றாண்டுகளில் அதனை அடியொற்றி மாற்றம் வரட்டும் ! இது என் ஆசை . மீண்டும் சொல்கிறேன் நான் தமிழாய்ந்த அறிஞனல்ல ; ஆர்வலன் . ஆகவே இது என் வேண்டுகோள் .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

30/07/25


ஆல்பம் … ஆல்பம்….

Posted by அகத்தீ Labels:

 



ஆல்பம் … ஆல்பம்….

 

பீரோவில் கட்டுக்கட்டாய் தூங்கிடும்

போட்டோ ஆல்பங்களை

திரும்பிப் பார்க்க நேர்கையில்

மனத்திரையில் பழைய காட்சிகள்..

அத்தனைக்கும் சாட்சியாய் ஆல்பங்கள்

 நம் முன்னோர்க்கு வாய்க்காத பெரும் பேறு !

 

பள்ளிப் பருவ நினைவுகள்

பால்ய சிநேகங்களின் பசுமை ஞாபங்கள்

உறவுகளின் அன்றைய அந்நியோன்னியம்

திருமணத்தின் இனிய பொழுதுகள்

குழந்தைகளின் புன்னகைகள்

குடும்ப சங்கமங்களின் தடயங்கள்

பொதுநிகழ்வுகளின் சாட்சிகள்

இப்படி எத்தனையோ வரிசை கட்டின

ஆல்பங்களைப் புரட்டும் போது

சந்தோஷங்கள் மட்டுமல்ல கசப்புகளும்

மேலெழுந்து வரத்தான் செய்கின்றன

தொலைத்த போட்டோக்கள் மட்டுமல்ல

எடுக்கதவறிய போட்டோக்களும்

நினைவில் வந்து மோதத்தான் செய்கின்றன..

 

 

நேற்றுபோல் இன்று எதுவுமே இல்லை

எல்லாம் மாறித்தான் போய்விட்டன

உடை ,ஒப்பனை , பாசம் , உறவு

கனவு , கற்பனை , சூழல் , வாழ்க்கை

எல்லாம் மாறித்தான் போய்விட்டன …

 

 

பீரோவை அடைக்கும் ஆல்பங்களின் காலம்

மெல்ல மலையேறிக்கொண்டிருக்கிறதோ

கம்ப்யூட்டரில் சேகரிக்கப்பட்ட போட்டோக்கள்

தேதி நேரத்தோடு செய்தி சொல்லுகிறதே

‘ஏஐ’ செய்யும் மாயஜாலத்தில்

நாளை இதுவும் மாறிப்போகுமோ ?

 

நேற்றை அசைபோடும் சுகம்

காலவெள்ளதில் கரையாமல் நீளுமோ

அதையும் சேகரிக்க அதிநவீன ஏஐ வருமோ

நாளையப் பற்றிய கவலையும் கனவும்

இன்றையப் பொழுதில் தலைநீட்டுவதேன் ?

ஆல்பத்தைப் புரட்டியதால் வந்த வினையோ ?

 

ஹைரோஷிமா நாகசாகி அண்குண்டு வீச்சில்

தப்பிப்பிழைத்த ’ஹிபாகுஷா’க்களின் போட்டோக்கள்..

தேசப்பிதா காந்தியை கொடியவன் கோட்சே

சுட்டு வீழ்த்திய வரலாற்றுப் படம்

வியட்நாம் குண்டுவீச்சில் நிர்வாணமாய்

தப்பியோடிய சிறுமியின் போட்டோ !

பாபர் மசூதியை காவி கடப்பாரைகள்

இடித்து தரைமட்டமாக்கிய காட்சிகள்

ஆஸ்திரேலிய பாதிரியார் ஸ்டெயின் கிரஹாமும்

இரண்டு குழந்தைகளும் உயிரோடு எரிக்கப்பட்ட போட்டோ !

நவம்பர் 7  மாபெரும் ரஷ்யப் புரட்சியின்

மகத்தான வெற்றி பெருமிதத்தின் பதிவுகள்

பாசிசத்தை வெற்றிகண்டு ஜெர்மனியில்

செம்படை ஏற்றிய வெற்றிக்கொடி புகைப்படம் !

இன்னும் எத்தனையோ போட்டோக்களின் ஆல்பங்கள்

வரலாற்றுப் பக்கத்தில் அழியாதிருக்கட்டும்

மானுடத்துக்கு பாடம் சொல்லிக் கொண்டிருக்கட்டும் !

 

ஹிபாகுஷா : ஹிரோஷிமா ,நாகசாஹியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டில் தப்பிப் பிழைத்து வாழ்நாள் முழுவதும் கொடும் நோய்களோடு கண்ணீரில் வாழ்ந்தவர்கள் .

 

 

சுபொஅ.

29/07/25.

 

 

 

 


வலிமிகுந்த ஓட்டம் நிற்கவே இல்லை….

Posted by அகத்தீ Labels:

 



வலிமிகுந்த ஓட்டம் நிற்கவே இல்லை….

 

 

சக்தி சூர்யாவின் முதல் நாவல் ‘நரவேட்டை’யை வாசித்து மகிழ்ந்து பாராட்டியவன் நான் . ’சந்தாலி’ நாவல் என் கைக்கு மார்ச் மாதமே கிடைத்துவிட்டது . பல்வேறு சூழல்களால் வாசிப்பு தள்ளிப்போனது . நேற்று [ 26/07/25]தான் வாசித்து முடித்தேன் . தாமதத்திற்கு வருந்துகிறேன் .

 

வரலாற்றில் அலைகுடிகளாக ஆக்கப்பட்டுவிட்ட சந்தால் பழங்குடி மக்கள் தென் இந்திய மாநிலங்களை நோக்கி பிழைப்பு தேடி இடம்பெயர்வதை மறைந்த போராளி ஸ்டேன் சாமிகள்,” மூன்றாவது இடப்பெயர்வு” என்கிறார் . இந்த வரலாற்று செய்திகளோடும் வலிகளோடும் கொங்கு மண்டலம் நோக்கி பிழைப்பு தேடிவரும் வட இந்தியத் தொழிலாளர்கள் நிலையையும் பிசைந்து , சாதி மதம் இனம் கடந்த காதலையும் சமவிகிதத்தில் கலந்து  புனைவாக்கி நம் கையில் கொடுத்திருக்கும் சக்தி சூர்யாவிற்கு வாழ்த்துகள் .

 

முதல் அத்தியாயத்தில் நாகஜோதி எனும் பணக்காரப் பெண்ணின் ஒருதலை இச்சையால் பாதிக்கப்பட்டு , திருடன் என்கிற முத்திரையோடு பிழைப்புதேடி வந்த ஓர் வட இந்திய இளைஞன் செங்கா ஓடத் தொடங்கியதும் அதே தடத்தில்தான் நாவல் பயணிக்கும் என நீங்கள் நினைத்தால் அது பிழையாகிவிடும் . அந்த காட்சிக்கும் அடுத்தடுத்து வருவதற்கும் சம்மந்தம் இல்லை . செங்காவை சபலமற்றவனாகக் காட்ட அந்த முதல் காட்சி தேவைப்பட்டதோ?  அல்லது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய சமூகத்தின் பொது புத்தியை சுட்ட இக்காட்சி அமைக்கப்பட்டதோ? ஈர்ப்பாக அமைந்துவிட்ட நுழைவாயில் .

 

சந்தாலிகளின் உருவமற்ற கடவுள்கள் மாறன் புரூ , போங்கா ,தோட்டக் காவியா , அவர்களின் சாமியாடி ஓஜா ,பபேல் கோபுரம் என பண்பாட்டு காட்சிகள் ,ஓல்சிக் மொழி எனும் சந்தாலி மொழி மெல்ல வழக்கற்றுப் போகும் நிலை ,  கன்யாட்டுகள் ,பட்நாய்க்குகளின் நிலபிரபுத்துவ சாதிய ஆதிக்கம் , சந்தால் மக்களின் கையறு நிலை நாவல் முழுவதும் விரவிக் கிடக்கிறது . கதை நாயகன் செங்கா இந்த சமூகத்திலிருந்து வந்தவன் .ஆனால் தான் ஒரிசாவிலிருந்து வந்தவன் என்றே சொல்லிக் கொள்வான் .இது ஓர் கதைக் களம் .

 

செங்கா கோவையில் ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றும் சூழல் , அங்கு பல ஊர்களில் இருந்து வந்து சுமங்கலித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பணிபுரியும் பெண்கள் , இங்கு இவன் சந்திக்கும் மனிதர்கள் , முதலாளித்துவ சுரண்டல் எல்லாம் இன்னொரு கதைக் களமாகிறது .ஆக இந்நாவல் இரண்டு கதைக் களத்தில் பயணிக்கிறது . இரண்டும் நெடுந்தொலைவிலுள்ள கதைக் களங்கள் . பண்பாட்டுச் சூழலும் சமூக உளவியலும் வெவ்வேறானவை . ஆனால் வாழ பிழைப்பு தேடி ஓடுவது ஒன்றே இணைப்புச் சங்கிலி . கடைசிவரை அந்த வலிமிகுந்த ஓட்டம் நிற்கவே இல்லை .

 

சந்தால் பழங்குடி செங்காவின் தந்தை கிஷ்கு கோரா , தாய் செர்மா , தங்கை சித்ரமுகா , பாட்டி பாதல் முர்மு , சித்ரமுகாவின் காதலன் உயர்சாதியான கன்யாட் சமூகத்தைச் சார்ந்த ரித்விக் , கன்யாட் ,பட்நாய்க்  போன்ற ஆதிக்க சமூக ஒடுக்குமுறைகள் எனக் கதை சுழலும் . செங்கா பிழைப்பு தேடி கோவை வந்தவன் .

 

செங்கா  அவன் நண்பன் இஸ்மாயில் ,  ஸ்பின்னிங் மில்லில் உடன் வேலை செய்யும் மஞ்சு , செங்கா மஞ்சு இடையே அரும்பும் காதல் , சிஐடியு சங்கம் தோழர் செல்வராஜ், அவரோடு செங்காவின் தொடர்பு ,விரியும் புதிய பார்வை என கதை வளர்கிறது . செல்லா நோட்டு , ஜல்லிக்கட்டு போராட்டம் ,கொரானா கொடும் தாக்குதல் , சொந்த ஊரை நோக்கி நெடிய கொடிய நடை பயணம் என சமூக அரசியலும் வலுவாக வினையாற்ற கதை மேலும் விரிகிறது . இஸ்மாயில் ,செங்கா ,மஞ்சு இடையே சாதி ,மதம் , இனம் அனைத்தையும் தாண்டிய அன்பும் அரவணைப்பும் ; கொரானா இடப்பெயர்வும் யதார்த்த இந்தியாவை  சித்தரிக்கிறது.

 

நாவல் முடிவதற்குள் ஒரு வன்புணர்வுக் கொலை , ஒரு ஆவேசக் கொலை , நான்கு கொரானா சாவுகள் , ஒருவர் சிறைக் கொட்டடியில் , ஒருவர் மனநிலை பிறழ்ந்து அலைய , காதலி மஞ்சுவை பிணமாக மடியில் சுமந்தபடி பயணம் தொடருமா எனும் கேள்விக்குறியோடு செங்கா என திரைப்படக் காட்சிபோல் அடுத்தடுத்து நகரும் சோகக்காட்சிகள் .

 

இடப்பெயர்வின் வலியும் , மனிதம் கசியும் வாழ்வும்  பாடுபொருளாகி புதிய மானுடப் பார்வையை விதைக்க முனைகிறது . உழைக்கும் பாட்டாளிக்கு சாதி இல்லை ,மதம் இல்லை ,நாடு இல்லை’ என ஓங்கிச் சொல்கிறது இந்நாவல் எனில் மிகை அல்ல .

 

 “ சக்தி சூர்யாவின் நடை மென்மையும் இனிமையும் வாய்ந்த தென்றல் போன்ற அழகியலையும் ,புயலைப் போன்ற வேகத்தையும் ,கொடும் பாலையைப் போன்ற துயரத்தை விவரிக்கும் ஆழத்தையும் கொண்டிருப்பது தனிச் சிறப்பானது.”என சிறந்த எழுத்தாளர் இரா.முருகவேலே பாராட்டியபின் நான் சொல்ல என்ன இருக்கிறது ?

 

அதுபோல் சிறந்த எழுத்தாளர் கமலாலயன் சொல்கிறார் ,” கடைசி ஐம்பது பக்கங்களைப் படிக்கும் போது எழுந்த உணர்வுகளின் அழுத்தம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை .” ஆம். நாவலை படிக்கும் ஒவ்வொருவரும் இதை உணர்வீர்கள் .

 

 ’நரவேட்டை’நாவலின் களமும் காட்சிகளும் உயிர்த்துடிப்பான நிகழ்வுகளின் வழி நகர்வதே அதன் வெற்றிக்கு அடித்தளம் . ஆனால் ,’ சந்தாலி’ நாவல் சமூக அறிவின் வழி நெய்யப்பட்ட புனைவு . ஆகவே அதற்குரிய பலம் பலவீனம் இரண்டும் உள்ளடக்கியது .

 

புலம் பெயர் தொழிலாளர்களை எப்படிப் பார்க்கப் பழக வேண்டும் என்பதற்கு இந்நாவலைப் படியுங்கள் !

 

சந்தாலி [ நாவல் ], சக்தி சூர்யா , பாரதி புத்தகாலயம் ,thamizhbooks.com  / 8778073949  , பக்கங்கள் : 304 , விலை  :ரூ.310 /

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

27/07/25.

 


தூக்கத்தின் கேள்வி....

Posted by அகத்தீ Labels:

 


தூக்கத்தின் கேள்வி....

 

 


'தூக்கம்' நாலே எழுத்துதான்

அது படுத்தும் பாடு

தூக்கம் வராமல் புரண்டு

படுப்பவரைக் கேளுங்குகள்

கதை கதையாய்ச் சொல்வார்கள்.

 

குழந்தை தூங்கும் நேரமே

சற்று ஓய்வு கிட்டும் தாய்க்கு

குழந்தை தூக்கத்தில் வீறிட்டால்

நெஞ்சக் குலை நடுங்கும் தாய்க்கு

 

தூக்கம் தொலைத்த இரவுகளை

பெண்களிடம் கேளுங்கள்

ஆயிரம் சோகப் பாட்டுகள்

பீறிட்டு வெளிப்படும்

 

பிய்த்துப் பிடுங்கும் வேலைகள்

தூக்கத்தை பிய்த்துப் போட்டுண்டு !

நெஞ்சை அரிக்கும் கவலைகள்

தூக்கத்தை எரித்து சாம்பலாக்கியது உண்டு

 

குறட்டை , பொறுப்பின்மை,

கொல்பசி ,நோய்நொடி , கடன் ,கவலை

தூக்கத்தைத் தின்றவைகளின்

பட்டியல் நீளும்

 

ஆயிரம் பிக்கல் பிடுங்கல் இருப்பினும்

அடித்துப் போட்டது போல் தூக்கம்

கடும் உழைப்பு தந்த பரிசு

 

ஆயிரம் வசதிகள் கொட்டிக் கிடப்பினும்

அரை நொடியும் மூட மறுக்கும் இமைகள்

அடங்காப் பேராசையின் அங்கம்.

 

இடம் மாறி படுத்தாலும்

நேரம் தவறி படுத்தாலும்

குடும்பத்தை பிரிந்தாலும்

படுத்தி விடும் தூக்கம் !

 

இரவுத் தூக்கம்

பகல் தூக்கம்

பணியில் தூக்கம்

பயணத்தில் தூக்கம்

 

'அவனுக்கு என்ன

படுத்ததும் தூங்கி விடுவான்'

ஆணோ பெணோ யாரோ

கேட்கும் வரம் இதுதான்

 

மீளாத் தூக்கம் வரும்வரை

தூக்கத்தோடு ஒவ்வொரு நாளும்

போராடும் முதுமை

வரமல்ல வாழ்க்கை !

 

யாசித்து இருப்போரிடம் வராமல்

மல்லுக்கட்டும் தூக்கம்

விழித்திருக்க வேண்டியோரிடம்

அழைக்காமல் ஒட்டிக் கொள்கிறது

 

தூங்குவதற்கென்று இரவு வருகிறது

தூங்கவிடாமல் பணிகள் துரத்துகிறது

உன் விழிப்பையும் தூக்கத்தையும்

நீயே தனித்து முடிவு செய்ய முடியுமா ?

 

பெற்றோர்கள் மண்றைக்கு நடுவே

பசி மயக்கத்தில் தூங்கும்

பாலஸ்தீனக் குழந்தையை

காஸா வெளியில் கண்ட பின்னும்

தூங்குமோ உலகின் மனசாட்சி !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

24/07/25.


நெல்லு மரம்

Posted by அகத்தீ Labels:

 

 


’நெல்லு மரம்’ பார்க்க

பயணம் போகும் குழந்தைகள்!

 

புல்லுக்கு நீர் பாய்ச்சும் அதிசயத்தை

இமை மூடாமல் பார்த்தனர் !

 

வாசமுள்ள பூக்கள் வாடிவிடுவதை

கண்டு கண்கலங்கினர் !

 

பந்தியில் இலைபோட்டு பரிமாறியதை

பார்த்து துள்ளிக் குதித்தனர் !

 

பச்சைக் குதிரை தாண்டி விளையாட

பரவசமாய் ஓடினர் !

 

பிளாஸ்டிக் , பாஸ்ட்புட் .டிஜிட்டல் உலகிலிருந்து

விடுபட்ட குழந்தைகள் !

 

சுபொஅ.

21/07/25.

 

 


டிஜிட்டல் உலகில் காசு போறது தெரியுமா ?

Posted by அகத்தீ Labels:

 


டிஜிட்டல் உலகில் காசு போறது தெரியுமா ?

 

 

 “கையில வாங்கினேன் பையில போடல

காசு போன இடம் தெரியலே

என் காதலி பாப்பா காரணம் கேப்பா

ஏது சொல்லுவதேன்றும் புரியல்லே

ஏழைக்கு காலம் சரியில்லே

கையில வாங்கினேன் பையில போடல

காசு போன இடம் தெரியலே..”

 

1960 ஆம் ஆண்டு “ இரும்புத்திரை” படத்தில் திருச்சி லோகநாதன் பாடியது .பாடலை எழுதியது மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . இசை எஸ்.வி.வெங்கட்ராமன் . இப்பாடல் வரிகளை இன்றைக்கு கேட்டாலும் நம்மை தலையாட்ட வைக்கும் .

 

ஆனால் , ‘காசு போற இடம் தெரியாத’ அளவு டிஜிட்டல் உலகம் நம் கையிருப்பை களவாடுகிறது . பட்டுகோட்டை பாடல் வரியின் பொருளே சமூக உளவியலில் மாறி மரத்துப்போனதோ. அது குறித்து பேசுவோமா ?

 

முன்பு நூறு ரூபாய் எடுத்துக்கிட்டு கடைக்குப் போனால் விலையைக் கேட்டு , இருக்கிற காசுக்கு  ஏற்ப பொருட்களை வாங்குவோம் . இப்போது பொருட்களை வாங்கிவிட்டு  “போண் பே” பண்ணுகிறோம் .பெரும்பாலும் அது பட்ஜெட்டைத் தாண்டிப் போகும் ; ஆயின் உறைக்காது . நம்மை மீறி காசு கரைகிறது ; ஆனாலும் தெரியாது …

 

அதுமட்டுமா கிலோ எவ்வளவுன்னு கேட்டு அரைக்கிலோ கால்கிலோன்னு கேட்டு வாங்குவோம் .இப்போதெல்லாம் நீங்க எடுக்கிற  எடை கால் கிலோவா முன்னூற்றி பத்து கிராமா பிரச்சனை இல்லை .பில் அதுக்கு தானாகப் போட்டுவிடும் . கணக்கு பார்ப்பதும் கிடையாது .

 

சாப்பாடு , மளிகைச் சாமன் , காய்கறி ,லொட்டு ,லொசுக்கு எல்லாம் ஆன் லைனில் வாங்கிக் குவிக்கிறோம் . வாங்குவதும் பணம் கொடுப்பதும் நொடியில் நடந்துவிடுகிறது . செலவு கைமீறிப் போய்க் கொண்டிருக்கிறது .

 

 

ஒரு லிட்டர் fortune எண்ணை என்ன விலை என அறிந்து வாங்குவோம் . இப்போது விலை ஏற்றுவதில்லையாம் ,ஆனால்  அதே விலை ஆனால் 870 மில்லி பாக்கெட்டில் அடைத்து விற்கிறான் .நாமும் வாங்குகிறோம் .கிட்டத்தட்ட இது ஒரு வியாபரத் தந்திரமாகிவிட்டது .இதனை ’மோடி தந்திரம்’ என்கின்றனர் .

 

பெட்ரோல் விலை ஏறுவது நறுக்கென முன்பு உறைக்கும் .இப்போது விலை ஏறியது தெரியாது . ’நூறு ரூபாய்க்கு போடு ! ஐநூறு ரூயாய்க்கு போடு !’ன்னு பழகிட்டோம். பெட்ரோல் பங்கிலிருந்து வரும் நூறு பேரை வழிமறைத்து பெட்ரோல் இன்று என்ன விலைன்னு கேளுங்கோ , 99 பேர் திருதிருன்னு முழிப்பார்கள். இதில் இருந்துதான் ‘மோடி தந்திரம்’ உருவானது .

 

வருங்காலத்தில் மின்சாரம் ,தண்ணீர் எல்லாம் இப்படி கொடுக்கிற காசுக்கு தருவதை வாங்குவதாக மாறிப்போகும் .கட்டண ஏற்றம் தெரியாது .

 

காசை எண்ணிக் கொடுப்பதில்லை ; போண் பே அல்லது கார்டை உரசுகிறோம் , அதிலும் கிரடிட் கார்டு உரசி உரசி தீராத கடன் வலையில் சிக்குகிறோம் . உணர்ச்சியே இல்லை . டெபிட் கார்டு இருப்பை அறியாமல் அதிகபட்சம் உரசி விட்டு ; மினிமம் பேலன்ஸ் இல்லாமல் பைன் வேறு கட்டி அழுகிறோம். இருக்கிற காசுக்கு வாங்கிற காலம் போய் , ” கடையில இருக்கிறேன் அக்கவுண்டல காசு இல்லை உடனே ஆயிரம் போட்டுவிடுன்னு …” கணவனோ மனைவியோ கேட்கிற காலம் வந்தாச்சு … திட்டமிட்ட வாழ்க்கை இல்லை ; நாம் பொருட்களின் இழுப்பில் அல்லாடுகிறோம்.

 

 

காசு வருவதும் தெரியவில்லை ; போவதும் தெரியவில்லை டிஜிட்டல் பரிவர்த்தனை நம்மை எளிதாகச் சுரண்ட ; பிக்பாக்கெட் அடிக்க நல்ல வாய்ப்பாகிவிட்டது . எளிதாக இருக்கிறது ,சில்லறைப் பிரச்சனை இல்லை , பணத்தை சுமந்து திரிய வேண்டாம் எல்லாம் சரி . இனி இந்த டிஜிட்டல் உலகிலிருந்து தப்பிக்க ஒருபோதும் முடியாது ; எல்லோர் வாழ்விலும் அது ஒரு அங்கமாகிவிட்டது . சமூக உளவியலே பழகிப்போனது என்று சொல்வதா, மரத்துப் போனது சொல்வதா?

 

எப்படி ”நிரந்தர வேலை” என்கிற கருத்தே இன்றைய தலைமுறையிடம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறதோ ; அப்படியே  “விலையேற்றமும்” உறைக்காத அளவு டிஜிட்டல் மரத்துப் போகச் செய்கிறது என்பதும் உண்மை . உலக மயமும் நவீன மயமும் தன் சுரண்டலுக்கும் கொள்ளை லாவவெறிக்கும்  ஏற்ற மனிதர்களை வெறும் நுகர்வோர்களாய் பொம்மைகளாய் செதுக்குவதில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது . AI இன்னும் என்னென்ன செய்யப் போகிறதோ ? எதிர்காலச் சவால் நுட்பமானது தந்திரமானது ஆபத்தானது தவிர்க்கவே முடியாதது. அதனை எதிர்கொள்ளும் மனிதரை நாம் எப்படி உருவாக்கப் போகிறோம் ? கோடி டாலர் கேள்வி .

 

[  ரூபாய் தேய்ந்து கொண்டே போகிறது .ஒரு நாள் காணாமலே போகுமோ ! ஒரு கட்டத்தில் மோடி போகிற போக்கில் டிரம்ப் சொன்னாருன்னு ரூபாய் செல்லாது ,இனிஅமெரிக்க டாலர்தான் புழங்கணும்னு டிவியில வந்து சொல்லிவிடுவார்ன்னு நினைக்கிறேன். இல்லை .இல்லை .இதையும் அமெரிக்காவிலிருந்து டிரம்பே சொல்லிவிடுவாரோ!]

 

சுபொஅ.

20/07/25.