Showing posts with label கேள்விகள் தொடர. Show all posts
Showing posts with label கேள்விகள் தொடர. Show all posts
Posted by அகத்தீ Labels:

 

கேள்விகள் தொடரும் ...1.


பிறப்போடு வந்த மத அடையாளத்தை விட்டொழிக்க முடியுமா ?

 

கேள்வியே பிழை .நான் எந்த மத அடையாளத்தோடும் குறியோடும் பிறக்கவில்லை .என் தாயும் தந்தையும் சைவ சமய நம்பிக்கை சார்ந்து ஒழுகியவர்கள் .அவர்கள் என்னை வளர்த்த போது என்னில் அதன் சாயல் ,நிழல் ,கருத்து எல்லாம் படிந்தது .அதனாலேயே நான் அந்த மதம் என என்மீது அடையாளம் சுமத்துவது எப்படி நியாயமாகும் ? என் மீது மட்டுமல்ல யார் மீதும் பிறப்பு சார்ந்து மத அடையாளம் சுமத்துவது வன்முறை என்றே நான் கருதுகிறேன்.

 

நான் அந்த மதத்தின் அடிப்படை தத்துவப் போக்கை அறிந்தேனா ? ஒப்புக் கொண்டேனா ? இந்த இந்த காரணங்களால் இம்மதம் பிற மதங்களோடு உயர்ந்தது என அலசி அறிந்தேனா ? எதுவும் இல்லை . என் பெற்றோர் ஓர் சமய நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதால் நானும் அதே மதம் என்பது அறிவுக்கு பொருந்துமா ?

 

ஓர் குறிப்பிட்ட பருவம் வந்த உடன் அதாவது பள்ளிப் படிப்பு முடியும் போது எனக்கு இனி எத்தகைய கல்வி வேண்டும் என விரும்பி நானே தேர்ந்தெடுக்க உரிமை வேண்டும் என்பது எவ்வளவு நியாயமோ ?

 

திருமண வயதை அடைந்ததும் என் இணையை நானே தேர்ந்தெடுக்க உரிமை வேண்டும் என்பது எவ்வளவு பொருள் பொதிந்த வாதமோ ?

 

அக்காலகட்டத்தின் என் வாழ்க்கை முறையை நானே கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்பது எவ்வளவு சரியோ !

 

அதேபோல் ,அந்த காலகட்டத்தில் ஏதேனும் ஒரு மதத்தை விரும்பி ஏற்கவோ , நிராகரிக்கவோ , வேறு சிந்தனைப் போக்குகளில் ஈடுப்பாடு காட்டவோ முழு உரிமை வழங்கப்படுவதுதானே நியாயம் ?

 

அதாவது ஒருவனோ ஒருத்தியோ அறிவு பூர்வமாக சிந்தித்து சுய சிந்தனையின் அடிப்படையில் ஓர் மதத்தை தழுவவோ விலகவோ ஏற்கவோ நிராகரிக்கவோ செய்யும் போதுதானே அது உறுதியான அடையாளமாகக் கொள்ள முடியும் .அதை விடுத்து பிறந்த உடனேயே என் மச்சம் போல் ஒட்டிக் கொண்டு வந்தால் எப்படி என் மதமாகும் ? மச்சம் என சொல்லலாம் .அவ்வளவே !

 

மொத்தத்தில் என் மீது சமூகம் சுமத்தியுள்ள மத அடையாளம் என் விருப்பமின்றி என் மீது சுமத்தப்பட்டதே. என் மீது நிகழ்த்தப்பட்ட முதல் வன்முறையே ! அதை ஏற்கவோ விட்டொழிக்கவோ எனக்கு முழு உரிமை உண்டு .

 

கேள்விகள் தொடரும் ….

 

சுபொஅ. 15 /10 /2022.