காதல் இல்லா உலகம் பாழ் !

Posted by அகத்தீ Labels:

 



காதல் இல்லா உலகம் பாழ் !

 

காதல் இல்லா உலகம் பாழ் !ஆதாம் யோவாள் காதல் இயல்பானது .அன்பானது .நேர்மையானது . ஆதிக்காதல் எல்லா நாட்டிலும் அப்படித்தான் . ஒவ்வொரு காதலும் அப்படித்தான் இருக்க வேண்டும் .

 

காதல் எல்லா காலத்துக்குமானது . காதல் எல்லா தேசத்துக்குமானது . காதல் எல்லா உயிர்களுக்குமானது . காதல் எப்போது யாரிடம் ஏன் வருகிறது என யாராலும் எங்கும் கணித்துச் சொல்லவே முடியாது .

 

புறநானூற்றுக் காதலும் , திரைப்பட காதலும் ஒன்றல்ல . முந்தையதில் அன்பும் இயல்பும் பொங்கி வழிந்தது .பிந்தையதில் மிகை இருக்கிறது ; உண்மை விலகி நிற்கிறது . காதலில் காமம் உண்டு .காமம் மட்டுமே காதல் இல்லை .காமம் இல்லாமலும் காதல் இல்லை .காமம் இருப்பது மட்டுமே காதல் இல்லை . புறநானூற்றுக் காதலுக்கு வாசலைத் திறப்பீர் !

 

பிப்ரவரி 14 மட்டுமா காதலர் தினம் ? சித்திரை முழுநிலவு காதலர் கொண்டாட்ட நாளல்லவா ? ஆடி 18 காதலர் மகிழ்ந்து நீராடி மகிழும் நாளல்லவா ? எத்தனையோ காதல் கொண்டாட்ட நாட்கள் சங்க இலக்கியத்தில் உண்டே ! காதலை எதிர்ப்போருக்கு நம் பண்பாட்டின் ஆணிவேர் சல்லிவேரே காதல் என்பது தெரியாது.அவர்கள் மூட மத வெறியர் .சாதி வெறியர் .ஆணவக்காரர் .அவர்களைச் சுண்டு விரலால் தூக்கி எறிவீர் !

 

காதல் இல்லா உலகம் பாழ் ! வள்ளுவனைவிட காதலை போற்றியவன் எவன்? காமத்துப் பால் யாத்த அவனுக்கு காவியுடை கட்டும் கயவர்கள் என்றும் காதலின் எதிரிகளே ! மானுடத்தின் எதிரிகளே !

 

ஆதிக் காதலில் நிரம்பி இருந்த பாலின சமத்துவம் காலவெளியில் காணாமல் போனது . சொத்துடைமை தந்த ஆணாதிக்கம் பெண்மையை நசுக்கிப் போட்டது .காதல் வெறும் பெயர்ச் சொல்லானது . காமமும் பெண் மீது திணிக்கப்பட்ட கடமையுமே வினைச் சொல் ஆனது . அடிமைத்தனத்துக்கு பண்பாடென பட்டுக் குஞ்சரம் கட்டப்பட்டது . திருமணம் என்பது அதன் அங்கீகார முத்திரை ஆனது . காதல் தொலைந்து போனது .

 

 

சமூகத்தின் பேதம் மிகு கழுக்குப் பார்வையை , இராட்சச விலங்கை ,சாதி மத அகழியைத் தாண்டியும் காதல் பூ மலர்ந்து கொண்டே இருக்கிறது . மதம் பிடித்த சாதிய வெறி பிடித்த நாய்கள் காதலுக்கு எதிராய் குரைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆணவக் கொலை செய்து கொண்டேதான் இருக்கிறார்கள் !

 

 நேற்றையக் காதல் புனிதமானது , இன்றையக் காதல் வெறும் உடல் பசிஎன்கிறார்கள் . ”நாடகக் காதல்என்கிறார்கள் . “லவ்ஜிகாத்என பழிதூற்றி கொலை செய்கிறார்கள் ! பண்பாட்டை பெண் யோணியில் பூட்டி வைக்கிறார்கள் !ச்சேத்தூமானுடம் தலைகுனிந்து நிற்பதை தம் வெற்றி எனக் கொக்கரிக்கின்றனர் .

 

காதலுக்கு புனிதப் பட்டம் தேவை இல்லை ; காதல் இயல்பானது என்பதைப் புரிந்தால் போதும் .ஒன்றை வரலாறு நெடுக கண்டு தெளிகிறோம் ; ‘ தடைகளை மீறுவதுதான் காதல் . போர்க்களத்திலும் காதல் மலரும். சிறையிலும் காதல் பூக்கும் .காதல் எல்லை தாண்டும் . காதல் வேலியை உடைக்கும் . அதுதான் காதலின் வலிமை .

 

ஆனால் ஒன்று ! ஒரு வகையில் நேற்றும் இன்றும் காதல் ஒன்றல்லதான் ; காதல் மேம்பட்டிருப்பதைப் புரிந்து கொள்வீர் !  சமத்துவமும் அன்பும் நீர்த்துப் போக எதிர்பார்ப்பு பொய்யாகும் போது ; பல்லைக் கடித்துக்கொண்டு  கொடுமையை சகித்துக் கொண்டு வாழ்ந்து தொலைப்பது இன்றையக் காதலில் சாத்தியமில்லை . இன்றைய பாலின சமத்துவ எல்லை விரிந்து கொண்டே போகிறது .குடும்ப ஜனநாயகம் புரிதலின் விதி ஆகிறது.

 

சிறுபான்மை பெரும்பான்மை தேர்தல் கணக்கல்ல குடும்ப ஜனநாயகம் . வலிமையே அனைத்தையும் தீர்மானிக்கும் எனும் அதிகார சூத்திரமல்ல குடும்ப ஜனநாயகம் . ஒவ்வொருவர் கருத்துக்கும் உரிமைக்கும் உணர்வுக்கும் உரிய இடமளித்து அன்பின் முழு பரிணாமமாய் விரிவதே குடும்ப ஜனநாயகம் .

 

அங்குதான்  ஆதாம்யோவாள்  காதலுக்குஅடுத்த காதல் இதுவெனச் சொல்ல முடியும் ’. தும்மியதுக்கு எல்லாம் கசந்து காதல் பிரிந்து போக வேண்டும் என்பதும் பிழையே ! நரகத்தில் உழன்றாலும் காதல் பிரியக் கூடாது என்பதும் பிழையே !வாழ்வதற்குத்தான் காதல் .கொல்வதற்கு அல்ல . கொலை எண்ணம் தலைதூக்கின் அது காதலே அல்ல .எங்கிருந்தாலும் வாழ்க என்கிற அன்பு மனமே காதல் !

 

மேடையில் பாலின சமத்துவம் புரட்சி பேசும் பலரும் வீட்டில் அப்படியே இருந்துவிடுவதில்லை . பழகிப்போன ஆணாதிக்கம் அவ்வப்போது தலைநீட்டவே செய்யும் . அதற்கு எதிராய் உள்ளுக்குள் போராடுவது ஒன்றும் எளிதல்ல . காலம் தொடர்ந்து பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது .

 

காதலும் உழைப்பும்தான் மானுடத்தின் ஆதார சுருதி . காதலும் உழைப்பும் கவுரவிக்கப்படாத தேசத்தில் மானுடம் மெல்லச் சாகும் !காலம் காறி உமிழும்!

 

நாளையக் காதல் ஆதிக்கம் இல்லாததாய் ; அன்பால் பிணைந்ததாய் ; சமத்துவம் மிக்கதாய் ; குடும்ப ஜனநாயகத்தை உள்வாங்கியதாய் ; இரு பாலருக்கும் பொறுப்பும் உரிமையும் மிக்கதாய் ; அவரவர் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவதாய் மலர்க !

 

காதல் போற்றுதும் ! காதல் போற்றுதும் ! காலந்தோறும்  மேலும் செழித்து , மேலும் செம்மையாகி காதல் ஓங்கிட வாழ்த்துதும் யாமே !

 

காதல் செய்வோம் !

குரோதத்துக்கு எதிராய் அன்பை முன்மொழிவோம் !

அன்பு செய் ! காதல் செய் !

 

சுபொஅ.

14/02/25.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் “ - ஏங்கெல்ஸ்

வாசித்து விட்டீர்களா ? அவசியம் வாசியுங்கள் !!!


0 comments :

Post a Comment