தினம் ஒரு சொல் . ஓர் வேண்டுகோள்.. சமூக வலைதளத்தை வெறுமே கேலி,கிண்டல் ,அரசியல் திண்ணைப் பேச்சு இவை தாண்டி பயனுள்ள விதத்தில் பயன்படுத்த இயலுமா என்பது என் கேள்வி . சில சிறிய முயற்சிகளை இதில் சோதித்தும் வருகிறேன் . அதன் ஒரு பகுதியாக “தினம் ஒரு சொல்” என 22/8/2018 ல் ஆரம்பித்தேன் .நேற்றோடு [23/12/2018] 124 நாட்கள் கடந்துவிட்டன . இடையில் பல்வேறு பணி நிமித்தம் சில நாட்கள் விடுபட்டன .ஆக எப்படியோ 100 நாட்கள் ஒரு தொடர் முயற்சியை நேற்று வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டேன் . நான் எதிர்பார்த்ததைவிட அதிகம் வரவேற்பு கிடைத்தது .மகிழ்ச்சி . http://akatheee.blogspot.com/2018/12/100.html எனும் வலைப்பூவில் அனைத்தும் மொத்தமாகக் காணக்கிடைக்கிறது .வாய்ப்புள்ள நண்பர்கள் படித்துவிட்டு உங்கள் கருத்தை முகநூலில் இதன் பதிலாகவோ ,உள்டப்பியிலோ ,அல்லது agathee2007@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியிலோ பதிவு செய்யுங்கள் . அது அடுத்தகட்ட நகர்வுக்கு உறுதுணையாகும் . இப்பதிவின் இடையில் ஒரிரு நண்பர்கள், “ நீ யோக்கியமா ? உனக்கு என்ன தகுதி இருக்கு ? சொன்னபடி நீ நடந்ததுண்டா ?” என்பன போன்ற விமர்சனங்களை வீசினர் .அவர்களுக்கு சொல்லுவேன் .இங்கே நான் சொன்னவை நான் செய்தது மட்டுமல்ல செய்யத்தவறியதுதான் .அனுபவம் என்பது இரண்டும் கலந்ததே . சொல்லுவது எல்லோர்க்கும் சுலபமாகும் .சொன்னபடி நடப்பவர் மிகவும் சொற்பம் . நானும் நீங்களும் என்னை விமர்சித்தவரும் அப்படியே .ஆயினும் தொடர்ந்து சொல்வதும் ,செய்ய முயற்சிப்பதுமே முன்னேற்ற விதியாகும் . மொத்தமாய் மீண்டும் படியுங்கள் . உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் . புத்தாண்டில் இன்னொரு புது முயற்சியோடு சந்திப்பேன் . தோழன் சு.பொ.அகத்தியலிங்கம் .
தினம் ஒரு சொல் .100 [ 23 /12/2018 ] நிறைவு . ஒவ்வொருவரும் ஒரு தனியாள் . அதேவேளை குடும்ப உறுப்பினர் ,ஒரு பணியாளர் ,சமூக உறுப்பினர் எல்லாவற்றுக்கும் பொருந்திப் போகிற போராட்டமே வாழ்க்கை ஆகிறது . ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றுக்கு தீர்ப்பு சொல்லும் நீதிமானாகவும் ; இன்னொரு இடத்தில் பதில் சொல்ல வேண்டியவராக குற்றம் சாட்டப்பட்டவராகவும் நிற்கிறோம் . நூறு சதம் யோக்கியன் என்று யாரும் நேற்றும் இல்லை .இன்றும் இல்லை .நாளையும் இருக்கப் போவதில்லை .ஒவ்வொருவரும் குறை நிறைகளோடுதான் பிறந்தோம் .வளர்ந்தோம்.வாழ்கிறோம் . ஆகவேதான் வள்ளுவரும் சொல்வார் “ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே / செல்லும்வாய் எல்லாம் செயல்” அதாவது இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் இடைவிடாது அறச்செயலைச் செய்க என்றார் . ‘இயன்றமட்டும்’ என்பதால் பிரச்சனை இல்லை .முயற்சிக்கலாம் ஆனால் எது ‘அறச்செயல்’. ‘அறவழி’ என்பதே பெரும் கேள்வி . வேதம் படித்தான் என்பதற்காக சம்புகன் தலையை ராமன் சீவிய மநுஅறமா ? கட்டிய மனைவியை நெருப்பில் இறக்கிய ராம அறமா ? மனைவியை வைத்து சூதாடிய தரும அறமா ? தன் கணவருக்கு தீங்கிழைக்கப்பட்டது என்பதால் ஒன்றுமறியா அப்பாவிகளையும் எரித்த கண்ணகி அறமா ? அப்போதும் பசு ,பார்ப்பான் என பிரித்து ஏனையோரை எரித்த சிலம்பறமா ? வஞ்சகத்தால் கர்ணனை வீழ்த்திய கிருஷ்ண அறமா ? காலந்தோறும் அறம் என்பது மாறிக்கொண்டே வந்திருக்கிறது .எல்லா மதத்திலும் எல்லா இடத்திலும் இத்தகைய அறமே முன்மாதிரியாய்ச் சொல்லப்படுகிறது . இவை எதுவும் அறமல்ல எனத் தெளிவதே அறத்தின் பாலபாடம் . ஒடுக்குமுறைக்கு எதிராய் ஓங்கி ஒலிக்கும் குரலே அறம் . உழைப்பைப் போற்றும் உழைப்போரை உயர்த்தும் எதுவும் அறமே ! சாதி ,மத வேலி உடைத்து மனிதம் போற்றல் அறமே ! பாலின சமத்துவம் பேணிட முயலுதல் அறமே ! வெள்ள அன்பால் மானுடம் தழுவல் அறம் !அன்பெனப்படுவது யாதெனில் நிபந்தனை அற்றது ,வேலிகளற்றது , பிரதிபலன் எதிர்பாராதது எனத் தெளிதல் அறம் . தனிமனிதனாய் – குடும்ப மனிதனாய் – பணியிட மனிதனாய் –சமூக மனிதனாய் எங்கும் அறம் ,அன்பென வாழத் தலைப்படலே வாழ்வின் பொருள் .இது சொல்வது எளிது . நடைமுறை சவாலானது . ஒல்லும் வகை எல்லாம் மாற்றங்களூடே இந்த சவாலை எதிர் கொண்டு வாழப்பழகு ! மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வை ! வேறென்ன இனியும் சொல்ல .சரிதானே !!! நிறைந்தது எம் சொல் . [ நாளை பின்னுரையாய் ஓர் வேண்டுகோள் முன்வைப்பேன் .] Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .99 [ 22 /12/2018 ] “ எல்லோருக்கும் உதவி பண்ணணும்னு டீச்சர்தானே சொல்லிக் கொடுத்தாங்க ; பரிட்சையில பக்கத்து பிள்ளைக்கு ஹெல்ப் பண்ணுனா திட்டுறாங்க …” என அந்த சிறுமி புகார் செய்தபோது சிரிப்பை அடக்க முடியவில்லை . குழந்தைகளின் உலகமே தனி .அதனை புரிந்து கொள்ள தனி பயிற்சியே தேவை . ஒரு குழந்தை இப்படி புரிந்து கொண்டதில் பிழையில்லை .ஆனால் பெரியவங்க பல பேர் எல்லாவற்றையும் வறட்டுச் சூத்திரமாகவே புரிந்து கொண்டு வாழ்க்கையை வெறும் சடங்குத்தனம் ஆக்கிவிடுகிறார்களே ? இன்று நவீன வாழ்க்கைச் சூழலில் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஆங்கில ஞானம் அவசியமாய் இருக்கிறது .போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது .இதுவரை புரிதல் சரிதான் . ஆனால் ஆங்கிலமே அறிவு என மயங்குவது .தாய்மொழியைப் புறக்கணிப்பதும் . போட்டிக்கு பிள்ளைகளை தயாரிக்கிறோம் என்கிற பெயரில் அவர்களில் சுயத்தையே அழிப்பதும் எந்தவையில் நியாயம் ? வறட்டுத்தனம் எந்திரச் செயல்பாடு என இதைத்தான் சொல்லுகிறோம் . பதின்பருவ பிள்ளைகளை பூட்டி வைத்து கிணற்றுத் தவளை ஆக்கிவிடாதீர் என்கிறோம் . ஒரு பக்கம் அடக்குமுறையில் பிள்ளைகள் தவிக்கிறார்கள் ; கொஞ்சம் மூச்சுவிட இடம் கிடைத்தாலும் தடம் மாறிவிடுகிறார்கள் .மறுபக்கம் கடிவாளம் அற்ற குதிரையாய் அலையவிட்டு இடறி விழுந்ததும் வாயில் வயிற்றில் அடித்துக் கொள்கிறார்கள் . இதைத்தான் வறட்டுத்தனம் ,செக்குமாட்டுப் பார்வை என்கிறோம் .இது பழுதானது .கன்றுக் குட்டி மைதானத்தில் தாராளமாய் மேயட்டும் அதன் நுனி உங்கள் கைவசம் இருக்கட்டும் . உங்களின் ஒரு கண் அதன் மீது எப்போதும் இருக்கட்டும் .ஆக எதையும் இந்தக் கோடி அந்தக் கோடி என புரிந்து கொள்ளாமல் நிதானமான சீர்தூக்கிய அணுகுமுறை தேவை . “ வீணையின் நரம்புகளை இறுகக் கட்டாதீர் / நரம்புகள் அறுந்து போகும் இசைக்க முடியாது /வீணையின் நரம்புகளை தளர்வாகக் கட்டாதீர் / இசை அபஸ்வரம் ஆகிவிடும் / வீணையின் நரம்பை மிதமாய்க் கட்டுங்கள் ….” என்ற பொருளுடைய ஒரு பாடலைப் பழங்குடி விறகுவெட்டும் பெண் பாடக் கேட்டே புத்தர் ஞானம் பெற்றார் என்றொரு வழக்கு உண்டு . அது மெய்யோ பொயோ . ஆனால் பாடலின் சாரம் ஆகப்பெரும் ஞானமே ! வறட்டுப் பார்வையோ வளவள கொளகொள பார்வையோ வாழ்க்கைக்கு உதவாது . நிதானமான ,சரியான பார்வையை வாழ்க்கைப் பயணத்தில் வளர்த்தெடுத்தபடியே முன் செல்லுங்கள் ! Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .98 [ 21 /12/2018 ] “வயது 35 ஆகிறது . எப்போது கேட்டாலும் கல்யாணம் வேண்டாம் .வேண்டாம் .இப்படியே போனால் நாங்க எப்போது பேரன் ,பேத்தியைப் பார்க்கிறது ? அதது காலாகாலத்தில் நடக்க வேண்டாமா ?” இது போன்ற உரையாடல்களை நாம் நிறையக் கேட்டிருப்போம் . அவனுக்கு/அவளுக்கு வேறு தொடர்பு ஏதேனும் இருக்குமோ ? அல்லது மனதில் வேறு யோசனை இருக்குமோ ? உடல் கூறு பிரச்சனை ஏதேனும் இருக்குமோ ? இப்படி ஆளுக்கொரு கோணத்தில் திருமணம் வேண்டாம் என்பவரை பிரித்து அலச உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது ? ஆணோ பெண்ணோ திருமணம் செய்து கொள்வதோ ,திருமணம் செய்யாமலிருப்பதோ , சேர்ந்து வாழ்வதோ ,பிரிந்து வாழ்வதோ , விவாகரத்து பெறுவதோ . சகித்து வாழ்வதோ ,மறுமணம் செய்து கொள்வதோ ,மறுமணம் செய்யாமலிருப்பதோ ,குழந்தை பெற்றுக் கொள்வதோ ,குழந்தை பெறாமலிருப்பதோ .குழந்தையை தத்து எடுப்பதோ .தத்துக் கொடுப்பதோ , லிவிங் டுகெதரோ ,அண்டர் ஸ்டேண்டிங்கில் வாழ்வதோ , தனித்தே வாழ்வதோ எதுவாயினும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரம் . அவரவர் உரிமை .அவரவர் விருப்பம் .இதனை பொதுவில் விவாதிக்க முடியாது . திருமணம் வாழ்க்கையின் முக்கிய திருப்பு முனையாகும் .அந்த திருமணம் உடலியல் தேவையும் , உறவியல் தேவையும், உளவியல் தேவையும், சமூகத் தேவையுமாகும் .நாம் மறுக்கவில்லை .அதே போல் குழந்தைப் பேறும் மிக முக்கியமே நாம் நிராகரிக்க வில்லை . ஆயினும் அதை கட்டாயமாக்குவது தேவையில்லை . உரிய வயதை எய்துவிட்ட எவரொருவருக்கும் அவர் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முழு சுதந்திரமும் உண்டு . அதில் தேவையற்று மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமை இல்லை . நீங்கள் எந்த பாதையை வேண்டுமாயினும் சுயமாய் தேர்வு செய்யலாம் ; அதே நேரத்தில் எவரொருவரும் தன் சுயலாபத்திற்காக அல்லது சுயநலனுக்காக இன்னொருவர் வாழ்க்கையை கிழித்தெறிய அனுமதிக்கவே கூடாது .வாழு ! வாழ விடு . இதுவே வாழ்வின் ஆதார சுருதி !!! Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .97 [ 20 /12/2018 ] எங்க அம்மாவுக்கு பேரன் மீது அதீத பாசம் .பேத்தியோடு சதா உரசல் இருக்கும் .எல்லா வீடுகளிலும் இதுபோல் காணலாம் .எல்லா பிள்ளையும் சமம் எனப் பேசினும் ஒரு பிள்ளைக்கும் இன்னொரு பிள்ளைக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்கவே செய்யும் . பெண் அப்பா செல்லம் ;பையன் அம்மா செல்லம் . இப்படி இருப்பது சர்வசாதாரணம் . இதன் பொருள் இன்னொரு பிள்ளையை ஒதுக்குகிறார் என்றோ வெறுக்கிறார் என்றோ பொருளல்ல .ஆயினும் ஒருவித பாரபட்சம் ஏதோ ஒரு வகையில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் .இதனை தவிர்க்க வேண்டும் என பேசலாம் .எழுதலாம் ஆனால் வாழ்க்கை நெடுக இந்த பாரபட்சம் தொடரவே செய்யும் .ஏன் ? பொதுவாய் ஒரு குழந்தைக்கு சமூகவியலோ கணிதமோ ஆங்கிலமோ ஏதேனும் ஒன்றில் ஈர்ப்பு இல்லாமல் இருக்கலாம் .இன்னொன்றில் அதீத ஈடுபாடு இருக்கலாம் .இதனை அங்கீகரிக்கிற மாதிரி கல்வி முறை இல்லாதது பெருங்குறை .இதனால் குழந்தையின் பலமான பக்கம் வெளிப்படவோ பாராட்டுப் பெறவோ வழியின்றி பலவீனமான பக்கம் துருத்துவதும் , அது சார்ந்தே பிரச்சனைகள் முளைப்பதும் கண்கூடு . வீட்டிலும் அதுவே எல்லா குழந்தையும் ஒரே போல் இருக்காது .ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கும் .நாம் விரும்பியபடி இருப்பதையே நாம் ரசிப்பதும் ; நம் விருப்பத்துக்கு மாறாய் இருப்பதை குறை சொல்வதும் இயல்பாகிவிடுகிறது .நம் தேவைகளைப் பட்டியலிட்டு செய்கிற ரோபட்டு அல்ல குழந்தைகள் .எல்லோரும் இதனை ஒப்புக் கொள்வர் ஆயினும் நடைமுறையில் திணறல் இருக்கவே செய்யும் . குழந்தை வளர்ப்பு ,மேம்பாடு குறித்து எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் ,எழுதலாம் ,ஆனால் நம்மைவிட வேகமாய் குழந்தைகள் வளர்ந்து விடுகிறார்கள் . நேற்றைய குழந்தையும் ,இன்றையக் குழந்தையும் ,நாளையக் குழந்தையும் ஒன்றல்ல . ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையின் நல்லதையும் கெட்டதையும் உள்வாங்கி அடுத்த பாய்ச்சலுக்காக வருகிறார்கள் .என்பதை அறிந்தால் பிரச்சனை அல்ல . “Your children are not your children./They are the sons and daughters of Life’s longing for itself./They come through you but not from you,/And though they are with you yet they belong not to you.” என்பார் கவிஞர் கலீல் ஜிப்ரான் . “உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்லர்/அவர்களே வாழ்வும், வாழ்வின் அர்த்தங்களும் ஆவர்./அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களேயன்றி/உங்களிடமிருந்து அல்ல/உங்களுடன் இருந்தாலும் அவர்கள்/உங்களுக்கு உரியவர்களல்லர்.” எனத் தொடங்கும் கலீல் ஜிப்ரானின் நெடிய கவிதையில் ஓரிடத்தில் சொல்லுவார் ” நீங்கள் அவர்களாக முயலலாம் ;/அவர்களை உங்களைப்போல/உருவாக்க முயலாதீர்கள்.” அவ்வளவுதான் . Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .96 [ 15 /12/2018 ] என்னிடம் குவிந்து கிடக்கும் புத்தகங்களை என்ன செய்வது ? ஏற்கெனவே மூன்று முறை என்னுடைய சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை நூலகம் அமைக்கக் கொடுத்தேன் . பெற்றுச் சென்றவர்கள் அதனை எந்தக் குப்பையில் வீசினார்கள் எனத் தேடிக்கொண்டிருக்கிறேன் . மீண்டும் என்னிடம் புத்தகங்கள் குவிந்து விட்டன . என் மகள் , “ அப்பா ! நீங்கள் எழுதின புத்தகங்கள் ஒரு செட் கொடுங்கள்!” எனப் பெற்றுச் சென்றார் ,மகனுடன் இருப்பதால் நான் வைத்திருப்பேன் என்கிற நம்பிக்கையில் அவன் இருக்கலாம் .என்னிடம் சில புத்தகப் பிரதிகள் இல்லை என்பதும் உண்மை .எனக்குப் பிறகு என் பிள்ளைகளுக்கு என் புத்தக சேகரம் உதவுமா ? பாதுகாப்பார்களா ? படிப்பார்களா ? பயன்படுத்துவோர் யாருக்கேனும் கொடுத்துவிட்டால் என்ன ? நானும் எழுத்தாளர் கமலாலயனும் கூட இப்படி அடிக்கடி பேசிக்கொள்வோம் .முடிவெடுக்கவில்லை .குழப்பத்தில் நாட்கள் நகர்கின்றன . அடுத்த தலைமுறை நிச்சயம் புத்தகங்களைத் தேடுவார்கள் .ஐயமே இல்லை .அறிவைத் தேடும் யாரும் புத்தகங்களைத் தேடாமல் இருக்க முடியாது .ஆனால் வடிவம் மாறிப்போகும் “டிஜிட்டல் வடிவில் நமது புத்தக அலமாரியை” உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் . இதனை ஒவ்வொருவரும் தனியாகச் செய்ய முடியாது .அதற்கு ஒரு இயக்கம் தேவை .நமது இடதுசாரி முகாமிலிருந்து வந்த படைப்புகளை தேடித்தேடி டிஜிட்டலாக்கும் வேலையை எப்போது தொடங்கப் போகிறோம் .இலங்கையில் இம்முயற்சி தமிழர்களிடையே உண்டு .இங்கு விருப்பு வெறுப்பின்றி அனைத்து முற்போக்காளர் மற்றும் இடதுசாரிகள் நூல்களனைத்தும் டிஜிட்டல் ஆக்கப்பட வேண்டாமா ? வீட்டு நூலகம் என்பது சும்மா வாங்கிக் குவித்துக் கொண்டே போவது மட்டுமல்ல ; அவ்வப்போது கழித்தல் வேலையும் நடத்தியாக வேண்டும் .வீட்டு நூலகம் இடத்தை அடைத்து தூசும் தும்புமாய் இருப்பதைவிட இல்லாமலிருப்பதே மேல் . ஆகவே ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனு உங்கள் நூலகத்தை சீர் செய்யுங்கள் .உங்களுக்கு இனி தேவைப் படாததை அடுத்தவருக்கு தந்து விடுங்கள் .ரெபரென்ஸ் புக்ஸ் எனப்படும் வழிகாட்டும் நூல்களைத் தவிர பிறவற்றை அவ்வப்போது கழித்துவிடலாம் . ஆம் , புதுப்பித்துக் கொண்டே இருக்கத்தானே புத்தகங்கள் ? Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .95 [ 14 /12/2018 ] “என் மனைவி யதார்த்தத்தைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க..” என ஆரம்பித்து அந்த இளம் தோழர் சொன்னதின் சாராம்சம் . வேலைக்குப் போகணும்னு பிடிவாதம் பிடிக்கிறாள் ; அவள் வாங்குற சம்பளம் குழந்தையை டே கேரில் [பாரமரிக்கும் இடம் ] விட்டா ஆகிற செலவுக்கே சரியாப் போகும் ;குழந்தைக்கு சரியான கவனிப்பு இல்லாமல் போகும் என அவன் சொன்னான் .நகரில் கூட்டுக்குடும்பமாக இல்லாமல் தம்பதியர் மட்டும் வாழும் சூழலில் இக்கேள்வி முக்கியமாகிறது . “உத்தியோகம் புருஷ லட்சணம்னா பெண்ணுக்கு வருமான லட்சணமா?” என முகநூலில் ஒரு தோழி விவாதத்தைக் கிளப்பினாள் . மேலே குறிப்பிட்ட சம்பவத்துக்கும் தோழியின் கேள்விக்கும் நேரடி தொடர்பு இல்லை .ஆனால் விவாதத்தின் மையம் ஒன்றே ! “ஆஸ்திக்கு ஆண் ; ஆசைக்குப் பெண்,” என்கிற நிலபிரபுத்துவக் கருத்தோட்டத்தின் தொடர்ச்சியே அது . சொத்து ,காசு ,பணம் எல்லாம் ஆணோடு தொடர்புடையது .பண்பாடு ,கலாச்சாரம் எல்லாம் பெண்களின் பொறுப்பு என்பது நம் சமூகத்தில் எழுதப்படாத விதி . அதாவது பெண் என்பவள் ஆணைச் சார்ந்துதான் இருக்க வேண்டும் ;இயங்க வேண்டும் . அவளுக்கு சுயம் கிடையாது .அவள் வேலைக்கு போக வேண்டுமா ? வேண்டாமா ? சம்பாத்தியத்தை எதுக்கு செலவு செய்ய வேண்டும் ? எதுக்கு செலவு செய்யக்கூடாது ? அனைத்தையும் ஆணே முடிவு செய்யும் ஆண் மைய சமூகக் கண்ணோட்டமே இங்கு அடிப்படை ஆகிறது . வேலை என்பது வெறும் பணம் ஈட்டும் செயல் மட்டுமல்ல .WHETHER MALE OR FEMALE THERE IS NO SELF RESPECT WITHOUT EMPLOYMENT OPPORTUNITY என்பது அடிப்படையானது ;அதாவது ஆணோ பெண்ணோ யாராயினும் வேலை வாய்ப்பு இல்லாவிடில் சுயமரியாதை என்பதே இருக்காது . இது சோஷலிச சமுதாயப் பார்வை . ஒவ்வொரு பெண்ணும் வேலைக்குச் செல்வது அவளது சுய உரிமை ,சயமரியாதை ,சுயவிருப்பம் அவளின் சுயத்தை நிலை நிறுத்தும் கண்ணி . அதனை மறுக்கவோ திணிக்கவோ யாருக்கும் ,ஆம் கணவனே ஆயினும் உரிமை கிடையாது .வீட்டு வேலை ,குழந்தை பராமரிப்பை எப்படி பகிர்வது ; சமாளிப்பது என்பதை மனம் திறந்து பேசி யாரின் சுயமும் பாதிக்காமல் முடிவெடுப்பதே நாகரீக சமூகத்துக்கான லட்சணம் . Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .94 [ 13 /12/2018 ] பணம் மட்டுமே ஒருவரை மனிதர் ஆக்கிவிடாது என்பது போலவே கல்வித் தகுதி மட்டுமே ஒருவரை மனிதர் ஆக்கிவிடுவது இல்லை .இது வாழ்க்கை நெடுக கசப்பான உண்மை . “படித்தவன் சூதும் வாதும் செய்தால்... போவான் போவான் ஐயோவென்று போவான்” என பாரதி குமுறினான் . இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி கல்வி கற்று உயர் உத்தியோகம் பெற்றவர் பலர் தன் சமூகத்தை மறந்து சுயநலனில் திழைப்பது குறித்து அம்பேத்கரும் தன் கடைசி காலத்தில் வருந்தினார் .தமிழகத்திலும் அதே போல் பெரியாரின் சமூகநீதிப் போரால் பலன் பெற்ற பலர் பேச்சும் செயலும் கவலை அளிக்கிறது .எங்கும் இது போன்ற நிலையைக் காணலாம் . உனக்கு கல்வி என்பது இச்சமூகம் கொடுத்த வாய்ப்பு .வரம் .அதை மறந்து தனது திறமை மட்டுமே தன் வெற்றிக்கு காரணம் என இறுமாப்புக் கொள்வது பொது இயல்பாக உள்ளது .நாம் தனி நபர் திறமையை நிராகரிக்கவில்லை . இந்த சமூகம் அவருக்கு வாய்ப்பும் ஒத்துழைப்பும் அளிக்காவிடில் அவர் திறமை துலங்கி இருக்குமா ? அவர் ஒரு துறையில் வல்லுனராக இருக்கலாம் .மறுக்கவில்லை .சமூகப் பார்வையைத் தொலைத்த வல்லுநரின் செயல் எப்படி ஊருக்கு உதவும் ? அணுகுண்டை ஆராதிக்கும் எவரும் மனிதகுல அக்கறையைத் தொலைத்தவர்களே .படித்தவரில் பலரை இப்படிப் பார்த்திருக்கிறோம் .தன் கண் எதிரே நடக்கும் அநீதிக்கு எதிராய் ஒற்றை முணுமுணுப்பைக்கூட உதிர்க்காத பெரும் படிப்பாளிகள் உண்டு .தன் பதவிக்காக ,பணத்துக்காக ,அதிகார செல்வாக்குக்காக எதனோடும் யாரோடும் சமரசம் செய்து கொள்ளும் படிப்பாளிகளைப் பார்த்திருக்கிறோம் . நம் குடும்ப வாழ்விலும் தன் நலனுக்காக எதையும் செய்யத் துணியும் பலர் நன்கு படித்தவர் என்பது வெறும் பேச்சல்ல அன்றாடம் நாம் சந்திக்கும் குரூர உண்மை .எழுதப் படிக்கத் தெரியாத பாமரனிடம் இருக்கும் மனிதநேயம்கூட இல்லாத படித்தவர் பலரைப் பார்த்திருக்கிறோம் . நம் கல்வி சமூகப் பொறுப்பை அக்கறையை கற்றுத் தருகிறதா ? உன் படிப்பும் திறமையும் உன்னை பொறுப்பான சமூக மனிதராக்கும் எனில் நன்று .இல்லை எனில் அது விழலுக்கு இறைத்த நீராகும் .சில சமயங்களின் விஷப் பார்த்தீனியம் செடிக்கு இறைத்த நீராகவும் ஆகிவிடுமே ! ஆக ,உங்கள் கல்வியோடு சமூகத்தை ,மனிதரை நேசிக்கப் பயிலுங்கள் .பழகுங்கள் . Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .93 [ 12 /12/2018 ] சிலர் எப்போதும் தன் பெருமைகளைப் பேசிக் கொண்டே இருப்பர் ; மற்றவரும் அவரை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பர் .கொஞ்சம் பேச வாய்ப்பு கிடைத்தால் போதும் தான் செய்த சிறு காரியத்தையும் மலையளவு உயர்த்தி நெஞ்சை நிமிர்த்திக் காட்டுவர் . தற்பெருமை பீற்றும் இவரைக் கண்டால் பலருக்குப் பிடிக்காது .முகத்துக்கு நேராக சொல்ல முடியாவிடினும் முதுக்குப்பின் கெக்கொலி கொட்டிச் சிரிப்பர் . இன்னொரு சாரார் தான் செய்ததைக் கூட சொல்லமாட்டார்கள் ;யாராவது சொன்னாலும் சொல்லவிடாமல் தடுப்பார்கள் . நெளிவார்கள். அவரின் அருமை பெருமை அறியாமல் யாரேனும் இகழும் போதும் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் அமைதி காப்பர் . நிறைகுடம் தழும்பாது என இத்தகையோரைப் பற்றி சொல்லி ஓய்ந்துவிடுவோம். இரண்டுமே இரண்டு கோடி . தற்பெருமை கூடாது .ஆனால் தன் தகுதி உணர்த்தல் பிழை அல்ல .நிறைகுடம் மட்டுமா காலிக்குடம்கூட தழும்பாது .நீங்கள் நிறைகுடமா , காலிக்குடமா என்பதை புரிய வைத்தல் அவசியம் அல்லவா ? இப்போதெல்லாம் சுய அறிமுகம் [self introduction ] என்பது ஒரு நடைமுறையாகி வருகிறது .தன்னை அறியாதோர் மத்தியில் தன்னை அறிமுகம் செய்து உரிய இடத்தைப் பெறுவது தனிக்கலை . நான் யார் தெரியுமா , என் அறிவென்ன , ஆற்றல் என்ன . இப்படிப் புலம்புவது பேதமை ஆனால் எனக்கு இதைப் பற்றி கொஞ்சம் தெரியும் ,இதில் கொஞ்சம் அனுபம் உண்டு . சொல்லுகிறேன் பொருத்தமாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் என பணிவாகத் துவங்கி விவரங்களை தெளிவாக எளிமையாக முன்வைத்தால் உங்களை சரியா உணர்ந்து ஏற்பர் . அங்கேயும் குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர் ஒருவர் இருக்கக்கூடும் .அவரை மென்மையாக அல்ல கறாராகத்தான் கையாள வேண்டும் . தற்பெருமை கூடவே கூடாது .ஆயின் தன் தகுதியை உணர்த்துவது தவறல்ல .தேவை .அதனை கையாளும் லாவகமே உங்களைப் பற்றிய பிம்பத்தை உருவாக்கும் .சுயத்தை இழக்காதீர் .சுயதப்பட்டம் வேண்டாம்.அவ்வளவுதான். Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .92 [ 11 /12/2018 ] நாம் சரி என இன்று நம்புகிற ஒன்று , நேற்று தவறாகக் கருதப்பட்டிருக்கலாம் , நாளை வேறு மாதிரியாக கணிக்கப்படலாம் .கருத்துகள் மாறதவையோ மாற்றக்கூடாதவையோ அல்ல . ஆனால் அதன் உள்ளுறை நோக்கம் என்ன என்பதுதான் முக்கிய கேள்வி. மகாத்மா காந்தியின் ஆரம்பகால கருத்துகளுக்கும் கடைசிகாலக் கருத்துகளுக்கும் நிறைய வேறுபாடுண்டு . அவரிடம் கேட்டபோது நான் கடைசியாகச் சொல்லியதே சரி .என் அனுபவம் திருத்தியுள்ளது என்றார் . பெரியாரிடம் ,மேலும் பல தலைவர்களிடம் இதனைக் காணலாம் .ஏன் ? எல்லோரிடமும் உண்டு .காலம் ஒவ்வொருவரையும் செதுக்குகிறது ;கருத்து முதிர்ச்சி அடைகிறது அல்லது பக்குவமடைகிறது .ஆனால் இந்த கருத்து மாற்றம் பொதுவாய் இரண்டு விதமாய் நிகழலாம் . ஒன்று ,அனுபவம் ,படிப்பு ,சமூகத்தொடர்பு ,அறிவியல் முன்னேற்றம் என பல்வேறு காரணங்களால் கருத்துகள் மாறும் .அது பிழை அல்ல . தேவை .இப்படி மாறிய கருத்து குறித்து ஒருவர் வெட்கப்பட மாட்டார் .வெட்கப்பட வேண்டியதுமில்லை . “நான் இப்போது சரியான தளத்துக்கு வந்துவிட்டேன் என் நாநடுங்காமல் கூறவும் முடியும்.” என பெருமையோடு கூறவும் இயலும் . இரண்டு ,சுயநலத்தோடு அவ்வப்போது கிடைக்கிற பணம் ,பதவி, சுகம் ,லாபம் ,அற்ப சந்தோஷம் ,தந்திரம் ,வஞ்சகம் இப்படி பல்வேறு நோக்கில் கருத்துகளை ஒருவர் அடிக்கடி மாற்றி மாற்றிக் கூறலாம் .இது அயோக்கியத்தனம் .சந்தர்ப்பவாதம் .இதனை கருத்து மாற்றம் என்ற சொல்லால் சுட்டுவதேகூட தவறு . ஆனால் இவர்கள் தன் வஞ்சகத்துக்கு சர்க்கரை தடவி ,ஜிகினா தூவி ஈர்ப்பார்கள் .இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . முன்னது முற்போக்கானது .ஒவ்வொருவரும் மாற்றங்களை உள்வாங்கி அவற்றினூடேதான் பயணிக்க வேண்டும் .பின்னது ஆபத்தானது ,சமூகத்தின் புற்றுநோய் ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டால் குணப்படுத்தலாம் .முற்றிவிட்டால் பேராபத்தே . அரசியல் ,சமூகம் மட்டுமல்ல தனிநபர் வாழ்வுக்கும் இது பொருந்தும் . Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .91 [ 10 /12/2018 ] திருமண வாழ்வு தனிமனிதரின் சுயத்தைக் கொண்றுவிடுகிறது என்கிற கருத்து தற்போது வலுவான விவாதமாக எழுந்து , குடும்ப அமைப்புக்கு எதிரான வெடி குண்டாகிக் கொண்டிருக்கிறது . ஒவ்வொருவருக்கும் சுயவிருப்பம் ,சுய உரிமை ,சுயமரியாதை ,சுயதேடல் போன்ற அனைத்துக்கும் வாழ்வில் உரிய அங்கீகாரமும் இடமும் தேவை .இவை கவனிப்பாரற்ற அனாதையாக குடும்ப வாழ்வில் ஆக்கப்படுவதே ஆகப் பெரிய சோகம் .அதிலும் குறிப்பாக பெண்கள் தன் சுயம் பற்றி யோசிப்பதே தான்தோன்றித்தனம் என்கிற அளவுக்கு சமூக உளவியல் மாசுபட்டுக் கிடக்கிறது . ராஷ்டிரிய சுயம் சேவக் எனப்படும் ஆர் எஸ் எஸ் என்கிற பாசிச அமைப்பு தன் அமைப்பில் பெண் உறுப்பினரை அனுமதிப்பதில்லை .ஏனெனில் பெண்களுக்கு சுயம் கிடையாது என்பது அதன் பிற்போக்கான மதவாத தத்துவம் . ராஷ்டிரிய ஸ்திரி சமிதி [ ஆர் எஸ் எஸ்] எனும் துணை அமைப்பில் சேர்த்துவிட்டு ஏய்ப்பர் . மதம் ,சாதி ,இன வாத அமைப்புகளெல்லாமும் பெண்ணின் சுயத்தை அங்கீகரிக்காமல் மூடி மறைத்துப் பேசுவையே ! வேடிக்கை என்னவெனில் இதுபோன்ற பிற்போக்கு தீய சக்திகளுக்கு உரம் தருவதாகவே சமூக உளவியலில் ஊறிப்போயுள்ள ஆணாதிக்க மனோபாவமும் ,பெண்களின் சுயத்தை மறுதலிப்பதும் அமைந்து விடுகின்றன .ஆகவே ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் “எனக்கென்று என்ன இருக்கிறது ?” என்கிற கேள்வி பெண்களிடம் வலுவாகிக் கொண்டிருக்கிறது . ஒவ்வொருவரும் தான் விருப்பப்படி வாழ்ந்தால் குடும்பம் என்ன ஆகும் ? நொறுங்கிப் போகாதா ? இப்படி கேள்வி எழுப்பி பிரச்சனையின் ஆழத்தைக் காண மறுப்பதே பெரும் தீங்காகும் . ஒத்த நலன் ,ஒத்த குணம் ,ஒத்த வாழ்வு என எல்லாவற்றிலும் ஒரே போல் உள்ளவர் மட்டிலும் கூடி வாழ்வது என்பது வெறும் கனவு.ஒரு போதும் கை கூடாது . ஒரு தம்பதியர் தம் திருமண நாளையொட்டி முகநூலில் பதிந்த வாசகம் இது , “ A great marriage is not when the ‘perfect couple’ comes together. It is when an imperfect couple learns to enjoy their differences. ” ஆம் .மெய்தானே ! ஒத்த தம்பதியர் மட்டுமே சேர்ந்து வாழல் சாத்தியமோ ? பொருத்தக் குறைகளோடு – குறை நிறைகளோடு இணைந்து வாழ்ந்து இன்ப வாழ்வு நடத்தக்கூடாதோ ? சுயத்தை இழக்காமலும் குடும்ப வாழ்வின் சுகத்தை இழக்காமலும் வாழ்கிற ஜனநாயக உளவியலை வளர்ப்போமே ! Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .90 [ 5 /12/2018 ] எனது ஆச்சி /பாட்டி மண்ணெண்ணை ஸ்டவ்வில் சமைத்தால் சாப்பிட மாட்டார் .உடலுக்கு கேடு என்பது அவர் வாதம் .விறகடுப்பே கதி என்று கிடப்பார் .எங்க அம்மா கேஸ் அடுப்புக்கு மிகவும் பயந்தார் . வெடித்துவிடும் என மிரண்டார் . பழக்கப்படுத்த பெரும்பாடு பட்டோம் . என் தாத்தா போட்டோ எடுக்கவே விடமாட்டார் .எங்கள் சிறு வயது படமெல்லாம் அபூர்வம் . ஆயுள் குறைந்துவிடும் என்பது வாதம் . எனது உறவினர் ஒருவர் காச நோயால் அவதியுற்ற போதும் எக்ஸ்ரே எடுக்கச் சொன்னோம் . அவர் ஒப்புக் கொள்ளவில்லை .பிடிவாதம் பிடித்தார் . சிரமப்பட்டே எக்ஸ்ரே எடுத்தோம் .எக்ஸ்ரே எடுத்தால் உயிருக்கு ஆபத்து என்பது அவர் பயம் . வீட்டுக்கு மின்சாரம் முதன் முதலில் வந்த போது ஒரு மரக்கட்டை ஸ்கேல் மூலமே சுவிட்சைப் போட வேண்டும் என கறாரான உத்திரவு . மின்சார விளக்கு வெளிச்சம் கண்ணைப் பாதிக்கும் என்பது என் தாத்தாவின் அச்சம் . பேன் காற்றில் படுத்தால் உடம்பு வலிக்கும் என்பது பாட்டியின் முடிவு . இன்று நாம் அனுபவிக்கும் ஒவ்வொன்றையும் யோசித்துப் பாருங்கள் . அறிவியல் தொழில் நுட்ப உதவி இன்றி இப்போது ஒரு நாளையேனும் ஓட்ட இயலுமா ? ஆன்மீகம் பேசும் எவரும் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை வைத்து பழைய கற்காலத்தில் வாழுவதில்லை ; அறிவியலின் சாதனைகளை ஒவ்வொரு நொடியும் நுகர்ந்த படியேதான் ஆன்மீகம் பேசித்திரிகிறார்கள் ! ஆனாலும் இப்போதும் சிலர் நம் முன்னோர்கள் முட்டாள்களில்லை என ஆரம்பித்து நம்மை கடந்த காலத்துக்குள் விரட்டி அடிக்க முனைகிறார்கள் .முன்னோர் என்பதன் வரையறை என்ன ? தாத்தா காலமா ? அவர் தாத்தா காலமா ? இப்படியே எவ்வளவு தூரம் பின்னோக்கி போக வேண்டும் ? ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையைவிட ஓரடியேனும் முன்னேறி உள்ளனர் .நாம் நம் மூதாதையர் தோளில் இருந்தே உலகைப் பார்க்கிறோம் .அவர்களுக்குத் தெரியாதது நமக்குத் தெரியும் . நம்மைவிட நம் பேரப்பிள்ளைகள் மேலும் அறிவர் .முன்னேறுவர் .நம்மை பின்னுக்கு இழுக்க முனைவோரால் நம் முன்னேற்றம் சற்று தாமதமாகலாம் .ஒரு போதும் தடுக்கவே முடியாது .முன் செல்வோம். Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .89 [ 4 /12/2018 ] “எலி வளையே ஆனாலும் தனி வளை.” இக்கருத்து நம் சமூகத்தில் ஆழமாக வேர்விட்டுள்ளது .அடுக்ககம் [ அபார்ட்மெண்ட் ] சொத்தாகாது .சேமிப்பாகாது .நாளை புதுப்பித்தல் ,பாகம் பிரித்தல் ,மறு விற்பனை எல்லாமே சிக்கலானது என்கிற பார்வை பலருக்கு உள்ளது .அண்மையில் முகநூலில்கூட இது விவாதப் பொருளானது .இந்த அம்சங்களை அப்படியே நிராகரித்துவிட முடியாதுதான் .ஆனால் சமூகப் பார்வையோடு அணுகின் மறுகோணம் புலப்படும் . பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வீட்டுவசதி ,தொழிலகம் ,அலுவலகம் ,சமூகத்தேவை இவற்றிற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் பூமி விரியுமா ? பெருகுமா ? ஆக இருக்கிற பூமியை எல்லோருக்கும் எப்படிப் பகிர்வது என்பதே பெருங்கேள்வி .இதற்கு அடுக்ககம் நிச்சயம் ஒரு தீர்வே . பாதுகாப்பு , பொழுதுபோக்கு வசதிகள் இவற்றோடு கூட்டுவாழ்வினை மேற்கொள்ள ,செலவைப் பகிர்ந்து கொள்ள என பல நற்கூறுகளும் அடுக்ககத்தில் உண்டு . ஆரம்பத்தில் சுட்டிய பல பிரச்சனைகளுக்குத் சட்டரீதியில் தீர்வுகாணும் வழியுமுண்டு .மனமிருந்தால் மார்க்கமுண்டு . அதே நேரம் தனிச் சொத்து ,பரம்பரையாய் அனுபவிக்க வேண்டும் என்கிற நிலபிரபுத்துவக் காலச் சிந்தனையை நாம் தலைமுழுகியாக வேண்டும் . இப்போதே வேலை நிமித்தமும் வாழ்வின் நிமித்தமும் ஆளுக்கொரு மூலை என்பது விதியாகிவிட்டது .நடைமுறையிலும் பழைய சிந்தனை நொறுங்குகிறது .குடியிருக்க் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வீடு தேவை .அரசே உறுதி செய்யும் காலம் நோக்கியே நகர வேண்டும் .அடுக்ககமே தீர்வு . அதுவே காலத்தின் கட்டாயமே ! தண்ணீர் பிரச்சனை வருங்காலத்தில் பெரும் சவால் . கழிவு நீரை ஜப்பான் மெம்ப்ரோன் டெக்னாலஜி [ JAPAN Membrane Treatment Technology ] அல்லது அதனினும் உயர்ந்த தொழில் நுட்ப அடிப்படையில் சுத்திகரித்து குடிநீர் ,சமையல் தவிர பிற அனைத்துக்கும் பயன்படுத்துவதே தீர்வு .கிட்டத்தட்ட 80 விழுக்காடு தேவையை இந்த நீர் சுழற்சி தீர்த்துவைக்கும் . சமையல் ,குடிநீருக்குக்கூட ஜப்பானில் இப்படியான நீரையே பயன்படுத்தத் துவங்கிவிட்டனர் .நம் மனத் தடை கருதியே இங்கு விதிவிலக்கு தந்தோம் . இம்முறைக்கு மாற அடுக்கக வாழ்வு அவசியம் . சூரிய எரிசக்தி , பயோ எரிவாயு என பலதுக்கும் அடுக்கக வாழ்வே எளிதாகும் . எதிர்காலம் அதை நோக்கியே . மனதை விசாலமாக்குவோம் .பொதுமை எண்ணம் வளர்ப்போம் !!!! Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .88 [ 3 /12/2018 ] தாம்பத்தியம் சிலருக்கு சங்கீதம் ஆகிறது .சிலருக்கோ அபசுரமாகிவிடுகிறது .ஏன் ? பொதுவாக ஜாதகம் பார்த்து பொருந்திப்போனால் மட்டுமே திருமணங்கள் நடக்கின்றன. சோதிடர் பல நேரங்களில் சொல்லுவர் எந்தப் பொருத்தம் இல்லாவிட்டாலும் யோனிப் பொருத்தம் சரியாக இருந்தால் போதும் . ஆக ,திருமண வாழ்வின் ஆகப் பெரும் இன்பமாக உடலின்பத்தை மையமாக வைத்து சொல்லப்படும் கூத்து இது . இதில் கணிசமான உண்மை உண்டு . திருமண வாழ்வில் ஏற்படும் உரசல்கள் ,முரண்களுக்கு பொருளாதாரம் ,குடும்பத்துள் நிலவும் சூழல் போன்ற பலதும் காரணமாயிருக்கலாம் ,ஆனால் அடிநாதமாய் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் திருப்தியின்மை ,நெருடல் ,அதீத ஈர்ப்பு போன்றவை முக்கிய பங்கு வகிக்கும் . ஆகவே இதனை புறந்தள்ளவே இயலாது . “ஒரு கைதட்டி ஓசை எழாது” என்பது மெய்தானே .இருவருக்கும் மனதும் உடலும் ஒத்துழைத்தால் மட்டுமே தாம்பத்தியத்தில் திருப்தி கிட்டும் . சூழல் காரணமாகவோ / உடல் பிரச்சனை காரணமாகவோ இதில் சிக்கல் ஏற்படும் போது வாழ்வின் சிக்கல் துவங்கும் . நல்ல மருத்துவரிடம் தம்பதியர் ஆலோசனை பெறுவதும் , தேவை எனில் தொடர் சிகிட்சை மேற்கொள்வதும் அவசியம் . செக்ஸ் குறித்த பல்வேறு தவறான மதிப்பீடுகளும் பார்வைகளும் நம் மூளையில் சமூகம் ஏற்றி வைத்திருக்கிறது .அதனை உடைத்து அறிவியல் ரீதியான புரிதலைப் பெற வேண்டும் இல்லையேல் பஞ்சாக்கத்தனமான அணுகுமுறையே வாழ்வை முழுதாய் சுவைக்கத் தடையாகிவிடும் . இரண்டு பேருக்கும் மனம் திறந்த உரையாடலுக்கான சூழலும் நேரமும் இல்லாவிடில் தாம்பத்தியமும் வெறுமே இயந்திரத்தனமாகிவிடும். கோழியைப்போல் அவசர அவசரமாக அனுபவிக்கும் தாம்பத்தியம் ஆணுக்கு வேண்டுமானால் உணர்ச்சியை அப்போது தணிக்க உதவலாம் பெண்ணுக்கு நிச்சயம் உதவாது .ஆக உரையாடவும் ,உறவாடவும் ஒவ்வொரு தம்பதியருக்கும் தனிமைச் சூழல் [ பிரைவேசி ] தேவை . நம் சமூகத்தில் பெரும்பாலோருக்கு அந்த பிரைவேசி மறுக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது .தனி படுக்கை அறையே இல்லாதோர் பல கோடி . இங்கே தாம்பத்தியம் ஒரு சங்கீதம் என்பது வெறும் பேச்சாகவும் ; வக்கிரமான சமூகச் சூழலே நிஜமாகவும் உள்ளது . நாம் புதிய சமூகத்தை போரடிப் புதுக்காமல் இதற்கெல்லாம் தீர்வே இல்லை . Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .87 [ 2 /12/2018 ] பத்திரிகையாளர் என்கிற முறையில் எமது இதழுக்காக ஒரு முறை கலந்துரையாடலை நான் நெறிப்படுத்த வேண்டியிருந்தது .தலைப்பு “ பள்ளிக்கூடத்தில் பாலியல் கல்வி தேவையா ?” பெற்றோர் சிலரும் பங்கேற்றால் நன்றாக இருக்குமென சிலரிடம் பேசினேன் . ஒரு பெண்ணின் தந்தை கோபமாகக் கேட்டார் ,”இப்பவே கண்டதைப் படித்து ,பார்த்துக் கெட்டலையதுங்க நீங்க பாடமாவேற சொல்லித்தரப் போறீங்களா ? தியரி மட்டும்தானா ,பிராக்டிக்கல்லும் உண்டா ?”அவருக்கு புரிய வைப்பதுக்குள் பெரும்பாடாகிவிட்டது .இன்றும் பாலியல் கல்வி என்றதும் காமம் ,கலவி என்று மட்டுமே புரிந்துள்ளோர் ஏராளம் .அதற்கும் மேல் கொஞ்சம் உடல்கூறு ,பருவ வளர்ச்சி ,சுகாதாரம் இதனோடு முடித்துக் கொள்வோர்களே மிகமிக அதிகம் .பாலியல் கல்வி அதுமட்டுமன்று . பாலியல் கல்வி நான்கு கூறுகளைக் கொண்டதென நான் கருதுகிறேன் . ஒன்று பதின் பருவத்தில் உடலில் தோன்றும் இயற்கையான வளர்ச்சி ,பூப்படைதல் ,மீசை அரும்புதல் ,பாலின வேட்கை ,மகப்பேறு ,மலட்டுத்தன்மை இவை குறித்த அறிவியல் பூர்வமான புரிதலை உருவாக்குதல் .இரண்டு ,பாலின சமத்துவத்தை , அதற்கேற்ற பண்பாட்டு நடத்தையை கட்டமைக்கும் முயற்சி . மூன்று குடும்ப ஜனநாயகத்தை வளர்த்தெடுக்கும் கடும்பணி ,நான்கு சமூக உளவியலில் கரடுதட்டி போய் உறைந்து போயுள்ள ஆண்/பெண்/மூன்றாம் பாலினம் பிம்பங்களை உடைத்து அந்த இடத்தில் முற்போக்கான , சாதி மத வேலிகளுக்கு அப்பாற்பட்ட புதிய ஆண் /பெண்/மூன்றாம் பாலின இலட்சிய பிம்பத்தை உருவாக்கி அதை நோக்கி சமூகத்தை நகர்த்தல் . இவை அனைத்தையும் பள்ளியில் மட்டுமே கற்றுக் கொடுத்துவிடவே முடியாது . இதற்கான உரையாடலை உங்கள் வீட்டில் நீங்கள்தான் தொடங்க வேண்டும் .மதவெறி ,சாதிவெறியை எதிர்ப்பது என்பது பொதுவெளியில் நடக்கும் அரசியல் போராட்டம் மட்டுமல்ல ; உங்கள் வீட்டிற்குள் நடத்தும் மேலே குறிப்பிட்ட இப்போராட்டமும் அதன் முக்கிய அங்கமே ! நீங்கள் ரெடியா ? Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .86 [ 1 /12/2018 ] என்னோடு நடை பயிற்சியில் ஓர் நண்பர் அடிக்கடி பங்கேற்பார் .அவர் தெலுங்கர் .நீண்டகாலம் தமிழ்நாட்டில் வேலைபார்த்ததால் தமிழும் அவருக்குத் தெரியும் .தெலுங்கு போலவே தமிழையும் பேசுவார் .அவர் என்னோடு நடை பயிற்சியில் பங்கேற்கிறபோதும் பாதி வழியில் உள்ள சாய்பாபா கோவில் வரையே வருவார் .சாய்பாபா கோவிலுக்கு அவர் செல்ல ;நான் நடை பயிற்சி தொடர்வேன் . அவர் ஒரு நாளும் என்னை கோவிலுக்கு அழைத்ததில்லை .நானும் அவர் கோவிலுக்கு போவதை கேள்வி கேட்பதில்லை .சில நாள் திரும்பிவரும் போது என்னோடு இணைவார் .அவர் மனைவியும் சில நாள் வருவதுண்டு . அப்போதும் இப்படித்தான் . ஒரு நாள் நடைபயிற்சி முடித்து திரும்பும் போது என்னோடு இருவரும் வந்தனர் .அன்று சனிக்கிழமை .நாளை எந்த சர்ச்க்குப் போவீர்கள் என அந்த சகோதரி கேட்க நான் சொல்லும் முன் அவர் கணவர் சொன்னார் . “ சார் ! சர்ச் ,மசூதி ,கோவில் எதுக்கும் போகமாட்டார் .அவர் ஓர் சோஷியல் ஒர்க்கர் .” இதனைக் கேட்டதும் அந்த சகோதரி சொன்னார் , “ அதுவும் சரிதான் . நாம கோவில் கோவில்னு அலைஞ்சு என்னத்தக் கண்டோம் .வேறு போக்கிடம் இல்லாமல் கோயிலே கதின்னு கிடக்கோம்…” அந்த சகோதரி வெடித்த வார்த்தைகள் நெஞ்சின் ஆழத்திலிருந்து வந்தவை . மெய்தானே ! பெரும்பாலான முதியோர்களின் வலியை ,மகிழ்ச்சியைப் பங்குபோடவும் வழியற்ற குடும்ப இறுக்கம் .முதியோர்களுக்கு மாலை நேர சரணாலயமாக கோவில்கள் மாறிப்போய்விட்டன . இது ஆன்மீகத்தின் வெற்றி அல்ல ;சமூக நலனில் நாம் காட்டும் அக்கறையின்மையின் எதிரொலி . கடவுள் நம்பிக்கையின் ஆணிவேர் சுயபாதுகாப்பின்மைதான் .மார்க்ஸ் சொன்னது வெறும் வார்த்தை அல்ல .அனுபவ நிஜம் . சகோதரியின் வார்த்தையே அதற்கு சான்று .சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் போது கடவுள் நம்பிக்கையும் ஆட்டம் காணும் .இதைச் சொல்லுவதால் இப்போது நாத்திகப் பிரச்சாரம் வேண்டாம் என்பதல்ல . சமூகப் புரிதலோடு பக்குவமாய்ச் செய்ய வேண்டும் என்பதே ! Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .85 [ 30 /11/2018 ] நுனிப்புல் மேய்வது என்றொரு சொல்வழக்கு உண்டு. நம்மில் பலர் அந்த ரகமே .மேலோட்டமாய் பார்த்துவிட்டு எல்லாம் தெரிந்தது போல் கதை அளப்பதில் நம்மை யாரும் மிஞ்ச முடியாது .எல்லோரும் எல்லாவற்றிலும் நிபுணராக இருக்கவும் முடியாது ; அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை . ஆனால் ஒன்றை அரைகுறையாய் தெரிந்துவிட்டு அது குறித்த நிபுணர் போல் பேசக்கூடாது . ஒரு சம்பவம் பற்று தலைப்புச் செய்தியைக் கேட்டுவிட்டு அதைப் பற்றி அலசுவது மிக ஆபத்தானது . எடுத்துக்காட்டாக , “ கள்ளக்காதலுக்கு இடையூறாய் இருந்த கணவனை வெட்டிக் கொண்ற மனைவி .” இச்ச்செய்தி உண்மையா ? பொய்யா ? என்ன நடந்தது ? போலீஸ் தரப்பு சொன்னதைத் தவிர வேறு ஏதும் தெரியுமா ? ஆனாலும் அப்பெண்ணை புழுதிவாரி தூற்றிவிடுகிறோம் . கள்ளக்காதல் என்ற வார்த்தையே எவ்வளவு தவறானது என்பதை உணர்ந்தோமா ? அடுத்து இன்னொரு செய்தி . “ கள்ளக்காதலனோடு கையும் களவுமாய் பிடிபட்ட மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் .” இங்கும் அதே கேள்விகளே . செத்தது ஆணாக இருப்பினும் ,பெண்ணாக இருப்பினும் கூசாமல் “கள்ளக்காதல்” என்கிற ஒற்றைச் சொல்லில் அனைத்து பழியையும் பெண் மீதே சுமத்திவிடுவது எவ்விதத்தில் நியாயம் . போலீஸ் வழக்கை எளிதாக முடிக்க , உண்மைக் குற்றவாளியை தப்பவிட ,இப்படி கதை கட்டிவிட்டால் போதும் எல்லோரும் நம்பிவிடுவர் .ஏனெனில் இங்கு ஆணாதிக்க சமூக உளவியல் மேலோங்கி உள்ளது . இவ்வாறு ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் நூற்றுக்கு தொண்ணூறு யாரையோ காப்பாற்ற வலிந்து புனையப்பட்ட பொய் வழக்கே . எளியவருக்கு நீதியும் மறுக்கப்படும்தானே ! தலைப்புச் செய்தியை பார்த்தோ ,அல்லது முகநூலில் வரும் ஓரிரு வரிகளை வைத்தோ அனைத்தையும் அறிந்ததாய் காட்டிக்கொள்ள முயலுவது மகாபேதமை .முழுதாய் தெரிய முயலுங்கள் அல்லது கொஞ்சம் காத்திருங்கள் இன்னொரு பக்க விவாதமும் வரட்டும் . நீங்கள் கேள்விப்பட்டது எதுவும் சரியாகவும் இருக்கலாம் ; பிழையாகவும் இருக்கலாம் .நுனிப்புல் மேயாமல் கொஞ்சம் மெனக்கெட்டு உண்மையைத் தேடலாமே ! Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .84 [ 29 /11/2018 ] தோற்றத்தையும் மிடுக்கையும் தொடர்ந்து காப்பாற்றுவது தேவையாக இருக்கிறது .ஆள் பாதி ஆடை பாதி என்பது மட்டுமல்ல மீசை ,மற்றும் தலைக்கு சாயம் பூசுதல் உள்ளிட்டவை நமக்கே ஒரு நம்பிக்கையைத் தரும் .எனவே நான் தொடர்ந்து முடிக்கு கருப்புச் சாயம் பூசுகிறேன் என ஒருவர் அண்மையில் பதிவிட்டிருந்தார் . அவர் பார்வையோ செயலோ தவறன்று . தாரளாமாகச் செய்யலாம் .நான் என் முடிக்கு சாயம் பூசுவதில்லை . இந்த முதிய தோற்றமும் கம்பீரமே எனக் கருதுகிறேன் .இதுவும் பிழையில்லை . குழந்தைப் பருவம் ,மாணவப் பருவம் ,வாலிபப் பருவம் ,நடுத்தர வயது என ஒவ்வொன்றும் கம்பீரமே .அதே போல்தாம் முதுமையும் . எல்லா பருவத்தையும் போல் முதுமையும் அதற்குரிய குறை நிறைகளோடு அமைவதே .அதனை அதன் இயல்போடு ஏற்பதே எப்போதும் இனிது .வலிந்து இளமையை அதற்குள் திணிக்க வேண்டாமே ! ஆனால் இயன்றவரை உங்கள் சிந்தனையை அப்டேட்டட்டாக புதுப்பித்துக் கொண்டே இருங்கள் .அதற்காக புதியன தேடித் தேடி படித்துக் கொண்டே இருங்கள் .அது உங்களின் மதிப்பையும் மரியாதையும் உயர்த்தும் .இளைஞர்களுக்கு வழிவிட்டும் , கைகொடுத்து தூக்கிவிட்டும் மகிழுங்கள் அது உங்கள் முதுமைக்கு அழகு சேர்க்கும் . உங்கள் தோள் மீது சாய்ந்து தங்கள் வேதனைகளைப் பங்கு போட்டுக் கொள்ள முடியும் ; உங்களிடம் எதையும் மனம் திறந்து பேசி ஆலோசனைகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை உங்களால் உருவாக்க முடிந்தால் உங்கள் முதுமை பொருள் பொதிந்ததாகும் . உங்கள் தலைமுடிக்கு சாயம் பூசுங்கள் அல்லது பூசாமலிருங்கள் .அது தனிப்பட்ட விருப்பம் .ஆனால் அழகும் அர்த்தமும் மிக்க முதுமைக்கு உங்களை நீங்களே தயார் படுத்துவது எல்லாவற்றையும்விட மிக மிக முக்கியம் . Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .83 [ 28 /11/2018 ] “அவன் கிடக்கிறான் குடிகாரன் ,எனக்கு இரண்டு மொந்தை ஊற்று” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல நாட்டு நடப்பும்கூட .மதுவை வாழ்வில் தொட்டதே இல்லை என்போர் அபூர்வம் . எப்போதேனும் கொண்டாட்டத்தில் கொஞ்சம் போதை ஏற்றுவோர் ஒரு ரகம் .வேலைச் சூழலிலின் கடுமை காரணமாக கொஞ்சம் மதுவை நாடுவோர் இன்னொரு ரகம் . குடிப்பதற்காகவே நட்பு வட்டம் உருவாக்கிக் கொள்வோர் இன்னொரு ரகம் .சோகம் ,மகிழ்ச்சி என காரணம் சொல்லி குடிப்போர் இன்னொரு ரகம் . குடியில் மூழ்கி வீழந்து கிடப்போர் இன்னொரு ரகம் . எல்லோரையும் ஒற்றைச் சொல்லாய் குடிகாரர் என ஒதுக்குதல் தகாது .அது தீர்வுக்கும் உதவாது . மது வாசமே இல்லா சமூகம் என கனவு காணலாம் .பேசலாம் . ஆயின் அது வெறும் கனவாக பேச்சாகவே இன்றல்ல என்றும் இருக்கும் . ஆக மதுவுக்கு எதிராய் விழிப்புணர்வை விடாது உயர்த்திப் பிடித்தல் மட்டுமே சாத்தியம் . அதே சமயம் மதுவுக்கு அடிமையானோரை மதுநோயராய்ப் பிரித்து அறியவும் உரிய சிகிட்சை அளிக்கவும் நாம் பயில வேண்டும் . ஒருவர் குடிக்கிறார் என்பதாலேயே அவரைக் கெட்டவராகச் சித்தரித்து அவரை குடும்பத்திலும் இதர இடங்களிலும் புறக்கணிப்பதும் ; அவருக்கு உரிய நியாயங்களைக்கூட கொஞ்சமும் உறுத்தலின்றி நிராகரிப்பதும் அவரை மீட்டெடுக்க ஒரு போதும் பயன்படாது . கடும் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை எப்படி அணுகுவோமொ அப்படி குடிநோயில் வீழ்ந்தோரை அணுகிட குடும்பத்தாருக்கே பயிற்சி தேவை . “இனி குடித்தால் வீட்டுப்படி ஏறாதே!” என மிரட்டுவது அவரை மதுக்கடையையோ அல்லது தெரு முனைகளையோ சரணடையவே உந்தித்தள்ளும் . தூங்கும் போது ஒரு பெக் குடித்துவீட்டு தூங்க வீட்டில் பிரச்சனை இல்லை எனில் தேவையற்ற அவப்பெயரை அவர் தேட வேண்டி இருக்காது .மேட்டுக்குடியிலும் இப்பிரச்சன்னையை அமுக்கமாகக் கையாண்டு விடுவர் .அடித்தட்டிலும் இதனை சமாளித்துவிடுவர் .இந்த இரண்டுக் கெட்டான் நிலையில் உள்ளோரே பெரிதும் சிக்கலாக்கி விடுகின்றனர் . எல்லோரும் குடியுங்கள் என்பதல்ல எம் வாதம் .குடிநோயில் வீழாமல் ஒவ்வொருவரையும் காக்க சமூகப் பார்வை சற்று விசாலப்பட வேண்டும் என்பதே எம் வேண்டுகோள். குடிநோய்க்கு யாரையும் தள்ளிவிடாதீர் ! Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .82 [ 27 /11/2018 ] பணம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதே .அதனை ஈட்ட செய்யும் தொழிலில் முழு சிரத்தை காட்ட வேண்டும் என்பதும் மெய்யே !ஆனால் அது மட்டுமே வாழ்க்கைக்கு நிறைவைத் தராது . ஒரு சிலர் வேலை ,வேலை ,பணம் ,பணம் என ஓடிக்கொண்டே இருப்பர் . குழந்தையைக் கொஞ்ச நேரம் ஒதுக்கமாட்டார் ; ஒரு பாடலை விரும்பி ரசிக்கமாட்டார் ; ஒரு சினிமாவுக்கு நேரம் ஒதுக்கி குடும்பத்தோடு சென்று களிக்கமாட்டார் .வேலை ,பணம் ,சாப்பாடு ,தூக்கம் இரவில் கொஞ்சம் தாம்பத்யம் இதுவே வாழ்க்கை என இயந்திரமாய் ஓடிக்கொண்டே இருப்பார் .இவர் இழந்தது எவ்வளவு தெரியுமா ? மொத்த வாழ்க்கையும்தான் . கல்லாவிலே உடகார்ந்திருக்கும் வியாபாரி ஒருவர் சில்லறைச் சத்தைத்தை மட்டுமே ரசிப்பார் .அவர் எதிரே பூபாளத்திலோ ,மோகனத்திலோ நெஞ்சை உருக்கும் ஒரு பாடல் பாடினாலோ , கேட்கிறவர் கால்களை எல்லாம் தாளம் போடவைக்கும் பறை முழங்கினாலோ கூட அவர் கல்லாவுக்கு வெளியே கண்ணைத் திறக்கமாட்டார் .அப்படி சிலரைப் பார்த்திருக்கிறேன் . மின் ஊழியர் சங்கத்தில் பெரும் தலைவராய் இருந்த ,கம்யூனிஸ் தோழர் து .ஜானகிராமன் அவர் நாட்குறிப்பில் மாதம் ஒரிரு நாட்கள் மனைவியோடு சினிமா . வீட்டு நிகழ்வுகள் என குறித்திருப்பார் . பொதுவாய் அந்நாட்களில் யார் அழைத்தாலும் தவிர்த்து விடுவார் .வீட்டில் இருக்கும் போது காலையில் மனைவிக்கு சின்ன சின்ன உதவிகள் செய்வார் . குடும்ப வாழ்வும் பொதுவாழ்வும் எதிர் எதிரானது என்பதை ஒப்பமாட்டார் . நேர திட்டமிடலில்தான் நமக்கு திறமைக் குறைவு .அதை சரி செய்தாலே போதும் பிரச்சனைகளை சமாளிக்க முடியும் என்பார் . வாழ்க்கை என்பதை ஒருபோதும் சம்பாதிக்கும் இயந்திரமாக்கிவிடாதீர் ! சூரிய உதயத்தை ,மாலை செவ்வானத்தை ,பூவின் சிரிப்பை , நாலு பேரோடு கலகலப்பாய் பேசி மகிழ்வதை , சின்ன சின்ன உரசல்களை தவறவிடாதீர் !இழந்த நாலுகாசை மீண்டும் ஈட்டிவிடலாம் .இழந்த நாட்களை ஒரு போதும் திரும்பப் பெற முடியாது .வாழ்வதற்காகச் சம்பாதியுங்கள் சம்பாதிப்பதற்காக வாழாதீர் ! Su Po Agathiyalingam