குட்டிக்
கதை …
நேற்று நடை
பயிற்சியின் போது , அவர்கள் வழக்கமாகக் கடக்கும் ஒரு கோயிலை நெருங்கிய போது அக்கோயில்
பூட்டப்பட்டிருப்பதையும் அங்கு பலர் கூட்டமாக நின்று கொண்டு உரக்க வாதம் செய்வதையும்
கண்டனர் . ஏதோ சண்டையில் கோயிலுக்கு இருதரப்பாரும் பூட்டு போட்டுவிட்டதாக் கேள்விப்பட்டனர்
.
ஒருவர் கோயிலுக்கு
போகும் வழக்கமில்லாதவர் . அவருடன் வருபவர் கடவுள் நம்பிக்கையாளர் .அவருக்கு தாய்மொழியாம்
மலையாளத்துடன் கன்னடமும் தமிழும் தெரியும் . அன்றைய உரையாடல் கோயிலை சுற்றி வட்டமிட்டது
.
“என்ன பிரச்சனை?”
“கோயிலில் பிராமணிய முறையில் பிராமணரே பூஜை செய்ய
வேண்டுமா ? பிராமணரல்லாதவர் பூசை செய்ய வேண்டுமா ? இதுதான் சண்டையின் மையப்புள்ளி..”
“அப்படியானால் அங்கு இதுவரை யார் பூஜை செய்தது”
.
“முதலில்
கட்டப்பட்டது அம்மன் கோயில் . வழக்கப்படி அம்மனுக்கு பிராமணல்லாத இன்னொரு சாதியைச்
சார்ந்த பூசாரியே பூசை செய்து வந்தார் .பொதுவாக அம்மன் கோயில்களில் அப்படித்தான் இருக்கும்
. புது வாகனம் வாங்குவோர் அங்கு வந்து பூசை செய்து பூசனிக்காய் உடைப்பார்கள் .”
“ அப்புறம்
என்ன ? பிரச்சனை ?”
“ அங்கு ஓர்
சிவன் சன்னதியும் பின்னர் உருவாக்கப்பட்டது .பிள்ளையார் சன்னதியும் ,நவக்கிரஹ பீடமும் பின்னர் வந்தது ..”
“ அதில் என்ன
பிரச்சனை ?”
“ சிவனுக்கும்
பிள்ளையாருக்கும் பிராமண பூஜாரி பூஜை செய்வார் . நவக்கிரஹ பீடத்தில் பக்தர்கள் யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம்…”
“ அப்படியே
நடந்தால் என்ன ?”
“ பொதுவாக
அது அம்மன் கோயில் என்பதால் வரும் பக்தர்கள் அம்மனையே முதலில் கும்பிடுகிறார்கள் .
அம்மன் பூசாரிக்கு அதிக தட்சணையும் கிடைக்கிறது .அதன் பின் மற்ற சன்னதிகளுக்குச் சென்று
வழிபட்டு சென்று விடுகின்றனர் .தட்சணை அதிகம் பிராமண பூஜாரிக்கு கிடைப்பதில்லை ….”
“ அங்கே இருவரும்
தொடர்ந்து சண்டையிட்டு வந்தனர் .அம்மன் பூசாரியிடம் சிவ பூஜை பற்றி கேட்டால் தெரியாது
அங்கே போய்க் கேள் என்பதும் ; சிவ பூஜாரியிடம் அம்மன் பற்றி கேட்டால் அங்கே போய்க்
கேள் என்பதுமாக முறுக்கிக் கொண்டனர் .
அங்கே கோயில்
நிர்வாகத்தில் முன்பு பொறுப்பாக இருந்தவர் அண்மையில் இறந்து விட்டார் . நிர்வாகம் மாறி
இருக்கிறது . இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால் கோயில் வாசலில் உள்ள காலி வீட்டு
மனையில் ஆர் எஸ் எஸ் சாகா கூட்டம் நடப்பதை நடை பயிற்சியின் போது கண்டனர் .
இனி நடந்ததை
வாசகர் யூகத்துக்கு விட்டுவிட்டோம்.
ஓர் முன்
கதை : அந்த இடம் பஞ்சாயத்தால் சிறுவர் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடம் .அங்கு அதற்கான
ஏற்பாடு தொடங்கப் பட்டபோது பிரச்சனை வெடித்தது .அங்கு குடியிருப்போர் பெரும்பாலும்
போலீஸ் இலாகாவைச் சார்ந்தவர்கள் . ஒரு பகுதி கோயிலுக்கு என்றும் ஒரு பகுதி பூங்காவுக்கும்
என முடிவானதாகச் சொன்னார்கள் .
கோயிலுக்கு
பூஜை போடும் போது அந்த மைதானத்தில் நடுவில் பூஜை போட அந்த மைதானம் முழுவதும் மெல்ல
மெல்ல கோயில் வசமானது .
அந்த சமயத்தில் அங்குள்ள ஒரு மூத்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி
சொன்னார் , “ பார்க்ன்னு சொன்னா கண்டவங்க வருவாங்க கவனிப்பார் இல்லேன்னா பாழடைஞ்சு
போயிடும் கிரிமினல்கள் கூடும் இடமாகி விடும் அம்மன் கோயில்ன்னா எல்லோருக்கும் நல்ல
புத்தி வரும் … அமைதி இருக்கும் … வாழ்வு சுகமாய் இருக்கும் … கோயில் முக்கியம் …. “
இப்போது அங்குள்ள
ஓய்வு பெற்ற அதிகாரிகளெல்லாம் இரண்டு கி.மீ தள்ளி இன்னொரு நகரில் உள்ள பூங்காவிற்கு
சென்று உடற் பயிற்சி செய்கின்றனர் …
கோயிலில்
புத்தி ரொம்ப வளர்ந்து … ஒழுக்கம் ஓங்கி ….. சிண்டைப் பிடித்துக் கொள்கின்றனர் …..
[ இது ஓர்
உண்மைக் கதை . ஊர் பெயர் எதுவும் குறிப்பிடாமல் [ தன்னிலை முன்னிலை இல்லாமல் ] படர்க்கையில்
எழுதப்பட்டுள்ளது …]
சுபொஅ.
11/02/25.
0 comments :
Post a Comment